Barkkavi Murali
Well-known member
- Joined
- May 25, 2025
- Messages
- 356
- Reaction score
- 388
- Points
- 63
பிறை 14
'நைட் விஷன்' நிறுவனத்தின் பிரதான நுழைவுவாயிலில் நின்றிருந்த விஷ்வாமித்ரனின் கண்கள், அவனது கட்டுப்பாட்டை மீறி மேக்னாவின் மீதே நிலைத்திருந்தன.
அவளது அமானுஷ்யமான பேரழகும், காந்தக்குரலும் அவனது சிந்தனைகளை கணப்பொழுதில் ஸ்தம்பிக்க வைத்திருந்தன.
"வெல்கம் டு நைட் விஷன், மிஸ்டர். விஷ்வாமித்ரன்!" என்றாள் மேக்னா, தன் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகையை ஏந்தியபடி.
அவளது குரல் விஷ்வாமித்ரனின் காதுகளில் விழுந்ததும், அவனுக்குள் விசித்திரமான நிம்மதி பிறப்பது போலிருந்தது.
ஆழ்ந்த மயக்கத்தில் அவனது மூளைக்குள் கேட்ட அதே குரல்தான் இது என்பதை அறியாமல், அவளது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, "தேங்க் யூ... மிஸ். மேக்னா. உங்க லேப்ல ஏதோ திருட்டு நடந்ததா கம்ப்ளைன்ட் வந்தது. அதான் ஸ்பாட்டுக்கே வந்துட்டேன்." என்றான் விஷ்வாமித்ரன், காவலனுக்கே உரிய மிடுக்கை நிலைநிறுத்தப் போராடியபடி.
"ஓஹ், அந்தத் திருட்டா? அதைப் பத்தி நாம அப்புறம் பேசலாம். முதல்ல உள்ள வாங்க. நீங்க இங்க வர்றது இதுதான் முதல் முறைல? உங்களை என் உலகத்துக்கு வரவேற்கிறேன்." என்று தலைகுனிந்து வரவேற்பது போல சைகை காட்டிவிட்டு, முன்னோக்கி நடந்து சென்றாள் மேக்னா.
அவளுக்குப் பின்னால், மெய்மறந்த நிலையில் நடந்து சென்றான் விஷ்வாமித்ரன்.
நைட் விஷன் நிறுவனத்தின் உட்பகுதி, சாதாரண உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. அங்கிருந்த சுவர்கள் அனைத்தும் ஒளியை உறிஞ்சும் கறுப்பு நிறக்கண்ணாடிகளால் கட்டப்பட்டிருந்தன.
பகல் நேரத்திலும் கூட, அந்த வளாகத்தின் உள்ளே ஒரு மெல்லிய, குளிர்ச்சியான நள்ளிரவு போன்ற சூழல் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்தது.
அவளது பிரம்மாண்டமான தனிப்பட்ட அறைக்குள் அவனை அழைத்துச் சென்றாள் மேக்னா. அங்கிருந்த நவீன சொகுசு இருக்கையில் அமரும்படி சைகை செய்தவள், அவனுக்கு எதிரே இருந்த மாற்றுக்குமிழை (சுவிட்ச்) அழுத்தினாள்.
அடுத்த நொடி, அந்த அறையின் ஒரு பெரிய கண்ணாடிச் சுவர், ஒரு மாபெரும் இலக்கமுறைத் திரையாக (டிஜிட்டல் ஸ்க்ரீன்) மாறியது.
அதில் உலக வரைபடம் தோன்ற, பல நாடுகளில் நைட் விஷன் நிறுவனத்தின் கிளைகள் இருக்கும் இடங்கள் சிவப்பு நிறப்புள்ளிகளாக மின்னின.
