Barkkavi Murali
Well-known member
- Joined
- May 25, 2025
- Messages
- 356
- Reaction score
- 187
- Points
- 63
பிறை 13
விஷ்வாமித்ரனுக்குத் தற்காலிகச் சிகிச்சைகள் முடிந்து, அவன் ஓய்வெடுப்பதற்காக அவனது சொந்த இல்லத்திற்கு மாற்றப்பட்டு ஒரு நாளாகியிருந்தது. இன்னும் அவன் மயக்கத்திலிருந்து விடுபடவில்லை.
சண்டையில் காயமடைந்த சுலோச்சனாவுக்குத் தோள்பட்டையில் மூலிகைக்கட்டுகளும், லிங்காவினால் பாறையில் மோதி நெஞ்சில் அடிபட்டிருந்த மித்ரநந்தனுக்குத் தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர்கள் மெல்ல குணமடைந்து வந்தனர்.
அதேபோல், அந்தப் பாழடைந்த கட்டிடத்தில் நடந்த சண்டையின் அதிர்ச்சியிலிருந்தும், தனக்குள் விழித்த அந்த ஓநாய் சாபத்தின் பயத்திலிருந்தும் தேவமித்ராவும் ஓரளவுக்கு மீண்டிருந்தாள்.
விஷ்வாமித்ரனின் கட்டிலுக்கு அருகில் தேவமித்ராவும், மித்ரநந்தனும் அமர்ந்திருக்க, தேவமித்ராவின் அறையில் சுலோச்சனா ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது, விஷ்வாமித்ரனின் மூளைக்குள் பயங்கரமான புயல் வீசிக்கொண்டிருந்தது.
அவன் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாலும், அவனது காதுகளில் ஏதோ ஒரு விசித்திரமான பெண்ணின் குரல், "நீ ஒரு வேஸ்ட். ஒரு வேம்பயரை எதிர்த்து போராட முடியாதவன், என்ன பெரிய வேர்உல்ஃப்? உன்னோட கசின்ஸ் ரெண்டு பேரும் சண்டையில ஜெயிச்சு அதைக் கொண்டாடிட்டு இருக்காங்க. ஆனா, நீ இதோ கட்டில்ல காயப்பட்டுப் படுத்திருக்க. இனிமே, உன்னை யாரு மதிப்பாங்க? நீ ஒரு வேஸ்ட்!” என்று நஞ்சைக் கக்கிக்கொண்டே இருந்தது.
அந்தக் குரலின் அழுத்தத்தால் விஷ்வாமித்ரனின் மூச்சு திணறியது. மெதுவாக, தன் கனத்த இமைகளைத் திறந்து கண்விழித்தவனின் பார்வை இன்னும் தெளிவாகவில்லை.
அச்சமயம், அவனருகில் அமர்ந்திருந்த தேவமித்ராவும் மித்ரநந்தனும் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த வார்த்தைகள் அவனது செவிகளில் விழுந்தன.
"நந்து, நேத்து அந்த ஜாம்பி வேர்உல்ஃபை நான் வெள்ளி அம்பால கொன்னப்போ, எனக்குள்ள இருக்குற வேர்உல்ஃப் திடீர்னு டிரிக்கராக ஆரம்பிச்சதை என்னால தாங்கவே முடியல. ஆனா, இப்போ எனக்குள்ள இருக்க அந்த வேர்உல்ஃப் சக்தியை முழுசா ஃபீல் பண்ண முடியுது. எப்படி சொல்றது… ஒரு மாதிரி சார்ஜ்ட்டப்பா இருக்கேன். ” என்றாள் தேவமித்ரா மெல்லிய குரலில்.
"ஆமா தேவா, எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு. நேத்து அந்த லிங்காவோட சண்டை போடும்போது, என்னாலயும் அந்த முழு சக்தியோட வீரியத்தை ஃபீல் பண்ண முடிஞ்சது. நாம ரெண்டு பேருமே நேத்து அந்தப் போராட்டத்துல வேர்உல்ஃப்புக்கான முழு தகுதியை அடைஞ்சுட்டோம்னுதான் தோணுது." என்றான் மித்ரநந்தன் சாதாரணமாக.
அவர்கள் இருவரும் தங்களுக்குள் நேற்றைய விபரீதத்தைப் பற்றித் தற்காப்பு உணர்வோடுதான் பேசிக்கொண்டனர்.
