Barkkavi Murali
Well-known member
- Joined
- May 25, 2025
- Messages
- 356
- Reaction score
- 187
- Points
- 63
பிறை 15
மாலை நேரத்து இருள் நளிர்புறக் காட்டின் எல்லையை மெல்லத் தழுவத் துவங்கியிருந்தது. கையில் ஒரு நவீன மடிக்கணினியுடன் தேவமித்ரா தீவிரமாக ஏதோ தட்டச்சு செய்ய, அவளுக்குப் பாதுகாப்பாகச் சுற்றிலும் நோட்டமிட்டபடி நின்றிருந்தான் மித்ரநந்தன்.
அவர்கள் இருவரும் நைட் விஷன் நிறுவன வளாகத்தின் பின்புற வாயிலிலிருந்து இருபதடி தொலைவில் இருந்த புதரின் மறைவில் இருந்தனர்.
இருவரும் எப்படி இந்த இடத்திற்கு, இந்த நேரத்தில் வந்து சேர்ந்தார்கள் என்பதற்குப் பின்னால் தேவமித்ராவின் சில மணிநேரப் புத்திசாலித்தனமான உழைப்பு ஒளிந்திருந்தது!
விஷ்வாமித்ரனின் புதிரான நடவடிக்கையைப் பற்றி ஆர்யவர்தனிடம் கலந்தாலோசித்து விட்டுத் திரும்பிய தேவமித்ராவின் மனதில் அவன் சொன்ன 'கம்பல்ஷன்' என்ற வார்த்தையே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
விஷ்வாமித்ரனுக்குள் ஏதோ விபரீதம் நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர்ந்தவள், உடனடியாக அதன் பின்னணியில் இருக்கும் மர்மத்தை தெரிந்து கொள்வதற்காகவே தன் ஆராய்ச்சியைத் துவங்கினாள்.
அந்தப் பாழடைந்த ஆங்கிலேயக் கட்டிடத்திலிருந்து கிடைத்த லிங்காவின் ரத்த மாதிரிகளை ஏற்கனவே ரகசியமாகச் சேகரித்து வைத்திருந்தாள்.
அதைத் தன்னிடத்தில் வைத்து தீவிரமாக ஆராய்ந்த போதுதான் அவளுக்கு அந்த உண்மை தெரிய வந்தது. ஏற்கனவே, இருந்த சந்தேகம் ஊர்ஜிதமானது!
அந்த இரத்த அணுக்களுக்குள் இருந்த வேதிச்சேர்வை (கெமிக்கல் காம்பவுண்டுகள்) முன்பு லூனார் சார்ஜில் பயன்படுத்தப்பட்ட அதே மூலக்கூறுகளுடன் நூறு சதவிகிதம் ஒத்துப்போயின!
'நைட் விஷன்' நிறுவனமே சமீபமாக அதிகரித்து வரும் இந்த ஆபத்துகளின் பின்னணியில் இருக்கிறது என்பதைத் தேவமித்ரா மிகத் துல்லியமாகக் கணித்தாள்.
இந்த ஆதாரங்களுடன், தன் தந்தை சர்வஜனனைச் சந்திப்பதற்காக நேராக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விரைந்தாள் தேவமித்ரா. விஷ்வாமித்ரனுக்கு ஏற்பட்ட மாற்றத்தை அவரிடம் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் என்பதே அவளது நோக்கமாக இருந்தது.
ஆனால், அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த தேவமித்ராவுக்கு மற்றுமொரு பேரதிர்ச்சி காத்திருந்தது!
தன் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவளின் செவிகளில் அங்கு புரளி பேசிக்கொண்டிருந்தவர்கள் பேசியது தெளிவாக கேட்டது.
“எஸ்.பி சார் ரொம்ப கடுப்பா இருக்காரே. என்ன விஷயம்?” என்று அங்கிருந்த ஒருவர் கேட்க, அதற்கு மற்றொருவரோ, “மாமாக்கும் மருமகனுக்கும் ஏதோ பிரச்சனை போல. ஏதோ ஒரு கேஸ் விசாரிச்சுட்டு இருந்தப்போ அடிபட்டு லீவ்ல இருந்தானே அந்த விஷ்வா பையன்… இன்னைக்கு எஸ்.பி சார் சொல்ல சொல்ல கேட்காம, இன்னொரு கேஸை விசாரிக்கிறேன்னு போயிட்டானாம். அதான் சார், காலைலயிருந்து கடுப்புல சுத்திட்டு இருக்காரு! இவங்க சண்டைக்கு நடுவுல நம்மதான் மாட்டிட்டு முழிக்க வேண்டியதா இருக்கு.” என்றார்.