"மிஸ்டர். விஷ்வாமித்ரன், நாங்க இந்த நைட் விஷனை ஆரம்பிச்சப்போ சின்னதா ஒரு ஃபார்மா கம்பெனியாதான் ஆரம்பிச்சோம். அப்புறம், எங்க கஷ்டமர்ஷுக்காக சில பிரைவேட் லவுஞ்சஸ், நைட் கிளப்ஸ்ன்னு ஆரம்பிச்சு… இப்போ இதோ இவ்ளோ பெரிய சாம்ராஜ்ஜியமா வளர்ந்துருக்கு.” என்ற மேக்னாவின் விழிகளில் கர்வமும் திமிரும் போட்டிப் போட்டுக்கொண்டு மிளிர்ந்தது.
அவள் கூறியவற்றை விஷ்வாமித்ரனின் செவிகள் உள்வாங்கிக்கொண்டாலும், அவளிடம் உண்டான கர்வமும் திமிரும் அவளின் அழகையும் வசீகரத்தையும் பலமடங்காக உயர்த்தி விட்டதையும் அவனது கண்கள் ஆராதித்தன என்றே கூற வேண்டும்!
அவனது கவனம் முழுக்க தன்னிடமே உள்ளது என்பதை உணர்ந்த மேக்னா, அதே மமதையுடன் மீண்டும் தொடர்ந்தாள்.
“இந்த உலகத்துக்கு தெரியுற ‘நைட் விஷன்'ங்கிறது இது மட்டும்தான். ஆனா, இதோட உண்மையான சாம்ராஜ்யம் வேற. மனிதர்களால பார்க்க முடியாத, அவங்களோட கற்பனைக்கும் எட்டாத ஒரு உலகத்துக்காகத்தான் இந்த ஒட்டுமொத்த நைட் விஷனும் இயங்கிட்டு இருக்கு." என்றாள் மேக்னா, திரையைப் பார்த்தபடி.
அதில் லேசாக கண்களைச் சுருக்கிய விஷ்வாமித்ரன், "புரியல… மனிதர்களுக்கு எட்டாத உலகமா?" என்று கேட்டான்.
மேக்னா அவனருகில் மெதுவாக நடந்து வந்தாள். அவளது உடலிலிருந்து வீசிய விசித்திரமான நறுமணம் அவனது நரம்பு மண்டலத்தை ஆக்கிரமிப்பது போலிருந்தது.
"ஆமா விஷ்வா, இந்த உலகத்துல மனிதர்கள் மட்டும்தான் வாழுறாங்கன்னு நினைக்கிறது அறியாமை. மனிதர்களுக்கு இணையா, இன்னும் சொல்லப்போனா மனிதர்களை விடப் பல மடங்கு சக்தி வாய்ந்த அமானுஷ்ய உயிரினங்களும் இங்க வாழ்ந்துட்டு இருக்காங்க. உதாரணமா... வேர்உல்ஃப்ஸ்னு சொல்லப்படுற ஓநாய் மனுஷங்களும் வேம்பயர்ஸ்னு சொல்லப்படுற இரத்தக்காட்டேரிகளும் இதே உலகத்துலதான் இருக்காங்க." என்று அவள் கூறும்போது, அவளது கண்கள் ஒரு நொடி ரத்தச்சிவப்பாக மின்னி மறைந்தன.
அதைக் கேட்ட விஷ்வாமித்ரன் திடுக்கிட்டு எழுந்தான்.
‘இவளுக்கு எப்படி வேர்உல்ஃப்ஸ் பத்தி தெரிஞ்சுருக்கு?’ என்று ஒருபுறம் கேள்வி எழ, மறுபுறம் அவளது சிவந்த கண்கள் அவனுக்கு அந்தச் சந்தேகத்தை தோற்றுவிக்க, அவனது கை, துப்பாக்கியை நோக்கி நகர முயன்றது.
ஆனால், அவனது உடம்பில் பலவீனம் இன்னும் குறையாததாலும், அவனே அறியாத மேக்னாவின் கட்டுப்பாடு அவனது ஆழ்மனதை ஆக்கிரமித்திருந்ததாலும் அவனால் முன்பு போல வேகமாகச் செயல்பட முடியவில்லை.
