- Joined
- Sep 8, 2024
- Messages
- 344
- Reaction score
- 163
- Points
- 63
அத்தியாயம் -25
மறுநாள் பொழுது விடிந்தது. ஒவ்வொருவராய் படுக்கையில் இருந்து எழுந்து வந்தனர். இசைவாணி, எப்போதுமே காலையில் அனைவருக்கும் தேநீர் சேர்த்தே போட்டு, ஃபிள்ஸ்க்கில் ஊற்றி எடுத்துக் கொண்டு முன்னறையில் வைத்து விடுவாள்.
அவரவர் வந்தவுடன், கோப்பைகளில் ஊற்றிக் கொள்வார்கள். அனைவரும் இருக்கும் போது, அந்த முறையைப் பின்பற்றுவதை வழக்கமாக்கி விட்டாள் இசைவாணி.
பிரதாபன், இரவு முழுவதும் தூங்காதிருந்து, விடிகாலையில் தூங்கினார். ஆனால் அப்போதும் தன் ஒரே மகள், செல்ல மகள் தேஜூவின் நினைப்பு அவரைச் சரியாகத் தூங்க விடவில்லை.
இசைவாணியும் நிர்மலாவும் மட்டும் எழுந்திருந்தனர். பிறகு பிரதாபன் வந்து, தனக்கான தேநீரை கோப்பையில் ஊற்றிக் கொண்டு வந்து அமர்ந்து கொண்டார்.
அடுத்து வந்தனர் வினீத்தும் தேஜூவும். அப்போது நேரம் ஏழு மணியாகி விட்டது. ஆனாலும் தேஜூவின் முகத்தில் இன்னும் சிறிது தூக்கம் ஒட்டிக் கொண்டு இருந்தது.
இருவருமே கைகளில் தேநீர்க் கோப்பையை ஏந்திக் கொண்டனர். தேஜூ, தன் அம்மா, பாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டாள். வினீத், தன் மாமாவின் அருகே அமர்ந்து கொண்டான்.
பிரதாபனின் பார்வை முழுவதும் தன் மகளிடமே இருந்தது. அவருக்கு என்னவோ தன் பெண்ணின் முகம் இப்போதும் கவலையில் இருப்பது போலவே தோன்றியது.
மருமகனின் மேல் கோபம் கோபமாக வந்தது அவருக்கு.
“ஏம்மா தேஜூ, நைட் நல்லா தூங்கினியாமா?”
உடனே தேஜூவும் வினீத்தும் ஒருவரையொருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.
இசைவாணிக்கோ கணவரின் இந்தக் கேள்வி ஆச்சரியத்தைத் தந்தது.
‘இதென்ன! சம்பந்தமே இல்லாம திடீர்னு இப்படி ஒரு கேள்வி கேக்குறாரு மக கிட்ட?’ என்று யோசித்தவாறு பார்த்தாள் அவரை.
“எஸ்பா, செம தூக்கம்! ஏம்பா கேக்குறீங்க?”
“இல்லேல்ல.. சும்மா தாம்மா கேட்டேன்”
“அதுசரி.. உங்க முகமே சரியில்லையே! நீங்க சரியா தூங்கலையாப்பா? கண்ணு ரெண்டும் செவந்து போயிருக்கு?”
மகள் அப்படிக் கேட்டவுடன், சட்டென்று பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறினார் பிரதாபன்.
“அட ஆமாம்! உங்க முகம் ஏன் மாமா இப்படி இருக்கு? கண்ணு சிவந்தது மட்டும் இல்ல, வீங்கின மாதிரி இருக்கே! ஏன் மாமா.. அழுதீங்களா?”
தன் மாப்பிள்ளை இப்படிக் கேட்டவுடன் திகைத்து திணறினார் அவர்.
‘செய்றதையும் செஞ்சுட்டு பேச்சைப் பாரு!’ மனதில் புலம்பினார்.
“சேச்சே! என்ன மாப்பிள்ள இது! இப்படி எல்லாம் கேக்குறீங்க? நான் எதுக்கு அழப் போறேன்? கண்ட கேள்விய கேக்காதீங்க மாப்பிள்ள!”
