நினைவு 23 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நினைவு 23

New updates

LATEST

Kani Suresh

Member
Joined
Feb 1, 2026
Messages
38
Reaction score
63
Points
18
அன்று மாதவன் வீட்டிலேயே தருணின் குடும்பமும் தங்கிக் கொண்டது.

ஏற்கனவே வீட்டை முழுவதுமாகச் சுத்தம் செய்து, பாய், தலையணை என தங்குவதற்குத் தேவையான அனைத்தையும் மாதவன் தயாராக வைத்திருந்தான். இரண்டு படுக்கையறைகள், ஹால், சமையலறை, சிறிய பூஜை அறை என வீடு அழகாகவும் சுத்தமாகவும் இருந்தது.

நல்ல நேரம் பார்த்து காவியாவை வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்திருந்தனர்.

தருணிடமிருந்து சாவியை வாங்கிய வள்ளி, வீட்டிற்குள் சென்று தேவையானவற்றைச் சரிபார்த்துக் கொண்டார். மணப்பெண்ணை விளக்குடன் அழைத்து வருவதற்குத் தேவையான பொருட்களையும் காலையிலேயே தயார் செய்து வைத்திருந்தார். அதற்கு மாதவனும் உதவி செய்து கொண்டிருந்தான்.

“நிலா… நீ எதுவும் செய்ய வேண்டாம். மாசமா இருக்க புள்ள… அமைதியா உட்காரு,” என்று வள்ளி சொல்ல, நிலானியை ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு அவளுக்குத் தேவையானவற்றை மாதவனே எடுத்துக் கொடுத்தான்.

தருண் வெளிவேலைகளில் இருந்ததால், வீட்டிற்குள் செய்ய வேண்டிய வேலைகளில் வள்ளியுடன் சேர்ந்து மாதவனும் கவனம் செலுத்தினான்.

அதன்பிறகு காவியாவின் கையில் குடத்தையும் விளக்கையும் கொடுத்து, ஆரத்தி எடுத்து அவளை வீட்டிற்குள் அழைத்து வந்தனர். பூஜை அறையில் விளக்கேற்ற வைத்து, மாதவனின் பெற்றோர் புகைப்படத்திற்கும் விளக்கேற்றி அனைவரும் சாமி கும்பிட்டனர்.

சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்துவிட்டு, இரவு உணவையும் பெண் வீட்டிலேயே முடித்துவிட்டு வந்ததால், படுக்கைக்குத் தேவையான அனைத்தையும் மாதவன் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தான்.

“இந்த ரூம்ல தங்குறவங்க இங்க தங்கிக்கலாம்… இன்னொரு ரூம்ல தங்குறவங்க அங்க போய்க்கலாம்.”

“நீ எங்கடா படுக்கப் போற?” என்று வள்ளி கேட்டார்.

“நீங்க ரூம்ல படுத்துக்கோங்க. நான் ஹால்ல படுத்துக்கிறேன். எனக்கு என்ன பிரச்சனை?”

வள்ளியும் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் தலையசைத்தார்.

மாதவனின் பெற்றோர் இருந்த அறை காவியாவுக்கும், அவளுடன் வந்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. ஜனனியுடன் இன்னொரு பெண்ணும் வந்திருந்ததால், அவர்கள் அனைவரும் அங்கேயே தங்கிக் கொண்டனர்.

மறுநாள் காலையில் மேக்கப் ஆர்டிஸ்ட் வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“வேண்டாம்… நான் மேக்கப் எல்லாம் பண்ணிக்க வேண்டாம்,” என்று காவியா சொல்ல,

“அதெல்லாம் முடியாது,” என்று நிலானி உடனே மறுத்தாள்.

“கல்யாணத்துக்கு போட்டோ எடுக்கும்போது முகம் கொஞ்சம் பிரைட்டா தெரியணும் இல்ல… நிச்சயத்துக்கு ஓகே. ஆனா கல்யாணத்துக்கு அப்படி விட்டுட்டு இருக்க முடியுமா?”

அவளது பேச்சுக்கு மேக்கப் ஆர்டிஸ்டையும் மறுநாள் வரச் சொல்லி ஏற்பாடு செய்தனர்.

முகூர்த்த நேரம் காலை ஆறு மணியிலிருந்து ஏழரை மணி வரை என்பதால், அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து தயாராகத் தொடங்கினர்.

