பந்தம் : 1 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பந்தம் : 1

New updates

LATEST

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,406
Reaction score
3,238
Points
113
inbound150473387861390272.jpg

ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம்

அத்தியாயம் : 1

தி
ருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ இரண்டாவது வருடம் பயின்று வருகின்ற மாணவிகளில் சிலர், தங்கள் கல்லூரிக்குப் புதியதாக வரவிருக்கும் பேராசிரியரைப் பற்றிக் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.

இன்னும் சற்று நேரத்தில் கல்லூரிக்கு வரக்கூடிய புதிய பேராசிரியர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு அவர்களிடம் காணப்பட்டது.

ரம்யா குதூகலமாக, "ஏய்! ஒரு குட் நியூஸ். புதுசா வரப்போற ப்ரொபஸருக்கு இன்னும் கல்யாணம் ஆகலையாம்" என்று கூறினாள். இதைக் கேட்டதும் அவளது பிரிவில் படிக்கும் மாணவியும், தோழியுமான தாமினி, உடனடியாக அவருக்கு ஐம்பது மதிப்பெண் கொடுத்தாள்.

"பார்க்க மிலிட்டரி ஆஃபிஸர் மாதிரி கடுமையானவரா இருப்பாராம். சிரிப்பை அவர் முகத்தில் பார்க்க முடியாதாம்" என்று ரம்யா சொல்ல, அடுத்த தோழியான ஜோதிகா "அச்சச்சோ!! அப்பச் சரியான சிடுமூஞ்சியா இருப்பாரோ? மதிப்பெண்ணில் இருபது கட் பண்ணுடி" என்றாள்.

ரம்யா தொடர்ந்து, "அவர் இவ்வளவு நாளும் வெளியூரில் இருந்துட்டு, இப்பதான் இங்க வந்திருக்காராம்" என்று கூற, தாமினி "முப்பது கூட்டுடுடி" என்று உடனே குறித்துக் கொண்டாள். ஜோதிகா, "நம்மைப் பார்ப்பதுக்காகவே வர்றார். ஜாலி ஜாலி!" என்று உற்சாகமாகக் குரல் எழுப்பினாள்.

"வாட்டச் சாட்டமா மாநிறத்தில் இருப்பாராம். ஜிம் பாடி போலக் கொஞ்சம் கூடச் சதை எக்ஸ்ட்ராவாக இருக்காதாம். பார்த்தவுடன் கன்னிப் பொண்ணுங்க எல்லாம் மயக்கம் போட்டு விழுகிற அளவுக்குக் கட்டுமஸ்தான உடற்கட்டைப் பெற்று இருப்பாராம்" என்று ரம்யா விவரிக்க, ஜோதிகா "அய்யய்யோ!! அப்ப முப்பது மதிப்பெண் போட்டுரு" என்று படபடவென கூறினாள். தாமினி உடனடியாகக் குறித்துக் கொண்டாள்.

"ஆறரை அடி உயர வாலிபன். படிக்கட்டு தேகம், பனை மரத்தை ஒத்த உடல்வாகு, இதுவரை எந்தப் பெண்களையும் திரும்பிப் பார்க்காத உத்தம சீலன்! கண்ணில் காந்தத்தை வைத்திருப்பார். அதைச் சுழற்றி அப்படியே பார்த்தார் என்றால், எதிரில் இருப்பவர்கள் அத்தனை பேரும் சரண்டர் ஆகிடுவார்களாம்"

ரம்யா பெருமிதமாக சொல்ல, தாமினியும் ஜோதிகாவும் எவ்வளவு மதிப்பெண் போடலாம் என்று பேசிக்கொண்டிருக்க, "எப்படியும் நூற்றுக்கு நூறு போட்டுடலாம்" என்று அவளே சொல்லவும் செய்தாள்.

"அப்புறம் நான் தான் அவரைச் சைட் அடிப்பேன். உங்களுக்கெல்லாம் அவர் அண்ணன். நீங்க யாரும் அவரைத் திரும்பிக் கூடப் பார்க்கக் கூடாது"

ரம்யா கூறியதைக் கேட்டு, அருகில் அமர்ந்திருந்த தோழிகள் இருவரும் அவளை முறைத்தார்கள்.

