விழியோரம் ஒரு வெஞ்சினம் - 33 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விழியோரம் ஒரு வெஞ்சினம் - 33

New updates

LATEST

தூயவள்

Active member
Joined
Jun 21, 2026
Messages
122
Reaction score
69
Points
28
விழியோரம் ஒரு வெஞ்சினம்

அத்தியாயம் - 33










ராகவ் "நான் பேராசை பிடிச்சவன் தான், ஆனா பொய் சொல்ல மாட்டேன்!" என்று சத்தியம் செய்து முடித்த அந்த நொடிக் கணத்தில், போர்டு மீட்டிங் ஹாலில் ஒரு சுடுகாட்டு அமைதி நிலவியது.


ஆர்யன் தன் கைகளைத் தளர்த்தி, மெதுவாகத் திரும்பி அங்கே திகைத்து போய் நின்றிருந்த ஷேர் ஹோல்டர்களையும், போர்டு மெம்பர்களையும் பார்த்தான். அவனது கண்கள் கோபத்திலும் ஆச்சரியத்திலும் அகல விரிந்தன.


"நீங்க நடக்கிற எல்லாரையும் பார்த்துட்டு தானே இருந்தீங்க சார்?" என்று ஆர்யன் உரத்த குரலில் கத்தினான். "ஏன் ஒருத்தர் கூட போலீஸ் வந்தப்போ சாட்சி சொல்லல? ஏன் எல்லாரும் வாயை மூடிட்டு பொம்மை மாதிரி நின்னீங்க?"


அங்கிருந்த மூத்த போர்டு மெம்பர் ஒருவர், மிகவும் சாதாரணமான தொனியில், "நாங்க என்ன சொல்லணும் மிஸ்டர் ஆர்யன்?" என்று திருப்பி கேட்டார்.


ஆர்யனுக்குள் ரத்தம் கொதித்தது. "என்ன சொல்லணுமா? இந்த ராகவ் அவர் என்னென்ன அயோக்கியத்தனம் பண்ணிருக்காரு, எப்படி போலி டாக்குமெண்ட்ஸ் வச்சு ஏமாத்துனாருனு அவர் வாயாலேயே இங்க எல்லார் முன்னாடியும் சொன்னாரே! அதெல்லாம் ஏன் நீங்க போலீஸ் வந்தப்போ சொல்லல?" என்று ஆவேசமாகக் கேட்டான்.


அதற்கு அந்த போர்டு மெம்பர் அலட்சியமாகச் சிரித்துவிட்டு, "என்னது? ராகவ் சார் தப்பு பண்ணாரா? என்ன சொல்றீங்க ஆர்யன் சார்? அவரு இந்த கம்பெனிக்காக எத்தனை வருஷமா எவ்வளவு விசுவாசமா உழைச்சிருக்காரு! அப்படிப்பட்டவரை போய் எந்த ஆதாரமும் இல்லாம இப்படி அபாண்டமாக குறை சொல்றீங்களே?" என்றார்.


அந்த வார்த்தைகளைக் கேட்டதும் தாரா, சந்திரசேகர், மணி ஆகிய மூவரும் பேரதிர்ச்சியில் உறைந்து போயினர். தாரா தன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு பின்வாங்கினாள். ஆனால், ஆர்யனுக்கு அடுத்த கணமே உண்மை சுடச்சுடப் புரிந்தது. ராகவ் தனக்குச் சாதகமாகப் போர்டு மெம்பர்கள் அத்தனை பேரையும் ஏற்கனவே பணத்தாலும், மிரட்டலாலும் முழுமையாக விலைக்கு வாங்கிவிட்டான்! இனி இவர்களிடம் நியாயம் பேசுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்தான்.


ஆர்யன் மீண்டும் தன் முழு அசுரத்தனமான கோபத்தோடு ராகவ் பக்கம் திரும்பினான். அவனது கண்களில் இருந்து நெருப்புப் பொறிகள் பறந்தன.
"ராகவ்... என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு! ஒழுங்கா நீ பண்ண அத்தனை தப்பையும் போலீஸ் முன்னாடி ஒத்துக்கோ... அதுதான் உனக்கு நல்லது!" என்று பற்களை நறநறவென்று கடித்தபடி மிரட்டினான்.


