அறியாத பந்தம் 22 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அறியாத பந்தம் 22

New updates

LATEST

Lk novels

Member
Joined
Jul 23, 2026
Messages
60
Reaction score
63
Points
18
அத்தியாயம் 22

தூங்கிப்போன பார்கவியை, காலை ஒன்பது மணி அளவில் மலர்விழி வந்து தட்டி எழுப்பினாள்.

மலர்விழி ஏற்கனவே அழகாகச் சேலை அணிந்து, விசேஷத்திற்கு அருமையாகக் கிளம்பித் தயாராகத்தான் இருந்தாள்.

"ஏய் பாரு... எந்திரிடி! இந்தா காபியைக் குடிச்சிட்டு வேகமா குளிச்சிட்டு கிளம்பு. நம்ம ஊர்ல இருந்து சொந்தக்காரங்க எல்லாம் வந்துட்டு இருக்காங்க.
பத்து மணிக்கெல்லாம் கேக் கட்டிங் பண்ணனும்!" என்று அவசரப்படுத்தினாள்.

பார்கவி மெதுவாகக் கண்களைத் திறந்து எழுந்தமர்ந்து, "அக்கா... அதான் நான் வந்துட்டேன்ல... உன்னையும் பாத்துட்டேன், குட்டிப் பையனையும் பாத்துட்டேன். நான் இப்படியே ரூம்க்குள்ளேயே இருந்துட்டு எல்லாரும் போனதுக்கு அப்புறம் போயிடுறேன்... இல்லன்னா என்னை இப்பவே கூட பஸ் ஏத்தி விட்டுடு, நான் கிளம்பிடுறேன்," என்றாள் தயக்கமும் பயமும் கலந்த குரலில்.

மலர்விழி உடனே அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, "என்னடி பேசுற நீ? என் பையனோட ஃபர்ஸ்ட் பர்த்டே இது! விசேஷத்துல போட்டோஸ் எல்லாம் நிறைய எடுக்கணும்டி. போட்டோஸ் எல்லாம் எடுக்கும்போது குடும்பமா எல்லாரும் சேர்ந்து நின்னாதான் அந்தப் புகைப்படங்களுக்கு ஒரு அழகும் முழுமையும் இருக்கும். நீ இல்லாம அந்த போட்டோஸ் எல்லாம் எப்படிடி முழுமையடையும்? அப்புறம் என் பையன் வளர்ந்து பெரியவனானதும் 'என் விசேஷத்துல என் சித்தி ஏன் இல்ல, போட்டோவுல கூட ஏன் வரல'னு உன்னை கேள்வி கேட்பான் பாரு!" என்று உரிமையோடு கடிந்துகொண்டாள்.

பேசிக்கொண்டே நேராக அலமாரியைத் திறந்து, அதிலிருந்து ஒரு அழகிய சேலையை எடுத்து வந்தாள்.
"இந்தா... நீ எப்படியும் வந்துருவேன்னு எனக்குத் தெரியும். அதான் உனக்கும் எனக்கும் ஒரே மாதிரி சாரி எடுத்தேன். பிளவுஸ் கூட உன் அளவுக்கு ஏத்த மாதிரி தைச்சு வச்சுட்டேன். குளிச்சிட்டு இதைக் கட்டிக்கிட்டு கிளம்பி கீழே வா, அப்புறம் சாப்பிட்டுக்கலாம்," என்று சொல்லி சேலையை நீட்டினாள்.

"அக்கா..." என்று பார்கவி ஏதோ தயங்கிச் சொல்ல வர, மலர்விழி அதைக் காதில் வாங்காமல் தூங்கிக்கொண்டிருந்த குட்டிப் பையனைத் தூக்கிக்கொண்டு கீழே சென்றுவிட்டாள்.

பார்கவி வேறு வழியின்றி அந்த காபியைக் குடித்துவிட்டு, குளித்துத் தயாராகி, அக்கா கொடுத்த சேலையைக் கட்டிக்கொண்டு கட்டிலிலேயே அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

சற்று நேரத்தில் மீண்டும் அறைக்குள் வந்த மலர்விழி, பார்கவி இன்னும் கட்டிலிலேயே உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, "என்னடி கிளம்பி கீழே வர வேண்டியதுதானே? எதுக்கு இங்கயே உட்கார்ந்து இருக்க?" என்று கேட்டாள்.

பார்கவி தன் அக்காவை ஒரு மாதிரியான தளர்ந்த பார்வையோடு நிமிர்ந்து பார்த்து, "நான் எதுக்க்க்கா... தேவையில்லாம நான் கீழே வந்தா எதுவும் பிரச்சனை ஆகும்... யாராச்சும் ஏதாச்சும் சொல்லுவாங்க..." என்று தாழ்ந்த குரலில் தன் மனதில் பூட்டி வைத்திருந்த பயத்தைக் கொட்டினாள்.

