வேதம்-20 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேதம்-20

New updates

LATEST

Miloni

Active member
Staff member
Joined
May 14, 2024
Messages
342
Reaction score
180
Points
43
வனிதா பேச ஆரம்பிக்கும் போதே சரவணன் அதை தடுக்க வர சசிதரன் வேண்டாம் என கண்ணைக் காட்டி விட்டான். எதற்காக அத்தையும் இனியாவும் எதையும் வேண்டாம் என இந்த மாதிரி குள்ளநரி கூட்டத்துக்கு விட்டு தர வேண்டும். இதை ஏதோ ஒரு அனாதை ஆசிரமத்துக்கு செய்தாலும் கூட அவர்கள் நன்றியோடு இருப்பார்கள். அவர்கள் ஈகோவை தூண்டிவிட்டு வேண்டுமென்றே எதுவும் வேண்டாம் என சொல்ல வைத்து காமாட்சி காரியம் சாதித்து முடித்திருக்க வனிதாவின் பேச்சில் எங்கே சொத்து கைவிட்டு போகப் போகிறதோ என திகைத்துப் போனார்..

வனிதா இத்தனை வெளிப்படையாக இருப்பார் என அவர் எதிர்பார்க்கவும் இல்லை. தான் இப்படி பேசினால் அது அவர்களுக்குள் புகையும், பிரச்சனை வரும் எப்படியும் இதை வைத்து திருமணத்தை நிறுத்தி விடலாம் என கனவு கண்டார்..

ஜீவிதாவுக்கு எல்லாம் கிடைக்கிறது இனியாவுக்கு ஒன்றும் இல்லை, அவள் இங்கே குப்பையைப் போல என காட்டத்தான் காமாட்சி எல்லாவற்றையும் இறுமாப்போடு சொல்லிக் கொண்டிருந்தார் ஆனால் அது தனக்கே திரும்பும் என எதிர்பார்க்கவில்லை..

சேதுபதி முகம் இறுகியவராக, "ஜீவி அந்த நகை பெட்டிய இனியாகிட்ட கொடு" என அழுத்தமாக சொல்ல அவள் மனதே இல்லாமல் திரும்பக் கொடுத்தாள்.

"என்னடா உன் சம்மந்திகாரங்க ஒரு பேச்சு பேசினதும் உடனே ஜீவி கிட்ட இருக்க எல்லாத்தையும் உன் பொண்ணு கிட்ட கொடுக்க சொல்லிடுவ போலவே..?" என காமாட்சி ஆரம்பிக்க திரும்பி சேதுபதி பார்த்த பார்வையில் அவருக்கு அடுத்த வார்த்தை வாயில் வரவில்லை ஏனெனில் அவர் பார்வை அப்படி இருந்தது.

"அவங்க பேசுறதெல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க அவங்க எப்பவும் இப்படித்தான்.. என் பொண்ணுக்கு சின்ன வயசுல இருந்து நான் சேர்த்து வச்சதெல்லாம் அப்படியே தான் இருக்கு.. எந்த கஷ்டத்திலும் அதை நான் தொட்டதே இல்ல.. ஜீவிக்கு என்ன பண்ணுறேனோ அத அப்படியே இனியாவுக்கும் பண்ணிடுறேன்" என சேதுபதி சொன்னதும் தான் வனிதா முகத்தில் திருப்தி வந்தது.

"சரி அண்ணா நான் உங்களை நம்புறேன்" என்றவர் மேற்கொண்டு அதைப்பற்றி பேசவில்லை.

எல்லோரும் கிளம்பி சென்று விட காமாட்சி தான் ஆடித் தீர்த்தார்..

"அது இப்படி அவ தான் கொஞ்சமும் வெட்கம் இல்லாம கேக்குறான்னா நீ உடனே எல்லாத்துக்கும் சரின்னு சொல்லிடுவியா? பணத்துக்கு எங்க போறது ஏற்கனவே ஜீவிக்கு பணம் இல்லைன்னு சொல்லிட்டு இருந்த இப்ப இவளுக்கும் வாங்குறதுன்னா என்ன பண்ணுவ..?" என காமாட்சி எங்கே ஜீவிதாவுக்கு இல்லாமல் போய்விடுமோ என்ற கடுப்பில் கத்தினார்.

"என்ன பண்ணுறதுன்னு நான் பாத்துக்குறேன் நீங்க பேசாம இருந்தா போதும், இனி வீட்டுக்கு கெஸ்ட் வரும்போது தேவை இல்லாம இந்த மாதிரி பேசுறத நிறுத்துங்க.."

