ஆலாபனை - 22 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆலாபனை - 22

New updates

LATEST

Anitha Kumar

Well-known member
Joined
Oct 2, 2024
Messages
277
Reaction score
353
Points
63
அத்தியாயம்: 22

நகங்கள் இல்லாத நிலையில் விரலைக் கடித்தபடி, கணவனின் வருகைக்காக வாசலையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மனோரஞ்சிதம்.

நேற்றோடு திருவிழா முடிந்திருந்தது.

மாலையில் சென்று கட்டியிருந்த காப்பையும் கழற்றி கோயிலில் சேர்க்க, சண்முகானந்தம் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றிருந்தனர்.

ஊரின் பல முக்கியஸ்தர்கள் திருவிழாவின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்க, வீட்டு ஆண்கள் அதனுடன் ஐக்கியமாகிக் கொள்ள, பெண்கள் கோயிலுக்குள் அளவளாவிக் கொண்டிருந்தனர்.

மனோவும் புஷ்பாவும் கடை வீதிகளை வேடிக்கைப் பார்க்கச் சென்றனர். திருவிழா முடிந்து விட்டதால் அனைத்தையும் எடுத்து வைத்து அடுத்த ஊரில் நடக்கும் விழாவிற்கு இடம் பெயர தயாராகிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது வெற்றி ஒரு கீத்துக் கொட்டகைக்குப் பின்னால் ஒளிந்து நின்று, யாருடனோ ஃபோனில் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.

"புஷ்பா... உன் சின்னண்ணே... ஒழிஞ்சி நிக்கிறாப்ல... நிக்கிற தொணிய பாத்தா ஃபோன் பேசுற மாதிரி தெரியுது... பொண்ணா இருக்குமோ?" என்று தோள் இடிக்க, புஷ்பாவும் திரும்பி தன் அண்ணனைப் பார்த்தாள்.

வெற்றியின் முகத்தில் இருந்த கம்பீரத்தையும் மீறி சின்ன வெட்கமும், சின்னக் கள்ளத் தனமும் அவன் பெண்ணோடு தான் பேசுகிறான் என்றது.

"லவாங்கியா!!" என்று நினைத்த இருவரும் அவன் முன் வந்து நின்று, அவனின் ஃபோனைப் பறித்துப் பார்க்க, அதில் ‘மை லவ்’ என்று சேமிக்கப்பட்டிருந்தது ஒரு எண். அது போதுமே, அவனைக் கேலி செய்யத் தொடங்கி விட்டனர்.

"சொல்லவோ இல்லயே அண்ணா... யாரு அது?”

“வெறும் க்ரெஷ்ஷா? இல்ல கல்யாணம் வரை வருமா..." என்க, அவர்கள் காதில் வெற்றி எதுவோ சொல்ல, இரு பெண்களும் விழி விரித்தனர்.

"நிஜமா..." என்பதுபோல் பார்க்க,

"இந்த விசயம் வீட்டுக்குத் தெரிய வரும்போது நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஆதரவா இருக்கணும். அதுக்கு லஞ்சமா என்ன கேட்டாலும் தர்றேன்..." என்க,

"எனக்கு டீல் ஓகே தான். ஆனா நான் என்னோட அண்ணிய நேர்ல பாத்து பேசணும். அப்றம் கேக்குறேன்." என்று புஷ்பா சொல்ல,

"உன் பிள்ள பிறக்குறதுக்குள்ள கூட்டீட்டு வந்து காட்டுறேன்." என்றான் வெற்றி.

"நான் அவள மாதிரி சீப் கிடையாது அத்தான். எனக்கு அந்த ரகசியத்த மட்டும் சொல்லுங்க. போதும்..." என்று மனோ, அவளை ஏன் பிடிக்கவில்லை என்றதற்காக காரணத்தைக் கேட்க,

"உன் உதவியே வேண்டாம் தாயே... நான் தனியா சமாளிச்சுப்பேன்." என்று விட்டுச் சென்றான்.

