தூரங்கள் 9 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரங்கள் 9

New updates

LATEST
Joined
Jun 29, 2026
Messages
46
Reaction score
34
Points
18
Chapter 9
நேசிக்க கற்று தந்த நீயே
மறக்கவும் கற்று தந்திருக்கலாம்
விலகி இருக்கும் நாட்களில்
உன்னை மறந்திருக்கவும் முயற்ச்சித்து இருப்பேன்.

“உனக்கு உன்னோட பேரண்ட்ஸ் சம்மதத்தோட கல்யாணம் நடக்கனும்னு விரும்பறியா”

“பொண்ணா பொறந்துட்டேன்னு வேண்டா வெறுப்பா தான் என்னை வளர்த்தாங்க. அவங்களை பொருத்தவரைக்கும் ஆம்பளை பிள்ளை தான் அவங்க வாரிசு. நான் கொசுறு தான். அப்படித்தான் என்னை வளர்த்தாங்க, என்னோட விருப்பத்துக்கு சம்மதம் சொல்ல மாட்டாங்கன்னு எனக்கு எப்போவோ தெரியும். அதுக்கு சாதி பணம்னு ஏதாவது காரணம் சொல்வாங்கன்னும் தெரியும். அதனால அவங்க விருப்பத்தை நான் பெருசா நினைக்கலை” என்றாள்.

“சரி அப்போ நாம ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கலாமா” அவன் இப்படி கேட்டதும், கோவில் வாசலில் அமர்ந்து அவன் கூறுவதை செவிமடுத்து கேட்டு கொண்டிருந்தவள் விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.

என்ன அவன் புருவம் உயர்த்தி வினவ, “ஓடி போய்னா”..

“சரி வேண்டாம் ஆட்டோல போகலாம் அப்போ ஓகே வா” என்றான் சிரிப்புடன்.

முரளி என்று அவன் கையில் அடித்தவள், “உங்க வீட்டுல கேட்க வேண்டாமா” என்றாள்.

“கேட்கனும்தான் ஆனா அதுக்கு அவங்க ஒத்துக்க மாட்டாங்க”

“ஏன் வரதட்சனை ஏதாவது எதிர்பார்ப்பாங்களா”

“ம்ம், அப்படியும் சொல்லலாம், சின்ன தங்கச்சி கல்யாணம் ஆகாம நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டாங்க” என்றான்.

“ஓஹ், நான் வேணும்னா ஏதாவது ஹோஸ்டல்ல தங்கி கொஞ்சம் நாள் ஒரு வேலை பார்த்துட்டு இருக்கட்டுமா. அதுக்குள்ள நீங்க உங்க தங்கச்சி கல்யாணத்தை முடிச்சிடுவீங்க தானே” என்று கேட்டாள்.

கேட்டுவிட்டாளே தவிர சரி என்று கூறி விடுவானோ என்ற கலக்கம் அவள் கண்ணில் இருப்பது தெளிவாக தெரிந்தது. அதை அவனுமே கண்டு கொண்டான்.

இங்கே வா என்று அவளை அருகில் அழைத்தான், அவளுமே சற்றே தயக்கத்துடன் நெருங்கி அமர, “உண்மையா சொல்லு, அவ இப்போ தான் ஃபர்ஸ்ட் இயற் முடிச்சிருக்கா, இன்னும் ரெண்டு வருஷம் ஆகும் கல்யாணத்துக்கு உனக்கு ஓகேவா” என்றான்.

இன்னும் இரண்டு வருடம் என்று அவன் கூறியதும் விழிகளை விரித்தவள், பாவமாக அவனை பார்த்து வைக்க, பக்கென சிரித்திருந்தான் முரளி. அப்போது தான் அவன் விளையாடுகிறான் என்று தெரிந்ததும் அவனை “போங்க நீங்க” என்று தள்ளி விட்டாள் ரஞ்சனி.

“பின்ன என்னடி பார்த்த அன்னைக்கே கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டு பதற வச்சு, சும்மா இருந்தவனை உசுப்பி விட்டுட்டு இப்போ அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லி என்னை கலாய்க்கிறியா” என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ளினான் வலிக்காமல்.