அனைவருக்கும் முன்பாகவே எழுந்த மாதவன், வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடச் சென்றான்.

அவனைப் பார்த்த வள்ளி சிரித்தார்.

“தினமும் இதை நீ தான பண்ற? இப்போ எதுக்கு கல்யாண மாப்பிள்ளை நீயே இந்த வேலையைப் பார்த்துட்டு இருக்க?”

அவன் கையில் இருந்த கோலமாவை வாங்கிக் கொண்டவர்,

“போ… போய் வேற வேலையைப் பாரு,” என்று சொல்லிவிட்டு கோலம் போடத் தொடங்கினார்.

சிறிது நேரத்தில் இடுப்பைப் பிடித்துக் கொண்டு,

“அப்பாடா… பெருசா கோலம் போட்டா இந்த இடுப்பு பிடிச்சுக்குதுடா!”

“இதுக்குத்தான் நான் போடுறேன்னு சொன்னேன்.”

“இருக்கட்டும். ஒரு நாளைக்கு தானே… குறைந்தபட்சம் இந்த வேலையையாவது நான் செய்றேன். நீ போ.”

மாதவனை அனுப்பிவிட்டு சமையலறைக்குச் சென்றவர், அனைவருக்கும் பால் காய்ச்சத் தொடங்கினார்.

அடுத்தடுத்து அனைவரும் எழுந்து தயாராகிக் கொண்டிருந்தனர்.

டீ எடுத்துக்கொண்டு காவியா தங்கியிருந்த அறையின் கதவை வள்ளி தட்ட, ஜனனி கதவைத் திறந்தாள்.

“இதைக் குடிச்சிட்டு அடுத்த வேலையைப் பாருங்கடா. நேரமாச்சு.”

“சரிம்மா.”

“காவியா எழுந்துட்டாளா?”

“குளிச்சிட்டு வந்துட்டா. முடியை காய வச்சுட்டு இருக்கோம்.”

“சரி. எனக்கு இன்னும் வேலை கிடக்குது. சட்டு புட்டுன்னு கிளம்பணும் இல்ல… என் மருமகளை நீயே எழுப்பி ரெடி பண்ணு.”

சிறிது தயங்கியவர்,

“ராத்திரி எல்லாம் கால் வலிக்குது. தூங்காம முனகிட்டு இருந்தா. நீங்க பார்த்துக்கோங்க.”

“நீங்க கவலைப்படாதீங்க. மாசமா இருக்காங்க. நாங்க பார்த்துக்கறோம்.”

“சரி,” என்று சொல்லிவிட்டு வள்ளி அடுத்த வேலையில் இறங்கினார்.

காலை ஐந்து மணியைத் தாண்டியிருந்தது.

மேக்கப், அலங்காரம் என அனைத்தும் முடிந்து காவியா மணமகளாகத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

அதே நேரத்தில் மாதவன் வேஷ்டி, சட்டை அணிந்து வீட்டின் வேலைகளில் ஓடிக்கொண்டிருந்தான்.

நிலானியை வள்ளி ஏற்கனவே ஓரிடத்தில் அமர வைத்திருந்தார்.

“நிலா, ஒரு இடத்துல உட்கார்ந்திரு. இல்லனா நீயும் வேலை செய்ய ஆரம்பிச்சிடுவ. ஏற்கனவே நைட்டு முழுக்க தூங்காம ஓடிக்கிட்டு இருந்திருக்க.”

நிலானியும் கேட்பது போல அமர்ந்திருந்தாலும், சும்மா இருக்க முடியாமல் சிறுசிறு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள்.

நேரத்தைப் பார்த்த வள்ளி,

“மாதவா… நீ இன்னும் ரெடியாகலையா? சாமி கும்பிட்டு நல்ல நேரத்துல கோவிலுக்குக் கிளம்பணும். தருண் வேற, ‘கிளம்பிட்டீங்களா?’ன்னு போன் பண்ணிக் கேட்டான்.”

“வர்றேன்…”

சில பொருட்களுடன் வெளியே வந்த மாதவனைப் பார்த்த நிலானி சிரித்தாள்.

“போதும்டா கல்யாண மாப்பிள்ளை! எங்கேயாவது ஒரு இடத்துல உட்கார்றியா? அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டே இருக்க. அதான் இத்தனை பேர் இருக்கோம் இல்ல?”

அவன் சிரித்தபடி திரும்பிய அந்த நொடியில்தான்…

அவனது பார்வை காவியாவின் மீது விழுந்தது.

