- Joined
- May 31, 2025
- Messages
- 214
- Reaction score
- 339
- Points
- 63
வாழ்க்கையின் வேர்களை தேடி
பொங்கல்… ஒரு விடுமுறை அல்ல…
பொங்கல்… ஒரு விடுமுறை அல்ல…
சென்னையின் 18-வது மாடி அடுக்குமாடி குடியிருப்பில், ஜனவரி மாதக் குளிரிலும் ஏசி சத்தமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. கதிர் பால்கனியில் அமர்ந்து தனது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். கதிர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருக்கிறான். மனைவி ரம்யா ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒர்கிங் வுமன், அவர்களின் 8 வயது மகன் இளமாறன். காலையில் ஸ்கூல், மாலை டியூசன், இரவு விளையாட்டு என்று தனிமையில் வளரும் குழந்தை…
ரம்யா அலுவலக வேலை முடிந்து மிகுந்த சோர்வோடு வீட்டுக்குள் வர, இளமாறன் மட்டும் ஐபேடில் கேம் விளையாடிக்கொண்டிருந்தான். தன் மகனை கண்டதும் உடலில் இருந்த சோர்வு மொத்தமும் பறந்து போக, அவன் தலையை அன்போடு வருடிக்கொடுத்த ரம்யா, பால்கனியில் அமர்ந்திருக்கும் தன் கணவனை ஒரு பார்வை பார்த்தவள். அவனுக்கும் தனக்கும் காபி போட்டு எடுத்து கொண்டு சென்றால்.
“தேங்ஸ் ரம்யா…” என்றவன் அந்த காபியை குடிக்க, அதற்கு கூட விடாமல் அலுவக அழைப்பு அவனை கட்டிப்போட்டது.
“சார் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க, 3 டேஸ்க்கு என்னால எதுவும் பண்ண முடியாது. எல்லாரும் பொங்கல் லீவ்ல இருக்காங்க, 1 வீக் மட்டும் டைம் குடுங்க நீங்க கேட்டதை நான் பண்ணி கொடுத்துடுறேன்” என்று கூறியவன் அரை மணிநேர போராட்டத்துக்கு பின் அவரை சமாளித்து காலை கட் செய்து விட்டு காபியை பார்க்க, அதுவோ இவனுக்கு காத்திராமல் அறிபோனது.
“குடு கதிர் நான் அதை சூடு பண்ணி கொண்டு வரேன்” என்ற ரம்யா கப்பை வாங்கி கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
அப்போது கீழிருந்து ஏதோ சத்தம் கேட்கவே, கதிர் பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தான். அவன் குடியிருக்கும் அந்த ஆடம்பர அப்பார்ட்மெண்டில் பொங்கல் செலிப்ரேஷன் என்ற பெயரில் ஏதோ டெக்ரேஷன் செய்து கொண்டிருந்தார்கள். பிளாஸ்டிக் தென்னங்கன்றுகள், பிளாஸ்டிக் தோரணங்கள், தரையில் ஸ்டிக்கர் கோலங்கள் என எல்லாம் செயற்கையாகத் தெரிந்தது. ஒரு மூலையில் செயற்கையாக அமைக்கப்பட்ட வைக்கோல் போரில் நின்று சிலர் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்த கதிரின் உள்ளுக்குள் ஏதோ ஒன்று சுருக்கென்றது.
“என்னடா இது? பொங்கலை ஒரு காட்சிப் பொருள் போல மாத்திட்டாங்க..”' என்றவனுக்குள் அவன் சிறுவயதில் பார்த்த அந்த நிஜமான பசுமை, கதிர் அறுக்கும் சத்தம், மாடுகளின் கழுத்து மணி ஓசை எல்லாம் நிழலாடின. அந்த பிளாஸ்டிக் அலங்காரத்தைப் பார்த்த பிறகுதான் தன் தந்தை கூறியது எல்லாம் நினைவு வந்தது.
