நினைவு 25 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நினைவு 25

New updates

LATEST

Kani Suresh

Member
Joined
Feb 1, 2026
Messages
38
Reaction score
63
Points
18
காவியாவின் பிறந்த வீட்டை அடைந்ததும் இருவரையும் ஆரத்தி எடுத்து வரவேற்று, தண்ணீர் கொடுத்தனர். அங்கிருந்த சில நெருங்கிய உறவினர்கள் இருவரிடமும் நலம் விசாரித்தனர்.

“நாங்களே வந்துட்டோம். நீ வர்றதுக்கு லேட்டாடா?” என்று தருண் மாதவனைப் பார்த்துக் கேட்க, நிலா உடனே அவனை முறைத்தாள்.

அதைப் பார்த்த மாதவன் அவளைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தான்.

“அசதியா இருக்கும் இல்ல?” என்று நிலா சொல்ல,

“அசதியா இருந்திருக்கும். இவனுக்கா சொல்லவே இல்ல?” என்று தருண் மெதுவாக முணுமுணுக்க,

“அடி வாங்கப் போறீங்க தருண்...” என்று நிலா சிரித்தாள்.

மாதவன் மட்டும் காவியாவைப் பார்த்தபடி சிரித்துக்கொண்டிருந்தான். அவன் பார்வையை உணர்ந்தவள், “என்ன?” என்று கண்களாலேயே கேட்க, அவன் ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்தான்.

காலை உணவை அனைவரும் ஒன்றாகச் சாப்பிட்டனர். அதன் பிறகு சில நெருங்கிய உறவினர்கள் விடைபெற்றுச் சென்றனர்.

தருணின் பெற்றோரும்,

“நிலாவுக்கும் கொஞ்சம் அசதியா இருக்கு. நாங்க வீட்டுக்குக் கிளம்புறோம். தப்பா எடுத்துக்காதீங்க,” என்றனர்.

“அதனால என்ன மா... நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. மதியம் நான் அவர்கிட்ட சாப்பாடு கொடுத்து அனுப்புறேன்,” என்றாள் சிந்து.

“அதெல்லாம் வேணாம் சிந்து. இருக்க வேலையே பாரு. ஒரு காப்படி போட்டாலே எங்க நாலு பேருக்கும் வெல்லாதி வெல்லம். அதுவே போதும்” என்று சொல்லிக்கொண்டே தருணின் குடும்பத்தினர் கிளம்பிவிட்டனர்.

“ரொம்ப அசதியா இருக்கும். நீங்க போயிட்டு படுங்க தம்பி” என்று சிந்து சொல்ல,

“அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா” என்றான் மாதவன்.

அப்போது காவியா சட்டென,
“ஆமா அண்ணி... நைட் சரியா தூங்கவே இல்லை.”

சிந்து உடனே சிரிக்க, தான் சொன்னதை உணர்ந்த காவியா நாக்கைக் கடித்துக்கொண்டு தலைகுனிந்தாள்.

மாதவனும் சிரித்துக்கொண்டிருந்தான்.

“எதுக்கு சிரிக்கிறீங்க?” என்று அவனை முறைத்தாள்.

“நான் எதுவும் சொல்லலையே.”

“எல்லாம் உங்களாலதான்.”

“நான் என்ன பண்ணேன்?”

“சும்மா சிரிக்காதீங்க.”

“சரி, சரி... நீ போய் ரெஸ்ட் எடு.”

“சரி... நான் ரூமுக்குப் போறேன்,” என்று சங்கடத்துடன் அவள் நகர, மாதவனும் பின்னால் சென்றான்.

அறைக்குள் வந்ததும் அவள் மெதுவாக,

“நீங்க சொல்லியிருக்கலாம் இல்ல... எல்லாரும் தப்பா நினைச்சிருப்பாங்க.”

“அப்படி எல்லாம் நினைக்க மாட்டாங்க. நீ சாதாரணமா சொன்னதை அப்படியே விட்டுடுவாங்க.”

