இசை -19 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இசை -19

New updates

LATEST

Sudha Suresh

Well-known member
Staff member
Joined
Sep 8, 2024
Messages
344
Reaction score
164
Points
63
அத்தியாயம் -19



இசைவாணி கருவுற்ற பிறகும் அவளுடைய வீணைக் கச்சேரி நிற்கவில்லை. வரும் கச்சேரிகளில் எல்லாம் விடாமல் கலந்து கொண்டு, சந்தோஷமாக சென்று வீணை வாசித்து விட்டுப் பாராட்டும் பெற்று வந்தாள்.


இப்போதெல்லாம் அவள் பழைய திரைப்பட பாடல்களையும் அதாவது கர்நாடக சங்கீதம் அல்லாத ஆனால் பலரால் மிகவும் ரசிக்கப்பட்ட பாடல்களையும் தன்னுடைய வீணை இசையில் புதுமையாகப் புகுத்தி இருந்தாள்.


அவளுடைய அந்த முயற்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதனால் ஒவ்வொரு கச்சேரியிலும் ஒவ்வொரு பாடலைத் தேர்வு செய்து அதற்கு வீணை இசைத்தாள். அதனால் அவளுடைய ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.


பிரதாபனால் தான் சிறிதும் அதைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது தவித்தான். வயிறு பொருமினான்.


ஒவ்வொரு கச்சேரியன்றும் அவனுடைய அந்தப் பொருமலின் வெளிப்பாடு இன்னும் நன்றாகவே தெரிந்தது இசைவாணிக்கு.


அவனுடைய கேள்விகளும் கிண்டல் பேச்சுகளும் அதிகரித்து இருந்தன. அவனுடைய அந்தப் பேச்சுகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது இசைவாணி சில நேரங்களில் கண்ணீர் உகுத்தாள்.


ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தன்னை அதற்கு பழக்கிக் கொள்ளத் தயாராகி விட்டாள். இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடுவதற்கு முயற்சி செய்து, கொஞ்சம் கொஞ்சமாக அதில் வெற்றியும் பெற்றாள்.


பிரதாபன் மற்ற சாதாரண நாட்களில் எல்லாம் ஒரு முகம் காட்டினான். ஆனால் கச்சேரி நாட்களில் வேறொருவனாக மாறி அவளை எப்படி எல்லாம் மனதைக் காயப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் செய்தான்.


நாட்கள் இவ்வாறு கடந்து கொண்டிருந்தன. இசைவாணியின் வயிற்றில் தேஜூ வளர ஆரம்பித்து மூன்று மாதங்கள் முடிந்து நான்காவது மாதம் ஆரம்பித்து விட்டது. ஆனால் இன்னும் அவளுக்கு மசக்கை தான் நின்றபாடில்லை.


அவ்வப்போது வாந்தி, மயக்கம் என்று இருந்து கொண்டு தான் இருந்தது. அவளுடைய அழகு முன்பை விட இன்னும் கூடி இருந்தது.


கருவுற்ற பெண்களுக்கே உரிய முகப் பொலிவும் மகிழ்ச்சிக் களையும் இசைவாணிக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருந்தன.


அன்று காலை நேரத்தில், தேஜூவுக்கு படுக்கையில் இருந்து எழும் போது, தலை சுற்றல் அதிகம் இருந்தது.


முதல் நாள் இரவு தூங்கும் முன்பு, சாப்பிட்டது எல்லாமே வாமிட் செய்தது அப்போது தான் நினைவு வந்தது அவளுக்கு.


‘வயித்தில எதுவும் இல்லாம கண்ணு இருட்டிகிட்டு வருது போல’


மனதிற்குள் நினைத்தவாறு சிறிது நேரம் அப்படியே படுத்திருந்து விட்டு மீண்டும் எழச் சென்றாள். ஆனால் சட்டென்று மயக்கத்தில் கீழே விழப் போனவள், சுதாரித்துக் கொண்டு அப்படியே மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.


எப்போதும் அவள் எழுந்த அரைமணி நேரத்திற்குப் பிறகு தான் பிரதாபன் எழுவது வழக்கம். அன்றும் அவன் அந்த நேரத்தில் நல்ல தூக்கத்தில் இருந்தான்.


