- Joined
- Dec 1, 2025
- Messages
- 38
- Reaction score
- 23
- Points
- 8
அத்தியாயம் 20
சென்னையின் பிரதான இடமான திருவான்மியூரின் அந்த அழகான மண்டப முகப்பில்,
மணமக்கள்
சஞ்சய்
Weds
மேகா
என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு, அதோடு அவர்களின் படங்களையும் இணைத்திருந்த அந்த நெகிழ் பலகையைப் பார்த்தபடியே அனைவரும் மண்டபத்திற்குள்ளே சென்று கொண்டிருந்தனர்.
மணமகள் அறையில் மேகாவை அனைவரும் தயார் செய்து கொண்டிருக்க, மற்றொருபுறம் மணமகன் சஞ்சய் மற்றொரு அறையில் தயாராகிக் கொண்டிருக்க, இரவு வரவேற்பு நிகழ்ச்சி இனிதே ஆரம்பிக்க இருந்தது.
மாப்பிள்ளையின் அப்பா நினைத்ததைப் போலவே விசா பிரச்சினையைத் தாண்டி அந்த வாரத்திலேயே மாப்பிள்ளை சஞ்சய் வந்து சேர்ந்தான்.
அந்த விஷயத்தை செவியில் கேட்ட பிறகுதான், ரங்கநாதனுக்கு மூச்சே வந்தது. ஒரு வழியாக மேகாவின் திருமணம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடக்கும் என்ற நம்பிக்கை மனதில் பிறந்தது அவருக்கு.
அனைத்து உறவினர்களின், நண்பர்களின் ஆரவாரத்தோடு அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. மேடையில் மேகாவுக்குத் துணையாக சௌம்யா அவளோடு நின்றுகொண்டு பரிசுப் பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டிருந்தாள்.
அப்போதுதான் அங்கே வந்த வேணுகோபாலையும், ஆகாஷ் மற்றும் விக்னேஷையும் வரவேற்று உபசரித்துக்கொண்டிருந்தார் மோகனா.
இதையெல்லாம் ஒரு கண் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்த ரங்கநாதன், அப்போதே ஒரு மாதிரியாகிவிட்டார்.
“நாம சொல்ல சொல்லக் கேட்காம இவங்கள எதுக்கு மோகனா கூப்பிட்டிருக்கா? நமக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் இதைப் பண்றா?” என்று அவரது அம்மா வைதேகியிடம் புலம்பினார்.
அவரோ, “உனக்குப் பிடிக்கலன்னா அதுக்காக அவங்கள அப்படியே விட முடியாது இல்லையா? இதுக்கப்பறம் அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கைல ஒண்ணு சேரப் போறாங்க. அப்போ கல்யாணத்துக்கு வந்ததுல என்ன தப்பு?” என்றார்.
“எல்லாரும் ஒரு முடிவுல தான் இருக்கீங்க? மேகாவோட கல்யாணத்துல தேவையில்லாம எந்தப் பிரச்சினையும் வேண்டாம்னு இருக்கேன். எல்லாம் முடியட்டும் அப்பறம் கவனிச்சுக்கறேன்.” என்று கோபமாய் அங்கிருந்து நகர்ந்தார்.
மகன் இந்தப் பிடிவாதத்தை எப்பொழுதுதான் மாற்றிக்கொள்வானோ? என்று ஏக்கத்துடன் மோகனாவையும், வேணுவையும் பார்த்தார் வைதேகி.
அவரிடமும் இவர்கள் வந்து பேசிவிட்டு மேடையில் உற்சாகமாய் நின்றபடி பரிசுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த மேகாவைப் பார்க்கச் சென்றனர்.
மேகா இவர்களைப் பார்த்ததும், உற்சாகமாய் கைகளை ஆட்டி சைகை காட்டினாள். அவளது சிரிப்பையும், உற்சாகத்தையும் கண்டவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது.
“விஷ் யூ ஹேப்பி மேரீட் லைஃப்…” என்று மூவரும் மேகாவையும், மாப்பிள்ளை சஞ்சயையும் வாழ்த்தினார்கள்.
மேகாவும், அவரிடம் இவர்களை அறிமுகம் செய்து வைத்தாள். அவனும் புன்னகையுடன் அவர்களைப் பார்த்து தலையாட்டினான். அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அந்த இடைவெளியில், சௌம்யா விக்னேஷை வம்பிழுக்க நினைத்தாள்.
“ஃப்ரெண்ட் மேரேஜ்னா இப்படித்தான் ஃபார்மாலிட்டிக்கு வந்து நிப்பீங்களா? அன்னைக்கே முன்னாடியே வரச் சொன்னத காதுல வாங்கல போலையே?” என்று அவன் கேட்கும் விதமாகச் சொன்னாள்.
