நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி! - 3 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி! - 3

New updates

LATEST

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,381
Reaction score
3,229
Points
113
அத்தியாயம் : 3

விக்ரமைச் சந்தித்துப் பேசிவிட்டு காவல் நிலையத்திற்குச் சென்ற விக்னேஷ், இரவு பத்து மணிக்கு பிறகுதான் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்குக் கிளம்பினான். உடையை மாற்றி, குளியலை முடித்துக் கட்டிலில் அமர்ந்தான்.

கண்களுக்குள் சாதனா வந்து நின்றாள்; உதடுகள் புன்னகையால் விரிந்தன. இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தபோது இருந்த அதே துடுக்குத்தனமும் பயமும் இப்போதும் மாறாமல் இருப்பது, அவள் மீதான ஈடுபாட்டை மேலும் அதிகப்படுத்தியது.

அவளிடம் எதிர்த்து வாயாடும்போது உள்ளம் ஒருவித கள்வெறி கொண்டது. தன்னைப் பார்த்து அதிர்ந்து ஓடியதும், தனது கேள்விக்கு மிரட்சியுடன் பதிலளித்த விதமும் நினைக்க நினைக்கத் தித்திப்பாக இருந்தது. அவள் முகத்தையும் கழுத்து வளைவையும் ஆராய்ந்ததை நினைக்கும்போது உள்ளுக்குள் சிலிர்த்தது!

'இன்னும் பத்து நாட்களுக்குள் வந்துவிடுவாள். அதற்குப் பிறகு ஆசைப்படும் நேரமெல்லாம் பார்க்கலாம்; வாயடிக்கலாம்; வாயோடு மோதி விளையாடலாம். இத்தனை வருட பிரம்மச்சாரியம் விடைபெற்று, தானும் ஒரு குடும்ப வாழ்க்கை வாழலாம்' என்று எண்ணிக் குதூகலமடைந்தான்.

ஜவஹரைப் பற்றி நினைத்ததும் எண்ணவோட்டம் தடைப்பட்டது. இது விசயமாக அவரிடம் எப்படிப் பேசுவது? 'சாதனாவை விரும்புகிறேன், எனக்கு அவளைத் திருமணம் செய்து தாருங்கள்' என்று எங்ஙனம் கேட்பது? அத்தை உதவிக்கு வருவாரா? விக்ரம், பிரசாத் என்று பலர் இருக்கின்றனர்; இருந்தும் லேசாக உதறியது.

அவள் 'அநாதை' என்று தெரிந்த பிறகு உடைந்து அழுததும், அதற்குப் பின்னர் நடந்த எதுவும் அவனால் மறக்க முடியாதவை. அவனிடம் இருந்த கோபமும் வீம்பும் அப்படியே காணாமல் போய்விட்டன. அவனது 'சண்டிக் குதிரை' அதனால் பாதிப்படையக் கூடாது என்பதில் மட்டுமே கவனத்தைச் செலுத்த முயன்றான். மனதில் இருப்பதை மறைக்காமல் கொட்டினான்; அவளின் விழிப்பார்வைக்காகத் தவமிருந்தான். ஆனால் அவளோ, பதில் கூறாமலேயே படிப்பைத் தொடருவதற்காக வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டாள். இத்தனை நாட்களாக வராமல் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறாள்!

'அவள் எப்படியாவது வந்துவிட்டால் போதும். அதன் பிறகு தன் வழிக்குக் கொண்டு வருவது சுலபம்' என்று கருதினான்.

படிப்பை முடித்து மருத்துவராக வரும்போது அவளுக்குச் சற்றும் பொருத்தமில்லாத வகையில் தோற்றமளிக்கக் கூடாது என்று, யூ.பி.எஸ்.சி (UPSC) தேர்வை கடினப்பட்டு எழுதி வெற்றி பெற்று, காவலனாகவும் மாறிவிட்டான். இனிமேல் காதலியின் கடைக்கண் பார்வை காளையவன் மீது விழுவது மட்டுமே மிச்சம்... சொச்சம் என்று பெருமூச்சு விட்டான். அதன் பிறகு அவளைப் பற்றிய எண்ணங்களில் இருந்து மீள முடியாமல், கனவுலகில் சஞ்சாரித்தான் விக்னேஷ்.

