வா… இன்று நீயாக… - 19 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வா… இன்று நீயாக… - 19

New updates

LATEST
Joined
Aug 23, 2026
Messages
78
Reaction score
41
Points
18
ஓர் நாள் பணியில் இருக்கும்பொழுது பல்லவி மயங்கி விழுந்துவிட்டாள் என்று ஒரு செவிலியர் சுகன்யாவிடம் செய்தி கூற, அவள் தனது பணியை விட்டுடவிட்டு தோழியைக் காண ஓடிச் சென்றாள். சற்று மயக்கம் தெளிந்தும் தெளியாததுமாய் பல்லவி ஓர் கட்டிலின் மேல் படுத்திருந்தாள். தோழியைக் கண்டதும் மெல்ல அவளது கைகளை பற்றிக்கொண்டாள்.

“பல்லவி, என்னடி ஆச்சு? மயக்கம் போட்டு விழுந்துட்டியாமே? என்னடி உடம்புக்கு?” என்று கேள்விகளை அடுக்கினாள் சுகன்யா, பரபரப்பாக.
“தெரியலடி, என்னமோ கண்ணு இருட்டிட்டு வந்து அப்படியே விழுந்துட்டேன்”
“டாக்டர் என்னடி சொன்னாங்க?”
“நமக்கு தெரிஞ்ச பதில் தான்…”
“எதுக்கும் ப்ளட் டெஸ்ட் எடுத்துடுவோமா? இப்போ வேற ஜுரம் சீசன்…”
“அதெல்லாம் வேண்டாம் சுகன்யா… கொஞ்ச நாளாவே அலுப்பா இருக்கு…”
சுகன்யா கவலையும் குழப்பமுமாய் அவளைக் காண, பல்லவி யோசனையாகிப்போனாள்.
“நீ செக் பண்ணிட்டல?” என்றாள் சுகன்யா, நெஞ்சு படபடக்க.
கண்களில் நீர்கோர்த்தபடி, பயமும் கலவரமுமாய்,
“எதுவும் பண்ணல சுகன்யா… நீ எதை கேட்குற?” என்றாள்.
“நான் எதை கேட்குறேன்னு உனக்கு புரியலையா?”
“இல்லடி அது…”
சுகன்யா உடனே மருந்தகத்திற்கு சென்று, கர்ப பரிசோதனைக் கருவியை வாங்கி வந்தாள்.

“பல்லவி, செக் பண்ணு…” என்றபடி அதனை அவளிடம் நீட்டினாள்.
“வேண்டாம்… எனக்கு பயமா இருக்கு…”
“எதுவும் இருக்காது. நம்ம மன நிம்மதிக்கு… பயப்படாம போ…”
பல்லவி வேறு வழியின்றி அந்தக் கருவியை எடுத்துக்கொண்டு சென்றாள். வெகு நேரமாகியும் தோழி வராமலிருக்க, அவளை சுகன்யா தேடிச் சென்றாள். எங்கு தேடியும் பல்லவி கிடைக்கவில்லை. ஏதோ யோசனை வந்தவளாய் மாடியில் சென்று பார்க்க, அங்கே ஓர் மூலையில் அமர்ந்துகொண்டு பல்லவி அழுதுகொண்டிருந்தாள். அவள் தனிமையில் அமர்ந்து அழுவதிலேயே சுகன்யாவிற்கு அவள் கருத்தரித்திருப்பது புரிந்தது.
“பல்லவி” என்றபடி அவள் அருகே அமர்ந்தாள், சுகன்யா.
தோழியைக் கண்டதும் பல்லவி அவள் மீது சாய்ந்து தேம்பித்தேம்பி அழத் தொடங்கினாள். அவளது கைகளுக்குள் அந்த கருவி இருந்தது. அதனை வாங்கிப் பார்த்த சுகன்யாவிற்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
“அழாத பல்லவி, அழாத… என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்…”
“இனி என்ன செய்ய முடியும்… பயமா இருக்கு…”