இசைவாணியும் அசதியில் அப்படியே உறங்கி விட்டாள். அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்கள் கடந்த பிறகு தான் மெல்ல கண் விழித்துப் பார்த்தான் பிரதாபன்.


படுக்கையில் எழுந்து அமர்ந்தவன், இசைவாணி இன்னும் படுத்திருந்ததைக் கவனித்தான்.


‘என்ன இவ.. இன்னும் தூங்கி இருக்காளே? எப்பவும் இந்நேரம் ரூம்லயே இருக்க மாட்டாளே! என்னாச்சு இவளுக்கு இன்னைக்கு?’


என்ன இருந்தாலும், அவளுடைய வயிற்றில் தன் குழந்தை இருக்கிற அந்தக் கரிசனமும் பாசமும் அவனுக்குள் முன்னே வந்து, பதட்டமுறச் செய்தது அவனை.


மணியைப் பார்த்தான். ஏழரையைக் காட்டியது அது.


‘ஆறரைக்கே எழுந்து கீழே போயிடுவாளே! அச்சச்சோ!’


“இசை.. இசை..” தட்டி எழுப்பினான் அவளை.


இன்னும் இரண்டு முறை தட்டிய பிறகு, இலேசாகப் புரண்டு படுத்து கண்களைத் திறந்தாள் மெல்ல. இன்னமுமே மயக்கம் வருவது போல் தான் இருந்தது அவளுக்கு.


“என்னாச்சு இசை? உடம்புக்கு முடியலையா? எதுக்கு இன்னும் படுத்துருக்கே?”


“ம..மயக்..மயக்கமா வருது”


அவளால் சரியாக பேசக்கூட முடியவில்லை. சத்தமே வெளியே வராது மெதுவாக முனகினாள்.


உடனே வேகமாக ஓடிச் சென்று தன் அம்மாவை அழைத்தான்.


“அம்மா.. அம்மா!”


“ஏண்டா இப்படி எந்திரிச்சவுடனே அம்மா அம்மான்னு ஏலம் விட்றே? அம்மாவுக்கு என்ன இப்ப?” கேட்டார் மனோகரி.


பிரதாபன் அடுத்து பேசுவதற்குள் மீண்டும் அவரே கேட்டார்.


“இசை எங்கேடா, இன்னும் ஆளக் காணோம்? இந்நேரம் வரைக்கும் வராம இருக்க மாட்டாளே? இன்னுமா தூங்குறா?”


“அது தாம்மா சொல்ல வந்தேன். இன்னும் படுத்துருக்காம்மா அவ. என்னன்னு எழுப்பி கேட்டதுக்கு அவளால பதில் சொல்லக் கூட முடியலேம்மா. மயக்கத்தில இருக்கிற மாதிரி தெரியுது. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கும்மா! வந்து என்னன்னு பாருங்கம்மா கொஞ்சம்”


“ஏன்.. நேத்து ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி எதுவும் வாந்தி எடுத்தாளா?”


உடனே ஒரு கணம் முழித்தான் பிரதாபன்.


“அ.. அப்படித் தாம்மா தோணுது! சரியா க..கவனிக்கலே நான்”


அவனை முறைத்தவாறு மகனின் அறையை நோக்கி நடந்தார் மனோகரி.


படுக்கையில் சோர்ந்து விழுந்து கிடந்த மருமகளைப் பரிதாபமாகப் பார்த்தார்.


“அச்சோ பாவம்! இப்படி துவண்டு போயி கிடக்குறாளே! என்னமோ நாலு மாசம் ஆயிடுச்சு! இன்னும் மசக்கை பாடா படுத்துதே இந்தப் பொண்ணுக்கு”


குரலில் அன்பும் அத்துடன் வருத்தமும் கலக்க கூறினார்.


“இசை.. ஏம்மா என்னடா ஆகுது உனக்கு?”


கண்களைத் திறக்க இயலாமல் திறந்தாள் இசைவாணி.


“நைட் சாப்பிட்டது எல்லாம் வெளியே எடுத்தியாம்மா?”


பதில் கூறாமல் தலையை மட்டும் ‘ஆம்’ என்பது போல் மெல்ல அசைத்தாள் இசைவாணி.