சாதனாவும் உறக்கம் வராமல் அவனைப் பற்றிய எண்ணங்களில் மூழ்கியிருந்தாள். விக்னேஷ் முன்பை விடப் பொலிவும் வனப்பும் பெற்றுத் திகழ்வதாகத் தெரிந்தது. விழி வீச்சில் இருந்த ஈர்ப்பும், பேச்சில் தெறித்த கேலியும், அவனைப் பார்க்காமல் பேசாமல் இருந்ததால் ஏற்பட்ட கோபமும், காரமாக விழுந்த வார்த்தைகளும், சரசச் சீண்டலும் அவளை மிரண்டு போக வைத்துவிட்டன!

ஃபோனிலேயே இப்படிப் பேசுபவன், சென்னைக்குச் சென்ற பிறகு எப்படி நடந்து கொள்வானோ என்று பயமாக இருந்தாலும், குழந்தை பவித்ரா மற்றும் நந்தினியைப் பார்க்கும் ஆசையும் அவளை அலைக்கழிய வைத்தன.

பவித்ராவைச் சிறு குழந்தையாகக் காப்பகத்தில் இருந்து கொண்டு வந்த அன்று கைகளில் ஏந்தியது... பின்னர் இத்தனை நாட்களில் ஒருமுறை கூட அங்கு சென்று பார்த்தது கிடையாது. இன்று பவித்ரா பேசிய வார்த்தைகள் அவளை அப்படியே உலுக்கிவிட்டன. இதற்கு மேலும் போகாமல் எப்படி இருக்க முடியும்? அதுவும் விக்னேஷின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு என்று நினைத்து, உடனடியாகக் கிளம்ப முடிவு செய்தாள்.
ஆனால் விக்னேஷையும் ஜவஹரையும் நினைக்கும்போது கலக்கமாகவும், அப்பாவின் முன்பு வைத்து எதையாவது கூறிப் பிரச்சினையை உருவாக்கிவிடக் கூடாதே என்று பயமாகவும் இருந்தது.

படிப்பு முடிந்து இத்தனை நாட்களுக்குப் பிறகு ஊருக்குப் போகின்ற நேரத்தில் ஜவஹர், "இனிமேல் என்னை விட்டு எங்கேயும் போகக் கூடாது. இங்கேயே உள்ள மருத்துவமனையில் இருந்து தொடர்ந்து வேலையைப் பார்" எனச் சொல்லிவிடுவாரோ என்று அச்சமாகவும் இருந்தது. இத்தனை வருடங்களாக அவருடைய வார்த்தையை மீறாமல் வாழ்ந்து வந்துவிட்டாள். 'இப்போது அப்பாவா? அல்லது விக்னேஷா?' என்று ஒரு முடிவிற்கு வராமல் தள்ளாடினாள்.

அன்று தான் யாரென்று தெரிந்த பிறகு வாழ்க்கையின் மீது பிடிப்பே இல்லாமல் இருந்தவளை எப்படியெல்லாம் பேசி ஆறுதல்படுத்தினார் ஜவஹர்! அப்படிப்பட்ட ஒரு உன்னதமான மனிதருக்கு மகளாகப் பிறக்கவில்லையே என்ற ஏக்கம் இப்போதும் தோன்றாமல் இல்லை. மகாலெட்சுமி, நந்தினி தன் மகள் என்று தெரிந்த பிறகும், இரண்டு மகள்களையும் பாகுபாடு பாராமல் நடத்தி வருகிறார்.

நந்தினி வீட்டில் இல்லை; குழந்தை பராமரிப்பு முழுவதும் விக்ரமும் அமராவதியும் என்று தெரிந்த பிறகும், சாதனா உடனேயே வசித்து வருகிறார். அவளை எதற்காகவும் கட்டாயப்படுத்துவது கிடையாது. நந்தினி படிப்பு, பயிற்சி எனச் சென்றுவிட்டு இதோ மறுபடியும் வரப்போகிறாள். நந்தினியையும் பவித்ராவையும் பார்க்கும் ஆசை கடலளவு இருந்தும், அனைத்தையும் அடக்கிக்கொண்டு தன்னை அமைதியாகக் காட்டிக்கொள்கிறார்.

