வசீகரன்-13 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வசீகரன்-13

New updates

LATEST

Miloni

Active member
Staff member
Joined
May 14, 2024
Messages
342
Reaction score
180
Points
43
அத்தியாயம்-13

ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு விஜயின் ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். நந்தினி போனில் சொல்லியது இதுதான். மயூரி ஊருக்கு போனதிலிருந்து அவளது போனுக்கு முயற்சி செய்து வசி கோபத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறான். அவளிடம் பேசாமல் அவளை பார்க்காமல் அவனுக்கு பித்து பிடித்தது போல் ஆகியிருக்கிறது. இரண்டு நாட்கள் முன்னால் அவனுக்கு ரொம்பவும் தலைவலி அதிகமாக மயங்கி விழுந்திருக்கிறான். ஹாஸ்பிடலில் கொண்டு சேர்த்து அவனுக்கு வேண்டிய டெஸ்ட்டை எடுத்த விஜய் அவளை அழைத்து வருமாறு கூற எல்லோரும் அவளது மொபைலுக்கு முயற்சித்தும் லைன் கிடைக்கவில்லை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டி இருந்தது..

வசீ கண்விழித்து விட்டாலும் இன்னும் இரண்டு நாட்கள் இருக்க வேண்டும் என சொன்னதால் அப்சர்வேஷனில் வைத்திருக்கிறார்கள். அடித்துப்பிடித்து ஓடிப்போய் அவனை அட்மிட் செய்திருந்த அறைக்கு சென்று பார்த்தால் அவன் தூங்கிக் கொண்டிருந்தான். பிறகு அவளிடம் மெல்ல விஷயத்தைக் கேட்ட போது நந்தினி அன்று அவளிடம் பேசுமாறு சொல்லும் போதே அவனுக்கு தலை வலி வந்திருக்கிறது. விஜய் ஏற்கனவே அவர்களிடம் இந்த மாதிரி தலைவலி வந்தால் அவனுக்கு மயக்கம் வரும் என குறிப்பிட்டிருக்கிறான். அதனால்தான் அன்று வந்து நந்தினி அவளிடம் பேசியது அது புரியாமல் மயூரி அவளை திட்டி அனுப்பி விட்டாள்..

வசி இந்த நிலைமையில் இருக்கும் போது நீயும் இல்லாமல் என்ன செய்வது என தெரியாமல் இரண்டு நாட்கள் நாங்கள் திணறிப் போய் விட்டோம். நல்லவேளை இப்போதாவது வந்தாயே என நந்தினி அவளது தோள் மீது சாய்ந்து அழுது தீர்த்தாள். அவளுக்கு இந்த அளவுக்கு வசி மேல் பாசம் வர என்ன காரணமாக இருக்கும். மயூரி முகத்திலேயே அந்த கேள்வி தெரிந்ததோ என்னவோ அவளே சொன்னாள்..

நந்தினி தனியாக வளர்ந்ததினால் அவள் எப்போதுமே யார் மேலாவது பாசம் வைத்து விட்டால் அவர்களுக்காக எதுவும் செய்வாள். அதில் வசியை தன் உடன் பிறப்பாக நினைத்திருக்கிறாள். அபயை காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து தான் அவனோடு பழக்கம் என்றாலும் அந்தக் கொஞ்ச நாள் பழக்கத்திலேயே தன் உடன்பிறந்த சகோதரனாய் நினைத்திருக்கிறாள். அவனும் அவள் மீது அதே அளவு அன்புடன் தான் இருந்திருக்கிறான்..

மயூரியால் இந்த மூன்று மாத பழக்கத்திலேயே அவனை விட முடியவில்லை கண்டிப்பாக நந்தினியின் மனது எப்படி இருக்கும் என இப்போது அவளுக்கு முழுவதுமாக புரிந்தது..

இப்போது வசியை எப்படி சமாதானப்படுத்துவது அவனை நினைத்த மாத்திரத்திலேயே அவளை அறியாமல் ஒரு பெருமூச்சு வெளிவந்தது. தான் இதை வேண்டுமென்றே செய்யவில்லை தான் ஆனால் முதலில் இரண்டு நாள் பேசாமல் இருந்தது எல்லாவற்றையும் யோசித்து பார்த்தால் வேண்டுமென்று செய்ததாக தான் தோன்றும். ஏற்கனவே அவன் ரொம்பக் கோபக்காரன் இதில் நான் செய்த வேலை அவனை இந்த அளவுக்கு இழுத்து வந்திருக்கிறது..

