17 - நீ இல்லாமல் நான் இல்லை! | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

17 - நீ இல்லாமல் நான் இல்லை!

New updates

LATEST

sai lakshmi

Member
Joined
Sep 18, 2026
Messages
34
Reaction score
40
Points
8
 அத்தியாயம் : 17
மாதங்கள் வேகமாக உருண்டோடின. பிரகாஷின் வாழ்க்கை அவன் திட்டமிட்டபடி எந்தவித தடங்கலுமின்றி அவன் கல்வியும், வாழ்க்கையும் சுமுகமாக சென்று கொண்டிருந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலையிலேயே எழுந்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு, துணிகளை துவைத்து காயப்போட்டான். அதன் பிறகு மேஜையில் அமர்ந்து கடந்த வார கல்லூரி பாடம் தொடர்பான குறிப்புகளை, எடுத்து வைத்து படிக்க தொடங்கினான். அப்போது அவனது கைப்பேசி சிணுங்கியது.

திரையை பார்த்தால் ஊரிலிருந்து ஆரோக்கியசாமி அழைப்பு விடுத்திருந்தார்.

உடனே அழைப்பை ஏற்று, “வணக்கம் சார்” என்றான் உற்சாகமாக.

“என்ன பிரகாஷ், வீக்கெண்ட் எப்படி போகுது? வேலை, படிப்பு எல்லாம் எப்படி இருக்குப்பா?” என்று விசாரித்தவர், உடனே விஷயத்திற்கு வந்தார். “எனக்கு தெரிஞ்ச நல்ல குடும்பத்திற்கு வாடகைக்கு வீடு வேணும்னு கேட்டாங்க. அதான் உன்னோட வீட்டை திறந்து காட்டினேன். அவங்களுக்கு வீடு ரொம்ப பிடிச்சிருச்சாம். ஐந்தாயிரம் வாடகை, பத்தாயிரம் அட்வான்ஸ் சொல்லியிருக்கேன், அவங்களும் சரினு சொல்லிட்டாங்கப்பா” என்றார்.

தந்தையை போன்ற அந்த நல்ல மனிதரின் அக்கறையைக் கண்டு நெகிழ்ந்துபோன பிரகாஷ், “நீங்க பார்த்து சொல்றீங்கன்னா அது கண்டிப்பா நல்லவங்களாகத்தான் சார் இருப்பாங்க. வாடகைக்கு விட்டிருங்க”

“நான் உன் அக்கவுண்ட்டுக்கே பணம் அனுப்ப சொல்லிட்டேன். அவங்க சாயங்காலம் பணம் அனுப்பிவிடுவாங்க, அக்கவுண்ட்டை செக் பண்ணிக்க”

மேற்கொண்டு சிறிது நேரம் பேசிவிட்டு, “சரிங்க சார். ரொம்ப தேங்க்ஸ் சார்” எனக் கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் அழைப்பை துண்டித்தான்.

தன் சொந்த ஊரில் இருக்கும் வீட்டை பற்றி இனி கவலைப்படத் தேவையில்லை. வாடகைக்கு வந்தவர்கள் இனி வீட்டை நல்லபடியாக பார்த்து கொள்வார்கள் என்ற நிம்மதி அவனுக்குள் ஏற்பட்ட, “ஹாய் ஜெமினி! டுடே ஐ வாண்ட் டு லேர்ன் மோர் அபௌட் பைதான் அட்வான்ஸ்டு கான்செப்ட்ஸ். கேன் யூ கிவ் மி எ சிம்பிள் எக்ஸாம்பிள்?” என்று ஆங்கிலத்திலேயே தட்டச்சு செய்து அனுப்ப, ஜெமினியும் உடனே மிகத் தெளிவான குறிப்புகளையும் விளக்கங்களையும் அளித்தது.

தன் நோட்டில் ஆங்கிலத்தில் குறிப்புகளை எழுத தொடங்கினான். சிரமம் பார்க்காது ஆங்கிலத்தில் தன் அறிவை வளர்த்து கொண்டது, இன்று எவ்வளவு தூரம், கை கொடுக்கிறது என்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

இப்போது அவனுக்கு ஆங்கிலத்தில் சிந்திப்பதும், பேசுவதும், எழுதுவதும் இயல்பான சுபாவமாக மாறி போயிருந்தது.

மாலை வேளையில் வீட்டின் அருகில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்க்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி வந்தவன், இரவு நேரத்தில் தன் உணவைத் தானே சமைத்து முடித்துவிட்டு, ஜன்னல் வழியாக சென்னையின் இரவு நேர வானத்தை பார்த்து கொண்டே சாப்பிட்டான்.