பிரசாத் தன் தாயாரைப் பார்க்காமல் இருக்க முடியாமல் அடிக்கடி வந்து செல்கிறான்; தினமும் கைப்பேசியில் உரையாடுகிறான். சாதனாவிடம் கனிவு கலந்த வார்த்தைகளை உச்சரித்து, "சென்னைக்கு வா... நாம எல்லாருமா சேர்ந்து முன்ன மாதிரி இருக்கலாம்" என்று அழைப்பு விடுக்கிறான். விக்ரம் தன் மாமனாரின் வீட்டில் வசித்துச் சொத்துகளை நிர்வகித்து வருவதால், அவனுடைய வீட்டில் திருமணமாகிச் சில மாதங்களே ஆன விவேக், தன் மனைவியை அழைத்து வந்து பிரசாத்துடன் தங்கியிருக்கிறான்.

அப்படிக் குடும்பமே அவள் மீது அன்பையும் பாசத்தையும் கொட்ட, அதற்குக் காரணமானவளோ ஊருக்குப் போகாமல் அங்கேயே வசித்து வருகிறாள். ஆனால் அதற்கான காரணத்தை அறிந்திருந்த விக்னேஷ், சாதூர்யமாகச் செயல்பட்டு அவள் வாயாலேயே "வருகிறேன்" என்று சொல்ல வைத்துவிட்டான்!

மேலும் ஒரு வாரம் கடந்தது. விக்னேஷ் கைப்பேசியின் வழியாக வந்த தகவலை அறிந்து சீற்றம் தாளாமல் இருந்தான். காலை நேரம் பள்ளிக்குச் சென்ற மாணவியை இரவு நேரமாகியும் காணவில்லை! பெற்றோர் வேலைக்குச் சென்று வருவதால், வழக்கமாகப் பள்ளி மற்றும் சிறப்புப் பயிற்சி மையத்திற்குச் (Tuition Centre) சென்றுவிட்டு வரும் மகளைக் காணாமல், அவளுடன் போய் வருகின்ற மாணவிகளிடம் விசாரித்தனர். அதில் "அவளைப் பள்ளி முடிந்த பிறகு பார்க்கவில்லை, சிறப்புப் பயிற்சி வகுப்பிற்கும் வரவில்லை" என்று தெரியவந்தது.

உடல்நிலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதால் போகாமல் இருந்துவிட்டாளோ? வீட்டிலும் காணவில்லையே என்று நினைத்து அருகில் உள்ள வீடுகள், வகுப்பு மாணவிகளில் தெரிந்தவர்கள், தோழிகள் வீட்டிற்குச் சென்று விசாரித்தனர். எங்குமே அவளைப் பற்றிய தகவல்கள் சரியாகக் கிடைக்காத நிலையில், அக்கம் பக்கத்தில் உள்ள சிலருடன் இணைந்து பள்ளிக்குச் சென்றனர்.

காவலாளி, "பள்ளியில் யாரும் இல்லை, அனைவரும் மாலையில் சென்றுவிட்டனர்" என்று கூறிவிட்டதால், பீதியில் உறைந்து போன மாணவியின் பெற்றோர் உடனடியாகக் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று விசயத்தைச் சொல்லிவிட்டு கதறினார்கள். அனைத்து விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்த கோகுல், உடனடியாக விக்னேஷிற்குத் தகவலளித்தான். நடந்த விசயத்தை அறிந்த விக்னேஷ் விக்ரமிற்குத் தெரிவித்தான். அவன் பள்ளிக்குச் சென்று பார்ப்பதாகக் கூறியதும், கோகுலை ஒருசில காவலர்களுடன் சிறப்புப் பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைத்தான். அடுத்த நிமிடம் மாணவியின் வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டான்.

வீடு முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கடிதம் ஏதாவது கையில் அகப்பட்டதா? டைரி எழுதும் பழக்கம் இருக்கிறதா? காதல் விவகாரமா அல்லது கடத்தலா? பாலியல் ரீதியான தாக்குதலில் காணாமல் போய்விட்டாளா? பக்கத்து வீடுகளில் தங்கும் பழக்கம் உண்டா? என்று பல கோணத்தில் விசாரணை நடத்தினர்.

நேரம் கடந்தது; காவலர்களின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்தது. அப்போது, அவள் வீட்டிற்குச் சற்றுத் தொலைவில் உள்ள கழிவுநீர்த் தேக்கத்தைப் பார்த்துவிட்டுத் தகவல் கூறினர். உடனடியாக அங்கு சென்ற விக்னேஷ், உள்ளே இறங்கித் தேடிப் பார்க்கச் சொன்னான். சற்று நேரத்தில் இருளைப் போக்குவதற்காகச் சுற்றிலும் விளக்குகள் ஒளிரவிடப்பட்டன.

