ஆகாயம் காணாத பொன் மேகமே - அத்தியாயம் 9 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆகாயம் காணாத பொன் மேகமே - அத்தியாயம் 9

New updates

LATEST

Aathirai Mohan

Member
Staff member
Joined
Dec 1, 2025
Messages
38
Reaction score
23
Points
8
அத்தியாயம் 9​

கிழக்கு கடற்கரை சாலை…

அழகான மகிழுந்து பயணம்… டிசம்பர் மாத குளிர்காற்று மென்மையாய்த் தவழ்ந்து கொண்டிருக்க, ஒருவர் கைகளை ஒருவர் விடாமல் பிடித்துக்கொண்டு பயணித்தனர் மோகனா மற்றும் வேணுகோபால்.

மேகா சொன்னதைப் போலவே, அடுத்த நாள் ஆகாஷிடம் தனது திட்டத்தை அலைபேசியில் உரைத்தாள். அதைக் கேட்ட ஆகாஷூக்கு மிகவும் சந்தோஷம். வேணுகோபாலுக்கு இதை விடப் பேரானந்தம் வேறு என்ன உள்ளது?

ஆனால், இது மோகனாவுக்கு மட்டும் தெரியாமல் இன்ப அதிர்ச்சியை அளிக்க வேண்டும் என்பது மேகாவின் ஆசை. அதே போலவே அவருக்குத் தெரியாமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டனர்.

இங்கே, ரங்கநாதனும், அகிலாவும் அது தெரியாமல் இவர்களிடம் பத்திரமாகச் செல்லுமாறு வழியனுப்பி வைத்தனர். மோகனாவும் மேகாவின் தோழிகளைத்தான் சந்திக்கப் போகிறோம் என்ற நினைப்பிலேயே கிளம்பினார்.

இரு சக்கர வாகனத்தை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, இருவரும் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டும் என்று மேகா சொன்னதால் ‘சரி’ என நின்றிருந்தார் மோகனா.

அப்போது அங்கே ஆகாஷூம், வேணுகோபாலும் வந்து நிற்க, அதிர்ந்து போய் மேகாவைப் பார்த்தார். அவளோ இவரைப் பார்த்து கண் சிமிட்டிச் சிரித்தாள்.

“மேகா… என்ன இது? உன்னோட கெட் டூ கெதர் என்னாச்சு?” என்றார்.

அவரது கையைப் பிடித்தவள், “ம்ம்… கெட் டூ கெதர் எனக்கில்ல… உங்களுக்கு…” என்றபடி அவரை காரின் பின்னிருக்கையில் வேணுகோபாலோடு அமர வைத்தாள்.

முன்னே ஆகாஷ் வண்டியை செலுத்த, மேகா அருகே அமர்ந்துகொண்டாள். இனிதான அவர்களது பயணம் சென்னையிலிருந்து பாண்டிச்சேரியை நோக்கி ஆரம்பித்திருந்தது.

இருவரும் மிக அன்யோன்யமாக அமர்ந்தபடி ஒருவர் தோள் மேல் ஒருவர் சாய்ந்துகொண்டு வந்ததைப் பார்த்து மகிழ்ந்தாள் மேகா. மோகனா இதுவரை இதுபோல் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருந்து பார்த்ததில்லை அவள்.

“க்கும்… க்க்கும்… அத்தை நானும், ஆகாஷூம் இந்த கார்ல தான் இருக்கோம். யங்க் கப்பிள்ஸ் ரெண்டு பேரும் கொஞ்சம் பார்த்து லவ் பண்ணுங்க.” என்று கேலி செய்தாள்.

“இதெல்லாம் இத்தனை வருஷ ஏக்கம் மேகா. வேணுவோட இந்த மாதிரி ஒரு நாளாவது கை கோர்த்து எங்கயாவது தூரமா போகணும்னு ரொம்ப ஆசை. முப்பது வருஷம் கழிச்சு இப்போதான் அது நடக்குது.” என்றார் மோகனா.