“எல்லாம் உங்களாலதான்.”

அவன் புன்னகைத்ததும், அவளது முகத்திலும் சிறிய சிரிப்பு மலர்ந்தது.

“சரி... தூங்கு. ரெஸ்ட் எடு.”

அப்போது வெளியிலிருந்து,
“அத்தை...” என்று குகன் அழைத்தபடி வந்தான்.

“வாடா குகன் குட்டி,” என்று மாதவன் அவனை அழைக்க,

“எனக்கு சாக்கி வாங்கிட்டு வரலையா?”

“சாக்கி இருக்கட்டும். முதல்ல அது என்ன... உங்க அத்தையை மட்டும் அத்தைன்னு கூப்பிடுற? என்னை மாமான்னு கூப்பிட வேண்டியதுதானே?”

குகன் காவியாவைப் பார்த்தான்.

அவளும் ‘மாமா சொல்லுடா’ என்பது போல் கண்மூடி திறக்க,

புன்னகையுடன், “மாமா...” என்றான் குகன்.

“குட் பாய்!”

காவியா அவனைப் பார்த்து சிரிக்க, குகன் இருவரையும் பார்த்தபடி,

“மாமா!” என்று மீண்டும் அழைத்தான்.

“ஹ்ம்ம்... இப்போ சரியா இருக்கு.”

“குகனுக்கு சாக்லேட் கொடுக்கலாமா? "

"அத்தைக்கு?” என்றான்.

“அத்தைக்கும் இருக்கு. நீ சாப்பிடு,” என்றவன் காவியாவிடமும் ஒன்றைக் கொடுத்தான்.

“எனக்குமா?”

“உனக்கு இல்லாம யாருக்கு?”

அவள் அதை வாங்கிக்கொள்ள, அவன் விரல்கள் அவளது விரல்களை லேசாகத் தொட்டன.

இருவரின் பார்வையும் ஒரு நொடி சந்தித்தது.

காவியா உடனே சாக்லேட்டை பார்த்தபடி புன்னகைத்தாள்.

சிறிது நேரத்தில் குகனுடன் விளையாடிக்கொண்டிருந்த காவியா, அவனோடு சேர்ந்து குழந்தையாகச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

அவளை அப்படிப் பார்த்த மாதவனின் முகத்திலும் ஒரு புன்னகை மலர்ந்தது.

மதிய உணவும் முடிந்ததும் அருகில் இருந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். மாலை வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

இரவு உணவுக்காக சிந்து சமையலறைக்குச் செல்லும்போது,

“தம்பி, உங்களுக்கு என்ன சமைக்கட்டும்? உங்களுக்கு என்ன பிடிக்கும்?” என்று மாதவனிடம் கேட்டாள்.

“அக்கா, சாப்பாட்டு விஷயத்துல நான் பெருசா எதுவும் பார்க்க மாட்டேன். எல்லாமே சாப்பிடுவேன்.”

“நீங்க குகனுக்கு என்ன பிடிக்குமோ அதை செய்யுங்க."

"அவன் நாலு வாய் சாப்பிடப் போறான். அவனுக்கு பிடிச்சது என்ன?” என்று சிந்து சொல்ல

“அப்போ மாமா, காவியாவுக்கு, உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதையே செய்யுங்க,” என்றான் மாதவன்.

“அவருக்கும் காவியாவுக்கும் சப்பாத்தியும் பன்னீர் பட்டரும் ரொம்பப் பிடிக்கும். விரும்பிச் சாப்பிடுவாங்க.

எனக்கு உங்களை மாதிரி பெருசா சாப்பாட்டுல இதைக் கொடுத்தாதான் சாப்பிடுவேன் அப்படின்னு எதுவும் இல்ல. எல்லாமே சாப்பிடுவேன்.”

