நினைவாலே அணைப்பேனே | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நினைவாலே அணைப்பேனே

New updates

LATEST

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,323
Reaction score
3,196
Points
113
நினைவாலே... அணைப்பேனே!

ஆனந்த ஜோதி

நாகர்கோவில் மாநகரத்தில் உள்ள புகழ்பெற்ற ஜோசப் சகாயம் மருத்துவமனையின் பிரசவஅறைக்கு வெளிப்பகுதியில் மிகுந்த பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தார் திருநீலகண்டம். அவரது மனையாள் ஈஸ்வரி ஒருவித நடுக்கத்துடன் வாசல் கதவை பார்த்துக்கொண்டே நின்றாள். அப்போது அத்தனை நேரத்து அமைதியை கிழித்துக்கொண்டு 'அம்மா' என்ற கதறலைத் தொடர்ந்து 'ங்கா' என அழுதுகொண்டே மண்ணில் பிறப்பெடுத்தான் பிரதீபன்- பிருந்தா தம்பதியரின் வாரிசு.

மகவின் வருகையால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். அருகில் நின்று காட்டிய செவிலியின் கையில் இருந்த மகனைப் பார்த்தாள் பிருந்தா. விழிகளில் திரண்ட நீருடன் மகனை கைகளால் ஸ்பரிசித்து நெஞ்சம் விம்மினாள். நினைவுகள் கணவனைத் தேடி ஓடியது.

பிரதீபன் CRPF-ல் பணிபுரியும் கடமை தவறா காவலன். அவளைப் பெண் பார்க்க வந்திருந்தபோது அவனது கரிய நிறம், வளர்த்தியான உடல்வாகு, விழிகளில் தெரிந்த கூர்மை, வளைந்த மீசையும் அவளை அச்சப்பட வைத்தது. தாயாரின் பின்னே மறைந்து நின்றவளை முதல் பார்வையில் பிடித்துவிட, வரதட்சணை எதுவுமின்றி பதினைந்து நாட்களுக்குள் மனைவியாக்கிவிட்டான். தன்னருகில் வரத்தயங்குபவளை அழைத்து அச்சத்தைப்போக்க முயன்றான். தான் பணிபுரியும் இடத்தைப் பற்றி தெளிவாக எடுத்துக்கூறினான். அவளது அச்சம் அகலும் வரையில், காத்திருக்க முடிவு செய்தான்.

விடுமுறை முடிந்ததும் மனைவியை அழைத்துக் கிளம்பிவிட்டான். விமான பயணத்தின் போது கணவனை ஒட்டியே இருந்தாள் பிருந்தா. அவனது குடியிருப்புக்குள் நுழைந்ததும் தவிப்புடன் கலக்கமும் சூழ்ந்து கொண்டது. அதுதேவையே இல்லை என்பதுபோல் அவன் நடந்துகொண்ட விதம், கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதை மாற்றி அவனோடு ஒன்றிணைய செய்தது.

கணவன் வேலைக்குச் சென்ற பின்னர் சுற்றுப்புறங்களை பார்வையிட்டாள். பச்சைக் காய்களை தள்ளுவண்டியில் கொண்டு வருபவனைப் பார்த்ததும் ஊர் நியாபகத்தில் சிறுபையை எடுத்துக்கொண்டு ஓடினாள். தமிழில் பேசிவிட்டு அவன் புரியாமல் நிற்பதைக் கண்டு விழித்தாள். பிறகே புத்தியில் உரைத்தது. அசடு வழிந்துகொண்டே அங்கிருந்த காய்களை விரல்நீட்டி காண்பித்தாள். அவனோ ஹிந்தியில் பேசினான். அவள் ஆங்கிலத்தில் பதிலளித்தாள்.

இருவரையும் பார்த்து நின்ற பக்கத்து வீட்டு காவலரின் மனைவி ஹிந்தியில் பேசினார். புரிந்துகொண்டவனை போல் "அச்சா! அச்சா!!" என்றான்.

