தூரங்கள் மடைமாறுமோ காதலில் 1 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரங்கள் மடைமாறுமோ காதலில் 1

New updates

LATEST
Joined
Jun 29, 2026
Messages
46
Reaction score
34
Points
18
தூரங்கள் மடைமாறுமோ காதலில்...

Chapter 1
நினைக்கும் போது இனிக்கும் நெஞ்சம்
தடுமாறி தவித்து நிற்கும்
அந்த நாள் வராமல் போகட்டும்
நினைவுகளை இழப்பதற்குள் வந்து விடு...


காலையில் அலாரத்தை முந்தி கொண்டு எழுந்திருந்தாள் சிவரஞ்சனி . இனி அவள் கடிகாரத்தை விட வேகமாக ஓட வேண்டும். அப்போது தான் அன்றைய நாளின் வேலைகளை அவள் முடிக்க முடியும். அவிழ்ந்து கிடந்த கூந்தலை அள்ளி கொண்டையாக இட்டு கொண்டே அருகில் உறங்கும் மகளை பார்த்தாள். குப்புற கவிழ்ந்து படுத்து சிறிதாக உதடுகள் பிளந்த படி உறங்கி கொண்டிருந்தாள் ஐந்து வயது மகள் அபர்நதி. கன்னத்தில் தவழ்ந்து கிடந்த முடி கற்றைக்களை ஒதுக்கி விட்டாள். அவள் நெற்றியில் சிறிதாய் முத்தமொன்றை கொடுத்து விட்டு எழுந்து போர்வையை மடித்து வைத்தவள் கதவை மெல்ல திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

இதன் பிறகு அவள் கைகளுக்கும் கால்களுக்கும் இறக்கை முளைக்காத குறைதான். அடுப்படியை இரவே சுத்தம் செய்து வைத்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை துடைத்து விட்டு பாலை எடுத்து காய்ச்சினாள். அதில் பாதியை எடுத்து காப்பி கலந்து வைத்து விட்டு மீதியை மகளுக்கென சத்து மாவு கஞ்சி கலக்கி எடுத்து வைத்தாள். அடுத்து இட்லிக்கு மாவை கிண்ணங்களில் ஊற்றி வைத்து விட்டு, சட்னி சாம்பார் சகிதம் செய்து, மதியம் சமையலுக்கு வெந்தய குழம்பு, அப்பள கூட்டு, பீன்ஸ் பொரியல் என்று செய்து முடித்திருக்க கண்கள் மணி பார்க்கும் திசையை நோக்கியது. இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும் என்று அவசரமாக வெளியே வந்தவள் மாற்றுடை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள்.

அவள் குளித்து விட்டு வரவும் சோபாவில் அமர்ந்து கொண்டு டிவியை உயிர்பித்து கொண்டிருந்தாள் அவள் மாமியார் மஞ்சுளா. அவரை பார்த்ததும் தலையில் இருந்த துண்டை இறுக சுற்றி கொண்டே கிச்சன் சென்றவள் ஒரு தம்பளரில் காப்பியை கலந்து எடுத்து கொண்டு வந்து கொடுத்தாள். டிவியில் இருந்து கண்ணை எடுக்காமலே அதை வாங்கி கொண்டவள், “என்ன டிபன் செஞ்ச” என்று கேட்டாள்.

“இட்லி சாம்பார் சட்னி செஞ்சிருக்கேன் மதியத்துக்கு வெந்தய குழம்பும் பீன்ஸ் பொரியல் அப்பளகூட்டு” என்றாள்.

“ஒரு வாரமா கறி மீன் இல்லாம நாக்கு செத்து கிடக்கு, ராத்திரிக்கும் இதே வச்சி ஒப்பேத்திடாம வரும்போதே கறி எடுத்துட்டு வந்து சமைச்சிடு” என்றாள்.