அதைக் கேட்டு மேகாவும், ஆகாஷூம் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

“மோகனா, ரொம்ப பயப்படுவா. நான் ரொம்ப தைரியமா எங்க வேணும்னாலும் போகலாம் வான்னு சொல்வேன். ஆனா, அவ வரவே மாட்டா.” என்றார் வேணுகோபால்.

“அங்கிள்… நீங்க ரொம்ப ஜாலி டைப்போ?” என்று மேகா கேட்டதும் அவர் சிரிக்க,

“அப்பா ரொம்ப ரொம்ப ஜாலி டைப் மேகா. எதையும் ரொம்ப சீரியஸ்ஸா எடுத்துக்க மாட்டார். நானே எதுக்காவது ரொம்ப ஃபீல் பண்ணாலும், ‘விடு கண்ணா’ன்னு சொல்வார். அப்படியும் நான் சமாதானமாகலையா, உடனே என்னை பைக்ல லாங்க் ட்ரைவ் கூட்டிட்டுப் போவார். எனக்குப் பிடிச்சதையெல்லாம் வாங்கிக் கொடுப்பார். எனக்கு அந்த ஃபீல் எப்படி காணாமப் போகும்ன்னே தெரியாது.” என்று அவரின் குணத்தைப் பற்றி பட்டியலிட்டுக்கொண்டிருந்தான் ஆகாஷ்.

“ஸோ நைஸ் ஆஃப் யூ அங்கிள்… அதனால தான் அத்தை உங்கள லவ் பண்ணிருக்காங்க. சரி, அத்தை உங்க லவ் ஸ்டோரியப் பத்தி சொல்லிக் கேட்டிருக்கேன். ஆனா, உங்க வெர்ஷன்ல கேட்கணும்னு ஆசையா இருக்கு. ப்ளீஸ்… சொல்லுங்களேன்…” என்றதும், சிரித்தார் மோகனா.

“ம்ம்… ம்ம்… அப்பா தானே, சூப்பரா சொல்வாரு. கேட்கற நமக்கே பொறாமை வந்துடும். அந்த அளவுக்கு அவரோட லவ் இருக்கும்.” என்றான் ஆகாஷ்.

“ஆகாஷ் ரொம்ப ஹைப் பண்றாரு அங்கிள். பாண்டிச்சேரி போற வரைக்கும் கேட்கறதுக்கு இண்ட்ரஸ்ட்டா இருக்கும். சொல்லுங்க… சொல்லுங்க…” என்று மேகா உற்சாகமாகக் கேட்க,

அதே உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொண்டது.


******​

வருடம் 1995. அன்று மோகனாவின் முதல் கல்லூரி தேர்வுகள் ஆரம்பமாகியிருந்த சமயம். அவர் எழுதவிருக்கும் பரீட்சையின் அறைக்குச் செல்லும் பாதைக்கு முன்னர் ஒரு பேனா கீழே கிடந்ததைக் கண்டார்.

இன்று தேர்வுகள் ஆரம்பமாகியிருந்ததால், கண்டிப்பாக யாரேனும் தொலைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவர், கண்டிப்பாக இந்த வழியாகத்தான் சென்றிருப்பார்கள் எனவும் யூகித்தார்.

யோசித்துக்கொண்டே சென்றவர், அங்கே இருந்த பெரிய அறையின் உள்ளே சென்று அங்கிருந்த பேராசிரியரிடம் அதைக் கொடுத்து விவரத்தைச் சொன்னார்.

அதைக் கேட்டவர், “ஏம்பா… இந்தப் பேனா யாரோடது?” என்றதும்,

அனைவரும் அதைப் பார்த்து தங்களுடையதா? என ஆராய்ந்துகொண்டிருக்க, தனது சட்டைப் பையில் இருந்த பேனாவைக் காணாது சட்டென்று எழுந்து நின்றார் வேணுகோபால்.

“ஹூம்ம்… வேணு, என்னப்பா? நீயே இப்படி பண்ற? கவனமா இருக்க வேண்டாமா?” என்றபடி அவரிடம் பேனாவை நீட்டினார்.

