தூரங்கள் 7 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரங்கள் 7

New updates

LATEST
Joined
Jun 29, 2026
Messages
39
Reaction score
29
Points
18
Chapter 7
ஒன்றை ஒன்று துரத்தி வரும் அலைகளை போல
உன்னுடனான நினைவுகள்
ஒன்றை ஒன்று துரத்தி கொண்டே இருக்கிறது.
இதில் என் மனக்கடல் மொத்தமும்
உன் எண்ண அலைகளால் நிரம்பி இருக்க

எதை விடுவேன் எதை தொடர்வேன்...

மாலையில் பள்ளி முடிந்து கிளம்பும் நேரமே அவளுக்கு அழைத்திருந்தான் முரளி.

“சொல்லுங்க”

“சிவா, நம்ம பாபு அண்ணன் ஒரு இடம் பார்த்திருக்காராம், நீ போய் ஒரு முறை பார்த்துட்டு எனக்கும் போட்டோ அனுப்பி விடு” என்றான்.

இவள் பேசிக்கொண்டே வர, ஹஸ்பண்ட்டா என்று கேட்டு சுதா கண்ணடித்து விட்டு போனாள். அவளுக்கு சிரிப்பை உதிர்த்தவள், “சரிங்க எப்போ போகனும்” என்றாள்.

“இப்போ ஸ்கூல் விட்டாச்சு தானே, அப்படியே பார்த்துட்டு வீட்டுக்கு போய்டுங்க”

“இப்போவா லேட்டானா அத்தை கேட்பாங்களே”

“சிவா, இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்காதே, ஸ்கூல்ல கொஞ்சம் வேலை இருந்ததுன்னு சொல்லு. அப்படி உனக்கு பொய் சொல்றது பிடிக்கலைன்னா உண்மையை சொல்லு. நாம யார் வீட்டு பணத்தையும் கொள்ளை அடிச்சு எதுவும் செய்யலை, சரியா”

“ஆமா நீங்க சொல்லிடுவீங்க நான் தானே இங்கே பேசணும்” என முணுமுணுத்தாள்.

“சிவா” அவன் அழுத்தமாக சொல்ல, “சரிங்க போறேன்” என்று சம்மதம் சொன்னாள்.

“சரி ஸ்கூல் வாசல்ல பாபு அண்ணன் ஆட்டோல வெயிட் பண்றாரு பாரு, அப்படியே போய்டுங்க”

“ம்ம், பாப்பாக்கிட்டே கொடு” அவள் அபியிடம் போனை கொடுக்க, அவள் பேசிக்கொண்டே வந்தாள். அவளிடம் இரண்டொரு வார்த்தைகள் பேசியவன் வைத்து விட்டான்.

இருவரும் வெளியே வர பாபு வெளியே நின்று இருந்தார். அவருக்கு ஒரு புன்னகையை சிந்தியவள் மகளுடன் ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

இடம் பார்க்க நன்றாகத்தான் இருந்தது, கொஞ்சம் கடைசி மனையாக இருந்தது. ஏற்கனவே சிறிய வீடு இருந்திருக்கும் போல, அதன் அருகேயே ஒரு பாத்ரூம் போல ஒன்றும் இருந்தது.

“600 சதுர அடிக்கு கொஞ்சம் கூடுதலாக இருக்கும்மா, ஏற்கனவே வாங்கினவங்க தண்ணி கரண்ட் எல்லாம் எடுத்து வச்சிருக்காங்க. மெதுவா வீடு கட்டிக்கலாம்னு இருந்திருக்காங்க. ஆனா இப்போ அவங்க பிள்ளையோட அவன் வேலை செய்யிற இடத்துக்கே போறாங்களாம். அதான் வித்து பணத்தை எடுத்துட்டு போகலாம்னு நினைக்கிறாங்க போல” என்றார். சுற்றிலும் பார்வையை ஓட்டியவள், போட்டோவும் எடுத்து கொண்டாள்.

