நெஞ்சில் பதிந்த எழுத்தும்... நேர்மைமிகு பார்வையும் | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நெஞ்சில் பதிந்த எழுத்தும்... நேர்மைமிகு பார்வையும்

New updates

LATEST

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,345
Reaction score
3,210
Points
113
நெஞ்சில் பதிந்த எழுத்தும்... நேர்மைமிகு பார்வையும்…


கோயம்புத்தூரைச் சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் பசுமையான சூழலில்தான் சித்ரா சரஸ்வதி அவர்கள் பிறந்து வளர்ந்தார். பெற்றோர் இருவரும் ஆசிரியர் பணியில் இருக்க, வீட்டில் எப்போதும் புத்தகங்களின் வாசம் நிறைந்திருக்கும். சித்ரா என்பது இவரது பெயர் என்றாலும், தனக்கு வாசிப்பதற்கான முழுச் சுதந்திரத்தையும் கொடுத்து, உலகை அறிந்துகொள்ள வழிகாட்டிய தன் தாய் சரஸ்வதியின் நினைவாக, 'சித்ரா சரஸ்வதி' என்றே பெருமையோடு அடையாளப்படுத்திக் கொண்டார்.

எம்.ஏ. வரலாறு படித்து முடித்துவிட்டு, ஊரக வளர்ச்சித் துறையில் காலடி எடுத்து வைத்தவர், உள்ளாட்சித் துறையில் பணி கிரேடு அலுவலராகவும், பின்னர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் திறம்படப் பணியாற்றினார். வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லையே. நாற்பத்தேழு வயதில் கணவரை இழந்த துயரம், அடுத்த இரண்டே ஆண்டுகளில் நாற்பத்தொன்பதாம் வயதில் புற்றுநோயின் பாதிப்பு என அடுத்தடுத்து சோதனைகள் சூழ்ந்தன. ஆயினும், உறுதியோடு போராடி சிகிச்சை பெற்று மீண்டு வந்தவர், தனது ஐம்பத்திரண்டாம் வயதில் விருப்ப ஓய்வு பெற்று தற்காலிகப் பணிவாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது, அரசுப் பணியில் இருக்கும்போதே எதிர்பாராமல் காலமான தன் தம்பியின் மகனை, தன் மூத்த சகோதரியுடன் இணைந்து தாயன்போடு கவனித்து வருகிறார். தம்பியின் மறைவுக்குப் பின், அவரது மகனுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணியும் கிடைத்துள்ளது.

சித்ரா சரஸ்வதி அவர்களின் இந்த நீண்ட வாழ்வுப் பயணத்தில், நெஞ்சில் என்றும் அணையாமல் எறிந்த சுடர் வாசிப்பு மட்டுமே. "எந்த எழுத்தாளரையும் எழுத்தையும் வேண்டும் வேண்டாம் என்று ஒதுக்காதே, எல்லாவற்றையும் படி... நல்ல எழுத்து எது என்பதை நீயே தீர்மானித்துக்கொள்" என்று இவரது தாய் தந்த சுதந்திரம்தான் இலக்கிய ரசனைக்கு அடித்தளம்.

சிறு வயதில் வீட்டில் வாங்கிய குமுதம், விகடன், கல்கி போன்ற வாரப் பத்திரிகைகளும், கலைமகள் மாதாந்திரப் பத்திரிகையும், நூலகத்துடனான தொடர்பும் எண்ணற்ற தொடர்கதைகளையும் நாவல்களையும் இவருக்குள் விதைத்தன. திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டில் யாருக்கும் புத்தகங்கள் மீது ஆர்வம் இல்லாததால், வேலைக்குச் செல்லும் வரை வாசிப்புத் தொடர்பு தற்காலிகமாக விடுபட்டது. ஆனால், அரசுப் பணியில் சேர்ந்ததும் மீண்டும் வாசிப்புத் தொற்றிக்கொண்டது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இணையதளம் மூலம் டிஜிட்டல் கதைகளைப் படிக்கும் புதிய உலகத்தை இவரது மகள்தான் அறிமுகம் செய்து வைத்தார்.

வாஸந்தி, லக்ஷ்மி, அநுத்தமா, கமலா சடகோபன், அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி, சுஜாதா, கல்கி, அகிலன், சாண்டில்யன், கௌசிகன் என்கிற வாண்டுமாமா, ஜெயகாந்தன் மற்றும் பாலகுமாரன் போன்ற பழைய ஆளுமைகளின் எழுத்துக்கள் எப்போதும் இவரது வாசிப்புப் பட்டியலில் அரியாசனத்தில் அமர்ந்திருக்கும். தற்போதைய நவீன உலகிலும் இயல்பான கதைகளையும், காதலில் ஆபாசம் இல்லாமல் கண்ணியமாகச் சொல்லும் கதைகளையும் யார் எழுதினாலும் தேடிப் பிடித்துப் படிப்பது இவரது வழக்கம்.
ஒரு தேர்ந்த வாசகியாக எழுத்துலகைப் பற்றிய ஆழமான பார்வைகளும் கொள்கைகளும் இவரிடம் உண்டு.