"பயப்படாதீங்க விஷ்வா..." என்று அவனது கையைத் தன் குளிர்ந்த விரல்களால் மென்மையாகப் பற்றினாள் மேக்னா.
"நான் ஒரு வேம்பயர்தான்! அதை நான் உங்ககிட்ட மறைக்க விரும்பல. ஏன்னா, நான் மத்த வேம்பயர்ஸ் மாதிரி மனுஷங்களை வேட்டையாடி அழிக்கணும்னு நினைக்கிறவ இல்ல. இன்னும் சொல்லப்போனா, நான் செஞ்சுட்டு இருக்கிற இந்த ரிசர்ச் எல்லாமே, எங்களை மாதிரி இருக்குற அமானுஷ்ய உயிரினங்களோட நல்வாழ்வுக்காகவும், அவங்க மனுஷங்களோட சண்டை போடாம அமைதியா வாழ்றதுக்காகவும்தான்!" என்றாள் அவள், தன் முகத்தில் போலிப் பரிதாபத்தையும் நியாயத்தையும் வரவழைத்தபடி.
அவளது வார்த்தைகளில் இருந்த அசாத்தியமான நேர்மையும், அமைதியும் விஷ்வாமித்ரனை அப்படியே கட்டிப்போட்டன. அவளது கைகளின் குளிர்ச்சி அவனுக்கு சொல்லில் அடங்காத போதையைத் தந்தது.
"எங்க இனத்தைச் சேர்ந்தவங்க ரத்தப்பசிக்காக மனுஷங்களைத் தாக்குறதைத் தடுக்க, நாங்க லேப்ல 'செயற்கை இரத்தம்' (சிந்தெடிக் பிளட்) தயாரிக்குற ஆராய்ச்சியைச் செஞ்சுட்டு இருக்கோம். அது மட்டுமில்லாம, பௌர்ணமி அன்னைக்குக் கட்டுப்பாட்டை இழந்து மிருகமா மாறுற வேர்உல்ஃப்களைக் கட்டுப்படுத்தவும் மருந்துகளைக் கண்டுபிடிக்கிறோம். நான் செய்யுறது தப்பா விஷ்வா?" என்று கேட்டாள் மேக்னா.
அவனது மனமோ அவனிடமே அவளுக்காக வாதாடியது!
‘இதைத்தான உன் குடும்பமே செய்யுது! அப்போ இவ மட்டும் எப்படி தப்பா இருப்பா?’ என்று அவனது மனம் நியாயத்தை எடுத்துக் கூற, அதற்கு அவனும் எளிதாகவே ஆமோதித்தான்.
"இல்ல மேக்னா, நீங்க செய்யுறது சரிதான்." என்று விஷ்வாமித்ரனின் வாய் தன்னிச்சையாக முனகியது. அவனது மூளை அவளது கட்டுப்பாட்டிற்குள் முழுமையாகச் சென்று கொண்டிருந்ததை அது உணர்த்தியது.
"ஆனா, இந்த உலகத்துல சில போலியான நியாயவாதி குரூப் இருக்காங்க விஷ்வா. தங்களை ‘ஹன்டர்ஸ்’னும் பாரம்பரியம்னும் சொல்லிக்கிட்டு, எங்களை மாதிரி அமைதியா வாழ நினைக்கிறவங்களை கொடூரமா வேட்டையாடுறாங்க. எந்தத் தப்பும் செய்யாத எங்களை, வாழவே தகுதியில்லாதவங்கன்னு சொல்லி அழிக்கிறாங்க." என்று மேக்னா பெரும் துயரத்தோடு கூறினாள்.
‘ஹன்டர்ஸ்!' என்றதும் விஷ்வாமித்ரனின் மூளைக்குள் சஞ்சீவனியின் முகமும், தேவமித்ராவின் முகமும் மின்னலாய் தோன்றி மறைந்தன.
“எல்லா ஹன்டர்ஸும் அப்படி இல்ல மேக்னா.” என்று அவளை சமாதானப்படுத்திவிடும் நோக்கத்திலும், தனது குடும்பத்து உறுப்பினர்களின் நியாயத்தை விளக்கிவிடும் நோக்கத்திலும் கூறினான் விஷ்வாமித்ரன்.