ஆனால் ராகவ், ஆர்யன் முன்னாடி பயந்த மாதிரி நடித்து, நக்கலாகச் சிரிக்கத் தொடங்கினார்.
"சரிடா தம்பி... நான் தான் பண்ணேன்! சந்திரசேகரை ஏமாத்துனது, உங்க அப்பன் ராஜசேகரை ஏமாத்தி சொத்தெல்லாம் பிடிங்கி தற்கொலைக்கு தூண்டுனது, அப்புறம் தாராவோட அம்மா கார் பிரேக்கை கட் பண்ணி கொன்னதுனு எல்லாமே இந்த ராகவ் தான் பண்ணேன்! போதுமா?" என்று சொல்லிவிட்டு, களுக்கென்று சிரித்தார்.


தொடர்ந்து பேசிய ராகவ், "ஆனா தம்பி... நீ கேக்குற அந்த ரெண்டு தப்ப மட்டும் நான் பண்ணவே இல்ல! அந்த ஃபைலை நான் திருடல, சிசிடிவி கேமராவையும் நான் ஹேக் பண்ணல! இத நான் மறுபடியும் சொல்றேன்!" என்றார்.


பொறுமையிழந்த ஆர்யன் ஒரே பாய்ச்சலில் ராகவ்வின் சட்டையைப் பிடித்து, "டேய்! அத நீ பண்ணலைனா அப்புறம் வேற யாருடா பண்ணது?" என்று ஆவேசமாகக் கத்தினான்.
ராகவ் மெதுவாக ஆர்யனின் கரங்களைத் தட்டிவிட்டு, ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார்.


"இதெல்லாம் வேற யாரும் பண்ணல... என் மகன் தான் பண்ணான்!"


"என்னது? ராகவ் சாருக்கு பையன் இருக்கானா? நிஜமாவா?" என்று அங்கிருந்த போர்டு மெம்பர்கள் தங்களுக்குள் ஆச்சரியமாக கிசுகிசுக்கத் தொடங்கினர். ஆர்யனுக்கும் தாராவிற்கும் இது எதிர்பாராத மாபெரும் அதிர்ச்சியாக இருந்தது. ராகவுக்குத் திருமணம் ஆகவில்லை, வாரிசு யாரும் இல்லை என்றுதான் இதுவரை அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஆர்யனின் பக்கத்தில் நின்றிருந்த மணி லேசாகத் தலை சொறிந்து கொண்டு, "என்ன அண்ணே இந்த ஆளு திடீர்னு இப்படி சொல்றான்? போற போக்கப் பார்த்தா என்னைய கைகாட்டி அவரோட பையன்னு சொன்னாலும் சொல்லிடுவான் போலிருக்கே!" என்று நக்கலாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே...


ராகவ் தன் இரு கரங்களையும் விரித்து, மணியைப் பார்த்துப் பாசத்தோடு அழைத்தார்.
"மை டியர் சன்... மனீஷ்! கம் டியர்!"
அங்கே நின்றிருந்த அத்தனை பேரின் இதயத் துடிப்பும் ஒரு நொடி நின்றுவிட்டது. தாரா அதிர்ச்சியிலிருந்து மீண்டு, ராகவ்வைப் பார்த்து, "என்ன புது நாடகம் ஸ்டார்ட் பண்றீயா ராகவ்?" என்று கோபமாகக் கேட்டாள்.


ஆனால் மணி, தன் முகத்தில் இருந்த அந்த அப்பாவித்தனமான டிரைவர் முகமூடியைக் கழற்றிவிட்டு, கெத்தான புன்னகையுடன் தாராவைப் பார்த்தான். "மேடம்... அவரு தான் ஆல்ரெடி சொன்னாருல்ல, அவரு பொய் சொல்ல மாட்டாருனு! அப்போ இது பொய்யா இருக்காதே!" என்று சொல்லி, அதிர்ச்சியில் உறைந்து நின்ற ஆர்யனைத் தன் கையால் அலட்சியமாக விலக்கித் தள்ளினான்.
ஆர்யனைத் தாண்டி கெத்தாக நடந்து சென்று, ராகவ்வின் அருகில் நின்று, "டாடி!" என்று சொல்லி அவரை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டான்.


