Barkkavi Murali
Well-known member
- Joined
- May 25, 2025
- Messages
- 356
- Reaction score
- 388
- Points
- 63
பிறை 32
சில நாட்களுக்குப் பின்பு…
காவலனான விஷ்வாமித்ரன் தனது இடமாற்றலுக்கான விண்ணப்பத்துடன் காவல் கண்காணிப்பாளரின் முன்பு நின்றிருந்தான்.
“நல்லா யோசிச்சுதான் இந்த முடிவை எடுத்துருக்கீங்களா விஷ்வாமித்ரன்?” என்று அவர் வினவ, “எஸ் சார்!” என்று தீர்க்கமாக உரைத்தான் விஷ்வாமித்ரன்.
அவரோ ஒரு பெருமூச்சுடன் அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு, “அப்போ சரி, உங்க அம்மாவையும் உங்களோட கூட்டிட்டுப் போங்க.” என்றார்.
அதில் அதிர்ந்த விஷ்வாமித்ரனோ, “மாமா…” என்று இழுக்க, அவனைக் கண்டு சிரித்த சர்வஜனன், “நான் கோபமா எல்லாம் சொல்லல விஷு. உன்னை மாதிரியே ரோஷிக்கும் இடமாற்றம் தேவைப்படுது. இத்தனை வருஷமா ஒரு அயோக்கியனுக்காக பெத்த பையனைக் கவனிக்காம போனதை நினைச்சு அவ ரொம்ப வேதனைப்படுறா. அதைத் தீர்த்துக்க, இந்த வாய்ப்பை அவளுக்குக் கொடு விஷு.” என்றார்.
உடனே, அவரைத் தழுவிக்கொண்ட விஷ்வாமித்ரன், “என்னைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு தேங்க்ஸ் மாமா. என்மேல உங்களுக்கு கோபம் எதுவும் இல்லல?” என்று வினவ, “கோபமெல்லாம் பெரிய வார்த்தை விஷு. உன்மேல என்னைக்கும் எனக்குக் கோபம் இருந்ததில்ல. நீ பிறந்தப்போ, உன்னை முதன்முதல்ல கையில ஏந்துனது நான்தான். உனக்கு அப்புறம்தான் நந்துவும் தேவாவும்.” என்று குற்றவுணர்வில் தத்தளித்தவனின் நெஞ்சில் நம்பிக்கையையும் பாசத்தையும் விதைத்தார்.
அவரின் அணைப்பிலிருந்து சிரிப்புடன் விலகியவன், “தேங்க்ஸ் மாமா… கூடிய சீக்கிரமே திரும்ப இங்க வந்துடுவோம்.” என்ற உறுதிமொழியுடன் வெளியேறினான் விஷ்வாமித்ரன்.
*****
விஷ்வாமித்ரன் ஊருக்குச் செல்லும் நாள்…
“விஷு, ஒவ்வொரு பௌர்ணமிக்கும் மறக்காம இங்க வந்துடனும். நாம மூணு பேரும் சேர்ந்து காட்டுக்குள்ள டெண்ட் போட்டு அந்த நாளை என்ஜாய் பண்ணுவோம்.” என்று தேவமித்ரா கூற, அதற்குச் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தான் விஷ்வாமித்ரன்.
“அதுசரி, நீ எதுக்கு எங்க கூட கூட்டு சேருற? என்னதான் நீ வேர்உல்ஃபா இருந்தாலும், நீதான் ஓநாயா மாறுறதே இல்லையே! உன் ஹன்டர் ஜீன்தான் அதைத் தடுத்துடுதே. அப்புறம் எதுக்கு இந்த டெண்ட் பிளான் எல்லாம்? உங்க முருகைய்யா தாத்தா அதுக்கு பெர்மிஷன் கொடுப்பாரா?” என்று கேலியாக வினவினான் மித்ரநந்தன்.
அவனை முறைத்த தேவமித்ராவோ, “எல்லாம் உங்க பாதுகாப்புக்குத்தான்!” என்று பழிப்பு காட்டியவள், “அந்தக் கொடுமையை ஏன் கேட்குற? அப்பா எப்போ நார்மல் மனுஷனா மாறுனாரோ, அப்போயிருந்து முருகைய்யா தாத்தா பேச்சு முழுக்க அப்பாவோட புராணம்தான். என்ன ஒரு சேஞ்சோவர்! எப்போன்னே இருந்துருப்பாரு போல மனுஷன்!” என்றாள் தேவமித்ரா.