"ஐய்யோ ப்ராமிஸ்ஸா சொல்றேன் அத்தான். உங்க காதல் கள்ளக் காதலா இருந்தா கூட, அவ புருஷங்கிட்ட பேசி சம்மதம் வாங்கி சேத்து வைக்கிறேன்." என்று கேலி செய்ய, அவன் தப்பித்தால் போதும் என்று ஓடி விட்டான்.

இருவரும் சிரிக்க‍, "எப்படி தான் உன்னால இப்படி இருக்க முடியுது. வெற்றி மச்சான் கூட கல்யாணக் கனவு கண்டுட்டு... வீரா மச்சான கல்யாணம் பண்ணிக்கிட்ட... வீரா மச்சான் கூடயாவது ஒழுக்கமா வாழலாம்ல. அதையும் செய்யாம... இப்படி வெற்றி மச்சானட்ட ஒட்டி உரசி பேசி, வீரா மச்சானுக்குத் துரோகம் பண்ணிட்டே இருக்க. வெக்கமா இல்ல."

"அவளுக்கு எதுக்கு டி வெட்கம். தம்பி அண்ணன்னு ஒரே நேரத்துல ரெட்ட மாட்ட ஒத்த வண்டில பூட்டப் பாக்குறா..! ச்சீ... ***." என்றபடி ரேணுகாவும், துர்காவும் அங்கு வர, புஷ்பா அவளை முறைத்தபடி நின்றாள்.

அதில் ஒரு வித திருப்தி கொண்டவர்கள் மனோ இன்னும் அழாமல் இருப்பதைக் கண்டு, அவளின் கண்ணீரைக் கண்டுவிட எண்ணி வெற்றியையும் அவளையும் இணைத்து என்னென்னமோ பேசினர்.

‘தானும் வாழாமல் தன் கணவனையும் வாழ விடாமல் வைத்திருக்கும் மனோ ஒரு அரக்கி.' என்று வசைபாட, புஷ்பா தன் கணவனை அழைக்கச் சென்றாள்.

“பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிட்டு இருந்த வெற்றியே, இவ கிட்ட குழையறான்னா… எந்த அளவுக்கு அவன்ட்ட இவ நெருக்கம் காட்டிருப்பா”

"இவளோட இந்த மட்டமான புத்தி வீரா மச்சானுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறேன். இன்னும் இவள உத்தமின்னு நம்பிட்டு இருக்காரு. ஒரு நாள் இவளோட சாயத்த வெளுக்க வச்சி, நம்ம சித்ரா அக்காவ... நம்ம மச்சானுக்குக் கட்டி வைச்சாத்தான், மச்சான் சந்தோஷமா வாழு...." எனும் போதே அவளின் தோளைப் பிடித்து ஆவேசமாகத் தள்ளி விட்டிருந்தாள் மனோ.

புஷ்பா குடும்பத்தாருடன் திரும்பி வரும்போது, துர்கா கைப்பிள்ளையோடு கீழே விழுந்து கிடக்க, பக்கத்தில் மனோ காளியாக நின்றிருந்தாள்.

"ஏய்... பிள்ளப் பெத்த பொண்ண தள்ளி விடுறியே... நீயெல்லாம்..." என்று எகிறிக் கொண்டு வந்த செண்பகத்தை ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தாள்.

"பிள்ளைய வச்சிருக்காங்கிற ஒரே காரணத்துனால தான் அடிக்காம போறேன்... இல்லன்னா... வெட்டி பலி போட்டிடுவேன்.” என்று துர்காவிடம் சொன்னவள்,

“இன்னொரு வார்த்த என் புருஷன கண்டவ கூட சேத்து வச்சி பேசுன.... நாக்கறுத்திடுவேன்..." என்று ரேணுகாவையும் விட்டு வைக்காது,

“எங்க வாழ்க்கைக்குள்ள உங்க ஈன புத்தியத் தூக்கிட்டு வராதிங்க.” என்று செண்பகத்தை நேருக்கு நேராகப் பார்த்து சொல்லியவள், அங்கிருந்து கோபமாக நகர்ந்து சென்றாள்.‌

தன்னைப் பற்றிப் பேசும் போது பொறுத்தவளால், வீராவைப் பேசியதைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அதிலும் தன் கணவனுடன் அந்த சித்ராவின் பெயரை இணைத்துப் பேசியதை அவளால் ஏற்க கூட முடியவில்லை.