"என்னடா என்னவோ அவ கொடுத்து வச்ச மாதிரி கேட்டுட்டு போறா, என்னடா பண்ணப் போறன்னு கேட்டா என்னையே நிறுத்துன்னு சொல்லுற.. எல்லாரும் சேர்ந்து என் பேத்திக்கு ஒன்னுமில்லாம விடலாம்னு திட்டம் போடுறீங்களா..?" என காமாட்சி குதிக்க.,

"அம்மா எப்பவும் பேசிப்பேசியே பிரச்சினையை பெருசாக்க நினைக்காதீங்க.. ரெண்டு பேத்துக்கும் என்ன பண்ணனுமோ அதை நான் சரியா பண்ணுவேன்.. என்கிட்ட இல்லன்னா கடன் வாங்கி கூட பண்ணுவேன் என்மேல நம்பிக்கை இருந்தா இதோட விடுங்க இல்லன்னா நீங்க என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்களோ பண்ணிக்கோங்க" என சொல்லிவிட்டு சேதுபதி சென்று விட காமாட்சி தான் அடக்க முடியாத கோபத்தில் பல்லை கடித்துக் கொண்டிருந்தார்.

"பாட்டி போதும் எதுவும் பேசாதீங்க ரூமுக்கு வாங்க" என ஜீவிதா அவரை அழைத்து சென்றிட இங்கே தேவிகாவும் இனியாவும் போகும் சேதுபதியை தான் ஆச்சரியமாய் பார்த்திருந்தார்கள்..

******

இரண்டு நாட்களாகிறது இன்னும் காமாட்சி கடுகடுவென்று தான் சுற்றிக் கொண்டிருந்தார். என்னதான் ஜீவிதா சமாதானப்படுத்தினாலும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

"பாட்டி கொஞ்சம் பேசாம இருங்க என்ன பண்றது எப்படி பண்றதுன்னு நான் யோசிச்சு பண்ணுறேன் தேவையில்லாம நீங்க வாயை விட்டதால தான் இப்போ அவளுக்கும் சேர்த்து அப்பா செய்றேன்னு சொல்லி இருக்காங்க.."

"அவனை அப்படி எல்லாம் செய்ய விட்டுடுவேனா என்னை மீறி எப்படி செய்றான்னு பாக்குறேன்" என காமாட்சி சூளுரைக்க, "அவர் பொண்ணுக்கு அவர் செய்ய மாட்டாரா? நம்ம கிட்ட தான் அவர் வீராப்பா இருக்குற மாதிரி காட்டிக்குறார் ஆனா இனியா மேல அவருக்கு கொள்ளை பாசம் இருக்கு அது உங்களுக்கு புரியாது" என ஜீவிதா சொல்ல காமாட்சி யோசனையானார்.

"இப்போ என்னடி பண்ணுறது விட்டா எல்லாத்தையும் அவன் பொண்ணுக்கு கொடுத்துட்டு போயிடுவான் போலயே..?" என கவலையாக கேட்க.,

"எல்லாத்தையும் கல்யாணத்துக்கு முன்னாடியே கேட்டு வாங்குறது தான் நல்லது பாட்டி.. கம்பெனி விஷயத்தைக் கூட கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம் ஆனா இருக்குற நகை பணம் சொத்து எல்லாத்தையும் எப்படியாவது சுருட்டணும்.. அந்த தேவிகா கிட்ட கோடிக்கணக்கு பொருமானம் உள்ள நகை இருக்கு முதல்ல அதை வாங்க பிளான் போடுவோம்.. அந்த வனிதா வேற நேத்தி ஏத்தி விட்டுட்டு போயிருக்கா கண்டிப்பா நகைய இனியாவுக்கு கொடுக்கத்தான் தேவிகா பிளான் போடுவா அதுக்கு முன்ன அம்பிகா அத்தையை அப்பா கிட்ட பேச சொல்லணும்.."

"அவன் கேட்டா மட்டும் அவ கொடுத்துடுவாளா..?" என காமாட்சி நம்பிக்கையில்லாமல் பேச.,

"கொடுக்கலைன்னா கொடுக்க வைக்கணும் பாட்டி இல்லன்னா இத்தனை நாள் நம்ம இங்க இருந்ததுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்.. கேவலம் இந்த சில கோடிக்காகவா நாம இத்தனை வருஷம் திட்டம் போட்டு எல்லாம் செஞ்சோம் மொத்தமும் நமக்கே வரணும்.. தேவிகா நகையை மட்டும் நமக்கு கொடுக்க வச்சுட்டா இனியா ஈகோவை தூண்டிவிட்ட மாதிரி அதுக்கு பிறகு அவ எது கொடுத்தாலும் வேண்டாம்னு சொல்லிடுவா அதுதானே நமக்கு வேணும்" என ஜீவிதா வஞ்சத்தோடு சொல்ல காமாட்சி கண்கள் மின்னியது.