“இந்த இடத்தை அவங்க வாங்கி போட்டு ரொம்ப வருஷம் ஆகி இருக்கு. அங்கங்க வாங்கி போட்டு வச்சதை எல்லாம் வித்து பாங்க்ல போட்டுட்டு போகலாம்னு நினைக்கிறாங்க” என்றார்.

“வேற ஏதும் வில்லங்கம் இருக்காதுல்லண்ணா”

“என்னம்மா இப்படி கேட்கிற, முரளிக்கு நான் அந்த மாதிரி வில்லங்கமுள்ள இடத்தை சொல்லுவேனா”

“அய்யோ இல்லைண்ணா உங்களை தப்பா சொல்லலை, உங்களுக்கு தெரியாம ஏதாவது இருந்தா அதுனால தான் கேட்டேன். எவ்வளவு சொல்றாங்க”

அவர் சொன்ன தொகையை கேட்டதும் கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது. “சரிண்ணா நான் அவர்க்கிட்டே பேசறேன்”

“சரிம்மா, கொஞ்சம் சீக்கிரம் யோசிச்சு சொல்லு, முரளி ரொம்ப நாளா வீடு கட்டனும்னு சொல்லிக்கிட்டே இருக்கான். இப்போ ஆரம்பிச்சா தான் அவன் வர்றதுக்குள்ள வீடு கட்டி முடிக்க முடியும்” என்றார் அக்கறையாக.

“எங்கேண்ணா, அவர் இல்லாம என்னால தனியா என்ன செய்ய முடியும். இடத்தை வாங்கிட்டா அவரே வந்து கட்டிமுடிக்கட்டும்” என்றாள்.

“சரிம்மா போகலாம்” மூவரும் கிளம்பி வர, ஆட்டோ ஸ்டாண்ட்டிலேயே தங்களை விட்டு விடும்படி கேட்டு கொண்டாள்.
“ஏன்மா வீட்டுல இறக்கி விடறேன்”

“இல்லைண்ணா கொஞ்சம் பொருள் எல்லாம் வாங்கணும் வாங்கிட்டு போவோம், அதான்”

“சரிம்மா” என்று அவர் இறக்கி விட்டு விட்டார்.

அம்மாவும் மகளும் வீட்டிற்கு வந்தனர், அவள் உள்ளே வந்து நுழையவும் மஞ்சுளா கடிகாரத்தை குறிப்பாக பார்த்தார். அதில் நீ லேட்டு என்ற கண்டனம் இருந்தது.

அமைதியாக உள்ளே சென்றவள் தானும் மகளும் உடை மாற்றி வெளியே வர, முணுமுணுவென ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

அவரை கண்டுகொள்ளாதவள், கிச்சன் சென்று அழுக்கு பாத்திரங்களை எல்லாம் எடுத்து கழுவ போட்டாள். பாத்திரத்தை கழுவி, அதில் பாலை ஊற்றி டீ தூள் சக்கரையை போட்டாள்.

“அம்மா நாங்க கிளம்பறோம்” என்று வந்து நின்றாள் காவ்யா. இவளுக்கு கேட்க வேண்டும் என்று தான் அவ்வளவு சத்தமாக சொன்னாளோ என்னவோ, ஆனால் ரஞ்சனி வெளியே எட்டி பார்க்கவில்லை.

“அதுக்குள்ள என்னடி அவசரம், நாலு நாள் கூட சேர்ந்தா மாதிரி தங்களை, அதுக்குள்ள ஓடற” மஞ்சுளா இப்போது தான் மகள் கிளம்புவது தெரிந்தது போல கேட்டார். கிட்டதட்ட ஒரு மாதமாக இங்கே தங்கி இருக்கு மகளை பிரிய மனமில்லை போல.

“அய்யோ அம்மா, உங்க வீட்டு வெந்த சோறும், காஞ்ச இட்லியும் என்னால சாப்பிட முடியும், ஆனா இவரால முடியாது. எங்க வீட்டுல இதை விட நல்லா செய்வாங்க, வேலைக்கு ஒண்ணு சாப்பிட்டு வளர்ந்த மனுஷன், எனக்காக எவ்வளவு நாள் தான் பொறுத்து போவாரு. போதும் உங்க உபசாரம். நாங்க கிளம்பறோம்” என்றாள் சலித்தபடியே.