“சரி சரி இந்தக் கதையெல்லாம் இப்போ எதுக்கு? விஷு, நேரத்துக்கு சாப்பிடு, ரோஸ் அத்தையையும் நல்லா கவனிச்சுக்கோ. அப்புறம் கடமையே கண்ணுன்னு இருக்காத. சீக்கிரம் யாரையாவது லவ் பண்ணு. அப்போதான் லைஃப் நல்லா இருக்கும்.” என்று அறிவுரைகளை அள்ளித்தெளித்தாள் தேவமித்ரா.
“அடடா, எவ்ளோ நல்ல அட்வைஸ்! ஒவ்வொரு குடும்பத்துலயும் உன்னை மாதிரி ஒருத்தி இருந்தா போதும், விளங்கிடும்!” என்று மித்ரநந்தன் கூற, அவனது தோளில் பட்டென்று அடித்தவள், “வர வர இந்த நந்து ஓவரா பேசுறான் விஷு. இவன் நம்ம நந்துவான்னே டவுட்டா இருக்கு!” என்று குறைபடித்தாள் தேவமித்ரா.
அதற்கும் விஷ்வாமித்ரனிடமிருந்து சிரிப்பே பதிலாக வந்தது.
ஒருவழியாக இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான் விஷ்வாமித்ரன்.
செல்பவனை பார்த்துக்கொண்டிருந்த தேவமித்ராவுக்கு அத்தனை நேரம் அடக்கி வைத்த அழுகை பெருக, அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டான் மித்ரநந்தன்.
“ரொம்ப கஷ்டமா இருக்கு நந்து! இதுவரை நாம இப்படி பிரிஞ்சதே இல்லல…” என்று தேவமித்ரா விம்மியபடி கூற, “அவனுக்கும் டைமும் ஸ்பேஸும் வேணும்ல? நம்மளை விட அவன்தான் ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கான். எல்லாம் சரியானதும் அவனே வருவான்.” என்று சமாதானப்படுத்தினான்.
சில நொடிகள் கழித்து அங்கு வந்து சேர்ந்த சுலோஷனா, “எங்கடி அந்த பிளாக்ஷீப்? நான் வரதுக்குள்ள அப்படி என்ன அவசரம்னு கிளம்பிட்டாராம்!” என்று நொடிக்க, “ஹன்டர் குரூப்போட தலைவியாச்சே, அதான் பயமா இருந்துருக்கும்!” என்று கேலியில் இறங்கினான் மித்ரநந்தன்.
“ஹே நான் உன்கிட்டதான் பேசுறேன். தேங்க்ஸ் கூட சொல்ல முடியாதவங்ககிட்ட எல்லாம் பேசல.” என்று சுலோஷனாவும் பேச, ‘இதுங்ககிட்ட மாட்டிக்காம நம்ம தப்பிச்சுடனும்.’ என்று அங்கிருந்து கிளம்பிவிட்டாள் தேவமித்ரா.
அவள் சென்றது கூட அறியாமல், இருவரும் தீவிரமாகச் சண்டை போட்டு, அதனால் உண்டான சோர்வில் பிரிந்து சென்றனர்.
“க்கும், மத்த ஹீரோயின்ஸ் எல்லாரும் ‘ஐ லவ் யூ’ சொல்ல வைக்க பாடுபடுவாங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன். நான் கடைசி வரை ‘சாரி’யும் ‘தேங்க்ஸ்’ஸும் சொல்ல வைக்க பாடுபடப்போறேன் போல!” என்று முணுமுணுத்த சுலோஷனா தன் பின்னே ஏதோ அரவம் உணர, அவள் தன்னிச்சையாக இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து தயாராக, கால்கள் மட்டும் சொதப்பிவிட்டுக் கீழே விழ முயன்றவளை வலிய கரங்கள் பற்றிக்கொண்டன.