புன்னகையுடன் வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினாள். மதிய சமையலை வேகவேகமாக முடித்தாள். கணவன் வருவதற்கு முன்னர் தயாராகி புடவையில் நின்றாள். காலை 8:30 மணியளவில் சென்றவன், சரியாக 1.30 மணியளவுக்கு வந்து நின்று புன்னகைத்தான். "என்னடா, தனியா இருக்க பயமாயிருந்ததா?" என்று கேட்டான். அவள் முறுவலித்தாள்.

"சாப்பிட வாங்க"

"இதோ, பைவ் மினிட்ஸ்ல வந்திடறேன்" என்றான்.

சமையல் அறைக்குள் நுழைந்தாள். சமைத்து வைத்திருந்த அனைத்தையும் எடுத்து வந்து மேஜையின் மீது பரப்பினாள். அவன் வந்து அமர்ந்ததும் சில்வர் பிளேட்டில் கொஞ்சமாக எடுத்து வைத்தாள். தயக்கத்துடன் அவன் முகம் பார்த்து நின்றாள்.

மனைவியின் சமையலை ருசி பார்த்து மெச்சினான் பிரதீபன். புன்னகையுடன் அனைத்தையும் உண்டு முடித்தான். அவன் எழுந்ததும் அதே இடத்தில் அமர்ந்து, உணவை பிசைந்து வாய்க்குள் கொண்டு சென்றாள். சுவை குறைந்து, உப்பும், எரிப்பும் அதிகமாக காணப்பட்டது தெரிந்தது. கணவன் ஒன்றுமே சொல்லவில்லையே என்று எண்ணிக்கொண்டு தவிப்புடன் உண்டு முடித்தாள்.

"பிருந்தா, எப்படி இந்த காயெல்லாம் வாங்கின?" என்று வினவினான். அவள் காலையில் பட்ட கஷ்டத்தை விவரிக்க, அவன் வாய்விட்டு சிரித்தான்.

பொய் கோபம் கொண்டவளைப் போல் அவள் முறைத்தாள்.

"அதான், ஈவ்னிங் நாம ரெண்டுபேரும் போய் வாங்கிட்டு வரலாம்னு சொன்னனே! பிறகும் என்ன அவசரம்?" என்றான்.

"இன்ஸ்பெக்டர் சார்! மதியம் சாப்பிடணும் இல்லையா? அதான் கொஞ்சமா வாங்கினேன்" என்றாள். மனையாளின் அழைப்பில் அவனது உதடுகள் விரிந்தன.

மாலைநேரம் வெளியே சென்று பார்க்கையில் அங்கு வாழ்ந்துகொண்டிருந்த மக்களின் பழக்கவழக்கம், பாஷைகள், உடைகள், உணவுமுறைகள், வியாபார நுணுக்கம் அனைத்தும் அவளுக்கு வித்தியாசமாக தெரிந்தன. கிருத்திகாவின் கழுத்தில் கிடந்த திருமாங்கல்யம் அவர்களது விழிகளை விரிய செய்தன. அவளோ அச்சத்துடன் கணவனுக்குப் பின்புறம் சென்று மறைந்துகொண்டாள்.

"பயப்படாதே, இங்கெல்லாம் இப்படி நகைஅணிவது வழக்கமல்ல! சுடிதாரை அணிந்து துப்பட்டாவால் மறைத்துக்கொள். அதுவே உனக்கு பாதுகாப்பு. வீட்டில் தனியாக இருக்கும் நேரங்களில், திடீரென்று யாராவது வந்து கதவைத் தட்டினால் ஊர் நியாபகத்தில் திறந்துடாதே. எல்லோரும் நல்லவரா இருக்க மாட்டாங்க" என்று அறிவுறுத்தினான்.

அவள் அச்சத்தில் மிடறு விழுங்கினாள்.