இதுவரை அவள் அவர்களோடு போட்டி போட்டது இல்லை. வைத்துக் கொள் உன் மச்சானை என்று கண்டுகொள்ளாது இருந்தவளால்‍, இன்று அப்படி இருக்க முடியவில்லை.

தன் கணவன் என்ற உரிமை அவளுக்குள் பிறந்திருந்தது. பிறக்க வைத்திருந்தான். அவனின் மீது தீராத மையலை அவளுக்குள் உண்டாகியிருந்தான்.

கணவன் மீதிருக்கும் தன் நேசத்திற்கு காதல் என்று பெயர் வைத்து உலாவுபவளுக்கு, வீராவின் மனைவி நான் என்ற கர்வமே குடிவந்திருந்தது. தன் இதயச் சுவர் முழுவதும் கணவனை வரித்து வைத்துக் கொண்டிருப்பவளால் எப்படி வீராவின் பெயரைச் சித்ராவுடன் இணைத்துக் கேட்க முடியும்.

ஆத்திரம்... ஆத்திரம்... அப்படியொரு ஆத்திரம் வந்தது...

சற்று தூரம் நடந்து சென்று விட்டு, தன் கோபம் மட்டுப்பட்டப் பின் கோயிலுக்கு வந்து சேர்ந்தாள்.

அங்கு துர்கா அழுது கொண்டிருந்தாள். செண்பகமும் தலை குனிந்து சண்முகத் தாத்தாவின் முன் நின்றுகொண்டிருந்தார்.

புஷ்பா அழைத்து வந்த குடும்பத்தாரில் காசிப் பாட்டியும் இருக்க, "எம்பேரன எதுக்கு டி கண்ட சிறுக்கி கூட சேத்து வச்சி பேசுற! அந்தத் திட்டமெல்லாம் போட்டுட்டு தான் குடும்பமா கிளம்பி வந்தீங்களாக்கும்!." என்று பேத்திகளை அதட்டி, தன் மகள்களை முறைத்தார்.

மனோ, துர்காவை முறைத்தபடி வந்து சேர்ந்தாள் அந்தக் கூட்டத்திற்கு.

அனைவரும் தன்னை ஏசுவது பொறுக்காது, பைக்கில் எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்த வீராவிடம் சென்றாள் துர்கா.

"மச்சான்... என்னை என் வீட்டுல விட்டுடுங்க... எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல..." என்றுவிட்டு, கண்ணீரோடு ஏறிக் கொள்ள, வீராவால் மறுக்க முடியவில்லை.

ஆனால் மனோ, வீராவை முறைத்தாள், அவளை உன் பைக்கில் ஏற்றாதே என்று.

அவன் எங்கே அவளைக் கண்டான். துர்காவை ஏற்றிக்கொண்டு பைக்கில் சென்றுவிட, மனோவிற்குள் அத்தனை கோபம். அனைவரும் வீட்டிற்கு செல்ல, அவள் மட்டும் கோயில் படியில் அமர்ந்து கொண்டாள்.

"என்னடி வரலயா?" என்ற காசிப்பாட்டிக்கு,

"எம்புருஷன் கூட வந்துக்கிறேன்." என்று கோபத்தோட சொல்ல, பாட்டி நமட்டுச் சிரிப்புடன்,

"அவ வரும்போது வரட்டும்." என்றுவிட்டு சென்று விட்டார்.