அனைத்தும் ஒரு நொடிக்குள் நடந்துவிட, அதைக் கிரகிக்கவே சுலோஷனாவுக்கு சில நொடிகளானது.
அவளது முகத்தில் தன் மூச்சுக்காற்றை ஊதி, அவளை நிகழ்வுக்கு அழைத்து வந்த மித்ரநந்தன், “நமக்குள்ள எதுக்கு சாரியும் தேங்க்ஸும்? இதையே திரும்பத்திரும்ப சொல்லிட்டு இருந்த, அதுக்கான பனிஷ்மெண்ட் வேற மாதிரி இருக்கும்.” என்றவன், அவளை நேராக நிற்க வைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
முதலில் ஏதோ கனவில் இருப்பதைப் போன்று சிரித்த சுலோஷனா, பின் தலையை உலுக்கி, “சாரி, தேங்க்ஸ் சொல்லாததுக்கு இப்படி ஒரு சமாளிப்பு!” என்றவள், “யோவ் ஆல்ஃபா நில்லுயா. இன்னைக்கு அந்த சாரியையும் தேங்க்ஸையும் சொல்ல வைக்காம நான் ஓயப்போறது இல்ல.” என்று கத்தியபடி அவன் பின்னே ஓட, முன்னோக்கிச் சென்றவனின் இதழ்களோ குறும்புப்புன்னகையில் விரிந்தன!
அதன் காரணம் அவளன்றி வேறு யாராக இருக்க முடியும்!
*****
தன்னறைக்கு வந்த தேவமித்ராவோ தீவிர சிந்தனையில் இருந்ததை அவளின் புருவச்சுருக்கம் தெரிவித்தது.
சில நிமிடங்களுக்குப் பின் ஏதோ முடிவெடுத்துத் தெளிவானதைப் போல ஜன்னலருகே வந்தாள்.
இன்னமும் ஜன்னல் கம்பிகள் அகற்றப்பட்டிபடியே இருக்க, திண்டின் மேலேறி நின்றவள், ஒரு பெருமூச்சை வெளியிட்டு, சற்றும் யோசிக்காமல், கண்களை மூடியபடி கீழே குதித்துவிட்டாள்.
காற்றின் வேகத்தைக் கிழித்துக்கொண்டு கீழே சென்றவள், தரையைத் தொடும் முன்பே, காற்றை விட வேகத்துடன் பக்கவாட்டில் இழுத்துச் செல்லப்பட்டாள்.
தான் நினைத்தது நடந்துவிட்ட திருப்தியுடன் புன்னகைத்தவள் விழிகளைத் திறக்காமல், அந்தச் சாகசப்பயணத்தை ரசிக்க, அடுத்த நொடி அவள் கீழே இறக்கி விடப்பட்டாள்.
அப்போதே கண்களைத் திறந்தவள் எதிரே கோபத்தில் சிவந்த கண்களுடன் நின்றிருந்த ஆர்யவர்தனைக் கண்டு நமுட்டுச்சிரிப்பு சிரித்தாள்.
இதழ்களோடு அவள் விழிகளும் சேர்ந்து சிரித்ததில், ஒருநொடி தடுமாறியவன், பின்பு கோபத்தை இழுத்துப் பிடித்தபடி, “என்ன பைத்தியக்காரத்தனம் இது மித்ரா? நான் வரலன்னா கீழ விழுந்து கால் ஒடைஞ்சுருக்கும்!” என்று கண்டிப்புடன் கூறினான்.
“ஹ்ம்ம், என்ன பண்றது… ஒரு ஆள், ரெண்டு மூணு நாளா தகவலே சொல்லாம அப்ஸ்காண்டானா, இப்படித்தான் கிறுக்குத்தனம் பண்ணி, அந்த ஆளைக் கண்டுபிடிக்க வேண்டியதா இருக்கு!” என்று ஓரக்கண்ணில் அவனைப் பார்த்தவாறே கூறியவள், “ஆமா, நீங்க என்ன இங்க? உங்க எக்ஸ்-ஒய்ஃப்புக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்திட்டு இருப்பீங்கன்னுல நினைச்சேன்!” என்று நக்கலாகக் கேட்டு வைக்க, இடையில் கைவைத்து அவளை ‘என்ன செய்வது’ என்பது போல பார்த்து வைத்தான் ஆர்யவர்தன்.