காய்களின் பெயர், பணம் கொடுக்கும்முறை, அவர்களின் வியாபார தந்திரம் அனைத்தையும் பார்த்துக்கொண்டே வந்தாள். அவள் விரும்பி கேட்ட அனைத்தையும் வாங்கி கொடுத்தான். புன்னகையுடன் வீட்டிற்கு அழைத்து வந்தான். நாட்கள் அழகுற நகர்ந்தன. அவளோ கொஞ்சம் கொஞ்சமாக கூண்டுக்குள் ஒடுங்க துவங்கினாள். பிறரின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் திணறினாள். திடீரென்று யாராவது வந்து நின்று கதவைத் தட்டினால் பதறினாள். வந்திருப்பது நல்லவனா கெட்டவனா என்று தெரியாமல் அச்சப்பட்டாள். பால்காரனின் பார்வை அவளை பீதி கொள்ளச் செய்தன. யாராவது அவளைப் பார்த்துக்கொண்டே பேசினால், தன்னைப் பற்றி ஏதோ பேசுகிறார்கள் என்று தவறாக எண்ணினாள்.

நம் இடத்து உணவு முறையன்றி, சதா காய்களை மட்டுமே சமைத்து உண்ண மனமற்று வெறுமையில் கிடந்தாள். நா சூடான மீன் குழம்பை ருசி பார்க்க ஆசை கொண்டது. விதவிதமான உணவு முறைகளை செய்யத் தெரியாமல் தடுமாறினாள்.

கல்லூரியில் பயின்று கொண்டிருந்தவளை அப்படியே திருமணம் செய்து வைத்ததன் விளைவு, சமையல் செய்ய தெரியாமல் தடுமாறினாள். ஊரில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மீன் மட்டுமே உண்டு வந்தவளுக்கு, இங்குள்ள உணவுமுறை சலிப்பை ஏற்படுத்தியது. அத்துடன் வயிற்றில் குழந்தையும் ஜனிக்க உடல்மெலிந்தது. வீட்டுவேலைகளை செய்ய முடியாமல் திண்டாடினாள். அடிக்கடி மயக்கம், தலைசுற்றல் வந்தது. வீட்டார் நியாபகத்தில் அழுகை முட்டியது. பெற்றோர் மடி சாய்ந்துகொள்ள ஆசையாக இருந்தது.

பண்டிகை தினங்களில் வெளியே அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினான் பிரதீபன். காவலரின் மனைவி என்ற மரியாதையும், கௌரவமும் கிடைத்தது. காக்கி சீருடையில் கணவன் நடந்து சென்று சல்யூட் அடிப்பதை காணுகையில் மனம் கர்வமடைந்தது. பரேட், காவலர்களின் சாகசங்களை கண்கூடாக காணுகையில் மெய் சிலிர்த்தது. அவனுடன் இணைந்து விருந்திற்கு செல்லுகையில் உள்ளம் துள்ளியது.

குழந்தை வயிற்றில் உதித்து நான்கு மாதங்கள் கடந்து விட்டன. அவன் வீட்டு வேலைக்குத் தனியாக ஆள் வைத்தான். ஹிந்து பயில புத்தகம் வாங்கி கொடுத்தான். என்ன வேண்டும் என்று கேட்டு அவளது தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொடுத்தான். மனையாளை ஒரு குறைவின்றி பார்த்துக் கொண்டான்.

கணவனின் அன்பு புரிந்தாலும், அதையும் மீறி உடல்நிலை அவளை வாட்டி வதைத்தது. சமையல் செய்பவளின் உணவு வாய்க்குள் போக மறுத்தது. "ஊருக்கு போறேன். அம்மா, அப்பாவை பார்க்கணும். என்னாலே இங்கே இருக்க முடியலை" என்று கண்ணீர் வடித்தவளைக் காணுகையில் மனம் கனத்தது.

