சிறு ஊற்றாக நேசம் _2 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சிறு ஊற்றாக நேசம் _2

New updates

LATEST

MRS BEENA LOGANATHAN

Well-known member
Staff member
Joined
May 14, 2024
Messages
1,035
Reaction score
710
Points
113
IMG_20250317_112334.jpg



நேசம்_2

கென்னிங்க்டன், இங்கிலாந்து.


இங்கிலாந்தில் உள்ள (kennington) கென்னிங்கடன் மருத்துவமனை நோக்கிக் கார் ஒன்று வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.

"பக்கத்துல வாழும்போது

உன்னருமை தெரியல
உன்னருமை தெரியும்போது
பக்கம் நீ இல்ல"


என்று காரில் ஒலித்துக் கொண்டிருக்கும் பிரதீப் குமாரின் குரலில் அவனுடைய நிலையைச் சொல்வது போலவே இருந்தது.

"தன்னந்தனி படகுபோல

தத்தளிக்கும் வாழ்க்கை போல
தண்டனைகள் ஏதும் இல்ல
இந்த மண்ணுல"


என்ற வரிகளில் கண்முன் அவன் கண்ணம்மா வந்துச் சென்றாள்.

"நீரிலே பூத்தாலும்

பூக்களின் வாசங்கள்
தண்ணியிடம் சேர்வதில்லையே
என்ன விதியோ'?


அடுத்து வந்த வரிகளில் கண்களில் கண்ணீர் வந்தது....

"அன்பிலே அன்பிலே

இந்த மனம் வாடுதே
கண்ணிலே ஈரம் சேருதே
கல்லிலே பூவும் பூக்குதே"

என்று பாடல் ஒலித்துக் கொண்டிருக்க,
இனியும் தன்னால் தனிமையை தாங்க முடியாது.

முன்பை விடக் கடந்த ஆறு மாதமாய் அவளின் எண்ணம் கனவிலும் நினைவிலும் வந்து அவனை நித்தம் தடுமாறச் செய்கிறது. பணியிலும் கவனம் செலுத்த முடியவில்லை.


"தனிமையே தன்னை கொன்றுவிடும்" என்று எண்ணி தன் கண்ணம்மாவை பார்க்கத்தான் முடியாது. ஆனால் அவளுடன் சேர்ந்து இருந்த இடங்களிலும், அவளின் நினைவுகளுடன் மீதி வாழ்க்கையை வாழ்ந்து விடலாம்.


அவளின் நினைவுகளிலிருந்து தப்பிக்க பல மையில் தூரம் சென்றாலும், கண்டம் விட்டுக் கண்டம் வந்தாலும் முடியவில்லை அவனுக்கு. அவள் நினைவுகளோடு வாழ எண்ணி விட்டான்.


லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனையில் முதன்மை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் ஹரிஷ் கல்யாண்.


முப்பது வயதை நெருங்கிய பேச்சுலர். பார்ப்பவர்களைச் சினேகமாகப் புன்னகைக்க செய்கின்ற முகம்.

நான்கு வருடத்திற்கு முன் மேல் படிப்பிற்காக லண்டன் வந்து, பின்பு படிப்பை முடித்த நேரம் அன்னையின் மரணச் செய்தியைக் கேட்டு இந்தியா வந்த ஹரிஷ் கல்யாண், சில உறவுகள் சில நட்புக்கள் இருந்தும், அவனின் கண்ணம்மாவை பார்க்காமல் பேசாமல் இருக்க முடியாது என்று தோன்றினாலும், தாயின் வாக்குறுதியை மீறி விட முடியாமல், தன் கட்டுப்பாட்டையும் உடைக்க முடியாமல், தவித்து நின்ற நிலையில் மீண்டும் லண்டனுக்கே சென்று விட்டான்.


இப்பொழுது மருத்துவமனையில் தன்னுடைய இராஜினாமா கடிதத்தைக் கொடுக்கத் தான் சென்று கொண்டிருக்கிறான்.


இன்று மாலை மும்பைக்கு விமான பதிவு செய்துள்ளான். பின்பு மும்பையிலிருந்து கோயம்புத்தூருக்கும் விமான முன்பதிவு செய்துவிட்டு, இங்குச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க சென்று கொண்டிருக்கிறான்.