மூவரின் பேச்சுக்களையும் அத்தனை நேரமாகக் கேட்டுக் கொண்டிருந்த, அவர்களின் நெருங்கிய தோழியான ஜீவிதா வாய்விட்டுச் சிரித்தாள்.

"இங்கே என்ன படமா காமிக்கிறாங்க? நாங்க எவ்வளவு சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம். ஹெல்ப் பண்ணாம கிண்டல் பண்றது போலச் சிரிச்சிட்டு இருக்கிறியே!"

ரம்யா கடிந்து கொண்டதும், "ஏண்டி! இந்தப் படிக்கட்டு தேகம், பனை மரம் எல்லாம் எங்கேடி போயி படிச்சிட்டு வந்தீங்க? நிஜமாவே அவங்க கிட்டே அப்படித்தான் இருக்குதா இல்லையான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? தேவையில்லாம ஏன் அடுத்தவங்களை அதுவும் திருமணம் ஆகாத நபரைப் பத்தி பேசிட்டு இருக்கீங்க?" என்றாள் ஜீவிதா.

மூவரும் உடனே செவியை மூடிக்கொண்டு, "ஆத்தாடி! உன்னுடைய அட்வைஸ் மழையைப் பொழிய ஆரம்பிச்சுட்டியா? பச்சைப் பிள்ளைகள் கொஞ்சம் நேரம் ஜாலியா இருந்தா உனக்குப் பிடிக்காதே..." என்றாள் தாமினி.

"நீங்களாடி பச்சைப் புள்ளைங்க? விட்டால் இந்தக் காலேஜ்ஜையே விலை பேசி வித்துட்டு வந்துருவீங்க"

ஜீவிதாவின் கிண்டல் பேச்சைக் கண்டு கொள்ளாமல், "அப்படி இருந்தா தான் இந்தக் காலத்துல வாழ முடியும். உன்னை மாதிரி சாமியாரா எல்லாம் எங்களால் இருக்க முடியாது" என்று வம்பு பேசினாள் ஜோதிகா.

"சாமியாரா? என்னைப் பார்த்தா உங்களுக்குச் சாமியார் மாதிரியாடி தெரியுது?"

"பின்னே, இருபத்தி ரெண்டு வயதான பிறகும் காதல், கல்யாணம் எதன் மீதும் பற்று இல்லாமல் ரிஷி மாதிரி இருந்துட்டு, எங்களையும் உன்னை மாதிரியே இருக்கச் சொல்லப் பார்க்குறியே! அப்பச் சாமியார் இல்லாம வேற என்னது? அம்புட்டு அழகா அமுல் பேபி மாதிரி இருக்குற தாய் மாமனின் மகனைக் கல்யாணம் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டு இங்க வந்திருக்கே! எங்களுக்கு மட்டும் அப்படியொரு வாய்ப்பு கிடைச்சது. அப்பவே கல்யாணம் பண்ணிட்டு வீட்டுல இருந்து இருப்போமே..."

தாமினி அவளை வாரி விட்டதும், ஜீவிதாவின் முகம் வாடிப் போனது.

"ஏய்! அவளுக்குப் பிடிக்காதது பற்றிப் பேசக் கூடாதுன்னு உங்கிட்டே எத்தனை தடவை சொல்றது? ஏண்டி! சும்மா சும்மா அவகிட்டே வம்பு இழுத்துட்டு இருக்கே?" என்றாள் ரம்யா.

"பிறகு, நாம எதுவோ தப்பு பண்ற மாதிரி அவள் அட்வைஸ் செய்துட்டு இருக்கா. இதெல்லாம் இந்த வயசுல பண்ணாம எப்ப செய்றதாம்?" என்றாள் ஜோதிகா.

"இது தப்பு இல்லையாடி. யாருன்னு தெரியாத ஒருத்தரைப் பற்றிப் பேசுவதும், ரசிக்கிறதும், சிரிக்கிறதும்..."

ஜீவிதாவைப் பார்த்த மற்ற மூவரும் சிரித்தார்கள்.

"இப்ப என்ன நடந்துடுச்சுன்னு இந்த அளவுக்குப் பேசுறே? ஜஸ்ட் அவர் இப்படி இருப்பார்னு தானே சொல்லிக்கிட்டு இருக்கோம்! மத்தபடி, அவரை நாங்க சைட் அடிக்கப் போறோம். கல்யாணம் பண்ணிக்க போறேம்னா சொல்லிட்டு இருக்கோம்!"