அவளை மணமகளாகப் பார்த்த மாதவனால் சில நொடிகள் பார்வையைத் திருப்ப முடியவில்லை.

அவனது கண்களில் தெரிந்த மாற்றத்தை காவியாவும் கவனித்தாள். ஆனால் அவளால் நேராக அவனைப் பார்க்க முடியவில்லை.

ஜனனி அந்த அமைதியை உடைத்தாள்.

“சார்… காவியா எப்படி இருக்கா?”

காவியா அவளை முறைத்துவிட்டு ஓரமாக நகர்ந்தாள்.

மாதவன் சிரித்தபடி தலையசைத்து அங்கிருந்து நகர்ந்தான்.

சாமி கும்பிட்டுவிட்டு, மாதவனின் பெற்றோர் புகைப்படத்தையும் வணங்கியபின் அனைவரும் கோவிலுக்குக் கிளம்பினர்.

காரில் அருகருகே அமர்ந்திருந்த மாதவனுக்கும் காவியாவுக்கும் உள்ளுக்குள் சொல்ல முடியாத உணர்வு.

திருமணப் பேச்சு தொடங்கிய நாளிலிருந்தே மாதவன் தன் பெற்றோரிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டிருந்தான். காவியாவைப் பார்த்தபோது தனக்குள் தோன்றிய உணர்வுகளையும், அவளிடம் பேசும்போது கிடைத்த சந்தோஷத்தையும் அவர்களிடம் சொல்லியிருந்தான்.

ஆனால் இன்று…

அவன் வாழ்க்கையின் மிக முக்கியமான நாளில் அவர்கள் நேரில் இல்லாதது மட்டும் அவன் மனதை வலித்தது.

ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி இருந்த மாதவனின் கண்களில் ஈரம் படர்ந்தது.

‘அம்மா… அப்பா…’

‘இன்னைக்கு நான் கல்யாண மாப்பிள்ளையா உங்க முன்னாடி உட்கார்ந்திருக்கணும். என் பொண்டாட்டியை உங்க மருமகள்னு சொல்லி உங்க முன்னாடி நிறுத்தணும்னு ஆசைப்பட்டேன்.’

‘இன்னைக்கு அந்த நாள் வந்திருச்சு… ஆனா நீங்க மட்டும் என் பக்கத்துல இல்ல.’

அவனது தொண்டை அடைத்தது.

‘ஆனா நீங்க இல்லன்னு நான் நினைக்க மாட்டேன். எங்கிருந்தாலும் என்னையும் காவியாவையும் பார்த்துக்கிட்டுத்தான் இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.’

அதே நேரத்தில் காவியாவின் கண்களிலும் நீர் தேங்கியிருந்தது.

மாதவன் அவளைப் பார்த்தான்.

அப்போது நிலானி அவனது கண்களில் தெரிந்த ஈரத்தை கவனித்தாள்.

“அண்ணா…”

“ஒண்ணும் இல்லை நிலா.”

“அம்மா அப்பா எப்பவும் நம்ம கூடதான் இருக்காங்கன்னு நீங்களே சொல்லுவீங்க இல்ல?”

அவன் அமைதியாக அவளைப் பார்த்தான்.

“நமக்குப் பிடிச்சவங்க நம்மள விட்டு போக மாட்டாங்க. நம்ம நல்லதையும் சந்தோஷத்தையும் மேல இருந்து பார்த்துட்டுத்தான் இருப்பாங்க.”

மாதவன் மெதுவாகப் புன்னகைத்தான்.

“நீங்க சந்தோஷமா இருந்தாதான் அவங்களுக்கும் சந்தோஷம். நீங்க வருத்தப்பட்டா அவங்களும் வருத்தப்படுவாங்க.”

பிறகு அவள் காவியாவை நோக்கிப் பார்த்தாள்.

“காவியா… அத்தையும் மாமாவும் எங்கேயும் போகல. உங்க கூடதான் இருக்காங்க. இப்பவும் உங்களைப் பார்த்துட்டுத்தான் இருப்பாங்க.”

காவியா கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“அவங்க ஆசைப்பட்ட கல்யாணம் இப்போ நடக்கப் போகுது. நீங்க இப்படி அழுதுட்டு இருந்தா அவங்களுக்கு சந்தோஷமா இருக்குமா? சிரிச்ச முகமா இருந்தால்தானே அவங்களுக்கு சந்தோஷம்?”