கழிவுநீரில் இறங்குவதற்குரிய ஆட்கள் வரவழைக்கப்பட்டுத் தேடியதில், ஒரு மணி நேரத்தில் மாணவியின் உயிரற்ற உடல் கைப்பற்றப்பட்டது! உடனே தூக்கி வந்து தரையில் கிடத்தினார்கள். தடயவியல் துறையைச் (Forensic department) சார்ந்தவர்கள் அவள் உடலில் ஏதாவது கைரேகை, காயம், கீறல்கள் தென்படுகிறதா என்று பரிசோதித்தனர்.

பின்னர், அவசர ஊர்தியில் (Ambulance) ஏற்றப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மாணவியின் உயிரற்ற உடலைப் பார்த்த நேரத்திலிருந்து எழுந்த வீட்டாரின் கதறல் சத்தம், வாகனம் அங்கிருந்து அகலும்போது அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது. விக்னேஷ் விழிகளில் கோர்த்த நீருடன் காரில் ஏறினான். விக்ரம் அவன் தோள்களில் தட்டிச் சமாதானப்படுத்தினான்.

அன்று இரவு உறக்கம் தொலைந்துவிட்டது. மறுநாள் பிரேதப் பரிசோதனையில் (Post-mortem Report) என்ன விதமான பதில் வருமோ என்று தவிப்பாக இருந்தது. காலையிலேயே எழுந்து சென்றுவிட்டான். 'கால் இடறி விழுந்திருப்பாளா? இல்லை யாரேனும் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டு அப்படி ஆகியிருக்குமா? அல்லது தவறாக ஏதேனும் நடந்த பயத்தில் தற்கொலை செய்திருப்பாளா?' என்று பல கேள்விகள் எழுந்தன.

நேற்றிரவு இருளில் பார்த்தது; பகலில் சென்று பார்க்கும் எண்ணத்துடன் மாணவியின் வீட்டிற்குச் சென்றான். படிப்பு முதல் நெருங்கிய நட்பு என்று மறுபடியும் கேட்டுக்கொண்டு அவள் அறையைக் கவனமாக ஆராய்ந்தான். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அவள் பள்ளிக்குச் சென்ற பின் வீட்டிற்கு வந்ததை யாருமே பார்த்திருக்கவில்லை. அடுத்து, புத்தகப்பை வீட்டில் காணப்படவில்லை. பிறகு எப்படிச் சடலம் மட்டும் வீட்டிற்குப் பின்பகுதியில் கிடைத்தது என்ற யோசனையுடன் அங்கு சென்று ஒவ்வொரு இடங்களையும் சந்தேகக் கண்ணுடன் ஆராய்ந்தான்.

போலீஸ் நாய் கொண்டு வரப்பட்டது. சற்று நேரம் மாணவி பூவிழியின் உடல் கிடைத்த இடத்தில் மோப்பம் பிடித்துக்கொண்டு, கழிவுநீர்த் தேக்கத்திலிருந்து மூன்று தென்னைத் தோப்புகளுக்கு அப்பால் உள்ள சாலைக்குச் சென்றதும் நின்றுவிட்டது. அப்படியானால் யாரோ அவளை உயிரற்ற சடலமாகக் கொண்டு வந்து, கழிவுநீர்த் தேக்கத்தில் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்!

அது யாராக இருக்கும்? கொலையாளி அவள் வீட்டின் அருகில் உள்ளவரா? அல்லது பள்ளி, சிறப்புப் பயிற்சி மையத்திற்குப் போகும் இடத்தில் இருப்பவரா? விசாரணையைப் பள்ளியில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமோ என்று சிந்தனையில் ஆழ்ந்தான். சாலையில் கார் சக்கரம், நபர்கள் நடந்து சென்றதற்கான அடையாளங்கள் தெரிகிறதா என்று பார்த்தான். கோகுலை அழைத்து, அந்தச் சாலையின் இரண்டு பகுதிகளும் எதை நோக்கிச் செல்கின்றன, அங்கு வீடுகள் இருக்கின்றனவா, வாகனம் சென்றதைப் பார்த்தவர்கள் உள்ளனரா, வழியில் வீடியோ பதிவுகள் ஏதாவது தென்படுகிறதா என்று அனைத்தையும் தெரிந்துகொண்டு வரச் சொன்னான்.