எந்த அளவு என்னைத்தேடி இருந்தால் மயக்கம் வரும் அளவிற்கு அதே நினைவாக இருந்திருப்பான். தான் ஒரு நாள் பேசவில்லை என்றாலும் அவனுக்கு இந்த அளவு பாதிக்குமா அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. முதல் முறை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு போனபோது கூட அவள் பார்க்கவில்லை என்றாலும் பேசிக்கொண்டு இருந்தாள். இந்த முறைதான் அவள் இத்தனை நாள் பேசாமல் இருந்தது. தன்னால் அவன் ஹாஸ்பிடல் வரை வந்திருக்கிறான் என்பதே அவளுக்கு மிகுந்த கவலையை தந்தது..

இனி தன்னால் அவனுக்கு எந்த கஷ்டமும் வர விடக்கூடாது என முடிவு எடுத்துக் கொண்டாள். தனக்கு அது எவ்வளவு பெரிய வலியை தந்தாலும் அவனுக்கு தெரியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் தன்னை இன்னொருத்தி என நினைத்து அருகில் வருவதே அவளுக்கு மிகப்பெரிய வலி தான். அதுவே மனதுக்கு பாரமாக இருக்க அவனை விட்டு விலக முடியாமல் அவன் உடல்நிலை வேறு அவளுக்கு எதிராக சதி செய்தது. தானே அவன் காதலித்த பெண்ணாக இருந்திருக்க கூடாதா என முதல் முறையாக அந்த பெண்ணை நினைத்து பொறாமை கொண்டாள். தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என தன் மேலேயே அவளுக்கு கழிவிரக்கம் தோன்றியது..

தனக்காக அந்தப்பெண் கிடைக்கக்கூடாது என 20 சதவீதம் வேண்டிக் கொண்டாலும் அவனுக்காக அந்த பெண் கிடைக்க வேண்டுமென 80 சதவீதம் வேண்டிக்கொண்டாள். அவள் கிடைத்துவிட்டால் வசீ தன்னை விட்டு பிரிந்து விடுவான் அது தனக்கு மிகப்பெரிய வலி தான் இருந்தாலும், அவனது காதலின் ஆழம் உணர்ந்தவள் அவன் காதலித்த பெண்ணோடு வாழ்வதுதான் அவன் உண்மையான காதலுக்கு கிடைக்கும் வெகுமதி என உணர்ந்து கொண்டாள். அவன் காதலித்த பெண் மட்டும் கிடைத்து விட்டால் இந்த உலகிலேயே மிகப்பெரிய அதிஷ்டசாலி அவளாகத் தான் இருப்பாள். ஏனெனில் வேறு யாரும் யாரையும் காதலிக்க முடியாத அளவுக்கு அவளை காதலிப்பான் என்பது அவளுக்கு உறுதி. ஏனெனில் அவளென நினைத்து தன்னை இப்போது அப்படி தானே காதலித்துக் கொண்டிருக்கிறான்..

வசி கண் விழித்து விட்டான் என விஜய் வந்து சொல்ல எல்லோரும் உள்ளே சென்றார்கள். அவளை பார்த்தவுடன் அவன் கண்களில் தோன்றிய நிம்மதி அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது ஆனாலும் அதற்கு மேல் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களை தனியே விட்டு எல்லோரும் வெளியே சென்ற பிறகு அவன் அருகில் அமர்ந்து சாரி என சொல்லி நடந்ததை அவனிடம் விவரித்தாள். காதில் வாங்கியதற்கு அறிகுறியாக அவளை ஒரு பார்வை பார்த்து திரும்பி கொண்டானே ஒழிய மேற்கொண்டு அப்படியா எனவும் கேட்கவில்லை கோபத்தையும் காட்டவில்லை. அன்று முழுவதும் அவனை எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சி செய்தும் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதேபோல மறுநாள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு சென்ற பிறகும் கூட அவன் அதையே தொடரவும் அவளுக்கு தான் கோபம் வர ஆரம்பித்தது..