‘ப்ச், இவங்களுக்கு வேற வேலையே இல்ல. எப்போ பாரு, அடுத்தவங்க வீட்டையே எட்டிப் பார்த்துட்டு இருக்குறது! எப்போதான் இவங்க எல்லாம் திருந்தப் போறாங்களோ!’ என்று சலிப்புடன் எண்ணிய தேவமித்ரா, அப்போதே அதைக் கவனித்தாள்.
‘இந்த விஷு எதுக்கு ரெஸ்ட் எடுக்காம வேலைக்கு கிளம்பியிருக்கான். சரியான அடமண்ட் ஆஃபிசர் அவன்! சும்மாவே வேலைல சொல்றதைக் கேட்க மாட்டான். இப்போ… ஹுஹும்… அதுசரி, அது என்ன புது கேஸ் எனக்குத் தெரியாம?’ என்ற அவளின் மானசீக கேள்விக்கு விடையாக, “நம்ம காட்டு எல்லைல பெரிய பங்களா இருக்குமே… நைட் விஷன்… அங்க ஏதோ திருட்டுக் கேஸ்னு தனியா விசாரிக்கப் போயிருக்கானாம்!” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.
'நைட் விஷன்' என்ற பெயரைக் கேட்டதுமே தேவமித்ராவின் நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது.
ஏற்கனவே அந்த இடம் மீது அவளுக்குத் தீராத சந்தேகம் இருக்க, விஷ்வாமித்ரன் அங்கே தனியாகச் சென்றிருக்கிறான் என்பது அவளது பயத்தை பலமடங்காக்கியது.
“ஹ்ம்ம், பெரிய இடம்… தனியா போனா லம்ப்பா ஏதாவது கிடைக்கும்னு…” என்று அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க, தனக்குக் கிடைத்த தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராய, அவர்கள் முன்பே சென்று நின்றாள் அவள்.
தேவமித்ராவை அங்கு எதிர்பார்க்காதவர்கள் வியர்த்து வழிய, அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாதவளாக, “விஷ்வா எங்க போயிருக்கான்னு சொன்னீங்க?” என்று பதற்றத்துடன் வினவினாள்.
அங்கிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி விழிக்க, “ப்ச், சீக்கிரம் சொல்லுங்க…” என்று அவர்களை அவசரப்படுத்தி, விஷயத்தை அறிந்துகொண்ட பின்னர், சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்து கிளம்பினாள்.
“ஹையோ, எஸ்.பியோட பொண்ணுதான இது? நம்ம பேசிட்டு இருந்ததைக் கேட்டுருக்குமோ? இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம்னு தெரிஞ்சும் வாயை விட்டுருக்கேன்.” என்று புலம்பியவரின் முன்பு மூச்சு வாங்க ஓடி வந்த தேவமித்ரா, “இதை எஸ்.பி சார் கிட்ட கொடுத்துருங்க. இதைப்பத்தி டீடெயிலா நான் வீட்டுக்கு வந்து சொல்றேன்னும் சொல்லிடுங்க.” என்று பரபரப்பாக கூறிவிட்டு வந்த வேகத்தில் சென்றுவிட்டாள்.
செல்லும் வழியில், முதலில் விஷ்வாமித்ரனுக்கு அழைக்க, அவன் அழைப்பை ஏற்கவே இல்லை.
அடுத்த முயற்சியாக மித்ரநந்தனை அழைத்தவள், அவன் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டு, நேராகக் காட்டுப்பகுதிக்குச் சென்றாள்.
அங்கிருந்த மித்ரநந்தனும், உள்ளுணர்வு உந்த, காட்டுப்பகுதியை சல்லடையாக அலசிக்கொண்டிருந்தான். அவனாலும், ஏதோ சரியில்லை என்பதை உணர முடிந்தது.
மித்ரநந்தனிடம், தன் ஆராய்ச்சிக் குறிப்புகளையும், அதனால் ‘நைட் விஷன்’ மீது உண்டான சந்தேகத்தையும் கூறியவள், விஷ்வாமித்ரனுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைப் பற்றியும் எடுத்துரைக்க, நொடியும் தாமதிக்காமல் தேவமித்ராவுடன் கிளம்பினான் மித்ரநந்தன்.
