- Joined
- May 4, 2024
- Messages
- 5,038
- Reaction score
- 2,464
- Points
- 113

அத்தியாயம் : 1
இருள் விலகாத அதிகாலை பனி படர்ந்த வேளையில், பக்தி பாடல்கள் ஆலயங்களில் எங்கும் ஒலிபரப்பப் பட்டிருக்க, சபரிமலைக்கு செல்ல விரதத்தை துவங்கிய பக்தர்கள் கூட்டம், மாலை அணிவதற்காக ஐயப்பன் கோவில்களில் அலை கடலுக்குப் போட்டியாகத் திரண்டு வந்திருந்தனர்.
அன்றைய தினம் கார்த்திகை ஒன்றாம் நாள் ஆதலால், அதிகாலைக் குளிரையும் பொருட்படுத்தாமல் நீராடி முடித்து, நெற்றியில் சந்தனம் விபூதி சகிதம், சுவாமி தரிசனத்தை முடித்து, மாலை போடக் கோவில் அர்ச்சகரை எதிர்பார்த்து காத்து நின்றனர்.
கோவில் பூஜையை முடித்த அர்ச்சகர், ஒவ்வொருவரின் கழுத்திலும் துளசிமணி மாலையை அணிவித்து விட, சரண கோஷங்களால் அந்தப் பகுதியே நிறைந்தது.
மகேஷ், தன் அப்பாவுடன் மாலை அணிந்து முடித்ததும், அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தான்.
அதேநேரம் 4.30 மணிக்கு எழுந்து வாசல் பெருக்கி, சாணம் தெளித்து கோலமிட்டு குளித்துத் தயாராகி, மகளை எழுப்பிட வந்த அன்னையவள், தூங்கும் அவளது தோற்றத்தைக் கண்டு சில கணங்கள் மெய் மறந்து போனார்.
பின்னர், "அம்மா ஜோதி! அப்பாவும் அண்ணாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல மாலை போட்டுட்டு கிளம்பி வந்துடு வாங்க. நீ இன்னும் எழும்பாமல் இருக்கிறியே! சீக்கிரம் எழுந்து வாமா!" என்றார் அவளது அம்மா சுசித்ரா.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஜோதி, செவியைத் தேய்த்து விட்டு திரும்பிப் படுக்க, மறுபடியும் அவளை எழுப்ப முயன்றார்.
அதில், உறக்கம் கலைந்த ஜோதி, "இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு எழும்புறேன்மா, இப்போ தான் நல்லா தூக்கம் வருது, நைட் படுக்கும் போதே லேட் ஆயிடுச்சு பிளீஸ்மா... என்னோட செல்ல அம்மா இல்ல!" என்று விழிகளைப் பிரிக்காமலே கொஞ்சினாள்.
"இப்படி தினமும் ஐஸ் வச்சு என்னை ஏமாத்துவதே உனக்கு வேலையாப் போச்சு!"
அவர் சலிப்பாகக் கூறியதும், தாயாரின் பேச்சில் அரை குறை தூக்கத்தை தொலைத்து விட்டு, "சுசிம்மா! பொண்ணுங்க தன்னோட பிறந்த வீட்டுல தான் நிம்மதியாக நிறைய நேரம் தூங்க முடியும். திருமணமாகி புருஷன் வீட்டுக்குப் போன பிறகு, கடமைகள் அவர்களைக் கை நீட்டி அழைக்கும். ஸோ... ஒரு பத்து நிமிஷம் குப்புறப் படுத்துக்கிறேன். டோண்ட் டிஸ்டர்ப் மீ!" என்று சொல்லிப் போர்வையை தலைவரை இழுத்துப் போர்த்தி தூக்கத்தை தொடர்ந்தாள், அவரோ தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து அகன்றார்.
அம்மா போய் விட்டாரா? என்பதை மெதுவாகப் போர்வையை விலக்கிப் பார்த்து விட்டு, 'ஸ்ஸப்பா... ஒரு குட்டி தூக்கத்தை போடுறதுக்கு பத்து நிமிஷம் பேச வேண்டியதா இருக்கு. பாவம் லிங்கம்!' என்று முனங்கியவள், தூக்கம் பறி போன வெறுப்பில் சும்மாவே படுத்திருந்தாள்.