அதுவும் வீட்டிற்கு சென்ற பிறகு அவன் அவனுக்கு தோன்றும் சமயங்களில் போன் செய்வான். கோபம் குறைந்து விட்டது போல என ஆசையோடு அட்டெண்ட் செய்தால் எதுவும் பேச மாட்டான். இவள் தான் ஹலோ ஹலோ என கத்திக் கொண்டிருப்பாள் பிறகு அவனே கட் செய்து விடுவான். திரும்ப இவள் போன் செய்தாலும் அவன் பேச மாட்டான். வசி லைனில் இருக்கிறீர்களா என எத்தனை முறை கேட்டாலும் பதில் இருக்காது. அவன் தன் குரலை மட்டும் கேட்க விரும்புகிறான் என புரிந்தாலும் அவன் குரலை கேட்க மயூரிக்கும் ஆசையாக இருந்தது. இப்படித் தான் அவனும் ஆசையுடன் போன் செய்து ஏமாந்திருப்பானோ..

அன்று அவன் வீட்டிற்கு போனபோது ரத்னா வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார். இன்னும் இரண்டு நாட்களில் அவரும் வசி அப்பா கிருஷ்ணனும் அமெரிக்கா கிளம்புகிறார்கள்..

"வசி எங்கே ஆன்ட்டி..?" எனக் கேட்க பின்னால் பார்க் பகுதியில் இருக்கிறான் என சொன்னார்..

"நாங்க ஊருக்கு கிளம்பும் போது திரும்பவும் அவன் ஹாஸ்பிடல் போற மாதிரி ஆயிடுச்சி. ஊருக்கு போகவே எங்களுக்கு ரொம்ப கவலையா இருக்குதும்மா", என அவர் வருத்தத்துடன் சொல்லவும், "கவலைப்படாதீங்க ஆன்ட்டி நாங்க இருக்கோம் நாங்க பாத்துக்குறோம்", என சொன்னாள்..

அவரும் சரியென தலையாட்டி, "அந்த நம்பிக்கையில தான் நாங்க அவனை இங்க தனியா விட்டுட்டு போகவே முடிவு பண்ணுனோம்", என சொல்ல புன்னகையுடன் அவரிடம் விடைபெற்று பின்னால் பார்க் இருந்த பகுதிக்கு சென்றாள்..

அங்கிருந்த மரக்குன்றுகளுக்கு பின்னால் அவன் இல்லை கண்டிப்பாக அந்த பெரிய மரத்தின் குகைக்குள் தான் இருப்பான். அந்த கார்டன் பகுதியில் நடுவில் ஒரு பெரிய அளவிலான மரம் இருந்தது. மலையை பார்க்கும்படியாக இருந்த அந்த மரத்தின் முன் பகுதியில் பெரிய அளவிலான குகை போல வடிவமைத்திருக்கிறார்கள். அதற்குள்ளே ஐந்து பேர் உட்காருமளவுக்கு கல் பெஞ்சில் இருக்கை போடப்பட்டிருந்தது. கீழே ரெடிமேட் கிராஸ் போடப்பட்டிருந்தது..

வசீ கஷ்டத்தில் இருந்தாலும் சந்தோஷத்தில் இருந்தாலும் முதலில் இங்கு வந்து தான் அமர்ந்து கொள்வானாம். சமயத்தில் வெகுநேரம் வரை கூட அங்கே அமர்ந்திருப்பவன் சாப்பாட்டைக் கூட அங்கேயே வரவைத்து சாப்பிட்டுக் கொள்வானாம். அதே போல அவன் அங்கே இருக்கும் போது யாரும் வந்து தொந்தரவு செய்தால் அவன் கோபத்தை காண வேண்டியது இருக்குமாம். அதற்கு பயந்து அவனது நண்பர்கள் கூட அவனை தொந்தரவு செய்ய மாட்டார்களாம். ஒருமுறை மயூரி அந்த மரத்தை பார்த்து வியப்பாக பேசிக் கொண்டிருந்தபோது நந்தினி இந்த விஷயத்தை அவளிடம் சொன்னாள். அந்த மாதிரி நேரத்தில் தனியே சென்று வாங்கிக் கட்டிக் கொள்ளக் கூடாதே என்ற எண்ணத்தில் தான் அவளும் விரிவாக சொன்னது..