விஷ்வாமித்ரன் நைட் விஷன் நிறுவனத்தை அடைந்த நேரம் பின்காலை பொழுது. ஆனால், தேவமித்ரா ஆதாரங்களைத் திரட்டி, மித்ரநந்தனை அழைத்துக்கொண்டு நளிர்புற எல்லைக்கு வந்து சேரும் போது நேரம் கடந்து, மாலைப்பொழுது கடந்து இருள் சூழத் துவங்கியிருந்தது.
"தேவா, இன்னும் விஷ்வா அவனோட மொபைலை பிக் பண்ணவே இல்லை. காலைல போனவன் இப்போ வரைக்கும் கம்பெனிக்குள்ளவே என்ன பண்றான்?" என்று கவலையோடு கேட்டான் மித்ரநந்தன்.
"எனக்கும் அதான் புரியல நந்து. ஆனா அவனோட ஃபோன் ஜிபிஎஸ் சிக்னல் இன்னும் நைட் விஷன் கேம்பஸ்குள்ளதான் காட்டுது. கண்டிப்பா அவன் உள்ளதான் இருக்கான்" என்றபடி மடிக்கணினியில் அவனது இருப்பிடத்தைக் கண்காணித்தாள் தேவமித்ரா.
அவர்கள் இருவரும் அறியாத உண்மை என்னவென்றால், விஷ்வாமித்ரன் காலையில் மேக்னாவின் அறைக்குள் நுழைந்தது முதல் இப்போது வரை, அவனுக்குக் கால நேரமே தெரியவில்லை என்பதே!
மேக்னாவின் அமானுஷ்யக் கட்டுப்பாடு அவனது மூளையின் கால உணர்வை (சென்ஸ் ஆஃப் டைம்) முற்றிலுமாக முடக்கியிருந்தது. காலையிலிருந்து மாலை வரை அவன் சில மணித்துளிகள் போலவே மேக்னாவின் மாயப்பேச்சில் கட்டுண்டு கிடந்தான்.
அது மட்டுமன்றி, தேவமித்ராவும் மித்ரநந்தனும் விஷ்வாமித்ரனைத் தேடி அவனது இருப்பிடத்தைக் கண்காணிப்பதை, அவர்கள் தங்களின் பாதுகாப்புச் சாவடியை ஊடுருவ முயற்சிப்பதாக மேக்னா தன் மனோவியல் தந்திரத்தின் மூலம் விஷ்வாமித்ரனை நம்ப வைத்திருந்தாள்.
அவளின் வசியத்தில் சிக்கியிருந்த விஷ்வாமித்ரனோ உண்மையை உணராமல், தன் சொந்தங்களையே காயப்படுத்த வேகவேகமாக அந்த வளாகத்தின் பின்புற இரும்பு வாயில் வழியே கிளம்பினான்.
அதைக் கண்ட மித்ரநந்தன், "இதோ, அவன் கார் வெளிய வருது தேவா." என்று கத்த, மடிக்கணினியை மூடிவிட்டு நிமிர்ந்தாள் தேவமித்ரா.
சீறிக்கொண்டு வந்த விஷ்வாமித்ரனின் காவல் வாகனம், தேவமித்ரா மற்றும் மித்ரநந்தனின் முன்னால் திடீரென்று நின்றது.
மகிழுந்தின் கதவைத் திறந்து கொண்டு கம்பீரமாக இறங்கினான் விஷ்வாமித்ரன். ஆனால், அவனது கண்களில் எப்போதும் இருக்கும் பாசமோ உரிமையோ இல்லை.
மாறாக, கோபமும், மேக்னா ஏற்றிவிட்ட வெறியும் மட்டுமே அவனது பார்வையில் தாண்டவமாடின.
"விஷு!" என்று பாசத்தோடு முன்னோக்கி வந்த தேவமித்ரா, "காலையில இருந்து உனக்கு எவ்ளோ கால் பண்ணோம்? ஏன் எடுக்கல? ரெஸ்ட் எடுக்காம எதுக்கு இங்க வந்த?" என்று வழக்கம் போல அதிகார குரலிலேயே வினவினாள்.