ஒரு வாரத்திற்கு முன்…
"கதிர், அப்பா போன் பண்றாங்க..." ரம்யா நீட்டிய போனை வாங்கியவன்..
"என்னப்பா பொங்கலுக்கு நீங்க வர்றீங்களா இல்ல நானே ட்ரெயின் டிக்கெட் போடவா?" என்றவன் கேட்க, மறுமுனையில் தர்மலிங்கம் ஐயாவின் மெல்லிய குரல் கேட்டது.
"இல்லப்பா... இந்த வருஷமும் எங்களால அங்க வர முடியாது. நம்ம நிலத்துல விளைச்சல் நல்லா இருக்கு. அதுபோக நம்ப லட்சுமி இன்னைக்கு தான் கண்ணு போட்டுருக்க. இதையெல்லாம் இப்படியே விட்டுட்டு வர மனசில்லை. வேணா இந்த வருஷம் நீங்க இங்க வாங்க நம்ப எல்லாரும் சேர்ந்து பொங்கல் கொண்டாடுவோம்." என்றவர் கூற, சட்டென தன் தந்தையிடம் இருந்து போனைப் பிடுங்கி இளமாறன்,
"தாத்தா... நீங்க வரலைன்னா நான் சாப்பிட மாட்டேன்.” என்றவன் கூற
“என்னடா கண்ணு இப்படி சொல்ற? இங்குன நிறைய வேலை கிடக்குதுடா, நீங்க எல்லாம் வேணா இங்க வாங்களேன்” என்று அந்த பெரிய மனிதர் தன் பேரனுக்கு எடுத்து கூறி புரியவைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
“அந்த புவர் வில்லேஜில அப்படி என்ன தாத்தா இருக்குது? சிட்டில எவ்வளவு பெரிய மால் இருக்கு தெரியுமா? அதோட சுத்தி பார்க்க நிறைய இடம் இருக்குது" என்று மாறன் கூற, அதை கேட்டு சத்தமாக சிரித்த தர்மலிங்கம் ஐயா.
"இங்கையும் நீ சுத்தி பார்த்து ரசிக்க நிறைய இடம் இருக்குடா கண்ணா. நீ வந்தா உன்னை சுத்தி பார்க்க கூட்டிட்டுப் போறேன்." என்றவர் கூற, அன்றிலிருந்து மாறன் ஊருக்கு போக வேண்டும் என்று அடம்பிடித்து கொண்டிருக்கிறான். ரம்யாவும் கூட இதை பற்றி கதிரிடம் பேச முயற்சி செய்ய… ஆனா, கதிர் முடியாது என்று முடிவாக கூறிவிட்டான். ஆனால் ஏனோ இன்று அவன் மனம் சற்று பாரமாக இருந்தது. அவன் மனம் முழுக்க தான் கொண்டாடிய பொங்கல் பண்டிகையின் சந்தோஷமான நினைவுகள் நிறைத்திருக்க, அதை தன் மகனுக்கு தான் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவன். வீட்டிற்குள் செல்ல அங்கே கேம் விளையாடிக்கொண்டிருந்த தன் மகனை பார்த்த கதிர், கையில் காபியோடு வந்த தன் மனைவியின் கையில் இருந்த காபியை வாங்கி கொண்டவன்.
"ரம்யா, சீக்கிரம் கிளம்புங்க... நாம விடியறதுக்குள்ள ஊர்ல இருக்கணும்!" என்றான்.
“ஏய்… கதிர் என்ன சொல்ற? நிஜமாவா?” என்றவள் மிகுந்த சந்தோசத்தோடு கேட்க, அவனும் ஆம் என்பது போல் தலையை ஆடினான். தன் தந்தை கூறியதை கேட்டு சந்தோசத்தில் துள்ளிக்குதித்த மாறன் ஓடிவந்து தன் தந்தையின் கால்களை கட்டிக் கொண்டான்.
