"என்னண்ணா சொல்ற! நீயா!" என்றவளால் இதை சற்றும் நம்பவே முடியவில்லை.
"ம்ம், நான் உன்னைக் கட்டிக்க சொல்லி மாமா கிட்ட கேக்கல. லேசா பேசி பார்த்தேன், நம்ம மாமா நெருப்பு மாதிரி கப்புனு பிடிச்சுக்கிட்டாங்க".
"அண்ணா, இதனால பின்னாடி எவ்வளவு பிரச்சனை வருமோன்னு எனக்கு பயமா இருக்கு. நீ ஏன்ணா இப்படி எல்லாம் மாமா கிட்ட போய் பேசுன".
"என்ன பிரச்சனை வரும்னு நீ யோசிக்கிற வர்ணி? சரி, நீ சொல்ற போலவே வச்சுப்போம். மாமா உன்னைக் கட்டிக்காம இருந்தாலும், நிச்சயம் வேற யாரையாவது மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் போறாங்க. கல்யாணத்துக்கு பிறகு மாமாவுக்கு இந்த ஞாபகமெல்லாம் வந்து, என் மக எனக்கு வேணும்னு உன்கிட்ட வந்து கேட்டா என்ன செய்வ?" என்றவனின் வார்த்தையில் விக்கித்து அவனைப் பார்த்தாள் வர்ணிகா.
ஏதோ திருவிழாவில் காணாமல் போன குழந்தைப் போல், அவள் திருதிருப்பது அருண் மொழியின் மனதை நெருடியது.
"ஒருவேளை, மாமா வேற யாரையாவது கல்யாணம் பண்ண பிறகு, எல்லா ஞாபகமும் வந்து ரித்து எனக்கு வேணும்னு அவரோட கூப்பிட்டு போயிட்டா, ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்க போறவங்க நம்ம ரித்துவ ஏத்துப்பாங்களானு யாருக்கு தெரியும்? ஒருவேளை, கல்யாணம் பண்ண பிறகு, இது ரெண்டாம் தாரம்னு தெரிஞ்சதும் அவங்க மாமாவையே வேண்டாம்னு விட்டுட்டு போகவும் வாய்ப்பிருக்கு. அப்படி இல்லயா, மாமாவுக்காக ரித்துவ ஏத்துக்கிட்டாலும், முழு மனசா அவளை ஏத்துக்காம பிடிக்காம போகவும் வாய்ப்பிருக்கு. இதனால பாதிக்கப்பட போறது ரித்து தான்! அதுவே, நீ மாமாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா, நீ சொல்ற மாதிரி மாமாவுக்கு ஃபியூச்சர்ல பழைய ஞாபகங்கள் வந்தாலும், ரிதன்யாவுக்கு நல்ல அம்மாவா இருந்து நீ அவளைப் பாத்துப்ப. பாத்துப்ப தான?" என்றதும், வேகமாய் தன் தலையை ஆட்டினாள் வர்ணிகா.
"நான் ஒன்னும் மாமா கிட்ட போய் என் தங்கச்சியைக் கட்டிக்கோங்கன்னு கேக்கல. எதேர்ச்சையா உன் கல்யாணத்தைப் பத்தி பேசும்போது, குழந்தையையும் ஏத்துக்குற மாதிரி மாப்பிள்ளையா இருந்தா, ஒருவேளை, நீ சம்மதிக்க வாய்ப்பிருக்குனு மட்டும் தான் சொன்னேன். மாமா அதை மனசுல வச்சுக்கிட்டு, அவங்களே ஏத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்க போலருக்கு. எதை வச்சு மாமா உன்னைத் தப்பா நினைப்பாங்கன்னு நீ நினைக்கிற, ஒருவேளை, இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சா கூட, நீ பண்ணது ஒன்னும் சின்ன விஷயம் இல்ல வர்ணி, எப்படி உன்னைத் தப்பா நினைக்க முடியும்? அவங்க குழந்தையோட உயிரை நீ காப்பாத்தி இருக்க, அவளுக்கு ஒரு அம்மாவா இருந்து வளர்த்திருக்க, நீ பண்ணது எவ்வளவு பெரிய விஷயம்னு உனக்கு தெரியுதா!".
அவனுக்கு எந்த பதிலும் அமைக்காமல் அமைதியாய் அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
"நீ பண்ணது ரொம்ப பெரிய விஷயம் வர்ணி. அதுக்கான காம்பன்சேஷனா உன்ன மாமாவ கட்டிக்க சொல்லல. ஆனா, ஒரு விஷயம்.. உனக்கும், வீரா மாமாவுக்கும் கல்யாணம் நடக்குறது தான் உங்க மூணு பேரு வாழ்க்கைக்குமே நல்லது! எனக்கு இதுதான் சரின்னு படுது. தேவையில்லாம ஓவர் திங்க் பண்ணாத. அதோட எதையும் மனசுல போட்டு அழுத்திக்காத. ஏதாவது உன் மனச அழுத்துற மாதிரி இருந்தா, என்கிட்ட மட்டுமாவது வெளிப்படையா பேசு வர்ணி. உனக்காக எப்பவும் நான் இருப்பேன்".