எதிரில் நிற்பவன், வழக்கமானவன் அல்ல என்பதை அந்நொடி மறந்துதான் விட்டாள்!
பாசம், அவள் கண்களைக் கட்டிப்போட்டது என்று கூற வேண்டுமோ!
"ஸ்டாப்பிட் தேவா!" என்று விஷ்வாமித்ரன் கத்திய கத்தலில் இரவு நேரத்தை ஒட்டி கூடுகளில் அடைந்த பறவைகள் கூட கலைந்து பறந்தன. அவனது குரலில் இருந்த குரோதம் தேவமித்ராவை அப்படியே உறைய வைத்தது.
"இன்னும் என்ன டிராமா ஆடப்பார்க்குறீங்க? என்ன உங்க செலிபிரேஷன் எல்லாம் முடிஞ்சதும், என்னை மாக் பண்ண தேடுனீங்களா? இதோ, இப்போ கூட என்னைத் தேடி வந்த மாதிரி என்ன ஒரு நடிப்பு? நீங்க வந்தது, இந்த நைட் விஷன் லேப் ரிசர்ச்சை திருடத்தான?” என்று விஷ்வாமித்ரன் அதட்டலாகக் கேட்க, மற்ற இருவரும், ‘இது என்ன புது கதை?’ என்பது போல ஒருவரையொருவர் பார்த்தனர்.
“விஷு, நீ ஏதோ தப்பா புரிஞ்சுட்டு பேசிட்டு இருக்க…” என்று தேவமித்ரா சமாதானமாகப் பேசத் துவங்கியதுமே, “ஆமா ஆமா, இதுவரை ரொம்ப தப்பாதான் புரிஞ்சுட்டு இருந்துருக்கேன். இப்போதான், நீங்க எவ்ளோ செல்ஃபிஷ்னு புரிய ஆரம்பிச்சுருக்கு.” என்றான் விஷ்வாமித்ரன் எள்ளலாக.
“விஷ்வா, புரிஞ்சுக்கோ… நாங்க முழு வேர்உல்ஃப்பா மாறுனது ஒன்னும் அச்சீவ்மெண்ட் இல்ல. அது ஒரு சாபம்! அதுக்கு ஏன் நாங்க செலிபிரேட் பண்ண போறோம்?” என்று அவனது கோபத்திற்கான காரணம் இதுவாக இருக்கலாம் என்ற யூகத்தில் பேசினான் மித்ரநந்தன்.
“ப்ச், உன்னோட விளக்கம் எல்லாம் எனக்குத் தேவை இல்ல. எனக்குத் தேவையானது, இப்போ நீங்க இந்த இடத்தைக் காலி பண்றதுதான்.” என்று கால்களை அகட்டிக்கொண்டு, காப்பாளனாக அந்த நிறுவனத்திற்கு முன் நின்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தனர் மற்ற இருவரும்.
“விஷு, அவங்க உன்னை என்ன செஞ்சாங்க?” என்று கவலையுடனும் பயத்துடனும் அவனருகே செல்ல முயன்றாள் தேவமித்ரா.
அந்தக் கவலையில் சிறுத்துளியைக் கூட காட்டாமல் நின்ற விஷ்வாமித்ரனோ, நெருங்கி வரும் தேவமித்ராவை நோக்கித் துப்பாக்கியை நீட்டியிருந்தான்.
அதைக் கண்ட மித்ரநந்தன் அதிர்ச்சியுடன், “விஷ்வா, என்ன பண்ற? நாம எல்லாரும் குடும்பம்டா. யாரோ எதுவோ சொன்னாங்கன்னு எங்களையே எதிர்க்க நினைக்குறியா?” என்று சற்றுக் கோபத்துடன் வினவினான்.
“குடும்பமா? நீயா? இவளா? ஹ்ம்ம், தங்களை ஹன்டர்ஸ்னு சொல்லிக்கிட்டு, பாரம்பரியம்னு பெருமை பேசிக்கிட்டு, எந்தத் தப்பும் செய்யாத மத்தவங்களை அழிக்க நினைக்குற சுயநலவாதிங்க நீங்க! என்னை இத்தனை நாளா ஒரு கருவியாத்தானே யூஸ் பண்ணீங்க? நீங்க குடும்பமா? உங்களை மாதிரி ஒரு குடும்பம் எனக்குத் தேவையே இல்ல.” என்று பற்களைக் கடித்தபடி கத்தினான் விஷ்வாமித்ரன்.
