ஆலாபனை - 14 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆலாபனை - 14

New updates

LATEST

Anitha Kumar

Well-known member
Joined
Oct 2, 2024
Messages
277
Reaction score
353
Points
63
அத்தியாயம்: 14

திருமணம் முடிந்து, மறுவீடு, விருந்து போன்ற சடங்குகள் முடிந்ததும், வெள்ளம் வடிந்து சென்ற பின் காணப்படும் ஆலங்கோலமான ஆற்றைப் போல் உறவினர்களற்று காணப்பட்டது வீடு.

அந்த வீட்டுப் பெண்ணரசிகள் இருவரும் கோபத்தில் இருந்ததால் வளர்மதி மட்டும் சம்பந்தி வீட்டிற்கு வந்து சென்றார்.

புஷ்பா‍, சந்தோஷ், வெற்றி என்று மூவர் இருந்தபோது மனோவிற்கு எதுவும் தோன்றவில்லை.

ஆனால் இருவரும் கிளம்பிச் சென்ற பின், வீடே வெறிச்சோடிக் கிடந்தது மனோவிற்கு.

காலையில் கோலமிட்டுத் தன் பணியைத் தொடங்குபவள், தாத்தாவுடன் சேர்த்து பத்திரிக்கை வாசித்துவிட்டு, காசி பாட்டியுடன் சேர்ந்து ஆடு மாடுகளுக்குத் தீவனம் வைத்துவிட்டு, அத்தையைக் கொஞ்சிக் கொண்டே சமையலறைக்குள் அனைத்தையும் முடித்துவிட்டு, மாலையில் பூபதியுடன் சேர்ந்து அன்றைய கணக்கு வழக்குகளைப் பார்த்துவிட்டு, தோழிகளுடன் ஃபோனில் மணிக்கணக்கில் அரட்டை அடித்துவிட்டு, கோழிக்குஞ்சுகளைக் கணக்கெடுத்துவிட்டு….

இப்படியாக நேரத்தை ஓட்டினாலும் சிறு வெறுமை அவளிடம் இருந்தது.

எப்பொழுதும் தேனீ போல் சுற்றிக் கொண்டே இருப்பவளுக்கு, அந்த மூவரும் விட்டுச் சென்ற இடைவெளி வெறுமையைத் தந்திருந்தது. மனோவின் அந்த வெறுமையை நிரப்ப, பாவம் வீராவிற்கு நேரமில்லை.

திருமணமான மறுநாளே, "வீரா... நம்ம லோடு வண்டியெல்லாத்தையும் நிறுத்தி வச்சிருங்காணுங்க. விடியும் முன்ன காயி உரத்தநாடு போய்ச் சேரணும். இல்லன்னா லோடுக்குக் கூலி தரமாட்டானுங்க. காயும் வேஸ்டாகிடும்." என்று வீராவின் நண்பர்கள் வந்து சொல்ல, இரவோடு இரவாகச் சென்றவன் தான். எப்பொழுது வீடு வருகிறான் எப்பொழுது செல்கிறான் என்று தெரியாது.

கண்களை மூடி உறங்க ஆரம்பிக்கும்போது பக்கத்தில் இல்லாத கணவன், நடு இரவில் விழிக்கும்போது பக்கத்தில் படுத்திருப்பது, அவளின் பயத்திற்கு தூபம் தான் போடும்.

“எதுக்கு டி பயந்து சாகுற? நான் தான். உம்பக்கத்துல வந்து படுக்க வேற எவனுக்காச்சும் தைரியம் வருமா!!” என்று பேய் போல் விழிப்பவளின் தோளைத் தொட்டு படுக்க வைப்பான். முதல் வேளையாக அவனின் கரத்தைத் தள்ளிவிட்ட பின் தான் உறங்கவே செய்வாள்.

ஊருக்குள் தன்‌ கணவன் தலைமையில் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது என்ற செய்தி, வீராவைக் கண்டாலே பூசாண்டியைப் போல் ஓடி ஒழிய வைத்தது.

