வா… இன்று நீயாக… - 27 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வா… இன்று நீயாக… - 27

New updates

LATEST
Joined
Aug 23, 2026
Messages
78
Reaction score
47
Points
18
அன்றிரவு, “அப்பா… ப்ளீஸ் என்னை அம்மாகிட்ட விட்டுடுங்க” என்றபடி கண்கள் குளம் கட்ட, ஹரியின் முன் வந்து நின்றான், விமல். அவனை வாரியணைத்து மடியில் வைத்துக்கொண்டவன்,
“விமல், உனக்கு இனிமேல் அப்பா மட்டும் தான். என்கூடத்தான் நீ இருக்கப்போற…” என்றான் இதமாக.
“அப்பா ப்ளீஸ், எனக்கு அம்மா வேணும்” என்று அவன் கலங்க, தனது தோளின் மீது சாய்த்துக்கொண்டு மாடிக்கு தூக்கிச்சென்று, பியானோவின் முன் அமர்ந்தான்.
“செல்லக்குட்டி நீ அழகா வாசிப்பல்ல!! அப்பாவுக்கு வாசிச்சு காட்டறியா?”
“வாசிச்சா அம்மா கிட்ட கூட்டிட்டு போறீங்களா?”
“அம்மா, இனிமேல் வரமாட்டா…”
குழந்தை அவனது கழுத்தினைக் கட்டிக்கொண்டு, தோளின் மீது சாய்ந்து குலுங்கிக்குலுங்கி அழுதான்.
அவனை மெல்ல தூக்கிக்கொண்டு அவன் கீழே வர, மங்கையர்க்கரசியின் அறையில், வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு விஷ்ணு அமைதியாக அவளது மடியில் படுத்திருந்தான். அவளது விழிகளும் ஈரம் கொண்டிருந்தன. பிள்ளைகள் படும் வேதனையை தாளவும் முடியாமல், அவளை மீண்டும் வீட்டிற்கு அழைத்திட மனமும் வராமல் உள்ளுக்குள் தவித்தான், ஹரி.

“என்னடி சொல்ற? புள்ளைய கொடுத்துட்டியா?”
சுகன்யா அழைத்திருக்க, அவளது அழைப்பினை பல நாட்கள் கழித்து ஏற்ற பல்லவி, நடந்தவற்றை பகிர்ந்துகொண்டாள். சுகன்யாவால், பல்லவி தனது குழந்தையை பிரிந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“வேற வழியில்லை சுகன்யா. ஆயிரம்தான் இருந்தாலும் அவரோட குழந்தை. இந்த ஊருக்கு வந்ததே அதுக்குத்தான?! புள்ளையை கொடுக்கணும்னு சொல்லும்போது சுலபமா இருந்தது. ஆனா விட்டு பிரியறது அவ்வளவு சுலபமில்லைனு புரிஞ்சுக்கிட்டேன், சுகன்யா. ரெண்டும் ‘அம்மா, அம்மா’னு என்னை சுத்தி சுத்தி வந்தது. இப்படியே கடைசி வரைக்கும் வேலைக்காரியா இருந்துடறேன்னு கூட கெஞ்சினேன். ஆனா அவரோட கோவம் நியாயம் தான! அவரோட வலி அவருக்கு… தப்பு நான் பண்ணிட்டு பெருந்தன்மையை அவர்கிட்ட எப்படி எதிர்பார்க்க முடியும்?”
“இப்போ என்ன பண்ணப்போற?”
“தெரியல. இனி குழந்தைங்கள பார்க்க கூடாதுன்னு சொல்லிட்டாரு. இங்க இருக்க இருக்க என்னையும் மீறி அவங்க முன்னாடி போய் நிக்க தோணுது. அவரை மேலும் மேலும் காயப்படுத்தறேன்னு மட்டும் எனக்கு புரியுது…”
“விடுடி. தைரியமா இரு. நான் ஏதாவது வழி பண்றேன்…”
தோழியிடம் பேசியவள், பிள்ளைகளைத் தவிர வேறு எந்த சிந்தனையுமில்லாமல் அந்த அறைக்குள்ளேயே முடங்கிப்போனாள். சுகன்யா அவ்வப்போது அவளை கைபேசியில் அழைத்து பேசிக்கொண்டே இருந்தாள்.

