- Joined
- May 4, 2024
- Messages
- 5,345
- Reaction score
- 3,210
- Points
- 113

12. திருத்தப்பட வேண்டிய தவறுகள்
பள்ளிக்கூடத்திற்குத் தினமும் மகன் முகுந்தன் சரியாகச் சென்று வருவதாகவே வேலுச்சாமி நம்பியிருந்தார். ஆனால், இன்று ஆசிரியர் அவரை நேரில் சந்திக்க வரச் சொன்ன பிறகுதான் உண்மை நிலை அவருக்குப் புரிந்தது. மகன் சரியாகப் பள்ளிக்குச் செல்வதில்லை; ஆசிரியர் பாடம் கற்பிக்கும்போது கவனிப்பதில்லை; ஊதாரித்தனமாகச் சுற்றித் திரிகிறான்; படிப்பில் நாட்டம் இல்லாமல் ஆசிரியரின் சொற்களுக்குச் செவிசாய்க்காமல் இருந்திருக்கிறான். அவன் படிப்பில் மிகவும் பலவீனமாகிவிட்டான் என்பது தெரிந்தபோது, அந்தப் பெற்ற மனம் இடிந்து போனது.
கூலி வேலை செய்தாவது தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் நினைக்க, அவர்களில் ஒரு சிலரின் பிள்ளைகளோ பெற்றோரின் உழைப்பைப் புரிந்து கொள்வதே இல்லை. மாறாக, அவர்கள் ஆசைப்பட்ட கைப்பேசி, இருசக்கர வாகனம், பகட்டான ஆடைகள் என அனைத்தையும் பெற்றோர் வாங்கித் தருவதால், தங்களைப் பெரிய இடத்துப் பிள்ளைகளாகக் காட்டிக்கொள்வதிலேயே அவர்கள் குறியாக இருக்கின்றனர். அதற்காகப் பணத்தை அதிகமாகச் செலவு செய்கின்றனர். கைப்பேசியில் முழு நேரமும் மூழ்குவது, ஊர் சுற்றுவது, சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிடுவது, அபாயகரமான இடங்களில் நின்று ரீல்ஸ் எடுத்துத் தன் உயிருக்கு உலை வைப்பது, அதிவேகமாக வாகனங்களைச் செலுத்திப் பொதுவெளியில் விபத்துகளுக்கும் காவலர்களின் கோபத்திற்கும் ஆளாவது… எனத் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே அழித்துக் கொள்கின்றனர்.
இதில் தப்பு செய்தவர் யார்? தவறு செய்ததாகக் கருதப்படும் நபர்கள் எவர்? வேலுச்சாமி, ஆசிரியர் சொன்னவற்றைக் கேட்டுத் தன் மகனின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சத்தில், ஆசிரியரின் காலில் விழுந்து மகன் செய்த தவற்றுக்காக மன்னிப்புக் கேட்டார். யார் செய்த தவறை நினைத்து வருந்த வேண்டுமோ அவர்கள் செய்யாமல், அவர்களைப் பெற்றோர் தண்டிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்? ஆசிரியரும் மனிதர் தானே! அவர் வேலுச்சாமியின் நிலையைப் புரிந்து கொண்டு, நல்ல விதமாக எடுத்துச் சொல்லி அனுப்பி வைத்தார்.
வீட்டிற்கு வந்த வேலுச்சாமி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மாலையில் முகுந்தன் பள்ளிக்குச் சென்று வந்த பாவனையில் வீடு திரும்பினான். வழக்கமாக மகன் வந்ததும் ஓடிச் சென்று அன்பு காட்டும் தாய், இன்று வாய் திறக்கவில்லை. அப்பா படுக்கையை விட்டு அசையவில்லை. தங்கை அண்ணனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. அந்த வீடே ஒரு அமைதியின் பிடியில் உறைந்து கிடந்தது.
"என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கிறார்கள்? அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லையா?" எனப் பதறியபடி அவன் அருகில் வந்து விசாரிக்க, தன் ஒரே வாரிசு தன் வாழ்க்கையை அழித்துக் கொள்ளத் துணிந்துவிட்டதைக் கண்டு அந்தப் பெற்றோரால் எப்படிச் சும்மா இருக்க முடியும்? தப்பு அவர்கள் மீதும் அல்லவா! யாரும் பேசாமல் அமைதியாக நேரம் கரைய, அவனுக்குப் பயம் வந்து ஒட்டிக் கொண்டது.