"அதானே, விளையாட்டுப் பேச்சை விபரீதமா நினைக்கிறா பாரு. இவா… “

ரம்யாவும், தாமினியும் அவ்வாறு கூறியதும், "இந்தக் காதல் கத்திரிக்காய், சைட் அடிக்கிறது, ஜாலி அடிக்கிறது, யாருன்னு தெரியாதவரைப் பார்த்துச் சிரித்து பேசுவது எல்லாம் எனக்குச் சுத்தமா பிடிக்கல" என்றாள் ஜீவிதா.

"நீ வேணா சாமியாராக இரு. அதுக்காக எங்களையும் அப்படியே இருக்க சொல்லாதே!"

ரம்யாவின் வார்த்தையில் ஜீவிதா வாயை மூடிக்கொள்ள, அவளது கையைப் பற்றி அமைதிப்படுத்தினாள் தாமினி.

"சும்மா ஜாலியா பேசிட்டு இருப்பதை, எதுக்கு சீரியஸா எடுத்துக்கிற ஜீவிதா? காலேஜுக்கு வர்ற நேரம் மட்டும்தான் ஃப்ரீயா இருக்க முடியும். வீட்டுக்குப் போனாலே சுதந்திரம் பறி போயிடும்னு சொல்ற நீயா இப்படிப் பேசுவது?"

தாமினியைத் திரும்பிப் பார்த்து, "நான் உன்கிட்டே படிப்பு நேரமும், விளையாட்டு நேரமும், ஜாலி அடிக்கிற நேரமும், சினிமா டைமும் எதுவும் சொல்றது இல்லையே! இந்த ஆம்பளைங்களைப் பத்தி பேசுறது மட்டும் தான் எனக்குப் பிடிக்கல. எனக்குப் பிடிக்காததுக்காக நீங்களும் அதைத்தான் செய்யணும்னு நான் வற்புறுத்தல. ஆனால், என் முன்னாடி இருந்து பேசாதீங்க!" என்று கண்டிப்புடன் உரைத்தாள்.

அப்போது, அவர்களின் இன்னும் ஒரு தோழியான திலகா அவர்களுக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.

"என்னடி வீட்டில் உள்ள பெர்ஃப்யூம் எல்லாம் உன்மேல தான் இருக்குது. ஒரு டப்பா பவுடரையும் இன்னைக்கு தீர்த்துட்டு வந்துட்டியா?"

ரம்யா கிண்டலாகக் கேட்டதும், "அதுதான் புதுசா நம்ம ஜொள்ளு விடறதுக்குன்னே ஒரு ப்ரொபஸர் வரப் போறாரு இல்ல. அவர் நம்மைப் பார்த்ததும் பளிச்னு தெரிய வேணாம். அதுக்குத்தான்..." என்று அவள் கண் சிமிட்டினாள்.

ஜீவிதா முறைப்பதையும் கண்டுகொள்ளாமல் மற்ற மூவரும் சத்தமாகச் சிரித்தார்கள்.

"திலகான்னா திலகா தான்! பார்த்தியா, வந்தவுடனே சிரிக்க வச்சுட்டா. இந்தச் சிடு மூஞ்சியை மாதிரி இல்லை" என்றாள் தாமினி.

உடனே திரும்பி அவளைப் பார்த்துவிட்டு, அவளது குணம் தெரிந்ததால் "என்ன கிளாஸ் எடுத்தாளா இன்னைக்கும்?" என்று கேட்க, இருவரும் தலையசைத்தார்கள்.

"லைஃப்னா ஒரு என்ஜாய்மென்ட் வேணும்டி. சும்மா கட்டுப்பட்டியாக அடங்கி இருக்க நினைக்கக் கூடாது. உங்க வீட்டுல அப்படியொரு ரூல்ஸ் போட்டு இருந்தா அதை அங்கே வச்சிக்கோ. ஏன் போற இடத்துக்கு எல்லாம் தலையில் தூக்கி சுமந்துகிட்டு இருக்கே? லவ் இஸ் எ பியூட்டிஃபுல் ஃபீலிங்ஸ்! காதல் இல்லாம எதுவுமே இல்லை. ஒவ்வொரு மனுஷன் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு மூலையில் காதல் இருந்துட்டு தான் இருக்கும். அது பற்றித் தெரியாதவங்க தான்

'காதல் கசக்குதயா
வர வரக் காதல் கசக்குதயா
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
லபோன்னுதான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும் ...' பாடிக்கிட்டு இருப்பாங்க. நாங்க எல்லாம் காதலிக்க பிறந்தவர்கள்" என்றாள் திலகா.