வெகு அபூர்வமான சமயத்தில் எல்லோரும் ஒன்றாக உள்ளே அமர்ந்து கூட பேசிக் கொண்டிருப்பார்களாம். அது அவனுடைய மூடை பொருத்ததாம். முன்னாலேயே நந்தினி இதையெல்லாம் சொல்லி விட்டதால் அவன் அங்கே இருக்கும் சமயம் அவள் இங்கே வந்தால் கூட அவனை தொந்தரவு செய்ய மாட்டாள். அவன் வரும்வரை காத்திருப்பாள் இல்லையேல் அவனுக்கு போன் செய்து கேட்டுக்கொண்டு உள்ளே செல்வாள்..

அதேபோல அவனுடைய இன்னொரு கான்பிடன்ஷியலான இடம் அவனது தனி பொருட்கள் அடங்கிய அறை. அது எப்போதும் பூட்டியிருக்கும் திறந்திருந்தாலும் அந்த அறையினுள்ளே அவன் இருக்கும் போது யாரும் அவனை தொந்தரவு செய்யக் கூடாது. அந்த அறையை பெரும்பாலும் அவனேதான் சுத்தம் செய்து கொள்வான். அப்படி என்ன அங்கே இருக்கிறது என நந்தினியிடம் கேட்டு பார்த்தும் அவளும் தெரியவில்லை என சொல்லிவிட்டாள். ஓரிரு முறை அந்த அறையில் அப்படி என்ன இருக்கிறது என வெளியில் இருந்து எட்டி பார்த்திருக்கிறாள். மற்ற அறைகள் போல அதுவும் ஒரு அறை அவ்வளவுதான் அவளுக்கு தெரிந்தது வரை. உள்ளே பொருட்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது அவனுடைய பள்ளிக்கால மெடல்கள் ஷீல்டுகள் என குவிந்திருந்தது அவனுடைய பொக்கிஷ அறை என கூட அவள் கேலி செய்வாள். அவனும் சிரிப்புடன் ஆமாம் என சொல்வானே ஒழிய உள்ளே அழைத்ததில்லை அதனால் மேற்கொண்டு அதை பற்றி அவளும் கேட்டதில்லை..

இப்போதும் அவன் அந்த மரத்தின் உள்ளேதான் அமர்ந்திருந்தான் போன் செய்து கேட்டால் கண்டிப்பாக வரவேண்டாம் என்று தான் சொல்லுவான் அதனால் கேட்காமலேயே அங்கே போவது என முடிவெடுத்தாள். என்ன திட்டினாலும் தான் செய்த தவறுக்கு தண்டனையாக ஏற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துதான் உள்ளே சென்றாள். உள்ளே சென்று அவனைப் பார்த்த போது அவளுக்கு உருகி போனது அந்த அளவு வேதனை சுமந்த முகத்துடன் கண்மூடி இருக்கையில் சாய்ந்திருந்தான். அருவம் உணர்ந்து அவன் கண் விழித்து பார்க்க அவள் திகைத்து நின்றதும் சட்டென தனது முகத்தை மாற்றிக் கொண்டான்..

கோபத்துடன், "இங்கே ஏன் வந்த..?" எனக் கேட்டான்..

அவன் கோபம் அவளை பாதிக்கவில்லை அவன் பேச்சை விடுத்து, "இப்போ உங்களுக்கு என்னதான் கஷ்டம் ஷமி உங்க முகம் ஏன் இப்படி இருக்கு..?" என்றாள்..

இதுதான் அவள் அவனுக்கு வைத்த செல்லப்பெயர். அவர்கள் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தபோது சிண்ட்ரெல்லாவின் காதலன் பிரின்ஸ் சார்மிங் நினைவில் இவனுக்கு ஷமி என பெயர் வைத்தாள். பெயர் வைத்தாலும் அவ்வளவு சீக்கிரம் அப்படி அவனை அழைத்து விடமாட்டாள். அவனும் எவ்வளவு முறை கேட்டுப் பார்த்தும் வெட்கத்துடன் மறுத்துவிடுவாள். இப்போது அவனை சமாதானப்படுத்த வேறு வழியில்லை என்பதால் அந்த பெயரை சொல்லி கூப்பிட்டாள்..