“அத்தை எனக்கு சாயங்காலம் டியூஷன் இருக்கு, நீங்க வேணும்னா கறி வாங்கி ஃபிரிஜ்ல வச்சிருங்க என்னால வரும்போது வாங்கிட்டு வர முடியாது”

அவளை ஏற இறங்க பார்த்தவள் “நானே வாங்கிட்டு வந்து வைக்கிறதுக்கு நீ எதுக்கு இருக்க” என எகிறினாள்.

ஒரு நெடுமூச்சை வெளியிட்டவள், ஒரு வித சலிப்பான தலையசைப்புடன் அங்கிருந்து அகண்றிருந்தாள்.

உள்ளே சென்றவளுக்கு ஆயாசமாக இருந்தது, ஒரு வாரம் விடுமுறைக்கு பிறகு இன்று தான் வேலைக்கு செல்கிறாள். முடிக்க வேண்டிய வேலைகளே இன்னும் நிறைய இருந்தது. அடுத்த மாதம் அரையாண்டு தேர்வுகள் வேறு வந்து கொண்டிருக்கிறது அதற்கு வேறு பிள்ளைகளை தயார் செய்ய வேண்டும். இதில் இவர்கள் வேறு என சலித்து கொண்டவள், மகளை தட்டி எழுப்பினாள்.
“அபி, அபிம்மா எழுந்திரு கண்ணா நேரமாச்சு” மகளிடம் சொல்லி கொண்டே பீரோவை திறந்து புடவையும் ஜாக்கெட்டும் எடுத்து அணிய துவங்கினாள். கண்களை கசக்கி கொண்டே எழுந்து அமர்ந்த அபர்நதி, “குட் மார்னிங் மா” என்றாள்.

“குட்மார்னிங் செல்லம், எங்கே ஓடி போய் பல் விலக்கி குளிச்சுட்டு வாங்க பார்க்கலாம்” என்றாள்.

“சரிம்மா” என்றவள் எழுந்து குளியலறை நோக்கி சென்றாள். புடவை உடுத்தி முடித்திருந்தவள், மகளுக்கு தேவையான பள்ளி சீருடைகளை எடுத்து வைத்து விட்டு வெளியே வந்தாள்.

அங்கே அப்போது தான் அறையில் இருந்து வெளியே வந்திருந்தாள் காவ்யா, தலை கலைந்து உடை நலுங்கி ஒழுங்கற்ற முறையில் வந்து நின்றவளை பார்க்கவே கடுப்பாக இருந்தது. உள்ளேயே குளியலறை இருந்தும் கூட இந்த பெண் எதற்காக இப்படி வந்து நிற்கிறதோ தெரியவில்லை என்று தான் தோன்றியது.

அவள் பின்னேயே கையில்லாத பனியனும் முட்டி தொடாத ஷார்ட்ஸ்ஸும் அணிந்தபடி வந்து நின்றான் அவள் கணவன் பிரேம்.

திருமணம் ஆனவர்கள் வெளியே வரும்போதே குளித்து விட்டு வர வேண்டும் என்ற கட்டு பட்டியான ஆள் அவள் கிடையாது. குறைந்தபட்சம் தலையை சரி செய்து கொண்டு முகத்தை கழுவிகொண்டாவது வெளியே வரலாமே. நெற்றியில் வைத்திருந்த குங்கும் ஆங்காங்கே தீட்டி கொண்டிருக்க ஏதோ சினிமாவில் வரும் கற்பழிப்பு சீன் போல வந்து நின்றால் என்ன சொல்வது. சொல்ல போனால் இதோ இங்கே அமர்ந்து இருக்கும் மாமியார் மஞ்சுளா, சிவரஞ்சனி திருமணமாகி வந்த புதிதில் இவளை என்னவோ தீண்ட தகாத ஒரு பிறவியை போலத்தான் பார்த்து வைப்பாள். அவள் இரண்டு நாட்கள் குளிக்கவில்லை என்றாலும் கூட மருமகள் எழுந்து வரும்போதே குளித்து விட்டு தான் வர வேண்டும் என்ற கொள்கை கோட்பாடுகளை மிகவும் கடுமையாக கடைபிடிப்பாள். ஆனால் அந்த கொள்கை எல்லாம் மகளுக்கு இல்லை போலும் அதுவும் செல்ல மகளாயிற்றே அப்படித்தான் இருப்பார்கள்.