அவளது குறும்புத்தனமான பேச்சைக் கேட்டு, தோழிகள் மூவரும் கைத்தட்டி பாராட்டினார்கள்.

"பார்த்தியாடி எவ்வளவு அழகா சொல்லிட்டா! கூடிய சீக்கிரமே அவள் மனதைக் கவர்கிற மாதிரி ஒருத்தர் வந்து கிடைக்கட்டும்" என்று வாழ்த்தினாள் ரம்யா.

"ஏற்கனவே நான் பலமுறை சொல்லிட்டேன். இப்போவும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க! நான் எந்தக் காலத்திலும் யாரையும் காதலிக்க மாட்டேன். யாரோட காதல் வலையில் விழவும் மாட்டேன். யாரையும் என்னைக் காதலிக்கும் விதமா நடந்துக்கவும் மாட்டேன். ஏன்னா, காதல்னா எனக்குப் பிடிக்காது. காதலிக்கிறது அவங்க விருப்பம்; அதுக்காக அவங்களை நான் குற்றம் சொல்லமாட்டேன். அதே மாதிரி என்னைக் கம்பல் பண்ற உரிமையை யாருக்கும் கொடுக்கவும் மாட்டேன்!" என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு,

"எனக்கு ஏற்கனவே மாப்பிள்ளை ரெடியா இருக்கார். அவருக்கும் எனக்கும் நிச்சயம் முடிஞ்சாச்சு. அவருக்கு நான் எனக்கு அவர்னு முடிவான பிறகு தான், படிப்பு மேலுள்ள என் ஆசையை நிறைவேத்த இங்கு அனுப்பி விட்டுருக்காங்க. இந்த நேரத்துல நான் தப்பாக ஏதாவது செய்தால், அடுத்த முகூர்த்தத்தில் எங்க தேவா அத்தானுக்கு மனைவியாக வேண்டியது வரும்! இனிமேலும் இது விஷயமா என்கிட்டே பேசாதீங்க" என்று கையெடுத்துக் கும்பிட்டாள் ஜீவிதா.

ஆனாலும், ரம்யாவின் வாய் துறுதுறுத்துக் கொண்டு வந்தது.

"இன்னும் எத்தனை நாளைக்கு தாண்டி அம்மா, வீடு கட்டுப்பாடு சொல்லிக்கிட்டே இருப்பே? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா? உங்க தேவா அத்தானை கல்யாணம் பண்ணினா, கடைசி வரைக்கும் அடங்கித் தான் இருக்கணும்! படிச்ச பொண்ணா புத்திசாலியா யோசிக்காம, நீயும் இப்படி நடந்துக்கிறியே..." என்று அவள் மீதான அக்கறையில் சொன்னாள்.

"படிப்புப் பண்பாடு நாகரிகத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும், எவ்வளவு பெருசா வளர்ந்தாலும், என்னைக்குமே எங்க அம்மாவுக்கு நான் மகள் தான்! எங்க அம்மா பேச்சை மீறி என்னால் நடக்க முடியாது. அவங்களைக் கஷ்டப்படுத்தி வரக்கூடிய காதல் எனக்குத் தேவையும் இல்லை. இனிமேலும் என்னை வம்புக்கு இழுத்தா, நான் எழுந்து வேற சீட்டுக்குப் போயிடுவேன்!" என்று கண்டிப்புடன் எழுந்தாள் ஜீவிதா.

அதேநேரம் அறைக்குள் நுழைந்தான் ஜீவகன். அறையில் உள்ள அனைவரும் அமர்ந்திருக்க, தனியாக நின்று கொண்டிருக்கும் பெண்ணை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மேடையில் உள்ள தனது இருக்கையில் சென்று அமர்ந்தான்.

"இவர்தான் புது ப்ரொபஸரா இருக்கும் போலத் தெரியுது" ஆளாளுக்கு கிசுகிசுத்துக் கொண்டு அமைதியாக எழுந்து நின்றனர்.