அவளும் அவனுக்குச் சளைக்காமல் பார்வையிலேயே அம்பைவிட, அவன்தான் தோல்வியைத் தழுவி, இரண்டு நாட்கள் என்ன செய்தான் என்பதை சொல்ல வேண்டியதாகிற்று!
அவள் கைகளில் ஒரு கட்டு காகிதங்களை வைத்தவன், “இதுக்காகத்தான் அலைஞ்சுட்டு இருந்தேன்…” என்று கூற, அவளது பார்வை அந்தக் கோப்பில் படிந்தது.
அதே சமயம், வேறு திசையை நோக்கிக்கொண்டிருந்த ஆர்யவர்தனோ, “முன்னாடி எப்படியோ… ஆனா, இப்போ வாழனும்னு ஆசை வந்துடுச்சு. அதான், ரெண்டு நாள் முழுக்க தேடி அலைஞ்சு, இதைக் கண்டுபிடிச்சுட்டேன்.” என்றான்.
அந்தக் கோப்பை மேலாக ஆராய்ந்தவளோ, “இது… மனுஷனா மாறுறதுக்கான கியூர்தான? இது எப்படி?” என்று மகிழ்ச்சியுடன் கேட்க, “நான் என்ன செஞ்சாலும் மேக்னா இதை என்கிட்ட கொடுக்க மாட்டான்னு எனக்கு நல்லாவே தெரியும். அதனாலதான், இத்தனை வருஷமா அவளுக்கு சேவகம் செய்ற மாதிரி நடிச்சு, அவளோட கோட்டைக்குள்ள நுழைஞ்சு, எனக்குத் தேவையானது எங்க இருக்குன்னும் கண்டுபிடிச்சுட்டேன்.” என்றான்.
ஏதோ யோசித்தவள், அவனை நோக்கி, “அப்போ அந்த மேக்னாவை கொன்னைப்போ சொன்ன மாஸ் டைலாக் எல்லாம் சும்மாதானா?” என்று ஆழம் பார்க்க, “அப்போ நான் மனுஷனா மாறுறதுல உனக்கு விருப்பம் இல்ல போல!” என்று அவளைக் குறுகுறுவென்று பார்த்தான்.
‘விருப்பம் இல்ல’ என்று சொல்லி விடுவாளா என்ன?
அந்தக் கேள்வியை அப்படியே விட்டுவிட்டு, “இப்போவே இதை சிவராம் அங்கிள்கிட்ட கொடுத்து சீரம் தயாரிக்க உதவி கேட்போம்.” என்று அவள் திட்டமிட்டுக்கொண்டே செல்ல, “வெயிட் வெயிட்… இது ரா ஃபார்முலா. இதுல என்னென்ன சைட்-எஃபெக்ட்ஸ் இருக்குன்னு இன்னும் நமக்குத் தெரியாது.” என்றான் அவன்.
அதில் புருவம் சுருக்கி, “சோ…” என்று அவள் இழுக்க, லேசாகச் சிரித்தவனோ, “மேக்னாவோட வேம்பயர்ஸ் இன்னும் காட்டுல சுத்திட்டு இருக்காங்களாம். சோ… வேம்பயர் ஹன்டிங் போலாமா?” என்றான் அவன்.
“க்கும், எல்லாம் முடிஞ்சதும் டேட்டிங் கூப்பிடுவான்னு பார்த்தா, ஹன்டிங்கு கூப்பிடுறான்! கடைசி வரை நமக்கு டேட்டிங் செட்டாகாது போல!” என்று லேசாக எட்டிப்பார்த்த கடுப்புடன் அவள் முணுமுணுக்க, சட்டென்று அவளது காதோடு அவன் மூச்சுக்காற்று முட்டும் அளவுக்கு நெருங்கியவன், “மத்தவங்க மாதிரி சாதாரண காஃபி டேட்ல என்ன திரில் இருக்கு? அதுவும் ஹன்டரான உன்னை ஹன்டிங் டேட்டுக்குத்தான கூப்பிட முடியும்!” என்று மெல்லியக் குரலில் கேட்டான்.