“பொய் சொல்றாங்க. அண்ணிக்கு சப்பாத்தியும் கொண்டைக்கடலை போட்டு வச்ச மசாலா குருமாவும் ரொம்பப் பிடிக்கும். அம்மா இருக்கிற வரைக்கும் அவங்களுக்காகத் தனியா செய்வாங்க. இப்போ எங்களுக்காக மட்டும் செய்றாங்க,” என்றாள் காவியா.

“உங்களுக்கு பிடிச்சதையும் சேர்த்து செய்யலாம். வாங்க, நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்,” என்றான் மாதவன்.

சப்பாத்தி மாவை சிந்து பிசைய அமர்ந்திருக்க, அவளிடமிருந்து மாவை வாங்கி மாதவனே பிசையத் தொடங்கினான்.

அவனது செயலைப் பார்த்த அண்ணன், தங்கை இருவருக்குமே ஆச்சரியமாக இருந்தது.

“நானே பண்றேன்” என்று சிந்து சொல்ல,

“நான் செஞ்சுக்கிறேன் அக்கா.”

“காவியா கூட பேசிட்டு இருங்க.”

“லைஃப் லாங் பேசிக்கிட்டேதானே இருக்கப் போறோம். இப்ப எல்லாரும் ஒண்ணா இருக்கும்போது ஜாலியா பேசிக்கிட்டு இருப்போம்” என்றான் மாதவன்.

அதன் பிறகு மாதவனும் சிந்தும் சிரித்துப் பேசியபடியே சமையல் செய்தனர்.

இதற்கு முன்பு இருவரும் போனில் பேசிக்கொண்டபடியே அவரவர் வீட்டில் இரவு உணவு செய்திருக்கிறார்கள். ஆனால் இன்று, நேரில் அருகருகே நின்றபடி சிரித்துப் பேசியவாறே சமையல் செய்தனர். அதை பார்த்த அண்ணன், தங்கை இருவருக்கும் மனதில் மகிழ்ச்சி.

அனைவரும் இரவு உணவை முடித்த பிறகும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

இரவு பதினொரு மணியைத் தாண்டியதும் சிந்து,

“நேரம் ஆகுது. போய் தூங்குங்க. காலையில பேசலாம்” என்று அனைவரையும் அனுப்பி வைத்தாள்.

அறைக்குள் வந்த காவியா, மாதவனைப் பார்த்தபடி,

“உங்களுக்கு நல்லா சமைக்க வரும் போல...”

“அப்படியா?”

“ஆமாம். பின்ன இல்லையா?”

“அப்படியெல்லாம் இல்ல காவியா. சமைப்பேன், அவ்வளவுதான். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு. செஞ்சு தரேன் தினமும்.”

“இதுக்குப் பேர் தான் தன்னடக்கமா?” என்று சிரித்தாள்.

அப்படியே ஒருவரை ஒருவர் பற்றி சிறுசிறு கேள்விகள் கேட்டுப் பேசிக்கொண்டிருந்த இருவருக்கும் நேரம் சென்றதே தெரியவில்லை.

அன்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தது சாதாரண விஷயங்கள்தான்.

ஆனால், அந்தச் சாதாரண பேச்சுக்குள்ளேயே கணவன், மனைவி என்ற புதிய உறவின் நெருக்கம் மெதுவாக வளர்ந்துகொண்டிருந்தது.

மறுநாளும் வீட்டில் இருந்தபடியே நேரம் சென்றது. மாலை அனைவரும் கோவிலுக்குச் செல்ல முடிவு செய்தனர்.

காவியா புடவை அணிந்து மாதவனுடன் பைக்கில் சென்றாள்.

மறுபுறம் விஷ்ணு, சிந்து, குகனுடன் வந்தனர்.

கோவிலில் இறங்கும்போது காவியாவின் புடவை சற்று கீழே இறங்கியிருந்தது. அவள் கால் பட்டு, மடிப்புகள் லேசாக அவிழ்ந்துவிட்டன.