அவன் 'குட் மார்னிங்' என்று சொல்லிவிட்டு, அவர்களை இருக்கையில் அமரச் சொன்னான்.

அனைவரும் அமர்ந்ததும் ரம்யா, தாமினி, திலகா, ஜோதிகா நால்வரும் அவனைப் பற்றி மெதுவாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.

அவனது கண்கள் அறையில் உள்ள ஒவ்வொருவரையும் அளவெடுத்தன. அப்படியே பெண்கள் நால்வரும் அமர்ந்திருந்த பகுதியில் நோட்டமிட்டவன், அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டதும் தொண்டையைக் கனைத்தான்.

அவர்கள் நிமிர்ந்து பார்க்காமல் மறுபடியும் பேசியவாறு இருக்கவும் சத்தமாக இறுமினான். அப்படியும் அவர்கள் திரும்பிப் பார்க்காமல் இருந்ததும், எழுந்து அவர்கள் அருகில் சென்றான்.

ஜீவிதா அவனைப் பார்க்காதது போல் இருந்து கொள்ள, மற்ற நால்வரின் முன்பாகவும் சென்று நின்றான்.

நால்வரையும் எழ வைத்து, "உங்க பெயர் என்ன?" என்று கேட்டான்.

நால்வரும் படபடவென ஆங்கிலத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதும், "படிப்பை முடிச்சுட்டு என்ன வேலைக்குப் போகலாம்னு இருக்கீங்க?" என்று வினவினான்.

அவர்கள் ஆளுக்கு ஒன்றாகக் கூறியதும், "நீங்க சொன்னது மாதிரி நடக்கணும்னு நினைச்சா, இனிமேல் கிளாஸ் ரூம்ல பேசாம அமைதியா இருங்க. இல்லை, பிரின்ஸ்பாலிடம் கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்!" என்று எச்சரித்தான்.

அவர்கள் ஆவென வாயைப் பிளந்து கொண்டு நின்றதும், "உக்காருங்க. செய்றதெல்லாம் செய்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நிற்கிறதை பாரு" என்று முணுமுணுத்துக் கொண்டு சென்றான் ஜீவகன்.

"ஏண்டி! இவருக்கா போயும் போயும் நூறு மதிப்பெண் கொடுத்தோம். அதுல இருபது மைனஸ் பண்ணுடி" என்றாள் தாமினி. கூடவே ஜோதிகாவும் சேர்ந்து கொண்டாள்.

"அப்போ உங்க ரெண்டு பேருக்கும் அவர் வேண்டாம். இனிமேல் நீங்க அவரைச் சைட் அடிக்க மாட்டீங்க தானே!"

"தேவையே இல்லை எங்களுக்கு இவரு"

"அப்பாடா இப்பதான் என் மனசு குளுகுளுன்னு இருக்கு. ஏண்டி ரம்மி உனக்கு..."

"வேணும்டி! ஒரே ஒரு சமயம் அவர் கோவிச்சுக்கிட்டதால் வேண்டாம்னு எல்லாம் சொல்ல முடியாது"

"அது சரி, பட்டால் தான் திருந்துவேன்னு சொல்றவங்களை எதுவும் செய்ய முடியாது. நீ வாடி ஜோதிகா நம்ம பாடத்தைக் கவனிப்போம்" என்றாள் தாமினி.

அவர்கள் புறமாகப் பார்வையை வீசிய ஜீவகன், இவர்கள் எப்போதும் இப்படித்தானோ என்று நினைத்துக் கொண்டான். அதேநேரம் அவர்களுக்கு அருகில் அமர்ந்து, தன்னை நிமிர்ந்து கூடப் பார்க்காத பெண்ணையும் மனதில் குறித்துக் கொண்டான்.

அவனது வகுப்பு முடியும் வரை ஈ கூட அசையவில்லை. அவன் வெளியே சென்ற பிறகு அனைவரும் இயல்பாக மூச்சு விட்டனர்.

மதிய உணவு நேரம் கேன்டீனில் அமர்ந்து இருந்தார்கள். வீட்டில் இருந்து கொண்டு வந்தவர்கள் தங்களது உணவுகளை எடுத்து மேஜையின் மீது வைத்தார்கள்.