“அதுதான் மயக்கமா இருக்கு! வெறும் வயித்தோட படுத்தா வேற என்ன ஆகும்? இப்ப நீ ரெண்டு உயிரும்மா இசை! வாமிட் பண்ணிட்டா, அந்த நேரமே, கொஞ்சம் சாதம் பிசைஞ்சு தண்ணி ஊத்தி கஞ்சியாட்டம் குடிச்சிடணும். அது உனக்கு உடம்புங்கும் நல்லது. வயித்துக்கும் நல்லது. அப்புறம் திரும்ப வாந்தி வராதும்மா. சரி.. இரு கொஞ்சம் வர்றேன்”


எழுந்து வேகமாகச் சென்று, சூடான பாலில் ஹார்லிக்ஸ் கலந்து கொண்டு வந்தார்.


“இசை.. இங்கே பாரு. இப்படியே படுத்துக் கிடந்தா கூட கொஞ்சம் மயக்கமா தாம்மா இருக்கும். இந்தா.. சூடா ஹார்லிக்ஸ் கொண்டு வந்துருக்கேன். எழுந்து குடி!”


கூறியதோடு நிற்காமல் அவள் எழுவதற்கு உதவி செய்தார்.


“ஏண்டா பார்த்துட்டே மசமசன்னு நிக்குறே! வந்து பிடிச்சுக்கோ கொஞ்சம் வா!” அதட்டினார் மகனை.


இருவரும் சேர்ந்து இரு பக்கமும் பிடித்துக் கொள்ள, அவர்களின் உதவியோடு எழுந்து அமர்ந்தாள் இசைவாணி.


மாமியாரின் உதவியோடு சூடான ஹார்லிக்சை குடித்தாள். உண்மையிலேயே அந்த நேரத்தில் அந்த சூடான ஹார்லிக்ஸ் வயிற்றுக்குள் போகவும் மயக்கம் குறைந்தது போல் இருந்தது இசைவாணிக்கு.


சிரிப்புடன் அவளையே பார்த்தவாறு தன்னெதிரே அமர்ந்திருந்த தன் அத்தையைப் பார்த்து வெட்கமாகி விட்டது அவளுக்கு.


“என்னம்மா.. இப்ப எப்படி இருக்கு? தெளிவா இருக்கா கொஞ்சம்?”


“ம்ம்.. இருக்கு அத்த. சாரி அத்த!”


“எதுக்கும்மா இப்ப இந்த சாரி பூரி எல்லாம்?”


“என்னால உங்களுக்கு தேவையில்லாத சிரமம்!”


“இதென்ன.. என்னமோ மூணாம் மனுஷி மாதிரி பேசுறே? நீ என் மருமக. நீயும் எனக்கு பொண்ணு மாதிரி தான். சரிம்மா, இன்னைக்கு நீ எந்த வேலையும் பார்க்க வேணாம். எந்திரிச்சு குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு முடி. இந்த ஹார்லிக்ஸ் எவ்வளவு நேரம் தாங்கும் உனக்கும் என் பேரனுக்கும்? திரும்ப மயக்கம் வர்றதுக்கு முன்னாடி சீக்கிரம் வந்து சாப்பிடு. என்ன புரிஞ்சதா?”


“ம்ம்.. சரிங்க அத்த!”


அறிவுரை கூறி விட்டு அங்கிருந்து அகன்றார் மனோகரி.


“உனக்கு இப்ப நல்லா இருக்கா இசை?” கேட்டான் பிரதாபன்.


“ம்ம்..” தலையை மட்டும் ஆட்டினாள் இசைவாணி.


“நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா?”


‘பரவாயில்லையே! ரொம்ப அக்கறை தான்!’


மனதிற்குள் நினைத்தவாறு குளிக்கச் சென்றாள்.


அவள் குளித்து விட்டு வருவதற்குள் அடுத்த பிரச்சினையைத் தயாரித்து வைத்திருந்தான் பிரதாபன்.


அவள் குளியலறையில் இருந்து வெளியே வந்தவுடனேயே ஆரம்பித்தான்.