அவளின் ஆத்திரம் தெரியாது, "வீட்டுக்கு வரலயா மைனி..." என்று வெற்றி கேட்டு விட,

"நான் எதுக்கு வரணும். முதல்ல உங்கண்ணன வரச் சொல்லுங்க... அதுவும் பைக்ல... அவரு வந்து கூப்பிடாம நான் வரமாட்டேன். இதையும் சொல்லுங்க." என்று வெற்றியிடம் எறிந்து விழுந்தாள்.

அவன், 'இவ்ளோ நேரம் நல்லாத்தான இருந்தா...' என்று பார்த்துவிட்டு, வீராவிடம் விடயத்தைச் சொல்ல, அடுத்த ஒரு மணி நேரத்தில் அவளின் முன் வந்து நின்றான் கோபமாக.

"ரெண்டு தெரு தள்ளி இருக்குற வீட்டுக்கு, நான் வந்தாத்தே வருவேன்னு சொன்னியாக்கும். அப்பத்தா ஃபோன் போடுது... வெற்றி போடுறான். என்னடி நினைச்சிட்டு இருக்க." என்று கத்தியபடி அவன் இறங்க,

"பொண்டாட்டி நான் குத்துக் கல்லாட்டாம் இருக்கும் போது கண்டவல எதுக்கு பைக்ல ஏத்திட்டு போறீங்க?" என்று அவனை விடக் கோபமாகக் கத்த, சிலர் இவர்களைத் திரும்பி பார்த்தனர்.

"நான் உங்க பொண்டாட்டி தான... கண்ணக் காட்டுனேன் தான... என்னைக் கண்டுக்காம அவள கூட்டீட்டு கிளம்பி போறீங்க... அவளும் உரிமையா தோள்ல கையப் போட்டு உக்காருறா.. ஒன்னும் சொல்லாம போறீங்க. ஒரு வார்த்த... ஏன் என் மூஞ்சியயாவது திரும்பி பாத்தீங்களா நீங்க... அவள கூட்டுட்டு போகவா வேண்டாமானு அனுமதி கேக்க வேண்டாம்... போறேன்னு சொல்லிட்டாது போகக் கூடாது. அந்த அளவுக்கு அலட்சியமா எம்மேல...‌" என்றவளைக் கண்டிக்கும் பார்வை பார்த்தவன்,

"வந்து வண்டில ஏறு டி. வீட்டுல போய் பேசிக்கலாம்." என்று அடிக்குரலில் உறும, அவள் ஏறிக்கொண்டாள் கோபமாக.

அவனும் கோபமாகவே பைக்கை உதைக்க, அவனின் இடையில் அதுவும் சட்டையை விலக்கி விட்டு வயிற்றோடு கைக் கோர்த்து இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

"என்னடி பண்ற..."

"அவ தொட்ட தோள எனக்கு பிடிக்க பிடிக்கல." என்க,

"ரோடு டி இது. நடு ஊருக்குள்ள போய்க்கிட்டு இருக்கோங்கிற நினைப்பு இருக்கா..." என்று எடுத்து விட,

“நான் அப்படித்தான் வருவேன்…” என்று பனியனைக் கவ்விப் பிடித்து, அவன் பரந்த முதுகில் தலை சாய்த்துக்கொண்டாள். கண்கள் அவளையும் அறியாது கொட்டித் தீர்த்தது கண்ணீரை.

இருவரும் உம்மென்று முகத்தை வைத்தபடியே வீடு வர, "என்னாச்சி வீரா" என்றார் பாட்டி. அவருக்கு,

"ஒன்னுமில்ல அப்பத்தா... புஷ்பா எப்ப கிளம்புறா ம்மா..."

"ஏழுக்கு முன்னாடி கிளம்பினாத்தான் சரியா இருக்கும்னு மாப்ள சொன்னாரு ப்பா."

"சரிம்மா... எதுவும் வாங்கணும்னா கூப்பிடுங்க." என்றவன் வெளியே சென்று விட்டான்.

வளைகாப்பு வரை என்னுடன் இருக்கட்டும் என்று வளர்மதி சொன்னதால் திருவிழா முடிந்ததும் புஷ்பா குடும்பம் நடையைக் கட்டியிருந்தது.