சிறிய அமைதிக்கு பிறகு,
“பல்லவி நான் ஒன்னு சொல்லட்டுமா? இதை சொல்ல எனக்கு உரிமை இருக்கான்னு தெரியல. ஆனா நீ என் உயிர்த்தோழிங்கற உரிமையில சொல்றேன்…”
“சொல்லு சுகன்யா, எதுக்கு தயக்கம்?”
“இந்த குழந்தைய கலச்சுடு பல்லவி. உன் எதிர்காலம் கேள்விக்குறியானதோடு இந்தக் குழந்தையோட எதிர்காலமும் கேள்விக்குறியாகணுமா? அவினாஷ் ஏத்துக்கிட்டா பரவால்ல. ஆனா அவனோட திமிருக்கு, அவன் ஒத்துவருவான்னு தோணல. உன் வீட்ல நிச்சயம் உன்னை வார்த்தையாலயே கொன்னுடுவாங்க. அதுக்கு பதிலா நீயே இந்த குழந்தைய…” என்றவள் பேசமுடியாமல் அழத் தொடங்கினாள்.
பல்லவி பித்து பிடித்தவள் போல, கண்கள் கலங்கி அமர்ந்திருந்தாள்.

அன்றிரவு, அவினாஷை ஒருமுறை அழைக்க எண்ணினாள். தான் சூல் கொண்டிருப்பதைக் கூறினால், அவன் மனம் மாறிட வாய்ப்புண்டு என்று எண்ணினாள். மீண்டும் பல முயற்சிகளுக்கு பிறகு ஒருவழியாக அவன் இவளது அழைப்பினை ஏற்றான்.
“என்ன?” என்றான், வேண்டா வெறுப்பாக.
“அவினாஷ், எப்படி இருக்க அவினாஷ்?”
“முதல்ல விஷயத்தை சொல்லு…”
“அவினாஷ்… நான்…”
“சீக்கிரம் சொல்லு…”
“நான் கர்ப்பமா இருக்கேன்…”
“அதுக்கு?”
“என்ன இப்படி கேட்குற? உன் குழந்தை என் வயித்துல…”
“நிறுத்து, நிறுத்து. ஒரு நாள் தான் நீ என்கூட இருந்த. மீதி நேரம் நீ என்ன பண்ற? எங்க போற?! எங்க வரன்னு எனக்கு தெரியாது. எதை வச்சு அது என் குழந்தைனு சொல்ற…”
“மனசாட்சியை வச்சு…” - பற்களைக் கடித்துக் கொண்டு, பதிலளித்தாள்.
“மனசாட்சி??!! சரி, அப்படியே இருக்கட்டும். இப்போ அதுக்கு நான் என்ன பண்ணனும்?”
“என்ன அவினாஷ் இப்படி கேட்கற?”
“இங்க பாரு, இதுக்கு முன்னாடி நான் டேட் பண்ண பொண்ணுங்கள்ல ரெண்டு பேர் ப்ரெக்னன்ட் ஆனாங்க. உடனே போய் அத க்ளியர் பண்ணிட்டாங்க. நீயும் போய் பண்ணிடு. செலவுக்கு பணம் வேணும்னா சொல்லு, போட்டுவிடறேன்…”
“உனக்கு மனசாட்சியே இல்லையா? உன் குழந்தை என் வயித்துல வளருதுன்னு சொல்றேன். கூச்சமே படாம இப்படி பேசற?!! நீயெல்லாம் என்ன ஜென்மம்??”
“போதும் நிறுத்துடி, போனா போகுதுன்னு பார்த்தா ஓவரா பேசற. அது என் குழந்தைங்கறதுக்கு என்ன அத்தாட்சி? குழந்தை அது இதுனு சொல்லி பணக்கார பையன வளைச்சு போடலாம்னு நினைப்போ? அதுக்கு வேற ஆள பாரு…”
“உன் காசு பணம் எனக்கு தேவையில்லை. உன் மனைவினு அங்கீகாரம். குறிப்பா இந்த குழந்தைக்கு நீ அப்பான்னு அங்கீகாரம். அதான் வேணும்…”
“ஆங் அப்புறம்? எவனாவது காதுல பூ வச்சுட்டு உட்கார்ந்திருப்பான் அவன்கிட்ட போய் சொல்லு. அங்கீகாரம் கேட்கறதே மொத்தத்தையும் சுருட்டறதுக்கு தான… கெட் லாஸ்ட்…”
அவள் பதில் கூறும் முன் அவன் அழைப்பினைத் துண்டித்தான். அவள் மீண்டும் பலமுறை முயற்சிக்க, அவளது அழைப்புகள் ஏற்கப்படாமலேயே போனது.