குரலில் கோபம் கொப்பளிக்கப் பேசியவர், சட்டென்று எழுந்து உள்ளே சென்று விட்டார் வேகமாக.
நிர்மலாவுக்கும் சிரிப்பு வந்தது. சிரித்துக் கொண்டார்.
‘ஏதோ நடந்துருக்கு! பசங்க என்னமோ விளையாடி இருக்காங்க! அது தான் இந்த திணறு திணர்றாரு. இதுவும் பார்க்க நல்லா தான் இருக்கு. மருமகனே! அதுக்குள்ள முழிச்சா எப்படி? இன்னும் இருக்கே! கொஞ்சம் பாக்கி வச்சுக்கோங்க’
மனதிற்குள் சொல்லிக் கொண்ட நிர்மலா, பேத்தியைப் பார்த்தார். அவளும் பாட்டியைப் பார்த்து ஒரு அர்த்தத்துடன் சிரித்தாள்.
ஆனால் இசைவாணிக்குத் தான் எதுவுமே புரியாமல் முழித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.
அப்போது ‘டிங்.. டிங்.. டிங்..’ என்று விடாமல் அடித்தது வீட்டின் அழைப்பு மணி.
விடாமல் அடிக்கவும், பிரதாபனும் உள்ளிருந்து வேகமாக வந்து விட்டார் எரிச்சலுடன்.
“யாரு இப்படி விடாம பெல் அடிக்கிறா? அதுவும் இந்த நேரத்தில?”
“ஏய் தேஜூ.. யாருன்னு பாருடி சீக்கிரம்!”
இசைவாணி சொல்லும் போதே வேகமாக ஓடிச் சென்று கதவைத் திறந்தாள் தேஜூ.
அங்கு வெளியே, ஆறடி உயரத்தில், ஸ்மார்ட்டாக, அழகான ஒரு தோற்றத்துடன், தலையைக் கொஞ்சம் சாய்த்து ஸ்டைலிஷாக இளைஞன் ஒருவன் நின்றிருந்தான்.
அவனைக் கண்டதும் தேஜூவின் முகம் ஆயிரம் வோல்ட்ஸ் விளக்கு போன்று பிரகாசமானது.
“டேஏஏய்ய் அபிஇஇஇ!”
“தேஜூஊஊஊஊ!”
“நீ எப்படிடா திடீர்னு இங்கே? வாவ்! வாட் அ சர்ப்ரைஸ்!”
முகம் மலரக் கூறினாள் தேஜூ.
“அதுசரி.. எனக்கு உள்ளே வர்றதுக்கு வழி கிழி விடப் போறியா? இல்லே அப்படியே அனுப்பிடப் போறியா?”
“அச்சோ! சாரிடா அபி! வா உள்ளே வா! உன்னைப் பார்த்த சந்தோஷத்தில எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல தெரியுமா?”
“ஓ! அப்ப ஓடாதே! நடந்து வா போதும்!” குறும்புச் சிரிப்புடன் கூறினான் அபி என்கிற அந்த இளைஞன்.
“சோ சுவீட்! உன்னோட இந்தக் கிண்டல் பேச்சு கேட்டு எத்தனை வருஷமாச்சு? ஐ மிஸ் யூ டா படவா!”
“மீ டூ டி தேஜூ!”
“சரி சரி.. வாசல்லேயே எவ்வளவு நேரம் நின்னு பேசப் போறீங்க ரெண்டு பேரும்?”
அதற்குள் குறுக்கிட்டாள் இசைவாணி.
“அபி, வாப்பா உள்ளே! இங்கே நாங்க எல்லாரும் கூட இருக்கோம். தெரியுதா?”
“சாரி அத்த! இங்கே இந்த நேரத்தில தேஜூ இருப்பான்னு சுத்தமா நான் எதிர்பார்க்கவே இல்ல. அதுதான் அவளைப் பார்த்ததும் அப்படியே ஸ்டண்ட் ஆகி நின்னுட்டேன். நல்லா இருக்கீங்களா அத்தை?”
பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தான் அபி என்கிற அபிமன்யு.
பிரதாபனின் ஒரே தமக்கை சங்கீதாவின் ஒரே மகன் தான் இந்த அபிமன்யு என்கிற இருபத்தேழு வயது இளம் வாலிபன். இன்னும் திருமணம் ஆகாதவன்.
இப்போது அமெரிக்காவில் இருக்கிறான். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வேலைக்காகச் சென்றவன், திடீரென சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறான் தன் மாமா வீட்டுக்கு.
பிரதாபனுக்குத் தான் திடீரென எதிர்பாராமல் தன் அக்கா மகன் அபிமன்யு, தன் வீட்டிற்கு வந்தது சிறிதும் பிடிக்கவில்லை. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தார், வந்தவனை வரவேற்கக் கூட மனமின்றி.
‘வினீத்துக்கும் தேஜூவுக்கும் ஏற்கனவே மனஸ்தாபம் இருக்கு! இதில இவன் வேறயா?’
“என்ன மாமா, ஷாக் ஆயிட்டீங்களா? பேயறைஞ்ச மாதிரி நின்னுருக்கீங்க! நான் வருவேன்னு நீங்க யாரும் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க. இல்ல? உங்களுக்கு எல்லாம் சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு தான் சொல்லாம திடீர்னு வந்து நின்னுருக்கேன்! நல்லா இருக்கீங்களா மாமா?”
அவரிடம் இருந்து பதிலைக் கூட எதிர்பாராமல், வினீத்திடம் நகர்ந்தான்.
“ஹாய் வினீத்! எப்படி இருக்கீங்க? உங்க மேரேஜ் லைஃப் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?” என்று அவனிடம் கையைக் கொடுத்தவாறு, கண்ணடித்தான்.
வினீத்தும் பதிலுக்கு கை நீட்டி, சிரிக்க மட்டும் செய்தான்.
“ஓ! சாரி வினீத்! பாருங்க, நான் யாருன்னே தெரியாது உங்களுக்கு. நான் பாட்டுக்கு மடமடன்னு பேசிட்டே போறேன் பாருங்க. பை தி வே, ஐ ஆம் அபிமன்யு! தேஜூவோட அத்தை பையன். கிளாட் டூ மீட் யூ வினீத்!”
“உங்களைச் சந்திச்சதில எனக்கும் ரொம்ப சந்தோஷம் மிஸ்டர் அபிமன்யு!”
“அதென்ன மிஸ்டர்? என்னை நீங்க அபின்னே கூப்பிடலாம் வினீத்! மிஸ்டர்னா ஒரு மாதிரியா டிஸ்டன்சா தோணுது”
“ஓகே அபி! போதுமா?”
“ம்ம்.. இத.. இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்!”
கலகலவனச் சிரிப்புச் சத்தம் நிலவியது அங்கு. அதற்குள் பாட்டியைப் பார்த்து அவரருகே சென்றான் அபி.
“ஹலோ பாட்டி! எப்படி இருக்கீங்க? நான் அப்ராட் போறதுக்கு முன்னாடி இங்கே வந்தேன். அப்ப நீங்க கொஞ்சம் ஒல்லியா இருந்தீங்களே! இப்ப கொஞ்சம் வெயிட் போட்டீங்களோ?”
“அப்படியா? அப்படி ஒன்னும் இல்லையேப்பா. நான் அப்படியே தான் இருக்கேன்”
“அப்படியா? இல்லையே பாட்டி! செக் பண்ணி வேணா பார்த்துருவோமா?”
அதற்கு பாட்டி முழித்து நின்றிருக்க, திடீரென அவரை அப்படியே கால்களைப் பிடித்து தூக்கினான் அபி.
“அடேய் விடுடா படவா பயலே!” கத்தினார் பாட்டி. சிரித்தவாறு கீழே இறக்கினான்.