புத்தகப் பையை வைத்த இடத்தில் இருப்பதும், பேசுவதற்கு நா எழாமல் அவன் தயங்குவதுமாக இருக்கையில், "நான் திடீர்னு செத்துப்போயிட்டா நீ இந்தக் குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவாயா?" என்று வேலுச்சாமி கேட்டார். மகன் திகைத்து நின்றான். "சொல்லு! தொடர்ந்து படிச்சு வேலைக்குச் போய் சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாத்துவாயா? இல்லை, நண்பர்களோடு சேர்ந்து ரௌடியாகி அடியாளாகச் சேவகம் செய்வாயா?" என்று அவர் கேட்க, அவனது திகைப்பு பல மடங்கு அதிகரித்தது.
"என் பிள்ளை பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான், டியூஷனுக்குப் போயிட்டு வர நேரமாகும், பேருந்து வசதி எப்போதும் இருக்காது, கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கக் கூடாதுன்னு நீ சொன்னதை நம்பித் தானே கடன் வாங்கி உனக்கு வண்டி வாங்கித் தந்தேன்? அதை வச்சு நீ சாலையில் ரீல்ஸ் எடுக்கவும், ஊதாரித்தனமாகச் சுற்றித் திரியவுமா பயன்படுத்துறே? நீ யூடியூபில் வீடியோ போட்டுச் சம்பாதிக்கும் காசில்தான் நான் சாப்பிடும் அளவுக்கு உன்னை விட்டுட்டேனா?" என்று அவர் கண்ணீர் மல்கக் கேட்க, அவன் விக்கித்து நின்றான்.
அவர் தன் மனைவியைப் பார்க்க, அவரோ கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். "நான் திடீர்னு செத்துப்போயிட்டா நீ என்னடி செய்வே?" என்று அவர் மனைவியிடம் கேட்க, அவர் வெடித்து அழுதார். தங்கையும் விக்கி விக்கி அழ, முகுந்தன் செய்வதறியாது திகைத்தான்.
பெற்றோரின் அழுகை, ஆசிரியரின் எச்சரிக்கை, தனது தவறுகள் என அனைத்தும் முகுந்தனின் மனதை உலுக்கின. இப்போது அவன் மட்டுமல்ல, வீட்டில் உள்ளவர்களின் நிம்மதியுமே குலைந்து போயிருந்தது.
இதில் திருத்தப்பட வேண்டிய தவறுகள் பிள்ளைகளிடம் மட்டுமில்லை, அவர்களைப் பெற்றவர்கள் மீதும் உள்ளது. மகன் காலை முதல் மாலை வரை என்ன செய்கிறான்? அவனது படிப்பு எப்படி இருக்கிறது? நண்பர்கள் யாருடன் தொடர்பில் உள்ளான் … என்பதை ஆராயாமல், அவன் சொல்லும் ஒற்றை வார்த்தையை நம்பிப் பணத்தை வழங்குவது முதல் தவறு. பிள்ளைகளின் தேவைக்குரிய பணத்தைக் கொடுக்காமல் கஷ்டப்படுத்துவது எவ்வளவு பெரிய தவறோ, அதே அளவு தவறுதான் அளவுக்கு மீறிய வசதியால் அவர்கள் வாழ்க்கை அழிவதைத் தடுக்காமல் இருப்பதும்.
பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு இருந்த மதிப்பு குறைந்து வரும் இந்நாளில், மாணவர்களின் வாழ்வியலிலும் எதிர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. சாலையில் அதிவேகமாகச் செல்லும்போது விபத்து நேர்ந்தாலோ, அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுச் சிறை செல்ல நேர்ந்தாலோ ஒருவனின் வாழ்க்கை என்னவாகும்? வளரும் மாணவர் சமுதாயம் இதை உணர வேண்டும்.
இன்று வேலுச்சாமி தன் மகனின் வாழ்க்கையை நினைத்துக் கண்ணீர் விடுவது போலத்தான் எத்தனையோ வீடுகளில் பெற்றோர் ஏக்கத்துடன் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டுமானால், இப்படிப்பட்ட மாணவ சமுதாயம் தங்களைத் திருத்திக்கொண்டு நல்வழியில் நடக்க வேண்டும்.
நன்றி!