இப்போதுதான் ஒரு பிரச்சனை நடந்து முடிந்திருக்கிறது மீண்டும் ஏதாவது செய்தால் தந்தையின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வரும் அதனால் இரண்டு நாட்கள் கழித்து தான் அம்பிகாவை வர சொல்லி இருந்தார்கள் ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத மாதிரி வனிதா மறுநாளே வந்து நின்றார்..

வனிதாவை பார்த்ததும் தேவிகா ஓடிவந்து வரவேற்றார்..

"வாங்க வாங்க அண்ணி.. தனியாவா வந்தீங்க அண்ணன் வரலையா..?"

"இல்ல தேவி நான் மட்டும்தான் வந்தேன்.. ஷாப்பிங் போறேன் அப்படியே உன்னை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.."

"என்ன அண்ணி ஏதாவது முக்கியமான விஷயமா..?"

"ஆமா தேவி ஜுவல்லரி ஷாப்ல இனியாவுக்கு என் பழைய நகையெல்லாம் போட்டுட்டு புதுசா டிசைன் பண்ண ஆர்டர் பண்ணிருக்கேன்.. உனக்கும் ஏதாவது அப்படி பண்ணனும்னா சொல்லு சேர்த்து பண்ணிட சொல்றேன் அதை சொல்லத்தான் வந்தேன்.."

"ஆமா அண்ணி என்கிட்டேயும் பழைய நகைகள் இருக்கு, ஒரு சில நகைகளை தவிர மத்ததெல்லாம் அவுட் ஆஃப் ட்ரெண்ட்ல தான் இருக்கு.. இனிய பொதுவாவே நகை போட மாட்டா அதெல்லாம் ரொம்ப பெருசு பெருசா இருக்கு நிச்சயமா அதை போட மாட்டா அதை போட்டுட்டு அவளுக்கு பிடிச்ச மாதிரி வாங்கணும்" என அவர்கள் பேசிக் கொண்டிருக்க ஜீவிதாவும் காமாட்சியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"சரி அப்போ அதை எடுத்து வை, நான் மறுபடி கடைக்கு போகும்போது வந்து உன்னையும் கூட்டிட்டு போறேன்" என சொல்ல தேவிகாவும் சரி என்று சொல்லி அவரை அமர வைத்து ஜூஸ் கொடுத்து சிறிது நேரம் பேசிவிட்டே அனுப்பி வைத்தார்..

தாங்கள் பேசி ஒரு நாள் முழுதாக முடியவில்லை அதற்குள் வனிதா வந்து நிற்கவும் காமாட்சிக்கு சந்தேகமாக இருந்தது. இல்லை இதை அப்படியே விடக்கூடாது என்ன பிரச்சனை வந்தாலும் அந்த நகையை வெளியே போக விடக்கூடாது என முடிவெடுத்துக் கொண்டார்..

அன்று சேதுபதி கம்பெனியில் நடக்கும் பிரச்சினைகளில் ஏற்கனவே மண்டையைப் பிய்த்துக் கொண்டவராக இருக்க இன்று போலீஸ் வந்து விசாரிக்கவும் அது வேறு புது தலைவலியாக இருந்தது. உடல் முழுவதும் களைப்பும் அலுப்புமாக வீட்டுக்கு வந்து அமர்ந்தவரிடம் காபியை எடுத்து வந்து நீட்டிய தேவிகாவை அவர் ஆச்சரியமாகப் பார்த்தார்..

ஆசையாக மனைவி நீட்டிய காபியை வாங்கி குடிக்க அவர் முழுவதும் குடித்து முடிக்கும் வரை எதுவும் கேட்கவில்லை பிறகு, "நாளைக்கு பேங்க் வரையிலும் போகணும் லாக்கர்ல இருக்குற என் நகையை எடுத்துட்டு வரணும்" என சொல்ல சேதுபதி அவளை ஏனென்ற கேள்வியோடு பார்த்தார்.

"அது அண்ணி இனியாவுக்கு புதுசா நகை செய்ய கொடுத்துருக்காங்களாம் நானும் பழசை போட்டுட்டு கொஞ்சம் புதுசா நகை எடுக்கலாம்னு பார்க்குறேன்" என்றதும் சேதுபதியும், "சரி நான் டிரைவரை அனுப்பி வைக்கிறேன் நீ போயிட்டு வந்துடு" என சொன்னார்.