அவன் எதுவும் பேசாமல் எழுந்து வெளியே செல்ல போகவும் அவன் கையை பிடித்து தடுத்து, "என்கிட்ட சொல்லாம எங்கயும் போக விடமாட்டேன்", எனப் பிடிவாதமாக நின்றிருந்தாள்..

"உன்கிட்ட நான் எதுக்கு சொல்லணும் நீ மட்டும் என்கிட்ட சொல்லிட்டா இங்கிருந்து போன..?"

"ஐயோ ஷமி உண்மையாவே எனக்கு இப்படியெல்லாம் ஆகும்னு தெரியாது.."

"சரி ஊருக்கு போறதுக்கு முன்னால எதுக்கு என்கிட்ட ரெண்டு நாள் பேசல..?"

அவள் சொல்ல தயங்கவும் கையை உதறிக் கொண்டு வெளியில் செல்ல போக அவள் முன்னால் நின்று இடைமறித்தாள்..

"ப்ளீஸ் ஷமி..!" என அவள் கெஞ்ச அவன் கொஞ்சமும் இளகாமல் நிற்கவும் பிறகு தலையை குனிந்து கொண்டு மெல்ல, "எனக்கு உங்ககிட்ட பேச வெட்கமா இருந்துச்சி அதனால தான் பேசல" என்றாள்..

அவன் அவளை நம்பாமல் பார்க்கவும், "உண்மை தான் ஷமி. எனக்கு அது புது அனுபவம் அதனால உங்க கிட்ட பேச தயக்கமாயிருந்துச்சி. அப்புறம் அம்மாச்சி பத்தி நியூஸ் வந்ததுக்கு அப்புறம் வேற எதுவும் யோசிக்க முடியல உடனே கிளம்பி போயிட்டோம் அதனாலதான்" என்றாள். உண்மையை சொல்லவில்லை தான் ஆனால் தயக்கமும் வெட்கமும் அவளுக்கு இருக்கத்தான் செய்தது..

அவன் இன்னும் அசராமல் நிற்கவும், "நான் இவ்வளவு தூரம் சொல்றேன் நீங்க இன்னும் பேசாம இருந்தா எப்படி..?" என்றாள்..

"பத்து நாளா எனக்கும் இப்படித்தானே இருந்திருக்கும். நீ எதுக்காக போனன்னே தெரியாமல் நான் தவிச்ச தவிப்பு எனக்கு தானே தெரியும்.."

"இப்படி ஒரு முக்கியமான காரணம் இல்லாம நான் வேற எதுக்காக போயிருப்பேன்னு நினைச்சீங்க..?" என அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்..

அவன் முகம் கசங்கி பதில் பேச திணறினான்.
"அன்னைக்கு உன் கண்ணுல சம்மதத்தை பார்த்த பிறகுதான் உன்னை நெருங்கினேன் ஆனால் மறுநாளிலிருந்து நீ என்கிட்ட பேசலன்னா நான் உன்னை நெருங்கியதும் முத்தமிட்டதும் உனக்கு பிடிக்கலைன்னு தானே அர்த்தம் எடுத்துக் கொள்ள முடியும். அதுவும் எங்க போன என்ன ஆனேன்னு தெரியாம இருக்கும்போது வேற என்ன நினைக்க முடியும்..?"

"என்னது..!?" என அவள் திகைத்து விழித்தாள்..

அடப்பாவி இப்படி கூட அர்த்தம் எடுத்துக் கொள்ளலாமா அதனால் தான் என்னை கண்டாலே ஓடி ஒளிந்தானா. இது தெரியாமல் என்னை வெறுத்து விட்டானோ என்று என்னென்னவோ எண்ணிக் கவலை கொண்டேனே. தான் ஒரு வகையான குற்ற உணர்வில் சிக்கி தவித்தாள் இவன் வேறுவிதமாக குற்ற உணர்வில் இருந்திருக்கிறானே..

புன்னகையுடன் அவன் கைகளை எடுத்து அதில் முத்தமிட்டவள், "உங்களை பிடிக்கலைன்னு சொன்னா அவ முட்டாளாத் தான் இருப்பா", என்றவள் சற்று திரும்பி நின்று "அதோடு அந்த... அதை... நான்... பிடிக்கலன்னு... எப்போ... சொன்னேன். அன்னைக்கு எனக்கும் உங்க கூடவே இருந்துடலாம்னு தோணுச்சு", அவள் கன்னம் சிவக்க திணறினாள்..