ஆனால் அப்படியே விடவில்லை அவளின் மாமியார்.

அன்று, மதிய உணவிற்காக வீடு வந்திருந்தனர் ஆண்கள் மூவரும். மற்ற நாட்களில் ஊருக்குள் நடந்த களேபரத்தால் உணவு அவர்கள் இருக்கும் இடம் தேடி கொடுத்து விடப்பட்டது. வெற்றி தான் கொண்டு செல்வான். இன்று அவனும் இல்லாததால் சிவகாமி வருத்தம் கொள்வார் என்று பூபதியும் வீராவும் வீடு வந்துவிட்டனர்.

"வெற்றி சென்னைல இறங்கிட்டானா சிவாமி?" என்ற கேள்வியுடன் உணவு மேஜையில் ஆஜராகினார் பூபதி.

"ம்... விடியக்காலைல இறங்கிட்டதா சொன்னாங்க மாமா… வேலைக்கே கிளம்பி போய்டாங்களாம்." என்று வேகமாக பதில் சொல்லி, மனோ தான் உணவைப் பரிமாறினாள்.

"நீ அவனுக்கு ஃபோன் பண்ணிக் கேட்டியா? இல்ல அவன் உனக்கு ஃபோன் பண்ணானா?" என்றான் வீரா ஒரு மாதிரிக் குரலில்.

அதில் அரண்டு போனவள், கிண்ணத்தில் இருந்த குழம்பைச் சிதறவிட,

“நீ போய் அவனுக்கு முட்ட ஊத்து.” என்று பணித்துவிட்டு,

"லேன்ட் லயனுக்குப் போட்டு சொன்னான் ப்பா." என்றார் சிவகாமி இடத்தைச் சுத்தம் செய்தபடி.

"இன்னைக்கி ஏதோ கலெக்டரு வர்றாத சொன்னானுங்களே. என்ன ஆச்சி பஞ்சாயத்துல? அந்த நாசமாப் போனவனுங்க அடங்குனானுங்களா?" என்றார் காசிப்பாட்டி.

பூபதிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்து, இப்பொழுது அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் மாணக்கம், அந்த ஊரில் உள்ள கண்மாய் நிலத்தை அபகரித்து, டோல்கேட் அமைத்து வசூல் வேட்டையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

வசூலிக்கப்படும் அதீத கட்டணம் தொடர்பாக, மாணிக்கத்திற்கும் வீராவிற்கும் இடையே பல ஆண்டுகளாக தகராறு உள்ளது.

பூபதி பதவியில் அமர்ந்ததும் மாணிக்கம் செய்த ஊழலுக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

போதாதற்கு அழகர் கோயிலில் மது பாட்டிலுடன் சாமி கும்பிட வந்த பெண்களைக் கேலி கிண்டல் செய்து, வீராவிடம் அடி வாங்கி எழவே முடியாமல் மருத்துவமனையில் இருப்பது அவரின்‌ மகன் அஜய் பிரகாஷ் தான். அது மாணிக்கத்தின் ஆத்திரத்திற்கு உரம் போட, கொடுக்கும் குடைச்சல்களை அதிகப்படுத்தினார்.

டோல்கேட்டைக் கடந்து செல்லும் வண்டிகள் அனைத்தையும் மடக்கி வம்பு செய்கின்றார்.

"எங்க ஊர்ல கேட்டப் போட்டு, எங்களையே தடுத்து நிறுத்துற அளவுக்கு பெரியாளாகிட்டியோ." என்று கேட்டு, டோல்கேட் சூரையாடப்பட்டது வீராவால். பதிலுக்கு எம்எல்ஏவின் ஆள்கள் ஒன்று செய்ய, அடிதடி நடந்து கொண்டிருந்தது.

ஒரு வாரமாக நடக்கும் அந்தப் பிரச்சனையை இன்று தான் மாவட்ட ஆட்சியர் இரு தரப்பினரையும் அழைத்து பேசி உள்ளார். அந்தக் கூட்டத்தை முடித்து விட்டுத்தான் வந்திருக்கின்றனர் மூவரும்.