மேலும் பத்து நிமிடங்கள் கடந்ததும், "இப்போதாவது எழும்புறியா? இல்லை, தண்ணீரைக் கொண்டு வந்து ஊத்தட்டுமா?" என்று கேட்கும்போது வெளிப்பகுதியில் கேட்ட காரின் ஓசையில் மிரண்டவர், "அச்சச்சோ! அவங்க ரெண்டு பேரும் வந்துட்டாங்க போல் தெரியுதே? உன்னால நானும் சேர்ந்து மாட்டினேன். சீக்கிரமாக எழுந்து தயாராகி வா! நான் அவர்களைப் போயி பார்க்கிறேன்" என்று புலம்பிக் கொண்டே சென்றார்.
காரை நிறுத்திய அப்பாவும் மகனும் பேசிக்கொண்டே கேட்டைத் திறந்து, அங்கே வாளியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் தங்களுடைய பாதங்களைக் கழுவி சுத்தம் செய்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.
மகள் அறையில் இருந்து வெளியே வந்த சுசித்ரா, "வாங்க! வாங்க! உட்காருங்க!" என்று புன்னகை முகமாக அழைத்து, அருந்த நீரையும் கொடுத்து உபசரித்தார்.
நாற்காலியில் அமர்ந்த இருவரின் விழிகளும் ஜோதியைக் காணாமல் தேடிக் கொண்டு, மறுபடியும் தங்களைப் பார்த்துச் சிரித்தது. அவள் இப்போது என்ன செய்து கொண்டு இருப்பாள் என்பதை அறியாதவர்கள் அல்லவே அவர்கள்!
தோன்றிய சிரிப்பை உதடுகளுக்குள் மறைத்து மனைவியை நோக்கி, "பாப்பா என்ன பண்றா? இன்னும் காணுமே!" என்று வினா எழுப்பினார் தர்மலிங்கம்.
சுசித்ரா முழித்துக் கொண்டே, "அவ, அவ அப்பவே தூங்கி முழிச்சுட்டா, இன்னும் கொஞ்ச நேரத்துல தயாராகி வந்திருவா. நீங்க பூஜையை முடிச்சிடுறீங்களா?" என்று மகளை விட்டுக் கொடுக்காமல் சொன்னார்.
அதைப் புரிந்து கொண்டு, "ம்ம்... ஆகட்டும். பூஜையறையில் எல்லாம் தயாராகத் தானே இருக்கு" என்று கேட்டார்.
"நீங்க வச்சிட்டு போனது போலவே இருக்கு"
"சரி, நான் இப்போ வரேன். பாப்பாவை தயாராகி வரச் சொல்லு!" என்றவர், பக்கத்து அறைக்குச் சென்றார்.
"இருமுடி தாங்கி ஒரு மனதாகி
குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும்
எமனையும் வெல்லும்
உன் திருவடியை காணவந்தோம்..."
கி.வீரமணியின் கணீர் என்ற குரலில் கேட்கக் கேட்க திகட்டாத கான மழையை கேட்டுக் கொண்டே குளிக்கச் சென்றாள் ஜோதி.
'பரவாயில்லை! அம்மா திட்டினாலும் காலையிலே என்னை மாட்டி விடாம காப்பாத்திட்டாங்க, நல்ல வேளையாகத் தப்பிச்சுட்டோம். இந்தக் கார்த்திகை குளிரில் எப்படி குளிப்பதுன்னு தெரியலையே? பேசாமல் வீட்டுக்கு முன்னால் போகிற ஆத்து தண்ணியில் சாடிட வேண்டியது தான்!' என்று மெதுவாகப் பேசிக்கொண்டே விரைவாகப் பல் துலக்கி, ஆற்று நீரில் குதித்தாள்.
அடுத்த நிமிடம், "ஐயையோ!!" என்று கேட்ட ஓசையிலும், நீரின் தழும்பலிலும் எழுந்து நோக்க, அங்கே அவளை உறுத்து விழித்துக் கொண்டு நின்றான் அவளது அத்தை மகன் செல்வம்!
"ஏன்யா இப்படி கத்துறே? யாராவது கேட்டால் என்ன நினைப்பாங்க? பொண்ணுங்க தான் இப்படி கத்தணும், இங்கே எல்லாம் வித்தியாசமாக இருக்கு!" என்று முணு முணுத்தாள்.