தன் சொந்த உழைப்பால் தன் வாழ்வை அழகாக செதுக்கி கொண்டிருப்பதை நினைத்து பார்க்க, அவனுக்குள்ளே அவனை நினைத்து பெருமையாக இருந்தது.

இவ்வாறாக நாட்கள் செல்ல, அவன் கல்லூரி சேர்ந்து ஒரு வருடமாகிருந்தது. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருதடவை நடந்த பரீட்சையில் நல்ல மதிப்பெண்ணும் பெற்றிருந்தான். அவனது இரண்டாம் ஆண்டு படிப்பு தொடங்கியது.

தனிமையை உணராதவாறு அவனுடைய வாழ்க்கை முறை சென்று கொண்டிருந்தாலும், ஏனோ லோக்கல் ட்ரெயினில் பயணிக்கும், அந்த சில நொடி நேரத்தில் ஏதோ ஒரு தனிமையை மனதிற்குள் உணர்ந்தான்.

அவனது இருபத்தி ஐந்து வயது மனதுக்குள் ஒரு மெல்லிய தனிமை, லோக்கல் ட்ரெயினில் பயணிக்கும்போது அவ்வப்போது எட்டிப்பார்க்க தொடங்கியது.

ஏனெனில் நாள்தோறும் சென்னை லோக்கல் ட்ரெயினில் அவன் மேற்கொள்ளும் பயணங்கள், அவனுக்கு பல மனிதர்களை பரிச்சயப்படுத்தின.

காலையில் சன்னலோரம் நின்று பயணிக்கும்போதோ அல்லது மாலை நேரக் கூட்ட நெரிசலில் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும்போதோ, அவனது கண்கள் இயல்பாகவே ஜோடிகளாக அமர்ந்து சிரித்துப் பேசி கொண்டிருக்கும் இளம் காதல் ஜோடிகளின் மீது படிந்தது.

அப்படிப்பட்ட காட்சிகளை பார்க்கும்போது, அவனுக்குள்ளும் காதலின் ஏக்கம் துளிர்க்க ஆரம்பித்தது. 'நமக்கென்று ஒருத்தி இருந்தால் எப்படி இருக்கும்?' என்ற எண்ணம் அவனது நெஞ்சில் வந்து, அலைமோத ஆரம்பித்தது. அப்பொழுதுதெல்லாம் தனிமையை உணர ஆரம்பித்தான்.

அதுமட்டுமின்றி தினமும் ஒரே நேரத்தில் பயணிக்கும் சில முகங்கள் அவனுக்கு பரீட்சையமாகிவிட்டது.

அவர்களில் சிலர் எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து கண்ணாலேயே காதல் பேசி கொண்டிருந்தார்கள்.

இன்னும் சிலரோ, கையில் ஸ்மார்ட்ஃபோனை வைத்து கொண்டு ஒரே நேரத்தில் நான்கைந்து பேருடன் வாட்ஸ்அப்பில் அரட்டை அடிப்பதையும், காதலைப் பரிமாறி கொள்வதையும் பார்த்துவிட்டு, ‘இவங்களுக்கெல்லாம் எப்படி இவ்வளவு ஈஸியா காதல் வருது? அதுவும் நாலைஞ்சு பேரு கூட எப்படி பேச முடியுது?’ என்று சில நேரங்களில் தனக்குள் வியந்து சிரித்தும் கொண்டான்.

ஆனால், அந்த மாதிரியான பொழுதுபோக்கான காதல் அவனுக்கு பிடிக்கவில்லை. தன் மனதுக்கு பூரணமாய் பொருந்திப்போகும் ஒரு உண்மையான ஜீவனை தேடினான்.

தன் மனதிற்கு பிடித்த அந்த சரியான பெண்ணை தேடும் ஆர்வம் அவனுக்குள் நாளாக நாளாக ஊசலாட தொடங்கியது.

ட்ரெயினில் ஏறும்போதெல்லாம், 'இன்றைய பயணத்திலாவது அந்த மாதிரி ஒரு பெண் கண்ணில் படுவாளா?' என்ற ஒரு எதிர்பார்ப்பு அவனது விழிகளில் எழுந்தது.

அலுவலகத்தில் கணினித்திரையை பார்த்து வேலை செய்யும்போதும், கல்லூரியில் பேராசிரியரின் பாடத்தை கவனித்து கொண்டிருக்கும்போதும், திடீரென அடிமனதில் தன் மனதிற்கு பிடித்த ஒரு பெண் கிடைக்க வேண்டும் என எண்ணினான்.