"பேசி முடிச்சி விட்டிருக்காப்ல... இனி உள்ளூர் வண்டி கேட் கடந்து போக காசு கேக்க மாட்டோம்னு எழுதி வாங்குருக்கு." என்றவர் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தார்.

"ரெண்டு பக்கமும் தப்பு நடந்திருக்குங்கிறதுனால நிறைய விசயங்களப் பேச முடியாம பேச்சி." என்று பூபதி மகனை முறைத்தார்.

"நீ ஏன் டா உடனே அடிதடின்னு இறங்குற? பொறுமையா இருக்கணும் வீரா." என்று சிவகாமி கண்டிக்க,

"என்னங்கடா இது... புருஷனும் பொண்டாட்டியுமா சேந்து எம்பேரன பந்தாடுறீங்க. எம்பேரன் கை வச்சா அதுல பல அர்த்தம் இருக்கும். ஒன்னும் இல்லாததுக்கெல்லாம் எம்பேரன் கை நீட்டிட மாட்டான்." என்று ஆதரவாக வர,‌

"அப்படி சொல்லு அப்பத்தா... இங்க யாருக்கும் அது புரியுறதே இல்ல. நான் ஏதோ வேல வெட்டி இல்லாம சும்மா ஊருக்குள் சுத்துற நல்லவிங்கப் பிடிச்சிழுத்து அடிச்சி, ரவுடித் தனம் பண்ற வெத்து ஆளுன்னு நினைப்பு பலருக்கு.” என்றவன்.

“அடிச்சது மட்டும் தான் கண்ணுக்குத் தெரியுது. அடிச்சதுக்கான காரணம் என்னென்னு தெரியாம நமக்கு சண்டியர் பட்டம் கட்டி விட்டு பயப்படுறாங்க." என்றவன் சமையலறையில் மும்முரமாக தோசைக் கல்லில் ஆம்லேட் போட்டுக் கொண்டிருந்த மனோவைப் பார்த்தபடியே சொன்னான்.

இந்தப் பேச்சு அவளுக்கானது போலும்.

"டோல்கேட் முழுக்க கேமரால வச்சிருக்கான் வீரா. நீ பண்ண எல்லாத்தையும் ரெக்காட் பண்ணிருப்பான். போலிஸ் கேஸ்ன்னு போனா என்னாகும்!"

"என்னாகும்... அவனுங்க குட்டுல உடைஞ்சி போய்டும்." என்றவன், லோட்கேட்டில் இருந்து எடுத்து வந்த கணக்கு வழக்குகள் அடங்கிய ஹார்டிஸ்க்கைக் காட்டினான்.

"வெற்றிகிட்ட குடுத்து,‌ இதுல என்னென்ன இருக்குன்னு பாத்திட்டேன். அவனுங்க பண்ண ப்ராடு வேலைக்கு ஆதாரம். இது ஒன்னு போதும் அந்தாள பதவிய விட்டு ஓட விட.” என்று சற்று வில்லங்கமாகச் சொல்ல,

"போதும் வீரா. இனி மேல அடி தடின்னு போகாத. உங்கப்பாவ மாதிரி பொறுமையா இருக்க கத்துக்க. ஏற்கனவே மகன் எழுந்து நடக்க முடியாம பண்ணிட்டன்னு உம்மேல கோபமா இருப்பான். அதுல பதவி போற ஆபத்தும் சேந்தா இன்னும் வெறியாகுவான்.” என்று தாத்தா சண்முகம் சொல்ல,

“ஆகட்டும். அதுக்காகவெல்லாம் பம்மிட்டு இருக்க முடியாது. நாய்க்கு மட்டுமில்ல மனுஷனுக்கு வெறி பிடிச்சி அடச்சி வைச்சி, அதுக்கேத்த வைத்தியம் பண்ணணும் தாத்தா…” என்று எகுற,

“நீ ஒன்னு பண்ண அவன் ஒன்னு பண்ணன்னு போய்க்கிட்டே இருந்தா எது தான் முடிவு… கேஸ் போட்டிருக்கோம். விசாரினைக்கு போகும் போது இத கோர்ட்ல குடுப்போம். எது பண்றதா இருந்தாலும் சட்டபடி செய்வோம். வீணா அடிதடின்னு ஊர் கலவரத்த தூண்டாத.” என்று பூபதியும் காட்டமாகச் சொல்ல, கோபமாக எழுந்து செல்ல முயன்றவனை, பாட்டி தான் பிடித்து வைத்தார்.