அவனுள், இறுதித்துளியாக ஒட்டிக்கொண்டிருக்கும் மனிதத்தன்மை மிகுந்த நியாயவாதி அந்நொடி வெளிப்பட்டான்.
அதைக் கூர்ந்து கவனித்த மேக்னா, அவன் அறியாமல் ஒரு நக்கல் சிரிப்பை வெளியிட்டவள், அடுத்த நொடியே மானசீகமாக முகமூடியை அணிந்து கொண்டு, “எனக்கும் புரியுது விஷ்வா. உங்க குடும்பத்துல கூட ஹன்டர்ஸ் இருக்காங்கதான? ஹ்ம்ம், என்ன பண்றது சில ஹன்டர்ஸ் பண்ற தப்பால, எல்லாரையும் சந்தேகப்பட வேண்டியதா இருக்கு. அதே மாதிரி, சில வேம்பயர்ஸ் பண்ற தப்பால, எல்லாரையும் தப்புன்னு சொல்லிட முடியாதுல?” என்று லாவகமாகப் பேச்சைத் தொடர்ந்தாள்.
அவன் அமைதியாக இருக்க, “உங்களை எதுக்காக கூப்பிட்டேனோ அதைச் சொல்லாம இருக்கேன் பாருங்க…” என்றவள், “நான் சொன்னேனே ரிசர்ச்… அது சம்பந்தமான ஃபைல்ஸைத்தான் திருடியிருக்காங்க.” என்று மேக்னா, தூண்டிலிட, அதில் வாகாக மாட்டிக்கொண்ட விஷ்வாமித்ரனோ, “உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா மேக்னா?” என்று வினவினான்.
“எனக்கு எதிரிங்கன்னா, வேர்உல்ஃப்ஸும் ஹன்டர்ஸும்தான். இப்போ, சில வேர்உல்ஃப்ஸுக்கு நாங்க செஞ்சுட்ட இருக்க உதவியால, அவங்களோட ரிலேஷன்ஷிப் சுமூகமாதான் போயிட்டு இருக்கு. அப்போ, எனக்குத் தெரிஞ்சு இந்த வேலையை ஹன்டர்ஸ் குரூப்தான் செஞ்சுருக்கணும்.” என்ற மேக்னா, ஒரு சிசிடிவி காணொளியை ஓடவிட்டாள்.
அதில், கைகளில் சில கோப்புகளுடன் வாயிலில் ஒரு மறைவில் நின்று பேசிக்கொண்டிருந்தது ஆர்யவர்தனும் தேவமித்ராவுமே!
அவர்களின் முகமும் தெளிவாக அதில் பதிந்திருந்தது.
அதைக் கண்ட விஷ்வாமித்ரன் என்னவென்று ஆராயும்போதே, அவனைத் திகைப்படையும் விதமாக, “இதோ, இந்த வீடியோல இருக்கானே, அவன் பேரு ஆர்யவர்தன். அவன் ஒரு வேம்பயர்… ரொம்ப வருஷமா எனக்காகத்தான் வேலை செஞ்சான். அவன்தான் இந்த ரிசர்ச்சையும் பார்த்துக்குறான். அவன் கூட பேசுறது…” என்று சற்று இடைவெளிவிட்டவள், “உங்களுக்கே தெரியும். இது நடந்த நாள்ல இருந்து, அவனையும் காணோம், அந்த ரிசர்ச் மெட்டிரியல்ஸையும் காணோம். இவன்தான் திருடியிருப்பானோன்னு சந்தேகமா இருக்கு. திருடச் சொன்னது, ஹன்டர்ஸா கூட இருக்கலாம். இதைக் கண்டுபிடிக்க நீங்கதான் உதவி செய்யணும் விஷ்வா.” என்று உருக்கமாகக் கேட்டாள்.