ஆனால், தனக்கு ஏற்பட்ட கனவின் (!!!) தாக்கத்திலிருந்து விழித்த விஷ்வாமித்ரனின் மூளையோ அதை முற்றிலும் வேறாக மொழிபெயர்த்தது!
'அப்போ, இவங்க ரெண்டு பேரும் முழு வேர்உல்ஃப் சக்தியையும் அடைஞ்சுட்டாங்களா? நான் மட்டும்தான் ஒரு வேம்பயர்கிட்ட அடி வாங்கி, இங்க சாகக்கிடக்குறேனா? என்னைப் பத்தி இவங்களுக்குக் கவலையே இல்லையா?' என்று விஷ்வாமித்ரனின் நெஞ்சுக்குள் தேவையின்றி உண்டான சுயசந்தேகமும், தாழ்வுமனப்பான்மையும் கோபமாக உருவெடுத்தன.
சட்டென்று படுக்கையிலிருந்து எழ முயன்றான் விஷ்வாமித்ரன்.
அவன் அசைவதைக் கண்ட தேவமித்ரா பதற்றத்துடன், "விஷு, முழிச்சுட்டியா? இப்போ உடம்பு எப்படி இருக்கு?" என்று அவனது தோளைத் தொட வந்தாள்.
"ப்ச், தொடாத என்னை!" என்று காட்டுமிராண்டித்தனமாகக் கத்திய விஷ்வாமித்ரன், தேவமித்ராவின் கையைத் தட்டிவிட்டான். அவனது கண்கள் சிவந்து, முகம் முழுக்கக் குரோதம் நிறைந்திருந்தது.
அவனது இந்த திடீர் ஆக்ரோஷத்தைக் கண்டு அதிர்ந்த மித்ரநந்தன், "விஷ்வா, என்ன பண்ற? அவ தேவா!" என்று அவர்களின் பந்தத்தை உணர்த்த முயன்றான்.
மித்ரநந்தனை நோக்கி கோபத்தைத் திருப்பிய விஷ்வாமித்ரன், "அதுக்கு என்ன இப்போ? இங்க யாருக்குமே என் மேல அக்கறை இல்ல. நான் செத்துப் போயிருந்தா கூட நீங்க இப்படித்தான் உட்கார்ந்து உங்க வீரதீர பராக்கிரமத்தை கொண்டாடிக்கிட்டு இருந்திருப்பீங்க இல்ல!" என்று கட்டிலில் இருந்த தலையணைகளையும், அருகிலிருந்த மருந்துகளையும் தூக்கி எறிந்து ரகளை செய்யத் துவங்கினான்.
சத்தம் கேட்டு அறைக்குள் ஓடிவந்த சஞ்சீவனி, விஷ்வாமித்ரனின் நிலையைப் பார்த்துத் பதறிப்போய், "விஷு, என்ன இது? கொஞ்சம் பொறுமையா இரு. என்னன்னு பேசுவோம்." என்று கத்திக்கொண்டிருந்தவனை அமைதியாக்க முயன்றார்.
"முதல்ல நீங்க யாரு எனக்கு? உங்களுக்கு உங்க ஹன்டர் கூட்டமும், அதோட லெகஸியும்தான முக்கியம்! நான் உள்ள என்ன நிலைமைல இருக்கேன்னு கூட தெரிஞ்சுக்காம உங்க சண்டைதான் முக்கியம்னு இருந்தீங்கள! இப்போ மட்டும் என்ன? எனக்கு யாரும் தேவையில்ல. என்னை எல்லாரும் தனியா விடுங்க. போங்க வெளிய!" என்று சிறு வயதிலிருந்து தன்னைப் பாசமாக வளர்த்தவர் என்றும் பாராமல், சஞ்சீவனியை நோக்கி விரல் நீட்டி எச்சரித்துக் கத்தினான் விஷ்வாமித்ரன்.
அவனது வார்த்தைகள் சஞ்சீவனியின் இதயத்தை ஈட்டியாய்த் துளைக்க, திகைப்பில் அப்படியே நின்றுவிட, மித்ரநந்தனும் தேவமித்ராவும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
அனைத்தையும் கேட்டபடி உள்ளே நுழைந்த சர்வஜனனோ, “எதுக்கு இவ்ளோ சத்தம் விஷ்வா? எதுவுமே தெரியாம நிம்மதியா இருக்க உன் அம்மாவையும் நோக்கடிக்கணும்னா?” என்று அழுத்தத்துடன் கேட்டபடி மருமகனைக் கூர்மையாக நோக்கினார்.