இங்குப் படிக்க வந்த போதும் சரி, படித்து முடித்துவிட்டு மருத்துவராகப் பணியாற்றும் போதும் சரி, யாருடனும் அதிக நட்பு பாராட்டவில்லை. ஒருவனைத் தவிர, வேறு யாரையும் நெருங்க விடவில்லையெனச் சொல்லலாம்.

அதற்காக ஒதுங்கிச் செல்லவும் இல்லை. கேட்கும் கேள்விகளுக்குப் பதில் மட்டுமே வரும் இவனிடமிருந்து... சில நேரங்களில் புன்னகையுடன் கடந்து விடுவான்.


ஹரிஷ் உடன் ஒன்றாகத் தங்கி படித்து அதே மருத்துவமனையில் அவனுடன் வேலை பார்க்கும் டாக்டர் டேவிட்டிடம் மட்டும் தோழமை உண்டு.


ஹரிஷ் "கிளம்புகிறேன்" எனச் சொன்னதும் சிறிது வருத்தப்பட்டாலும் அவனின் நிலையை அறிந்ததால் "சரி" என்று ஒப்புக் கொண்டான்.


தலைமை டாக்டர் கில்ஸ் மட்டும் வருந்திப் பேசி விட்டு அவனின் எதிர்கால சேவைக்கு எப்பொழுதும் காத்திருப்பதாகவும் கூறி விடைக் கொடுத்தார்.


இவனின் பிரிவு நட்பு ரீதியாக நண்பர்களுக்கு இழப்பு இல்லை. மருத்துவராக இந்த மருத்துவமனைக்கு
பெரும் இழப்பு.


அவனை நம்பி வரும் நோயாளிகளிடம் மனம் விட்டுப் பேசி, அவர்களின் உணர்வுகளையும் வலிகளையும் புரிந்து ஆறுதல் வார்த்தைகளைக் கூறி, அவர்களுக்கு மனதளவில் தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்து அனுப்புவான்.


அவன் கொடுக்கும் மருந்தில் எழுபது சதவிகிதம் குணம் அடைந்தால் மீதி முப்பது சகிதம் அவனின் நம்பிக்கை பேச்சில் தான்....


உடன் பணி புரியும் மருத்துவர்கள் கூட ஒருநாள் ஹரிஷியிடம் கேட்டு விட்டார்கள். எங்களிடம் அதிகம் பேசுது இல்லை ஆனால் நோயாளிகளிடம் மட்டும் அதிகம் பேசுகிறீர்கள் ஏன்?
"நீங்கள் யார்? உள்ளுக்குள்ளே அடங்கியும் இருக்கவில்லை, சகஜமாகவும் பழகவில்லை" (introvert or extrovert) என்றதும், அதற்கும் புன்னகையுடன் "பேச வேண்டிய இடத்தில் கண்டிப்பாகப் பேசுவேன்" என்று முடித்துக் கொண்டான்.


அவன் அதிகம் பேசாதவன் தான்... அவனைப் பேச வைத்தவள் அவன் கண்ணம்மா. அவள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே பேசப் பழகியவன்.


அவனின் அமைதியான சுபாவம் கண்டு, "டாக்டர்னா அமைதியாகத் தான் இருக்கணுமா என்ன?" என்று கேட்டவள், "டாக்டர்கள் பலர் பேசமாட்டார்கள். அவர்களைப் பார்க்கும்போது ஏன் என்று யோசிப்பேன்.

அவர்கள் பக்கமும் நியாயம் இருக்கும் தான். தினமும் பல நோயாளிகளைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்றால் சிரமம் தான்.

ஆனால் அவர்களைச் சந்திக்க வரும் நோயாளிகளுக்கு அவர் தான் முழு நம்பிக்கை. நடமாடும் தெய்வமாய் நம்மைப் பார்க்கிறார்கள்.

அந்த நம்பிக்கையில் அவர்கள் உங்கள் வார்த்தைகளுக்குக் காத்திருப்பது என்பது தெய்வத்திடம் வரம் வேண்டி நிற்கும் பக்தர்கள்போல, டாக்டர்களின் வார்த்தைகளுக்குக் காத்திருக்கிறார்கள்.

அவர்களை நாம் ஏன் ஏமாற்ற வேண்டும்? சிறு புன்னகை, சினேகமான விசாரிப்பு, உடல்நிலை பற்றிய கொஞ்சம் கண்டிப்பு. இது போதும் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்க, நம்மால் முடிந்த சிறு நேசம் தானே!"