அதைக் கேட்ட விக்னேஷோ, “எல்லாத்துக்கும் மேல ஒரு பெரிய ஃப்ரெண்ட் மேகா கூடவே சுத்துறாங்கன்னு ஞாபகம் வந்த தால தான் வரல மிஸ்.சேமியா.” என்றான் வேண்டுமென்றே.
அவன் அப்படிச் சொன்னதும் அவள் முறைத்திருக்க வேண்டும் தான். ஆனால், அவளோ பதிலுக்கு சிரித்து வைத்தாள். அதையே ஏற்றுக்கொண்டபடி மேடையை விட்டு இறங்கினான் விக்னேஷ்.
அங்கிருந்து அவன் சென்றாலும், தன் பார்வையை அவனை விட்டு விலகாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் சௌம்யா. அதே போல், விக்னேஷூம் அவளை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே தான் இருந்தான்.
அனைத்தும் இனிதே நடந்து முடிய, அவர்களை இரவு வரை உபசரித்து தான் அனுப்பினார் மோகனா. அவர்கள் கிளம்பியதும் மணமகள் அறைக்குச் சென்ற மோகனாவிடம் நேரே வந்தார் ரங்கநாதன்.
“என்ன மோகனா, வேண்டியவங்கள உபசரிச்சு அனுப்பிட்டியா?” என்றார்.
அவர் தன்னிடம் என்ன கேட்க வருகிறார்? என்பதை நன்கு அறிந்துகொண்டார் மோகனா. எந்த பதிலும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். அவரின் அமைதியைப் பார்த்த மேகா தான் பேசினாள்.
“ஏன் ப்பா? ஏன் அத்தைய அப்படிக் கேட்கறீங்க? உங்களுக்குப் பிடிக்கலன்னா அமைதியா விட்டுடுங்க. அதை விட்டுட்டு, இந்த மாதிரி கேட்காதீங்க?” என்றாள்.
“ம்ம்… இன்னும் எங்க நீ பேசலையேன்னு நினைச்சேன். இதுக்கு பிள்ளையார் சுழி போட்டதே நீ தான? உன்னைச் சொல்லணும். அதான் இங்க வரைக்கும் வந்து நிக்குது.” என்று எரிச்சலுடனே பேசினார்.
“அண்ணா… எதுக்கு இப்போ மேகாவ திட்டறீங்க? உங்க கோபம் என் மேல தான? அவளுக்கு நாளைக்கு கல்யாணம். நாளைக்கு அவளோட புகுந்த வீட்டுக்குப் போயிடுவா. அவ இப்போ சந்தோஷமா இருக்கணும். அதை விட்டுட்டு நம்ம பிரச்சினையால அவளோட மனசக் காயப்படுத்தாதீங்க.” என்றார் மோகனா.
“ரங்கா… உனக்கு வேற ஏதும் வேலை இல்லையா? போய் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட நாளைக்கு கல்யாணத்துக்கு என்ன செய்யணும்னு கேட்டு, அதைச் செய்யற வழியப் பாரு. அதை விட்டுட்டு இப்போ தேவையில்லாம எந்த சண்டையும் போடாத. போ…” என்று வைதேகி மகனை அதட்டினார்.
சரியாக அப்போதுதான் அங்கே வந்தார் அகிலா.
“ஏங்க… நீங்க எங்க போனீங்க? சம்பந்தி உங்களத் தேடிட்டிருக்கார். இங்க என்ன பண்றீங்க? வாங்க…” என்று கையோடு இழுத்துக்கொண்டு போனார்.
அப்போதுதான் அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.
“அத்தை… நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. அவர் என்ன வேணும்னாலும் சொல்லட்டும். உங்க முடிவுல நீங்க ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும். நானும், பாட்டியும் கண்டிப்பா உங்க கூட தான் இருப்போம். சரியா…” என்று அவரைப் பிடித்துக்கொண்டு சொல்ல,
அவளது பாசத்தை நினைத்து அவளை அணைத்துக்கொண்டபடி தலையாட்டினார் மோகனா.
அப்படியே நீண்ட நேரம் மோகனாவிடமும், வைதேகி மற்றும் சௌம்யாவிடம் பேசிக்கொண்டே அலைபேசியை கவனிக்கத் தவறினாள் மேகா.
படுக்கச் செல்லும் முன்பே அலைபேசியை கவனித்தவள், மாப்பிள்ளை சஞ்சய் அவளுக்கு ஏகப்பட்ட முறை அழைத்திருந்தது அப்போதுதான் தெரிந்தது.