ஜன்னலின் வழியே தெருவினை வெறித்தபடி பல்லவி அமர்ந்திருக்க, ஹரியிடமிருந்து அவளது கைபேசிக்கு அழைப்பு வந்தது.
“ஹலோ சார்? எப்படி இருக்கீங்க? விமல், விஷ்ணு எப்படி இருக்காங்க? குழந்தைங்க நல்லா இருக்காங்களா? சாப்பிட்டாங்களா?” - அவனை பதில் கூற விடாமல் படபடவென கேள்விகளை அடுக்கினாள்.
“புள்ளைக்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடல்ல சேர்த்த்திருக்கோம்..”
“ஐயோ சார் என்ன ஆச்சு?” என்று அழத் தொடங்கினாள்.
“வாட்சப்ல ஹாஸ்பிடல் அட்ரஸ் அனுப்பியிருக்கேன். உடனே கிளம்பி வாங்க” என்றவன், அவளது பதிலுக்கு காத்திராமல், அழைப்பினை துண்டித்தான்.

நொடி தாமதிக்காது உடனே மருத்துவமனைக்கு விரைந்தாள். விமலை தன் மடி மீது அமர்த்திக்கொண்டு ஹரி அமர்ந்திருக்க, கலக்கத்தோடு அருகே மங்கையர்க்கரசி அமர்ந்திருந்தாள். பதறியடித்துக்கொண்டு அவர்களின் எதிரே பல்லவி வந்து நிற்க, “அம்மா” என்று அழைத்தபடி, ஹரியின் மடியிலிருந்து எம்பிக்குதித்து பல்லவியைக் கட்டிக்கொண்டான் விமல். அவனை வாரியணைத்து ஆசைதீர முத்தமிட்டவள்,
“செல்லம் பட்டு தங்கம், என்னடாமா ஆச்சு உங்களுக்கு?” என்றவள், அவனது தலை, முகம், கைகள், கால்களை தடவிப்பார்த்தாள்.
“என்ன தங்கம் ஆச்சு?” என்று மூச்சிரைக்க பதைபதைத்தாள்.
“பல்லவி” என்று அவளை அழைத்த மங்கையர்க்கரசி, “அங்க” என்று சுட்டிக்காட்ட, எதிரே ஓர் கண்ணாடி சாளரம் இருந்தது. அதன் வழியே பார்க்க, சாளரத்தின் பின்னே இருந்த அறையில் விஷ்ணுவிற்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது.
“குழந்தைக்கு என்னமா? சார் என்ன சார்?” என்று மீண்டும் பதறினாள்.
“ரெண்டு நாளா ஜுரம். இன்னைக்கு விடியற்காலைல தூக்கி தூக்கி போட ஆரம்பிச்சுடுச்சு. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடி வந்துட்டோம்” என்றபடி, கண்களைத் துடைத்துக்கொண்டாள், மங்கையர்க்கரசி.
“ஜுரமா?”
“உடம்புக்கு இல்லடி, மனசுக்கு. ‘அம்மா அம்மா’னு அனத்திக்கிட்டே இருந்தான். வெளிய சொல்ல தெரியாம அந்த புள்ளை மனசுக்குள்ளேயே வச்சு, இப்படி உடம்புக்கு வந்துடுச்சு. என் பேரனை காப்பாத்திக் கொடுடி” என்றாள் மங்கையர்க்கரசி பல்லவியின் கைகளைப்பற்றிக்கொண்டு, அழுதபடி.
அங்கு வந்த மருத்துவர்,
“நீங்க தான் விஷ்ணுவோட அம்மாவா?” என்றார்.
“ஆமா டாக்டர், அவனுக்கு என்ன?”
“உள்ள வாங்க” என்றுவிட்டு முன்னே செல்ல, பல்லவியை விட்டு பிரிய மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டு, விமலும் அவளுடன் உள்ளே சென்றான்.
“குழந்தை உங்களை ரொம்ப மிஸ் பண்றான். வேற ஒண்ணுமில்ல. பக்கத்துல இருந்து கவனிச்சுக்கோங்க. நர்ஸ் கூட இருப்பாங்க…”
சோர்ந்து கண்விழித்து பல்லவியை கண்ட விஷ்ணுவை தலை கோதியவள்,
“நானும் நர்ஸ் தான் டாக்டர், நானே குழந்தையை பார்த்துக்கறேன்” என்றாள்.
மருத்துவர் சில விவரங்களை கூறிவிட்டு செல்ல, விஷ்ணுவை மெல்ல எழுப்பி தனது மார்பின் மீது சாய்த்துக்கொண்டாள். அவனது நெற்றியில் முத்தமிட்டாள். விமலும் அவர்களின் அருகே அமர்ந்தபடி, பல்லவியின் கைகளை இறுக்கமாக கட்டிக்கொண்டான். அன்று போல் இன்றும், விஷ்ணுவின் உடல் மெல்ல நடுங்கியது. வெளியிலிருந்தபடியே இந்த காட்சியினை கண்டுகொண்டு நின்றிருந்த ஹரிக்கு கண்கள் கலங்கியது. பல்லவி செய்த தவறுக்கு பிள்ளைகளை பழி வாங்குகிறோமோ என்று வருந்தினான். என்ன செய்தாலும், பிள்ளைகளின் மனம் அவளை சுற்றியே வருகின்றன என்பதனை உணர்ந்துகொண்டான். இருப்பினும், அவள் மீதான கோவம் மட்டும் குறைவேனா என்று அவனை வாட்டியது. அவளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவோமா என்று கூட ஒரு எண்ணம் தோன்றியது. அவளை வேண்டாமென்று ஒதுக்கிவைத்து, காயப்படுத்திய பின், மீண்டும் அழைத்துக்கொள்வது எத்தனை பெரிய சுயநலம் என்று மனம் உறுத்தியது. கண்களை மூடிக்கொண்டு மூலையில் அமர்ந்திருந்தான். ‘ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’ என்ற எண்ணம் மாறி, ‘இனி என்ன ஆகப்போகிறதோ?’ என்ற பயமே அவனுள் விஸ்வரூபம் எடுத்தது.

