காலதேவனின் காதல் கணக்கு : 4 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காலதேவனின் காதல் கணக்கு : 4

New updates

LATEST

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,345
Reaction score
3,210
Points
113
அத்தியாயம் : 4

திடீரென்று தன் முன்னே வந்து வழிமறித்த அந்தப் புதியவனை கண்டதும், காதம்பரி ஒரு கணம் திகைத்து அவனை ஏறிட்டு நோக்கினாள். அடுத்த நொடியே பதில் சொல்லாமல் அவனைத் தாண்டி நகர முயன்றாள். ஆனால், காலஞ்செயனின் அழுத்தமான காலடிச் சத்தம் அவளை அங்கிருந்து அசைய விடாமல் முடக்கியது!

‘உனக்கு இப்போது என்ன வேண்டும்?’ என்பது போல் அவள் வினாத்தூவி ஏறிட, ‘உன்னிடம் பேசாமல் நான் இங்கிருந்து நகர்வதாக இல்லை!’ என்று அவனது கண்கள் பிடிவாதமாய்ப் பேசின.

அவளோ தன் விழிகள் முழுவதிலும் கனல் தெறிக்கும் கோபத்தை நிரப்பி அவனை வெறித்துப் பார்த்தாள். ஆனால், அவளது அந்தச் சீற்றத்தைக் கண்ட அவன் மனமோ, சிறைப்பட்ட பட்டாம்பூச்சியாய் மாறிச் சிறகடிக்கத் தொடங்கியது!

“யார் நீங்கள்? எதற்காக என் வழியில் நின்று தொந்தரவு செய்கிறீர்கள்?” என்று அவள் அதிகாரத் தொனியில் வினவினாள்.

“நான் யார் என்று உங்களுக்குத் தெரியாதா தேவி?” அவன் குரலில் குறும்பு வழிந்தோடியது.
அவளது இதழ்கள் கோபத்தில் இறுகின. வார்த்தைகளில் அத்தனை கனம்! “முன்பின் தெரியாத அந்நியரை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!” என்று நறுக்கென்று பதிலளித்தாள்.

அவளது கறாரான பேச்சைக் கேட்டு லேசாக நகைத்தவன், “வில்லேந்தும் கரங்களுக்குச் சொந்தக்காரி, இப்படிச் சொல்லம்புகளை எய்து நன்றியை மறப்பது முறையல்லவே தேவி!” என்று தன் பேச்சில் வசீகரத்தைக் கூட்டினான்.

அவனது அந்தக் கேள்விக்கு அவளிடம் சட்டென்று பதில் ஏதும் வரவில்லை! அவன் சொன்னது உண்மைதான் என்பதை அவளது உள்மனம் ஒப்புக்கொண்டாலும், அதை வெளிக்காட்ட அவளது கர்வம் இடம் கொடுக்கவில்லை. ஒரு கணம் அவளது விழிகள் தடுமாறின; அந்தத் தடுமாற்றத்தை அவன் கண்டுவிடக் கூடாது என்பதற்காகவே, உடனே முகத்தை உக்கிரமாக மாற்றிக் கொண்டாள்.

“அன்று நீங்கள் எனக்கு உதவியது தற்செயலான ஒன்றா, அல்லது ஏதேனும் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமா என்பதும் எனக்குத் தெரியாது!” என்று தன் தடுமாற்றத்தை மறைத்து, மீண்டும் ஒரு தற்காப்புத் திரையை இழுத்து மூடினாள்.

அவளது கூர்மையான சந்தேகப் பார்வையைக் கண்டு அவன் மெல்லப் புன்னகைத்தான். “நாடகமா? உங்கள் உயிரைப் பணையம் வைத்து ஆடுவதற்கு நான் ஒன்றும் களம் அறியாத கோழை அல்ல தேவி! உங்கள் வாள் வீச்சின் வேகத்தைப் பார்த்த எவனும், அங்கு நாடகம் ஆடத் துணியமாட்டான். மாறாக, பெண் சிங்கமாய்க் கர்ஜித்துக்கொண்டு நீங்கள் எதிரிகளை வேட்டையாடிய அந்த வேகம் இருக்கிறதே... அதைக் கண்டுதான் நான் மெய்மறந்து நின்றேன்!”