"கிருத்திகா, நீ என்மனைவிடா! உனக்கொரு கஷ்டம்னா நான் பார்த்துட்டுருக்க மாட்டேன். அதேநேரம் இப்பவே ஊருக்குப் போனால், மறுபடியும் திரும்பி வர நிறைய மாதமாகி விடும். அவ்வளவு நாள் உன்னைப் பிரிஞ்சிருக்க என்னாலே முடியாது? குழந்தைக்கு ஏழு மாதம் ஆகும் வரையில் பொறுத்துக்கோ. பிறகு நானும் உன்னுடனே சிலமாதங்கள் வந்து இருப்பதுபோல் விடுமுறை எடுத்துட்டு வர பார்க்கிறேன்" என்று தணிவாக கூறினான். அவளால் பதில்கூற முடியவில்லை. விழிநீர் மட்டும் விடாமல் வழிந்தது.

மூன்று அண்ணனுக்கு அடுத்து ஒற்றை தங்கையாக பிறந்த கிருத்திகா, பாசம், செல்லம், குறும்புத்தனம் அனைத்தும் கலந்த கலவையாக வளர்ந்து வந்தவள். அவள் விரும்புவதை உடனே வாங்கி கொடுக்கும் அண்ணன்கள், மகளுக்கு பிடித்ததை மட்டுமே செய்துவந்த பெற்றோர், அனைவரையும் பிரிந்து இவ்வளவு தூரம் வர பிடிக்காமல் இந்த சம்மந்தமே வேண்டாம் என்று மறுத்தாள். அவர்கள்தான் ஆயிரம் உபதேசம் செய்து சம்மதிக்க வைத்தனர். பிறந்தது முதல் அவர்களைப் பிரிந்திராதவள், முதல் முறையாக இப்போதுதான் இத்தனை நாட்கள் பார்க்காமல் இருக்கிறாள்.

கொரானா காரணமாக விமான சேவை இடை இடையே நிறுத்தப்பட அங்கும் இங்கும் போக்குவரத்து தடைபட்டது. நிலைமை சற்று சீரானதும் மகளைக் காணும் ஆவலில் திடீரென்று வந்து நின்றார்கள் அவளது பெற்றோர்... மாதங்கள் பலதாண்டி பார்க்கவும், கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள். பதினைந்து நாட்கள் நின்றுவிட்டு கிளம்புகையில் தானும் வருவதாக அடம் பிடித்தாள். பிரதீபன் எவ்வளவு சொல்லியும் கேட்கமறுத்தாள். வேறுவழியில்லாமல் அனைவரையும் அழைத்துச் சென்று அனுப்பி வைத்தான்.

நாகர்கோவில் மாநகரத்தைப் பார்த்ததும் ஏதோவொரு உணர்வு அவளை ஆட்கொண்டது. புத்துணர்ச்சியாக உணர்ந்தாள். புன்னகையுடன் மண்டைக்காடு அருகில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்குச் சென்றாள். உறவினர்களை கண்டு மகிழ்ந்தாள். கோவில், குளம், தோட்டம், துரவு அனைத்தையும் பார்வையிட்டாள். கணவனை காணாதது வருத்தமாக இருந்தாலும், அங்கில்லாத நிம்மதி இங்கு கிடைப்பதை உணர்ந்தாள்.

பிரசவத்திற்கு வருவேன் என்ற கணவன் விடுமுறை இல்லாததால் வரமுடியவில்லை. பெரிய வயிறு தாங்கி மனையாள் இருக்கும் தோற்றம் அவனை மதிமயக்கியது. உடனேசென்று வாரிக்கொள்ளும் ஆவல் பாடாகபடுத்தியது. அதேநேரம் கடமையோ கை நீட்டி அழைத்தது.

அவள் ஒவ்வொரு நாட்களையும் மகிழ்ச்சியுடன் கடத்தினாள். வீட்டார் அனைவரும் அவளுக்குப் பிடித்தமான பதார்த்தங்களை வாங்கிக் கொடுத்தனர்.

அவளைப் பார்க்க வந்த உறவினர்கள் கணவனைப் பற்றி விசாரித்தனர். அவனுடனான வாழ்க்கை, குடியிருக்கும் இடத்தைப் பற்றி கேட்டனர். பெற்றோருக்கு மகள் என்ற நிலையை தாண்டி திருமதி ஆகிவிட்டது புரிந்தது.