அவர்களை கண்டும் காணாதது போல கிச்சன் செல்ல திரும்பியவளை, அண்ணி என்று அழைத்து நிறுத்தியவள் காப்பி என்று கட்டை விரலை உயர்த்தி சைகையுடன் காட்டினாள்.

சரி என்று தலையசைத்தவள் இருவருக்கும் எடுத்து கொண்டு வந்து நீட்ட, கணவன் அருகே அமர்ந்து இருந்த காவ்யா இரண்டு தம்பளரையும் வாங்கி கொண்டு ஒன்றை கணவனுக்கு கொடுத்தாள்.

மீண்டும் கிச்சனுள் நுழைந்தவள் தனக்கும் மகளுக்கு மதிய உணவை டப்பாவில் அடைத்து கொண்டு, அப்படியே ஒரு தம்பளரில் மகளுக்கு சத்து மாவு கஞ்சியை கலந்து எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.

அதற்குள் அபர்நதி குளித்திருக்க அவளுக்கு உடை மாற்றி விட்டு, கஞ்சி தம்பளரை அவளிடம் கொடுத்து விட்டு அவளுக்கு தலை வார துவங்கினாள்.

“என்ன அண்ணி நீங்க வேலைக்கு போறீங்களா?” என்று கேட்டாள் காவ்யா.

மகளுக்கு தலை பின்னுவதில் கவனமாக இருந்தவள், “ஆமா காவ்யா ஏற்கனவே ஒரு வாரம் லீவு ஆகிடுச்சி” என்றாள்.

“இல்லை நீங்க வீட்டுல இருந்தா மதியத்துக்கு பிரியாணி செய்ய சொல்லலாம்னு நினைச்சேன்” என்றாள் அவள்.

ஆக சக்கரை தடவிய அக்கறை எல்லாம் இதுக்கு தானா என்று தோன்ற, இவள் ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் மஞ்சுளா அதை விடவில்லை, “அவங்களுக்கு எல்லாம் வேலை தான் முக்கியம். வீட்டுக்கு வந்த விருந்தாளிங்களா முக்கியம். அவங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போடணும்னு எல்லாம் நினைக்க மாட்டாங்க. நீயும் மாப்பிள்ளையும் ஏதாவது ஓட்டல்ல ஆர்டர் போட்டு சாப்பிட்டுகோங்க” என்றாள் முகத்தை திருப்பி கொண்டு.

“விடுங்க அத்தை அவங்க வேலைக்கு போகட்டும், போனா தானே வருமானம் வரும், இல்லைன்னா அப்புறம் எப்படி குடும்பம் நடத்த முடியும்” என்று காப்பியை உறிஞ்சிக்கொண்டே சப்பை கட்டு கட்டினான் பிரேம்.

‘அய்யோ ராசா உன்னை யாரு கேட்டா’ என்று நினைத்து கொண்ட ரஞ்சனி, “காவ்யா மதியம் சமைச்சு வச்சிருக்கிறதை சாப்பிடுங்க, நைட்க்கு பிரியாணி செய்துக்கலாம்” என்று கூறி அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தாள்.

“சரி அண்ணி, நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்” என்று பெருந்தன்மையாக கூறினாள் காவ்யா.