அங்கிருந்து நேராகப் பள்ளிக்குச் சென்றான். தலைமையாசிரியரிடம் பேசிவிட்டு, வகுப்பு ஆசிரியர்கள் அனைவரையும் வரச் செய்து விசாரணையைத் தொடங்கினான். வகுப்பு மாணவிகள், நெருங்கிப் பழகிய தோழிகள், ஆண் நட்புகள், மற்ற ஆசிரியர்கள், பள்ளியில் பணிபுரியும் பியூன், காவலாளி எல்லோரிடமும் விசாரணை நடைபெற்றது. பள்ளி வளாகம் முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

விக்ரம், ஈஸ்வருடன் சேர்ந்து கொண்டு மற்றொரு பக்கம் அதிரடியாக விசாரணையை ஆரம்பித்திருந்தான். சிறப்புப் பயிற்சி மையம், சாலையோரம், பள்ளியின் முன்பு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி (CCTV) கேமரா பதிவுகள் பலவும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. நேற்று மாலை நேரம் அவள் வெளியே செல்வதற்கான சான்றுகள் அதில் கிடைக்கவில்லை. அப்படி என்றால் மாணவி பள்ளியின் முன்புறமாக வெளியேறவில்லை; சிறப்புப் பயிற்சி மையத்திற்கும் போகவில்லை; பள்ளியில் இருந்தே காணாமல் போயிருக்கிறாள் என்பது தெரியவந்தது!

விக்ரம் தனக்குத் தெரிந்த தகவல்களைக் கூற, விக்னேஷ் தானும் கண்டுபிடித்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டான். குற்றவாளி கண்ணுக்கு எட்டிய தொலைவில் உள்ளவராகவும் இருக்கலாம், இல்லை விசாரணை வளையத்தில் சிக்கி மறுத்தவராகவும் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றியது.

கோகுல், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்துவிட்டதாகக் கூறியதும் அதை நோக்கி விரைந்தனர். உடனடியாக அறிக்கையை வாங்கிப் பார்த்ததில், மாணவியின் மரணம் தன்னிச்சையாக நிகழ்ந்தது என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது! அதாவது, கால் தடுக்கிக் கழிவுநீர்த் தேக்கத்தில் விழுந்ததால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் மரணம் நிகழ்ந்திருப்பதாகக் கூறியிருந்தார்கள்.

ஆனால் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இயற்கையான மரணமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகத் தெரிந்தன. மாணவியின் உடை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதுடன், உடலில் ஏற்பட்ட காயங்களைப் பற்றிய தகவல்கள் தடயவியல் அறிக்கையில் வேறு விதமாகக் கூறப்பட்டிருந்தது.

உடனே விக்ரமிடம் நடந்த விபரங்களைக் கூறினான் விக்னேஷ். பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியில் பணிபுரிபவர்கள் மாணவியின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை அறிந்துகொள்ளத் திரளாகக் குவிந்தனர். கோகுல் அவர்களை அழைத்து ஒரு பக்கமாக நிற்க வைத்திருந்தான். நேற்றிரவிலிருந்து மாணவியின் மரணம் தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்தியாகவும் விவாதப் பொருளாகவும் மாறியது. உடனுக்குடன் விசயத்தை ஒளிபரப்பித் தங்களுடைய தொலைக்காட்சியின் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஏற்கனவே கோபத்தில் இருந்த விக்னேஷ், அவர்களைக் கண்டதும் சீற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வந்தான். வேகமாக அவனை எதிர்கொண்ட விக்ரம் அமைதியடையச் செய்துவிட்டு, "விசாரணை இன்னும் முடியல. தொடர்ந்து நடைபெறும். அதுவரை கொஞ்சம் அமைதியா இருங்க" என்றான்.

"என்ன சார் சொல்றீங்க? நேத்து மாலையில இருந்து காணாம போன மாணவி கழிவுநீர்த் தேக்கத்துல பிணமா மீட்கப்பட்டு, இதோ பிரேதப் பரிசோதனையும் முடிஞ்சுடுச்சு... இறந்து போன மாணவி எப்படி இறந்தாள்னு தெரிஞ்சுக்கக் கேட்டா இப்படிப் பதில் சொல்றீங்களே? எங்களுக்கும் கொஞ்சம் உதவி பண்ணுங்க. நாங்களும் உண்மையை தெரிஞ்சுக்கணும்னு தானே நேத்துல இருந்து அலையுறோம்" - பிரபல நாளிதழுக்குச் செய்தி சேகரிக்க வந்திருந்தவர் கூறினார்.