அவன் ஒரு அடி அவளை நோக்கி எடுத்து வைத்தான். “அத்தகைய வீராங்கனையைக் காப்பாற்றும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழக்கூட நேரம் கொடுக்காமல், உங்களது வேட்டை அத்தனை ஆவேசமாகத் தொடர்ந்தது. ஆனால், என் கண்கள் உங்கள் வாள் வீச்சை மட்டும் பார்க்கவில்லை... நீங்கள் நிலைதடுமாறிய தருணத்தையும் கவனித்தது. அன்று எதிரிகளுடன் போரிட்ட போதோ அல்லது நிலத்தில் சரிந்த போதோ, உங்களுக்கு அடி ஒன்றும் பட்டுவிடவில்லையே?” என்று குரலில் கனிவு கூட்டி, மிகுந்த அக்கறையுடன் விசாரித்தான்.

அவனது பேச்சில் தெரிந்த அந்த உண்மையான அக்கறை, ஒரு கணம் அவளை நிலைகுலையச் செய்தது!

“யார் என்று தெரியாத ஒருவரிடம், அதுவும் சந்தேகத்தின் அடிப்படையில் அரண்மனைக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஒருவரிடம் உரையாட வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை! குற்றம் செய்தவனுக்கான தண்டனையை இந்நாட்டு மன்னரே வழங்குவார். அதற்கு முன் என்னிடம் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்!”

அவனது இதழ்களில் தவழ்ந்த சிறு புன்னகை, மெல்ல முகம் முழுவதும் பரவியது. இத்தனை நேரம் கனிவுடன் இருந்தவள், தன்னைத் தற்காத்துக்கொள்ள இத்தனை உக்கிரமாக மாறியதைக் கண்டதும், அவளை மீண்டும் சீண்டிப் பார்க்கும் ஆவல் அவனுள் எழுந்தது.

“பார்ப்பதற்குத்தான் ஒரு முரட்டுக்காளையைப் போன்ற பிடிவாதத்தோடு தெரிகிறீர்கள் தேவி! ஆனால், உங்களுக்குள் இருக்கும் உள்ளமோ மலரை விடவும் மென்மையானது என்பதை நான் அறிவேன். கோபம் குடிகொண்டிருக்கும் இதே முகத்தில்தான் சாந்தமும் வாழ்கிறது; சீற்றம் தெறிக்கும் இந்த இதழ்கள்தான் புன்னகையையும் உதிர்க்கின்றன. உங்களது புன்னகையையும் நான் கண்டுவிட்டேன்; இந்தப் பொல்லாத கோபத்தையும் பார்த்துவிட்டேன். ஆனால் பாருங்களேன்... இந்தச் சினத்தால் சிவந்து போயிருக்கும் வதனத்தை விட, புன்னகையில் மலர்ந்திருக்கும் அந்தப் பூமுகம் அத்தனை அழகு!”

அவனது சொற்களில் பொதிந்திருந்த வசியத்தில் மயங்க விரும்பாதவளாய், “இப்படியெல்லாம் பேசி என் மனதை மாற்றி, இந்த நாட்டிற்கு நீங்கள் வந்த காரணத்தை மறைத்துத் தப்பித்துவிடலாம் என்று எண்ண வேண்டாம்! மன்னரிடம் உங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னால், அடுத்த கணமே உங்கள் தலை துண்டிக்கப்படும்... ஜாக்கிரதை!” என்று எச்சரித்தாள்.

மேலும் தொடர்ந்தவள், “இனிமேல் என்னிடம் இத்தகைய பேச்சுகளை வைத்துக்கொள்ளாதீர்கள்! நான் யாருக்கும் ‘தேவி’யும் அல்ல; மென்மையானவளும் அல்ல. என் பெயர் காதம்பரி!! நாளை மன்னரின் கேள்விக்கு முறையாகப் பதிலளித்துவிட்டு, நீங்கள் உண்மையான வணிகராக இருந்தால் இங்கிருந்து உடனே வெளியேற வேண்டும். இல்லை, ஒற்றறிய வந்திருந்தால்... என் கையால்தான் உங்களுக்கு மரணம் நிகழும்!” என்று இடி முழக்கமாய் எச்சரித்துவிட்டு, அவனது பதிலுக்குக் காத்திராமல் விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தாள்.