மலர்விழி அவளது பயத்தைப் புரிந்துகொண்டவளாக, "நான் பார்த்துக்கிறேன்... நீ வா!" என்று உறுதியாகச் சொல்லி, பார்கவியின் கையைப் பிடித்துக்கொண்டு கீழே கூட்டிச் சென்றாள்.

படிகளில் இறங்கி மெதுவாக வரவேற்பறைக்கு கூட்டி வந்தாள்.

அங்கே ஊர்க்காரர்கள் யாரும் இன்னும் வந்து சேரவில்லை. அரவிந்தின் நெருங்கிய சொந்தக்காரர்கள் மட்டும் ஒன்று இரண்டு பேர் அங்கங்கே அமர்ந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கே நின்றுகொண்டிருந்த மலர்விழியின் மாமியார் சாந்திக்கு, படியில் இறங்கி வரும் பார்கவியைப் பார்த்ததும் கட்டுக்கடங்காத கோபம் பொங்கி வந்தது. அவளது முகத்தைப் பார்த்த கணத்திலேயே சாந்தியின் கண்கள் ஆத்திரத்தில் சிவந்தன. பார்கவியை மேலிருந்து கீழ் வரை ஒரு மாதிரி அருவருப்போடு பார்த்தபடி, அவளை நோக்கியே விறுவிறுவென நடந்து வந்தார்.

பார்கவியின் அருகில் வந்து நின்ற சாந்தி, அவளது முகத்தைப் பார்த்து அப்பட்டமான நக்கலோடு, "வாங்க... வாங்க மேடம்! இப்பதான் இந்த வீட்டுக்கு உங்களுக்கு வர்றதுக்கு வழி தெரிஞ்சதோ?" என்று உரத்த குரலில் ஆரம்பித்தார்.

பார்கவி தன் தலையைக் குனிந்தபடி, என்ன பேசுவதென்று தெரியாமல் குற்றவாளியைப் போல அமைதியாக நின்றாள்.

சாந்தி விடாமல் எல்லார் முன்னாடியும் கேவலமாகப் பேசத் தொடங்கினார்.

"கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட இந்த வீட்ல ஒழுங்கா இருக்கல... உடனே உன் பாட்டுக்கு பட்டினத்துக்குப் போய் படிக்க போறேன், கிழிக்க போறேன்னு ஓடிட்ட! அங்க போய் யாரையாச்சும் புதுசா புடிச்சிட்டியோ? ஆமா ஆமா... உனக்கு என்னடி சொல்லியா தரணும், ஆளை மயக்குறது எப்படின்னு? என் பையனை அப்படித்தானே மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்ட!"

பார்கவியின் உடம்பு பயத்திலும் அவமானத்திலும் நடுங்க, சாந்தியின் விஷம் தோய்ந்த பார்வை அவளது கழுத்தையும் காலையும் மேய்ந்தது.

"என் பையன் உன் கழுத்துல கட்டுன தாலியையும் காணோம்... கால்ல போட்ட மிஞ்சியையும் காணோம்! உச்சி வகுட்டுல குங்குமம் கூட வச்சுக்கல... அப்போ அங்கே வேற எவனையாவது புடிச்சு வளைச்சுட்டு வந்துட்டியாடி?" என்று அசிங்கமான வார்த்தைகளை அள்ளி வீசினார் சாந்தி.

மாமியார் சாந்தி எல்லார் முன்னாடியும் இப்படிக் கேவலமாகப் பேசியதும், பார்கவியால் தன் மன வேதனையைத் தாங்க முடியாமல் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது. கதறி அழுதபடி தன் அக்காவின் பின்னால் சுருங்கி நின்றாள்.

பார்கவி அழுது துடிப்பதைக் கண்ட மலர்விழி கோபத்தில் கொதித்துப்போய், "அத்தை! போதும் நிறுத்துங்க... என்ன பேசிட்டு இருக்கீங்க?" என்று பார்கவிக்கு ஆதரவாகக் குறுக்கே வந்து நின்றாள்.

சாந்தி சற்றும் சளைக்காமல், "உடனே உன் தங்கச்சிக்குச் சொம்பு தூக்க வந்துருவியே! நான் என்னடி இல்லாததையா சொன்னேன்? உண்மையத்தானே சொன்னேன்..." என்று மலர்விழியைப் பார்த்து எகிறினாள்.