இருப்பினும், அவனது அந்த தேடல் அவசரமானதாகவோ அல்லது பொறுப்பற்றதாகவோ இருக்கவில்லை. காதலும் துணையும் சரியான நேரத்தில் தன் வாழ்க்கைக்குள் தானே வரும் என்ற பக்குவத்துடன் நாட்களை கடத்தினான்.

ஒருநாள் இரவில் வழக்கம் போல தன் வீட்டின் சமையல் அறையில் சப்பாத்தியை சுட்டு முடித்துவிட்டு, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து, நிலவைப் பார்த்து கொண்டே சாப்பிட்டவன், “ஹே ஜெமினி எனக்கு லவ் பண்ண ஒரு பொண்ணு வேணும்னு தோணுது? வாட் கேன் அ டூ” எனக் கேட்டான்.

“ஓ பிரகாஷ்! காதலில் விழ வேண்டும் என்று தோன்றுவது மிகவும் இயல்பான ஒன்றுதான். ஒரு நல்ல துணையுடன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், சரியான நபரை கண்டறிய அவசரப்பட வேண்டாம். உனது லட்சியங்கள், உழைப்பு ஆகியவைதான் உன்னை மெருகேற்றி கொண்டிருக்கின்றன. இந்த சரியான பாதையில் நீ பயணிக்கும்போது, உனது மனதுக்கு பொருந்திய உண்மையான ஒரு துணை தானாகவே, உன் வாழ்க்கைக்குள் வருவாள். இப்போதைக்கு உன்னுடைய இலக்குகளிலும், உன்னை மேம்படுத்தி கொள்வதிலும், உன் கவனத்தை செலுத்து, எல்லாம் நல்லபடியாக நடக்கும்!” என்று அன்பாக ஜெமினி பதிலளித்தது.

ஜெமினியின் அந்த பதிலை படித்ததும் பிரகாஷின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது. தான் தனியாக இல்லை என்றும், எப்போதுமே தனக்கு வழிகாட்ட ஒரு தோழன் போல், ஜெமினி உடனிருக்கிறது என்றும் மனதிற்குள் நினைத்து மகிழ்ந்தான்.

மறுநாள், மாலையில் கல்லூரிக்கு சென்றுவிட்டு, வழக்கம் போல, மின்சார ட்ரெயினில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். அன்று ட்ரெயினில் வழக்கத்தை விட கூட்டம் சற்று குறைவாக இருந்தது. ஆனால் அமர பிடிக்காமல், படி அருகே நின்றுகொண்டு வேடிக்கை பார்த்தவண்ணமிருந்தான்.

அடுத்த நிலையத்தை நோக்கி ட்ரெயின் கிளம்பிய தருணத்தில், ஒரு இளம் பெண் அவசரமாக ட்ரெயினில் ஏற முயன்றாள்.

ஒரு சிறிய தோள் பையும், லன்ஞ்ச் பேக்குடன் ட்ரெயினில் ஏற படியில் கால் வைத்தவள், கையில் இருந்த பையை வைத்து கொண்டு, ட்ரெயின் கம்பியை பிடிக்க முயல, ட்ரெயின் கிளம்பிய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், பதட்டத்தில் ட்ரெயின் கம்பியை பிடிக்க தவறினாள்.

அதனால் ட்ரெயின் கிளம்பிய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், அவள் பின்னால் சாய்ந்தவாக்கில் கீழே விழ போனாள்.

அருகில் நின்றிருந்த பிரகாஷ் சட்டென்று சுதாரித்து, பட்டென்று தன் கையை நீட்டி, அவளையும், அவளது பையையும் கீழே விழாமல், அவளது இடையோடு சேர்த்து, தாங்கி பிடித்து அவளை நேராக நிறுத்தினான்.

அவனது துனையுடன் மெதுவாக ரயிலினுள் நுழைந்தவள், அவசரமாக அவனை நிமிர்த்து பாரத்து, “தேங்க் யூ சோ மச் சார்!” என்று மூச்சு வாங்க சிறிது புன்னகையுடன் கூறினாள்.

அந்த சிறிய தருணத்தில் அவளது குரலிலும் பார்வையிலும் இருந்த இயல்பான தன்மை பிரகாஷின் இதயத்தில் லேசானதொரு ஒரு இன்ப அதிர்வை ஏற்படுத்தியது.

அவளது முகம் லேசாக சோர்வடைந்திருந்தாலும், அதில் எந்த செயற்கையான ஒப்பனையும் இல்லை. ஒரு இயல்பான களையும், மிடுக்கும் அவளது விழிகளில் தெரிந்தது. மொத்தத்தில் இயல்பான அழகுடையவளாக இருந்தாள்.