“தெரியக்கூடாதுன்னு மறைச்சு வச்சதுக்குப் பின்னாடி என்ன சதி இருக்கோ!” என்று முனகிய விஷ்வாமித்ரனை மற்றவர்கள் அதிர்ச்சியுடன் நோக்கினர் என்றால் சர்வஜனன் சந்தேகத்துடன் பார்த்தார்.
“விஷு, என்ன பேசுற?” என்று தேவமித்ரா ஏதோ கேட்க வர, அவளைத் தடுத்த சர்வஜனன், “அவன் ரெஸ்ட் எடுக்கட்டும். அவனைக்கொஞ்சம் தனியா விடுங்க.” என்று கூற, விஷ்வாமித்ரனைத் தனியே விட்டுவிட்டு அனைவரும் அறையிலிருந்து வெளியேறினர்.
வெளியே வந்த தேவமித்ரா, தன் தலையைத் தாங்கியபடி தீவிரமாக யோசித்தாள்.
"நந்து, விஷு இப்படிப் பேசுற ஆளே இல்ல. அவனுக்கு நம்ம மேல ஏன் இவ்ளோ கோபம்? ஒருவேளை, அந்த வேம்பயர் இவனைக் கடிச்சதோட சைட்-எஃபெக்ட்டா இது இருக்குமோ? வேம்பயர் கடியால ஒருத்தனோட குணத்தையே மாத்த முடியுமா?” என்று தன் சந்தேகத்தைச் சத்தமாகக் கேட்டவள், பதில் வராமல் போனதும், பதில் யாரிடம் கிடைக்கும் என்பதை அறிந்து, “எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நான் கிளம்புறேன்.” என்று அங்கிருந்து விரைந்தாள்.
*****
தன் இருசக்கர வாகனத்தை அசாத்திய வேகத்தில் செலுத்திய தேவமித்ராவின் மனமோ, ‘இப்போ அந்த ஆர்யா எங்க இருப்பான்?’ என்ற கேள்விக்கான விடையைத் தேடிக்கொண்டிருந்தது.
அதே எண்ணத்துடன் அந்தப் பாழடைந்த கட்டிடத்தின் ரகசிய ஆய்வகப்பகுதிக்கு வந்து சேர்ந்தாள்.
இப்போது, அவளது மனதில் விஷ்வாமித்ரனின் சிவந்த கண்களும், அவன் தங்களை நோக்கி விரல் நீட்டிப் பேசிய வார்த்தைகளும் மட்டுமே நிழலாடிக்கொண்டிருந்தன.
அது உண்டாக்கிய வருத்தத்துடன் உள்ளே நுழைந்தவள், அங்கிருந்த சிவராமைக் கண்டு, “அங்கிள், எப்போ வந்தீங்க? நீங்க எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரிக்க, அவரும் பதிலுக்கு விசாரித்தார்.
மேலும், “இப்போ சூழ்நிலை சரியா இல்ல தேவா. எதுவா இருந்தாலும் கவனமா ஹேண்டில் பண்ணுங்க.” என்று அறிவுரையும் கொடுத்தார் சிவராம்.
அவருக்கு ஒரு தலையசைப்பைக் கொடுத்தவள் திரும்பிப் பார்க்க, அங்கு ஆர்யவர்தன் அங்குள்ள நுண்ணோக்கி (மைக்ரோஸ்கோப்) வழியே ஏதோ ஒரு தட்டை தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தான். அவனது முகம் வழக்கமான நக்கலைத் துறந்து, ஒரு தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.
அவனைக் கண்டதும், தன்னுடன் பேசிக்கொண்டிருந்த சிவராமை மறந்தவளாக, “ஆர்யா…” என்று சத்தமாக விளிக்க, அழைக்கப்பட்டவனும் திரும்பிப் பார்த்தான். அவனுடன், அங்கிருந்த ஒரு சிலரும் அவளைப் பார்த்தனர்.