சிறிது இடைவெளிக்குப் பிறகு,

“அதுவும் உங்க அண்ணனைப் பாருங்க. நீங்க இப்போ உணர்ற அதே வலிதான் விஷ்ணு மாமாவுக்கும் இருக்கும். நீங்கதானே அவருக்கு தைரியம் சொல்லணும்?”

காவியாவின் கண்ணீரைத் துடைத்தாள்.

“அம்மா அப்பா நம்ம கூடதான் இருக்காங்கன்னு சொல்லணும்.”

அந்த வார்த்தைகள் காவியாவின் மனதில் ஆழமாகப் பதிந்தன.

மாதவன் எதுவும் பேசாமல் நிலானியைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.

சில நொடிகளில் கார் கோவிலை அடைந்தது.

இறங்குவதற்கு முன்பாகவே நிலானியின் வார்த்தைகளை நினைத்த காவியா, தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

ஒரு புதிய காவியாவாகவே காரிலிருந்து இறங்கினாள்.

கோவில் வாசலில் காலடி வைத்த அந்த நொடி…

தன் பெற்றோர் தன்னுடன் இருப்பதுப் போல உணர்ந்தாள்.

மாதவனைப் பார்த்து மெதுவாகச் சிரித்தாள்.

அவனது கையைப் பார்த்த அடுத்த நொடி, யாரும் சொல்லாமல் தன் கையை அவனது கையோடு பிணைத்துக் கொண்டாள்.

மாதவன் அவளைப் பார்த்தான்.

அவள் மீண்டும் கண் சிமிட்டி சிரித்தாள்.

அவன் அவளது கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

“பரவாயில்லை… உன் பேச்சு காவியாவுக்கு நல்லாவே வேலை செய்திருக்கு போல,” என்று ஜனனி சிரித்தாள்.

“இம்புட்டு நாளா நாங்க பேசுனது எதுவுமே எடுபடல. முதல் முறையா உன் பேச்சுக்குத்தான் கிடைச்சிருக்கு.”

நிலானி சிரித்தாள்.

“சரி சரி… நேரமாச்சு. ரெண்டு பேரும் உள்ள போகட்டும்.”

அனைவரின் முகங்களிலும் இப்போது நிம்மதியும் மகிழ்ச்சியும் தெரிந்தது.

கோவிலுக்கு ஏற்கனவே வந்து காத்திருந்த கந்தன், வள்ளி, நிலானியின் பெற்றோர், சிந்து, விஷ்ணு மற்றும் சிந்துவின் பெற்றோர் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருவரையும் வரவேற்றனர்.

மாதவனும் காவியாவும் கைகோர்த்தபடி கோவில் வாசலைக் கடந்து வந்த காட்சி, அவர்களின் மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தியது.

நேரம் ஆகிவிட்டதால் இருவரையும் மணையில் அமர வைத்தனர்.

திருமணப் பட்டுகள் கொடுக்கப்பட்டு, இருவரும் உடை மாற்றி வந்ததும் ஐயர் சடங்குகளைத் தொடங்கினார்.

சிந்து, விஷ்ணு இருவரும் காவியாவுக்குத் தாய் தந்தை இடத்தில் நின்று கன்னிகாதானம் செய்யத் தயாராகினர். தருணின் பெற்றோர் மாதவனின் தாய் தந்தை இடத்தில் நின்றனர்.

வெள்ளை வேஷ்டி, பட்டுச் சட்டை அணிந்து மணமேடையில் அமர்ந்திருந்த மாதவன், ஐயர் கூறிய மந்திரங்களைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.

ஆனால் அவனது பார்வை மட்டும் அவ்வப்போது கோவிலின் மறுபுறம் சென்றது.

சில நிமிடங்களில் பெண்கள் புடைசூழ காவியா மணமேடையை நோக்கி வந்தாள்.

மாதவன் ஆசையாகத் தேர்வு செய்திருந்த மென்மையான நிறப் பட்டுப்புடவை, தங்க நிற சரிகை, ஜிமிக்கி, மெல்லிய நகைகள், தலை நிறைய மல்லிகை என மணமகளுக்கே உரிய அலங்காரத்தில் அவள் அழகாகத் தெரிந்தாள்.

அவளைப் பார்த்த மாதவனின் பார்வை அப்படியே நின்றது.