அவனோ, ஆர்யவர்தன் ஒரு வேம்பயர் என்று தெரிந்ததிலிருந்து அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்!
‘எப்படி இவன்… ராஸ்கல், வேம்பயர்ன்னு சொல்லாம எங்க லேபுக்குள்ளவே வந்துருக்கான். இவன் வேம்பயர்னு எனக்கு மட்டும்தான் தெரியாதோ! ஆமா, அப்படித்தான் இருக்கும்… லேப் விஷயம்னா, அத்தனை கேர்லெஸா முடிவெடுக்க மாட்டாரே மாமா. சோ, குடும்பமே சேர்ந்து என்னை ஏமாத்தி இருக்காங்க!’ என்று அரை நொடிக்குள், ஏகப்பட்ட எண்ணங்கள் அவனது மூளைக்குள் வலம் வர, அந்த இறுதித்துளி விஷ்வாமித்ரனும் மறைந்து போய், பூரணமாக மேக்னாவின் மாய வலைக்குள் விழுந்திருந்தான் அந்தக் காவலன்!
மீள வழி இருக்குமா?!
அவனது கரத்தைப் பற்றிய மேக்னா, “நீங்க நேர்மையா இருப்பீங்கன்னுதான் உங்ககிட்ட இந்த விஷயத்தைக் கொண்டு வந்தேன் விஷ்வா.” என்று கூறி நிறுத்த, “கண்டிப்பா உங்க நம்பிக்கையை காப்பாத்துவேன் மேக்னா.” என்று வாக்களித்தான் விஷ்வாமித்ரன்.
திடீரென்று, "அவங்களை நீங்களே ஏன் எதிர்க்கல?" என்று கேட்டான் விஷ்வாமித்ரன். அவனது நெஞ்சுக்குள் குடும்பத்தின் மீதான கோபம் மெல்ல உயர்ந்து கொண்டிருந்தது.
மேக்னா அவனது கரங்களில் அழுத்தத்தைக் கூட்டியபடி, "அவங்களை எதிர்க்கத்தான் எனக்கு உங்க உதவி தேவை விஷ்வா. ஏன்னா, அவங்க எவ்வளவு சுயநலமானவங்க, உங்களை ஒரு கருவியா எப்படிப் பயன்படுத்துறாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்." என்று நேரம் உணர்ந்து மிக நளினமாக நஞ்சை அவனது காதுகளுக்குள் பாய்ச்சினாள்.
விஷ்வாமித்ரனின் கண்கள் மீண்டும் சிவக்கத் துவங்கின. அவனது சொந்தக் குடும்பமே அவனுக்குத் துரோகம் செய்வது போன்ற ஒரு மாயை அவனது கண்ணெதிரே விரிந்தது.
"கவலைப்படாதீங்க மேக்னா, அந்தத் துரோகிங்களை நான் சும்மா விடமாட்டேன். உங்களுக்கு நான் துணையா இருப்பேன்." என்று உணர்ச்சியற்ற குரலில், அதே சமயம் ஆக்ரோஷமாக அவன் கூற, மேக்னாவின் இதழ்களில் ஒரு வஞ்சகமான, வெற்றிப்புன்னகை அகல விரிந்தது.
“தேங்க்ஸ் விஷ்வா. உங்க குடும்பத்துல, நீங்க ஒரு ஜெம்னு நான் நினைச்சேன். அதை நிரூபிச்சுட்டீங்க.” என்று அவனது கரத்தோடு கரம் கோர்த்துக்கொண்டு, மையலான பார்வையால் ஆண் ஓநாயைக் கட்டிப்போட்டாள் அந்த பெண் நரி!
அப்போது, அந்த அமைதியான தனியறைக்குள் திடீரென்று ஒரு அவசர எச்சரிக்கை சத்தம் மெலிதாக ஒலித்தது. மேக்னாவின் மேஜை மீதிருந்த சிவப்பு நிற எச்சரிக்கை விளக்கு ஒளிரத் துவங்கியது.