“ஏன் இசை.. நாளைக்கு உனக்கு கச்சேரி இருக்குல்ல? இன்னைக்கு இப்படி பேசக்கூட முடியாம மயக்கமா கிடந்தே! நீ எப்படி கச்சுரிக்குப் போயி வீணை வாசிப்பே? பேசாம வர முடியாதுன்னு சொல்லிரு”


கச்சேரியைப் பற்றி அவன் பேச ஆரம்பித்தவுடனேயே, இப்போது எதற்காக இவன் இந்த டாபிக்கை எடுத்து பேசுகிறான் என்று யோசித்துக் கொண்டிருந்த இசைவாணி, அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்.


‘எப்ப பார்த்தாலும் என் கச்சேரி மேலே தான் கண்ணு இவருக்கு! எப்படியாச்சும் அதைக் கெடுக்கணும். இந்த எண்ணத்தோட தான் அலையுறாரு மனுஷர்! ச்சே! என்ன ஒரு கேடு கெட்ட எண்ணம்!’


மனதில் நினைத்தவாறு அழுத்தமான பார்வையால் உற்றுப் பார்த்தாள் அவனை. அவனிடம் இப்போது கோபத்தைக் காட்ட அவளுக்கு மனமும் இல்லை! உடலில் பலமும் இல்லை!


“நாளைக்குத் தானே கச்சேரி! எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. நான் எப்படிப் போயி எப்படி வீணை வாசிப்பேன்ற கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம்! என்னை நான் பார்த்துக்குறேன்! புரிஞ்சுதா?”


அமைதியாக, ஆனால் உறுதியான குரலில் கூறி விட்டு அவனுடைய பதிலுக்குக் காத்திருக்காமல், இது தான் என் முடிவு என்பதை உணர்த்தி விட்டு அறையை விட்டு விருட்டென்று வெளியேறினாள்.


ஜிவுஜிவுவென கோபம் மனதிற்குள் ஏற, மனைவியை வெறித்துப் பார்த்தவாறு இருந்தான் பிரதாபன்.


‘எப்படிப் பேசிட்டுப் போறா? பணமும் புகழும் இருக்குதுன்ற அகங்காரம் இவளுக்கு!’


அது காலை நேரமாயிற்றே, அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமே, நேரம் நகர்ந்து கொண்டே இருக்கிறதே என்பதெல்லாம் மறந்து போனது அவனுக்கு.


கோபத்தில் வெகுண்டவாறு சிந்தனை செய்து கொண்டே, அப்படியே உட்கார்ந்து விட்டான்.


நாட்கள், மாதங்களாகி ஓடின அவை பாட்டுக்கு. ஏழாம் மாதம் வந்தது. வளைகாப்பு சிறப்பாக நடத்தி முடித்தனர்.


இசைவாணிக்கு, வயிறும் இப்போது நன்றாக வெளியே தெரிய ஆரம்பித்து இருந்தது. அதனால் அவளாகவே, தன் வீணைக் கச்சேரியை சிறிது நாட்கள் நிறுத்தி வைத்து விட்டு, குழந்தை பிறந்த பின்னர் தொடரலாமே என்கிற எண்ணத்துடன், தன் தந்தையைக் கேட்டாள். அவரும் அதை ஆமோதித்தார்.


“ஆமாம்மா, நானே இது பத்தி உன் கிட்ட பேசணும்னு நினைச்சேன். நீயே சொல்லிட்டே! ரொம்ப நல்லதும்மா இசை! நீ எடுத்த இந்த முடிவு தான் சரி. சபாவில கூட இது பத்தி சொல்லி வச்சுடலாம்மா. நான் மொதோ பேசிட்றேன். அப்புறம் ஒரு சம்பிரதாயத்துக்கு, உன் சார்பில நீயும் உன் முடிவைச் சொல்லிரு இசை!”


“சரிங்கப்பா, நீங்க பேசிட்டுச் சொல்லுங்க. நானும் சொல்லி வைக்கிறேன்”


இருவரும் பேசிக் கொண்டது போல், மறுநாளே பஞ்சாபகேஷன், சங்கீத சபாவின் நிர்வாகத்திடம் இந்த விஷயத்தைக் கூறினார்.


இது பொதுவான ஒன்று தானே! இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் குழந்தை பிறக்க இருக்கிறது. அதன் பிறகு உடனேயும் கச்சேரி செய்ய முடியாது என்று அவர்களும் அறிந்தது தானே! அதனால் எதுவும் கூறாமல் ஒத்துக் கொண்டனர்.