ஆனால் அவனோ, "எ... எ... என்ன நினைப்பாங்ககக? நாங்க ஏன் கத்தக் கூடாது? எங்களுக்கும் வெட்கம் மானம்... இருக்குமா!" என்று கேலி பேசினான்.
ஜோதி "போய்யா கருவாயா! உங்கிட்டே போயி பேச வந்தேனே! என் புத்தியை செருப்பால அடிச்சிக்கணும்!" என்று தலையில் அடித்தாள்.
அவளது பேச்சை ரசித்தவன், "அதெல்லாம் அப்புறமா மெதுவா அடிச்சிக்கலாம் கண்ணு! அத்தானை பார்க்கத் தானே ஆத்துக்கு வந்தே? பிறகு ஏண்டா இப்படி கோவிச்சுக்கிறே?" என்று செல்லம் கொஞ்சினான்.
"ஒருவேளை உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பழக்கம் உனக்கு உண்டுமா? கவலைப்படாதே! மச்சான் உன்னைக் கட்டிக்கிட்டு வந்து நல்லா பார்த்துக்கிறேன்" என்று சொல்லி, அவளது கோபத்தின் அளவை அதிகரித்தான்.
ஏற்கனவே, தாமதமாகி விட்ட எரிச்சலில் இருந்தவளை, அவனது உரிமையான கொஞ்சல் பேச்சு உசுப்பேற்றிவிட, "என்னைய்யா சொன்னே? கட்டிக்கிட்டு வந்து பார்த்துக்குவியா? உடம்புக்கு எப்படி இருக்கு!" என்று கிண்டலாகக் கேட்டாள்.
"உடம்புக்கு என்னடி கண்ணு அது நல்லா தான் இருக்கு! நீயும் வந்து கொஞ்சம் கவனிச்சா, இன்னும் மப்பும் மந்தாரமுமாகக் கிளுகிளுப்பாக இருக்கும்!" என்று கிறக்கமாகச் சொன்னான்.
"ஓ! கருவாப் பயலுக்கு அப்படியொரு ஆசை கூட இருக்குதா? பேஸா கவனிச்சுடலாம், அதை விட வேறு என்ன வேலை இருக்கு?
என் சின்ன மச்சான் சிவத்த மச்சான்
ஊருக்குள்ள உங்களை ஏசுராக
தினம் ஒண்ணு ரெண்டா சொல்லிப் பேசுறாக
நம்ம ஊருக்குள்ள உங்களை ஏசுராக
தினம் ஒண்ணு ரெண்டா சொல்லிப் பேசுறாக ..."
என்று கிண்டலாகப் பாடினாள். அவளது கிண்டலை உணராமல், மச்சான் என்ற அழைப்பில் கிறங்கிப் போய் நின்றான் செல்வம்.
"ஏம்புள்ளை! மச்சான் மேல இம்புட்டு ஆசையை வச்சிக்கிட்டு பார்க்கிற நேரம் எல்லாம் காயுறாவ!" என்று இழுத்தான்.
'காயுறாவளா? இதென்ன கருவாடா? அதுசரி, பெயருக்கு ஏத்த மாதிரி தானே நினைப்பும் இருக்கும்' என்று முனகியவள், "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை மச்சான். சும்மாமா தான்!" என்று தலையில் அடித்துக் கொண்டு, ஆற்று நீரில் இருந்து வெளியேறப் போகவும், அவளது கையைப் பிடித்தான் செல்வம்.
"எங்க பிள்ளை இத்தனை சீக்கிரமா போறே? கொஞ்ச நேரம் மச்சானோடு பேசிட்டு போவது தானே!" என்று இழித்தான்.
'பேசத் தானே செய்யணும்! தாரளமா பேசிட்டா போச்சு' என்று நினைத்து, "இன்னைக்கு சாயந்திரம் நாகர்கோவில் அருண் ஐஸ்கிரீம் பார்லருக்கு வா. நீ போதும் போதும்னு சொல்லும் அளவுக்குப் பேசலாம். இப்போ போகட்டுமா? அப்பாவும், அண்ணாவும் மாலை போட்டுட்டு வந்துருக்காங்க. தேடுவாங்க" என்று பாவம் போல் முகத்தை வைத்துச் சொன்னாள்.
அவனும் உண்மை என்று நம்பி, "கண்டிப்பா வரேன் பிள்ளை. நீ கூப்பிட்டு நான் வர மறுப்பேனா?" என்றான்.