இதோ! அவர்களை ஊரில் விட்டு விட்டு வர வெற்றியும் வீராவும் மட்டுமல்ல சண்முகானந்தமும் ஜீப்பில் சென்றிருக்கின்றனர்.

அவர்களுக்காகத் தான் வாசலையே பார்த்தபடி அமர்ந்திருக்கிறாள்.

நேரம் ஒன்பதைத் தொட்டதும், "நாளை உனக்கு காலேஜ் இல்லயா ரஞ்சிதம்?" என்று சிவகாமி கேட்க,

'இப்ப அதுவா முக்கியம்? நானே உங்க மகனக் காணாம உக்காந்திருக்கேன். இப்ப வந்திட்டு காலேஜ் கீலேஜ்ன்னு கண்டத பேசுறாங்க இந்த அத்தை.' என்று மைண்ட் வாய்ஸ் ஓட்டியபடி மாமியாரை முறைத்தாள்.

அவளின் தொடையில் நங்கென்று தடியால் தட்டிய காசிப்பாட்டி, "கேக்குறால... பதிலச் சொல்லாம முழுங்குற..." என்று அதட்ட,

"இருக்கு அத்தை."

"அப்ப சாப்டுட்டு... போய் தூங்கலாம்ல..."

"நான் அவரு கூட உக்காந்து சாப்பிடுறேன் அத்தை." என்றவள், ‘பேச வேண்டியது நிறைய இருக்கு. பேசி தீக்காம விடக் கூடாது.’ என்று சூள்கொண்டாள்.

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். வளரு, மருமகன்களுக்குச் சேத்தப் போடாம அனுப்ப மாட்டா... அதுனால நீ காத்திராம, போய் தூங்கு... வெள்ளென உறங்கி எழுந்தாத்தே வெள்ளென பஸ்ஸப் பிடிக்க முடியும்." என்று நச்சரித்து சாப்பிட வைத்து விரட்டி விட்டார் காசிப்பாட்டி.

'நான் படிக்கிறதுல என்னை விட இது ரொம்ப கறாரா இருக்கே.' என்றபடி, மாடியேற,

"இந்தா... இதத் தலைல வச்சுக்க." என்று மலர் சரத்தை நீட்டியவர்,

"இத எம்பேரனுக்குக் குடு... கருப்பட்டி பணியாரம்… அவனுக்கு அம்புட்டு பிடிக்கும்." என்று பெரியத் தூக்கில் அதை நிரப்பிக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு 'ரொம்ப முக்கியம்...' என்று முணங்கியபடியே படியேறினாள்.

முதல் இரவன்று அவள் ஏறிய படிக்கும், ஒரு வாரம் கழித்து இப்போது ஏறுவதற்கும் அநேக வித்தியாசங்கள்.

அன்று மனம் முழுவதும் அவளிலேயே உழன்று கொண்டிருந்தது. ஆனால் இன்று, அவள் கணவன் மட்டுமே இருந்தான்.

பொத்தென்று தூக்கை மேஜையில் வைத்தவள், கை விரல்கள் தாளம் போட, முன்னும் பின்னும் அசைந்தபடி, கோபத்துடன் அமர்ந்திருந்தாள்.

"இன்னைக்கி இவ்ளோ நடந்த பிறகும் வளர் பெரிம்மா வீட்டுக்குப் போய், விருந்தாடிட்டு இருக்கான்... நான் அவ்ளோ தானா அவனுக்கு. என்னோட மரியாதை அவளுக்கு முக்கியமில்லையா!." என்று கண்ணீர் சுரந்தபடி, ஃபோனை எடுத்துக் கணவனுக்கு அழைத்தாள்.

முதல் முறை எடுக்கப் படவில்லை. இவள் விடாமல் அழுத்த,‌ "வந்திட்டு இருக்கு டி... வையி." என்று ரத்தின சுருக்கமாக பற்களைக் கடித்தபடி பேசிவிட்டு வைத்தான். இவளுக்குத்தான் கடுப்பாக இருந்தது.