விக்னேஷ், "நடந்து முடிஞ்ச போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்ல எங்களுக்கு முழுத் திருப்தி இல்லை. மறுபடியும் செய்த பிறகே உண்மையான நிலவரம் தெரியவரும். அதுவரை தொந்தரவு பண்ணாதீங்க" என்று கூறிச் சென்றுவிட்டான்.

நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விக்ரம் வாதாடினான். மாணவியின் பெற்றோர், விக்னேஷ், தடயவியல் நிபுணர், பிரேதப் பரிசோதனை நடத்திய அனைவரிடமும் விசாரணை நடைபெற்றது. வழக்கை முழுவதுமாக விசாரித்த நீதிபதியின் உத்தரவின் பேரில், ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர், அரசு மருத்துவர்கள் மூன்று பேர் கொண்ட குழு முன்னிலையில் மாணவியின் உடல் மறுபிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.

விக்னேஷ் எழுந்து சென்றான். தவறான அறிக்கை தயார் செய்து குற்றவாளிகள் தப்பிக்க உதவி செய்த அனைவரையும் கைது செய்து, தானே உண்மையைக் கண்டுபிடிக்க முயல்வதாகக் கூறினான். நீதிபதி, "இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்கான அறிக்கைகள் வந்த பிறகு அது பற்றி விரிவாக விவாதிக்கப்படும். அதற்கு முன் கைது செய்வதற்கு அனுமதியளிக்க முடியாது. வேண்டுமானால் தாராளமாக விசாரணையை மேற்கொள்ளலாம்" என்றார். அவன் தலையசைத்து அமர்ந்தான்.

மறுநாள் காலை நேரம் மருத்துவமனைக்குச் சென்று, போலியாக அறிக்கை தயாரித்த மருத்துவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தான் விக்னேஷ்.

"உங்க மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் நாணயமானவர்கள், காசு பணத்துக்கு அடிமையாகிப் பொய் அறிக்கையை கொடுக்க மாட்டார்கள், இதுல ஏதோ சூழ்ச்சி இருக்குன்னு சொன்னீங்களே... இப்போ என்ன சொல்ல போறீங்க? அரசாங்கத்துல உயர்ந்த பதவியில இருப்பவர்கள் தவறு செஞ்சா வெளியே வராது. அதே ஏழை ஒருவன் செஞ்சா வீதி வீதியாகத் தூற்றப்படுவான். இல்லை, அப்படியொரு சம்பவமே நடக்கலன்னு திரித்துக் கூறி அந்த வழக்கை, மாணவியின் இறப்பை ஒன்றுமே இல்லாதது போல் ஆக்கிடுவாங்க!"

"ஒரு மனிதன் பிறப்பிலும் இறப்பிலும் போகும் இடம் மருத்துவமனை. தாயின் கருவறையிலிருந்து கல்லறைக்குள் போகும் வரை மருத்துவரின் உதவியால்தான் வாழ நேர்கிறது. நோயில் விழுபவரை, விபத்தில் காயமுற்று வருபவரை, தீராத வியாதியால் அவதியுறுபவரை, இறக்கும் தறுவாயிலும் எழ முடியாமல் கிடப்பவரை, பிறர் பார்க்க முடியாத அளவுக்கு நோயால் துடிப்பவராக இருந்தாலும், முகம் சுளிக்காமல் உள்ளார்ந்த அன்புடன் பேணிப் பாதுகாப்பது மருத்துவத் தொழிலைச் சார்ந்தவர்கள்! அப்படிப்பட்ட துறையில் உதித்த இதுபோன்ற புல்லுருவிகள் அனைத்தும் களையெடுக்கப்பட வேண்டியவை" ஆக்ரோஷமாக கூறிவிட்டு நிமிர்ந்தவன் விழிகளில், அவனையே பார்த்து நின்ற சாதனா விழுந்தாள்!

அங்கு அவளை எதிர்பாராத விக்னேஷ், கண்களில் அணிந்திருந்த கூலரைக் கழற்றினான். நான்கு விழிகளும் எதிரும் புதிருமாக மோதி நின்றன!
 
Top Bottom