மறுநாள் வரை மருத்துவமனையில் தங்கியிருந்த விஷ்ணுவிற்கு உடல் தேற, அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர் அனுமதி கொடுத்தார். பிள்ளைகளோடு இனி இருக்க முடியாது என்ற தவிப்பில் பல்லவி இருக்க, இனி பிள்ளைகளை எப்படி சமாதானம் செய்வது என்ற கலக்கத்தில் ஹரி இருந்தான். பிள்ளைகளை கிளப்பிக்கொண்டு கார் வரை அழைத்து வந்த பல்லவி, அவர்களை உள்ளே அமரவைத்தாள்.
“அம்மா நீங்க எங்க உட்கார போறீங்க?” என்றான் விமல்.
“விமல், விஷ்ணு. அம்மா ஊருக்கு போகப்போறேன். போயிட்டு வந்துட்டு நான் வீட்டுக்கு வரேன்” என்றாள்.
“முடியாது முடியாது” என்று விமல் அழத்தொடங்க, விஷ்ணுவும் ஏக்கத்தோடு, தளர்ந்த விழிகளால் பல்லவியைக் கண்டான்.
“விமல், நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளேன்…”
“அம்மா ப்ளீஸ் மா…”
“இல்லடா தங்கம், அம்மா துபாய்க்கு போக போறேன். சுகன்யா ஆன்ட்டி இருக்காங்கல்ல, அவங்கள பார்க்க போறேன்…”
“அம்மா, ப்ளீஸ் மா, நானும் வரேன்…”
“நீ ஸ்கூல் போகணும். படிக்கணும். டாக்டர் ஆகணும். என் தங்கம்ல? அங்க ஒரு ஹாஸ்பிடல்ல குட்டி பாப்பாவை பார்த்துக்க யாருமே இல்லையாம். பாவம் தான குட்டி பாப்பா? அதான் அம்மா கொஞ்ச நாள் அந்த பாப்பாவெல்லாம் பார்த்துக்க போறேன்…”
“குட்டி பாப்பாவா?” என்று இரு கைகளையும் குமித்துக் காட்டினான், விமல்.
“ஆமா செல்லம்”
“ஏரோபிளேன்ல போகப்போறீங்களா?”
“ஆமாடா பட்டுக்குட்டி”
“எத்தனை பாப்பா? டென் பாப்பாவா?”
“ஆமாடா தங்கம். நான் அங்க போயிட்டு தினமும் வீடியோ கால்ல பேசறேன்… சரியா?”
“அம்மா வேண்டாம்மா…”
“அம்மா சீக்கிரம் போயிட்டு வந்துடுவேன். நீ விஷ்ணுவை பத்திரமா பார்த்துக்கணும். ரெண்டு பேருக்கும் அம்மா நிறைய கிஃப்ட்ஸ் வாங்கிட்டு வருவேன்” என்றவள், மேலும் ஏதேதோ கூறி அவ்விருவரையும் சமாதானம் செய்தாள்.