"அப்பாரு சொல்றதும் சரி தான வீரா. கல்யாணமாகிடுச்சி இனி பொண்டாட்டி பிள்ளன்னு குடும்பத்து மேலயும் கண்ணு வைச்சி… காலாகாலத்துல வீட்ட நிறைக்கிற வழிப்பாரு. இந்தக் கிழவி அதுங்கள தூக்கிக் கொஞ்சத்தே ஏங்கிப் போய் கிடக்கேன்." என்று பேரனின் தலைவருடிச் சொல்ல, சட்டென எழுந்த கோபம் மொத்தமும் வடிந்து,

"எங்க? அதுக்குத்தே உம்பேத்தி கோப்பரேட்டே பண்ண மாட்டேங்கிறாளே!" என்று முணுமுணுத்தவன், எதுவும் சொல்லாது உணவில் கவனமாக இருந்தான்.

"ஏய் ரஞ்சிதம் இன்னுமா நீ முட்ட ஊத்திட்டு இருக்க. உன்னிய ஆம்லேட் தே போடச் சொன்னோம். அடகாக்கச் சொல்லல." என்று குரல் கொடுக்க,

"முட்டைய கல்லுலா ஊத்துறதுக்குப் பதிலா இதோட வெங்கலத் தொண்டைல ஊத்திருக்கலாம். சட்டுன்னு வேகுற அளவுக்கு சூடாத்தான் வச்சிருக்கு அது தொண்டைய." என்று இவளும் முணுமுணுத்துக் கொண்டே வந்து வீராவின் தட்டில் வைக்க வர, அவன் எதோ எடுக்க எத்தனித்து கையை இடையில் விட, தட்டில் விழவேண்டியது அவனின் புறங்கையில் விழுந்துவிட்டது.

"கிறுக்கச்சி... கண்ண எங்க கொண்டு போய் வச்சிருக்க." என்று பாட்டி திட்டி, பேரனின் கையை ஊதி விட்டார்.

அவனும் சூடு தாங்காது நிமிர்ந்து அவளை முறைக்க, சிவகாமியின் முந்தாணைக்குள் ஒளிந்து கொண்டாள்.

அவளின் கரம்பற்றி முன்னே இழுத்தவர், “வீரா… கல்யாணமான நாள்ல இருந்து நீங்க ரெண்டு பேரும் எங்கயும் வெளியவே போகல. இன்னைக்காது கூட்டீட்டு போகலாம்ல.” என்க,

‘ஏன்த்த… ஏன்… நான் கேட்டேனா… உங்க புள்ள கூட ஊர் சுத்த எனக்கு ஆசைன்னு நான் கேட்டேனா…’ என்று அவள் மனத்திற்குள் கறுவ,

“ஆமாண்டா வீரா… புஷ்பாவும் வெற்றியும் கிளம்புன பின்னாடி இவ மூஞ்சே சுருங்கிடுச்சி… எங்கையாது கோயிலு குளமா பாத்து கூட்டீட்டு போ.” என்று பாட்டியும் சொல்ல,

‘கோயிலு… குளமாக… எதுக்கு குளத்துல முக்கி சாகடிக்கவா… நல்ல இடமாச் சொல்லுது பாரு… பஞ்சாங்கம்… பார்க்கு, மாலு, தியேட்டர விட்டுட்டு குளத்துல முங்கி எழனுமாம்.’ என்று மைண்ட் வாய்ஸ் ஓட்ட,

‘இப்பெல்லாம் எந்தக் குளத்துலயும் தண்ணி இல்லை. அதுனால நம்பி போகலாம்.’ என்று மனது சம்மதம் சொன்னது.