அப்போது அங்கே வந்த அரவிந்த், நிலைமையைப் புரிந்து கொண்டு சத்தமாக அடக்கினான். "அம்மா அம்மா... போதும் நிறுத்துங்கம்மா! சின்னப் பொண்ணைப் போட்டு எல்லார் முன்னாடியும் இப்படித்தான் பேசுவீங்களா? கொஞ்சம் சும்மா இருங்க!" என்று தன் அம்மாவைக் கடிந்துகொண்டான்.

அரவிந்த் பார்கவியைப் பார்த்து, "பாரு... நீ அழாதம்மா, வா," என்று ஆறுதல் சொல்லி அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றான்.

ஆனால், பார்கவிக்கு அழுகை நிற்கவே இல்லை. அவளது மனது சுக்குநூறாக உடைந்து போயிருந்தது.

ஹாலில் நின்றுகொண்டிருந்த அந்த ஒன்று இரண்டு சொந்தக்காரர்களும் பார்கவியை பார்த்தபடி, தங்களுக்குள்ளேயே ரகசியமாகக் குசுகுசுவென அரசல் புரசலாகப் பேசத் தொடங்கினார்கள்.

சாந்தி அசிங்கப்படுத்திப் பேசியதும், பார்கவியால் அதற்கு மேல் கீழே நிற்க முடியாமல் போயிற்று. கண்கள் பெருக, தனக்குள்ளேயே விம்மியபடி மெதுவாக மாடிப்படிகளில் ஏறி மேலே சென்றாள்.

மேலே அந்த இரண்டு அறைகளுக்கும் நடுவில் இருந்த மாடி வரவேற்பறையில் போடப்பட்டிருந்த சோபாவில் போய் அமைதியாக அமர்ந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் கன்னங்களை நனைத்துக் கொண்டே இருந்தது.

அவள் பின்னாடியே ஏறி வந்த மலர்விழி, பார்கவியின் அருகில் அமர்ந்து அவளது தோளைத் தொட்டாள்.
"பாரு... அவங்க பேசுறதெல்லாம் நீ சீரியஸா எடுத்துக்காதடி! அவங்க ஏதோ புத்தி கெட்டத்தனமா பேசிட்டாங்க. நீ எப்படிப்பட்டவன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்டி..." என்று ஆறுதல் கூறிய மலர்விழி, திடீரெனக் குரலைத் தாழ்த்தி, சந்தேகமும் பதற்றமும் நிறைந்த பார்வைகளுடன் அவளது கழுத்தைப் பார்த்து, "ஆமா பாரு... நிஜமாவே நீ தாலியைக் கழட்டி வச்சுட்டியாடி? கழுத்துல தாலியைக் காணோமே?" என்று அதிர்ச்சியோடு கேட்டாள்.

அக்காவின் அந்த கேள்வியைக் கேட்டதும் பார்கவி எதுவும் பேசாமல், தன் சேலைத் தலைப்பிற்குள் மறைத்து அணிந்திருந்த தாலிக் கொடியை மெதுவாக வெளியே எடுத்துப் போட்டுக் காட்டினாள். தான் தாலியைக் கழற்றவில்லை, ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்தேன் என்பதை ஊர்ஜிதப்படுத்தினாள்.

அதைப் பார்த்த பிறகே மலர்விழிக்கு மூச்சே வந்தது. அமைதியாக எழுந்து தன் அறைக்குச் சென்றாள்.

அங்கிருந்து சில நகைப் பெட்டிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்தவள், அந்த நகைகளை எடுத்து பார்கவியின் கழுத்தில் மாட்டிவிட்டாள்.

"எதுக்கு அக்கா இதெல்லாம் தேவையில்லாம?" என்று பார்கவி கேட்டாள்.

"இதுக்கும் அவங்க எதையாவது சொல்லுவாங்க பாரு, இதையும் போட்டுக்கோ. அப்புறம் இந்த குங்குமத்தையும் நெத்தியில வச்சுக்கோ," என்றாள் மலர்விழி.

பார்கவியும் மறுப்பு சொல்லாமல் அந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டாள்.

"அக்கா... நான் இங்கேயே இருக்கேனே. நான் கீழே வரல... நான் கீழே வந்தா உனக்குத்தான் தேவையில்லாத மன உளைச்சல் வரும்," என்றாள் பார்கவி.

"ஏய்... வாடி பாரு! கேக் வெட்டுறதுதானே? கேக் வெட்டி முடிச்ச உடனே நீ போட்டோ எடுத்துட்டு மேலே வந்துரு, வேற எதுவும் பண்ண வேண்டாம்," என்று மலர்விழி கூப்பிடவும், பார்கவியும் சரி என்று ஒப்புக்கொண்டு அவளுடன் கீழே வந்தாள்.