அவளை பார்த்து கொண்டே இருந்தவன் சட்டென்று நினைவு வந்தவனாக, அவளது இடையில் இருந்து அவசரமாக கையை எடுத்துவிட்டு, “இட்ஸ் ஓகே...” என்று, ஒரு சிறு புன்னகையுடன் கூறினான்.

அவளோ, அவனை பார்க்காமல் படபடக்கும் இதயத்துடன் தலைகுனிந்தவாக்கில் காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள். ஆனால், அவள் நின்றிருந்த அந்த இடம் அவள் சென்றபின்னரும், அவனுக்கு ஒரு சுகமான வாசனையை தந்து கொண்டிருந்தது போலிருந்தது.

திரும்பி நின்று, முதுகுகாட்டி அமர்ந்திருந்தவளின் தலைமுடியை பார்த்தான். அது நீண்டு கீழே தொங்கியது. அவளை யாருமறியாமல் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆவல் தோன்ற பார்த்து கொண்டிருந்தான்.

“ஏம்மா… அடுத்த ட்ரெயினுக்கு கூட வந்திருக்கலாமே? ஏன் இவ்வளவு அவசரமா ஏறுற? அந்த தம்பி பிடிக்கலைன்னா.. நீ ட்ரெயினுக்குள்ள போயிருப்ப” என்று அங்கிருந்த பெண்மணி ஒருத்தி சத்தமிட்டாள்.

“ஆமாம்… ட்ரெயின் எவ்வளவு வேகமாக போகுது” என்று மற்றொருத்தி கூற,

அனைவரின் வார்த்தையிலும் பதில் சொல்ல முடியாது தவித்தவள், ‘நம்ம நல்லதிற்கு தானே அறிவுரை கூறுகிறார்கள்’ என்று அனைவரின் பார்வையையும் தவிர்க்க முடியாது, அமைதியை கடை பிடித்தாள்.

‘அவள் வேண்டுமென்றேவா இப்படி செய்தாள். ஏதோ அவசரத்தில் ஏறிவிட்டாள். அதற்காக எல்லாரும் ஏன் அவளை திட்டுகிறார்கள்?’ என்று அவளுக்காக மனதிற்குள் வருந்தினான் பிரகாஷ்.

தான் இறங்கும் ட்ரெயின் ஸ்டேஷன் வரவும், நினைவுவந்தவனாக அவளிடமிருந்து பார்வையை விலக்கி, ட்ரெயினிலிருந்து கீழே இறங்கினான்.

அன்று வீட்டிற்கு திரும்பும்போது, வழியில் இட்லி மாவு பாக்கெட் வாங்கி கொண்டான். வீட்டிற்குள் நுழைந்ததும் வழக்கம்போல் சமையல் செய்ய ஆரம்பித்தான். தோசையும், தக்காளி சட்னியும் தயாரிக்கும்போது, அந்தப் பெண்ணின் முகமும், ‘தேங்க்யூ ஸோ மச்’ என்று கூறிய, அவளது உதடுகளும்தான் அவனது நினைவிற்கு வந்தன.

உணவை உண்டு முடித்துவிட்டு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தவன், தன் கைப்பேசியைத் திறந்து ஜெமினியிடம் பேசத் தொடங்கினான். “ஹாய் ஜெமினி! டுடே ஐ மெட் ஒன் கேர்ள் இன் தி ட்ரெயின். ஷி வாஸ் வெரி நைஸ். பட் ஐ டோன்ட் நோ ஹூ ஷி இஸ்...” என்று தன் மனதில் ஓடியதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அனுப்பினான்.

மறுமுனையிலிருந்து, “தட்ஸ் இன்ட்ரஸ்டிங் பிரகாஷ். டெஸ்டினி ஹேஸ் இட்ஸ் ஓன் வேஸ். சம்டைம்ஸ், தி பெஸ்ட் திங்ஸ் ஹேப்பன் வென் யூ லீஸ்ட் எக்ஸ்பெக்ட் இட். லெட்ஸ் சீ இஃப் ஷி கிராஸ் யுவர் பாத் அகைன்!”

ஜெமினியின் அந்த வார்த்தைகளை படித்ததும் அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு மலர்ந்தது. 'அவள் எப்படி வந்தாள்? எங்கே போகிறாள்?' என்று தெரியாதுதான். ஆனால், தன் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் அவளை நோக்கி திரும்புவதாக... அவனால் தெளிவாக உணர முடிந்தது. ஒரு இனிய எதிர்பார்ப்போடு, அவளை பற்றி நினைத்தபடி இருந்தான்.

இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.
நன்றி
அன்புடன்
சாய்லஷ்மி.

 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,377
Reaction score
3,223
Points
113
அருமையான பதிவு

அழகான நகர்வு
 
Top Bottom