4 - நீ இல்லாமல் நான் இல்லை! | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

4 - நீ இல்லாமல் நான் இல்லை!

New updates

LATEST

sai lakshmi

Member
Joined
Sep 18, 2026
Messages
36
Reaction score
40
Points
18
 அத்தியாயம் : 4

மாதங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் பிரகாஷின் வாழ்க்கையில் மட்டும் இருந்த, அந்த தேக்கநிலை மாறவே இல்லை. கொடுத்த ஒரு லட்சம் ரூபாய்க்கான எந்த தகவலும் எம்எல்ஏ தரப்பிலிருந்து வரவில்லை.

ஆரோக்கியசாமி ஐயாவிடம் கேட்டால், “கொஞ்சம் பொறுப்பா… சீக்கிரமே வேலைக்கான ஆர்டர் வந்துரும்” என்று சமாதானம் கூறினார்.

ஆனால், அந்த ஆறுதல் வார்த்தைகள் பிரகாஷின் மனப் பாரத்தை குறைக்கவில்லை.
மாதம் பிறந்துவிட்டால், அவரிடம் வாங்கிய கடனுக்காக தன் சம்பளத்திலிருந்து பணம் கொடுக்க முடிவு செய்தான்.

அவர் வேண்டாம் என்று எவ்வளவோ வற்புறுத்தி கூறியும், “எனக்காக இரண்டாயிரமாவது வாங்கிக்கங்க சார். வேலை கிடைக்கும்போது கிடைக்கட்டும். வேலை கிடைச்சதும் ஐந்தாயிரமா பணத்தை கொடுக்கிறேன்” என்றான்.

பணத்தை வாங்க மிகவும் யோசித்தவர், அவன் தொடர்ந்து வற்புறுத்தவும், அவனுக்காக பணத்தை பெற்று கொண்டார். ஆனால் அவனுக்குத்தான் குடும்பத்திற்காக செலவு செய்ய பணம் பற்றால் திண்டாட்டமாக இருந்தது. மீதமுள்ள எட்டாயிரம் பணத்தை வைத்துக்கொண்டு, அப்பத்தாவுக்கும் அவனுக்கும் மளிகை சாமான்கள் வாங்குவது, மின்கட்டணம் செலுத்துவது மற்றும் மருத்துவச் செலவுகளை சமாளிப்பது என்று, ஒவ்வொரு மாதமும் அக்னிப் பிரவேசமாக நாட்கள் ஓடியது.

அதைவிட துணிக்கடையில் நாளுக்கு நாள் பணிச்சுமை அதிகரித்தது. எந்த வேலை சொன்னாலும் பிரகாஷ் தட்டாது செய்யவும், நாளுக்கு நாள் கடையின் உரிமையாளர், அவனிடம் கூடுதல் வேலைகளை வாங்க ஆரம்பித்தார்.

அந்த தருணத்தில், ‘அப்பா வேலை கிடைக்கும் வரைக்குத்தான இந்த வேலை?’ என்று நம்பிக்கையாக எண்ணி கொண்டே, பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு வேலை பார்த்தான்.

அன்று மதியம், “அந்த எம்.எல்.ஏ நம்ம பணத்தை வாங்கிட்டு நம்மளை ஏமாத்திட்டானோனு எனக்கு பயமா இருக்குடா.” என்று சரஸ்வதியம்மாள் கூறவும்,

பிரகாஷின் மனதிலும், அந்த சந்தேகம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அதை அப்பத்தாவிடம் காட்ட விரும்பாது, “அப்படியெல்லாம் எதுவும் இருக்காது. ஹெட்மாஸ்டர் சார் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லியிருக்காருல்ல. கண்டிப்பா வேலை கிடைக்கும்.”
என்று, அவன் சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கை இருந்ததைவிட, அப்பத்தாவை சமாதானப்படுத்த வேண்டும் என்ற முயற்சிதான் அதிகமாக இருந்தது.