‘பரவாயில்லை, மிகுந்த புத்திசாலிதான்!’ என்று நினைத்தவன், அவளது ஒவ்வொரு வார்த்தையையும் தன் அடிமனதில் பொக்கிஷமாய்ச் சேகரித்துக் கொண்டான்!

இரவு நேரம் பஞ்சணையில் சாய்ந்திருந்த காலஞ்செயன், ஒரு தலையணையைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தான். சற்று நேரத்திற்கு முன்பு தன்னிடம் வாதாடிய அந்த விழித்தீயவளின் நினைவுகள் அவன் மனதை ஆக்கிரமித்திருந்தன.

அவனது முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த நீலகேசி, மெல்ல நகைத்தான். 'காதல் என்ற வியாதி ஒருவருக்கு அத்தனை சீக்கிரம் வந்துவிடாதுதான். ஆனால், வந்துவிட்டால்... முழு நேரமும் பித்து பிடித்தவனைப் போல மாற்றிவிடுமே! அது எத்தனை நிதர்சனம்!' என்று தனக்குள் எண்ணிக்கொண்டான்.

மெதுவாக அவனருகே வந்த நீலகேசி, அவன் முகத்திற்கு நேரே தன் கைகளைச் சொடுக்கினான். “என்ன காலஞ்செயன் அவர்களே! பஞ்சணை போதாதென்று தலையணையை வேறு அத்தனை இதமாக நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஒருவேளை... அந்தத் தலையணையை ஏதேனும் மங்கையின் நினைவுடன் ஒப்பிட்டு தழுவுகிறீர்களோ!” என்று கிண்டலாக இழுத்தான்.

திடுக்கிட்டு நிமிர்ந்த காலஞ்செயன், முகத்தில் செயற்கையான கோபத்தை வரவழைத்துக் கொண்டு, “நிறுத்து உன் நையாண்டியை! நான் எப்போது பெண்களைப் பற்றி நினைத்தேன்? தப்பித்தவறி இந்த நாட்டு இளவரசிக்கு உதவ முன் வந்து சந்தேகத்தின் பேரில் சிக்கிக் கொண்டோமே என்கிற கவலையில் அல்லவா இருக்கிறேன்!” என்று மழுப்பினான்.

“ஓ... அப்படியா சங்கதி? கவலையில் இருப்பவன் தலையணையை ஏன் காதலியின் கரம் போலப் பற்றிக் கொண்டிருக்கிறான்? உன் உதடுகளில் வழியும் அந்த மெல்லிய சிரிப்பு, நீ சொல்லும் ‘கவலை’க்குச் சற்றும் பொருந்தவில்லையே நண்பா!” என்று நீலகேசி கண்ணடித்தான்.

நீலகேசியின் கூர்மையான கிண்டலில் காலஞ்செயன் பிடிபட்டான். தன் மழுப்பல் இனி வேலை செய்யாது என்று உணர்ந்தாலும், “வந்த வேலையை முடித்ததும் இங்கிருந்து கிளம்பி சென்றாக வேண்டும். நாம் வந்திருக்கும் வேலையும் எத்தனை கடுமையானது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டான்.

நீலகேசி புன்னகையுடன், “அப்படியென்றால் உனக்கு எந்தப் பெண்ணையும் பிடிக்கவில்லை என்கிறாய்? ம்ம்…” என்று கேட்க, “ஆமாம்! வந்த வேலையை முடித்துவிட்டு செல்வது தான் சிறப்பு. இடையில் வேறு எதற்கும் அனுமதியில்லை” என்றான் காலஞ்செயன் பிடிவாதமாக.

“ஓ அப்போது சரிதான்! நீ பார்க்கவில்லை எனும்போது தாராளமாக என் மனதில் இருப்பதை நான் வெளிப்படுத்தலாம்” என்றவன், “இன்றைக்கு காலையில் ஒரு பொண்ணை சந்தித்தோம் அல்லவா, அந்தப் பெண்ணிடம் ஏதோ ஒன்று இருப்பதாக தோன்றுகிறது. அவளைப் பார்த்த முதல் எனக்கும் ஏதேதோ ஞாபகங்கள். அவளை நம்முடன் நமது நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும், பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி முறையாக திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசையாக உள்ளது. உனக்குத்தான் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாயே, நானாவது அவளை மணந்து நன்றாக ஒரு வாழ்க்கை வாழ்கிறேனே!” என நண்பனை வாய் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

காலஞ்செயனின் முகம் சட்டென மாறிவிட்டது. கண்கள் இரண்டும் உக்கிரமாக மாறிவிட, “என்னடா இப்ப சொன்ன? அந்தப் பெண்ணை பற்றி இப்படி எல்லாம் பேச உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? நீ பேசியது மட்டும் அவளுக்கு கேட்டது உன் தலையை துண்டித்து விடுவாள்” என்றான் படபடப்புடன்.