அக்கா-தங்கச்சி இருவரும் கீழே வந்து நின்ற பிறகுதான், சொந்தக்காரர்களும் ஊர்க்காரர்களும் ஒவ்வொன்றாக வந்து சேரத் தொடங்கினார்கள்.

வந்த சொந்தக்காரர்கள் எல்லாரும் பார்கவியைப் பார்த்துவிட்டு ஒரு மாதிரியாக முகம் சுளித்தார்கள். ஏன், பெற்ற அம்மா அப்பாகூட அவளை ஏதோ அருவருப்பான பொருளைப் பார்ப்பது போலத்தான் பார்த்தார்கள்.

பார்கவி எதையுமே கவனிக்காதவள் போல, தன் துயரத்தை மறைத்துக்கொண்டு, உதட்டைக் கடித்து, பல்லை நெரித்துக்கொண்டு அப்படியே கூட்டத்தின் ஓரத்தில் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள்.

அவளது மனதுக்குள் அவமானமும் வேதனையும் புயலாகச் சுழன்றடித்தாலும், அக்காவின் சந்தோஷம் பாழாகிவிடக் கூடாது என்பதற்காகத் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொண்டு அமைதி காத்தாள்.

அவள் அப்படித் தனித்து நின்றிருக்க, வீட்டின் ஹால் முழுவதும் உறவினர்களின் சிரிப்பும் பேச்சுமாக கலகலப்பாக இருந்தது.

வண்ண பலூன்களாலும் தோரணங்களாலும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த இடத்தின் நடுவே, பிறந்தநாள் கேக் மேசையின் மீது கம்பீரமாகவும் அழகாகவும் வைக்கப்பட்டிருந்தது.

கேக்கைச் சுற்றி உறவினர்களும் நண்பர்களும் பேரார்வத்தோடு கூடிநின்றிருக்க, அரவிந்தும் மலர்விழியும் தங்களுடைய செல்லக் குட்டிப் பையன் மகிழனின் இருபுறமும் பேரன்போடு நின்றுகொண்டிருந்தனர்.

மகிழனின் பிஞ்சு முகத்தில் இருந்த மழலை உற்சாகத்தைப் பார்த்த மலர்விழி, தன் தாயன்பு ததும்பும் புன்னகையோடு அவனது மெல்லிய கையைப் பற்றிக்கொண்டாள். அரவிந்தும் மறுபுறம் அவனது குட்டி விரல்களைப் பிடித்துக்கொண்டான்.
"வா மகிழா செல்லம்... அப்பா, அம்மா கூட சேர்ந்து கேக் கட் பண்ணலாம்!" என்று அரவிந்த் கொஞ்சியபடி சொல்ல, அங்கு கூடியிருந்த அனைவரும் தட்டிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கத் தயாராக, கேக்கின் முன்பாக மூவரும் அழகாய் நின்றனர்.

மலர்விழி மகிழனின் கையை மெதுவாகக் கீழிறக்கி, கத்தியைப் பிடித்து அரவிந்துடன் சேர்ந்து கேக்கை வெட்டத் தயாரானாள்.

சுற்றியிருந்தவர்கள் அனைவரும் கேமராவும் கையுமாக அந்த அழகான தருணத்தைப் படம்பிடிக்க ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்தச் சரியான நேரத்தில்
"என்ன... என்னை விட்டுட்டு கேக் கட் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?"

என்ற கம்பீரமான உரத்த குரல் வீட்டின் வாசல் பக்கத்திலிருந்து திடீரெனக் கேட்டது!

பந்தம் தொடரும்...

நெக்ஸ்ட் சேப்டர் இந்த கதையோட வில்லன் என்ட்ரி
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,406
Reaction score
3,238
Points
113
ஓ...அப்ப ஹர்ஷாவும் பார்கவியும் கணவனும் மனைவியும் அப்படி தானே

இப்போது முழுமையாக புரிந்து விட்டது
 

kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,474
Reaction score
927
Points
113
பார்கவிக்கு கல்யாணம் ஆயிருச்சு.கவியோட மாமியார் மட்டுமல்ல அவளோட பெற்றோரும் ஏன் கோபப்படறாங்க?
 

Lk novels

Member
Joined
Jul 23, 2026
Messages
60
Reaction score
63
Points
18
பார்கவிக்கு கல்யாணம் ஆயிருச்சு.கவியோட மாமியார் மட்டுமல்ல அவளோட பெற்றோரும் ஏன் கோபப்படறாங்க?
அது பிளாஸ்பேக் ல தெரியும்
 
Top Bottom