தாயார் தகப்பனிடம் சிரித்து பேசுவது, அக்கறையுடன் கவனிப்பதை காணுகையில் கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கை நியாபகம் வந்தது. தன் கணவனும் இப்படித்தானே பாசத்தைக் கொட்டுவான். மதிய வேளைகளில் எத்தனை ஆசையாக பார்க்க வருவான். புன்னகையுடன் பேசுவான். சுவையற்ற உணவு தயாரித்து வைத்திருந்தாலும், ஒரு வார்த்தை கடுமையாக பேச மாட்டான்.

ஊருக்கு கிளம்பும் போதும் எத்தனை தூரம் மறுத்தான். கைப்பேசியில் எத்தனை அக்கறையுடன் விசாரிக்கிறான் என, ஒவ்வொன்றையும் எண்ணிப்பார்த்து மனம் வருந்தினாள். இத்தனை நாள் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டவள் முதன்முறையாக, கணவனின் அருகாமை, தாம்பத்தியம் போன்றவற்றை உணர துவங்கினாள். திருமணம், திருமாங்கல்யத்தின் மகத்துவத்தையும் புரிந்து கொண்டாள். டெல்லிக்கு சென்றால் அதே உணவைத்தானே உண்ண வேண்டியது வரும் என்ற எண்ணத்தில், தாயாரிடம் சமையல் கற்றுக்கொண்டாள். சமையல் புத்தகங்களை வாங்கி வந்து வாசித்தாள். நிஜத்தில் தீண்டத் தயங்கிய அவளது விரல்கள், நினைவாலே அவனைத் தீண்டி அணைத்தன.

வாய் விட்டு பேச முடியா விசயங்களை இரவுப் பொழுதுகளில் வரும் கனவுகளில் கூறினாள். அவனது அன்பு கலந்த பேச்சைக் கேட்கையில் இத்தனை பெரிய வாழ்வை தொலைக்கப் பார்த்த முட்டாள்தனத்தை எண்ணி வருந்தினாள். இனிமேலும் அப்படியொரு தவறை செய்து விடக்கூடாதென்று அவன் விருப்பம் போல் நடக்க எண்ணம் பூண்டாள்.

இருவரது வாழ்க்கைக்கும் சான்றாக குழந்தை பிறந்ததும் இத்தனை நாட்கள் புரியாத பல விசயங்கள் புரியத் தொடங்கியது. கணவனின் மீதான நேசம் அதிகரித்தது. அவனது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்க துவங்கினாள்.

புரிதல் இல்லாத வாழ்க்கை நிம்மதியை கெடுக்கும் என்பதையும் புரிந்து கொண்டாள்.

*** சுபம்***
 

ராஜேஷ்கருப்பையா

Well-known member
Staff member
Joined
Aug 24, 2025
Messages
659
Reaction score
462
Points
63
Age
44
பிரதீப்பை புரிந்துகொள்ள கிருத்திகாவுக்கு ஒரு பிரிவு தேவைப்பட்டது.
ஒரு பெண்ணின் மனநிலையை உணவுப்பூர்வமாக சொல்லிவிட்டார்கள் எழுத்தாளர்.கணவனின் அருகாமையை தேடும் கிருத்திகா, நினைவால் நெருங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்..
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,323
Reaction score
3,196
Points
113
பிரதீப்பை புரிந்துகொள்ள கிருத்திகாவுக்கு ஒரு பிரிவு தேவைப்பட்டது.
ஒரு பெண்ணின் மனநிலையை உணவுப்பூர்வமாக சொல்லிவிட்டார்கள் எழுத்தாளர்.கணவனின் அருகாமையை தேடும் கிருத்திகா, நினைவால் நெருங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்..
மிக்க நன்றி சகோ

நன்றிகள் பல...
 
Top Bottom