சந்திரசேகருக்கு இதைப் பார்த்ததும் நெஞ்சு வலி வராத குறைதான். கண்களில் கண்ணீர் வழிய, "இங்க என்ன நடக்குது? நான் பாக்குறது உண்மைதானா? ராகவ்... உனக்கு ஒரு பையன் இருக்கானா? அதுவும் இந்த மணி தான் உன்னோட பையனா? ஐ கான்ட் பிலீவ் திஸ்!" என்று குரல் நடுங்கப் பேசினார்.


மணி தன் கோட் சூட்டை சரிசெய்து கொள்வது போல நிமிர்ந்து நின்று, "அட ஆமா சந்திரசேகர் அங்கிள்! நான் இந்த ராகவ்வோட ஒரே செல்லப் பையன்... மனீஷ் ராகவ்!" என்று கெத்தாக சொல்லி தன் உண்மையான ரூபத்தைக் காட்டினான்.


அங்கே, துரோகத்தின் புதிய பரிணாமம் உருவெடுத்திருந்தது!


"அப்போ... இதுவரைக்கும் இங்க நடந்த அத்தனை கூத்துங்களுக்கும் நீதான் காரணமா மணி?" ஆர்யனின் தொண்டையிலிருந்து வார்த்தைகள் உறைந்து போய் வெளிவந்தன.


அவனது அசுர பிம்பமே அந்த நொடி நொறுங்கிப்போய் நின்றது.
"யெஸ், மிஸ்டர் ஆர்யன்! நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான். இதுக்கெல்லாம் காரணம் இந்த மணி... இல்லை இல்லை, மனீஷ் ராகவ் தான்!" மணி தன் முகத்தில் அசல் வில்லனின் கொடூரமான புன்னகையை ஏந்திக் கொண்டு பேசத் தொடங்கினான்.


"உங்ககூடவே ரொம்ப இன்னொசென்ட்டா பழகி, உங்களோட ஒவ்வொரு மூவ்மென்ட்டையும், பிளானையும் தெள்ளத் தெளிவா தெரிஞ்சுகிட்டேன். அப்புறம் என்ன? எனக்கு ஏத்த மாதிரி நானும் என் டாடியும் சேர்ந்து அடுத்தடுத்த காய்களை நகர்த்தினோம். ஆனா ஒன்னு சொல்லியாகணும் மிஸ்டர் ஆர்யன்... நீங்க பிளான்லாம் செம்மையா போடுறீங்க, ஆனா அதை யாருகிட்ட பேசணும்னு தெரியாம தப்பு பண்ணிட்டீங்க! அப்பாவி டிரைவரா இருந்தாலும், நீங்க பிளான் பண்ணும்போது என்னை பக்கத்துல வச்சுகிட்டேவா பண்ணுவீங்க? அதை நினைச்சா எனக்கு உங்க மூணு பேரையும் பார்த்து ரொம்ப பாவமா இருக்கு!"


மணியின் இந்த வஞ்சகமான பேச்சு ஆர்யன், தாரா மற்றும் சந்திரசேகரை அடியோடு உலுக்கிப் போட்டது. அவனது கள்ளமில்லாத சிரிப்புக்கு பின்னால் இவ்வளவு பெரிய நரித் தனம் ஒளிந்திருந்ததை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.


"உங்க மூணு பேர் மனசுலயும் இப்போ ஆயிரம் கேள்விகள் ஓடிட்டு இருக்கும். அதையெல்லாம் நானே கிளியர் பண்றேன்" என்று மணி ஹாலில் கெத்தாக உலா வந்தான். "இவ்வளவு பெரிய கம்பெனிக்குள்ள இவ்வளவு தத்தியா இருக்குற ஒருத்தன் எப்படி உள்ள வந்திருப்பான்? உங்களுக்கு ஒரு தடவை கூடவா சந்தேகம் வரல? வேற யாரும் இல்ல... என் டாடிதான் காரணம். 'என் கிளைண்ட்டோட பையன் ரொம்ப ஷார்ப், பாவம் அவனுக்கு ஒரு வேலை போடுங்க'னு சந்திரசேகர் அங்கிள்கிட்ட சொல்லி, எந்த ஒரு இன்டர்வியூவும் இல்லாம ரொம்ப ஈஸியா கம்பெனிக்குள்ள நுழைஞ்சிட்டேன். அப்புறம் என்ன... அப்பப்போ சின்ன சின்ன இல்லீகல் வேலைகள் பண்றது, காலியான பேப்பர்ல சந்திரசேகர் அங்கிள்கிட்ட சைன் வாங்குறதுன்னு எனக்குக் கொடுத்த வேலையை கச்சிதமா முடிச்சேன்!"