ஹரி கேள்வியாக அவளை பார்த்துக்கொண்டு நிற்க,
“நாளை மறுநாள் ஃப்ளைட் சார். நாளைக்கு சென்னைக்கு போறேன், அப்புறம் துபாய்…” என்றாள், அவனிடம். அவன் நம்பமுடியாமல் அவளை பார்த்திருந்தான்.
“ஏதோ குழந்தைகளுக்காக என்னமோ சொல்றீங்கன்னு நினைச்சேன்?!”
“இல்ல சார். நிஜமாவே தான் போறேன். இங்க இருக்கிற வரைக்கும் அவங்கள பார்க்காம என்னால இருக்க முடியாது. அவங்களும் என்னை தேடுவாங்க. ரொம்ப தூரம் போயிட்டா, கொஞ்சம் கொஞ்சமா அவங்க…” என்றவளுக்கு குரல் தழுதழுக்க, குரலை செருமிக்கொண்டு, “கொஞ்சம் கொஞ்சமா என்னை மறந்துடுவாங்க” என்றாள். கனத்த இதயத்தோடு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். வீட்டில் காத்திருந்த மங்கையர்க்கரசி, பல்லவியும் அவர்களுடன் வந்துவிடக்கூடும் என்று ஏதோ கற்பனை செய்து கொண்டு எதிர்பார்த்திருந்தாள். மூவர் மட்டுமே வீடு திரும்ப,
“ஹரி, அவ வரலையா?” என்றாள்.
“இல்லை…”
“கொஞ்ச நாளைக்கு… இன்னும் குழந்தைக்கு சரியாகுற வரைக்கும்…”
ஹரி கோபப்பட்டுவிடுவானோ என்று பயந்து மேற்கொண்டு எதுவும் கூறாமல் அமைதியானாள்.
“இல்லமா. நாளை மறுநாள் அவ துபாய்க்கு போறாளாம். அங்க ஏதோ வேலை கிடைச்சிருக்காம். நாளைக்கு சென்னைக்கு கிளம்பறாளாம்…”
“என்னப்பா சொல்ற…”
“குழந்தைங்களுக்கு சாப்பிட ஏதாவது இருக்கா?”
மங்கையர்க்கரசி அதற்கு மேல் பல்லவி குறித்து எதுவும் கேட்காமல், பிள்ளைகளை கவனிக்கத் தொடங்கினாள்.

இரவெல்லாம் நெஞ்சம் ஏனோ பாரமாகிப் போனது போல் உணர்ந்தான், ஹரி. அவள் வெகு தூரம் செல்லப்போகிறாள் என்ற எதார்த்தத்தை ஏனோ அவனது மனம் ஏற்றுக்கொள்ள தயங்கியது. பிள்ளைகளுக்கு தான் ஒரு நல்ல தந்தையாக இல்லாமல் போய்விட்டோமோ என்றொரு குற்றவுணர்வு அவனை மேலும் வதைத்தது.
 

Administrator

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,559
Reaction score
2,936
Points
113
Location
Chennai
Website
jothinovels.com
விமல் விஷ்ணு பாவம்

விமல் தன் மன உணர்வுகளை வாய் விட்டு பகிர்ந்து கொள்கிறான்

ஆனால் விஷ்ணு மனசுக்குள்ளே வச்சு அவதிப்படுறான்

அவளும் பாவம் தான்

கண் கலங்கி விட்டது
 
Joined
Aug 23, 2026
Messages
78
Reaction score
47
Points
18
விமல் விஷ்ணு பாவம்

விமல் தன் மன உணர்வுகளை வாய் விட்டு பகிர்ந்து கொள்கிறான்

ஆனால் விஷ்ணு மனசுக்குள்ளே வச்சு அவதிப்படுறான்

அவளும் பாவம் தான்

கண் கலங்கி விட்டது
Thank you :)
 
Top Bottom