“என்னடி பண்றது, என்னால அடுப்படியிலே நின்னு சமைச்சு போட முடியலை. கொஞ்சம் நேரம் நின்னாலே கால் இடுப்பு எல்லாம் வலிக்குது. சரி அப்படியே ஏதாவது செய்யலாம்னு பார்த்தாலும் வீட்டுல எந்த பொருள் எங்கே இருக்குன்னு தேடி தேடி கண்டு பிடிக்கக் வேண்டியதா இருக்கு. எல்லாத்தையும் ஏதோ ஏழு கடல் ஏழு மாலை தாண்டி கொண்டு போய் மறைச்சு வச்சிருக்காங்க. வயசான காலத்திலே அவங்க சமைக்கிறதை தான் சாப்பிட்டு ஆகணும்னு எனக்கு தலையெழுத்து. நீங்க வாழ வேண்டிய புள்ளைங்க, உடம்புக்கு வலுவா சாப்பிட்டா தானே நாளைக்கு புள்ளைக்குட்டி பிறக்க தெம்பு இருக்கும். கிளம்புங்க உங்க வீட்டுலே போய் நல்லதா சாப்பிடுங்க” என்று அங்கலாய்த்து கொண்டாள் மாமியார்.

உள்ளிருந்து எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த ரஞ்சனி பதில் ஏதும் பேசவில்லை, அமைதியாக டீயை எடுத்து கொண்டு வந்து வைத்தாள்.

“டீ எடுத்துகோங்க காவ்யா” என்று சொன்னாள்.

அவள் அமைதி காவ்யாவுக்கு கோபத்தை தூண்டியது, “என்ன அண்ணி நாங்க கிளம்பறோம்னு சொல்றோம் ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ங்கறீங்க” அவளை வம்புக்கு இழுத்தாள்.

“பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க காவ்யா” என்றாள் ரஞ்சனி.

அதை கேட்டதும், மஞ்சுளாவிற்கு கோபம் வந்து விட்டது “வீட்டுக்கு வந்தவங்க போறேன்னு சொன்னா இப்படித்தான் போங்கன்னு சொல்றதா, இன்னும் நாலு நாள் இருந்துட்டு அப்புறமா போகலாம்னு சொல்ல மனசு வருதா பாரு. எல்லாம் நம்ம புருஷன் சம்பாதிக்கிற காசு தானே இவங்க எல்லாம் எதுக்கு சாப்பிடணும்னு எண்ணம்” என தோளில் இடித்து கொண்டாள் மஞ்சுளா.

“அதுக்கில்லை அத்தை அவங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கும், அதை தடுக்கிற மாதிரி போறவங்களை நாம நிறுத்தி வைக்க கூடாதுல” என்றாள் ரஞ்சனி.

“ஆமா அப்படி அவங்களுக்கு அங்கே என்ன வேலை இருக்க போகுது” என்று மஞ்சுளா துவங்க, ‘அய்யோ வேலை வெட்டி எதுவுமில்லைன்னு இவங்களே அசிங்கப்படுத்திடுவாங்க போல’ என்று நினைத்த பிரேம் அவசரமாக “ஆமா அத்தை எங்களுக்கு கொஞ்சம் இல்லை இல்லை நிறையவே வேலை இருக்கு. அடுத்த முறை வர்றோம், வா காவ்யா” என்று மனைவியை கை பற்றி இழுத்தான் பிரேம்.

“இருங்க தம்பி டீ குடிச்சுட்டு போங்க” என்று உபசரித்தாள் ரஞ்சனி.

“என்ன அண்ணி எங்களை கிளம்பவும் சொல்லிட்டு அப்படியே நல்லவங்க மாதிரி உபசரிக்கிறீங்களா” கணவன் போகலாம் என்று கூறவும் கடுப்பானாள் காவ்யா.