"என்ன சாப்பாடு கொண்டு வந்து இருக்கீங்க?"

ஜோதிகா எப்போதும் கேட்பது போலவே இப்போதும் கேட்டாள். உடனே அருகில் அமர்ந்திருந்த மற்ற மூவரும் தாங்கள் கொண்டு வந்தவற்றை சொல்ல, அடுத்த நிமிடம் அவரவர்க்குப் பிடித்த உணவை எடுத்து வைத்து உண்ணத் தொடங்கினார்கள்.

அந்த நேரம் ஜீவகனும் அங்கு நோக்கி வந்தான். மாணவர்கள் அவனைப் பார்த்ததும் எழுவதைக் கண்டு, "சாப்பாட்டு நேரத்தில் மரியாதை தரும் அவசியம் இல்லை" என்று லேசான முறுவலுடன் கூறினான்.

தனக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு, ஆசிரியர்களுக்கு அருகில் சென்று அமர்ந்தான்.

இவர்களுக்குப் பின்புறம் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வேண்டும் என்றே ஜீவிதாவை இடிப்பது, அவளது கூந்தலை பிடித்து இழுப்பது, நண்பர்களிடம் பேசுவது போல அவளுக்குத் தகவல் தெரிவிப்பது என்று இருந்தான் ஆல்வின்.

அவன், ஜீவிதா கல்லூரிக்கு வந்த நாள் முதல் அவள் பின்னாடியே அலைந்து கொண்டிருப்பவன். அவள் திரும்பிக் கூடப் பார்க்காத பிறகும், தான் கல்யாணம் செய்யப் போகிற பெண் இவள்தான் என்று சொல்லி, அவளை ஒருதலையாக விரும்புபவன்.

அவன் இப்படி செய்வது அவளுக்குச் சில நாட்களுக்கு முன்புதான் தெரிய வந்தது. ஆனாலும், அவனிடம் சென்று எதிர்த்துப் பேசிச் சண்டையிட மனம் வராமல் இருக்கிறாள். ஆல்வின் விஷயம் வீட்டிற்குத் தெரிய வந்தால், பல கேள்விகளுடன் கல்லூரிப் படிப்பும் நின்று போய், தாய் மாமன் மகனைத் திருமணம் செய்து கொண்டு, கிராமத்தில் கடைசி வரை வாழ நேரிடும். தான் ஆசைப்பட்ட வேலையும் பார்க்க முடியாமல் போய் விடும். ஆகவே, அவனைத் திரும்பிப் பார்க்காத வரை தொந்தரவு இல்லை என்று அமைதியாகக் காட்டிக் கொண்டாள் ஜீவிதா.

அவனோ விடாமல் அவள் பின்னாலே அலைவதை வழக்கமாக வைத்து இருக்கிறான். தோழிகள் ஆரம்பத்தில் அவனைக் குறித்துப் பேச, ஜீவிதா வெகுண்டு போனதால் அதன் பிறகு அவனுடன் அவளை இணைத்துப் பேசுவதையும் நிறுத்திக் கொண்டார்கள்.

ஜீவிதா எம்.சி.ஏ படிப்பதற்காகத் தனது கிராமத்தில் இருந்து நெல்லைக்கு வந்திருக்கிறாள். ஜோதிகாவும் அவளது குடும்பம் வெளியூரில் இருப்பதால், ஜீவிதாவுடன் ஒரே அறையில் தங்கி படித்து வருகிறாள்.

தாய்க்குப் பிடிக்காத காதலை செய்யக் கூடாது என்று அவள் அமைதியாக இருக்க, இவளது தோழிகள் நித்தமும் அதைச் சொல்லியே அவளைப் பாடாகப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவளது மனதிலும் காதல் மலர்கிறதா? எதனால் வேண்டாமென மறுக்கிறாள் என்று பார்க்கலாம்!
 
Last edited:

MRS BEENA LOGANATHAN

Well-known member
Staff member
Joined
May 14, 2024
Messages
1,035
Reaction score
710
Points
113
ஜீவிதாவின்
ஜீவன்
ஜீவகன் தானோ .....
 

Nisha Spm

Well-known member
Joined
Aug 10, 2025
Messages
582
Reaction score
367
Points
63
பேர் பொருத்தம் அருமை 😍❤
 
Top Bottom