'வாங்க மச்சான் வாங்க, வந்து ஐஸ்கிரீம் பார்லர் பில்லை கட்டிட்டு போங்க' என்று மனதிற்குள் பாடிக் கொண்டே, "பாய் மச்சான்!" என்றாள் ஜோதி.
அவளது பேச்சு, நடவடிக்கைகளைக் கண்டவன், "ஜோதி மனசுல நாமதான் இருக்கிறோம்னு தெரியாம, இத்தனை நாளும் இருந்துட்டோமே! இனிமேலும் சும்மா இருக்க கூடாது. உடனே, அம்மாவிடம் சொல்லிக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட வேண்டியது தான்" என்று கனவில் மூழ்கினான்.
பாவம், அவள் எதற்காக அப்படிச் சொல்லி விட்டுச் சென்றாள் என்று கூடத் தெரியாமல்!
சாலையில் ஜாக்கிங் முடித்து விட்டு வீட்டிற்கு வந்து, முன் பகுதியில் அமர்ந்து ஜாக்கிங் ஷூ, சாக்ஸை கழற்றி ஒதுக்கி வைத்து, முகத்தில் வடிந்த வியர்வைகளை பூந்துவாலையால் ஒற்றியெடுத்து, பாட்டில் நீரை வாயில் சரித்தான்
இரகு ராகவேந்தர்!
காலை மடித்து அமர்ந்து, அங்கிருந்த செய்தித்தாளைப் புரட்டி அன்றைய தலைப்புச் செய்திகளை பார்வையிட்டு கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த அவனது அப்பா, "ரகு! ஜாக்கிங் எல்லாம் முடிஞ்சுதா?" என்று கேட்டார்.
"ஆமாம்பா, இனி கொஞ்ச நேரம் யோகா மட்டும் தான் பாக்கி இருக்கு, அதை நம்ம வீட்டு மாடியில் வச்சு முடிச்சிடுவேன்!" என்று சிரித்த முகமாகச் சொன்னான்.
"வேறு ஏதாவது முக்கியமான வேலை இன்னைக்கு இருக்கா? நீ எத்தனை நாள் விடுமுறை எடுத்திருக்கே!"
"என்னப்பா திடீர்னு இப்படி கேட்குறீங்க? என்ன விசயம்? நான்தான் அப்பவே சொல்லிட்டனே! நீங்க தான் அதிக விடுமுறை எடுக்காதேனு சொன்னீங்க, ஏன் எங்கேயும் போகணுமா?" என்று யோசனையுடன் கேட்டான்.
அவர் தலை அசைத்துக் கொண்டே, மகளின் திருமண ஏற்பாடுகளைப் பற்றி சிறிது நேரம் உரையாடி விட்டு, திருமண பத்திரிக்கை கொடுப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
"ரகு! என் நண்பன் தர்மலிங்கத்தை உனக்கு ஞாபகம் இருக்குதா? நானும் அவனும் பல வருடங்களுக்கு முன்பு ஒரே காவல் நிலையத்தில் தான் பணி புரிந்து வந்தோம். அதன் பிறகு இடமாற்றல் வந்ததால், நம்ம குடும்பம் சென்னைக்குச் சென்று பின், குழித்துரைக்கு வந்து செட்டில் ஆனது. ஆனால், அவன் சொந்த ஊரிலேயே வீடு கட்டி அங்கேயே குடும்பத்தையும் இருக்க வச்சிட்டான். இரண்டு மகனும் ஒரு மகளும் இருக்காங்க. அவனுக்கு அழைப்பிதழ் கொடுக்கணும். உன்னால் இன்னைக்கு அவங்க வீட்டுக்குப் போக முடியுமா?" என்று கேட்டார்.
அவன் மறுப்பாகத் தலையசைத்து, "இன்னைக்கு முடியாதுப்பா. நான் வேணும்னா நாளைக்கு காலையில் போயிட்டு வரேன்" என்றான்.
