24 - நீ இல்லாமல் நான் இல்லை! | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

24 - நீ இல்லாமல் நான் இல்லை!

New updates

LATEST

sai lakshmi

Member
Joined
Sep 18, 2026
Messages
36
Reaction score
40
Points
18
 அத்தியாயம் : 24

சற்று நேரத்திற்குள் அந்த இடம் மக்கள் கூட்டத்தால் சம்பித்தது.

வலியில் அலறியபடி கீழே கிடந்த ராசைய்யாவைப் பார்த்த அக்கம் பக்கத்து மக்கள் ஆவேசமாக அவனை சூழ்ந்து நின்றிருந்தனர்.

"இத்தனை வீடுகள் வரிசையா இருக்கு. இவன் பயமில்லாமல் இந்த பொண்ணு வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கானே?” என்று ஒரு பெண்மணி கூற,

“இவனை சும்மா விட கூடாது, உடனே போலீசில் பிடிச்சி கொடுத்துடணும் தம்பி!" என்று சிலர் கோபமாக குரல் எழுப்பினர்.

ஏற்கனவே கோபத்தில் இருந்த பிரகாஷூற்கு கோபம் அடங்காமல், ராசைய்யாவை முறைத்து பார்த்து கொண்டே நின்றான்.

அவனது கண்களில் இருந்த கோபத்தை கண்ட ராசைய்யாவுக்கு உள்ளுக்குள் நடுக்கம் எடுத்தது.

மாளவிகா தன் மீது காட்டிய வேகமும், பிரகாஷ் கொடுத்த அடியும், ராசைய்யாவின் திமிரை அடியோடு ஒடித்திருந்தது. போதை தெளிந்து அனைவரையும் பார்க்க வெட்கப்பட ஆரம்பித்தான்.

தன்னை சுற்றியுள்ள கூட்டத்தை கண்டதும் பயந்துபோனவன், தன் சட்டையை சரி செய்துகொண்டே, "விடுங்க... நான் இங்க இனி வரலை" என்று உளறியபடியே எழுந்து தப்பியோட முயன்றான்.

ஆனால், அருகில் நின்ற ஒரு முதியவர் அவனது கையைப் பிடித்து தடுத்து, "தம்பி, நீ சொல்லு... இவனை அப்படியே விடலாமா, இல்லை போலீசுக்கு போன் பண்ணவா?" என்று பிரகாஷிடம் கேட்டார்.

பிரகாஷ் சற்று நிதானத்திற்கு வந்து, மாளவிகாவைத் திரும்பிப் பார்த்தான்.

அவள் இன்னும் நடுங்கியபடியே வீட்டின் கதவோரத்தில் நின்று கொண்டிருந்தாள்.

இந்த விவகாரத்தை மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் வரை இழுத்துச் சென்றால், மாளவிகாவின் பெயரும், கடந்த கால பிரச்சனைகளும், வீண் வம்பாக வெளியில் பேசப்படும் என்று யோசித்தான்.

ராசைய்யாவின், கழுத்துப்பட்டையை பிடித்து இழுத்து, "இனி ஒருமுறை மாளவிகா பக்கம் உன் நிழல் பட்டது... உன் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. உடனே இந்த சென்னையைவிட்டே ஓடி போயிடு" என்று பற்களைக் கடித்தபடி எச்சரித்தான்.

பிரகாஷின் அந்த மிரட்டலில் மொத்தமா சின்னாபின்னமாகி போன ராசைய்யா, "இனி... இனி இந்தப்பக்கமே வரலை சாமி..." என்று கெஞ்சியவாறு, கூட்டத்தை பிளந்து கொண்டு அங்கிருந்து பயந்து நடுங்கி ஓடி மறைந்தான்.

ராசைய்யா ஓடியதும், மக்கள் கூட்டமும் மெல்லக் கலைந்து சென்றது.

அக்கம் பக்கத்தில் இருந்த வயதான பாட்டி ஒருவர், மாளவிகாவின் வீட்டிற்குள் வந்து அவளது தலையைத் தடவி, "பயப்படாதம்மா... நல்லவேளை தம்பி கரெக்ட் நேரத்துக்கு வந்துட்டான்" என்று ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார்.

அனைவரும் சென்றபின், தன் அறைக்குள் நடுங்கியபடியே அமர்ந்திருந்த மாளவிகாவின் அருகில் வந்தான் பிரகாஷ்.