“நான் எப்போ கிளம்ப சொன்னேன், பிரேம் தான் சொன்னாரு ஏதோ நிறைய வேலை இருக்குன்னு” அவள் அப்படி சொல்லவும், உடனே மஞ்சுளாவுக்கு சண்டையிட வேறு காரணம் கிடைத்து விட்டது.

“அய்யோ அய்யோ அது என்ன வீட்டு மாப்பிள்ளையை பேர சொல்லி சொல்ற, அவருக்கு ஒரு மரியாதை வேண்டாமா” என அடுத்த காரணத்தை அடுக்கினாள்.

“சரிங்க அத்தை இனி பிரேம் அண்ணன்னு கூட சொல்றேன் போதுமா” என்றவள் டீ தம்பளரை அங்கேயே வைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

அண்ணன்னு சொல்றேன்னு மரியாதை கொடுப்பதாக சொன்னவள், டீயை கையில் கூட எடுத்து கொடுக்காமல் சென்று விட்டதில் எதை விடுப்பது எதை கேட்பது என்று தெரியாமல் விழித்தனர் மற்றவர்கள்.

உடனே காவ்யா கண்ணீர்படலத்தை துவங்கி இருந்தாள். “இனிமேல் இங்கே வந்தா கேளு, எல்லாருக்கும் என்னை கண்டா கிள்ளுக்கீரையா இருக்கா. நான் என்ன அக்கா மாதிரி தினமுமா வந்துட்டு இருக்கேன், ஏதோ நாலு நாள் வரேன் அது உன் மருமகளுக்கு பொறுக்கலை. எங்கண்ணன் சம்பாத்தியத்திலே தானே இந்த வீடு நடக்குது. என்னவோ நானும் என் புருஷனும் சேர்ந்து சாப்பிட்டே உங்க சொத்தை எல்லாம் கரைக்கிற மாதிரி பண்றீங்க” என்று அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, “என்னடி நான் தினமும் வந்து போறேன்னு சொல்லி காட்டறியா” என்று சண்டைக்கு வந்தாள் நித்யா.

எப்போது எங்கிருந்து வந்தாளோ மூக்கு வியர்த்தது போல வந்து நின்று விட்டாள். இதோ அடுத்ததும் வந்திருச்சா, என்று கண்ணை மூடி நெற்றியில் கையை வைத்து கொண்டு படுத்து விட்டாள் ரஞ்சனி. டியூஷன் பிள்ளைங்க வேற வருவாங்க, இப்படி சண்டை போட்டுகிட்டு இருந்தா என்ன செய்யறது. அவள் பிரெச்சனை அவளுக்கு. இவர்கள் போடும் சண்டை தான் தெரு முனை வரை கேட்குமே, இதில் எப்படி டியூஷன் எடுப்பார்கள் என்று பிள்ளைகளை பெற்றவர்கள் நினைத்தால் எப்படி பிள்ளைகளை படிக்க அனுப்புவார்கள்.

“அக்கா நான் ஒண்ணும் உன்னை சொல்லலை”

“வேற யாரை சொன்ன, நான் இங்கே பக்கத்திலே இருக்கிறதால தான் அம்மாவை பார்த்துக்கிறேன். உனக்கென்ன எங்கேயோ நிம்மதியா இருக்க. ஆனா அவங்களுக்கு ஏதாவது உடம்புக்கு முடியலை, இல்லை ஏதாவது தேவைன்னா பக்கத்திலே இருக்கிற நான் தானே வந்து நிக்கிறேன். நான் என்னவோ தினம் இங்கே வந்து இருக்கிறதை எல்லாம் சுரண்டிக்கிட்டு போற மாதிரி பேசற. அப்படியே இங்கே சுரண்டிக்கிட்டு போறதுக்கு என்ன இருக்கு” என்றாள் எள்ளலாக.

உள்ளே இருந்த ரஞ்சனிக்கு கண்ணை கட்டிகொண்டு வந்தது, போன மாதத்தில் கூட மாமியாருக்கு லேசான காய்ச்சல். எல்லாம் செய்து பக்கத்தில் வைத்து விட்டு, நித்யாவிடம் கொஞ்சம் வந்து பார்த்து கொள்ளுமாறு சொல்லிவிட்டு தான் பள்ளிக்கு சென்றாள்.