அவனின் வார்த்தையில் மீண்டும் அவனின் தோளிலேயே தஞ்சம் சேர்ந்தாள் வர்ணிகா.
****
கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வீரபத்திரனுக்கு, அருண்மொழி தன்னிடம் பேசிய ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மனதிற்குள் அலையாடிக் கொண்டிருந்தது.
தங்கள் ஃபேக்டரியில் அமர்ந்து எதையோ தீவிரமாய் சிந்தித்துக் கொண்டிருந்தான் வீரபத்திரன். லேசாய் அவனின் பின்னந்தலை வலி எடுக்க, கரம் கொண்டு தேய்த்து விட்டுக் கொண்டான்.
கதவைக் கொஞ்சமாய் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த அருண்மொழி, "என்ன மாமா, முகம் ஒரு மாதிரி டல்லா இருக்கு".
"அந்த மாப்பிள்ளை வீட்ல எப்படி பேசிட்டாங்கன்னு பாத்தியா, அவங்க மனசுக்குள்ள ஏற்கனவே இந்த பிளான் இருந்திருக்கு போலருக்கு அருண். நான் தான் சரியா கவனிக்காம விட்டுட்டேன். என்கிட்ட வந்து வர்ணியைப் பிடிச்சிருக்குன்னு சொல்லவும், அவங்க ரிதன்யாவையும் சேர்த்து தான் ஏத்துப்பாங்கன்னு நினைச்சுட்டேன். ஆனா, அவங்க எடுத்ததும் அதை சொன்னா நாம ஒத்துக்க மாட்டோம்னு, நமக்கும் அவங்கள பிடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணி சொல்லலாம்னு நினைச்சிருக்காங்க. நாம வர்ணியுடைய வாழ்க்கையை நெனச்சு சம்மதிச்சிடுவோம்னு யோசிச்சிருக்காங்க போலருக்கு. எப்படி எல்லாம் யோசிச்சிருங்க இல்ல? இப்படியும் மனுஷங்க இருக்காங்க" என்றான் பற்களைக் கடித்துக் கொண்டு கோபமாய்.
அப்பட்டமாய் அந்த பார்வை, 'அவள் உன்னைத்தான் நேசித்தாள் என்று உனக்கு தெரியாதா?' என குற்றம் சாட்டுவது போல் தோன்றியது.
"என்ன அருண், நீ என்ன சொல்ல வரன்னு எனக்கு புரியல. எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசு".
"வெளிப்படையா பேச தான் மாமா நானும் வந்திருக்கேன்" என்றவனோ, அவனின் முன்பு ஒரு டைரியை எடுத்து வைத்தான்.
தன் புருவம் இடுங்க அதை எடுத்துப் பார்த்தவன், முன்னும் பின்னும் திருப்பி பார்த்துவிட்டு, "என்ன இது, யாரோடது?".
"வர்ணியோடது, அவ வீட்லருந்து காணாம போன பிறகு, அவள பத்தி ஏதாவது க்ளு கிடைக்குமான்னு பார்க்கும்போது, எனக்கு கிடைச்சது இந்த டைரி தான். இதைப் பாத்தா அவ காதலிச்சது யாருன்னு தெரியும்னு நினைக்கிறேன்".
"அப்படியா!" என்றவன் ஆர்வமாய் அதனைப் பிரித்து பார்த்தான்.
முதல் பக்கத்தில் 'வர்ணிகாவின் வண்ணமானவன்' என்னும் பெயரை அழகாய் படம் வரைந்திருந்தாள்.
அடுத்தப் பக்கத்தைத் திருப்பியவனின் கைகள் அப்படியே உறைந்து நின்று விட்டது.
சிறுவயதில் பிறந்த குழந்தையாய் வர்ணிகா, அவளைச் சிறு பாலகனாய் மடியில் தாங்கி அமர்ந்திருக்கும் வீரபத்திரன் என அவர்களின் புகைப்படத்தை ஒட்டி அதற்கு கீழே.
'அழகிய கவிதையே!
உன்னை ரசிப்பதற்காய் எழுதப்பட்டேனே தவிர..
உனக்கானவளாய் எழுதப்படாதவள் நான்!'.
அந்த வரியைப் படிக்கும் பொழுதே அவனின் மனம் பிசைந்தது.
உடலில் ஒருவித அசௌகரியம், மெல்லிய நடுக்கம் பரவ, அடுத்த பக்கத்தைப் புரட்டினான்.
அதில், வீரபத்திரனின் புகைப்படம் மட்டும் புன்னகை முகமாய் மிளிர்ந்துக் கொண்டிருந்தது அதற்கு கீழே..
'உன்னை யாரோ என கடந்து செல்லும் தைரியம் என்னிடம் இல்லை..
தொலைவிலேயே இரு!'