"பின்னாடி ஏதோ குழந்தை சத்தம் கேட்டதே. அப்ப இன்னும் அவெ வளர் பெரிம்மா வீட்டுல இருந்து கிளம்பல... பொய் சொல்றான்." என்று சரியாக கணித்தவளுக்கு ஆத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. கண்டபடி திட்டிக்கொண்டே படுத்தவளின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஓடியது.

அந்த தேவிகள் யாரையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. மொத்தமும் வஞ்சகம் பிடித்தக் கூட்டம். அவர்கள் குடும்பத்தையும் பிடிக்கவில்லை. துர்கா வளைகாப்பிற்கு அவளின் தாயையும் தந்தையையும் விமலா மதித்து அழைக்கவில்லை. அதைப் பெரிது படுத்தித் தகராறு செய்ய மனமில்லாது, சிவகாமியின் முகத்திற்காக, அமைதியாகி விட்டாள்.

ஆனால் திருவிழாவின் போது செண்பகமும் விமலாவும் எதுவோ சொல்ல, நாயகி கண் கலங்கியதையும், சோலையப்பன், 'சுதானமா நடந்துக்க பாப்பா... உன் வாழ்க்க உங்கைல. மாப்ள கூட சேந்து சந்தோஷமா வாழு.' என்றுவிட்டு சென்றார்.

அவளும் வீராவும் இன்னும் வாழ்க்கையைத் தொடங்கவில்லை என்பது அவளின் தாய் தந்தையிடம் கூறியிருப்பது புரிந்து போனது.

அந்த நச்சு மனம் கொண்டவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும், என்று நினைத்தவளுக்கு எப்படிச் சொல்வது அவர்களும் அவள் கணவனின் உறவுகள் என்று. விலகினாலும் ஒரேயடியாக வெட்டி விட முடியாதே அதை.

ஆனால் வெட்ட வேண்டும் என்று பிடிவாதமாக அமர்ந்திருந்தாள்‌.

அவளையும் அறியாது விழிகள் உறக்கத்திற்கு இறைஞ்ச... கணவனைக் காணாது மூட மாட்டேன் என்று விரித்து வைத்திருந்தாள்.‌

பன்னிரண்டு மணி போல் வீடு வந்திருந்தான் வீரா‌. அத்தனை நேரம் வளர்மதி வீட்டில் தான் கழிந்தது பொழுது.

கீழே பாட்டி தாத்தாவுடன் பேசிவிட்டு, தன் அறைக்கு வந்தவன், இருள் பூசிய அறைக்கு வெளிச்சம் கொடுக்க, கட்டிலில் பேய் போல் அமர்ந்திருந்தவளைக் கண்டு ஒரு நொடி திகைத்தான். பின்,

"நீ என்ன டி தூங்காம குத்துக்கல்லாட்டம் உக்காந்திருக்க." என்றபடி உடை மாற்ற,

"நான் உங்க மேல கோபமா இருக்கேன்." என்று அறிவித்தாள், இரு கரத்தையும் கட்டிக்கொண்டு எழுந்து நின்றபடி.

"என்னடி விரைச்சிட்டு நிக்கிற. நான் தான் டி நீ பண்ணி வச்ச கூத்துக்குக் கோபமா நிக்கணும். ஊருக்குள்ள கொள்ளப்பயெ பாத்திருப்பான், நீ வஞ்சத.... என்னாகுறது எம்மரியாத..." என்று, பிறர் முன்னால் திட்டியதில், அவனும் அடங்காத கோபத்துடன் சிலிர்த்து நிற்க,

"அவள தூக்கி பைக்ல வச்சிட்டு போனப்ப மட்டும் மரியாதையா பேசுமா." என்றவளை ஏற இறங்க பார்த்தவன்,

"என்னடி புதுசு புதுசாலாம் பேசுற... நானா அவ கைப் பிடிச்சி இழுத்து வண்டி உக்கார வச்சேன். கண்ணுல தண்ணி விட்டுட்டு, கைல முப்பது நாள் முடியாத, பச்ச மண்ண வச்சிட்டு ஏறுனவள இறங்குன்னு எப்படி டி சொல்ல முடியும்."