“ரொம்ப தேங்க்ஸ் சார்.” என்றவரிடம்,

“தேங்க்ஸ் எனக்கு சொல்லாதப்பா. இந்தப் பொண்ணுக்கு சொல்லு. இந்தப் பொண்ணுதான் கீழ கிடந்ததுன்னு எடுத்துட்டு வந்து கொடுத்தா.” என்றார்.

அதைக் கேட்டு மோகனாவைப் பார்த்த வேணு, “தேங்க்ஸ்…” என்றார்.

ஏற்கனவே வேணுவைப் பார்த்து பிடித்திருந்ததால், அவரைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தார் மோகனா. அந்த ஒரு நிமிடம் ஏனோ, வேணுவுக்கும் மோகனாவைப் பிடித்துவிட்டது.

இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தேர்வு எழுதச் சென்றார். தேர்வு முடிந்து வந்ததும் மோகனா எங்காவது கண்களில் தென்படுவாரா? எனப் பார்த்துக்கொண்டே வந்தார் வேணு.

அவரது எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல், அவரைப் பார்த்தபடியே எதிரே வந்தார் மோகனா. அவரைக் கண்டதும், தன்னையறியாமல் சிரித்துவிட்டார் வேணுகோபால்.

அதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்றிருந்தது மோகனாவிற்கு. தனது எண்ணத்தை மறைத்து, அவரிடம் பேசினார்.

“நீங்க வேணுகோபால், காலேஜ் சேர்மேன் தானே?” என்றார்.

“ஆமா… உங்ககிட்ட தேங்க்ஸ் சொல்லத்தான் தேடினேன். நீங்களே எதிர்ல வந்து நிக்கறீங்க. நல்லவேளையா பேனாவ எடுத்துட்டு வந்து கொடுத்தீங்க. ஏன்னா, என்கிட்ட எக்ஸ்ட்ரா பேனா எதுவுமே இல்ல. அதுவும் இல்லாம இது என்னோட அப்பா எனக்குப் பரிசா கொடுத்தது. விலை அதிகமும் கூட. செண்டிமெண்டா எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தக் காஸ்ட்லி பேனாவ வேற யார் பார்த்திருந்தாலும், எனக்குக் கண்டிப்பா கிடைச்சிருக்காது. நீங்கன்னால வந்து கொடுத்திருக்கீங்க. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்…” என்றார் மீண்டும்.

என்னதான் கல்லூரிக்கே தலைவனாக இருந்தாலும், தான் முதலாம் ஆண்டு மாணவி எனத் தெரிந்தும், தன்னை மரியாதையாகப் பேசியதில் மோகனாவிற்கு இன்னும் அவர் மேல் மரியாதை கூடியது.

“இன்னைக்கு எல்லாருக்குமே எக்ஸாம்னு தெரியும். கண்டிப்பா யாராவது தெரியாம மிஸ் பண்ணிருப்பாங்கன்னு தான் கொண்டு வந்து கொடுத்தேன்.” என்றார் பணிவாக.

அந்தப் பணிவான பேச்சும், தன்னை ஈர்க்கும் விழிப் பார்வையும், வேணுகோபாலை ஏதோ செய்தது.

“சரி… பார்க்கலாம்…” என்று அவரிடமிருந்து கண்ணியமாக விடைபெற்றார்.

வேணுவின் ஒவ்வொரு செயலும், மோகனாவை ஈர்த்துக்கொண்டே தான் இருந்தது. இப்படியாக நாட்கள் கடக்க, அவ்வப்போது இருவரும் சந்தித்துக் கொள்வது வாடிக்கையானது.

பற்றாத குறைக்கு மோகனாவின் தோழிகள் வேணுவை வைத்து கேலி செய்ய, அதை மறுத்தாலும் மோகனாவின் முகமே காட்டிக்கொடுத்தது.