“சரி சரி… போங்க போய் 3 நாளைக்கு தேவையான திங்ஸ் எல்லாம் பேக் பண்ணுங்க, நம்ப உடனே கிளம்பலாம்” என்றவன் கூற, மாறனும் உற்சாகத்த்தோடு அங்கிருந்து ஓடினான்.
“அப்போ நான் உடனே அம்மாவுக்கு போன் பண்ணி சொல்றேன்” என்ற ரம்யா தன் மாமியாருக்கு அழைக்க போக, அவளை தடுத்து நிறுத்திய கதிர்.
“வேண்டாம் ரம்யா… அவங்களுக்கு சொல்ல வேண்டாம், சப்ரைஸா போகலாம்” என்றவன் கூற, அவளும் மனமுழுக்க சந்தோஷத்தோடு கிளம்பினாள்.
அடுத்த நாள் காலை…
கதிரின் கார் அந்த ஊர் எல்லைக்குள் நுழையும்போதே வைக்கோல் வாசனையும், ஈர மண்ணின் மணமும் கதிருக்குள் தொலைந்துபோன அவனது பால்ய கால நினைவுகள் மெல்லத் தலைதூக்கின. காரின் ஏசி-யை அணைத்துவிட்டு கண்ணாடியை இறக்கியவன். ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த மார்கழிப் பனி காற்றையும், வைக்கோல் வாசனையும் ஆழ்ந்து சுவாசித்தான்.
இங்கு, தர்மலிங்கம் ஐயாவும் அவர் மனைவி பொன்னம்மாளும் மனவருத்தத்தில் இருந்தனர்.
"என்னங்க, இந்த வருஷமும் புள்ள வரலையே… நம்ப மருமக, பேரன் முகத்தைப் பார்த்து எத்தனை நாளாச்சு?" என்று பொன்னம்மாள் கலங்கினார்.
"விடு பொன்னம்மா... அவன் பெரிய உத்தியோகத்துல இருக்கான். இப்போ அவனுக்கு நம்பள விட அந்த வேலைதான் முக்கியம்" என்று தர்மலிங்கம் தன் மனைவி ஆறுதல் கூறினாலும், அவர் கண்கள் வாசலையே பார்த்திருந்தன.
அப்போது, வீட்டின் முன்னே ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய இளமாறன்.
"தாத்தா... பாட்டி...!" என்று கத்திக்கொண்டே ஓடிவந்து அவர்கள் இருவரையும் கட்டிப்பிடித்தான்.
அதிர்ச்சியில் உறைந்துபோன பொன்னம்மாள், அடுத்ததடுத்து இறங்கிய தன் மகனையும் மருமகளையும் கண்டு கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. தர்மலிங்கம் ஐயாவின் முகம் சந்தோசத்தில் பிரகாசித்தது. அந்தச் சின்ன வீட்டில் சட்டென ஒரு பேரானந்தம் குடிகொண்டது.
"வாங்கடா... வாங்க... முன்னாடியே சொல்லக் கூடாதா?" என்று பொன்னம்மாள் பதற்றமும் பாசமுமாக முகிலனை வாரி அணைத்துக்கொண்டார். இளமாறன் திகைப்புடன் அந்த வீட்டைப் பார்த்தான்.
"அப்பா, இது என்ன ஏதோ குட்டி பேலஸ் மாதிரியே இருக்கு!" என்றான்.
வாசலில் நின்றிருந்த பிரம்மாண்டமான தேக்கு மரக் கதவுகளைத் தொட்டுப் பார்த்தான். கதவில் இருந்த அந்தப் பழைய காலத்துப் பித்தளைக் குமிழ்கள் சூரிய ஒளியில் மின்னின. கதிர் மெல்லச் சிரித்துக்கொண்டு, "இதுதான்டா நான் பிறந்து வளர்ந்த இடம்" என்றவன் லக்கேட்ஜிகளை எடுத்து கொண்டு உள்ள சென்றான்.