அவளின் வார்த்தைகள் இன்று பேசியது போலக் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.


அனைவரிடமும் இன்முகத்துடன் விடைபெற்று இதோ ஹரிஷும் டேவிட்டும் விமான நிலையம் வந்தடைந்தார்கள்.


"என்னை மறந்து விடாதே! உன் கண்ணம்மாவை போல என்றும் என்னை நினைவில் வைத்துக்கொள்" என்று செல்லமாகக் கிண்டலடித்து விட்டு, 'எப்போதும் தொடர்பில் இரு டியூட்" என்று ஹரீஷைக் கட்டி அணைத்து நட்பிற்கு விடை கொடுத்தான்.



இப்பொழுது விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டான். ஆனால், மனம் ஒரு நிலையில் இல்லை படபடப்படுகிறது. ஏதோ ஒரு சஞ்சலம், நல்லதோ கெட்டதோ துணிந்து முடிவெடுத்து விட்டான்.


காதில் ஹெட் ஃபோனை இணைத்துப் பாடல் ஒன்றை ஒலிக்க விட்டு, கண்களை மூடித் தன் கண்ணம்மாவை எண்ணிக் கொண்டான்...

"தேடிக் கிடைப்பதில்லை

என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல்
தொடங்கியதே
வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய்...

அடி உனக்கு
மனதிலே என் நினைப்பு
இருக்குமா?
காதல் மழையே
காதல் மழையே
எங்கே விழுந்தாயோ
கண்ணில்
உன்னைக் காணும் முன்னே
மண்ணில் ஒளிந்தாயோ..."



பாடகர் ஸ்ரீனிவாஸ் அவன் மனதில் உள்ள தவிப்பை பாடலாகப் பாடிக்கொண்டிருந்தார்.

'இதோ நான் வருகிறேன் கண்ணம்மா, உன்னைத் தேடி...

நாம எதைச் சின்சியரா நினைக்கிறோமோ, அது கண்டிப்பா நடக்கும்னு சொல்லுவ தானே கண்ணம்மா!


இப்ப நான் தேடி வரேன் உன்னை நினைத்து... என் கண்கள் முன்னே வருவாயா கண்ணம்மா?

என்னை விமான நிலையத்தில் காத்திருந்து அழைத்துச் செல்ல யாரும் இல்லை. ஆனால் உன்னுடைய கலகலப்பான சிரிப்பும், பசுமையான நினைவுகளும் தான் என்னை அழைத்துச் செல்லப் போகிறது.


தேவதை பெண்ணடி நீ…
தெரிந்தே உன்னைத் தொலைத்து விட்டேன்.
அன்று அன்னையின் வார்த்தையை மீற முடியாமல் தள்ளி வந்துவிட்டேன்.

இன்று அன்னையும் இல்லை நீயும் இல்லை.
ஆனால் என் காதல் மட்டும்
அனாதையாக நிற்கிறது.



எதிர்பார்ப்பில்லாத அன்பை போதித்தவள்.
வாழ்வை மகிழ்ச்சியாக
கொண்டாட தெரிந்தவள்.
எதையும் எளிதாகக் கடந்து செல்பவள்…
அப்படித்தான் என்னையும் என் காதலையும் கடந்து சென்று விட்டாயோ பெண்ணே!



உன்னுடன் இருந்தால் மட்டும் சுகம் அல்ல
என் அருகில் நீ இல்லையென்றாலும்
உன் நினைவே சுகம் தருகிறது பெண்ணே!'


அவன் கண்ணம்மாவின் நினைவுகளுடன் மும்பை வந்து இறங்கி விட்டான்.


அடுத்த பயணம் கோயம்புத்தூர் நோக்கி...

ஹரிஷ் கல்யாண்,
பிறந்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூர் தான். கோயம்புத்தூரில் உள்ள சிங்காநல்லூர் தான் அவர்களின் பூர்வீக வீடு அமைந்துள்ளது.


பெருமாள் கோவில் வீதியில் இருக்கும் இவர்களின் வீட்டின் அருகிலே ஶ்ரீ உலகளந்த பெருமாள் கோவில் அமைந்திருக்கும். தினமும் காலைக் கோவிலிலிருந்து கேட்கும் சுப்ரபாதமும், மணியோசையிலும் தான் கண் விழிப்பார்கள்.