தினமும் அலுவலகத்தில் சாதாரண உடையில் பார்த்தவள்…

இன்று அவன் தேர்வு செய்த புடவையில், அவனுக்கான மணமகளாக நடந்து வந்தாள்.

அவனது உதடுகளில் யாரும் அறியாமல் புன்னகை மலர்ந்தது.

அவன் பார்வையை உணர்ந்த காவியா, முதலில் தயங்கினாள். பிறகு ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.

இருவரின் பார்வையும் ஒரு நொடி சந்தித்தது.

மாதவன் லேசாகத் தலையசைத்தான்.

வார்த்தைகள் இல்லாமலேயே அவனது பார்வை சொன்னது

‘அழகாக இருக்கிறாய்…’

காவியாவின் உதடுகளில் மெல்லிய புன்னகை மலர்ந்தது. அடுத்த நொடி பார்வையைத் தாழ்த்திக் கொண்டு அவனருகில் வந்து அமர்ந்தாள்.

அவ்வப்போது இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று தொட்டு மீண்டது.

காவியா தன் பதற்றத்தை மறைக்க காலின் கட்டைவிரல்களை ஒன்றோடு ஒன்று மடித்துக் கொண்டிருந்தாள்.

அவள் காலை நகர்த்தியபோது, அவளது விரல்கள் மாதவனின் விரல்களில் மெதுவாக உரசியது.

மாதவன் அவளைப் பார்த்தான்.

காவியாவோ சங்கடத்தில் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

அவளது முகத்தைப் பார்த்த அவனது உதடுகளில் குறும்புப் புன்னகை.

‘தெரியாமத்தான் பட்டுச்சா?’

அவனது பார்வை கேள்வி கேட்க,

காவியா அவனை முறைத்துவிட்டு மீண்டும் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

ஐயர் மந்திரங்களை ஓதத் தொடங்கினார்.

மங்கள்யதாரணத்திற்கான நேரம் நெருங்கியது.

தாலி மாதவனின் கைகளில் வந்த நொடி…

மீண்டும் அவன் பெற்றோரின் முகம் நினைவுக்கு வந்தது.

‘அம்மா… அப்பா…’

‘இன்னைக்கு உங்க பையன் வாழ்க்கையில மிக முக்கியமான நாள்.’

‘நீங்க என் பக்கத்துல இருந்திருந்தா… இந்தத் தாலியை உங்க கையால தொட்டு ஆசீர்வதிச்சிருப்பீங்க.’

‘நான் தேர்வு செய்த இந்தப் பெண்ணை உங்க மருமகளா பார்த்து சந்தோஷப்பட்டிருப்பீங்க.’

அவனது கண்களின் ஓரம் ஈரமானது.

‘ஆனா நீங்க இல்லன்னு நான் நினைக்கவே மாட்டேன். இங்கதான் இருக்கீங்க… என்னைப் பார்த்துட்டுத்தான் இருக்கீங்க.’

அவன் மெதுவாகக் கண்களைத் திறந்தான்.

அவனது பார்வை காவியாவின் மீது விழுந்தது.

‘இவளை நல்லா பார்த்துக்கறேன் அம்மா… அப்பா… நீங்க என் மேல வைத்திருந்த நம்பிக்கையை நான் காப்பாத்துறேன்.’

அதே நேரத்தில் காவியாவின் பார்வை சிவன் சன்னதியில் நிலைத்தது.

அவளது மனமும் பெற்றோரைத் தேடியது.

‘அப்பா… அம்மா…’

‘என் கல்யாணத்தைப் பார்க்கணும்னு எவ்வளவு ஆசைப்பட்டீங்க… இன்னைக்கு உங்க ஆசை நிறைவேறப் போகுது.’

‘இந்தக் கோவில்ல என் கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்பட்டீங்க அம்மா. அதே மாதிரி இப்போ இதே சிவன் முன்னாடிதான் என் கல்யாணமும் நடக்குது.’

அவள் கண்களை மூடினாள்.

‘சிவபெருமானே… என் அம்மா அப்பா எங்கிருந்தாலும், இப்போ அவங்களும் எங்களைப் பார்த்து சந்தோஷப்படணும்.’

‘மாதவனோட அம்மா அப்பாவும் அவரோட கல்யாணத்தைப் பார்க்க முடியலன்னு வருத்தப்படக் கூடாது.’

‘எங்களைச் சுற்றி இருக்கிற எல்லாரையும் எப்பவும் நல்லா வச்சுக்கணும்.’