அதில், விழிகள் விரிய அவள் அவனை நோக்க, “என்ன, ஹன்டிங் டேட்டுக்கு ஓகேவா?” என்று ஆர்யவர்தன் கண்களைச் சிமிட்டி உல்லாசமாகக் கேட்க, இதழோரம் ஒதுங்கிய சிரிப்புடன் வேகமாகத் தலையை ஆட்டினாள் தேவமித்ரா.
சம்மதம் கிட்டியவுடனே, அவளது இடையைப் பற்றி தன்னருகே இழுத்தவன், நொடியும் தாமதிக்காமல் காற்றின் வேகத்திற்கு சவால் விடுவது போல அசாத்திய வேகத்தில் பறந்தான்.
நிமிடங்கள் கடந்து செல்ல, இருவரும் காட்டின் அடர்ந்த பகுதியை அடைந்திருந்தனர்.
அவன் சட்டென்று இழுத்துக்கொண்டு செல்வான் என்பதை எதிர்பார்க்காதவளோ, பெருமூச்சு விட்டு நிதானிக்க, அவனோ சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான்.
“இப்படியா பயமுறுத்துவீங்க? அடுத்து, என்ன செய்றதா இருந்தாலும் சொல்லிட்டு செய்ங்க.” என்றாள் கட்டளையிடும் தொனியில்.
அதில் உண்டான சிரிப்பை இதழோரம் அடக்கியபடி, “இப்போ நான் உன்னைக் கட்டிபிடிக்கப்போறேன்.” என்று அவன் கூற, ‘எதே’ என்பது போல பார்த்து வைத்தாள்.
இன்னும் சுற்றுப்புறத்திலேயே பார்வையை செலுத்தியவனின் இதழ்கள் சிரிப்பில் துடிப்பதைக் கண்டவள், அவனது தோளில் செல்லமாக அடித்து, “முடியல! எப்படித்தான் வாழ்க்கை முழுக்க சமாளிக்கப் போறேனோ!” என்று செல்லமாகவே அலுத்துக்கொண்டாள்.
“அதை யோசிக்க வாழ்க்கை முழுசும் இருக்கு. இப்போ ஹன்டிங்ல ஃபோகஸ் பண்ணுவோம். நாம இப்போ போகப்போறோம்… சோ, கெட்டியா கட்டிப்பிடிச்சுக்கோ.” என்று அவன் கூற, அவளும் கரங்களை மாலை போல அவன் கழுத்தில் கோர்த்து அவனை ஒட்டிக்கொண்டு நின்றாள்.
இருவரும் அவர்களின் ‘ஹன்டிங் டேட்’டுக்காகப் பறந்தனர்!
*****
அது ஒரு பின்மாலை பொழுது… சஞ்சீவனி தங்கள் அறையின் ஜன்னல் வழியே தூரத்தில் தெரியும் அடர்ந்த மரங்களை பார்வையிட்டுக்கொண்டிருக்க, அவரைப் பின்னிருந்து அணைத்தார் சர்வஜனன்.
கணவரின் அணைப்பில் தானாக இதழ்கள் விரிய, “என்னவாம் போலீஸ்காரருக்கு?” என்று வார்த்தைகளும் கொஞ்சல் வடிவில் வெளிவந்தன.
“இன்னைக்குப் பௌர்ணமி, அது உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று மனைவியின் காதில் ஊதியபடி சர்வஜனன் கேட்க, அவரைத் திரும்பிப் பார்த்த சஞ்சீவனியோ, “அதுக்கு என்ன இப்போ? சார்தான் இப்போ வேர்உல்ஃப் இல்லையே!” என்றார்.
“வேர்உல்ஃப்பா இல்லன்னா என்ன? இன்னும் வனியோட புருஷன்தான?” என்று மனைவியைக் கட்டிப்பிடிக்க, அதில் சத்தமாகச் சிரித்த சஞ்சீவனி, கணவனின் முதுகில் லேசாக அடித்தபடி, “பசங்களுக்கு ஹெல்ப் பண்ண போகாம, ரொமான்ஸ் கேட்குதா உங்களுக்கு… அதுவும் இந்த வயசுல?” என்றார்.