தாத்தா, பாட்டி, அப்பா அம்மா என்று வாழ்ந்த மூன்று தலைமுறை கண்ட சொந்த வீடு. அப்பா ராமகிருஷ்ணன் இந்திய வங்கியின் மேனேஜர். அம்மா ஆண்டாள் இல்லத்தரசி. ஆச்சாரமான பிராமண குடும்பம்.


அம்மாவிடம் அன்பும்
அப்பாவிடம் மரியாதையும்
கொண்ட சமத்து பிள்ளை.
அமைதியும் நிதானமும்
கொண்டவன். பள்ளியில்
முதல் மாணவன்.
படிப்பில் மட்டுமில்லாமல், ஸ்லோகம் சொல்வதிலும்,பாட்டு பாடுவதிலும் புல்லாங்குழல் வாசிப்பதிலும்,திறமை பெற்றவன்.
பெற்றவர்களுக்குப் பெருமை சேர்க்கும் பிள்ளை.



தந்தை தாயுடன் கேலிப் பேச்சுகள் பேசிச் சிரித்து
விளையாடும் ரகம் இல்லை… அவர்கள் சொல் பேச்சு கேட்டுக் கீழ்படிந்து நடக்கும் மகன்.

தாயும் தந்தையும் அன்யோன்யமாகப் பேசிப் பார்த்ததில்லை ஆனால் அப்பா என்ன நினைக்கிறார் என்று அம்மாவிற்கும், அம்மாவின் பதில் அப்பாவிற்கும் அத்துப்படி.
அவர்களின் புரிதல் தான் காதல் என்பது கல்யாண் எண்ணம்.


தந்தை சகஜமாகப் பழகுபவர். ஆனால், அன்னை கொஞ்சம் ஒதுங்கியே இருப்பார். எளிதில் யாரிடமும் சகஜமாகப் பேசி விடமாட்டார். அன்னைக்கு தெரிந்ததெல்லாம் பாட்டு, பூஜை புனஸ்காரம், குடும்பம், கோவில் மட்டுமே!



புன்னகையும்,அமைதியும் கொண்ட
ஹரிஷ் கல்யாண் இருவரின் கலவையே போல...


ஹரிஷ், இளநிலை மருத்துவம் (MBBS) கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது, அவனது தந்தையின் திடீர் மரணம் நிகழ்ந்தது.


அதுவரை தந்தையே உலகம் என வாழ்ந்து வந்த தாயும், ஹரிஷும் உடைந்தே விட்டார்கள்.

கணவனின் இழப்பிலிருந்து பூஜை பாட்டு ஆண்டவன் சன்னிதி என்று எண்ணங்களைத் தெய்வ பக்தியில் திருப்பினார் ஆண்டாள். ஹரிஷின் அமைதியும், இறுக்கமும் அவனின் கண்ணம்மாவின் வார்த்தைகள் தான் மீட்டுத் தந்தது.


அன்னைக்கு துணையாக அன்னையின் வார்த்தைகளைத் தட்டாத பிள்ளை. ஹரிஷின் எதிர்காலத்தை எண்ணிய ஆண்டாளின் சொற்படி அவரைத் தனியாக விட்டுச் செல்ல,மனம் இல்லாமல் தான் மேல் படிப்பிற்காக லண்டனுக்குப் பிரிந்து சென்றான்.


ஆனால், படிப்பு முடியும் தருவாயில் கொரோனா என்னும் அரக்கனின் பிடியில் உலகமே தலைகீழ் ஆகியது. நோயில் சிக்கி பல மனித உயிர்களைக் காவு வாங்கியது.


அதில் அவனது அன்னையும் ஒருவர். அவருடன் ஹரிஷ் கல்யாணின் ஒட்டுமொத்த நம்பிக்கையும், எதிர்காலத்தையும் எடுத்துச் சென்று விட்டார்.


உறவுகள் இருந்தும் யாரிடமும் ஒட்டாமல் தனிமையில், அவர்களின் வீட்டில் தனித்து நின்றான். இன்று அவனைப் போலவே வீடும் அனாதையாக கேட்பாரற்று கிடக்கிறது.