தோழி கூறுவது புத்திக்கு சரியென்று பட்டாலும், மனதிற்கு ஏற்புடையதாக இல்லை. அந்த பிஞ்சு உயிர் என்ன பாவம் செய்தது என்று யோசித்தாள். எதற்காக அதனை பலியிட வேண்டும் என்றும் எண்ணினாள். தனது குடும்பத்தினரால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்றும் அவள் யோசிக்க தவறவில்லை. தனக்கு ஒரு நியாயம் கிடைக்காதா என்றே தவமாய் தவமிருந்தாள். ஆனால் இவள் என்ன கூறினாலும், அவினாஷ் ஒத்துவருவதாக இல்லை.

சில நாட்கள் சென்றது. சுகன்யா சில முறை அவளை வலியுறுத்தினாள். நாட்கள் செல்லச் செல்ல ஆபத்தே என்று அவள் கவலைகொண்டாள். பல்லவிக்கு அது புரியாமல் இல்லை. இருப்பினும் உள்ளூர பாயும் தாயின் அன்பு, அந்த சிசுவை காப்பாற்றி வந்தது.

ஓர் நாள், பிரபல பெண்மணி ஒருவள் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அனைவரும் பேசிக்கொண்டனர். பல்லவி எப்பொழுதும் போல் தனது பணியை செய்ய அந்த பெண்மணியின் அறைக்கு சென்றாள். அவரைக் காண பல மகளிர் வந்து சென்று கொண்டிருந்தனர். அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த நோயாளி பெண்மணி யாரென்று அவளுக்கு புரியவில்லை. திடீரென உள்ளே நுழைந்த ஒரு இள வயது பெண், அப்பெண்மணியின் கையை பற்றிக்கொண்டு அழத்தொடங்கினாள்.
“மேடம் நீங்க தான், என் வாழ்க்கையை மீட்டு கொடுத்தீங்க… உங்களுக்கு இந்த நிலைமையா?” என்று கலங்கினாள். அப்பெண்மணியும் மற்றும் அங்கிருந்தோரும் சமாதானம் செய்ய, அவள் அழுகையை நிறுத்திவிட்டு விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டாள்.

சென்றவளை தொடர்ந்து சென்று, “அவங்க யாரு? அரசியல்வாதியா?” என்றாள் பல்லவி.
“இல்லையில்லை மாதர் சங்க தலைவி. இவங்க கிட்ட பிரச்சனைன்னு சொன்னா போதும், உடனே சரி செஞ்சுடுவாங்க. என்னை ஒருத்தன் காதலிச்சு ஏமாத்த பார்த்தான். மகளிர் சங்கம் உதவியோடு அவனையே கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். இவங்க இல்லனா அவன் என்னை ஏமாத்தியிருப்பான்…” என்று அப்பெண் கூறியதைக் கேட்டு, பல்லவியின் முகம் பிரகாசமானது. எப்படியேனும் மாதர் சங்கத் தலைவியிடம் தனது நிலையைக் கூறி, நல்வழி காட்டும்பட்டி கேட்டுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள்.

அத்தலைவி தனிமையில் இருக்கும் நேரம் பார்த்து, பல்லவி தனக்கு நடந்தவற்றை கூறி, உதவி செய்யும்படி மன்றாடினாள். பல்லவிக்கு ஆறுதல் சொன்னதோடு, உதவுவதாக வாக்கும் கொடுத்தாள், அவள்.