“ஆமா பாட்டி.. நீங்க அதே வெயிட் தான் இருப்பீங்க போல. இப்ப நம்புறேன்”
“கிண்டலா பண்றே? உன்னை..” என்று பல்லைக் கடித்தபடி அபியை அடிக்கக் கேலியாக கை ஓங்கினார்.
“அய்யோ வேணாம் பாட்டி! நான் பாவம்!” என்றபடி அவரிடம் இருந்து தப்பி ஓடினான் அபி. அவன் பின்னாலேயே அவனைத் துரத்தி ஓடினார் நிர்மலா.
மீண்டும் கலகலவென நகைத்தனர் அனைவரும். முன்பெல்லாம் தன் மாமா வீட்டிற்கு வரும் போது பாட்டியுடன் நன்றாகப் பழகி விட்டான் அபிமன்யு.
அவரைப ‘பாட்டி.. பாட்டி..’ என்று நன்றாகத் தாஜா செய்வான். நிர்மலாவுக்கும் அபி என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாகவே அவனிடம் பழகிய யாருமே, அபியைப் பிடிக்காது என்று சொல்லவே மாட்டார்கள்.
அந்த மாதிரியான ஒரு ரகம் தான் அபி. எப்போது பார்த்தாலும் ஏதாவது கேலி, கிண்டல் என்று தான் இருப்பான்.
எல்லாரையும் ஏதாவது பேசி வம்பிழுப்பான். நகைச்சுவை என்பது கை வந்த கலை அவனுக்கு. அவன் இருக்கும் இடம் எப்போதும் கலகலவென்று தான் இருக்கும்.
அபியும் தேஜூவும் நல்ல நண்பர்கள். அதிலும் தேஜூவின் நாட்டியம் என்றால் அவ்வளவு பிடிக்கும் அவனுக்கு.
அதனால் தன் அம்மாவும் அப்பாவும் வரவில்லை என்றாலும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தன் மாமா வீட்டிற்கு வந்து விடுவான் அபி.
எப்போதாவது பிரதாபனும் குடும்பத்துடன் அவர்கள் இருக்கும் பெங்களூருக்கு சன் சென்று வருவார்கள்.
அபியும் பேச்சுக்குப் பேச்சு தேஜூவை வாடி போடி என்று தான் சொல்லி அழைப்பான்.
அதே போல் தேஜூவும் அப்படித்தான். வாய்க்கு வாய் அவனை டா போட்டுத் தான் பேசுவாள்.
இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்து பெரியவர்கள் அனைவரும் சத்தம் போடுவார்கள்.
“இது என்ன? ரெண்டு பேரும் இப்படிப் பேசிக்கிறீங்க? நீ அவளை டி போட்டுப் பேசுறதும் அவ உன்னை வாடா போடான்னு பேசுறதும் பார்க்க நல்லாவா இருக்கு? கேக்கவே சகிக்கல!
நாலு பேர் எதுக்கேயும் இதே பழக்கம் தானே வரும்? கேக்கிறவங்க என்ன நினைப்பாங்க? மாத்திக்கோங்க ரெண்டு பேரும். இனிமே இப்படிப் பேசிக்கக் கூடாது! புரிஞ்சுதா?”
இரண்டு அப்பா அம்மாக்களும் கூறியதைக் கேட்டு அபியும் தேஜூவும் ஒருவரையொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள்.
‘அப்படியாடா? மத்தவங்க எதுக்க நாம இப்படியெல்லாம் பேசக்கூடாதா?’
மேலிருந்து கீழாக தலையசைத்து கண்களாலேயே கேட்டாள் தேஜூ.
பதிலுக்கு அபியோ இடமும் வலமுமாகத் தலையாட்டி ‘ம்ஹூம்.. அதெல்லாம் முடியாது! நான் உன்னை எப்பவும் எங்கேயும் டின்னு தான் கூப்பிடுவேன்’ என்று தன் பதிலைக் கூறினான்.
‘ஆமா.. நானும் தான். உன்னை எப்பவும் எங்கேயும் டான்னு தான் கூப்பிடுவேன்’
இருவரும் தலையை மாற்றி மாற்றி அசைப்பதைக் கண்டு பெரியவர்கள் குழப்பம் அடைந்தது தான் மிச்சம்.