“அச்சோ...” என்று அவள் பதற,

“பார்த்து வரமாட்டியா காவியா?” என்று விஷ்ணு கேட்க,

“புடவை புதுசு. அதிகமா கட்டிப் பழக்கம் இல்லை. அதுவும் பைக் டிராவல்... அதனாலதான்.”

“நான் பார்த்துக்கிறேன்” என்று மாதவன் உடனே கீழே அமர்ந்து அவளது புடவையின் மடிப்புகளைச் சரிசெய்தான்.

அவள் சுற்றிலும் பார்த்தாள்.

“எல்லாரும் பார்க்கிறாங்க...”

“பார்க்கட்டும். இதுல என்ன?” என்றவன், கீழே மடிப்புகளைச் சரியாகப் பிடித்தான்.

பிறகு அவளைப் பார்த்து,
“மேல நல்லா இழுத்து சொருகுவியா?” என்று கேட்டான்.

அவளோ ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தபடி விழிக்க, மாதவன் சிந்துவைப் பார்த்தான்.

சிந்து அவளுக்கு நன்றாக எடுத்துக் கொடுத்து, “இதை இடுப்புல ஒழுங்கா சொருகிக்கோ” என்றாள்.

காவியா சரியென்று தலையாட்டி புடவையைச் சொருகிக்கொண்டாள்.

அவள் மாதவனைப் பார்த்தாள்.

அவன் மிகவும் இயல்பாகச் செய்துகொண்டிருந்தான்.

“நல்ல பழக்கம் போலையே மாதவா?” என்று விஷ்ணு கேட்டான்.

“அம்மாவுக்கு காட்டன் சாரிதான் ரொம்பப் பிடிக்கும். மடிப்பு சரியா நிற்காது. அதனால அடிக்கடி நான்தான் எடுத்துவிடுவேன்.”

அவன் சொல்லிவிட்டு முன்னால் செல்ல, காவியா அவனைப் பார்த்தபடி நின்றாள்.

அவளது முகத்தில் மிதமான ஒரு புன்னகை.

அவன் தன்னைப் பார்த்துக்கொள்வது மட்டும் அல்ல... தன் சிறிய அசௌகரியத்தைக்கூட கவனிப்பதை அவள் மெதுவாக உணர ஆரம்பித்திருந்தாள்.

அனைவரும் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.

பிரசாதம் வழங்கிக்கொண்டிருந்தபோது,

“ஹே... சர்க்கரைப் பொங்கல்!” என்று காவியா குழந்தை போல உற்சாகமாகக் கூறி இரண்டடி எடுத்து வைக்க,

விஷ்ணு சிரித்தபடி அவளது கையைப் பிடித்தான்.

“சின்னப்புள்ள நினைப்பா காவியா?”

அவள் அவஸ்தையுடன் அவனைப் பார்க்க,

“சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுறதுக்கு சின்னப் பிள்ளை, பெரிய பிள்ளைன்னு ஏதாவது இருக்கா?” என்று மாதவன் அவளை ஆதரித்தான்.

“இல்ல மாப்ள, அது...”

“நீ போ காவியா. நீ வாங்கி சாப்பிடு.”

அவள் அவனைப் பார்த்தாள்.

மாதவனும் அவளைப் பார்த்தான்.

இருவருக்கும் இடையில் ஒரு சிறிய புன்னகை மட்டும் பரிமாறிக்கொண்டது.

இரண்டு மூன்று முறை சொல்லியும் காவியா நகராமல் இருக்க, மாதவன் குகனைத் தூக்கிக்கொண்டு சென்று அவனுக்கு ஒன்று வாங்கிக் கொடுத்துவிட்டு, தானும் ஒரு பிரசாதம் வாங்கி வந்தான். அதை அவளிடம் கொடுத்தான்.

“வேண்டாம். நீங்க சாப்பிடுங்க.”

“உனக்காகத்தான் வாங்கிட்டு வந்தேன்.”