கல்லூரியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்துகொண்டு பரிசைத் தட்டிச் செல்வார் வேணுகோபால். அதிலும் பாட்டு, ஓவியம் இவையிரண்டிலும் அவரை மிஞ்ச ஆளே இல்லை.

அவ்வப்போது அவருடன் நட்புடன் பேசி வந்தாலும், காதலைச் சொல்ல மனம் வரவில்லை. ஏனென்றால், அவரது வயதும் ஒரு காரணம். பதின் வயதில் மலரும் காதல் எந்த அளவுக்கு சரி? என அவரால் முடிவெடுக்க முடியவில்லை.

அதை அவர் உணரும் நாளும் வந்தது. அன்று கல்லூரியின் அனைத்து மூன்றாமாண்டு மாணவர்களுக்கும், விடைபெறும் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

மூன்றாமாண்டு மாணவர்கள் அனைவரும் அதில் கலந்து கொள்ள, கல்லூரியின் தலைவரான வேணுகோபாலுக்கு பரிசும், பாராட்டும் அளிக்கப்பட்டது. அவரைப் பிரிந்து செல்ல மனமில்லாமல் பலர் அழுதுகொண்டிருக்க, மோகனாவும் அதில் ஒருத்தியாக இருந்தார்.

“டேய்… ஏண்டா எல்லாரும் அழறீங்க? நான் இங்க சென்னைல தாண்டா இருப்பேன். வேற எங்க போகப் போறேன்? எப்பாவது ஒரு நாள் எல்லாரும் கண்டிப்பா சந்திக்கலாம்.” என்று இன்னும் என்னென்னவோ சொல்லி அனைவரையும் சமாளித்துக் கொண்டிருந்தார்.

இவர்களெல்லாம் போதாத குறைக்கு மோகனாவையும் சமாதானப்படுத்த வேண்டும் என்று, அவருக்கு மற்றொரு கவலையும் இருந்தது.

அழுது, அழுது கண்கள் முழுவதும் குளம் போல் தேங்கியிருக்க, அவர்கள் எப்பொழுதும் சந்திக்கும் ஆலமரத்தடியில் மோகனாவைப் பார்த்து அதிர்ந்து போனார் வேணுகோபால்.

“ஏய்… என்ன மோகனா? கண்ணு இவ்ளோ சிவந்துபோய் இருக்கு. எதுக்கு நீ இப்படி அழற? அவனுங்க தான் பாசத்தால என்னை மூழ்கடிக்கறாங்கன்னு பார்த்தா, நீ கண்ணீராலயே எனக்கு அபிஷேகம் பண்ணுவ போலிருக்கே!!” என்று அவர் கேலி செய்ய,

அவரது தோளில் செல்லமாக அடி ஒன்றை வைத்தார் மோகனா.

“என்னோட கஷ்டம் உங்களுக்குப் புரியாது வேணு. நான் நீங்க இல்லாம எப்படி இருக்கப் போறேன்னு தெரியல. எனக்கு நீங்க எந்த அளவுக்கு சப்போர்ட்டா இருந்தீங்க தெரியுமா? ஆனா, இனிமேல் அதெல்லாம் நடக்கப்போறதே இல்ல.” என்றார்.

“அதெல்லாம் இல்லம்மா… இப்போ தான் போன் நம்பர் இருக்கே. எந்த ஒரு விஷயமா இருந்தாலும் பேச முடியும். சுத்தமா எந்த ஒரு தொடர்புமே இல்லாமப் போகப் போறது இல்ல.” என்று சாதாரணமாகவே பேசிக்கொண்டிருந்தார் வேணு.

“அய்யோ! நான் சொல்றத நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டிங்கறீங்க. என்னால நீங்க இல்லாம இருக்க முடியாதுன்னு சொல்றதோட அர்த்தம் உங்களுக்குப் புரியலையா? இல்ல, தெரியாத மாதிரி நடிக்கறீங்களா?” என்றார் மோகனா.