“பல்லவி, நீ தேவையில்லாத காரியம் பண்றன்னு நினைக்கறேன்” என்றாள் சுகன்யா, கவலையோடு.
“என்ன தேவையில்லாத காரியம்? ஒருத்தன் தப்பு செய்வான். அவனுக்கு பயந்து நான் உண்மையை மூடி மறைச்சு குற்ற உணர்வோடு வாழணும். போதாத குறைக்கு இந்த குழந்தையை கொல்லணும். இல்லை? ஆனா அவன் சந்தோஷமா திரிவான்?!”
“பல்லவி…”
“ஆமா, நானும் தான் உடன்பட்டேன். இந்த காரியத்துல எனக்கு எவ்வளவு பங்கு இருக்கோ அதே அளவு அவனுக்கும் இருக்கு. இதோட பாதிப்புலயும் அவனுக்கு சரிபங்கு இருக்கு. நான் மட்டும் அழணும். இல்லை?! இவனை மாதிரி நம்ப வச்சு ஏமாத்தற ஆளுங்கள சும்மா விடக்கூடாது.”
“இதெல்லாம் உனக்கு தேவையில்லாத பிரச்சனை பல்லவி. உன் எதிர்காலத்தை மட்டும் யோசி…”
“இப்படியே சுயநலமா இருந்துட்டா, இவனை மாதிரி ஆளுங்க என்னை மாதிரி அப்பாவி பொண்ணுங்கள ஏமாத்திட்டே தான் இருப்பாங்க சுகன்யா… அந்த மேடத்துக்கிட்ட பேசின பிறகு எனக்கு புது நம்பிக்கை வந்துடுச்சு. நிச்சயம் எனக்கு நல்லது நடக்கும்.. நீ வேணும்னா பாரேன்” என்றவள், தோழியின் கைகளை பற்றிக்கொண்டாள்.

பல்லவிக்கு நான்கு மாதங்கள் முடிந்திருந்த நிலையில், இனி கருக்கலைப்பு பேராபத்து என்ற நிலைக்கு தள்ளப்பட்டாள். பல்லவி மனதைரியத்துடன் அவினாஷோடு அறப்போர் புரிய முடிவெடுத்துள்ளதை எண்ணி சுகன்யா கலங்கினாள்.

மாதர் சங்கத் தலைவி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மறுநாளே பல்லவியை கைபேசியில் அழைத்து, ஒரு விலாசத்திற்கு குறித்த நேரத்தில் வரச்சொன்னாள். பல்லவியும் அவள் சொன்னபடி அங்கு சென்று சேர்ந்தாள். தெரு முழுதும் பங்களாக்கள் நிரம்பியிருந்த அந்த தெருவின் முடிவில் கூட்டமாக பெண்கள் நின்றிருந்தனர். அவர்களோடு மாதர் சங்க தலைவியும் நின்றிருக்க, பல்லவி அவர்களை நோக்கி விரைந்தாள்.
“மேடம்”
“கவலைப்படாத பல்லவி, நாங்க இருக்கோம்” என்றாள், அத்தலைவி. அங்கிருந்த மற்ற பெண்களும் அவளுக்கு ஆறுதல் கூறினர்.
“இதுதான் பல்லவி, அவினாஷோட வீடு” என்றாள் அவள். விசாலமாக, அரண்மனையை போல் இருந்தது. கூட்டம் சேர்ந்திருப்பதைக் கண்டு காவலாளி வந்து விசாரிக்க, தாங்கள் அவினாஷை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்தாள், தலைவி. காவலாளி அவர்களை கலைந்து செல்லும்படி வற்புறுத்தியும் அவர்கள் செல்லாததால், தகவல் சொல்ல அவன் உள்ளே ஓடிச்சென்றான்.