அவன் கையில் இருந்து தன் கன்னத்தை விடுவித்து கொண்டவள், அவனை பார்க்க முடியாமல் வெட்கி தலை குனிந்து சிரித்தாள்.

அவள் வெட்கத்தை ரசனையாக பார்த்து கொண்டிருந்தவனிடம், “எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும், அதனால பார்த்ததும் அப்படி கேட்டுட்டேன். ஆனா சூழ்நிலை அதுக்கு சாதாகமா இல்லைன்னா பொறுமையா இருக்கிறது தானே சரி” என்றாள்.

“ம்ம் நீ இருப்ப என்னால இருக்க முடியாதே, என்ன இப்போ எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கே” என்றான் அவன் கொஞ்சலாக.

அதில் அவள் இன்னுமே வெட்கப்பட்டு தலைகுனிய போக, “பாருடா இதுக்கு பேர் தான் வெட்கமா, அடிக்கடி வெட்கப்படுமா அப்போ தான் எனக்கும் கொஞ்சம் கிக்கா இருக்கும்” என சீண்டினான் அவளை.

“போங்க” என்று அவள் எழுந்து கொள்ள போக, “இதே மாதிரி ஒரு சின்ன கோவில்ல வச்சி கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லையே” என்றான்.

நின்று திரும்பியவள், “எனக்கு உங்க கூட வாழனும் அவ்வளவு தான் அது எங்கே எப்படி தொடங்கினாலும் எனக்கு ஓகே தான்” என்றாள் சம்மதமாக.

அவள் இப்படித்தான் சொல்வாள் என்று அறிந்திருந்தவனுக்கு அவளது பதிலில் ஒன்றும் ஆச்சர்யம் இருக்கவில்லை. எனவே ஒரு நல்ல நாள் பார்த்து சில ஆட்டோ ஸ்டாண்ட் நண்பர்களை துணைக்கு வைத்து கொண்டு ஒரு சிறிய கோவிலில் எளிமையான முறையில் தங்கள் திருமணத்தை நடத்தி இருந்தான்.

திருமணம் எத்தனை எளிமையாக நடந்திருந்த போதும், அவள் மனம் கவர்ந்தவனுடனான திருமணத்தை மிகவுமே ரசித்து மகிழ்ந்திருந்தாள் சிவரஞ்சனி.

தங்கள் திருமண புகைப்படத்தை தன் பெற்றோருக்கு அவள் அனுப்பி இருக்க, “எங்களை பொருத்தவரைக்கும் நீ செத்து போய்ட்ட, இனி அம்மா அப்பான்னு இங்கே வந்து நிக்காதே” என வெறுப்பை உமிழ்ந்து இருந்தனர்.

அவளுமே இதை எதிர்பார்த்து இருந்ததில், பெரிதாக ஒன்றும் மனம் வருந்தி வாடி போகவில்லை. அவள் முக மாறுதல்களை கவனமாக பார்த்து கொண்டிருந்தவனை பார்த்து மெலிதாக முறுவலித்து தன்னை சாதாரணமாகவே காட்டி கொண்டாள்.

ஆனால் இதற்கெல்லாம் நேர்மாறாக முரளி வீட்டிற்கு சென்ற போது, நான்கு தெருவிற்கு கேட்கும்படி கத்த துவங்கி இருந்தார் மஞ்சுளா.

“அய்யோ அய்யோ என் புள்ளை அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருப்பானே, என்னத்தை காட்டி மயக்கினா தெரியலையே, பெத்தவ என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லாம இப்படி கல்யாணமே பண்ணி கூட்டிக்கிட்டு வந்திருக்கானே. வீட்டுல இன்னும் கல்யாணம் ஆகாத தங்கச்சி இருக்காளேன்னு நினைச்சு பார்த்தியாடா நீ” என அவர் ஏக வசனத்தில் பேசிக்கொண்டே போக,

“அம்மா இவளை நான் காதலிச்சேன், கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இப்போ இந்த வீட்டுக்குள்ள வரவா இல்லை அப்படியே வெளியே எங்கேயாவது தனியா வீடு பார்த்து தங்கிக்கவா” என்று முரளி பதிலுக்கு சத்தம் போட அப்படியே கப்பென வாயை மூடி கொண்டார் மஞ்சுளா.