இசைவாணியும் அலைபேசி மூலம் அவர்களிடம் விஷயத்தைக் கூறினாள்.


“குழந்தைக்கு ஒரு ரெண்டு மாசம் முடிஞ்ச பிறகு எப்பவும் போல கச்சேரி வைக்கலாம் சார்!”


அடுத்து எப்போது மீண்டும் பழையபடி கச்சேரி செய்ய ஆரம்பிக்கலாம் என்பதையும் கூறி விட்டாள் இசைவாணி.


“அதனால என்னம்மா.. நல்லபடியா குழந்தை பிறக்கட்டும். அப்புறம் வாங்க! என்ன.. உங்களுக்கு இப்ப ரசிகர் கூட்டம் அதிகமா இருக்காங்களா.. அவங்க தான் உங்களைத் தேடுவாங்க. உங்க வீணை இசையைக் கேக்காம கொஞ்சம் ஏங்கிடுவாங்கன்னு நினைக்கிறேன்”


சிரித்துக் கொண்டே எதிர் திசையில் இருந்து பதில் வந்தது.


“ஆமா சார், எனக்கும் அது தான் கொஞ்சம் சங்கடமா இருக்கு! ஆனா என்ன பண்றது? வேற வழியில்லையே! புரிஞ்சுப்பாங்க சார் அவங்க. நான் வேணா ஒரு அனௌன்ஸ்மெண்ட் கொடுத்துட்றேன்”


“அது தாம்மா சரி! உங்க ரசிகர்கள் கிட்ட நீங்களே ஒரு அறிவிப்பு தந்துருங்க. நல்லதாப் போச்சு!”


மறுநாளே இசைவாணி, சபாவைச் சேர்ந்த பத்திரிகையில் ஒரு அறிவிப்பு கொடுத்தாள்.


ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து இருந்தாலும், நிறைய ரசிகர்கள் இசைவாணிக்கு குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று வாழ்த்திய வாழ்த்துக்கள் தான் குவிந்த வண்ணம் இருந்தன.


மனம் நிறைந்து விட்டது இசைவாணிக்கு. எந்த ஒரு துறையிலும் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்து, தனக்கென ரசிகர்கள் கூட்டம் சேருவது என்பது மிகப்பெரிய ஒரு விஷயம் தான்!


அதில் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு கட்டத்தில், தனக்கே தனக்கான ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் வருவது என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம்!


அந்த வாழ்த்து மழைகளை மீண்டும் மீண்டும் வாசித்து புளகாங்கிதம் அடைந்தாள் பெண்ணவள்.


ஆனால், பிரதாபனால் தான் இதையெல்லாம் கண் கொண்டு பார்க்கவே இயலாது காதில் புகை வரும் அளவுக்கு பொறாமையில் வெந்து கொண்டிருந்தான்.


எவன் ஒருவன், தன்னவளின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறானோ அவன் தான் நல்ல கணவன்.


தன் மனைவியின் திறமையை இனம் கண்டு, அதை வெளியே நான்கு பேருக்குத் தெரியும்படி வெளிக் கொணர்ந்து ஆனந்தமும் கொள்வான்.


இவள் என் மனைவி! ஒரு இசை மேதை! வீணை வாசிப்பதில் திறமை பெற்றவள் என்றெல்லாம் பெருமையாக சொல்லிக் கொள்ளும்

ஒரு கணவன் தனக்கு அமையவில்லையே என்று ஒரு சில நேரங்களில் இசை வாணிக்கு ஏக்கமாக இருந்தது பாவம்!


ஆனால் இதெல்லாம் இனி நடக்கிற காரியமா என்ன? கனவில் வேண்டுமானால் நடக்கலாம்! இசைவாணியும் சில நேரங்களில் கனவு தான் கண்டாள்.


ஆனால் இங்கோ பிரதாபன் பொறாமையால் வேறு விதமாக சிந்தித்து அதை நடைமுறையும் படுத்தி இருந்தான். அது தெரிய வரும் போது தான் இசைவாணியின் மனம் எப்படியெல்லாம் சில்லுசில்லாக உடையப் போகுதோ தெரியவில்லை!