அவள் பின்புறம் திரும்பி நின்றதால் அவளை பின்னாலிருந்து இடையோடு சேர்த்து அணைத்து, "அப்படின்னா அந்த... அது... உனக்கு பிடிச்சி இருக்கா..?" என அவன் அவளை போலவே சொல்லிக் காட்டி கிண்டல் செய்தான்..

அவளை இடையோடு அணைத்துக்கொண்டு தோளில் தன் முகத்தை உரச அவள் நிற்க முடியாமல் நெளிந்தாள்..

"பதில் சொல்லுடி..!" என்க அவள் "ம்ம்" என்றாள். அதை சொல்லவே அவளுக்கு பேச்சு வரவில்லை..

"சரி அப்ப நிரூபிச்சுக் காட்டு..!"

"எப்படி..?!" என திகைத்தவள் உண்மையிலேயே புரியாமல் விழித்தாள்..

"நான் கொடுத்தத அதே ஆழத்தோட எனக்கு அத திருப்பி கொடு", என சொல்ல இனி அவன் அருகில் கூட செல்ல கூடாது என முடிவெடுத்தால் இவன் இப்படி சொல்கிறானே என அதிர்ச்சியில் உறைந்து தவித்து நின்றாள்..

அவள் தயக்கத்தை தவறாக புரிந்து கொண்டு அவன் கோபத்துடன் விலக நினைக்க சட்டென்று அவனை பிடித்து இழுத்து விலக விடாமல் அணைத்தவள் அவன் சொன்னது போலவே அவனை விட ஆழமாக முத்தமிட ஆரம்பித்தாள் அதில் அவளது மொத்த காதலும் வெளிப்பட்டது. அவள் மீது இத்தனை நாட்கள் இருந்த கோபத்தில் தான் அவன் அப்படி சொன்னது ஆனால் அவளோ அந்த இதழ் முத்தத்தின் ஆழத்தில் மொத்த காதலையும் ஏக்கத்தையும் அவனைப் பிரிந்திருந்த துக்கத்தையும் காட்ட அவன் அதில் சுகமாக மூழ்கிப் போனான்..

வெகு நேரம் கழித்து இருவரும் விலகியதும் அவள் தோளில் முகத்தை புதைத்து கொண்டவன், "நான் ரொம்பவும் பயந்துட்டேன்டி..!" என்றான்..

அவன் முகம் தோளில் தனக்கு குறுகுறுப்பை ஏற்படுத்தினாலும், "அப்படியே நான் கோவிச்சுக்கிட்டு போனாலும் என்னை தேடி கண்டுபிடிச்சி காதை பிடிச்சு திருகி கூட்டிட்டு வராம இப்படித்தான் ஹாஸ்பிடல்ல போய் படுத்துப்பிங்களா..?" என இத்தனை நாட்களாக அவனை நினைத்து அவள் பட்ட துன்பம் வார்த்தைகளில் வெளிவந்தது..

"இனிமே கோச்சிக்கிட்டு போனா அதையே செய்றேன்", என சிரித்தான்..

அவன் சிரிப்பை பார்த்ததும் தான் அவளுக்கு மனதுக்கு நிறைவாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் அவனை சிரிக்க வைத்துவிட்டு அவன் சில்மிஷங்களை தாங்க முடியாமல் கிளம்புகிறேன் என்றாள். சரி என அவனும் தலையசைக்க வெளியேற போனவளை சட்டென்று பிடித்து இழுத்து அவள் இதழில் முத்தமிட்டு அதே வேகத்தில் அவளை விடுவித்து விட்டு வெளியேறினான். அவளை விடுவித்து விட்டாலும் அவள் சிலை என நின்றிருக்க அவன் சிரிப்புடன் வெளியேறி சென்று விட்டான்..

சற்று நேரத்திற்கு பிறகு அவள் சுயநினைவுக்கு வந்து அவனை தேட அப்போதுதான் அவன் வெளியேறியதையே கவனித்தாள். இவனை என்னதான் செய்வது ஒரு பக்கம் ஆயாசமும் ஒரு பக்கம் சிரிப்புடனும் அவனைப் பின் தொடர்ந்து இவளும் வெளியேறி சென்றாள்..
 
Top Bottom