அதன் பிறகு இரண்டு இட்லிகளை பிட்டு வயிற்றுக்குள் போட்டு கொண்டு, அதென்ன வாய்க்குள் தானே போடுவார்கள் இவளென்ன.., அதெல்லாம் இல்லை வாய்க்குள் போட்டால் தான் ருசி தெரிந்து விடுமே, அதனால் நேரடியாக வயிற்றுக்குள்ளேயே போடுவது போல போட்டு கொண்டாள்.

மிச்சம் மீதி இருந்ததெல்லாம் எடுத்து ஃபிரிஜ்ல் வைத்து விட்டு திரும்பியவள் அங்கே வெள்ளை துணியில் சுற்றி வைக்கப்பட்டு இருந்த பொருளை கையில் எடுத்து பார்த்தாள், சற்றே மொட்டு விரிய காத்திருந்த வெள்ளை மல்லிகை பூக்கள் அவளை பார்த்து சிரித்தன.

விரல்களால் அதை தொட்டு வருடியவள் கண்களுக்குள் அந்த மல்லிகை மொட்டுக்களை நிறைத்து கொண்டு, ஒரு நெடுமூச்சுடன் மீண்டும் அந்த துணியிலேயே சுற்றி மூடி வைத்து விட்டாள்.

“அம்மா ரெடி”, பள்ளி சீருடையுடன் வந்து நின்ற மகளை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கி போயிற்று. ஐந்து வயது தான் என்றாலும் கூட முடிந்தவரையில் தன் வேலைகளை தானே செய்து கொள்வாள். அழகிய பார்பி டோல் போல உருவம், அப்பாவை மாதிரியே உயரம் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

“நாங்க கிளம்பறோம் அத்தை” என்றவள் மகளை கையில் பிடித்து கொண்டு கிளம்ப, “பை பாட்டி, பை அத்தை, பை மாமா” என்று அபர்நதியும் கையசைத்தாள்.

“பை அபி” என்று கணவன் மனைவி இருவரும் கூறினார்கள்

“காவ்யா போ நீயும் மாப்பிள்ளையும் போய் சாப்பிடுங்க” என்றார்.

“என்னம்மா டிபன்”

“வேற என்ன இட்லியும் சாம்பாரும் தான்”

“என்னம்மா நீ வேற ஏதாவது புதுசா செய்ய சொல்லி இருக்கலாம்ல”

“ம்க்கும் அவங்க கலெக்டர் வேலைக்கு போறவங்க அவங்களை நம்ம வேலை வாங்க முடியுமா” என மாமியார் சலித்து கொள்வது கேட்டை தாண்டி சென்ற சிவரஞ்சனியின் காதுகளில் நன்றாகவே விழுந்தது.

காலையில் எழுந்ததில் இருந்து ஒரு தம்பளரை கூட அந்தபக்கம் நகர்த்தி வைக்காத மாமியார், எழுந்து வந்ததும் காப்பிக்காக கையை நீட்டும் நாத்தனார். இவர்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்து வைத்து விட்டு வேலைக்கு போகும் தன்னை பேசும் பேச்சுக்கள். இதை எல்லாம் மண்டைக்குள் ஏற்றி கொண்டால் அவ்வளவு தான் இன்றைய நாளே அவளுக்கு வீணாய் போய்விடும். அதனால் தலையை உலுக்கி அந்த பேச்சை தூர உதறி விட்டவள் மகளுடன் தெருவில் இறங்கி நடந்தாள்.