அவள் அதை வாங்கிக்கொண்டதும் உடனே ஒரு வாய் சாப்பிட முயன்றாள்.

“காவியா, இது என்ன பழக்கம்?”

அவள் புரியாமல் பார்த்தாள்.

“அண்ணன், அண்ணி இருக்காங்க இல்லையா? அவங்களுக்கும் கொடுத்துட்டு சாப்பிடணும். முதல்ல எல்லாருக்கும் கொடுத்துட்டு, அப்புறம் நீயும் சாப்பிடு.”

அவள் அமைதியாகக் கேட்டுக்கொண்டு விஷ்ணுவுக்கும் சிந்துவிற்கும் கொடுத்தாள்.

“சரி. இப்போ சாப்பிடு.”

அவன் சொன்னதும் அவள் சிரித்தபடி சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டாள்.

விஷ்ணுவின் மனம் அந்தக் காட்சியைப் பார்த்து நிறைந்தது.

தன் தங்கைக்கு பிடித்ததைச் செய்து கொடுக்க நினைப்பவன், அதே நேரத்தில் அவள் நல்ல விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதைப் பார்த்து, மாதவனைப் பற்றிய அவனது மதிப்பு இன்னும் அதிகரித்தது.

கோவிலிலிருந்து வீடு திரும்பி அனைவரும் இரவு உணவை முடித்தனர்.

மறுநாள் காலை உணவுக்குப் பிறகு மாதவனும் காவியாவும் தங்கள் வீட்டிற்குக் கிளம்பத் தயாரானார்கள்.

“இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகலாம்ல?” என்று விஷ்ணு கேட்டான்.

“பத்து நாள்தான் கல்யாணத்துக்கு லீவு போட்டிருக்கேன். கல்யாணத்துக்கு முன்னாடியே சில நாள் போயிடுச்சு. இப்பவும் போயிட்டே இருக்கு. கொஞ்சமாவது ரெஸ்ட் எடுக்கணும்.

அதுமட்டுமில்லாம தருண் வீட்டில் அத்தை, மாமா விருந்துக்கு கூப்பிட்டிருக்காங்க. அங்கே போகணும். ஸ்கூல், காலேஜ்ல படிச்ச ஒரு க்ளோஸ் ஃபிரண்டு கல்யாணத்துக்கு வர முடியல. அவங்க வீட்டுக்கும் போகணும். சிந்துக்கா வீட்டிலேயும் கூப்பிட்டு இருக்காங்க, ஜனனியும் கூப்பிட்டிருக்கா.

வீட்டிலும் கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் அப்படியே கிடக்குது. அதை ஒதுங்க வைக்கணும். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவும் நேரம் வேணும் மாமா,” என்றான் மாதவன்.

காவியா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

அவளது குடும்பத்தைத் தன்னுடைய உறவுகளாக நினைத்து, ஒவ்வொருவரின் அழைப்பையும் மதித்து நடப்பது அவளுக்கு உள்ளுக்குள் ஒரு பெருமையைத் தந்தது.

கிளம்புவதற்கு முன் காவியா தன் தாய், தந்தையின் புகைப்படத்தின் முன் சென்று நின்றாள்.

கைகளை கூப்பியவளின் கண்கள் கலங்கின.

' அம்மா... நான் கல்யாணத்துக்கு ரொம்பத் தயங்கினேன். நீ இருந்திருந்தா, நான் இவ்வளவு தயங்கியிருக்க மாட்டேனோ?

இப்போ என் கூட இருந்து இதையெல்லாம் பார்த்திருந்தா நீ ரொம்ப சந்தோஷப்பட்டிருப்ப. அவர் என்னை நல்லா பார்த்துக்கிறாரும்மா.

நீ இருந்திருந்தா இப்படித்தான் பார்த்திருப்பியோன்னு கூட தோணுது. எந்த விஷயத்திலும் என்னை வற்புறுத்தல. ஆனா அக்கறையா கேர் பண்றாரு.

கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த தயக்கம் இப்போ எனக்கு இல்லைம்மா. ஆனா உள்ளுக்குள்ள ஒரு பயம் இருக்கு.

அவர் என்னை குழந்தை மாதிரி பார்த்துக்கிறாரு. இவ்வளவு அக்கறையா இருக்கிற அவருக்கு, என்னால அதுல ஒரு சதவீதமாவது திருப்பிக் கொடுக்க முடியுமா என்று தெரியல.

நீ கல்யாணத்துக்கு முன்னாடி சமைக்கக் கத்துக்கோ, வீட்டு வேலைகளைக் கத்துக்கோன்னு எவ்வளவோ சொல்லியிருக்க. அப்போ எதையும் நான் கேட்கல. இப்போ முதல் முறையா நீ சொன்னதை கேட்டிருக்கலாமோன்னு தோணுது.

எனக்கு எதுவுமே தெரியலம்மா... அவருக்கு எப்படி சமைச்சுக் கொடுப்பேன்? எப்படி பார்த்துக்குவேன்?

என்ன மாதிரி அவருக்கும் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கும் இல்லையா? அதை எல்லாம் எப்படி நிறைவேற்றப் போறேன்னு தெரியல.

அதுதான் பயமா இருக்கு.

எப்படியாவது என்னைக் காப்பாத்துங்கம்மா. நீங்கதான் எனக்கு கடைசி வரைக்கும் உறுதுணையா இருக்கணும்...”

என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டாள்.

அவளுக்கு எதிரில் நின்றிருந்த மாதவன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் கண்களைத் திறந்தபோது அவனைப் பார்த்து ஒரு நொடி தடுமாறினாள்.

அவளிடம் எதுவும் கேட்காமல் அருகில் வந்தவன், அவளது கையைப் பிடித்தான்.

அவள் அவனைப் பார்த்தாள்.

அவன் அவளது கையை மெதுவாக அழுத்தினான்.

அந்தத் தொடுதலில் எந்த வார்த்தையும் இல்லை.

ஆனால் அவளுக்குப் புரிந்தது.

“நீ எதற்கும் பயப்படாதே... நான் இருக்கிறேன்.”

காவியாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டாலும், இந்த முறை அந்தக் கண்ணீருக்குள் ஒரு சிறிய நிம்மதியும் இருந்தது.

சிந்து விஷ்ணுவிடம் வந்தவன்,
“அப்பப்போ வாங்க. எனக்கு நேரம் கிடைக்கும்போது காவியாவைக் கூட்டிட்டு வரேன். நீங்களும் அக்காவையும் குகனையும் கூட்டிட்டு வாங்க” என்றான்


மாதவன் காவியாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

வாசலைத் தாண்டி பைக்கில் ஏறுவதற்கு முன் காவியா ஒரு முறை திரும்பிப் பார்த்தாள்.

அவள் பிறந்த வீடு அங்கேயே இருந்தது.

ஆனால் இப்போது அவளுடைய வாழ்க்கை வேறொரு வீட்டில் அவளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

“போகலாமா?” என்று மாதவன் கேட்டான்.

அவள் அவனைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தாள்.

“போகலாம்.”

அவன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

இந்த முறை அவள் தயங்காமல் அவன் தோளில் கையை வைத்துக்கொண்டாள்.

மாதவனின் உதட்டில் ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது.

புதிய வாழ்க்கையை நோக்கி இருவரும் பயணிக்கத் தொடங்கினர்.
 

kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,425
Reaction score
918
Points
113
அருமையான பதிவு
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,377
Reaction score
3,223
Points
113
அருமையான பதிவு

மாதவன் பாத்திரம் மனதில் நிற்கிறது

காவ்யாவும் ஒவ்வொன்றையும் பொறுமையாக கற்று தேர்ந்தால் நல்லது.
 
Top Bottom