ஆனாலும்… வீராவின் கையில் இருந்த சிறு சிறு சிராப்பு…’அடிச்சவனுக்கே இந்தக் காயம்னா அடி வாங்குனவனுக்கு என்னென்ன இருக்கும்… இப்படிப்பட்ட கிராதகன் கூட எப்படி போறது…’ என்று யோசித்தாள்.

“ரெடியா இருக்கச் சொல்லுங்கம்மா… சாயங்காலம் மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போக.” என்றுவிடும் எழ, அவன் பின்னோடே துண்டுடன் வந்து நின்றாள் பெண்.

மனைவியாக நடந்து கொள்கிறாளாம்.

கைக் கழுவிவிட்டுத் திரும்பியவன், இவனுடன் மாட்டி விட்ட தன் அத்தையை அர்ச்சனை செய்து கொண்டிருந்தவளின் முகத்தில் நீரைத் தெளித்தான்.

அவளின் மனத்தில் உள்ளதை படித்தவன் போல்,

“மீனாட்சி அம்மன் கோயில் குளத்துல தண்ணி கிடையாது. பெரிய பெரிய கேட் இருக்கு. உள்ள இறங்க விட மாட்டாங்க.” என்று சொல்ல, மெல்லிய சிரிப்பு அவளிடம்.

“உனக்கு அப்படி குளிக்கணும்னா… நாளைக்கி சோழவந்தான் போகலாம்.” என்க, வேகமாக சரியென தலை தானாக ஆடியது.

அவளுக்கு ஊர் சுற்ற பிடிக்குமே…

அவளின் மலர்ந்த முகத்தையும், விரிந்த இதழ்களையும் ஆசையோடு பார்த்தவன், ஓரடி முன்னெடுத்து வைக்க, அவள் இரு அடிகள் பின் நகர்ந்தாள்.

மெல்லிய கோபம் எழ, அவளின் இடையில் சொருகியிருந்த புடவையின் நுனியை, ஈர விரல்களால் இடை வருடியபடி எடுத்துத் துடைத்துவிட்டுச் சென்றான்.

இவ்விடம் மற்ற பெண்களாக இருந்தால் வெட்கம் வந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கூச்சமேணும் வந்திருக்க வேண்டும்.

நம்‌ மனோவிற்கு வந்தது கோபம் தான்.

“எரும மாடு… சேலைய அழுக்காக்கிட்டு போறான் பாரு… நல்ல சேல… நான் தான் துண்ட நீட்டுறேன்ல… அதை வாங்காம… ச்ச… என்னோட இடுப்புலயும் ஈரமாக்கிட்டான்.” என்று அழுத்தி வயிற்றைத் துடைத்துவிட்டு கணவனை வாய்க்குள் அசைபோட்டபடியே சென்றாள்.

மாலை ஐந்து மணிக்கு, தலை நிறையப் பூவுடன் பட்டுப்புடவை கட்டி, கையடக்க பையில் தன் அலைபேசி, பணப்பை உள்ளிட்டவற்றை எடுத்து வைத்துக்கொண்டு, வாசனை திரவியங்களைப் பூசிக்கொண்டு, தயாராக இருந்தவளை, மனசாட்சி காரி உமிழ்ந்தது.