“அதைப் பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் கால தேவரே! இந்த ஊருக்கு வந்து இப்படி ஒரு வீரமான பெண் எனக்கு கிடைப்பாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை” என்று மறுபடியும் மறுபடியும் சீண்டலாக பேசினான் நீலகேசி. உடனே கால தேவன் கையில் இருந்த தலையணையை எடுத்து அவன் மீது ஓங்கி எறிந்தான். அவன் அதை லாவகமாக பற்றிக் கொள்ள, இவன் மல்யுத்ததிற்கு தயாராவது போல அவன் பக்கம் பாய, நீலகேசி சிரித்துக்கொண்டே, “எனக்கு அண்ணியாக வரப்போறவரை நானே உரிமை கொண்டாட பார்த்ததும் உன்னால் தாங்க முடியவில்லையா? பிறகும் எதற்கு மனம் முழுவதும் இத்தனை ஆசையை வைத்துவிட்டு மாற்றிப் பேச வேண்டும்” என்றான்.

தான் மாட்டிக்கொண்டதை உணர்ந்து காலஞ்செயனின் முகம் புன்னகையை தத்தெடுத்தது. அந்தத் தலையணையை எடுத்து இன்னும் கொஞ்சம் அழுத்தமாக அணைத்துக் கொண்டான். “எல்லாவற்றையும் தெரிந்து வைத்து விட்டு தான் நாடகம் ஆடினாயாடா? சரிதான் போ! உன்னிடம் எதையும் மறைக்க முடியாது போலிருக்கிறதே…” என்று சரணடைந்தவன், ஏக்கத்தில் பெருமூச்சு விட்டான்.

“இருந்தாலும் நீலகேசி... அவளைப் பார்த்தாயே? அந்த விழிகளில் எத்தனை வேகம்! ‘என் கையால் தான் உங்களுக்கு மரணம் நிகழும்’ என்று அவள் எச்சரிக்கும்போது, அவள் காட்டிய அந்தத் திமிர் இருக்கிறதே... அது என்னை அப்படியே சுண்டி இழுக்கிறது! உண்மையில், அந்த வீர மங்கையின் வாள் முனையால் மரணம் கிடைத்தால் கூட, அதை ஒரு வரமாக ஏற்கும் பித்து எனக்குப் பிடித்துவிட்டது போலிருக்கிறது!” என்று காதல் மயக்கத்தின் உச்சியில் பேசினான்.

நண்பனின் இந்த அதிரடி மாற்றத்தைக் கண்டு வியந்த நீலகேசி, “அடடா! ஆரம்பத்தில் ‘மன்னரிடம் சிக்கிக் கொண்டேன்’ என்று புலம்பியவன், இப்போது ‘மரணமே வரம்’ என்கிற அளவிற்குப் போய்விட்டாயே! நம் வேங்கை இப்போது காதலியின் காலடியில் மண்டியிடும் செல்லப் பூனையாக மாறிவிட்டதே!” என்று மேலும் வம்புக்கு இழுத்தான்.

காலஞ்செயன் சிரித்துக்கொண்டே, “யார் கண்டார் நீலகேசி? இந்த வேங்கை அவளது அன்பால் வளர்க்கப்படும் செல்லப் பூனையாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! அவளது கோபமே இத்தனை அழகென்றால், அந்த இதழ்கள் ஒருமுறை புன்னகைத்தால் என் நிலை என்னவாகும்? அதை நினைக்கும் போதே இதோ... இந்த நெஞ்சுக்குள் மின்னல் வெட்டுகிறது!” என்று தன் நண்பனிடம் மனந்திறந்து ரசித்துப் பேசினான்.

நீலகேசி உற்சாகமாக அவன் தோளைத் தட்டினான். “இதுதான் காலஞ்செயன்! இதுதான் உன் நிஜமான முகம். இனி அவளை எப்படி நம் நாட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று யோசிப்போம்!” என்று அந்த விவாதத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தினான்.