அப்பத்தாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டான் ஆனால், ஒவ்வொரு காலையும் எழுந்ததும் அவனுடைய மனதில் தோன்றும் முதல் எண்ணம், ‘இன்னைக்கு வேலை பற்றி நல்ல செய்தி கிடைக்குமா?’ என்பதுதான்.

ஆனால் நாட்கள் நகர்ந்துகொண்டே சென்றன. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகிவிட்டன. வேலை கிடைத்துவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்று நம்பிக்கையோடு இருந்தவனின்
நம்பிக்கையும் நாளுக்கு நாள் மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டிருந்தது. சரஸ்வதியம்மாள் தினமும் வேலை பற்றி புலம்பி கொண்டேத்தான் இருந்தாள். அதனை காதிலே வாங்காததது போல, அவளை கடந்து சென்று கொண்டிருந்தான் பிரகாஷ்.

அன்று சனிக்கிழமை. வழக்கம்போல பரபரப்பாக ஜவுளிக்கடை இயங்கி கொண்டிருந்தது. கடைக்குள் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருந்தது.

ஒருபுறம் துணிகளை விரித்து சேல்ஸ்வுமன் காட்டி கொண்டிருக்க, இன்னொருபுறம் வாங்கிய துணிகளை பில் போட்டு மற்றவர்கள் கொடுத்து கொண்டிருந்தார்கள் என்று எல்லோரும் ஓய்வில்லாமல் இயங்கி கொண்டிருந்தனர்.

அந்த கூட்டத்தின் நடுவே பிரகாஷும் நின்று கொண்டிருந்தான்.

ஒரு வாடிக்கையாளர் கேட்ட துணியை எடுத்து காண்பித்து கொண்டிருக்கும் நேரத்தில், அவனுடைய சட்டைப் பாக்கெட்டில் இருந்த பழைய மொபைல் சத்தமிட்டது.

வேலை நேரத்தில் போன் பேசுவதை விரும்பாத முதலாளியை நினைத்து சற்று தயங்கியவன், அவசரமாக பக்கத்தில் இருந்த ஒரு ஆணிடம் தன்னுடைய கஸ்டமரை பார்த்து கொள்ளும்படி கூறிவிட்டு, ஓரமாக சென்று போனை எடுத்தான்.

திரையில் தெரிந்த ஆரோக்கியசாமியின் பெயரைப் பார்த்ததும் சந்தோஷமும் பயமும் கலந்த உணர்வுடன் உடனே அழைப்பை ஏற்று, “ஹலோ சார்…” என்றான் ஒருவித எதிர்பார்ப்புடன்…

“உன்னோட கவர்மெண்ட் வேலைக்கான ஆர்டர் வந்திருச்சுடா. எம்.எல்.ஏ ஆபீஸ்ல இருந்து இப்பத்தான் என்கிட்ட சொன்னாங்க. நாளைக்கு நீ நேரா கலெக்டர் ஆபீஸ்க்கு போய் ஆர்டரை வாங்கிட்டு, வேலையில வந்து ஜாயின் பண்ணிக்கலாம்” என்றார்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட பிரகாஷால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. பல மாதங்களாக தான் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள், கண்ணீர் அனைத்திற்கும் ஒரு விடிவுகாலம் பிறந்துவிட்டது போல உணர்ந்தான். அவனது கண்கள் ஆனந்தக் கண்ணீரால் சுரந்தது, “சரிங்க சார்” என்றான் கண்களை துடைத்து கொண்டே…

“சரிப்பா நான் போனை வைக்கிறேன்” என்றவர் அழைப்பை துண்டித்துவிட,

‘எப்போது மதிய இடைவெளி நேரம் வரும். இந்த நல்ல விஷயத்தை அப்பத்தாவிடம் தெரிவிக்கலாம்’ என்று ஆவலுடன் காத்திருந்தான்.