எதிர்பட்ட தெரிந்த முகங்கள் சினேகமாக புன்னகைக்க இவளும் புன்னகைத்து வைத்தாள்.
சிவரஞ்சனி ஒரு ஆரம்ப பாடசாலையில் பள்ளி ஆசிரியை, அங்கேயே தான் அபர்நதியும் முதல் வகுப்பில் படிக்கிறாள். பள்ளி இருபது நிமிட நடை தூரத்தில் தான் இருந்தது. அதனால் அம்மா மகள் இருவரும் நடந்தே பள்ளிக்கு சென்று விடுவார்கள்.
இதுவரையில் தன்னுடனேயே மகளை அழைத்து கொண்டு வருவதால் அவளுக்கு எந்த பிரெச்சனையும் இருந்தது இல்லை. ஆனால் இன்னும் சில வருடங்களில் சற்று தள்ளி இருக்கும் பள்ளியில் அவளை சேர்க்க வேண்டும். அவளை தனியாக அனுப்ப முடியாது அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். இப்போதே யோசனை மண்டைக்குள் ஓட, ஒரு சீரான தாளத்துடன் நடந்து வந்தவள், “அபி எப்படி இருக்க” என்ற குரலில் கவனம் கலைந்து பார்த்தாள்.

“வாம்மா நான் கொண்டு போய் விடறேன்” மிகவும் மரியாதையாக அழைத்தார் ஆட்டோ டிரைவர் பாபு.

“இருக்கட்டும் அண்ணா நடந்து போற தூரம் தானே நாங்க போய்டுவோம்”, என்று மரியாதையாகவே மறுத்துவிட்டு அவள் கடந்து செல்ல, “யாருண்ணே தெரிஞ்சவங்களா ரொம்ப அக்கறையா விசாரிக்கிறீங்க” என்று கேட்டிருந்தான் அவர் அருகில் இருந்த ஒருவன்.

அவன் கேட்டது என்னவோ சாதாரணமாக இருந்தாலும் அவன் பார்வை சரியாக இல்லை. பலதரப்பட்ட மனிதர்களை பார்த்திருந்த அந்த நடுத்தர வயது மனிதருக்கு அது நன்றாகவே தெரிந்தது போலும்.
“டேய் பார்த்து பேசு, அது எங்க முரளியோட பொண்டாட்டியும் புள்ளையும், நீ புதுசா வந்தவன், உனக்கு அவனை பத்தி தெரியாது தெரிஞ்சா இப்படி பேச மாட்ட” என்று அவர் சொல்ல, அந்த அடுத்தவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

வழியெல்லாம் தனக்கு தெரிந்த விஷயங்களை மகளுக்கு சொல்லி கொண்டே வந்தாள் சிவரஞ்சனி. அம்மா இதென்ன அம்மா அதென்ன என்று மகள் கேட்டு கொண்டே வர எல்லாவற்றிற்கும் விளக்கம் சொல்லி வந்தாள்.

இருவரும் பேசிக்கொண்டே பள்ளிக்கு வந்திருந்தனர், எதிர் பட்ட சக ஆசிரியை, “ரஞ்சனி மிஸ் வந்துட்டீங்களா, இப்போ எப்படி இருக்கீங்க, அபிக்கு உடம்பு சரியாகிடுச்சா” என்று கேட்டாள்.

“ஆமா சுதா மிஸ்”, என்றவள் “நீ கிளாஸ்க்கு போ அபி” என்று மகளை அனுப்பி வைத்து விட்டு அவளுடன் பேசிக்கொண்டே வந்தாள்.

“எப்படியோ இப்போ தான் கொஞ்சம் உடம்பு சரியாகி இருக்கு, இதுக்கும் மேலே லீவு போட கூடாதேன்னு ரெண்டு பேரும் கிளம்பி வந்துட்டோம். வீட்டுல இருக்கிறதுக்கு இப்படி வெளியே வர்றது கொஞ்சம் நல்லா இருக்குமே” என்றாள் சிவரஞ்சனி.

“அதை சொல்லுங்க, உடம்புக்கு முடியலைன்னு லீவு போட்டா, வீட்டு வேலை எல்லாம் செஞ்சுட்டு, ஓய்ஞ்சு போய் படுக்க கூட முடியாது. அப்போ தான் அதை செய் இதை செய்ன்னு ஒவ்வொரு வேலையா சொல்லுவாங்க. அதுக்கு வேலைக்கு வரதே மேல். நான் கூட என்ன தான் உடம்பு சரியில்லைன்னாலும் வேலைக்கு ஓடி வந்துருவேன். இங்கேயாவது கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். ஆனா வீட்டுல இருந்தேன் அவ்வளவு தான்” என்றாள் சுதா சிரித்து கொண்டே. இருவரும் பேசியபடியே அவரவர் வகுப்புக்கு சென்றனர்.