“உண்மைதான்! இங்கு வந்த சில நாளிலேயே என் பெற்றோரின் ஆசை நிறைவேற போகிறது. நானும் என் மனதைக் கவர்ந்த பெண்ணை மணந்து ஒரு நல்ல வாழ்க்கை வாழ போகிறேன். அதற்கு எத்தனையோ தடைகள் இருந்தாலும் அதை தூசாக தட்டி தள்ள தயங்க மாட்டேன்” என்றான் உறுதியாக.

வெறும் வாய் வார்த்தையாக அவன் சொல்லிய அந்த விஷயம், பின்னாளில் பெரிய போராட்டமாக மாறும் என்பதை அவன் அப்போது உணர்ந்திருக்கவில்லை. நித்திரை தொலைந்து போய் அவளது ஞாபகம் மனதில் பதியத் தொடங்கியது. அவளைப் பார்த்த நொடியில் இருந்து இப்போது வரை நடந்தவற்றை ரசித்து ரசித்து உறக்கத்தை மறந்தவன், தன்னை மீறிச் சொக்கி கண் மயங்க, நீலகேசி அதற்குள்ளாகவே ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தான்.

காலையில் கண் விழித்த கணத்திலிருந்தே காலஞ்செயனின் மனம் நேற்றைய நினைவுகளின் அலையிலேயே உழன்று கொண்டிருந்தது. அந்தச் சிந்தனை ஓட்டத்தைக் கலைக்கும் விதமாக அரண்மனைப் பணியாளர் ஒருவன் அங்கு வந்தான். காவல் அதிகாரி பரஞ்சோதி அவர்களை வரச்சொன்னதாக அவன் தெரிவிக்க, காலஞ்செயனும் நீலகேசியும் கிளம்பினர்.

அவர்கள் சென்ற இடத்தில் மல்யுத்த வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதித் தங்கள் உடல் வலிமையை நிரூபித்துக் கொண்டிருந்தனர். காலஞ்செயன் அங்கு நுழைந்ததும், அதுவரை தங்களுக்குள் மோதிக் கொண்டிருந்த வீரர்களின் பார்வை அவன் பக்கம் திரும்பியது. ஆனால், அவர்களைச் சற்றும் கண்டு கொள்ளாமல் காலஞ்செயனும் நீலகேசியும் கடந்து செல்ல முயன்றனர்.

யாரையும் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் அலட்சியமாக நடந்து சென்ற இவர்களின் போக்கு, அங்குள்ள வீரர்களுக்குள் ஏளனத்தைக் குடியேற்றியது. "யாரடா இவர்கள்? நம் வீரத்தைப் பார்த்து அஞ்சி ஓடுகிறார்களோ?" என்று வம்பு இழுக்கும் நோக்கில் சீண்டலாகப் பேசியவர்கள், தங்களது பலத்தைச் சோதித்துப் பார்க்க வருமாறு சவால் விட்டனர்.

நீலகேசிக்கு இது எதனால் நடக்கிறது என்று புரியவில்லை. ஆனால் காலஞ்செயன் நிதானமாக யோசித்தான். பரஞ்சோதி வரச்சொன்ன இடத்தில் இப்படி ஒரு சூழல் நிலவுகிறது என்றால், இது மன்னரின் திட்டமாகத்தான் இருக்கும் என்பதை அவன் உள்ளுணர்வு உணர்த்தியது. அதனால் அங்கிருந்து அமைதியாக சென்று விடலாம் என்று முடிவு செய்தான், ஆனால் அவர்களே விடாமல் வம்பு இழுக்க ஒரு கட்டத்தில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் களத்தில் குதித்தான்.

அடுத்த சில நிமிடங்கள் அந்த இடமே அதிரும் வகையில் மல்யுத்தம் நிகழ்ந்தது. எதிராளியின் ஒவ்வொரு நகர்வையும் நொடியில் கணித்து அவன் கொடுத்த பதிலடி அசாத்தியமானது. மாடத்தில் அமர்ந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த மன்னர் உதயச்சந்திரனின் உதடுகளில் புன்னகை விரிந்தது. காலஞ்செயன் வீசும் ஒவ்வொரு அடியிலும் ஒரு தேர்ந்த வீரனுக்கே உரிய லாவகம் இருப்பதை அவர் கண்டுகொண்டார். இறுதியில், தன்னிடம் மோதிய வீரனை நிலைகுலையச் செய்து அவன் கஜேந்திரனாக நிமிர்ந்து நின்ற தோரணை, அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தது.