கணவன் இறந்த பிறகு மகனின் உழைப்பில் தான் இந்த குடும்பம் நடந்து வருகிறது. மூத்த மகளுக்கு நல்லபடியாக திருமணம் செய்து வைத்திருந்தவன் அடுத்த மகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திருமணத்திற்கு பணமும் நகையும் சேர்த்து வைத்து கொண்டு இருக்கிறான். இனி மூத்தவளுக்கு வேறு பிள்ளைகள் பிறந்ததில் அவளுக்கு செய்ய வேண்டியது எல்லாம் இருக்கிறது. பொறுப்பானவன், கடமையை செய்ய தவறாதவன். எப்படியும் இரண்டு மகள்களின் வாழ்க்கையும் அவன் கையில் தான் இருக்கிறது என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இதில் அவன் வீட்டை விட்டு போய் விட்டால் அவ்வளவு தான். கணவன் விட்டு சென்றது சொந்த வீடு மட்டும் தான். வீடு இருந்து விட்டால் போதுமா தினம் சாப்பாடு, செலவு, மகளின் படிப்பு, திருமணம் இதெல்லாம் இருக்கிறதே. இவன் வீட்டை விட்டு சென்று விட்டால் என்ன செய்வது, அந்த செலவுகளுக்கு எங்கே போவது என்று அவர் மனம் ஒரு நீண்ட காலத்திற்கான வரவு செலவு கணக்கை போட்டு முடித்தது.

அதற்காக மகனை மணந்து கொண்டு வந்திருக்கும் இவளை இங்கே சாதாரணமாக உள்ளே நுழைய விட்டு விட்டால் எப்படி, அப்புறம் அவருக்கு என்ன கெத்து இருக்கிறது. அழுதபடியே முகத்தை திருப்பி கொண்டார்.

“சிவா நீ உள்ளே வா”, என்று அவன் அழைக்க, இவள் தயங்கி நின்றாள்.

மகன் தன்னிடம் வந்து கெஞ்சவில்லை. நீ தான்மா எனக்கு முக்கியம், எதி கல்யாணம் ஆகிடுச்சு நீ சொன்னா தான் நாங்க உள்ளே வருவோம்னு டிவி சீரியல் வசனம் பேசவில்லை, தன் போக்கில் உள்ளே செல்ல போகிறான் என்றதும் இதுவரையில் யோசித்து வைத்த கணக்கெல்லாம் காற்றில் போக கோபம் முன்னுக்கு வந்தது மஞ்சுளாவுக்கு.

“ஆமாடா இனி எல்லாம் உன் இஷ்டம் தானே, பெத்தவ மனசு எங்கே புரிய போகுது, உனக்கு பொண்ணு சோக்கு கேட்குது அதான்” என்று மகனென்றும் பாராமல் கொச்சை வார்த்தை பேச போகவும் அம்மா என்று அதட்டி இருந்தான் முரளி.

அவசரத்தில் வார்த்தைகளை விட்டு விட்டதை அப்போது தான் உணர்ந்த மஞ்சுளா என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க, “வா சிவா நாம வெளியே வீடு பார்த்துக்கலாம்” என்று அவன் மனைவியின் கையை பிடித்து இழுக்கவும், அய்யய்யோ அப்படியே போய்டுவானோ என்று மஞ்சுளா திகைத்து போனார்.

“என்ன அத்தை இப்படித்தான் நடு வீதியிலே வச்சி வீட்டு விஷயத்தை பத்தி பேசுவீங்களா. நடந்தது நடந்து போச்சு உள்ளே கூட்டிட்டு வாங்க” என்றபடி வந்து நின்றார் நித்யாவின் கணவன் சுதாகர்.

“முரளி என்ன இது வீட்டுக்கு வந்த பொண்ணை வெளியேவே வச்சு பேசிக்கிட்டு இருக்க, அவங்க தான் பெரியவங்க நடந்ததை ஏத்துக்க முடியாம பேசுறாங்க முதல்ல உள்ளே வாங்க” என்று அழைத்தார்.