“டேய் அபி!” “ஏய் தேஜூ!”
இசைவாணியும் சங்கீதாவும் அழைத்தனர் சத்தமாக.
“ம்ம்?” திரும்பினர் இருவரும்.
“என்ன நடக்குது இங்கே? நீ தலையை இப்படி அப்படி ஆட்றே!”
“ம்ம்.. அவன் என்னன்னா அப்படியும் இப்படியும் ஆட்றான்! என்னடா இது? என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?”
“அம்மா! உங்களுக்காக எல்லாம் எங்களை நாங்க மாத்திக்க முடியாதும்மா. தேஜூவை நான் டி போட்டுத் தாம்மா பேசுவேன்”
என்று அபி சொல்ல..
“ஆமாம்மா.. நான் அபியை டா போட்டுத் தாம்மா பேசுவேன்” என்று தேஜூ சொல்ல..
“இதை நாங்க யாருக்காகவும் எதுக்காகவும் மாத்திக்க மாட்டோம்! இது தான் எங்களுக்குப் பிடிச்சிருக்கு!”
இதை இருவரும் சேர்ந்து சத்தமாக கூறி முடித்தனர்.
பெரியவர்கள் இப்போது ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டனர்.
“இவங்கள எல்லாம் திருத்தவே முடியாது இசை! என்னமோ செஞ்சுட்டுப் போகட்டும் விடு!”
“ஆமா அண்ணி விடுங்க! சொன்னாலும் திருந்தாதுக. தானாவும் திருந்தாத ஜென்மங்க இது. விடுங்க, எப்படியோ பேசிக்கட்டும்”
அதிலிருந்து இருவரையும் அவர்கள் இஷ்டத்திற்கு விட்டு விட்டனர்.
இருவரும் சேர்ந்து விட்டால் போதும், ஊர் சுற்றுவது தான் வேலை இருவருக்கும். சினிமா, மால், பீச் என்று தினமும் வெளியே சென்று வருவார்கள்.
அவளுக்கு டான்ஸ் புரோகிராம் இருந்தால் போதும், அவளையே சுற்றிக் கொண்டிருப்பான் அபி. அவளை நாட்டியம் ஆடுமாறு கூறி பார்ப்பது தான் அவனுடைய பொழுதுபோக்கு.
இருவரும் இப்படியே ஒட்டிக்கொண்டு அவ்வளவு பிரியத்துடன் பழகுவதைக் கண்டு, அவர்கள் இருவரையும் திருமண பந்தத்தில் இணைத்தால் என்று என்று யோசித்தனர் பெற்றவர்கள்.
நால்வரும் பேசிக்கொண்டு இருவரிடமும் கூப்பிட்டுக் கேட்டு விடலாம் என்று அழைத்தனர்.
“தேஜூ, அபி, ரெண்டு பேரும் இங்கே வாங்க! உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” அழைத்தார் சங்கீதா.
“எங்க கிட்ட பேசணுமா?”
“அப்படி என்ன பேசப் போறாங்க?”
கேள்விக்குறிடன் பெரியவர்கள் முன்பு வந்து அமர்ந்தனர்.
பிரதாபன் தான் பேச்சைத் துவக்கினார்.
“ஏம்பா அபி, தேஜூம்மா, ரெண்டு பேரும் இப்படி எப்பவும் ஒத்துமையா ஜாலியா பேசுறது, பழகுறது பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு! அதுதான் நாங்க ஒரு யோசனை பண்ணி வச்சிருக்கோம். அது சொல்லத் தான் உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு இருக்கோம்”
“சொல்லுங்கப்பா!”
“என்ன மாமா? சொல்லுங்க”
“உங்க ரெண்டு பேரையும் பார்த்தா, ஒருத்தர் மேல ஒருத்தர் நல்ல பாசத்தோட இருக்கிறது நல்லாவே தெரியுது! அதுதான் நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையிலே ஒன்னு சேர்ந்தா, உங்க வாழ்க்கை நல்லா இருக்கும்னு நாங்க நினைக்கிறோம். நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க?”