ஆனால் பதினொரு மணிக்கெல்லாம், “அவங்க சாப்பிடாம சோர்ந்து போய் படுத்திருக்காங்க, கூட்டிட்டு போய் ட்ரிப்ஸ் ஏத்திட்டு வந்தா தான் சரியாவாங்க நீ லீவு போட்டுட்டு வா” என்று போனில் அழைத்தாள்.

வேலைக்கு கிளம்பி வந்து இரண்டு மணிநேரம் தான் ஆகிறது என்றதில் எப்படி விடுப்பு கேட்பது என்று இவளுக்கு தெரியவில்லை. கேட்டால் கொடுப்பார்கள் தான் அதற்காக அடிக்கடி இது போல எடுத்து கொள்ள முடியாதே.

“சரி அண்ணி நீங்க கூட்டிட்டு போங்க நான் மதியமா லீவு சொல்லிட்டு வரேன்” என்று சொன்னதற்கு, “அய்யயோ என்னால எல்லாம் கூட்டிட்டு போக முடியாது, நிறைய துணி ஊற வச்சிருக்கேன் அதெல்லாம் துவைக்கணும். நீயாச்சு உங்க மாமியாராச்சு நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்று வைத்து விட்டாள் அம்மாவை தாங்கி பிடிக்கும் தவ புதல்வி.

இதற்கு மேல் இங்கே இருந்தால் சரி வராது என்று எண்ணியவள் விடுப்பு சொல்லிவிட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தாள் அம்மாவும் மகளும் அமர்ந்து ஊர் கதை பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இவளை கண்டதும், மஞ்சுளா கண்களை இறுக மூடி கொண்டு அமைதியாகி விட, “அம்மா நீ ரஞ்சனி கூட ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துரும்மா, நான் வீட்டுக்கு போய் மதியம் சமைக்கனும். ஹாஸ்பிடல் போய் பார்த்துட்டு என்னன்னு ஃபோன் பண்ணுங்க” என்று விட்டு நடையை கட்டி விட்டாள்.

“ஏன் அத்தை சாப்பிடாமலே இருந்தா எப்படி, சாப்பிட்டு மாத்திரை போட்டா தானே உடம்பு கொஞ்சம் சரியாகும்”

“ஹா அதெல்லாம் மாத்திரை போட்டா எனக்கு சரியாகாது, என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ. அங்கே போய் ஊசி போட்டா தான் எனக்கு சரியாகும்” என்று ஒரே போடாக போட்டாள் மஞ்சுளா.

இனி மேல் பேசினால், “உடம்பு சரியில்லைன்னா ஹாஸ்பிடல் கூட கூட்டிட்டு போய் பார்க்க மாட்டேன்கிறா, என் புள்ளை அங்கே வெளிநாட்டுல கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் பாங்க்ல போட்டு வச்சுக்கிறா” என்று எட்டு வீட்டுக்கு கேட்கும்படி கூப்பாடு போடுவாள். அதனால் பாபு அண்ணாவுக்கு அழைத்து ஆட்டோவில் மருத்துவமணை கூட்டி கொண்டு சென்றாள்.

அங்கே போனதும், சாதாரண காய்ச்சல் தான் ரெண்டு நாட்கள் மருந்து சாப்பிடுங்க என்று மாத்திரை எழுதி கொடுத்தார் டாக்டர். சரி கிளம்பலாம் என்று பார்த்தால், “என்னால நிக்கவே முடியலை, கை கால் எல்லாம் தடதடன்னு வருது குளுக்கோஸ் ஏத்துங்க” என்று அமர்ந்து கொண்டாள்.

“ட்ரிப்ஸ் தேவை இல்லம்மா, வேணும்னா ஓஆர்எஸ் (oral rehydration solution) வாங்கி குடிங்க, தெம்பா இருக்கும்” என்று கூறினார் மருத்துவர்.