மேக்னா புன்னகையை விடுத்துச் சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தாள். அவளது கண்கள் லேசர் கதிர்களைப் போலத் திரையை நோக்கின.
"என்னாச்சு மேக்னா?" என்று பதற்றத்துடன் கேட்டான் விஷ்வாமித்ரன், அவளது பாதுகாப்புக்குத் தான் மட்டுமே பொறுப்பு என்பது போல.
"ஹண்டர்ஸ்... தங்களோட எல்லையைத் தாண்டி வர்றாங்க விஷ்வா. நளிர்புற எல்லையில இருக்குற நம்ம நைட் விஷனோட அண்டர்கிரவுண்ட் செக்யூரிட்டி போஸ்ட்டை யாரோ ஹேக் பண்ண முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. அது மட்டுமில்ல..." என்ற மேக்னா திரையைத் தட்ட, அங்கு நளிர்புறக் காட்டின் எல்லையில் ஒரு வாகனம் வந்து நிற்கும் காட்சி தெரிந்தது.
அதிலிருந்து இறங்கியது வேறு யாருமல்ல, கையில் ஒரு நவீன மடிக்கணினியுடன் தீவிரமாக ஏதோ தட்டச்சு செய்து கொண்டிருந்த தேவமித்ராவும், அவளுக்குப் பாதுகாப்பாகச் சுற்றிலும் நோட்டமிட்டபடி நின்றிருந்த மித்ரநந்தனுமே!
அவர்களைப் பார்த்ததும் விஷ்வாமித்ரனின் மார்புக்கூடு ஆக்ரோஷத்தில் எழும்பித் தணிந்தது. அவனது விரல்கள் துப்பாக்கியின் பிடியை இறுக்கின.
"பார்த்தீங்களா விஷ்வா? நான் சொன்னது எவ்வளவு உண்மைன்னு இப்போவே உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். உங்க கசின்ஸ் ரெண்டு பேரும் இப்போவே என் சாம்ராஜ்யத்தை அழிக்க வந்துட்டாங்க. இவங்களை இப்போவே தடுக்கலைன்னா இத்தனை வருஷ உழைப்பு வீணாகிடும்." என்று அவள் போலியாகக் கண்ணீர் சிந்துவது போல் நாடகமாடினாள்.
விஷ்வாமித்ரன் தன் தொப்பியை எடுத்துத் தலையில் மாட்டிக்கொண்டு, பற்களைக் கடித்தபடி எழுந்தான். அவனது கண்களில் இப்போது பாசமோ, இரக்கமோ இல்லை; மேக்னா ஏவிவிட்ட வெறி மட்டுமே தாண்டவமாடியது.
"நீங்க கவலைப்படாதீங்க மேக்னா. சட்டம், கடமை, குடும்பம் எல்லாத்தையும் விட எனக்கு இப்போ உங்க பாதுகாப்புதான் முக்கியம். எல்லையைத் தாண்டுறவங்க யாரா இருந்தாலும், அவங்க என் சொந்தக்காரங்களா இருந்தாலும் சரி... அவங்களுக்குச் சரியான தண்டனையை நான் என் கையாலயே கொடுப்பேன்!" என்று கூறிவிட்டு விறுவிறுவென்று அறையை விட்டு வெளியேறினான் விஷ்வாமித்ரன்.
அவன் வெளியேறிய அடுத்த நொடி, மேக்னா தன் அரியாசனத்தில் சாய்ந்து அமர்ந்து, கறுப்புக் கண்ணாடிச் சுவரை நோக்கி அமானுஷ்ய சிரிப்பை உதிர்த்தாள்.
"ஓநாய் கூட்டத்தை ஓநாய் வச்சே அழிக்கிற இந்த கேம் செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கு!" என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டாள்.
காட்டின் எல்லையில், விஷ்வாமித்ரனைத் தேடி வரும் தேவமித்ராவும் மித்ரநந்தனும், தங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் விஷ்வாமித்ரனின் புதிய அவதாரத்தை எதிர்பார்த்திருக்கவில்லை!
தொடரும்...