தங்கை கணவராக இருந்தாலும் தன்னை விட ஓரிரு வயது பெரியவர் என்பதாலும், அவரின் குணநலன்களாலும் அவர் மீது முரளிக்கு மிகுந்த மரியாதை உண்டு. மருமகன் சொன்ன பிறகு எதிர்த்து பேசாமல் அமைதியாக நின்ற அன்னையை பார்த்தவன், மனைவியின் கையை பற்றி கொண்டு உள்ளே சென்றான்.

காவ்யா கல்லூரிக்கு சென்று திரும்பி வந்தவள், என்னவோ தமையன் தங்களுக்கு மொத்தமாக அநீதி இழைத்து விட்டது போல அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.

“அம்மா இனிமேல் எனக்கு யாரும்மா கல்யாணம் செய்து வைப்பாங்க, என்னோட படிப்பு அவ்வளவு தானா, நான் என்னம்மா செய்வேன்” என்று அவள் அழுது போட்ட டிராமாவில் சிவரஞ்சனிக்கு என்ன மாதிரி நடந்து கொள்வது என்றே தெரியவில்லை.

போதாதற்கு மாமியாருடன் கோவிலுக்கு சென்று விட்டு மறுநாள் வந்த நித்யா வேறு இவளை விரோதி மாதிரி பார்த்து வைத்தது எல்லாம் கல்லில் செதுக்கி வைத்த கல்வெட்டு போல அழியாமல் மனதில் பதிந்து கிடக்கிறது.

மனைவியின் வாடிய முகத்தை கண்ட முரளி தான், “ஹே இதெல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்தது தானே, பெருசா பீல் பண்ணாத” என்று சமாதானம் செய்தான்.

திருமணத்திற்கு முன் ஒரே ஒரு படுக்கை அறை மட்டுமே இருந்த அந்த வீட்டில் அம்மாவும் மகளும் டிவி பார்த்தபடி கூடத்தில் படுத்து கொள்ள, முரளி மட்டும் தான் படுக்கை அறையில் படுப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் முரளிக்கு திருமணம் ஆன முதல் நாள் மட்டுமே தான் அது வழக்கமாக இருந்தது.

மறுநாள், முரளி வீடு வந்த போது கூடத்தில் சுவற்றின் ஓரத்தில் அமர்ந்து இருந்தாள் சிவா. தனக்காக காத்திருக்கிறாள் போல என்று நினைத்து கொண்டே அறைக்குள் சென்று உடை மற்ற போக, அங்கே காவ்யா படுத்து உறங்கி கொண்டிருந்தாள்.

நெற்றி சுருங்க, மனைவியை பார்த்தான், அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்து கொண்டிருந்தாள் அவள். பேசாமல் வந்து சாப்பிட்டான். டிவி முன் அமர்ந்து இருந்த மஞ்சுளா எதுவும் பேசவில்லை. வந்த மறுநாளில் இருந்தே சிவா அங்கே சமையல் வேலையை எடுத்து கொண்டாள், அல்லது அவள் பக்கம் தள்ளப்பட்டது என்று கூட சொல்லலாம். தலையில் இடி விழுந்தது போல அம்மாவும் மகளும் அமர்ந்து இருக்க, எவ்வளவு நேரம் தான் சும்மா இருப்பது என்று ரஞ்சனியே சமைக்க துவங்கினாள், பின் அதுவே பழகி போனது.

சாப்பிட்டு முடித்தவன், “ஏம்மா காவ்யா உள்ளே படுத்திருக்கா” என்று கேட்டான்.

“அவளுக்கு தலை வலிக்குதாம், இங்கே டிவி வெளிச்சத்துல படுத்தா அதிகமா வலிக்கும்னு அங்கே போய் படுத்திருக்கா” என்றார் சாதாரணமாக.

இத்தனை நாள் வராத தலைவலி, இன்று வந்திருக்க எல்லாம் புரிந்தது மகனுக்கு.