“ஏன் ரொமான்ஸ் பண்ண எதுவும் ஏஜ் ரெஸ்டிரக்ஷன் இருக்கா என்ன?” என்று சர்வஜனன் புருவம் உயர்த்தி வினவ, அதற்கு சஞ்சீவனி பதில் சொல்லும் முன்பே, “அதெல்லாம் இல்லப்பா. நீங்க ஜாலியா ரொமான்ஸ் பண்ணுங்க. நான் இவனுங்களை பார்த்துக்குறேன்.” என்ற தேவமித்ராவின் இரு கரங்களும் மித்ரநந்தனையும் விஷ்வாமித்ரனையும் கெட்டியாகப் பிடித்திருந்தன.
மகளின் சத்தத்தில் சட்டென்று பிரிந்த அந்தக் காதல் ஜோடி ஒருவரையொருவர் முறைத்திருக்க, அவர்களுக்கு தொல்லை தர வேண்டாம் என்று எண்ணியவர்களாக இளையவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.
“ப்ச், நாங்களே பார்த்துக்குறோம்ன்னு சொல்றோம்ல… நீ வேற எதுக்கு தொத்திட்டு வர?” என்று எரிச்சல் பாதி சங்கடம் மீதியென்று மித்ரநந்தன் கேட்க, விஷ்வாமித்ரனும் சங்கடத்துடன் அதை ஆமோதித்தான்.
“அதெல்லாம் தெரியாது. நம்ம பிராமிஸ் மறந்துடுச்சா?” என்ற தேவமித்ரா வாகனத்தை கிளப்பி காட்டை நோக்கிச் செலுத்தினாள்.
‘வந்தே தீருவேன்!’ என்று அடம்பிடிப்பவளை கடுப்புடன் பார்த்த மித்ரநந்தன், “எப்பவும் இந்த நேரத்துக்கு ஹன்டிங் பண்ணப்போறேன்னு உன் ஆளு கூடத்தான சுத்துவ… இன்னைக்கு என்னாச்சு? உன் ஆளு எதுவும் சொல்லலையா?” என்று வினவினான்.
அதற்கு அவளோ சற்றும் சளைக்காமல், “எல்லாரும் சேர்ந்து ஹன்டிங் போவோம்னு முடிவு பண்ணியாச்சு!” என்று கூறி தோளைக் குலுக்க, ‘அடிப்பாவி!’ என்பது போல பார்த்து வைத்தனர் இருவரும்.
அவள் சொன்னதைப் போலவே, வாகனத்தை நிறுத்திய இடத்தில் ஆர்யவர்தன் இவர்களுக்காகக் காத்திருக்க, “உண்மையாவே ஹன்டிங்தானா?” என்று கேட்டான் விஷ்வாமித்ரன்.
“பின்ன என்னைப் பார்த்தா பொய் சொல்ற மாதிரி தெரியுதா?” என்று மூக்கு விடைக்க கேட்டாள் தேவமித்ரா.
மித்ரநந்தனோ அங்கு வாளோடு நின்று கொண்டிருந்த சுலோஷனாவை விழுங்குவது போல பார்த்துக்கொண்டிருக்க, அவளோ அவனைக் கண்டுகொள்ளாமல், “தேவா, கொஞ்சமாச்சும் பங்க்சுவாலிட்டி இருக்கா?” என்று தோழியிடம் காய்ந்துகொண்டிருந்தாள்.
இருவரின் ஊடலையும் வழக்கம் போல கண்டுகொள்ளாத தேவமித்ரா ஆர்யவர்தனிடம் சென்று, “போலாமா?” என்று வினவ, அவனோ சரியென்று தலையசைத்து, “அப்போ நான் உன்னைக் கட்டிப்பிடிக்கவா?” என்று கேட்டு வைக்க, மற்றவர்கள் முன்னால் மானம் போக, மானசீகமாக தலையிலடித்துக்கொண்டாள் தேவமித்ரா.
அதே சமயம், முழுநிலவின் ஒளி மித்ரநந்தன் மற்றும் விஷ்வாமித்ரன் மீது பட, இருவரும் அவர்களின் ஓநாய் வடிவத்திற்கு மாறினர்.
அடுத்த நொடி, ஐவரும் தங்கள் வேட்டைக்குக் கிளம்பி இருந்தனர்!
முற்றும்...