“அவன் கூட ஊர் சுத்த ஆசையில்லன்னு சொல்லிட்டு இப்படி வெக்கமே இல்லாம மேக்ப் போட்டுட்டு கிளம்பிருக்கியே… உன்னை யெல்லாம்…” என்று மானாவாரியாக அது கேள்வி கேட்க,

“அதுக்காக என் புருஷன் கூப்பிட்டு… போகாம இருந்தா! எப்படி? அவன் கூட ஊர் சுத்திப்பாக்க ஆசை இல்லன்னாலும். ஊர் சுத்தி பாக்க ஆசை இருக்குல. எவ்ளோ நாள் ஆச்சி. காலேஜ் டேஸ்ல வாராவாரம் டவுனுக்குள்ள போய்டுவோம். மாலு, தியேட்டருன்னு ஃப்ரெண்ட்ஸ்ஸோட ஜாலியா இருக்கும். இப்ப புருஷங்கூட போறேன். இது எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா! டெஸ்டிங்… டெஸ்டிங்…”

“அதுவும் சரித்தே. நல்லாப் போய் சுத்திப்பாத்திட்டு வந்து அவனத் தெரிஞ்சுக்க… தெரிஞ்சுக்கிட்டு அவனுக்கு பொண்டாட்டியா நடந்துக்க” என்று அது வீராவிற்கு ஆதரவாக வர,‌

“நான் பொண்டாட்டியாத்தான் நடத்துறேன். அவனுக்கு துண்டு எடுத்து குடுக்குறேன். காபி கலந்து குடுக்குறேன். வென்னீர் விராவி வைக்கிறேன். அவன் குளிக்க, கிணத்துல கஷ்டப்பட்டு தண்ணி இரச்சி வைக்கிறேன். சாப்பாடு பரிமாறுறேன். வேலைக்கு கிளம்பும் போது டாட்டா காட்டுறேன்… அதெல்லாம் நான் அவனுக்கு பொண்டாட்டியா இருக்குறதுனாலத்தான் செஞ்சிட்டு இருக்கேன். தெரியுமா?” என்று ரோசமாகச் சொல்ல, தலையில் அடித்துக் கொண்ட அது,

“இதெல்லாத்தையும் மறந்தாட்ட… அவன் பக்கத்துல வந்தா சிலை மாதிரி நிக்கிறது. பேச வந்தா காத தூரத்துக்கு ஓடுறது. குறிப்பா… தூங்கும் போது, தூக்கத்துல கூட அவன் மேல கை கால் படக்கூடாதுன்னு பாத்து பத்திரமா நடந்துக்கிறது… இதெல்லாம் பொண்டாட்டி செய்ற வேலையா? ஹீம்… உன்னைப் பார்க்கும் போது சின்ன வயசுல படிச்ச சிங்கம் கதை தான் நியாபகத்துக்கு வருது.’

“என்ன கதை?”

“ம்… காட்டுல ஒருத்தன் வேட்டையாடப் போய்… புல்லெட்டு தீந்து போக, அந்த நேரம் பாத்து சிங்கம் அவன் கண் முன்ன வர, ஓடுனா தப்பிக்க முடியாதுன்னு தெரிஞ்சிட்டு, செத்துப் போன மிருகத்த சிங்கம் சாப்பிடாதுன்னு எங்கயோ எப்பவோ கேட்டத வச்சி, மூச்சடக்க மட்டமல்லாக்க படுத்திட்டு நடிப்பானே…”

“ஹாங்… சிங்கம் கூட மோந்து பாத்திட்டு செத்திட்டான்னு விட்டுட்டு போய்டுமே… அந்தக் கதை தான்… அதுல வர்ற சிங்கம் அவுக… நான் தப்பிச்சுப் போன வேட்டைக்காரன்.”

“இல்ல… வேட்டைக்காரன் தப்பிக்கல… மூச்சப் பிடிச்சிட்டு இருக்குற அவனால ஒரு கட்டத்துக்கு மேல நடப்ப தொடர முடியாம… சிங்கத்துக்கே பலிகிடும்.”

“ஸ்கூல்ல அப்படி சொல்லித்தரலயே…”

“நான் சொல்லித்தாரேன். அவனுக்கு உம்மேல உரிமை இருக்கு. அவன் உங்கிட்ட புருஷனா நெருங்கி வர்றான். அது தெரிஞ்சும் அவன அவாய்ட் பண்ணற. அவன் மேல எந்த ஃபீலிங்கும் வந்திடக் கூடாதுன்னு கன்ட்ரோல்ல இருக்குற. ஒரு‌ நாள் உன் கண்ட்ரோல் மிஸ்ஸாகி, வீராக்கு நீ இரையாகப் போற… ரொம்ப தூரத்துல இல்ல.” என்று பயங்காட்டிச் சென்றது.