அவளது தோள்களை மென்மையாக தொட்டு, ஒரு க்ளாஸ் தண்ணீரை நீட்டினான்.
"குடி மாளவிகா... அவன் இனி வரவே மாட்டான்" என்றான் கனிவான குரலில்.

தண்ணீரை வாங்கி குடிக்காது, திடீரென சத்தம் போட்டு கதறி அழுதாள். இத்தனை நாளாக மனதிற்குள் அடக்கி வைத்திருந்த மொத்த கவலையும் சேர்ந்து கண்ணீராக வெளியேறியது.

அவளது அழுகையை பார்த்து தாங்க முடியாத பிரகாஷ், அவளை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டான்.

"நான் இருக்கேன் மாளவிகா. இனி உன்னை தொடுறதற்கு கூட அவனுக்கு தைரியம் வராது" என்று அவளது தலைமுடியை தடவி ஆறுதல் கூறினான்.

சில நொடிகளில் அவள் தன்னைச் சரிசெய்துகொள்வாள் என்று நினைத்தான். ஆனால், மாளவிகாவோ அழுகையை நிறுத்தாமல் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே இருந்தாள்.

அவளை எப்படிச் சமாதானப்படுத்துவது எனத் தெரியாமல் தவித்தவன், “மாளவிகா… நீ முதல்ல டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. நாம காத்தாட நடந்து போய் சாப்பிட்டுவிட்டு வருவோம். டைம் ஆச்சு பாரு” என்று அவளுக்கு ஆறுதலாக கூறினான்.

அவளிடம் எந்த அசைவும் இல்லை. அப்படியே நிலைகுலைந்து அமர்ந்திருந்தவளின் முகத்தை தன்னிடமிருந்து பிரித்து பார்த்தான்.

அழுது அழுது அவளது முகம் முழுவதும் கண்ணீர்த் தடங்கள் படிந்திருந்தன. “இது நடக்க கூடாதுதான். ஆனா, நடந்துருச்சு. நடந்ததை எதையும் நம்மால மாத்த முடியாது. ஆனா… நடந்ததை மறக்க முடியும். நீ மறந்துதான் ஆகணும்” என்று சற்று ஆழமான குரலில் கூறினான் பிரகாஷ்.

“எ…என்னால எப்படிங்க முடியும்?” என்று கேட்டுத் தேம்பித் அழுதாள்.

அவளது பயம் முழுமையாக விலகி, உடல் நடுக்கம் நிற்கும் வரை அங்கிருந்து நகர அவனுக்கு மனமில்லை. தன் கைகளால் அவளது முகத்தை துடைத்துவிட்டு தண்ணீரை குடிக்குமாறு கூறினான்.

அவளோ ‘வேண்டாம்’ என்பது போலத் தலையை ஆட்டினாள்.

அவளது பரிதவிப்பைப் பார்த்த பிரகாஷின் மனம் கனத்தது. அவளது முகத்தை மென்மையாக தன் கைகளில் ஏந்தி, அவளது நெற்றியிலும் கன்னத்திலும் தாடையிலும் என்று அடுக்கடுக்காய் மென்மையாய் முத்தமிட்டான்.

அவனது அந்த அன்பான ஸ்பரிசத்தில் அவளுக்குள் இருந்த பாதுகாப்பின்மை, பயம், கவலை, விரக்தி விலகி, அவனது தலைமுடிக்குள் தன் விரல்களைவிட்டு இறுகப் பற்றினாள்.

அவளுக்கு தான் அளித்த முத்தத்தினால், தன் கட்டுப்பாட்டிற்குள், முழுமையாக வந்துவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்டவன், அவளது இதழ்களுக்கு அருகில் நெருங்கி, “கிஸ் பண்ணலாமா?” எனக் கேட்டான்.

அவளோ, அந்த மோக நிலையிலிருந்தும் பதற்றத்திலிருந்தும் பட்டென்று வெளிவந்து அவனிடமிருந்து மெல்ல விலகினாள்.

அவளது முகத்தில் அந்த நாணத்தை கண்டு இதழோரம் சன்னமாய் சிரித்து கொண்டவன், அவளது நெற்றியில் செல்லமாய் ஒரு முட்டு முட்டிவிட்டு, “ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு சீக்கிரம் வா. நான் வீட்டை பூட்டிட்டு வர்றேன்” எனக் கூறிவிட்டு அறையை விட்டு நகர்ந்தான்.