சட்டென்று இருவரின் முகமும் மாறி விட்டது. ஆனால் யாரும் அதைக் கவனிக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு பேச்சைத் தொடர்ந்தனர்.
பிரதாபனைத் தொடர்ந்து அபியின் தந்தையும் பேசினார்.
“உங்களுக்கு இதில மறுப்பு எதுவும் இருக்காதுன்னு நாங்க நினைக்கிறோம். உங்க அபிப்பிராயம் என்னன்னு சொல்லுங்கப்பா!”
அவர் முடித்தவுடன் இசைவாணி பேசினாள் தன் பங்குக்கு.
“இதில அவங்க தனியா அபிப்பிராயம் வேற சொல்லணுமாண்ணே? ரெண்டு பேரும் பழகுறதைப் பார்த்தாலே தெரியல?”
“அதானே!” இதைக் கூறியவர் சங்கீதா.
அப்போது தான் இருவரின் முகங்களையும் கவனித்தாள் இசைவாணி.
‘என்ன இது? ரெண்டு பேரும் இதைக் கேட்டு சந்தோஷப் படுவாங்கன்னு நினைச்சா, இப்படி இருக்காங்களே! என்னவா இருக்கும்?’ யோசனையுடன் பார்த்தாள்.
“என்னாச்சு தேஜூ? ஏன் அபி, ஏன் ரெண்டு பேரோட முகமும் இப்படி மாறிடுச்சு?”
இசைவாணி கேட்ட பிறகு தான் மற்றவர்கள் அவர்களைக் கவனித்தனர்.
எப்போதும் இருக்கும் சிரிப்பு இருவரின் முகங்களிலும் காணாமல் போயிருக்க, பேசாமல் அமைதியாக இருந்ததைக் கண்டு குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்னாச்சு ரெண்டு பேருக்கும்? நாங்க பேசினது பிடிக்கலையா? இல்லேன்னா வேற என்ன?”
உடனே அபியும் தேஜூவும் அமைதியாக எழுந்து விட்டனர். தங்கள் அறைகளை நோக்கிச் சென்றனர்.
“பசங்க என்ன இப்படி எதுவுமே பேசாம எழுந்து போறாங்க?”
“தெரியலையே!”
“சரி, ரெண்டு பேரும் நல்லா யோசிச்சுப் பதில் சொல்லட்டும். அதுவரை வெயிட் பண்ணலாம் நாம” என்று கலைந்தனர் நால்வரும்.
அறைக்குள் நுழைந்த தேஜூ, உடனே தன் அலைபேசியை எடுத்து, வாட்ஸ்அப்பில் அபியின் பக்கத்திற்குச் சென்று தன் மனதில் இருப்பதை எழுத்துக்களாகத் தட்ட ஆரம்பித்தாள்.
‘டேய் அபி, நம்ம அப்பா அம்மா திடீர்னு இந்த மாதிரி ஒரு விஷயத்தை நம்ம கிட்ட எடுத்துட்டு வருவாங்கன்னு சத்தியமா நான் நினைச்சுக் கூடப் பார்க்கல. சட்டுன்னு ஒரு மாதிரி ஆயிடுச்சு எனக்கு. ஆனா எப்படியோ இப்படி ஒரு பேச்சு வந்துருச்சு. இப்பவே என் மனசுல இருக்கிறத உன் கிட்ட சொல்லிடலாம்னு நினைச்சுத் தான் உனக்கு மெசேஜ் பண்றேன். என்னைத் தப்பா நினைக்கக்கூடாது நீ ப்ளீஸ்!
என் மனசுல என்னைக்குமே நான் உன்னை அப்படி ஒரு ரிலேசன்ஷிப்ல யோசிச்சுப் பார்த்ததே இல்லேடா அபி! இனிமேயும் அப்படி உன்னை நினைக்க முடியாது என்னால. ஆனா உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியாது! ஆனா அப்படி ஒரு எண்ணம் உனக்கும் இருக்காதுன்னு நான் நம்புறேன்! ஏன்னா இதுவரை அந்த மாதிரியான ஒரு எண்ணத்தோட நீ பேசியோ இல்ல ஒரு பார்வையோ கூடப் பார்த்தது இல்லை என்னை!