தேவிகாவுக்கு ஆச்சரியமாக இருந்தது ஏதாவது கேள்வி கேட்பார் என எதிர்பார்த்தார் ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை எனவும் தேவிகா பேசாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்..

மறுநாள் நகையை எடுத்து வந்து இனியாவிடம் காட்டி எது எது அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை கேட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் காமாட்சி அங்கே வந்து, "நகை எல்லாம் எங்க எடுத்துட்டு போற..?" என கேட்டார்.

அவர்கள் இருவரும் அவரை கண்டு கொள்ளாமல் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க காமாட்சி கடுப்பாகி, "உன்னை தான் கேக்குறேன் காதுல விழலையா என்ன செவிடாயிட்டியா..?" எனக் கத்தினார்.

"உங்களுக்கு பதில் சொல்லணும்னு எனக்கு அவசியமில்லை.."

"இது என்ன நீ சம்பாதிச்சு வாங்குன நகையா? என் பையன் சேது கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சு வாங்குனது.. நான் கேட்டா நீ பதில் சொல்லி தான் ஆகணும்..?"

"உங்களுக்கு பதில் சொல்லணுமா அப்படி ஒன்னும் அவர் என்கிட்ட சொல்லலையே.. உங்க பையன் சம்பாதிச்சாலும் கூட இருந்து சப்போர்ட் பண்ணுனது நான், இந்த நகையில முழு உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு அதை கேட்க அவருக்கு கூட ரைட்ஸ் இல்லை" என்றதும் காமாட்சி ஆங்காரமாகி, "எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி சொல்லுவ இன்னைக்கு சேது வரட்டும் உண்டு இல்லைன்னு பண்ணுறேன்" என கண்கள் சிவந்து அங்கேயே அமர்ந்திருந்தார்.

மீண்டும் இனியாவும் தேவிகாவும் அவரைக் கண்டு கொள்ளாமல் பேசிக் கொண்டிருக்க சேதுபதியும் ஜீவிதாவும் உள்ளே வந்தார்கள்..

தேவிகா கைகளில் இருந்த நகையை பார்த்ததும் ஜீவிதா காமாட்சியிடம் கண்ணைக் காட்டி விட்டு அவர்கள் அருகே சென்று அமர்ந்து, "வாவ் உங்க நகையெல்லாம் செமையா இருக்கும்மா எங்க கல்யாணத்துக்காக எடுத்துட்டு வந்தீங்களா? எது எது எனக்கும் இனியாவுக்கும்னு எடுத்து வச்சிட்டீங்களா..?" என உரிமையாக அங்கிருந்த நகைப்பெட்டியை எடுக்க போக சட்டென்று அதை கையில் எடுத்த தேவிகா, "இதெல்லாம் என் நகை.. நான் என் பொண்ணு இனியாவுக்கு தான் கொடுக்கப் போறேன் அதுல கையை வச்சு டேமேஜ் பண்ணிட்டாத" என சற்றுக் கடுமையாக சொல்ல அந்த பதிலில் ஜீவிதா மட்டுமல்ல சேதுபதியும் அதிர்ந்து போனார்.

"என்ன தேவி ஏன் இப்படி பேசுற? ஜீவிக்கும் உன் நகை கொடுக்குறதா நீ ஏற்கனவே சொல்லி இருந்தியே..?"

"நீங்களும் கூட தான் என் பொண்ணை எந்த குறையும் இல்லாம பார்த்துப்பேன்னு சொன்னீங்க இங்க அப்படியா நடக்குது.. அது மாதிரி தான் நான் அதை அப்போ சொன்னேன் இப்போ என் பொண்ணுக்கு மட்டும் தான் என் நகையைக் கொடுப்பேன்.."

"பார்த்தியா சேது இதைத்தான் நான் கேட்டுட்டு இருந்தேன்.. என்னவோ இவளே சம்பாதிச்சி நகை வாங்கின மாதிரி கொடுக்க மாட்டேன்னு அந்த குதி குதிக்கிறா.. இவ கிட்ட என்ன பேச்சு அந்த நகையெல்லாம் பிடுங்கு அவளால என்ன செய்ய முடியும்னு நானும் பார்க்குறேன்" என காமாட்சி ஆவேசமாக கத்தினார்.

"எங்க என் நகையில கையை வச்சு பாருங்க அடுத்து என்ன நடக்கும்னு தெரியும்" என தேவிகாவும் பதிலுக்கு ஆத்திரத்தோடு பேச சேதுபதிக்கு தான் தலைவலி விண்விண் என்று தெரித்தது.