அவர்கள் வீட்டிற்குள் நுழையும்போது, அவர்களை வரவேற்றது நடுமுற்றம். நான்கு பக்கமும் ஓடுகளால் வேயப்பட்ட சரிவான கூரை, நடுவில் வானம் பார்த்த சதுரமான திறப்பு.
"தாத்தா, மேல ஏன் ஓட்டை இருக்கு? மழை வந்தா வீட்டுக்குள்ள தண்ணி வரும்ல?" என்று மாறன் ஆச்சரியமாகக் கேட்க, தர்மலிங்கம் சிரித்துக்கொண்டே சொன்னார்.
“இது ஓட்டை இல்லடா செல்லம்... நிலாவையும், மழையையும் வீட்டுக்குள்ளேயே கூட்டிட்டு வர்ற வாசல். இங்க நின்னு பாரு, மேல ஆகாயம் எவ்வளவு அழகாத் தெரியுதுன்னு!"
மாறன் அந்த முற்றத்தின் மையத்தில் நின்று அண்ணாந்து பார்த்தான். சிட்டியில் ஜன்னல் வழியாகத் தேடிய வானம், இங்கே அவன் வீட்டிற்குள்ளேயே குடியிருந்தது.
அடுக்களையிலிருந்து மண் அடுப்பின் மணமும், பொன்னம்மாள் ஏற்கெனவே செய்து வைத்த பலகாரங்களின் வாசம் அவர்களை இழுத்தது.. மூலையில் இருந்த பழைய ஊஞ்சலில் ஆடும்போது வந்த சத்தம் கூட ஒரு சங்கீதம் போல மாறனின் காதில் விழுந்தது.
நகரத்து ஃபிளாட்டில் 24 மணிநேரமும் ஓடும் ஏசி-யின் சத்தத்திற்குப் பழகிய கதிர்க்கு, அந்த முற்றத்தில் அமர்ந்து வாங்குகிற இயற்கை காற்று ஒரு சொர்க்கமாகத் தெரிந்தது. இத்தனை காலம் தான் எதை இழந்து கொண்டிருந்தோம் என்பதை அந்தப் பழைய வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் அவனுக்கு நினைவுபடுத்தின.
மறுநாள் அதிகாலை
ஊரே பனிப்போர்வைக்குள் போர்த்தியிருந்தது. ஆனால், தர்மலிங்கம் ஐயாவின் வீட்டில் மட்டும் அதிகாலையிலேயே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது
"மாறா... எந்திரிடா கண்ணா... பொங்கல் வைக்கணும்!" என்ற பொன்னம்மாள் பாட்டியின் குரல் கேட்டு மாறனும் கண்களைக் கசக்கிக்கொண்டே எழுந்தான். சிட்டியில் அலாரம் அடித்தாலும் எந்திரிக்காதவன், இன்று ஊர் சேவலின் குரலுக்கும் பாட்டியின் அன்புக்கும் கட்டுப்பட்டு எழுந்தமர்ந்தான்.
வீட்டின் நடுமுற்றத்தில் கதிரும் தர்மலிங்கமும் சேர்ந்து செங்கற்களை அடுக்கி அடுப்பு தயார் செய்தார்கள். ரம்யா வாசலில் தன் மாமியாருடன் சேர்ந்து பெரிய மாக்கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். இதை அனைத்தையும் ஆச்சரியமாகப் பார்த்த இளமாறன்.
"அப்பா, ஏன் பானைக்கு மஞ்சள் செடி கட்டுறீங்க?" என்றவன் கேட்க, அதற்கு கதிர் பதில் கூற, மாறனோ அதோடு நிறுத்தாமல் தனக்கு வந்த அடுத்தடுத்த சந்தகங்களை கேட்டு கொண்டே இருந்தான்.