என்ன சொன்னாலும் புரிந்துகொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்கும் விஷ்வாமித்ரனை நோக்கி ஆவேசத்துடன் செல்லவிருந்த மித்ரநந்தனை தடுத்து நிறுத்தினாள் தேவமித்ரா.
அவன் பூரணமாக வேம்பயரின் வசிய வலைக்குள் விழுந்துவிட்டான் என்பதை உணர்ந்துகொண்டவள், "நந்து, விஷுவோட மூளை இப்போ அவனோட கட்டுப்பாட்டுல இல்லை. அந்த வேம்பயரோட கட்டுப்பாட்டுல இருக்கான். இவன்கிட்ட பேசிப் பயன் இல்ல." என்று எச்சரிக்கும்போதே, விஷ்வாமித்ரன் ஏதோ ஒரு தூண்டுதலால் துப்பாக்கியின் விசையை அழுத்த முயன்றான்.
அதைக் கண்டுகொண்ட மித்ரநந்தன் "விஷ்வா… நோ!" என்று கத்தியபடி மின்னல் வேகத்தில் பாய்ந்து விஷ்வாமித்ரனின் கையைப் பற்றி துப்பாக்கியை மேல்நோக்கிப் பிடிக்க, அதிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் வானத்தை நோக்கி இருமுறை வெடித்தன.
அடுத்த நொடி, விஷ்வாமித்ரன் தன் இடது கையால் மித்ரநந்தனின் முகத்தில் பலமாகக் குத்த, மித்ரநந்தன் பின்னோக்கிச் சரிந்தான்.
கணப்பொழுதில் நடந்துவிட்ட களேபரத்தில் அதிர்ச்சில் உறைந்திருந்த தேவமித்ரா, மித்ரநந்தன் கீழே விழும் காட்சியைக் கண்டு, "நந்து!" என்று கத்தியபடி, தன் வில்லை வளைத்து விஷ்வாமித்ரனின் கைகளைக் குறிவைத்து சாதாரண அம்பு ஒன்றை எய்தாள்.
அம்பைத் தொடுக்கும்போதே, “சாரி விஷு… எனக்கு வேற வழி தெரியல!” என்று கூறினாள். அது அடைய வேண்டியவனை அடைந்ததா என்பது கேள்விக்குறியே!
தேவமித்ராவின் அம்பு விஷ்வாமித்ரனின் கரத்தைப் பலமாகமவே உரசிச்சென்று, அவனது துப்பாக்கியைக் கீழே விழச்செய்திருந்தது.
‘இதுதான் நீ!’ என்பது போல நக்கல் பார்வையை அவள் மீது வீசிய விஷ்வாமித்ரன் அவளைத் தாக்கப்பாய, மித்ரநந்தன் மீண்டும் எழுந்து வந்து விஷ்வாமித்ரனைப் பின்பக்கமிருந்து கட்டிப்பிடித்துத் தடுத்தான்.
அதன் காரணமாக, தேவமித்ரா கீழே கிடக்க, அவள் கழுத்தைப் பிடித்து நெறித்தபடி விஷ்வாமித்ரனும், அவனைப் பின்புறம் இழுத்தபடி மித்ரநந்தனும் இருந்தனர்.
“என்ன பண்ற விஷ்வா? தேவாவை விடு. முதல்ல உன் சுயநினைவுக்கு வா.” என்று மிகவும் சிரமத்துடன் கூறினான் மித்ரநந்தன்.
மித்ரநந்தன் பலம் பொருந்திய ஓநாய் மனிதனாக இருந்தாலும், ஆக்ரோஷத்தின் மொத்த ரூபமாக மாறியிருந்த விஷ்வாமித்ரனை அவனால் ஒற்றை ஆளாகத் தடுக்க முடியவில்லை.
மேக்னாவின் வசியத்திற்கு அத்தனை சக்தி உள்ளதோ!
ஒருபுறம், மித்ரநந்தனின் பலத்தை சமாளித்தபடி, மறுபுறம் தேவமித்ராவின் கழுத்தைப் பிடித்து வெகு அழுத்தத்துடனே நெறித்தான் விஷ்வாமித்ரன்.
அதில், பெண்ணவளின் கண்கள் கண்ணீரை உதிர்க்க, மிகவும் சிரமப்பட்டே பேசினாள் அவள்.