"எழுத்தாளர்கள் எப்போதும் இயல்பாக எழுத வேண்டும்; எதிர்மறை நாயகன் என்ற ஆன்டி-ஹீரோ கதைகள் மீதோ, வாசகர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக எழுதப்படும் அதீத காதல் கதைகள் மீதோ எனக்கு உடன்பாடு இல்லை" என்று தீர்க்கமாகச் சொல்வார். தன் குழந்தைகளும் படிக்கலாம் என்ற சமூகப் பொறுப்புணர்வோடு எழுத்தாளர்கள் எழுத வேண்டும் என்பதே இவரது எதிர்பார்ப்பு.

புதிய எழுத்தாளர்களின் வருகையை ஆரோக்கியமாக வரவேற்கும் இவர், "இணைய வசதிகளைப் பயன்படுத்தித் திறமைகளை வெளிப்படுத்துவது தவறில்லை, ஆனால் நாகரிகமான கண்ணியமான எழுத்துக்களைத் தர வேண்டும். பெண்களின் முன்னேற்றம், அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், தவறான பாதையில் வழிநடத்தும் நபர்களைத் தவிர்ப்பது போன்ற கருத்துகளை எழுதலாமே தவிர, கவர்ச்சியாக எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்" என்பார். போட்டி வழிக் கதைகளில் வெறும் காதல் கதையாக இல்லாமல், ஒரு நல்ல கருத்து இருக்க வேண்டும் என்பதும், தொடர்கதைகளைச் சரியான கால இடைவெளியில் கொடுக்க வேண்டும் என்பதும் இவரது சொந்தக் கருத்து.

வாசகர்கள் கதையின் கதாபாத்திரங்களோடு தங்களை ஒப்பிட்டுப் பார்த்து, அநீதி நடக்கும்போது கோபப்படுவதும், நியாயமில்லை என்று 'பொங்குவதும்' மனித இயல்புதான். அதை எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதி கடந்து போக வேண்டுமே தவிர, வாசகர்கள் எழுத்தாளர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது முற்றிலும் தவறு என்பதை உரக்கச் சொல்கிறார். இன்று சாரல் தளம், நறுமுகை, வைகை ஆகியவற்றில் சிறந்த விமர்சனங்களுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கும் இவருக்கு, இன்றைய இளம் வாசகர்களின் வாசிப்பு மிகவும் மேலோட்டமாக இருப்பதாக ஒரு வருத்தமும் உண்டு. அவர்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

இன்றைய சூழலில் எழுத்தாளர்கள் பெருகிய அளவிற்கு வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதும், பல தளங்கள் இருப்பதால் எல்லாவற்றிற்கும் சென்று படிப்பது கடினமாக உள்ளது என்பதும் இவரது எதார்த்தமான பார்வை. நேரம் கிடைக்காததால் மட்டுமே சில நல்ல கதைகளைத் தவறவிட நேரிடுகிறது. புதிய எழுத்தாளர்கள் நீண்ட இடைவெளி விடுவதைத் தவிர்க்க, கதையை முழுமையாக எழுதி முடித்த பிறகு தளங்களில் பதிவிடலாம் என்பது இவரது ஆலோசனையாக இருக்கிறது.

முகநூலில் தனக்கு அறிமுகமான நல்ல நட்புகள் யாவும் தொடர்கதைகள் மற்றும் போட்டிக்கதைகள் படிக்க வந்த இடத்தில் மலர்ந்தவைதான் என்பதை நன்றியோடு நினைவுகூரும் சித்ரா சரஸ்வதி அவர்கள், புதிய எழுத்தாளர்கள் நல்ல கதைகள் கொடுத்தால் கண்டிப்பாக விமர்சனம் எழுதி அவர்களை ஊக்குவிக்கத் தவறுவதில்லை.
எழுத்துலகின் மீது மிகுந்த அக்கறை கொண்ட இந்த மூத்த வாசகி, இன்று எழுதிக்கொண்டிருக்கும் படைப்பாளிகளை நோக்கி அன்போடு ஒரு வார்த்தை சொல்கிறார்: "உங்கள் கதைகளை நல்ல முறையில், சோர்ந்து போகாமல் தொடர்ந்து கொடுங்கள். கண்டிப்பாக உங்கள் எழுத்து ஒருநாள் உரிய பாராட்டைப் பெறும்”
 
Last edited:

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,345
Reaction score
3,210
Points
113
சரஸ்வதியின் கையால் குட்டுப்பட வேண்டும் என்று எனக்கும் ஆசை உள்ளது
அதுக்கு அவரது அருள் பார்வை கிடைக்க வேண்டும் நண்பரே!
 
Top Bottom