கத்திய பின்னரே செய்கையை உணர்ந்து நாக்கைக் கடித்தவள், சிவராமை ஓரக்கண்ணில் பார்க்க, அவரோ நமுட்டுச்சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார்.
‘ஹையோ, இவரு வேற என்ன நினைச்சுட்டுப் போறாரோ!’ என்று எண்ணியவளுக்கு அதற்கு மேல் அதே சிந்தனையில் பயணிக்க நேரமில்லை.
மீண்டும் ஆர்யவர்தனை நோக்க, அவனும் அவளைத்தான் கைகளைக் கட்டிக்கொண்டு, நக்கல் சிரிப்புடன் நோக்கினான்.
“என்ன தேவா, இவ்ளோ ஆர்வமா என்னைப் பார்க்க வந்துருக்க?” என்று பார்வையில் தெரிந்த நக்கலுக்கு சற்றும் குறையாத வண்ணம் குரலிலும் அதைச் சேர்த்து அவன் வினவ, அவனது நக்கலை விட்டுவிட்டு, தன் சந்தேகத்தை அவனிடம் வினவினாள் தேவமித்ரா.
"எனக்கு ஒரு உண்மை தெரியணும். ஒரு வேம்பயர் இன்னொரு மனுஷனையோ அல்லது வேர்உல்ஃபையோ கடிச்சா, அவங்களோட குணமே தலைகீழா மாறுமா? அவங்க மனசுக்குள்ள இருக்குற அன்பு, பாசம் எல்லாம் அழிஞ்சுப் போய் கோபமா மாறுமா?" என்று படபடப்புடன் கேட்டாள்.
ஆர்யவர்தன் அவளது பதற்றத்தைக் கூர்மையாகக் கவனித்தவன், தன் கையில் இருந்த கையுறையை கழட்டி மேஜை மீது வைத்தபடி, அவளுக்கு மிக அருகில் வந்தான்.
“எனக்குத் தெரிஞ்சு இல்ல. வேம்பயர் கடிக்கிறதால உடல்ல ரத்த இழப்பும், பலவீனமும் ஏற்படுமே தவிர, குணமெல்லாம் மாறாது. வேணும்னா டெஸ்ட் பண்ணிப் பார்ப்போமா?” என்று முதலில் தீவிரத்துடன் கூறியவன், முடிக்கும்போது விளையாட்டாக முடித்து, வேண்டுமென்றே அவனது கூர்மையான பற்களைக் கொண்டு அவளைக் கடிப்பது போல பாவனை செய்தான்.
அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பது போல சிறிதும் நகராமல் நின்றவள், “நான் ஒரு ஹன்டர். என்னோட ரத்தம் உங்களை மாதிரி வேம்பயர்ஸுக்கு விஷம்னு உங்களுக்கு தெரியாதா என்ன?” என்றாள் தேவமித்ரா.
அதற்கு அவன் புருவத்தை உயர்த்த, “நானும் ரிசர்ச் பண்ணுவேன்.” என்றவள், அடுத்த நொடி வருத்தத்துடன், விஷ்வாமித்ரனிடம் தென்பட்ட மாற்றங்களைக் கூறினாள்.
அதைக் கேட்ட ஆர்யவர்தனின் கண்கள் ஒரு நொடி சுருங்கி விரிந்தன.
அவன் ஏதோ ஒன்றை ஆழமாக யோசித்துவிட்டு, "இது வெறும் கடியால வந்த மாற்றம் இல்ல தேவா. இது வேம்பயர்களோட ரொம்ப ஆபத்தான மைண்ட் கேம்... 'கம்பல்ஷன்'!" என்றான் அழுத்தமான குரலில்.
“கம்பல்ஷனா? ஆமா, முருகைய்யன் தாத்தா கூட இதைப்பத்தி சொன்னாரு. ஆனா, எப்போ எப்படி விஷ்வாக்கு இந்த மாதிரி ஆச்சு? அந்த வேம்பயர் கடிச்சப்போவா?” என்று தேவமித்ரா வினவ, “நோ, ஒரு சாதாரண வேம்பயரால, வேர்உல்ஃபை கட்டுப்படுத்த முடியாது. இது வேற ஏதோ ஒரு பவர்ஃபுல் வேம்பயரோட வேலையா இருக்கும்.” என்ற ஆர்யவர்தனுக்கு அந்தச் சக்திவாய்ந்த வேம்பயரை தெரிந்தே இருந்தது.