சரியான தேதியில் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் இசைவாணி. குடும்பமே கொண்டாடியது இருவரையும்.


பிரதாபனும் மகள் வந்த பூரிப்பில் இருந்தான். குழந்தைக்குத் தேவையானதை பார்த்துப் பார்த்துச் செய்தான்.


இசைவாணி, கச்சேரிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்த அந்த நாட்கள், உண்மையிலேயே சொர்க்கம் போலத் தான் தோன்றியது அவளுக்கு.


அவ்வளவு நல்லவனாக இருந்தான் பிரதாபன். ஒருவேளை இசைவாணி, ஒரு வீணை இசை மேதையாக இல்லாமல் சாதாரண ஒரு இல்லத்தரசியாக இருந்திருந்தால், உண்மையிலேயே அவனைப் போல் ஒரு நல்ல கணவனாக யாராலும் இருக்க முடியாதோ என்று நினைக்கும் அளவுக்கு இருந்தான் பிரதாபன்.


அவன் வில்லனாக மாறுவதற்கு ஒரே காரணம் இசை வாணியின் வீணை இசை! அவளுடைய அபரிதமான திறமை! அந்த இசையில் அதில் அவளுக்குக் கிடைக்கும் புகழும் செல்வாக்கும்.


அதிலும் கூட அவளுக்கு அதில் அவ்வளவு புகழ் இல்லையென்றாலும் கூட ஒருவேளை அவன் சாதாரணமான ஒரு கணவனாக இருந்திருப்பானோ என்னவோ!


தன்னை விட தன் மனைவி உயர்ந்த ஒரு இடத்தில் இருப்பதைத் தான் அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.


ஆனால் அதற்காக இசைவாணி தனக்கு இருக்கும் திறமையை விட்டுத்தர முடியுமா? தன்னுடைய வீணை இசையை மறந்து விட முடியுமா?


அவள் ஒரு பெண் என்பதால் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்க முடியுமா என்ன?


குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தாள். இரண்டு மாதம் முடிந்தது தேஜூவுக்கு.


இசைவாணிக்கு, தன் வீணை வாசிப்பை எப்போது ஆரம்பிப்போம் என்று ஆசையாக இருந்தது. சபாவில் இருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அழைப்பு வரவே இல்லை.


கடைசியில் பொறுக்க முடியாமல் தானே கேட்டு விடலாம் என்று நினைத்து அழைத்தாள்.


எதிர்முனையில் தொடர்புக்கு வந்ததும் படபடப்புடன் பேசினாள்.


“சார், குழந்தைக்கு ரெண்டு மாசம் முழுசா முடிஞ்சு மூணாவது மாசம் கூட பாதி நாள் போயிடுச்சு. நீங்களா கச்சேரிக்கு புக் பண்ண ஃபோன் பண்ணுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா நீங்க கூப்பிடவே இல்லேன்னு நானாவே கால் பண்ணேன். ஏன் சார், என்னாச்சு? என் கச்சேரியே தேவையில்லேன்னு நினைச்சுட்டீங்களா?”


“அய்யோ! அப்படி எல்லாம் இல்லேம்மா. நீங்க இனிமே கச்சேரியே செய்ய மாட்டீங்க, வீணை வாசிப்பையே நிப்பாட்டிட்டீங்கன்னு இல்ல எங்களுக்கு தகவல் வந்துச்சு? எங்களுக்கு ஒரே வருத்தமா போயிடுச்சு! ஏம்மா இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க?”


இசைவாணியோ அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள். கால்களுக்கு அடியில் இருந்த பூமி நழுவுவதைப் போன்று இருந்தது அவளுக்கு.



இசைக்கும்..
















 

kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,425
Reaction score
918
Points
113
பிரதாபனே சபாவுல போய் சொல்லிட்டு வந்துட்டானோ 🤨
 

Sudha Suresh

Well-known member
Staff member
Joined
Sep 8, 2024
Messages
344
Reaction score
164
Points
63
பிரதாபனே சபாவுல போய் சொல்லிட்டு வந்துட்டானோ 🤨
மிக்க நன்றி சிஸ் 😊
 
Top Bottom