ஒருவேளை அப்படி ஒரு நினைப்பு உனக்குள்ள இருந்தால், ப்ளீஸ் அதை அழிச்சிடுடா அபி! என்னால முடியாதுடா! என்னை மன்னிச்சிடுடா!’
எழுத்துகளைத் தட்டி முடிப்பதற்குள் கண்கள் குளமாகி விட்டன அவளுக்கு. ஒரு முறை சரி பார்த்து விட்டு அனுப்பினாள்.
மறுபக்கம் யோசனையுடன் அமர்ந்திருந்தான் அபி.
‘இந்தப் பெரியவங்க எல்லாரும் ஏன் தான் இப்படி இருக்காங்க? ஒரு ஆணும் பெண்ணும் நல்லா பிரியமா பழகினா உடனே அது காதல் தானா? ஏன்.. அது நட்பா அவங்களுக்குத் தோணவே மாட்டேங்குது? அய்யோ! தேஜூவை என்னால அப்படி ஒரு இடத்தில வச்சுப் பார்க்கவே முடியலையே! ஆனா இவங்க பேசினதில தேஜூவுக்கும் அந்த மாதிரி ஒரு எண்ணம் வந்துட்டா? அச்சோ! கடவுளே! என்ன பண்றது இப்ப?’
அப்போது அலைபேசியில் வாட்ஸ்அப் செய்தி வந்திருப்பதை ஒலி எழுப்பிக் கூறியதும் எடுத்துப் பார்த்தான்.
அது தேஜூவிடம் இருந்து வந்த செய்தி என்று தெரிந்ததும் சட்டென்றுத் திறந்துப் பார்த்தான்.
நீளமான செய்தியாக இருக்கவும் என்னவாக இருக்குமோ என்று பதட்டத்துடன் வாசித்தான்.
வாசிக்க வாசிக்க முகத்தில் சிரிப்பு பரவியது அவனுக்கு. முழுச் செய்தியை வாசித்ததும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது அவனிடம் இருந்து.
உடனே அவனுடைய பதில் செய்தியைத் தட்டினான்.
எடுத்தவுடன் சந்தோஷம் காட்டும் இமோஜியை வரிசையாகத் தட்டி விட்டான்.
‘தேங்க் காட் தேஜூ! உன் மனசுல அந்த மாதிரி ஒரு எண்ணம் இருக்கக்கூடாதுன்னு நினைச்சு ரொம்ப பயந்தேன்டி! எனக்கு இப்ப தான் அப்பாடான்னு இருக்கு! உன்னை அப்படி ஒரு இதில பார்க்கவே முடியாதுடி என்னால. நீயும் அதையே நினைச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ் தேஜூ!’
அனுப்பி வைத்தான். அடுத்த நொடியே அவள் பார்த்திருந்தாள்.
சட்டென அறையின் கதவைத் திறந்து வெளியே சென்றான் அபி. அதே நேரம் கதவைத் திறந்து தேஜூவும் வெளியே வந்தாள். இருவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.
“தேஜூ!” “அபி!” இருவரும் தழுவிக் கொண்டனர்.
உடனே பெரியவர்கள் நால்வரையும் அழைத்து, அவர்கள் கூறியதில் தங்களுக்கு சிறிதும் இஷ்டமில்லை என்று தங்கள் முடிவைக் கூறினர்.
“என்ன பிள்ளைங்களோ இவங்க எல்லாம்? இந்த காலத்துப் பசங்க, மனசுல என்ன நினைக்கிறாங்க என்றதை யூகிக்கவே முடியல! நாம ஒன்னு நினைச்சா அவங்க ஒன்னு நினைக்கிறாங்க! ஹூம்ம்!”
நால்வரும் அலுத்துக் கொண்டே நகர்ந்தனர் அங்கிருந்து.