அவள் இப்போது அதைப் பார்த்துக்கொண்டிருக்க, தூக்க கலக்கத்தில் அறைக்கு வந்த அகிலா,
“மேகா… நீ இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டிருக்க? சீக்கிரம் தூங்கு மா. காலைல சீக்கிரமே எழுந்திருக்கணும். தூங்கு…” என்று கட்டளையிட்டார்.
அதைக் கேட்டவள், அலைபேசியை அப்படியே வைத்து விட்டாள்.
அதைப் பார்த்த சௌம்யா, “என்ன மேகா? என்னாச்சு?” என்றாள்.
“அது சஞ்சய் எனக்கு நிறைய டைம் கூப்பிட்டிருக்கார். போன் சைலண்ட்ல இருந்ததுல எனக்கு அவர் கூப்பிட்டதே தெரியல சௌமி. அதைத்தான் பார்த்துட்டிருந்தேன். எதுக்கு இவ்ளோ டைம் கூப்பிட்டிருக்காருன்னே தெரியல.” என்றாள்.
“வேற என்ன, நாளைக்கு இந்நேரம் ஃபர்ஸ்ட் நைட்ல என்ன பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்றதுக்காகக் கூப்பிட்டிருப்பார்.” என்று மெல்லிய குரலில் அவளிடம் கிசுகிசுத்தாள் சௌம்யா.
அதைக் கேட்ட மேகா, “ஏய்… சௌமி… நீ என்ன வர வர இப்படிப் பேச ஆரம்பிச்சுட்ட?” என்று வெட்கத்துடன் சிரித்தாள் மெல்லிய குரலில்.
அந்தச் சத்தமும் அகிலாவின் காதில் விழுந்துவிட, “மேகா… இன்னும் என்ன பேச்சு வேண்டிக் கிடக்குது? சீக்கிரம் தூங்கு. காலைல எழுப்பும் போது எழுந்திருக்காம இரு, அப்பறம் சொல்றேன்.” என்று வசைபாட ஆரம்பிக்க,
அதைக் கேட்டு மேகாவும், சௌம்யாவும் சிரித்துக்கொண்டே உறக்கத்திற்குச் சென்றனர்.
அதிகாலை 4 மணி இருக்கும்போது அனைவரும் எழுந்து திருமண வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டனர். மேகாவையும் எழுப்பி அவளைத் தயார் செய்ய ஆரம்பித்தனர்.
அனைவரும் கிட்டத்தட்ட தயாராகிவிட, இன்னும் மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லாமல் இருந்தது போல் தோன்றியது ரங்கநாதனுக்கு.
அவர்களது அறையிலிருந்து ஒருவருமே வெளிப்படுவதாகத் தெரியவில்லை அவருக்கு. சந்தேகத்துடனே அவர்களைப் பார்க்கச் சென்றார் ரங்கநாதன்.
அங்கேயோ, மாப்பிள்ளையின் அப்பா அறைக்குள்ளேயே ஒருவித பதட்டத்தோடு சிலையாய் அமர்ந்திருந்தார். அவரது மனைவியோ அழுதுகொண்டிருந்தார்.
“இப்போ நாம எங்கன்னு போய் சஞ்சயத் தேடுவோம்? இந்தப் பைய எங்க போய்த் தொலைஞ்சான்னே தெரியலையே? கடவுளே!!” என்று புலம்பிக்கொண்டிருந்தார்.
“எந்தப் பேச்சும் பேசாம அவனாவே வந்தான், எல்லாத்துக்கும் கட்டுப்பட்டு நடந்துக்கிட்டதப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா, இப்படி திடீர்னு காணாமப் போய் நம்ம மானத்த வாங்குவான்னு நான் நினைக்கவே இல்ல…” என்று தழுதழுத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தார் மாப்பிள்ளையின் அப்பா...
அப்போது ரங்கநாதன் வேகமாகக் கதவைத் தட்டினார். ஏற்கனவே பதட்டத்தோடு இருந்தவர்கள், வேறு வழி தெரியாது கதவைத் திறந்தனர்.
அங்கே கண்கள் சிவக்க கோபத்தோடு ரங்கநாதன் அவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றார். இவர்களால் அவரை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.
அதே போல் இந்தக் களேபரத்தில் உறவினர்கள் அனைவரும் கூடி விட்டனர்.
“என்னாச்சு சம்பந்தி…? நீங்க பேசினதெல்லாம் உண்மையா…? நீங்க பதறிப்போய் பேசிட்டிருந்த எல்லாத்தையும் நான் கேட்டேன். உங்க மகன் எங்க…?” என்றார்.
“அவனக் காணலன்னு தான் தேடிட்டிருக்கோம். எங்க போனான்னே தெரியலங்க…” என்றார் அவர்.