"சொல்லிருக்கணும்... இனி சொல்லவும் செய்யணும். நாந்தான் உங்க பொண்டாட்டி… இனி உங்க பைக்ல என்னைத்தவிர வேற யாரையும் ஏத்தக் கூடாது. என் பர்மிஷன் இல்லாம யாரையும் கூட்டீட்டு போகக் கூடாது‌. மீறி போனீங்க..." என்று விரல் நீட்டி அவனை மிரட்ட,

"என்ன டி பண்ணுவ..."

"என்ன வேணும்னாலும் பண்ண எனக்கு உரிமை இருக்கு. தாலி கட்டிருக்கீங்க."

"அதுக்குன்னு.... எனிய அதிகாரம் பண்ணுவியா... ம்... பண்ணுவியா?" என்ற நாக்கை மடித்துக் கொண்டு அவனும் மிரட்ட,

"பண்ணா தப்பில்ல... சட்டைய பிடிச்சி கேக்கலன்னு சந்தோஷப்படுங்க." என்றவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான்.

எப்பொழுதும் பயந்து பம்மிக் கொண்டு சொல்லும் சுண்டெலி இன்று படமெடுத்து ஆடும் பாம்பாக சீறி நின்றால் பார்க்கத்தானே செய்வான்…

இரு‌ கரத்தையும் கட்டிக்கொண்டு, நுனி மூக்கு சிவக்க, அதில் இருந்த மூக்குத்தியும் ஏறி இறங்குவதைக் கண்டவனுக்கு, கோபம் மறைந்து ரசனை கூடியது.

“கேளு… சட்டைய பிடிச்சு கூட கேளு…” என்று அவளின் கரம் பற்றி தன் மார்பில் வைக்க, அவனின் பனியனைக் கொத்தாகப் பற்றியவள், உதடு துடிக்க சொல்ல முடியாத ஒருவித தவிப்பில் உஷ்ணக் காற்றால் கணவனைப் பொசுக்கினாள்.

ஆசை மேலெழும்ப… “என்னைக்கும் இல்லாம உனக்கெதுக்கு இந்தப் பொறாம… நீ தான் அவளுக எது கேட்டாலும் விட்டுக் குடுத்திட்டு ஓடுற ஆளாச்சே…” அவளை நெருங்கி வந்தான். அவளோ பின்னால் செல்வதற்குப் பதிலாக அவனையே அடிக்கண்களால் முறைத்தபடி நின்று,

“உங்கள குடுக்க மாட்டேன்… என் புருஷன நிழல்ல கூட அவள்களுக்கு இடம் தர மாட்டேன்.”

“ஓ… அவ்ளோ பிடிக்குமா உன் புருஷன…”

“ஆமா… ரொம்ப ரொம்ப பிடிக்கும்… எனக்கு உங்கள மட்டும் தான் பிடிக்கும். நான் உங்கள காதலிக்கிறேன்… இப்ப என்ன அதுக்கு…” என்றவளைச் சுவரில் சாய்த்து நிறுத்தியவன், அவள் மேல் தன் பாரத்தை இறக்க, நெஞ்சடைத்தது அவளுக்கு.

"தள்ளிப் போங்க..." என்று தள்ள, மலை அசையவில்லை.

"நா.... நான் உங்க மேல கோபமா இருக்கேன்.”

“நான் வேணும்னா சமாதானம் செய்றேன்.” என்றவனுக்கு பெண்ணவளின் அதரங்கள் மலராகிப் போக, அங்க தேனெடுக்கும் பணி செவ்வனே நடந்தது.


ஆலாபனை தொடரும்...
 
Top Bottom