கதவை சாத்திய மாளவிகா, சற்று முன்பு அங்கே நடந்தவற்றின் அதிர்ச்சியிலிருந்து மீள முயன்றாள். ஆனால், ராசைய்யாவினால் கிழிந்து எறியப்பட்ட, தன் சுடிதார் டாப்பை பார்த்ததும் அவளறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் முட்டியது.

உடனே சுதாரித்துக்கொண்டு, கண்ணீரைத் துடைத்துவிட்டுப் பீரோவிலிருந்து வேறொரு புதிய சுடிதாரை எடுத்து மாற்றினாள்.
பின்னர் முகத்தை சோப்பு போட்டு அலம்பிவிட்டு, தலைமுடியை ஒழுங்காக சீவிக்கொண்டு கதவைத் திறந்தாள்.

அவளுக்காக வாசல்படியில் காத்திருந்த பிரகாஷ், அவளது வரவைக் கண்டு புன்னகையுடன் எழுந்து கொண்டான்.

அவள் வீட்டைப் பூட்டியதும், இருவரும் அந்த சந்து தெருவை தாண்டி பாட்டி கடைக்கு சென்றனர்.

“இட்லி, தோசை, சப்பாத்தி… என்ன வேணும் தம்பி?” என்று அன்போடு கேட்டார் பாட்டி.

“எனக்கு சப்பாத்தி போதும் பாட்டி” என்றாள் மாளவிகா சோர்வான குரலில்.

“எனக்கு தோசை கொடுங்க பாட்டி. கூடவே ரெண்டு ஆம்லேட்” என்றான் பிரகாஷ்.

அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை அவளுக்கு தட்டில் சப்பாத்திக்கு குருமா குறைந்துவிட கூடாது என்றும், சட்னி தேவைப்படுவதை கவனித்தும் அவளுக்கு பார்த்து பார்த்து பரிமாறினான்.

சுற்றி யார் இருக்கிறார்கள், தங்களை யாராவது பார்க்கிறார்களா என்று, எதை பற்றி துளியும் கவலைப்படாமல், அந்த சூழ்நிலையில் மாளவிகாவின் மனதை தேற்றுவது மட்டுமே தன் கடமை என்பது போல அவளையே கவனித்தவாறு, தானும் சாப்பிட்டு முடித்தான்.

சாப்பிட்டதற்கு பணத்தை கொடுத்துவிட்டு இருவரும் நடக்க தொடங்கினர்.

கொஞ்சம் தூரம் கடந்ததும், சட்டென்று பிரகாஷின் கையை பிடித்து நிறுத்தினாள் மாளவிகா. அவளது முகத்தில் அப்போதும் ஒருவிதக் கலக்கம் இருந்தது.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், கண்கள் கலங்க, “ப்ளீஸ்… என்னை சீக்கிரமே மேரேஜ் பண்ணிக்கிறீங்களா?” எனக் கேட்டாள்.

அவளது கண்களிலிருந்து வெளிவந்த கண்ணீர் அவளது கன்னத்தை நனைத்துவிட்டு கீழே விழுந்தது.

அவளது அந்த தவிப்பும் கோரிக்கையும் பிரகாஷின் இதயத்தை கனக்க வைத்தது.

“எனக்கு இன்னைக்கு நைட்டு தனியா படுக்க பயமா இருக்கு. தூக்கமே வராது. எப்ப… அவன் வந்திருவானோனு மனசு பயத்துல துடிக்கிது. அதுவே உங்க கூட இருந்தா நிம்மதியாவும் பாதுகாப்பாவும் நான் இருக்கிறதா பீல் பண்றேன். அதுனாலத்தான் நான் அப்ரோட் போகலை. இனி நீங்க இல்லாமல் என்னால தனியா இருக்க முடியாது”

அவளது நிலையைப் புரிந்துகொண்ட பிரகாஷ், சிறு தயக்கத்திற்குப் பின் உறுதியான குரலில், “இன்னைக்கு நைட் நீ தனியா படுக்க வேணா. என் ரூம்ல வந்து படு. அக்கம் பக்கம் யாரு என்ன நினைச்சாலும் பரவாயில்லை ஓக்கே வா?” என்றான்.

அதைக் கேட்ட மாளவிகா, சற்று நிம்மதியடைந்தவளாய் மென்மையாக ‘சரி’ என்பது போல தலையசைத்தாள்.

அவளை நேராக தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றான். வீட்டை திறந்து உள்ளே நுழைந்ததும், அவனது வீட்டை சுற்றி பார்த்தாள். வீட்டை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் வைத்திருந்தான்.