அதைக் கேட்ட வேணுவுக்கு உள்ளூர சந்தோஷம் தாளவில்லை. மோகனா தன்னை விரும்புகிறாள் என்பதை அவருடன் பழகிய போதே கண்டுபிடித்துவிட்டார் வேணு.

ஆனாலும், அதை அவர் வாயால் சொல்லிக் கேட்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். இன்று அது கிட்டத்தட்ட நடந்துவிட, அத்தனை சந்தோஷமும் மொத்தமாய்க் கிடைத்ததாய் உணர்ந்தார்.

இருப்பினும், உடனே அவரிடம் எதையும் காட்டிக்கொள்ள விரும்பாதவர், “மோகனா இந்த வயசுல பார்க்கறது, கேட்கறது எல்லாமே பிடிச்ச மாதிரி தான் இருக்கும். உடனே முடிவெடுத்து உன்னோட படிப்பை விட்டுடாத. எதுவா இருந்தாலும், நிதானமா யோசிச்சு முடிவெடுக்கணும். கொஞ்ச வருஷம் போகட்டும். எதுவா இருந்தாலும், அப்பறம் பார்க்கலாம்.” என்று அறிவுரை வழங்க அமைதியானார் மோகனா.

“இங்க பாரு… நான் இப்போ சொல்றது உனக்கு கசப்பா தெரியும். ஆனா, நீ நிதானமா யோசிச்சா எல்லாமே புரியும். நீ புரிஞ்சுக்குவன்னு நினைக்கிறேன்.” என்றவர், அமைதியாக அவ்விடம் விட்டுச் சென்றார்.

மோகனாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த நிமிடம் அழுகை அழுகையாய் வந்தது. இரண்டு நாட்கள் அமைதியாய் யோசித்த போதுதான் அவருக்கு வேணு சொன்ன வார்த்தைகள் சரி என்று தோன்றியது.

இருந்தாலும், மனம் அவரைப் பார்க்கவும், பழகவும் ஏங்கியது. கல்லூரி விடுமுறை முடிந்து மிகவும் சோகமாகவே இரண்டாம் ஆண்டு காலடி எடுத்து வைத்தார் மோகனா.

அனைத்து மாணவர்களும் உற்சாகமாக வகுப்பறைக்கு வர, மோகனாவோ சோகத்துடனேயே இருந்தார். தோழிகள் வழக்கம் போல கேலி செய்ய, விருப்பமில்லாமல் அங்கிருந்து வந்துவிட்டார்.

அவரும், வேணுவும் எப்பொழுதும் சந்திக்கும் அந்த ஆலமரத்தடிக்கு வந்தார். அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

அவர்கள் பேசிய, பழகிய நாட்களை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆலமரக் காற்றில் இலைகளெல்லாம் உதிர்ந்து விழுந்துகொண்டிருக்க, தூரத்தில் ஒருவர் மோகனாவை நோக்கி வந்துகொண்டிருப்பது தெரிந்தது.

கண்களை நன்றாகத் தேய்த்துத் தேய்த்துப் பார்த்தார் மோகனா. அவருடைய கண்களை அவரால் நம்பவே முடியவில்லை.

மிக அருகே வர, வர அவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தார் வேணுகோபால்…



தொடரும்....



வேணு - மோகனா


Epr9NKfUcAEWROQ.jpg
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,381
Reaction score
3,229
Points
113
வேணு, மோகனாவின் காலேஜ் சேர்மனா?

ஓ... பார்த்த முதல் பிடித்தம்.

பிறகு எப்படி பிரிந்தார்கள்? அதன் பிறகு என்ன ஆனது?
 

Aathirai Mohan

Member
Staff member
Joined
Dec 1, 2025
Messages
38
Reaction score
23
Points
8
வேணு, மோகனாவின் காலேஜ் சேர்மனா?

ஓ... பார்த்த முதல் பிடித்தம்.

பிறகு எப்படி பிரிந்தார்கள்? அதன் பிறகு என்ன ஆனது?
athu inimel thaan kathaila varum sis :giggle: 🙏
 
Top Bottom