அதனால் சிறிது நேரத்திற்கு ஒருமுறை மணியையே பார்த்து கொண்டிருந்தான். சரியாக மணி இரண்டு என்று காட்டியதும், முதலாளியிடம் சென்று, ‘சாப்பிட்டு வருகிறேன்’ என்று அனுமதி கேட்டான்.

“கடையில கூட்டமா இருக்கு. நீ பாட்டுக்கு கிளம்புறேனு சொல்ற. இருந்து கஸ்டமரை முடிச்சிட்டு போ” என்று திட்டினார்.

அதனால் வாடிக்கையாளர்கள் கூட்டம் கடையில் மறையும் வரை இருந்து, அன்று மாலை நான்கு மணியளவில் மதிய சாப்பாடு சாப்பிட வீட்டை அடைந்தான்.

வாசலிலேயே நின்றுகொண்டிருந்த சரஸ்வதியம்மாளிடம் வேகமாக சைக்கிளை நிறுத்திவிட்டு விஷயத்தை கூறினான்.

கேட்டவுடன் அளவில்லாத சந்தோஷம் அவளை ஆட்கொள்ள, “கடவுளே... என் பேரனுக்கு நல்ல வழி காட்டிட்டப்பா!” என்று வானத்தை பார்த்து மனம் உருகித் தொழுதாள்.

“வாய்யா வந்து சாப்பிடு. எவ்வளவு நேரமா உன்னை காணோம்ன்னு தேடிட்டு இருந்தேன் தெரியுமா” என்று வாஞ்சையுடன் அழைத்தாள்.

“இன்னைக்கு கடையில சரியான கூட்டம் அப்பத்தா. தீபாவளி வேற வருதுல்ல. அதான் லேட்டாகிருச்சி”

“நீ இன்னைக்கு வேலை பார்த்தது போதும்ய்யா. நாளைக்கு விருதுநகர் கலெக்டர் ஆபிஸூக்கு போகணுமில்ல. அதனால இனிமேல நான் வேலைக்கு வர மாட்டேனு, சாப்பிட்டு போய் கடையில சொல்லிட்டு வந்து ஓய்வெடு”

“ஆமா… அந்த ஆளு அப்படியே விட்டுட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். இன்னைக்கு ஒருநாள் வேலை பார்த்திட்டுத்தான் போக சொல்வான். மதியமே இரண்டு மணிக்கு சாப்பிட போறேனு சொன்னதுக்கே, என்மேல கடுகடுனு கோபத்துல இருந்தான்”

“சொல்லிப்பாரு. விட்டுட்டா வீட்டுக்கு வந்திரு”

“இல்ல அப்பத்தா இன்னைக்கு ஒருநாளுதான… நான் வேலை பார்த்திட்டே சொல்லிட்டு வர்றேன். நைட்டு நேரமானாலும் நேரமாகலாம். நீ எனக்காக காத்திருக்காம தூக்கம் வந்தா தூங்கு. நான் வந்து சாப்பாட்டை எடுத்து போட்டு சாப்பிட்டுக்கிறேன்”

அவன் கூறியது போல வேலை கிடைத்துவிட்டது என்று கூறியதும், கடையில் இருந்தவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர், வாழ்த்துகள் தெரிவித்தனர். ஆனால் கடை முதலாளியோ, “இருந்து வேலை பார்த்துட்டு நாளையிலிருந்து நின்னுக்க” என்று சற்று கோபமாக சொல்லிவிட்டு அகன்றார். ‘அவருக்கு ஒரு நல்ல வேலையாளி வேலையை விட்டு செல்கிறானே?’ என்ற ஆதங்கம் அப்பட்டமாய் அவர் முகத்தில் தெரிந்தது.