அவளது கண்களில் ஒரு துளி கண்ணீர் வழிந்தது.

பிறகு மாதவனைப் பார்த்தாள்.

“உங்களுக்கு மட்டும் இல்ல… அத்தை, அம்மா ரெண்டு பேருக்குமே சிவன் ரொம்பப் பிடிக்கும்.

எங்க அம்மாவுக்கு என் கல்யாணம் சிவன் கோவில்லதான் நடக்கணும்னு ரொம்ப ஆசை. அவங்க ஆசை நிறைவேறாம போயிடுமோன்னு நினைச்சேன். ஆனா… பாருங்க. அதே கோவில்லதான் இப்போ என் கல்யாணமும் நடக்குது.”

அவளது குரல் நடுங்கியது.

“அவங்க என்கூட இருக்கிற மாதிரியே எனக்கு தோணுது.”

மாதவனின் கண்களிலும் ஈரம் படர்ந்தது.

‘அதே மாதிரி… அத்தை, மாமா, நீங்களும் என்கூட இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.’

காவியா மீண்டும் சிவன் சன்னதியை நோக்கிப் பார்த்தாள்.

‘மேல இருந்து அம்மா, அப்பா… அத்தை, மாமா, நீங்க நாலு பேரும்… எங்களை எப்பவும் சந்தோஷமா வச்சுக்கணும்.’

பிறகு விஷ்ணுவை நோக்கிப் பார்த்தாள்.

‘அண்ணா… உன்னோட சந்தோஷமும் எப்பவும் நிலைச்சு நிக்கணும். குகன் குட்டியும் நல்லா இருக்கணும்.’

சில நொடிகள் அமைதியாக இருந்தவள், மீண்டும் மாதவனைப் பார்த்தாள்.

‘நானும்…’

அதற்கு மேல் என்ன வேண்டுவது என்று தெரியாமல் தயங்கினாள்.

பிறகு மெல்லிய குரலில்,

‘மாதவன் சார் நல்லா இருக்கணும். அவர் முகத்துல இப்போ இருக்கிற இந்த சந்தோஷம் எப்பவும் நிலைச்சு நிக்கணும். அதுக்கு நீங்க எல்லாரும் உறுதுணையா இருக்கணும்,’ என்றாள்.

மாதவன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் கேட்ட வேண்டுதலில் தன்னுடைய பெயரை மட்டும் அல்ல…

தன்னுடைய வாழ்நாள் முழுவதற்குமான சந்தோஷத்தையே அவள் கேட்டிருந்தாள்.

அவனது கண்கள் மீண்டும் கலங்கின.

ஐயர் மங்கள்யதாரணத்திற்கான மந்திரங்களை ஓதத் தொடங்கினார்.

மாதவன் தாலியை எடுத்தான்.

ஒரு கணம் தன் பெற்றோரை நினைத்தான்.

அடுத்த கணம் காவியாவின் பெற்றோரை நினைத்தான்.

‘எங்க ரெண்டு பேரையும் ஆசீர்வதிங்க…’

என்ற சொல்லப்படாத வேண்டுதலுடன், காவியாவின் கழுத்தில் தாலியை அணிவித்தான்.

முதல் முடிச்சு…

அவனது மனதில் தாய், தந்தையின் ஆசீர்வாதம்.

இரண்டாவது முடிச்சு…

அவளது பெற்றோரின் நினைவுகளும் ஆசிகளும்.

மூன்றாவது முடிச்சு…

இனி இருவரும் ஒருவருக்கொருவர் துணை என்ற உறுதி.

அவளைத் தன் வாழ்வின் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் மாதவன்.

காவியாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஆனால் அந்தக் கண்ணீருக்குள் ஒரு நிறைவான புன்னகையும் இருந்தது.

அவள் மாதவனைப் பார்த்தாள்.

மாதவனும் அவளைப் பார்த்தான்.

இருவரின் பார்வையும் சொல்லியது ஒன்றே…

‘நம்மோட அம்மா அப்பா நம்ம கூடத்தான் இருக்காங்க.’

அந்த நம்பிக்கையோடு, சிரித்த முகத்துடன் இருவரும் புதிய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தனர்.
 

kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,474
Reaction score
927
Points
113
அருமையான பதிவு
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,406
Reaction score
3,238
Points
113
அருமையான பதிவு

எப்படியோ காவ்யாவின் மூளை வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.
 
Top Bottom