புதுப்பானையில் ஊற்றிய பால் மெல்லக் கொதிக்க ஆரம்பித்தது. வீடே அமைதியாக, அந்தப் பால் பொங்கும் தருணத்திற்காகக் காத்திருந்தது. சட்டெனப் பால் நுரைத்துப் பொங்கி பானையின் ஓரங்களில் வழியத் தொடங்கியதும், தர்மலிங்கம் ஐயா சங்கை எடுத்து முழங்கினார்.
"பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று அனைவரும் கூற, அதை கண்ட மாறனும் தன் பிஞ்சுத் தொண்டையை உயர்த்தி, தாத்தாவுடனும் அப்பாவுடனும் சேர்ந்து சத்தமிட்டான். அவனது அந்த உற்சாகக் குரல் அந்தப் பழைய ஓட்டு வீட்டின் ஒவ்வொரு மூலைக்கும் மகிழ்ச்சியைக் கடத்தியது.
பொன்னம்மாள் புது நெல் அரிசியைப் பானையில் இட்டு, வெல்லம் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரிகளைத் தூவியபோது வந்த மணம்... கதிரை அவனது பால்ய காலத்திற்கு இழுத்துச் சென்றது. வாழையிலையில் வைக்கப்பட்ட அந்தச் சூடான சர்க்கரைப் பொங்கலை மாறன் ஒரு பிடி எடுத்து வாயில் வைத்தான்.
"மம்மி! இது செமய இருக்கு!" என்றவன் கண்கள் விரியச் சொன்னபோது, ரம்யா சிரித்துக்கொண்டே கதிரின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.
அடுப்புப் புகையில் கண்கள் லேசாகக் கலங்கினாலும், கதிரின் மனதில் ஒரு தெளிவு பிறந்தது. நகர்ப்புறத்தின் பிளாஸ்டிக் பொங்கல் கொண்டாட்டங்கள் வெறும் காட்சிப் பொருட்கள் மட்டுமே… ஆனால் இந்த முற்றத்தில், இந்த மண்ணில், இந்த உறவுகளுடன் கொண்டாடும் இந்த நிமிடங்கள் தான் உண்மையான வாழ்க்கை என்பதை உணர்ந்தான்.
அப்படி இப்படி என்று நேரம் செல்ல மதியம் ஆனது. தர்மலிங்கம் ஐயா தனது மாட்டுத் தொழுவத்தைத் தயார் செய்யத் தொடங்கினார்.
"மாறா, இதோ இதுதான் கபிலன்... இது நம்ம வீட்டுப் பெரிய பிள்ளை, உன் அண்ணன் " என்று ஒரு பெரிய காளையைக் காட்டினார். இளமாறன் முதலில் பயந்து பின்வாங்கினான். ஆனால், தாத்தா அதன் கொம்புகளில் வர்ணம் பூசுவதைப் பார்த்ததும், தானும் ஒரு பிரஷ்சை எடுத்து மெல்ல அந்த மாட்டின் கொம்பில் பச்சை நிறத்தைத் தீட்டினான்.
தன் மகன் மண்ணிலும், மாட்டுக் கழிவுகளிலும் பயமில்லாமல் விளையாடுவதை கண்ட கதிர் மிகுந்த சந்தோஷமடைந்தான்.
*...---...*
காணும் பொங்கல். இது ஊரே ஒன்று கூடி உறவுகளைக் கொண்டாடும் நாள். காலையிலேயே பொன்னம்மாள் பாட்டி, விதவிதமான சமைத்து, பெரிய எவர்சில்வர் தூக்குகளில் அடைத்தார்.
“பாட்டி இப்போ நம்ப எல்லாம் எங்க போறோம், அதுவும் சாப்பாடு எடுத்துக்கிட்டு?” என்று மாறன் குழப்பத்தோடு கேட்டான்.