என எழுதி வைத்திருந்தாள்.
அடுத்தடுத்த இரண்டு பக்கங்களும் வெற்றுத்தாளாய் இருக்க. வேகமாய் அடுத்த பக்கத்தைப் புரட்டினான்.
'நீ வாசிக்க மறந்த கவிதை நான்!'
என்ற எழுத்துக்கள் மட்டுமே இருந்தது.
அந்த எழுத்துக்களுக்கு அருகே அவளின் கண்ணீர் தடங்கள் காய்ந்து போய் இன்னமும் அதன் அச்சு தெரிந்தது.
அதைத் தொட மூளை உரைக்க, அதனை மறுத்த அவனின் கைகளில் ஒருவித நடுக்கம்.
தன்னையும் மீறி அவனின் விரல்கள் மேலெழுந்து அதனை வருட, உள்ளுக்குள் எதுவோ பெரிதாய் உடையும் உணர்வு.
"அவ காதலிச்சது யாரன்னு இப்போ தெரியுதா மாமா?" என்ற அருண்மொழியின் கேள்வி அவனுக்குள் ஊடுருவ.
மெல்லிய அதிர்வோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.
"நான்!" என அவனின் இதழ்கள் தானாய் மொழிய.
மீண்டும் மீண்டும் அந்த பக்கங்களைப் புரட்டிக் கொண்டே இருந்தவனின் விழிகளில் வந்து விழுந்தது, அவள் எழுதிய பக்கத்தில் இருக்கும் அன்றைய நாட்களின் தேதி.
அவள் தன்னைக் காதலித்ததாய் கூறி இவன் மறுத்த பிறகு தான், இதையெல்லாம் எழுதி இருக்கிறாள் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
கடைசியாய் அவள் எழுதி இருந்த வாசகம், தனக்கு விபத்து நேர்ந்த அன்று எழுதப்பட்டிருந்தது.
வீரபத்திரனின் புருவம் இடுங்க, பெரும் குழுப்பம் அவனின் மூளையைக் கொஞ்சம் கொஞ்சமாக திங்க துவங்கியது.
அவள் வீட்டிலிருந்து வெளியேறிய கடைசி நாள் வரையிலும் இவனுக்காக எழுதி வைத்திருக்கிறாள் என்றால், எப்பொழுது வேறு ஒருவனைக் காதலித்தாள்?
எப்படி அவனின் பிள்ளைக்கு தாயாகினாள்? என்ற பெரும் கேள்வி மலையென எழுந்து நின்றது.
தேதியைக் கவனிக்க தொடங்கிய பின் தான், சட்டென ரிதன்யாவின் வயதையும், அவள் இங்கிருந்து வெளியேறிய நாளையும் கணக்கிட்டுப் பார்த்தான்.
அனைத்துமே ஒன்றுக்கு ஒன்று முரணாய் தெரிய. அதற்கு மேல் தீவிரமாய் அவனை சிந்திக்க விடாமல் பின்னந்தலையில் பெரும் வலி எழுந்தது.
"ஸ்ஸ்!" என தலைக்கு பின்னால் ஒற்றைக் கையைக் கொடுத்தான்.
அவனின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்த அருண் மொழிக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு அனைத்தும் விளங்குவது புரியவும், அவனிடம் அனைத்து உண்மையையும் கூறி விடலாம் என்ற மனநிலைக்கு வந்து விட்டான்.
ஆனால், பாதி உண்மைகள் புலப்பட்டதற்கே அவனுக்கு தலை வலி எடுத்து விட்டது. இதில், எங்கிருந்து முழு கதையையும் அவனிடம் கூறுவது என பயந்து போனான் அருண்மொழி.
சட்டென்று எழுந்து அவனருகில் வந்தவன், "என்னாச்சு மாமா?" என அவனின் கையைப் பிடிக்க.
தன் டேபிளின் ட்ராயரில் இருந்து மாத்திரை டப்பாவை எடுத்தவன். அதிலிருந்து ஒரு மாத்திரையைப் போட்டு கொஞ்சம் தண்ணீரைப் பருகினான்.
கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் முகம் தெளிய, "ஓவர் திங்க் பண்ணா இப்படித்தான் கொஞ்சம் பெயினா இருக்கும். ஐ அம் ஆல்ரைட் அருண்!".
அவனின் முகம் இன்னமும் சற்று கசங்கி தான் இருந்தது. அவனின் வலி முற்றிலுமாய் குணமடையவில்லை என்பதைப் புரிந்து கொண்ட அருண், அர்ச்சனாவைப் பற்றி பேச நினைத்தது மொத்தத்தையும் தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டான்.
இந்த விதி எப்பொழுது தான் வழிவிட்டு, அவனின் வாழ்க்கையின் ரகசியங்களை அவனுக்கு புலப்படுத்த காத்துக் கொண்டிருக்கிறதோ..
ஒருவேளை, அவன் தாங்க மாட்டான் என்பதற்காக தான் இந்த தாமதமோ!