"அம்மா கொஞ்சம் பேசாம இருங்க நான் பேசிட்டு இருக்கும்போது நீங்க ஏன் இடையில வந்து பேசுறீங்க..?" என்றவர் தேவிகாவிடம் திரும்பி, "என்ன தேவி.. உனக்கு என்னதான் பிரச்சனை ஏன் நகைய கொடுக்க மாட்டேன்னு சொல்லுற..?" என கேட்டார்.

என்னதான் சேதுபதிக்கு தன் குடும்பத்தின் மேல் கோபமும் சந்தேகமும் இருந்தாலும் அவரால் அவர் குடும்பத்தை விட்டு தர முடியாதே அவர்களுக்கென்று அவரைத் தவிர வேறு யாரும் இல்லையே..

"இது என் நகை.. கொடுக்கணுமா கொடுக்க கூடாதான்னு நான் தான் முடிவு பண்ணுவேன்.. இதை கேட்க யாருக்கும் ரைட்ஸ் கிடையாது உங்களுக்கும் தான்" என தேவிகா தீர்மானமாக சொல்ல சேதுபதிக்கு கம்பெனியில் நடக்கும் பஞ்சாயத்தை விட வீட்டில் நடக்கும் பஞ்சாயத்தை பார்ப்பதே பெரும்பாடானது.

"அம்மா நான் என்ன செஞ்சேன் என் மேல உங்களுக்கு என்ன கோபம்? நீங்க இந்த நகை எல்லாம் தர்றதா சொன்னதால தானே நான் கேட்டேன்..?" என ஜீவிதா வழக்கம் போல கண்ணைக் கசக்க, "அப்போ யாரைப் பத்தியும் என்னால சரியா புரிஞ்சுக்க முடியல ஜீவி ஆனா இப்போ என்னால நல்லா புரிஞ்சுக்க முடியுது.. உனக்கு வேணும்னா உன் அம்மா கிட்ட போய் நகையைக் கேளு" என தேவிகா முகத்தில் அடித்ததை போல சொல்லிவிட்டார்.

"என் அம்மா கிட்ட உங்க அளவுக்கு நகை இருந்தா நான் ஏன் தேவிம்மா உங்க கிட்ட கேட்கப் போறேன்..?" என ஜீவிதா அப்பாவியாய் கேட்க சேதுபதிக்கு கூட என்னவோ போல இருந்தது.

"தேவி அவ சின்னப் பொண்ணு பெரியவங்க கோபத்தை சின்னப் பொண்ணு கிட்ட காட்டாத.. ஒரு பொண்ணுக்கு நிறைய நகை கொடுத்துட்டு இன்னொரு பொண்ணுக்கு கம்மியா கொடுத்தா தேவையில்லாத பேச்சு வரும்" என சேதுபதி தன்னால் முடிந்த வரை எடுத்துச் சொன்னார்.

"அவ என் பொண்ணு கிடையாது.. எனக்கு ஒரு பொண்ணு தான் இருக்கா அவளுக்கு நான் தான் செய்யணும்.. என்கிட்ட இருக்குறத எல்லாம் அவளுக்கு மட்டும் தான் கொடுப்பேன்.." என தேவிகா அதிலேயே பிடிவாதமாய் நிற்க அதற்கு மேல் அவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை .

"இவகிட்ட அமைதியா பேசினா வேலைக்காகது சேது? என்கிட்ட விடு அந்த நகையை எப்படி வாங்குறேன்னு மட்டும் பாரு" என காமாட்சி துள்ளிக்கொண்டு நிற்க தேவிகா அவரை மேலும் கீழும் பார்த்து, "எப்படி வாங்குவீங்க அடிச்சு பிடிச்சா உங்களுக்கு அப்படி தெரியும்னா அதைவிட எனக்கு நிறையவே தெரியும்.. என்ன செய்றீங்கன்னு நானும் பார்க்குறேன் இதுவரை எனக்கு யாரும் இல்லன்னு உங்க இஷ்டத்துக்கு ஆடினீங்க இப்போ ஒரு போன் பண்ணா கூட போதும் என் அண்ணன் உடனே கிளம்பி வந்துடுவார்" என தேவிகாவும் மல்லுக்கு நிற்க சேதுபதிக்கு தான் தலைவலி அதிகமானது.

கிட்டத்தட்ட காமாட்சியும் அந்த நினைவில் தானே தேவிகாவின் குடும்பத்தையே அண்டவிடாமல் செய்திருந்தார்..
 
Top Bottom