“அது இன்னைக்கு காணும் பொங்கல் இல்லையா, இந்த ஊரே ஒன்னா சேர்ந்து கொண்டாடும், அவங்க கூட சேர்த்து கொண்டாட தான் நம்பளும் இப்போ போறோம்” என்ற தர்மலிங்கம் ஐயா தன் பேரனை தோள்மேல் அமர வைத்து கதை கூறிக்கொண்டே அந்த ஊரின் ஆற்றங்கரைக்கு வந்தார்.
தண்ணீர் சலசலவென ஓடிக்கொண்டிருக்க, கரையில் இருந்த பிரம்மாண்டமான ஆலமரத்தின் நிழலில் ஊரே கூடியிருந்தது. சிறுவர்கள் அனைவரும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க, அதை கண்ட மாறன் தன் ஷூக்களைக் கழற்றி எறிந்துவிட்டு, கிராமத்துச் சிறுவர்களுடன் சேர்ந்து ஆற்றுத் தண்ணீரில் குதித்து விளையாடினான்.
செல்போனில் 'சப்வே சர்ஃபர்ஸ்' விளையாடியவனுக்கு, நிஜமாகவே ஓடிப் பிடித்து விளையாடும் போது எவ்வளவு மூச்சு வாங்கும் என்பதை புரிந்துக்கொண்டான்.
மதியம் ஆற்றங்கரை மணலில் அமர்ந்து, இலையில் பொன்னம்மாள் பரிமாறிய அந்த கட்டுச்சோறு சுவை கதிரின் நாவிலேயே தங்கியிருந்தது. ரம்யா தன் செல்போனை பேக்கிற்குள் வைத்துவிட்டு, ஊர் பெண்களுடன் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.
மாலை நேரத்துச் செந்நிறக் கதிர்கள் அந்த வயல்வெளியெங்கும் பொன்னை தூவியது போல் படர்ந்திருந்தது. கதிர் தன் தந்தையின் தோளில் கைபோட்டபடி,
"ஏன் அப்பா... இன்னும் இந்த அஞ்சு ஏக்கரை மட்டும் பிடிச்சுக்கிட்டு இங்க இருந்து கஷ்டப்படுறீங்க? இதையும் நல்ல விலைக்கு வித்துட்டு நீங்க ரெண்டு பேரும் நிம்மதியா என் கூட சிட்டிக்கே வந்துடலாம்ல? அங்க உங்களுக்கு நான் எல்லா வசதியும் செஞ்சு தருவேன்" என்றான். தன் தந்தையின் முதுமை மீதான அக்கறையில்… அவன் இதைச் சொல்ல, தர்மலிங்கம் ஐயா சட்டென நின்றார்.
அவர் முகம் லேசாகச் சிவந்தது. கதிரின் கைகளை மெல்ல விலக்கிவிட்டு, அந்த வயலைப் பார்த்தபடி பேசத் தொடங்கினார். அவர் குரலில் கோபமும், அதே சமயம் ஒரு பிடிவாதமும் கலந்திருந்தது.
"கதிர், இங்க பாரு... நீ இன்னைக்குப் பெரிய அதிகாரியா இருக்கலாம், ஏரோப்ளேன்ல பறக்கலாம். ஆனா, நீ முதன்முதல்ல முட்டி போட்டுத் தவழ்ந்தது இதே நிலத்துல தான். நீ படிச்சுப் பெரிய ஆளாகணும், கை நிறையச் சம்பாதிக்கணும்னு மத்த நிலத்தை எல்லாம் நான் வித்தப்போ கூட, இந்த அஞ்சு ஏக்கரை மட்டும் நான் விடல. ஏன்னு தெரியுமா?"
கதிரிடம் எந்த பதிலும் இல்லை, அமைதியாக நின்றிருந்தான்.
"இது வெறும் நிலம் இல்லடா கதிர், இது நம்ம முன்னோர்களோட மூச்சு. நம்ம பரம்பரையோட அடையாளம். இந்த மண்ணுல எங்களோட ரத்தமும் வேர்வையும் கலந்திருக்கு. விக்கிறது ரொம்ப சுலபம் கதிர், ஆனா ஒரு பிடி மண்ணை உனக்கு சொந்தமாக்க ஒரு ஆயுசு பத்தாது. நீ சிட்டில தேடுற அந்த நிம்மதி உன் பேங்க் பேலன்ஸ்ல இல்ல, இதோ இந்த மண்ணோட வாசத்துல தான் இருக்கு!" என்றார்.