“நீயும் போய் உள்ளே படு சிவா” என்றவன் அங்கேயே பாயை விரித்து படுத்து விட்டான்.

நேற்றைய இரவே புது இடம் புது சூழ்நிலை என்று அவளுக்கு சமயம் கொடுத்து விலகி இருந்தான். இன்று.. அவள் ஒன்றும் முழுமுற்றாக இப்போதே தாம்பத்தியம் வேண்டும் என்று அவசரப்படவில்லை. ஆனால் கூட்டில் இருந்து தனித்து விடப்பட்ட பறவையாக இருந்த அவளுக்கு அவனின் அருகாமை வேண்டும் என்று தோன்றியது. அவனுக்கும் அது புரிந்தது, அதே போல தாய் தங்கையின் செய்கையின் அர்த்தமும் புரிந்தது. அன்னை தங்கையிடம் பேசும் விஷயம் இதுவல்ல என்று அதுவும் புரிந்தது. இப்படி எல்லாருக்கும் நல்லவனாக இருப்பது அத்தனை சுலபமல்லவே.

இது போலவே காவ்யாவுக்கு தொடர்ந்து தலைவலி வந்தது. கீழ்தளம் மட்டுமே வீடாக இருக்க மாடியில் எதுவும் சுற்று சுவர் கூட வைக்காமல் இருந்தது. முதல் வேலையாக அங்கே ஒரு ஏணியை போட்டு ஒரு டெண்ட் போல ஒன்றை ஏற்பாடு செய்தான். என்ன செய்யறான் இவன் என்று மஞ்சுளா பார்த்து கொண்டிருக்கும்போதே, இரவில் மனைவியுடன் அங்கே சென்று உறங்கலானான்.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் பார்த்து வைக்க, சங்கடமாகி போனது மஞ்சுளாவிற்கு.
“என்ன மஞ்சுளா புதுசா கல்யாணம் பண்ண பிள்ளைங்களை இப்படி வெட்ட வெளியில படுக்க வைக்கிற, இதெல்லாம் குடும்ப பொம்பளை செய்யற வேலையா” என்று சிலர் உரிமையாக கேட்டு வைத்தார்கள்.

யார் என்ன பேசினாலும் பதில் கூறும் ஆள் தான் என்றாலும் கூட, இப்படி மகனையும் மருமகளையும் கொடுமை படுத்துவது போன்ற கோணத்தில் அனைவரும் பேசும்போது, பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நிற்பது பிடிக்கவில்லை மஞ்சுளாவிற்கு.

அதன் பிறகும் காவ்யாவின் தலைவலி சரியாகாமல் போகுமா என்ன?. சண்டையிடாமல் வாக்குவாதம் செய்யாமல் பிரெச்சனையை தீர்த்து விட்டான் கணவன். அம்மா தங்கையிடம் சென்று நானும் என் மனைவியும் தனி அறையில் படுக்க வேண்டும் என்று வாய் விட்டு கேட்காமல் தனக்கு தேவையானதை செய்து கொண்டான். இப்படிதான் அவர்களுக்கு தேவையான அடிப்படை உரிமையான தனியறையை கூட ஏதேதோ சித்து வேலைகள் செய்து தான் வாங்க வேண்டும் என்ற நிலையில் இருந்தனர்.

ஒவ்வொரு நாளுமே இது போல ஏதாவது ஒரு பிரச்சனைகள் வரத்தான் செய்தது. அடிதடி ரகளை தவிர, குட்டி கலகம் எல்லாம் ஏக போகமாக தினம் ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருந்தது. அதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சமாளித்து, அவளும் இந்த வாழ்க்கைக்கு பழகி கொண்டாள். இந்த வீடு முற்றிலுமாக அவர்களுக்கு உரிமையானது அல்ல என்பதை ஏதாவது ஒரு விஷயத்தில் உணர்த்தி கொண்டே தான் இருந்தனர்.