விஷயம் அறிந்து அவினாஷின் தந்தை, மற்றும் அவினாஷ் வெளியே வந்தனர்.
“யாருமா நீங்கல்லாம்?” என்றார் அவினாஷின் தந்தை.
“நாங்க மாதர் சங்கத்திலிருந்து வரோம். உங்க பையன் இதோ இந்த அப்பாவி பொண்ணை ஏமாத்திட்டான். இவ இப்போ நாலு மாசம் கர்ப்பம். உங்க பையன் பொறுப்பேத்துக்கிட்டு, அந்த பொண்ணுகிட்ட மன்னிப்பு கேட்டு கல்யாணம் செய்துக்கணும்…”
“என்னது கல்யாணமா? தெருவுல போறதெல்லாம் என் வீட்டு மருமகளாகிட முடியுமா?” என்றார் இளக்காரமாக.
“சார், வார்த்தையை அளந்து பேசுங்க. காசும் வீடும் இருந்தா நீங்க ஒன்னும் ஊருக்கே ராஜா இல்லை. ஒரு பொண்ணை ஏமாத்திட்டு நிம்மதியா வாழ முடியாது.”
“எது? நாங்க ஏமாத்தறோமா? யாரையோ கூட்டிட்டு வந்து கொடி புடிச்சா பயந்துடுவோமா?”
“நீங்க பயப்பட வேண்டாம் சார். நியாயத்தை சொல்லுங்க.”
“அநியாயம் பண்றது நீங்க. என்கிட்ட நியாயத்தை கேட்கறீங்களா?”
“அநியாயம் பண்றது நாங்க இல்லை சார். இதோ நீங்க வளர்த்து விட்டுருக்கீங்களே உங்க புள்ள தான்…”
அவினாஷின் அப்பா அவனை கண்டு முறைக்க, அவன் தயங்கி நிற்க, பளாரென்று அறைந்தவர், “உள்ள பிரச்சனையில, இது வேற…” என்றுவிட்டு வீட்டினுள் சென்றார். அவினாஷ், பல்லவியைக் கண்டு முறைத்தபடி, தனது கன்னத்தை தடவிக்கொண்டே உள்ளே சென்றான். “நீதி வேண்டும், நீதி வேண்டும்” என்று அப்பெண்கள் கோஷமிட, அடுத்த ஐந்து நிமிடங்களில் காவல் துறையினர் வந்து சேர்ந்தனர். ஆய்வாளர் அவர்களை கலைந்து செல்லும்படி கேட்க, அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய, வாக்குவாதமாகி, தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வேறு வழியின்றி பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
“கவலைப்படாத பல்லவி, உனக்கு நியாயம் கிடைக்கும்” என்று ஆறுதல் கூறியபடி, பல்லவியை அவளது வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றாள், மாதர் சங்கத் தலைவி.
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,406
Reaction score
3,238
Points
113
யார் மீது தப்பு சொல்வது

அவன் என்ன விதமான நோக்கத்தில் பழகுறான்னு தெரியாம உடன்பட்டது இவள் மேல உள்ள குற்றம்

அவன் ஒரு மோசமானவன் இவளை பிடிக்கவே செய்யல வெறும் உடல் சுகத்துக்காக வந்தான் தெரிஞ்சும் கல்யாணம் செய்ய ஆசைப்படுவது அடுத்த தப்பு

அடுத்தவன் பார்வையில் நல்லவனா வேஷம் போட்டு கல்யாணம் செஞ்சாலும் நாளைக்கு சித்திரவதை பண்ணி கொல்லுவான்

இப்ப விஷயம் வெட்டவெளியே வந்துருச்சு குடும்பத்தில் உள்ளவர்கள் அவ்வளவு பேரும் என்ன சொல்வாங்க அவங்க அண்ணி காலி பண்ணிடுவா
 
Joined
Aug 23, 2026
Messages
78
Reaction score
41
Points
18
யார் மீது தப்பு சொல்வது

அவன் என்ன விதமான நோக்கத்தில் பழகுறான்னு தெரியாம உடன்பட்டது இவள் மேல உள்ள குற்றம்

அவன் ஒரு மோசமானவன் இவளை பிடிக்கவே செய்யல வெறும் உடல் சுகத்துக்காக வந்தான் தெரிஞ்சும் கல்யாணம் செய்ய ஆசைப்படுவது அடுத்த தப்பு

அடுத்தவன் பார்வையில் நல்லவனா வேஷம் போட்டு கல்யாணம் செஞ்சாலும் நாளைக்கு சித்திரவதை பண்ணி கொல்லுவான்

இப்ப விஷயம் வெட்டவெளியே வந்துருச்சு குடும்பத்தில் உள்ளவர்கள் அவ்வளவு பேரும் என்ன சொல்வாங்க அவங்க அண்ணி காலி பண்ணிடுவா
paavam :)
 
Top Bottom