தன் அப்பாவின் அந்த வார்த்தைகள் கதிரின் இதயத்தில் முள்ளை குத்தியது.
“என்னை மன்னிச்சிடுங்கப்பா… இனி நான் உங்ககிட்ட இந்த மாதிரி பேச மாட்டேன்” என்றவன் கூற,
“நீ எதுக்குடா மன்னிப்பு எல்லாம் கேட்குற? நீ எங்க மேல இருந்த அக்கறையில தானே இதை சொன்ன” என்றவர். தன் மகனின் தலைவருடி…
“இங்க பாரு கதிரு… இந்த கெழட்டு பையன் உடம்புல உசுரு இருக்க வரைக்கும் இந்த நிலத்தில விளைச்சல் இருக்கும். நான் சேத்தத்துக்கு அப்றம் வேணா நீ உன் விருப்படி இதை வித்துக்கோ” என்றவர் கூற, அதில் பதறி போனவன்.
“அப்பா இனி அப்படி சொல்லாதீங்க அப்பா… நாளைக்கு நீங்க இல்லைன்னா கூட இந்த நிலத்துல விளைச்சல் இருக்கும்… இது நான் உங்களுக்கு செஞ்சு தர சத்தியம்” என்றவன் அந்த வயல் மண்ணை ஒரு கைப்பிடி அள்ளினான். பல கோடிகளுக்கு டார்கெட் நிர்ணயிக்கும் அவனது கைகள், அந்த ஒரு பிடி மண்ணின் பாரத்தைத் தாங்க முடியாமல் நடுங்கின.
பணத்தால் வாங்க முடியாத ஒரு பெரிய உண்மையை அந்த மண் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தது. தன் தந்தை வைத்திருப்பது வெறும் 5 ஏக்கர் நிலம் அல்ல, அது தங்களின் அடையாளத்தின் மிச்சம் என்பதை அவன் அன்றுதான் முழுமையாக உணர்ந்தான்.
கிளம்பும் நேரம் வந்தது. இளமாறன் தாத்தாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதேவிட்டான்.
"தாத்தா, நான் இங்கேயே இருந்திடுறேன். எனக்கு அந்த ஸ்கூல் வேணாம், நீங்க போதும்!" என்றான்.
தர்மலிங்கம் அவன் கையில் ஒரு கைப்பிடி மண்ணையும், கொஞ்சம் கரும்பையும் கொடுத்து,
"இது நம்ம மண்ணுடா செல்லம்... இதைப் பத்திரமா வச்சுக்கோ" என்றார்.
கதிர் காரை எடுக்கத் தயாரானான். கார் நகரத் தொடங்கியது. இளமாறன் ஜன்னல் வழியாகக் கையாட்டிக்கொண்டே இருந்தான். கதிர் தனது லேப்டாப் பேக்கை பின் சீட்டில் தூக்கிப் போட்டுவிட்டு, ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
"ஆயிரம் இயந்திரங்களுக்கு நடுவே ஓடினாலும், ஒரு மனிதனின் ஆன்மா அமைதி கொள்வது மண்ணின் வாசத்திலும், உறவுகளின் நேசத்திலும்தான். வசதிகள் வாழ்க்கையை எளிதாக்கலாம், ஆனால் வேர்கள்தான் வாழ்க்கையை அழகாக்குகின்றன. நாகரிகம் எனும் பெயரில் நாம் எதை நோக்கி ஓடினாலும், இறுதியில் இளைப்பாறத் தேடுவது நம் தாய்மண்ணின் மடியைத் தான்!"
முற்றும்...
முற்றும்...