அன்று, ஏனோ நாளையிலிருந்து இந்த வேலைக்கு கும்பிடு போட போகிறோம் என்ற சந்தோஷத்துடன் இரவு பதினொரு மணி வரை இருந்து வேலையை பார்த்துவிட்டு, அந்த மாதத்திற்கான சம்பளம் பற்றி முதலாளியிடம் கேட்டான். “இடையில கேட்டா எப்படி தர முடியும்? எப்பவும் போல அஞ்சாம் தேதியே வந்து வாங்கிக்க” என்று சடைத்தவாறு கூறினார்.

வேறு வழியின்றி, “சரிங்கண்ணா” எனக் கூறிவிட்டு வீட்டை அடைந்தான்.

சரஸ்வதியம்மாள் தூங்கி கொண்டிருந்தாள். ஆனால் அவளது முகத்தில் நிம்மதியின் ரேகைகள் படர்ந்திருப்பது போல பார்க்க தெரிந்தன. ‘எல்லாம் வேலை கிடைத்த சந்தோஷம்’ என்று மனதிற்குள் எண்ணி கொண்டாள்.

மறுநாள், காலையில் துளிகூடச் சோம்பலின்றி விழித்தெழுந்த பிரகாஷ், புது சட்டைகளில் ஒன்றை தேர்வு செய்து அணிந்துகொண்டான். சாப்பிட்டுவிட்டு அளவில்லா மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, ப்யூன் வேலைக்கான நியமன ஆணையை கைகளில் பெற்று கொண்டான்.

பின்னர் பள்ளிக்கு செல்லாது நேராக வீட்டிற்கு வந்தவன், தன் பெற்றோரின் புகைப்படத்திற்கு முன்பாக அந்த கடிதத்தை வைத்தான். ‘அப்பா... அம்மா... நாளையிலிருந்து நான் அரசாங்க வேலைக்கு போக போறேன். இனிமே அப்பத்தாவை நான் நல்லபடியா பார்த்துக்குவேன்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

“இந்த ஒத்த லெட்டர் கிடைக்க கிட்டத்தட்ட ஆறேழு மாசமாகிருச்சி” என்று சிறிது வருத்தத்துடன் புலம்பினாள் சரஸ்வதியம்மாள்.

“வேலை கிடைச்சிருச்சில்ல விடு அப்பத்தா” என்றவன், “என்னை ஆசிர்வாதம் பண்ணு. முதன் முதலா வேலைக்கு போறேன்” என்றவன் குனிந்து சரஸ்வதியம்மாளின் பாதம் தொட்டான்.

அவனை தூக்கி நிறுத்தி, அவனது கன்னத்தை பாசத்துடன் கைகளால் தாங்கியவள், ஒரு குட்டி முத்தமொன்றை கொடுத்துவிட்டு, “இனிமேல உனக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்ய்யா. சந்தோஷமா வேலைக்கு போய்ட்டு வா” என்று வாழ்த்தினாள்.

சிறுவயதில் இருந்து, தான் படித்த பள்ளிக்கே, இன்று ஒரு அலுவலக உதவியாளராக வேலையில் நுழைகிறான் என்பதை நம்பவே அவனுக்குச் சற்று வியப்பாக இருந்தது.

பள்ளி வளாகத்திற்குள் நுழைந்ததும், மைதானத்தில் காலை வழிபாட்டிற்காக மாணவர்கள் வரிசையாக நின்றிருந்தனர். அவர்களை ஆசிரியர்கள் கண்காணித்து கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து நின்று கொண்டான்.

சிறிது நேரத்தில் வழிபாடு முடிந்ததும், தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமியின் அறை நோக்கி சென்றான்.
அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த அவனை கண்டதும், ஆரோக்கியசாமியின் முகத்தில் மலர்ந்த புன்னகைக்கு அளவே இல்லை. ‘எவ்வளவு நாள் காத்திருந்து இந்த வேலையை வாங்கிருக்கிறான்’ என்று மகிழ்ச்சியுடன் எண்ணியவர்,
அவனிடம் அந்த கடிதத்தை பெற்றுவிட்டு, “உன் அப்பா இந்த ஸ்கூலுக்காக அவ்வளவு உழைச்சிருக்காருன்னு எனக்குத் தெரியும். நீயும் இந்த வேலையை ஒரு கடமையா மட்டும் பார்க்காம, பொறுப்பா எடுத்து செய்யணும்” என்றார் கம்பீரமும் கனிவும் கலந்த குரலில்.