‘நாம எதிலும் சுத்தம் கிடையாது ஆனா, இவங்க எல்லாத்திலும் பெர்பெக்ட்டா இருப்பாங்க போல’ என்று மனதிற்குள் எண்ணி கொண்டாள்.

“உட்காரு மாளவிகா. நான் நைட் ட்ரெஸ் மாத்திட்டு வந்திடுறேன். என் வீடு மாடி வீடுல ராத்திரி கொஞ்சம் வெட்கையா இருக்கும்” என்றவன், ஒரு டிசர்ட்டையும், டிராக் பேண்ட்டையும் எடுத்து கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

திரும்பி வரும்போது அவள் அவனது புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்தாள்.

“சரி… மாளவிகா நீ தூக்கம் வந்தா… கட்டில்ல படுத்து தூங்கு. நான் படிக்க உட்காருறேன். இப்பவே லேட்டாகிருச்சி. நிறைய இருக்கு படிக்க. எதை படிக்க எதை விடனே தெரியலை” என்ற புலம்பலோடு புத்தகங்களை எடுத்து மேஜையில் பரப்பினான்.

அவளோ கட்டிலில் தலை சாய்த்தவாறு அவனை பார்த்தாள்.

அவனோ அமைதியாக புத்தகத்தில் கண் பதித்தவாறு வாசித்து கொண்டிருந்தான்..

அச்சமயம் அவனது அலைபேசிக்கு அழைப்பு வரவும் எடுத்து பார்த்தான். பள்ளியின் இரவு வாட்ச்மேன் அழைத்திருந்தார்.

“தம்பி மேடத்துக்கிட்ட சொல்லி அந்த கதவுக்கெல்லாம் பூட்டு மாத்த சொல்லியிருந்தேனே, சொன்னீயா?” எனக் கேட்டார்.

“மேடத்துக்கிட்ட சொல்லிட்டேன் மேடமும் ஓக்கே சொல்லிட்டாங்க. நான் நாளைக்கு வாங்கி வச்சிட்டு போயிடுறேன். நீங்க இனிமே அந்த பூட்டையே போட்டு பூட்டிக்கங்கங்க. சரிங்கண்ணே” என்று பேச்சை சுருக்கிவிட்டு அழைப்பை துண்டிக்க அவன் முயல,

ஆனால், வாட்ச்மேனோ வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் அரட்டை அடிக்கத் தொடங்கினார்.

‘ம்ம்ம் வச்சி தொலைய மாட்டின்கிறாரே’ என்று அவருக்கு கேட்காதவண்ணம் பிரகாஷ் புலம்பவும், அவனை பார்த்து கொண்டிருந்த மாளவிகா மெல்ல இதழோரமாய் சிரித்து கொண்டாள்.

“அண்ணே… எனக்கு இன்னொரு போன் வருது. நான் பேசிட்டு வர்றேன். போனை வைக்கிறேன்” எனக் கூறிவிட்டு அவசரகதியாக அழைப்பை துண்டித்தான்.

போனை மஞ்சத்தின் மீது கோபமாக வைத்தவன், ‘எனக்கு எக்ஸாம் டைம் அப்பத்தான் சோதனைக்குன்னே இப்படியெல்லாம் நடக்கும்’ என்று முணங்கி கொண்டே கோபமாக முகத்தை வைத்தவாறு, புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தான். விருவிருவென ஒவ்வொரு பக்கமாக திருப்ப ஆரம்பித்தான்.

தன்னால் அவனுக்கு சில மணி நேரம் இன்று வீணாகிவிட்டது என்று மனதிற்குள் வருந்தினாள். ஆனால், அதே சமயம், அவளது மனதின் ஒரு ஓரம் ஒரு குறும்பு எண்ணமும் ஓடியது. ‘‘அப்படி ஒரு பயங்கரமான சம்பவம் நடக்கவில்லை என்றால், இன்று ஒரே அறையில் அவனுக்கு இவ்வளவு அருகில் இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்குமா? அவன் அறியாமல், இவ்வளவு அருகில் இருந்து அவனை ரசிக்கத்தான் முடியுமா?’ என்று எண்ணினாள் மாளவிகா.

இந்த அத்தியாயம் பற்றிய கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
அன்புடன்
சாய்லஷ்மி.
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,406
Reaction score
3,238
Points
113
அருமையான பதிவு

ராசய்யா உனக்கு இதெல்லாம் தேவையா ஐயா
 
Top Bottom