“ம்ச், இப்போ விஷுவை எப்படி பழையபடி மாத்துறது? இந்த கம்பல்ஷனுக்கு மருந்து எதுவும் இல்லையா?” என்று அவள் வினவ, “ஒண்ணு, சம்பந்தப்பட்ட வேம்பயர் அதை வாபஸ் வாங்கணும். இல்ல, அந்த வேம்பயர் இல்லாம போகணும். அப்போதான், விஷ்வாவால அந்த கம்பல்ஷனை விட்டு வெளிய வர முடியும். அதுவரை நீங்க என்னதான் முயற்சி செஞ்சாலும், அவன் உங்ககிட்ட இருந்து விலகித்தான் போவான்.” என்று யோசனையுடன் கூறினான் அவன்.
அவன் சிந்தனை எல்லாம், விஷ்வாமித்ரனை வைத்து மேக்னா அடுத்து எவ்வாறு காய் நகர்த்தப் போகிறாள் என்பதே!
*****
அனைவரையும் அறையை விட்டு வெளியே அனுப்பிய அரைமணி நேரத்திலேயே, காவல் உடையை அணிந்து வெளியே வந்தான் விஷ்வாமித்ரன்.
அவனைக் கண்ட சஞ்சீவனியோ, “விஷு, இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கலாமே?” என்று பரிவுடன் கூற, அதுவும் நடிப்பாகவே தெரிந்தது அவனுக்கு.
“என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்.” என்று விஷ்வாமித்ரன் கூற, அப்போது அங்கு வந்த ரோஷினி (விஷ்வாமித்ரனின் அன்னை), “விஷ்வா, என்ன பேச்சு இது? அத்தைகிட்ட இப்படித்தான் பேசுவியா? ஒழுங்கா, மன்னிப்பு கேளு.” என்று திட்டினார்.
அன்னையை ஒரு நொடி உற்றுக் கவனித்த விஷ்வாமித்ரனோ, “உன்னை மாதிரி என்னையும் ஏமாளியா இருக்க சொல்றியாம்மா? இதுவரை அப்படி இருந்துட்டேன்… இனியும், அப்படி இருக்க முடியாது. நீ இவ்ளோ நம்புறீயே… உன் அண்ணா, அவரு உன்கிட்ட எதையும் மறைக்காம இருக்காருன்னு நினைக்குறியா?” என்று கொளுத்திப் போட்டவன் அங்கிருந்து விறுவிறுவென்று வெளியேறினான்.
அதைக் கேட்ட ரோஷினிக்கோ பெரும் குழப்பம் சூழ, அங்கு நின்றிருந்த சர்வஜனனிடம், “என்ன சொல்லிட்டுப் போறான் அண்ணா?” என்று வினவினார், அண்ணனை மட்டுமே நம்பியிருக்கும் அந்தத் தங்கை!
“அவனுக்கு அடிபட்டதுல… அதான் கொஞ்சம் முசுடா சுத்துறான் ரோஸ். நீ பெருசா எடுத்துக்காத, கொஞ்ச நாள்ல சரியாகிடுவான்.” என்று ஆறுதல் கூறிய சஞ்சீவனியிடம், “என் மனசுக்கு என்னமோ தப்பாவே தோணுது அண்ணி. பிள்ளைங்க எல்லாரும் அடுத்தடுத்து காயப்படுறாங்க. என்ன நடக்குதுன்னு நீங்களும் சொல்ல மாட்டிங்குறீங்க.” என்று விசனத்துடன் கூறிய ரோஷினி அவரின் அறைக்குச் சென்றார்.
தீவிர சிந்தனையில் இருந்த சர்வஜனனுக்கு அருகில் அமர்ந்த சஞ்சீவனி ஆறுதலாக அவரின் தோளைத் தொட, அதற்காகவே காத்திருந்ததைப் போல, “எல்லாருக்கிட்டயும் உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு வனி.” என்றவரின் குரலில் வருத்தத்துடன் லேசான பயமும் எட்டிப்பார்த்தது.
கணவரின் மனதைச் சரியாக உணர்ந்த மனைவியாக, “எல்லாரும் சரியா புரிஞ்சுப்பாங்க சர்வா. நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதீங்க!” என்று கூற, “ஹ்ம்ம், இன்னைக்கு நைட்டு சொல்லிடலாம்.” என்றார் சர்வஜனன்.