“வி…ஷு… என்…னைக் கொல்…றதால உன…க்கு என்ன லா…பம்? ஒருவேளை… இது…னால நீ மு…ழு வேர்…உல்ஃப்பா… ஹுஹு… மாற முடி…யும்னு நினை…க்கி…றியா?” என்று திக்கித்திணறிப் பேசியவள், ஒரு விரக்தி சிரிப்புடன், “என்…னை உன்…னால கொல்…ல முடி…யும்னு ஹுஹு … இன்…னைக்குத்…தான் தெரி…ஞ்சு…க்குறேன்…” என்றாள் தேவமித்ரா.
அவள் உதிர்த்த வார்த்தைகளும் கண்ணீரும், உணர்ச்சியற்றுத் தாக்குபவனின் இதயத்தை லேசாகக் கரைக்க, அவனது பிடி தளர்ந்தது.
அந்நொடியை பயன்படுத்திக்கொண்ட மித்ரநந்தன், விஷ்வாமித்ரனை தூர வீசிவிட்டு, தேவமித்ராவைக் கவனிக்க ஆரம்பித்தான்.
அதை எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டாத வண்ணம் வெறித்த விஷ்வாமித்ரன், அங்கிருந்து கிளம்ப முற்பட்ட சமயம், “நில்லு விஷ்வா!” என்று வெகு அழுத்தத்துடன் கேட்டது சர்வஜனனின் குரல்.
*****
அதுவரை அங்கு நடப்பவற்றை காணொளி மூலம் கண்டுகளித்து கொண்டிருந்த மேக்னா, “ப்ச், இன்னைக்கே முடிஞ்சுடும்னு நினைச்சா, கடைசி நேரத்துல பின்வாங்கிட்டானே இந்த விஷ்வா. என்னோட கம்பல்ஷன் பத்தலயோ?” என்று சுழல்நாற்காலியில் சுத்தியபடி உதட்டைப் பிதுக்க, அவளருகே மற்றொரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனோ, “என்னை எதுக்கு இதுல இன்வால்வ் பண்ண?” என்று மற்றொரு காணொளியைப் பார்த்தவாறு கூறினான்.
அந்தக் காணொளி, மேக்னா விஷ்வாமித்ரனிடம் காட்டிய அதே காணொளி - தூண் மறைவில் ஆர்யவர்தன் தேவமித்ராவிடம் பேசும் காட்சியே அதில் ஓடிக்கொண்டிருந்தது.
அவனை நக்கல் சிரிப்புடன் கண்ட மேக்னாவோ, “என்ன ஹஸ்பண்ட், கட்சி தாவுற ஐடியால இருக்க மாதிரி தோணுது!” என்று கூற, பதிலுக்கு நிர்மலமான முகபாவனையுடன், “சாலிட் எவிடன்ஸ் இருக்கா உன்கிட்ட?” என்று வினவினான்.
“அது இல்லாமதான ரொம்ப வருஷமா தப்பிச்சுட்டு இருக்கீங்க…” என்று முனகிய மேக்னா, “சும்மா டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன்.” என்று அவனிடம் சமாளிப்பு புன்னகையை செலுத்தினாள்.
கணப்பொழுதில் அவளை நெருங்கி, அவளது தோளை நாற்காலியுடன் சேர்த்துப் பிடித்து, “உன் வலையை எல்லாம் என்கிட்ட வீசாத. அதுக்கு எந்தப் பயனும் இல்ல. இன்னொரு முறை, என்னை டெஸ்ட் பண்ணிப் பார்க்கணும்னு நினைச்ச, அதுதான் உன்னோட கடைசி டெஸ்ட்டா இருக்கும்.” என்று அலட்டாமல் மிரட்டியவன், அதே வேகத்தில் அறையை விட்டு வெளியேறினான்.
செல்பவனை வெறித்துக்கொண்டே, “ஆர்யவர்தன், இந்த பிளான் நல்லபடியா முடிஞ்சதும், நான் செய்யப்போற முதல் வேலையே உன்னை அழிக்கிறதுதான்!” என்று சபதம் போலக் கூறினாள் மேக்னா.
வேம்பயர் என்பதால், அவளின் சபதம் அவனையும் சென்றடைந்து, வழக்கம் போல நக்கல் புன்னகையை அவனது இதழ்களில் பரவச்செய்தது!
தொடரும்...