“அவரக் காணலன்னா, என்ன அர்த்தம்? அப்போ என் பொண்ணோட கல்யாணம் என்னாகும்? இதுல தான் என்னோட கௌரவமே இருக்குன்னு அன்னைக்கே சொன்னேனே? இப்போ வந்து இப்படி சொல்றீங்க?” என்றார் மேலும் கோபத்துடன்.
“நாங்களும் அவனக் காணோம்ன்ற அதிர்ச்சில தான் இருக்கோம். எங்களுக்கும் எதுவும் தெரியாது…” என்று அழுதே விட்டார் மாப்பிள்ளையின் அப்பா.
“இப்படி சொன்னா எப்படி? வாங்க போலீஸ்ல போய் கம்ப்ளைண்ட் கொடுத்து தேடலாம். இன்னைக்கு எப்படியாவது இந்தக் கல்யாணம் நடக்கணும்…” என்று விடாப்பிடியாகப் பேசினார் ரங்கநாதன்.
“போலீஸ்ல போய் கம்ப்ளைண்ட் பண்ணித் தேடறதுக்கு அவன் ஒன்னும் சின்னக் குழந்தை இல்ல. அவனுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லாமத்தான் எங்கயோ போய்ட்டான்.” என்றார் மாப்பிள்ளையின் அம்மா.
“என்னப்பா இது, பையனக் கேட்டு தான நீ முதல்ல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கணும்? அதை விட்டுட்டு கரெக்ட்டா முகூர்த்த நேரம் நெருங்கும் போது காணாமப் போனா, யாருக்கா இருந்தாலும் சந்தேகம் வருமா இல்லையா?” என்று கூட்டத்தில் பெரியவர்கள் மாறி மாறி பேசிக்கொண்டனர்.
அவரோ எதுவும் பேச முடியாமல் திணறியபடி நின்றார்.
“பிடிக்கலன்னா அதை முதல்லயே சொல்லியிருக்கணும். அதை விட்டுட்டு, ஊரைக் கூட்டி நிச்சயம் பண்ணி, பத்திரிக்கை அடிச்சு கல்யாணம் வரைக்கும் வந்து, நேத்து ரிஷப்ஷன்ல கூட ஈஈஈ…ன்னு பல்லக் காட்டி இழிச்சு போட்டோக்கு போஸெல்லாம் கொடுத்துட்டு, இப்போ வந்து பிடிக்கலன்னு ஓடிப் போறதுக்கு உங்க மகனுக்கென்ன பைத்தியமா?” என்றார் ரங்கநாதன்.
ஏதோ ஒரு பிரச்சினை என்று நினைத்து வந்த அகிலாவும் அவர்கள் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியில் நின்றார்.
“சரிப்பா ரங்கா, நடந்த து நடந்துடுச்சு… முடிஞ்ச அளவு மாப்பிள்ளையத் தேடலாம். இன்னும் முகூர்த்த த்துக்கு நேரம் இருக்கு. அப்படித் தேடியும் கிடைக்கலன்னா அதுக்கப்பறம் எந்த முடிவா இருந்தாலும் எடுக்கலாம். வா…” என்று உறவினர்கள் அவரைச் சமாதானம் செய்து அழைத்து வந்தனர்.
விஷயத்தைக் கேள்விப்பட்டு மேகாவும் அதிர்ச்சியில் உறைந்து போய் தான் அமர்ந்திருந்தாள். சௌம்யா அவளைத் தேற்றும் முயற்சியில் இருந்தாள்.
“நேத்து அவர் உனக்கு ரொம்ப நேரம் போன் பண்ணும் போது எடுத்து ப்பேசியிருந்தா, அவர் இன்னைக்குப் போனதுக்கான காரணம் தெரிஞ்சிருக்கும். இத்தனை தூரம் வந்த துக்கு அப்பறம் இப்படிப் போறதுக்கு அப்படி என்ன காரணம் இருக்கப்போகுது?” என்றாள் சௌம்யா.
“அதான்… மாப்பிள்ளையோட அம்மா சொன்னாங்களாமே, அவருக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு… வேற என்ன ரீஸன் இருக்கப் போகுது?” என்று விரக்தியில் பேசினாள் மேகா.
அப்போது அவளது அலைபேசி மணி அடிப்பதைப் பார்த்து எடுத்தவளுக்கு மேலும் அதிர்ச்சியானது. சரியாக, மாப்பிள்ளை சஞ்சய் தான் அவளுக்கு அழைத்துக்கொண்டிருந்தான்.
இங்கே இத்தனை களேபரத்துக்குக் காரணமாகிவிட்டு இவன் எதற்காக தனக்கு அழைக்கிறான் என்பதைப் புரியாமல் பார்த்தபடி அவனது அழைப்பை ஏற்றாள் மேகா…
தொடரும்....