"சரிப்பா, உனக்கு நேரம் கிடைக்கிறப்போ போயிட்டு வா. ஆனால், காலையிலே போனால் தான் வீட்டுல உள்ள எல்லாரையும் பார்த்துப் பேச முடியும். தாமதம் ஆனால், தர்மா வேலைக்கும் அவனோட பசங்க படிப்பு, வேலைன்னு போயிடுவாங்க" என்று சொல்லி விட்டு,
"அவங்க வீட்டு முகவரி, தொலைப்பேசி எண் எல்லாமே மேசையில் இருக்கும் டைரியில் எழுதி வச்சிருக்கேன். அதைப் பார்த்துட்டு விலாசத்தையும் கவனமா குறிச்சிக்கோ. அவன் உனக்கு மாமா! வேறு எதுவும் சொல்லிக் கூப்பிட்டுடாதே! வருத்தப்படுவான்" என்று கூறி அங்கிருந்து அகன்றார்.
அவன் புன்சிரிப்புடன் தனது அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றித் தயாராகி கீழே வந்தான்.
உணவருந்த சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தவன், அம்மாவிடம் காலையில் அப்பா பேசிய விசயமாகக் கேட்டான்.
"அப்பாவுக்கு என்னம்மா இந்த நண்பர் மீது மட்டும் அத்தனை பாசம்? அவங்க யாரையும் எனக்கு ஞாபகம் இல்லையே! உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.
"உனக்கு அவர்களை எல்லாம் மறந்து போயிடுச்சுன்னு தப்பி தவறி சொல்லிடாதே! அதிலும், ஜோதி அறிஞ்சா அவ்வளவு தான்" என்று மர்மமாக உரைத்தார்.
"ஏன்? அது யாரு ஜோதி?"
"யாரா? அதுசரி, நீதானே அவளைப் பிறந்த முதல் எங்க யாரு கிட்டேயும் தர மாட்டேன்னு சொல்லி, தூக்கி வச்சு கொஞ்சிட்டு இருப்பே! இப்ப எல்லாமே மறந்து போச்சா?"
அவன் புரியாமல் பார்த்ததும், "அவள் பெரிய பெண்ணாகி இருந்த நேரம், அப்பாவும் நானும் போயிருந்தோம். அப்பவே எவ்வளவு அழகு தெரியுமா? இப்ப இளவரசி மாதிரி இருப்பா. அவளைக் கட்டிக்க போகிறவன் கொடுத்து வச்சவன்" என்று பெருமூச்சு விட்டார்.
அவன் சலிப்புடன், "அம்மா! சரியா சொல்லுங்க, அந்தப் பேரழகி யாருன்னு நானும் பார்த்துட்டு வந்து சொல்றேன்" என்றான்.
அவர் சத்தமாகச் சிரித்துக் கொண்டே, "கிட்டத்தட்ட பதினைந்து வருஷம் இருக்கும் எல்லாரையும் பார்த்துப் பேசிப் பழகி, நாம இங்கே வந்த பிறகு அவர்களுடனான தொடர்பே விட்டுப் போச்சு, இடையில் அவளோட பங்சனுக்கு போனது தான். பிறகும், அஞ்சு வருஷம் ஆகப் போகுது அவங்க எல்லாரையும் பார்த்து!" என்று வருத்தமாகச் சொன்னார்.
"என்னம்மா எதுக்கு இத்தனை சோகம்? நம்ம வீட்டுல இருந்து ரெண்டு மணி நேர பயணம் கூட ஆகாதே அங்குப் போக? இதுக்குப் போயி இத்தனை வருத்தமா?" என்று கேட்க,
"பெண்கள் திருமணத்துக்கு முன்பு வரை பெற்றோர், அண்ணன், தங்கை, அக்கா, தம்பி, தாத்தா, பாட்டி, சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பாங்க. கல்யாணம் ஆகிய பிறகு கணவன் அவரது சொந்த பந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்கிறாங்க. கணவன் எங்கு வேலை செய்தாலும் கூடவே அலைந்து திரிவாங்க. அப்படி போகும் நேரத்தில் தனிமைத் துயரிலிருந்து காத்துக் கொள்ள இறைவனால் கொடுக்கப் பெற்ற மிகச் சிறந்த வரம் தான் அண்டை வீட்டார் நட்பு! எத்தனைப் பேரையோ பார்ப்போம், பேசுவோம், பழகுவோம். ஆனாலும், ஒரு சிலரிடம் மட்டுமே உருவாகும் ஆத்மார்த்தமான அன்பு, எத்தனை மாதங்கள் ஆனாலும், வருடங்கள் கழிந்தாலும், அழிக்கவோ மறக்கவோ முடியாது!