“கண்டிப்பா சார், என் அப்பாவுக்கு பேர் வாங்கி தர்ற மாதிரிதான் நான் நடந்துப்பேன்” என்றான் உறுதியான குரலில் பிரகாஷ்.

“சரிடா… இந்த லெட்டரை நீயே பிரோ திறந்து ஆபிஸ் பைல் 5னு ஒரு பைல் இருக்கும். அதுல லெட்டரை பஞ்ச் பண்ணிரு” என்றவர், அதன் பின்னர் அவனிடம் ஒவ்வொரு வேலையாக சொல்ல ஆரம்பித்தார்.

ஆனால், ஜவுளிக்கடையில் பட்ட கஷ்டம் போல இந்த வேலையில் அவனுக்கு சோர்வோ சலிப்போ எழவில்லை. அடிக்கடி ஓய்வெடுக்க நேரம் கிடைத்ததுடன், மாலையில் சீக்கிரமாகவே வீடு திரும்ப முடிந்தது. இரவில் உடல்வலியால் அவதிப்பட்ட நாட்கள் மாறி, நிம்மதியான தூக்கம் அவனுக்கு கிடைத்தது.

மறக்காமல் அந்த மாதம் ஐந்தாம் தேதி வந்ததும், ஜவுளி கடையில் சென்று சம்பள பணத்தை கேட்டு வாங்கியவன், தனக்கு இரண்டு சட்டையும் ஒரு பேண்ட்டும், அப்பத்தாவிற்கு இரண்டு புடவையும் எடுத்து கொண்டான்.

வீட்டிற்கு வந்து அவன் சேலையை கொடுத்ததும், சரஸ்வதியம்மாள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த சேலையை மறுநாளே கட்டிவிட்டு கோவிலுக்கு கிளம்பிவிட்டாள்.

பார்க்கிறவர்களிடம் “என் பேரன் முதன் முதலா அவன் சம்பள பணத்துல இருந்து எடுத்து கொடுத்த சேலை” என்று பெருமையாக கூறினாள்.

அவனுக்கு அரசு வேலை கிடைத்துவிட்ட செய்தி ஊருக்குள் தீயாய் பரவியதும், சொந்தபந்தங்கள் அவனிடம் பேசும் விதமே முற்றிலுமாக மாறியது.

முன்பு வறுமை வாட்டியபோது முகத்தை திருப்பி கொண்டவர்களெல்லாம், இப்போது தேடிவந்து நலம் விசாரித்தனர். அவர்களின் சுயநல முகத்தை நன்றாக புரிந்துகொண்ட பிரகாஷ், அதை பெரிதுபடுத்தாமல் புன்னகையோடு கடந்து சென்றான்.

ஏனெனில் தன் பெற்றோர் இறந்த போதே மயானத்தில் இருந்து வீட்டிற்குள் வருவதற்குள் மாயமாகி போன சொந்தங்களை நினைத்து பார்த்தவன், ‘நமக்கு சொந்தம் என்று அப்பத்தா மட்டும்தான்’ என்று எண்ணிவிட்டு, தன் அன்னையின் மேல் வைத்திருந்த அத்தனை அன்பையும் அப்பத்தாமீது காட்டினான்.
இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.
நன்றி
அன்புடன்
சாய்லஷ்மி.
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,417
Reaction score
3,239
Points
113
அருமை அருமை அழகான பதிவு

பிரகாஷின் வாழ்க்கையில் கிடைத்த ஒரு முன்னேற்றம் இனி எப்படி கொண்டு போகிறது பார்க்கலாம்
 
Top Bottom