அது சொன்னது என்னவே உண்மை தான்… பெண்ணுக்கு இருக்கவேண்டிய முக்கியமான உணர்வுகளில் ஒன்று வீராவிற்கு தர மறுக்கிறாள்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு…

பயிர்ப்பு என்ற அருவருப்பும் விலகலும் வீராவின் அண்மையில் என்றும் தோன்றியதே இல்லை அவளுக்கு. அவன் தொட்டாலும், இரவில் இடையில் கரம் போட்டு உறங்கினாலும் அவனின் தீண்டல் அவளுக்கு அசூயையாக இருந்தது இல்லை.

அச்சத்தைப்பற்றி விலக்க வேண்டாம்.

அவன் கணவனாக தன்னை எதற்கு நெருங்குகிறான், அவனின் பார்வையின் தீவிரம், பேச்சுகள் எல்லாம் தெரிந்தாலும் மடமை (Naivety) கொண்ட மனம் அதை மறைத்துக் கொள்கிறது.

இதில் விடுபட்ட ஒன்றே ஒன்று… நாணம்…

அது மட்டும் மனோவிடம் வந்து விட்டால் நிச்சயம் அவள் வீராவைக் கணவனாக ஏற்றுக் கொள்வாள்…

அந்த நாணத்தைத் தர பிடித்தமும் காதலும் வேண்டும்.

எங்கே!! அந்த இரண்டும் தான் அவளுக்கு வருவேனா என்று தண்ணீர் காட்டுகிறதே…‌

மஞ்சள் வெயில் மாலையில், சுட்டெரிக்காத சூரிய ஒளியில் ஜீப்பில் பயணம் செய்கையில்,

என்னைக் கொஞ்சம் மாற்றி…

என் நெஞ்சில் உன்னை ஊற்றி…

நீ மெல்ல மெல்ல…

என்னைக் கொல்லாதே…

என்ற பாடல் வரி தான் நினைவிற்கு வந்தது மனோவிற்கு. அதில் வரும் நாயகன் நாயகியைப் போல் தான்‌ இருவரும் பேசாது அமைதியாகவே சென்று கொண்டிருந்தனர்.

அவளின் முகத்தில் சந்தோஷ ரேகை என்றால், வீராவின் முகத்தில் இறுக்கமான இனம் காணமுடியாது இளக்கம். அது கோயிலைச் சென்றடையும் வரை தான் இருந்தது. சென்ற பின்…
இறுக்கம்… இறுக்கம்… அப்படி ஓர் இறுக்கம்.

ஜீப்பை பார்க்கில் நிறுத்திவிட்டு வடக்கு கோபுர வாசலை நோக்கி நடக்க வேண்டும்.

இறங்கியதும், மனோ அவிழ்த்து விட்ட காளையாக அவனை மறந்துவிட்டு முன்னே நடக்கத் தொடங்கினாள்.

‘இது என்ன தெரியாத இடமா! கூட ஆள் வச்சிட்டே சுத்திப் பாக்க!! மாச மாசம் வந்து போற கோயிலு… எங்க மீனாட்சி அம்மன் கோயிலு… கண்ணக் கட்டி விட்டாலும். அம்மன் சந்நதிக்கு போகுற வழி எனக்குத் தெரியும்.’ என்ற மிதப்புடன் முன் நடந்தவளைப் பின் தொடர்ந்ததில் உடல் இறுகத் தொடங்கியது வீராவிற்கு.

தன்னை அலட்சியமாகக் கையாளும் மனைவியைக் கணவன் எப்படி பொறுத்துக் கொள்வான்…

பொங்கத்தான் செய்வான்…

பொங்கினான்…

ஆலாபனை தொடரும்...
 
Top Bottom