சந்திரசேகரைப் பார்த்து நக்கலாகச் சிரித்த மணி, "ஆனா அங்கிள்... நீங்க இந்தியாவுல வச்சிருக்க மொத்தச் சொத்துல 70% உங்க பொண்ணு தாரா பேர்ல தான் எழுதி வச்சிருக்கீங்கன்ற விஷயம் எனக்கு ரொம்ப லேட்டாதான் தெரிய வந்தது! அதனால தான், லண்டன்லேயே செட்டில் ஆகலாம்னு பிளான் பண்ணிட்டு இருந்த தாராவை, உங்க பிசினஸ் பார்ட்னர்ஸ் மூலமா பேசி கட்டாயப்படுத்தி இந்தியாவுக்கு வர வச்சேன். சரி, இனி நம்ம வேலை முடிஞ்சுதுனு நாங்க நினைச்சப்போதான் இன்னொரு ட்விஸ்ட் வச்சீங்க. 'தாராவுக்கு கல்யாணம் ஆனாதான் அந்தச் சொத்து முழுசா அவ கைக்கு மாறும்'னு என் டாடிக்கிட்ட சொன்னீங்க."


அவன் ஆர்யன் பக்கம் திரும்பித் தன் கூர்மையான பார்வையை வீசினான். "அதே டைம்லதான் இந்த ஆர்யன் உங்களை பழிவாங்கணும்னு ஆவேசமா வந்தான். இவனை நாம சூப்பரா யூஸ் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். ஆனா கல்யாண மேடை வரைக்கும் வந்துட்டு, கல்யாணத்தை நிறுத்தி உங்களை அவமானப்படுத்த போறதா இவன் பிளான் பண்ணான். அப்படி நடந்தா என் பிளான் மொத்தமும் வேஸ்ட்டா போயிருமே! அதனால தான், ஆர்யனை லாவகமா தூண்டிவிட்டு, தாராவை அவன் தாலி கட்ட வைச்சேன். ஏன்னா, தாராவுக்கு கல்யாணம் நடந்தாதான் சொத்து கைக்கு வரும்!"


அவன் சொல்லச் சொல்ல அங்கே நின்றிருந்த மூவருக்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை நாளாகத் தங்களை ஒரு பொம்மையைப் போல ஆட்டிப்படைத்தவன் இந்த டிரைவர் மணிதான் என்பதும், அவன் விரித்த வலையில்தான் இத்தனை நாளாகச் சிக்கிச் சீரழிந்தோம் என்பதும் அவர்களுக்கு அப்பட்டமாகப் புரிந்தது.
தாரா தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், "டேய் மனீஷ்!" என்று கத்தினாள்.


மணி தன் கையை உயர்த்திக் தடுத்தான். "இருங்க மேடம்... அவசரப்படாதீங்க! இப்போ உங்க மனசுல ஓடுற அடுத்த கேள்வி எனக்குப் புரியுது. 'இவன் எல்லாமே அவனுக்காகத்தான் பண்ணான்னா... அப்புறம் எதுக்காக அவனோட டாடி பண்ண தப்பெல்லாம் இருக்குற ஃபைலை நம்மகிட்ட காட்டி கொடுத்தான்?' அதானே உங்க டவுட்டு? அதுக்கும் ரீசனை நானே சொல்றேன்!"


மணி ராகவ்வின் தோளில் கைபோட்டு நின்றுகொண்டு, அந்தப் பெரிய ரகசியத்தை உடைக்கத் தயாரானான்!

என்னவாக இருக்கும்???
 
Top Bottom