தாய் தந்தை நினைவில் வாழ்ந்து விடலாம். ஆனால் இடையில் நடந்த சில இனிமையான, கசப்பான சம்பவங்களால், தாயின் மீது சிறு வருத்தம்.


இப்போது அந்த வருத்தமும் ஆதங்கமாக மாறி விட்டது. மனதிற்குள் பல ஆயிரம் முறை கேட்டுக் கொண்ட கேள்வி.

"ஏம்மா நோக்கு அவளைப் பிடிக்காமல் போயிடுத்து?"

"நேக்கு அவளைப் பிடிக்கும்னு நோக்கு நன்னாத் தெரியும். நான் அவளை நேக்கு கேட்கும் முன்னே, சாதுர்யமாக வேண்டாமெனத் தட்டிக் கழித்த உங்களை நோவதா?"


நடக்காது எனத் தெரிந்தும், அவளிடம் நட்பைத் தாண்டிப் பழகிய மனதை நொந்து கொள்வதா? அத்தனை வருடம் இல்லாமல், அன்று அவளை என் கண்ணில் காட்டிய விதியைக் கடிந்து கொள்வதா?


அவளை நோக்கும் பிடிக்கும்மா. நேக்கும் நன்னா தெரியும்.
ஆனால் உன் ஆச்சாரமும் சம்பிரதாயங்களும், சுற்றி இருக்கும் மனுஷாலுக்கும், அவாளின் பேச்சுக்கும் பயந்து, அவளைத் தள்ளி வைத்துவிட்டாய். இல்லை என்னிடமிருந்து பறித்து விட்டீர்கள்.


உன் ஆசை கண்ணனின் விருப்பம் நோக்கு முக்கியம் இல்லையாம்மா?

விடை கிடைத்திடா வினா இது! யாரை இங்கு நோவது?

கண்களை மூடிக் கொண்டு தன் வாழ்வில் நடந்தேறிவிட்ட திருத்த முடியாத பக்கங்களை நினைத்துக்கொண்டிருந்தான்.


விமானம் தரை இறங்க போவதை அறிவிக்கும் குரலைக் கேட்டு, சுய நினைவிற்கு வந்த ஹரிஷ், கண்களைத் திறந்து ஒரு நொடி தான் எங்கு இருக்கிறோம் என்பதை மறந்து விழித்தான்.


பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டு, தனது பயண பைகளை எடுத்துக் கொண்டு இறங்கினான்.


விமானத்திலிருந்து கீழே இறங்கியதும், சில்லென்று கோவையின் பருவக்காற்று முகத்தில் வீச, யாதென்று அறியாத ஒரு இதம், தனது இதயத்தில் பரவுவது போல் உணர்ந்தான்.


நான்கு வருடம் வனவாசமாக இருந்த வாழ்வு, இப்போது இரண்டு நாள் பயணமாக முடிவுக்கு வந்தது.
காத்திருந்து தன் பயண பெட்டிகளை எடுத்துக் கொண்டு, விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் கால் டாக்ஸி அழைத்து, ராமகிருஷ்ணா மருத்துவமனைக்குச் செல்லுமாறு டிரைவரிடம் கூறினான்.


காரின் ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்துக் கொண்டே வந்தான்.

தான் பிறந்து வளர்ந்த ஊர். தன் கனவை நனவாக்கிய ஊர்...

பெற்றவர்களுடன் நிம்மதியாக இருந்த ஊர்...

எதிர்பாராத விதமாக
தந்தையும் தாயையும் இழந்த ஊர்...

என்னையே என்னை அறிமுகம் செய்தவளை அறிமுகப் படுத்திய ஊர்.
அவளை என்னிடமிருந்து பிரித்த ஊர்...

உறவுகளுடன் வாழ்ந்த என்னைத் தனித்து நிறுத்திய ஊர்...

மாயங்களும் செய்து, காயங்களும் தந்த ஊர்;
இந்தக் கோயம்புத்தூர்!!

மருத்துவமனை செல்லும் வழி எல்லாம் அவனின் வாழ்க்கையைப் பற்றியும், அதில் அவன் கடந்து வந்த பாதையின் ஏற்றம் இறக்கமும், அவளின் ஞாபகங்களையும் திருப்பிப் பார்த்துக் கொண்டு சென்றான்.

மருத்துவமனைக்கு முன் கார் வந்து நிற்க, நினைவலைகளிலிருந்து விடுபட்டான்.


"ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க, நான் வந்துடுறேன்" என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு, தோளில் மாட்டிக் கொள்ளும் லேப்டாப் பையை மட்டும் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றான்.


வரவேற்பறையில் இருக்கும் பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு "டாக்டர் குகன் அவர்களைப் பார்க்கணும்" எனச் சொல்லித் தன் அப்பாயின்மென்டையும் காட்டினான்.


ஹரிஷை சிறிது நேரம் அமரச் செய்துவிட்டு டாக்டரிடம் உறுதி செய்துவிட்டு, ஐந்து நிமிடம் கழித்து உள்ளே செல்லுமாறு கூறினாள் பணிப்பெண்.


மரியாதை நிமித்தமாகக் கதவைத் தட்டி விட்டு ஹரிஷ் உள்ளே செல்ல டாக்டர் குகன், எழுந்து வந்து அவனின் கையைப் பிடித்துக் குலுக்கி கட்டி அணைத்தார்.


"வெல்கம் மை பாய்! படிக்கப் போறேன்னு சொல்லி அங்கேயே செட்டில் ஆகப் பார்த்தாயா?" என்று சற்று கோபமாகக் கேட்டார்.


"அப்படியெல்லாம் இல்ல டாக்டர். எங்க சுத்தினாலும் கடைசியில் நம்ம ஊரில் தான் வந்து சேவை செய்வேன்.

அதில் எந்த மாற்றமும் இல்லை. எக்ஸ்பீரியன்ஸ்காக மட்டுமே தான் இருந்தேன்" என்று பாதி உண்மையை மறைத்துக் கூறினான்.


"வெல்டன் மை பாய்! கேட்கவே சந்தோஷமா இருக்கு"

அவன் மருத்துவக் கல்லூரியில் கடைசி வருடம் படித்து முடித்தபிறகு, ஆறு மாத காலம் இன்டர்ன்ஷிப்பில் இவர் தான் அவனின் சீப்ஃ டாக்டர்.


அவன் முதுகலை சிறப்பு பிரிவாக இவரின் சொல்படியே கேட்டு எடுத்திருந்தான்.


அதனால் ஹரிஷை பற்றித் தெரிந்ததால் "டூட்டியில் எப்ப ஜாயின் பண்ற? வீடெல்லாம் சுத்தப்படுத்தி செட்டில் ஆகியாச்சா?" என்று கேட்டார்.


"இப்போது தான் காலை விமானத்திலிருந்து இறங்கினேன். இன்னும் வீட்டிற்கு கூடப் போகல. நேராக உங்களைத் தான் பார்க்க வந்தேன்" என்று கூற


"அடடா! உன்னுடைய கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லப்பா... ஃபர்ஸ்ட், யூ டேக் ரெஸ்ட் அண்ட் தென் கம்." நவ் யூ லீவ்" என்று அவனுக்கு விடை கொடுத்தார்.



இரண்டு நாட்கள் கழித்து சேர்ந்து கொள்வதாகக் கூறிவிட்டு மீண்டும் காருக்குச் சென்றான்.


"எங்க சார் போகணும்?" என்று டிரைவர் கேட்க, ஒரு நிமிடம் யோசித்து விட்டுப் பின் பக்கத்தில் இருக்கும் தங்கும் ஹோட்டலுக்கு போகச் சொன்னான்.


ஹோட்டலில் ரூம் போட்டு விட்டுத் தனது உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓய்வெடுக்க அறைக்குச் சென்றான்.


இரண்டு நாள் தூக்கமின்மை மற்றும் ஜெட்லாக் என்னும் பயண களைப்பு தீரக் குளித்துவிட்டு கட்டிலில் சாய்ந்திட, தூக்கம் தொலைத்த கண்கள் தூக்கத்திற்கு ஏங்கியது.

தூங்காத இரவுகளுக்கு எல்லாம் சேர்த்து அவள் நினைவுடன் கண்களை மூடினான்.

"
அந்தத் தூக்கமும் அமைதியும்
நானானால்
உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்...
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே...!"


ஜன்னல் வழியாக அருகில் இருந்த கடையிலிருந்து எஃப் எம் இல் ஒலித்த பாடல் அவனையும் அறியாமல் தூங்கச் செய்தது.



தூக்கத்துடன் நேசம் தொடரும்...
 
Top Bottom