இவளும் சிரித்தாலே தவிர எதுவும் சொல்லவில்லை. சொல்லபோனால் இவள் நிலை இதை விட மோசம் தான், என்னவோ வீட்டில் இருப்பவர்களுக்கு வகைதொகையாக சமைத்து போடவே லீவு போட்டது போல நேரத்திற்கு ஒரு சமையல் செய்ய சொல்வார்கள். இதில் ஒரு வாரமாக அசைவம் இல்லை என்று மாமியார் சொன்னதற்கு காரணம் இவள் வாங்கி வர போகவில்லை.
அசைவம் வாங்க வேண்டும் என்றால் கூட இவளே தான் சென்று வாங்கி வந்து சமைக்க வேண்டும். உடல் சோர்ந்து இருந்த நிலையில் இவள் வெளியே செல்லாமல் இருக்கவும் அசைவம் செய்யவில்லை. ஆனால் அதுவே பரவாயில்லை என்று தோன்றும் அளவுக்கு இருக்கும் அவர்களின் சைவ மெனு.

காலையில் செய்தது மதியம் சாப்பிட மாட்டார்கள். மதியம் வைத்ததை இரவு தொட்டு கூட பார்க்க மாட்டார்கள். மூன்று வேலையும் மூன்று விதமாக செய்ய வேண்டும். இதே அசைவம் என்றால் மூன்று வேலையும் அதே ஓடி விடும். சலிப்பு தட்டாமல் இறங்கும்.

கடந்த வாரத்தில் திடீரென ஒரு நாள் பள்ளியில் இருக்கும்போதே அபிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அவளை மருத்துவமணை கொண்டு சென்று பார்த்ததில் வைரஸ் காய்ச்சல் என்றார்கள். மூன்று நாள் அவளை அருகேயே இருந்து கவனித்து கொண்டதில் நான்காம் நாள் இவளுக்கும் காய்ச்சல் கண்டிருந்தது. இதனால் அம்மாவும் மகளுமாக ஒரு வாரம் பள்ளிக்கு வர இயலாமல் போனது.

என்னதான் காய்ச்சல், தலைவலி வயிற்றுவலி என்று எது வந்தாலும் சமைத்து, வேலைகளை முடித்து விட்டு தான் படுக்க முடியும். அதற்கு பிறகும் ஓய்வு எடுக்க விடாமல் தொடர்ந்து காப்பி டீ என்று ஏதாவது கேட்டு கொண்டே தான் இருப்பார்கள். இதற்கு அவள் வேலைக்கு வருவதே மேல் என்ற நினைப்பு தான் வரும்.

பள்ளி உரிமையாளரிடம் உடல் நிலைமையை எடுத்து சொன்ன போது அவர் கூட புரிந்து கொண்டார். அபி வயிற்றில் உண்டான போதில் இருந்து அவள் இங்கே தான் பணிபுரிகிறாள். அவளுக்கும் இந்த பள்ளிக்குமான தொடர்பு நிறையவே இருந்தது. கை குழந்தையை வைத்து கொண்டு வேலைக்கு வருவதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. குழந்தையை எங்கே விடுவது என்று அவள் தவித்து நின்ற நேரத்தில் தான் உன்னோடவே குழந்தையை வச்சுக்கோம்மா என்று பெரிய மனதுடன் அனுமதி அளித்தார்கள். அதுவே அவளுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதமாக அமைந்து போனது.