“ஆ, அதெல்லாம் சரி வராது டாக்டர் என் உடம்பை பத்தி எனக்கு தெரியும், ட்ரிப்ஸ் போட்டா தான் தெம்பு வரும் நீங்க ட்ரிப்ஸ் ஏத்துங்க” என்று கூற, அவரும் என்ன செய்வார், ட்ரிப்ஸ் ஏற்ற சொல்லி விட்டார்.

ஒரு ட்ரிப்ஸ் ஏற்றி முடிக்க, இரண்டு மணி நேரம் ஆனது. அதற்குள் பக்கத்து படுக்கையில் இருந்த பெண்ணிடம் அறிமுகம் ஆகி அவரிடம் கதைகள் பேச துவங்கி இருந்தாள் மஞ்சுளா.

இவர்களை பார்த்த நர்ஸ் வந்து, “ஏம்மா இவ்வளவு தெம்பா பேசறீங்க, என்னவோ தெம்பு இல்லைன்னு ட்ரிப்ஸ் ஏத்திட்டு தான் போவேன்னு சொல்லுறீங்க. இது ஒண்ணும் வீடு இல்லை ஊர் கதை பேச வாயை மூடிட்டு படுங்க” என்று அதட்டி விட்டு சென்றாள்.

அதன் பிறகு ஆட்டோ புக் செய்து வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த வேலைகளை கவனித்து, மீண்டும் பள்ளிக்கு சென்று அபியை அழைத்து கொண்டு வந்து மற்ற வேலைகளை எல்லாம் முடிந்த போது தான், அன்பாக தாயை பார்க்க வந்தாள் நித்யா. இது தான் அவள் பக்கத்திலேயே இருந்து பார்த்து கொள்ளும் லட்சணம்.

ஒரு பெருமூச்சுடன், இவள் எழுந்து வெளியே வர, “நான் உன்னை சொல்லுவேனா அக்கா, ஏதோ என்னால அம்மா பக்கத்திலேயே இருக்க முடியலைன்னு கொஞ்சம் ஆதங்கமா பேசிட்டேன்” என்று பிளேட்டை மாற்றினாள் தங்கை.

“அது என்னடி” என்று நித்யா இன்னும் மலையிறங்காமல் பேச போக, “அடியே நித்யா அவ தான் சொல்றாள்ள விடுடி” என்று மஞ்சுளா, சிவரஞ்சனி வருவதை கண்ணை காட்டினாள்.

உடனே அக்காவும் தங்கையும் ராசியாகி விட்டனர், “சரிடி பார்த்து பத்திரமா போங்க. அடுத்தவாரம் வா” என்று கூற வரேம்மா என்று அம்மாவை கட்டி அணைத்து பிரியா விடை பெற்று கொண்டு சென்றாள் காவ்யா.

இந்த கூத்துக்களை எல்லாம் கண்டு கொள்ளாமல், டியூஷன் எடுக்க அமர்ந்து விட்டாள் சிவஞ்சனி.
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,377
Reaction score
3,223
Points
113
நிஜத்தில் தான் இந்த மாதிரி கன்றாவி நாத்தனாரு இருக்காங்கன்னா கதையிலுமா

பாவம் ரஞ்சனி நீ

முரளி ரொம்ப நல்லவன்

எப்படி அவங்க அம்மா தங்கச்சிமார் குணத்தை தெரிஞ்சுகிட்டான் தெரியல
 

kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,425
Reaction score
918
Points
113
அருமையான பதிவு
 
Joined
Jun 29, 2026
Messages
39
Reaction score
29
Points
18
நிஜத்தில் தான் இந்த மாதிரி கன்றாவி நாத்தனாரு இருக்காங்கன்னா கதையிலுமா

பாவம் ரஞ்சனி நீ

முரளி ரொம்ப நல்லவன்

எப்படி அவங்க அம்மா தங்கச்சிமார் குணத்தை தெரிஞ்சுகிட்டான் தெரியல
நன்றி sis 💖
 
Top Bottom