இவை அனைத்தையும் ஒரு ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த காதம்பரியின் விழிகளில் வியப்பை விடவும் விழிப்புணர்வே மேலோங்கியது. 'இவன் சாதாரணமானவன் இல்லை' என்று அவளது போர்வீரனுக்கே உரிய உள்ளுணர்வு எச்சரித்தது. அவனது இந்த அதிரடித் தோற்றம், இவன் ஒருபோதும் ஒரு சாதாரண வணிகனாக இருக்க முடியாது என்பதை அவளுக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்தியது.

'எதற்காக ஒரு போர்வீரன் வணிகனாகத் தன்னை மாற்றிக்கொண்டு வந்திருக்கிறான்? எதை மறைக்கத் துடிக்கிறான்?' என்ற கேள்விகள் அவளுக்குள் விஸ்வரூபம் எடுத்தன. இந்த நாட்டின் 'உப தளபதி' என்கிற பொறுப்பு அவளை முழு வீச்சில் எச்சரித்துக் கொண்டே இருந்தது. அவனது ஒவ்வொரு நுணுக்கமான அசைவையும் அவளது கூர்மையான பார்வை வேட்டையாடத் தொடங்கியது. அவன் மீது பற்று ஏற்படுவதற்குப் பதில், அவனது நிஜமான அடையாளத்தைக் கிழித்தெறிய வேண்டும் என்கிற துடிப்பே அவளுக்குள் மேலோங்கியது. உண்மை நிலையை மன்னருக்குத் தகுந்த ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும் என்று உறுதி பூண்டாள்.

அப்போது பரஞ்சோதி மன்னரைப் பார்க்க, மன்னரின் கண்களில் தெரிந்த திருப்தி காலஞ்செயனைப் பற்றிய அவரது உயர்வான எண்ணத்தை உறுதிப்படுத்தியது. காலஞ்செயன் மல்யுத்தக் களத்தை விட்டு நகர முற்பட்டபோது, அங்கிருந்த வாள் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த வீரர்கள் அவனை வம்புக்கு இழுத்தனர்.

"மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டவரிடம் மட்டும் தான் உன்னால் வீரத்தைக் காட்ட முடியுமா? முடிந்தால் எங்களை வெற்றி பெற்று விடு பார்க்கலாம்!" என்று அவர்கள் சீண்டலாகப் பேசி அவனது கோபத்தைத் தூண்டினார்கள். சற்றும் தயங்காமல் தன் இடையில் இருந்த வாளை உருவினான் காலஞ்செயன்.

தனி ஒருவனாக நின்று சுழன்று சுழன்று அவன் வாள் வீசிய வேகம், பார்ப்பவர்களுக்குக் கண்ணிமைக்கும் நேரத்தைக் கூடக் கொடுக்கவில்லை. வெறும் பத்து நிமிடங்களுக்குள் அத்தனை வீரர்களின் வாள்களையும் தெறிக்க விட்டு, அவர்களை நிராயுதபாணியாக்கினான். இறுதியில் தன் வாளை வானத்தை நோக்கி உயர்த்தி அவன் காட்டிய அந்த அசைக்க முடியாத கம்பீரம், அந்தப் போர்க்களத்தையே அவனுக்கு அடிபணியச் செய்தது.

அவனது அசாத்திய வீரத்தைக் கண்ட அரசர் உதயச்சந்திரன், "இப்படிப்பட்ட ஒரு வீரன் நம் நாட்டை விட்டுச் சென்றுவிடக் கூடாது" என்கிற முடிவை தன் மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டார். ஆனால் அங்கே ஒருபுறம், எதற்கும் மசியாத இரும்புப் பார்வையுடன் காதம்பரி அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கண்களில் தெரிந்தது காதலோ ஈர்ப்போ அல்ல; ஒரு திறமையான ஒற்றனைக் கையாளத் துடிக்கும் உபதளபதியின் தீர்க்கமான எச்சரிக்கை மட்டுமே!
.
 
Last edited:
Top Bottom