நேரம் கடந்து விட்டது என்பதை அறிய நேரிடும் போது இருவரின் எதிர்வினை எவ்வாறு இருக்குமோ!
*****
தனக்காகக் காத்திருந்த காவல் வாகனத்தை சமீபித்த விஷ்வாமித்ரனுக்கு அவனது உதவியாளனிடமிருந்து அழைப்பு வந்தது.
அழைப்பு ஏற்கப்பட்டவுடன், “சார், நைட் விஷன் கார்ப்பரேட் கம்பெனிக்கு சொந்தமான லேப்ல ஏதோ திருட்டுப் போயிடுச்சாம்.” என்று மறுமுனையிலிருந்த நபர் கூற, “லேப்ல திருட்டு நடந்துருக்கா? என்ன காணோமாம்?” என்று வினவியபடியே வாகனத்தில் ஏறினான் விஷ்வாமித்ரன்.
“அது… தெரியல சார்.” என்று மறுமுனையிலிருந்தவர் கூற, “ப்ச், எதையும் முழுசா விசாரிக்குறதே இல்ல! ஸ்டேஷன் வந்து உங்களை கவனிச்சுக்குறேன். இப்போ, நானே ஸ்பாட்டுக்குப் போறேன்.” என்று அழைப்பைத் துண்டித்தான் விஷ்வாமித்ரன்.
அடுத்த அரை மணி நேரத்தில், நளிர்புற எல்லையில் இருந்த நைட் விஷனுக்குச் சொந்தமான வளாகத்தினுள் விஷ்வாமித்ரனின் வாகனம் நுழைந்தது.
முதல்முறை அங்கு வருவதால், சுற்றிலும் பார்வையை ஓட்டியபடியே வந்தான் விஷ்வாமித்ரன்.
அங்கு, அந்த நவீனக் கண்ணாடி மாளிகையின் பிரதான வாயிலிலேயே அவனுக்காகக் காத்திருந்தாள் அவள் – ஒட்டுமொத்த நைட் விஷன் குழுமத்தின் தற்போதைய தலைவி மேக்னா!
அவளைக் கண்ட முதல் நொடியிலேயே விஷ்வாமித்ரனின் கால்கள் தானாகத் தரைத்தட்டி நின்றன. அவளது வசீகரமான பேரழகு அவனது இமைகளை அசையவிடாமல் முடக்கியது.
கார்மேகம் போன்ற அவளது அடர்ந்த கூந்தல் காற்றில் லேசாக அசைந்தாட, பனிச்சிற்பம் செதுக்கியது போன்ற அவளது முகமும், அதில் ஒளிந்திருந்த வஞ்சகமான புன்னகையும் விஷ்வாமித்ரனை அப்படியே ஸ்தம்பிக்கச் செய்தன.
எல்லாவற்றிற்கும் மேலாக, காந்தத்தைப் போல ஈர்க்கும் அவளது விழிகள் அவனுக்குள் எழும் அனைத்துக் கேள்விகளையும் ஒரு கணத்தில் மறக்கடித்தன.
மயக்க நிலையில் தன் ஆழ்மனதில் கேட்ட அதே குரலின் சொந்தக்காரி இவள்தான் என்பதை அறியாத விஷ்வாமித்ரன், அவளது அழகென்னும் மாயவலையில் முற்றிலும் தன்னையே இழந்தவனாக சிலையாக நின்றான்.
அவனது திகைப்பைத் தன் சிவந்த இதழ்களின் ஓரப்புன்னகையால் ரசித்தபடி மெதுவாக அவனை நோக்கி நடந்து வந்தாள் மேக்னா. அவளது ஒவ்வொரு அடியிலும் ஒரு பேரரசிக்கே உரிய கம்பீரமும், நளினமும் கலந்திருந்தன.
அவனுக்கு மிக அருகில் வந்து நின்றவள், தன் கையை நீட்டி, அவனது கண்களை நேராக நோக்கி, அவளின் தனித்துவமான காந்தக் குரலில், "வெல்கம் டு நைட் விஷன், மிஸ்டர். விஷ்வாமித்ரன்!" என்றாள்.
தொடரும்...