இப்படியான சூழ்நிலையில் இருந்து இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்ற நிலைக்கு மட்டும் தான் வந்திருக்கிறார்கள். வீட்டை திருத்தி இரு அறைகள் கட்டி, மனைவிக்கு தனி அறை கொடுத்து விட்டான் தான். ஆனால் வேலைகளை இழுத்து போட்டு செய்வதில் இருக்கும் உரிமை, அந்த வீட்டின் எந்த ஒரு இடத்திலும் அவளுக்கு இருப்பதில்லை. இதில் எந்த முகாந்திரத்தை வைத்து இது தங்கள் வீடு என்று அவர்கள் உரிமையோட வலம் வர முடியும். எதிர்காலத்திலும் இதே நிலை தான் தொடரும், இதற்கு மேலும் கூட வெவ்வேறு விதமாக இந்த வீட்டின் மீதான தனது உரிமையை மஞ்சுளா நிலைநாட்டி கொண்டே தான் இருப்பார். அதனாலே முரளி தனது மனைவிக்கும் மகளுக்கும் உரிமையான ஒரு வீட்டினை கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறான்.

இது ரஞ்சனிக்கும் புரிந்து தான் இருந்தது, தன்னை போலவே தன் மகளும் இந்த வீட்டில் உரிமையோடு எதையும் செய்ய தயங்கி நிற்கும் நிலை வர கூடாது. அதற்கு கணவனின் எண்ணம் தான் சிறந்த வழி என்றும் அவளுக்கு புரிகிறது. அதனால் இனி இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்ற கணவனின் எண்ணத்தை அவனோடு இணைந்து செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

ரஞ்சனி வீட்டில் ஆண் பிள்ளைக்கு தான் மரியாதை. அவன் தான் குடும்பத்தை தாங்குவான், அவன் தான் தங்களின் வாரிசு. பெண் பிள்ளை அடுத்த வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்ப வரிசை சுமந்து அவர்கள் வம்சத்தை வளர்க்கத்தானே. அதனால அவள் மீது பெரிதாக அக்கறை காட்ட வேண்டியதில்லை என்ற மனப்பான்மை இருந்தது. அதற்கு நேர்மாறாக இங்கே,
பெண் பிள்ளைகளை கரை சேர்க்க உதவும் ஒரு கருவியாக மட்டுமே ஆண் பிள்ளையை பார்த்தார் மஞ்சுளா. அவருக்கு அவரின் பெண்கள் தான் முக்கியம், ஆண் பிள்ளை எப்படியாவது பிழைத்து கொள்வான். ஆனால் பெண்ணிற்கு அப்படி இல்லை, குடும்பத்தில் ஆணாக பிறந்தவன் காலம் முழுக்க பெற்றவர்களுக்கு செய்ய வேண்டும், உடன் பிறந்த சகோதரிகளுக்கு செய்ய வேண்டும், அவனுக்கு என்று வரும்போது அவன் மனைவி வழியாக வரும் சொத்தை கொண்டு வாழ்ந்து கொள்ள வேண்டும் என்று தான் மஞ்சுளா நினைத்து இருந்தார்.

இப்படி இருவேறு குடும்பங்களில் இருந்து, ஒன்றாக வாழ்வதற்காக இணைந்த இரு உள்ளங்களுமே இவர்களின் பரபட்சத்தில் மனதில் வலுவாக அடி வாங்கி தான் இருந்தனர்.

ஆணோ பெண்ணோ சரிசமம் என்று கூறும் சமூகம் ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் என்று எழுதி வைக்கவில்லை. இன்னும் எத்தனையோ குடும்பங்களில் மகன்களிடம் இருந்து பறித்து மகள்களுக்கு செய்ய வேண்டும் என்று நினைக்கும் அன்னைமார்கள் இருக்கின்றனர்.
அவர்களில் யாருக்கும் அந்த மகனுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு, குடும்பம் உண்டு, குழந்தை உண்டு என்ற எண்ணம் இருப்பதில்லை. மகள்கள் அடுத்த வீட்டிற்கு சென்ற பின்னரும் கூட நன்றாக வாழ, அதற்காக தங்கள் வீட்டில் இருக்கும் மகன்களை சிரமப்படுத்துகிறோம் என்ற எண்ணம் இருப்பதே இல்லை.
 
Top Bottom