காலையில் எழுந்ததும் வேலைகளை முடித்து கொண்டு பிள்ளையுடன் வேலைக்கு வருபவள் மாலையில் தான் வீடு திரும்புவாள். அவளின் சோகம் கண்ணீர் எல்லாவற்றையுமே அந்த பள்ளி கண்டிருக்கிறது.

மாலையில் பள்ளி முடிந்ததும் அம்மாவும் மகளும் வீடு வந்து சேர்ந்தனர். வரும்போதே நியாபகமாக பிரியாணிக்கு தேவையான அரிசி, கறி புதினா எல்லாம் வாங்கி கொண்டு வந்திருந்தாள்.

வீட்டுக்கு வந்ததும் உடனடியாக உடையை மாற்றி கொண்டு வந்து வேலையை துவங்கினாள். முதலில் மாமியாருக்கு டீ போட்டு கொடுத்து விட்டு, வெங்காயம் தக்காளி எல்லாம் நறுக்கி வைத்தாள். ஆறு மணிக்கெல்லாம் டியூஷன் படிக்க பிள்ளைகள் வந்து விடுவார்கள். அதன் பிறகு சமைக்க துவங்கினால் நேரம் கடந்து விடும் என்று வேக வேகமாக எல்லாவற்றையும் தாயார் செய்து வைத்தாள்.

காலையில் சாப்பிட்டது மதியம் சாப்பிட்டது, நான்கு முறை டீ காப்பி போட்டது என்று சிங்க் முழுக்க பாத்திரங்கள் குவிந்து கிடந்தன. சிலர் டீ குடிப்பார்கள், சிலர் காப்பி குடிப்பார்கள், ஆனால் இவள் வீட்டில் மாற்றி மாற்றி இரண்டுமே ஓடும். ஒவ்வொரு முறையும் வேறு வேறு பாத்திரங்களை எடுத்து அப்படியே கழுவாமல் போட்டு வைப்பார்கள். அதை எல்லாம் கழுவி ஒதுங்க வைத்து கொண்டிருக்க, வாசலில் பேச்சு குரல் கேட்டது. உள்ளிருந்தபடியே தலையை மட்டும் வெளியே எட்டி பார்த்தாள்.

பெரிய நாத்தனார் நித்யா வந்திருந்தாள், கூடவே அவளின் இரு பிள்ளைகளும். அவர்களை கண்டதும் “ஏய் கண்ணுங்களா வாங்கடா” என்று வாய் நிறைய அழைத்து கொஞ்சினார் மஞ்சுளா.
 

Attachments

  • inbound1439675129974975488.jpg
    inbound1439675129974975488.jpg
    168 KB · Views: 0

ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
844
Reaction score
456
Points
63
சிறப்பு 👏💐 பெயர் மட்டும் அபர்ணதி என்று மாற்றுங்கள்
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,406
Reaction score
3,238
Points
113
இது நேற்று படிச்சிட்டேன்

கமெண்ட் போட வந்தும் பதியல அப்புறம் என் கதை எழுத போயிட்டேன்

சிவரஞ்சனி தானே அம்மாவாக வருபவள் அழகான அடக்கமான பாத்திரம்

மாமியார் நாத்தனார் எல்லா இடத்திலும் உள்ளது போல தான் அலட்டல்

அவள் கணவர் எங்கு போனார்

அவரைக் காட்டவே இல்லயே
 
Joined
Jun 29, 2026
Messages
46
Reaction score
34
Points
18
💖அடுத்த epi பார்க்கலாம் sis
 

kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,474
Reaction score
927
Points
113
குடும்ப அரசியல் கதையா? ரஞ்சனியின் கணவன் முரளி எங்கே?
 
Joined
Jun 29, 2026
Messages
46
Reaction score
34
Points
18
குடும்ப அரசியல் அது இல்லாமல் குடும்பங்கள் எங்கே இருக்கிறது🤔. முரளி வருவான்💖
 
Top Bottom