விழாக்களை இணைந்து கொண்டாடுவது, வீட்டு விஷேசங்களில் பங்கு கொள்வது, ஒருவருக்கு உடல் நலமில்லை என்றால், அடுத்தவர் பதறிப் போயி உள்ளன்போடு பார்த்துக்குறது, சினிமா, கோவில், பிக்னிக் என்று சேர்ந்து சுற்றி ஜாலியடிப்பது எல்லாம் எத்தனை சுகமானது தெரியுமா? அதை எல்லாம் உணர்ந்து அனுபவிக்க வேணும். சொன்னால் புரியாது!" என்று அந்த நாள் நினைவுகளில் சொன்னார்.
ரகு "நீங்க சொல்வதும் சரி தான்மா. ஆனால், எனக்குதான் ஒண்ணுமே சரியாக ஞாபகம் வரமாட்டேங்குது. நாளைக்கு காலையிலே அங்கே போய் எல்லாரையும் பார்த்துப் பேசிக் கட்டாயம் வரச் சொல்றேன். நீங்க வருத்தப்படாதீங்கமா!" என்று அம்மாவைக் கனிவுடன் பார்த்தான்.
"ரகு, விட்ட குறை தொட்ட குறை, முன் ஜென்ம தொடர்பு, பூர்வ ஜென்ம பந்தம் என்பது இதைத் தான். மகேஷ் உன் வயசு தான். நீங்க ரெண்டு பேரும் தான் சதா விளையாட்டு, வெளியே போவதுன்னு இருப்பீங்க. சுரேஷ் நீங்க போகும் இடமெல்லாம் வருவான். ஜோதி உன்னைப் பார்த்துட்டா, வேறு யார் கூப்பிட்டாலும் போகவே மாட்டாள். அவளுக்குச் சாப்பாடு கூட வேணாம் ரகு அத்தான் மட்டும் போதும்!" என்று பெருமிதமாக உரைத்தார்.
"ஏம்மா, அந்தப் பொண்ணுக்கு என்னை ஞாபகம் இருக்குமா? நீங்க யாருன்னு கேட்டுட மாட்டாளே! அவளுக்குக் கல்யாணத்துக்கு ஏதாவது பேசி இருக்கா தெரியுமா?"
அவனது அம்மா சிரிப்பை அடக்க முடியாமல் சிரமப்பட, "அடப் போங்கம்மா, நீங்க வேறு அவள் ஒரு பேரழகு பெட்டகம், எனக்காகவே பிறந்து வளர்ந்தவ, என்னைப் பார்த்துட்டா வேறு யாரிடமும் போக மாட்டான்னு சொல்லிட்டு இருக்கீங்க. ஒருவேளை பார்த்ததும் ஸ்லிப் ஆகிட்டா என்ன பண்றது? எதுக்கும் முன் ஜாக்கிரதையா இருக்க தான் கேட்கிறேன்" என்றான்.
அவர் மறுபடியும் சிரித்துக் கொண்டே இருக்க, "என் நிலைமை உங்களுக்குச் சிரிப்பா போச்சுதா?" என்று முறைத்தான்.
புகைப்படங்கள் அடங்கி இருக்கும் ஒரு ஆல்பத்தை எடுத்து வந்து அவன் முன்பு வைத்தவர், "உனக்கு நேரம் இருந்தா இதைப் பாரு. அப்படியே, இப்ப எப்படி இருப்பான்னு யூகம் பண்ணு. அவங்க அப்பா மகளுக்கு ஒரு நல்ல போலீஸ்கார மாப்பிள்ளையா தேடிக்கிட்டு இருக்கார். இந்தப் பேங் மேனேஜருக்கு வாய்ப்பிருக்குமா தெரியல? மறுத்தா என்ன செய்வே?" என்று கேட்டார்.
"அம்மா! முதல்ல அந்தப் பேரழகியை போயி பார்க்கிறேன். அவளைப் பிடிச்சிருந்தா, அவங்க அப்பா என்ன யார் வந்து சொன்னாலும் கேட்காம தூக்கிட்டு வந்துடுவேன்"
உதடுகள் அவரிடம் பதில் சொன்னாலும், கண்கள் கையிலிருந்த சிறு வயது புகைப்படத்தில் மூழ்கியது.
Last edited: