அத்தியாயம் 7 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 7

New updates

LATEST

Rithi

Well-known member
Joined
May 1, 2025
Messages
111
Reaction score
9
Points
63
அத்தியாயம் 7

மதிய உணவிற்கு என அலுவலகத்தில் தனியே வந்து அமர்ந்திருந்தாள் இசை வெண்பா.

வீட்டில் நடந்த நிகழ்வுகளில் எண்ணம் சிக்கி இருக்க, அங்கே தன்னை தைரியமாய் காட்டிக் கொண்டவள் தனிமையில் அமர்ந்து அன்னை தந்தை பற்றிய சிந்தனையில் வெகு நேரம் உணவை பார்த்தபடி மட்டும் இருந்தாள்.

“இசை!” என அவள் தோள் தொட்டு யாரோ அழைக்கும் உணர்வில் தான் சுயம் வந்தவள் திரும்பிப் பார்க்க, உடன் பணியில் இருக்கும் நிஷா.

“ஹாய் க்கா!” என்றாள்.

“அப்பவே வந்துட்டியே சாப்பிட. இன்னும் என்ன பண்றனு கேட்டேன்!” என நிஷா அவளருகில் அமர,

“சாப்பிடவே பிடிக்கல க்கா” என்று வெண்பா சொல்லவும் அவள் உணவை கவனித்த நிஷா,

“கேன்டீன் ஃபூட்டா? ஏன் எடுத்துட்டு வரலையா நீ?” என்ற நிஷா அவள் அதை தொடவே இல்லை என்பதைப் பார்த்துவிட்டு,

“சரி அது இருக்கட்டும். வா ஷேர் பண்ணிப்போம்!” என தன்னுடையதை கொடுக்க முயல,

“அய்யோ க்கா. அதெல்லாம் வேண்டாம். இங்க ஃபூட் நல்லா தானே இருக்கும்!” என மீண்டும் தம்பி உணவை எடுத்துக் கொண்டவள்,

“மைண்ட் டிஸ்டர்ப்டா இருந்துச்சு. அதான் அப்படி சொன்னேன்!” என்று உண்ண ஆரம்பிக்க, இவர்கள் பேசியபடி சாப்பிட ஆரம்பிக்கவும் ஐந்து பேர் கேன்டீன் உள்ளே நுழைவதைக் கண்டனர் இருவரும். அதில் மொழிவேந்தனும் இருந்தான்.

“ஃபூட் சேஃடி டீம்! நீ சாப்பிடு!” என்றாள் நிஷா இசையிடம்.

உணவு தரத்தை பத்து நாட்களுக்கு ஒருமுறை அங்கே ஆய்வு செய்வது வழக்கம் தான் என்பதால் அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.

“மாமியார் ஊருக்கு போயிருக்காங்க. என் பையனுக்கு எக்ஸாம்! ஈவ்னிங் போய் அவனுக்கு சொல்லி குடுத்து டின்னர் முடிச்சு தூங்கவே போதும் போதும்னு ஆகுது இசை” என நிஷா சொல்லவும்,

“குடும்பப் பெண் பரிதாபங்கள் இல்ல?” என்று சிரித்தாள்.

“உனக்கென்ன! ஜாலி தான் இல்ல. உனக்கு சீக்கிரம் போஸ்டிங் மாத்தி தாலுகாக்குள்ள வரணும். கூடவே ஒரு கல்யாணம். அப்போ தெரியும் என் கஷ்டம்.” என அவள் சொல்லவும்,

“ஆக மொத்தம் யாரும் நிம்மதியா இருந்துடக் கூடாது. அது தானே?” என நிஷாவை முறைத்தபடி திரும்பிய வெண்பா கண்களில் மொழிவேந்தன் விழ, அவனும் இவளைப் பார்த்து தான் நின்றிருந்தான் சில அடி தூரத்தில் மற்றவர்களோடு.

இவள் பார்த்துமே அவன் திரும்பிக் கொள்ளவில்லை என்பதில் தலையசைத்து சிறு புன்னகையுடன் வணக்கத்தை வைக்க வேண்டிய நிலை இசை வெண்பாவிற்கு.

அவனுமே அவள் செயலில் தானும் தலையசைத்துவிட்டு தன் குழுவிடம் திரும்பிக் கொண்டான்.

“சத்தமா பேசிட்டேனோ? சென்ட்ரல் சார் வாட்ச் பன்றாங்க நம்மளை!” என்றாள் நிஷாவிடம் மிக மெதுவாய்.

“அவ்வளவு சத்தமாவா கேட்டுச்சு?” என நிஷா சொல்லவும் இன்னும் சிரிப்பு வந்தது இருவருக்குமே.

“சென்ட்ரல் சார்க்கும் சீக்கிரம் ஒரு நல்லது நடக்கலாம் இசை!” என்றதும் ஏன் என்று வெண்பா பார்க்க,

“மனுஷன் காலைல விடிஞ்சாலும் சரி ராத்திரி மழை வந்தாலும் சரி இங்கேயே தான் தவமிருக்கார். கொஞ்சம் அப்படி இப்படி அட்ஜஸ்ட் பண்ணி அஞ்சு நிமிஷம் நாம லேட்டா வந்தாலும் அவர் கேட்க போறதில்ல தான். ஆனா நமக்கு தான் குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுங்குது” என்றாள் நிஷா.

“அதுக்கு?”

“அதான்! கல்யாணமாகிட்டா பொண்டாட்டி ‘எப்ப வர்றிங்க?’னு போன் பண்ணுமே. அடிச்சு பிடிச்சு ஓடிடுவார் இல்ல?“ என்று அவள் சொல்லிய விதத்தில் வெண்பா சத்தமாய் சிரித்துவிட்டு சட்டென்று வாயை மூடிக் கொண்டு திரும்பிப் பார்க்க, இப்போதும் மொழிவேந்தன் பார்வை இவளிடம் தான்.

“போச்சு! இன்னைக்கு எனக்கு சனி பகவான் பக்கத்துல வர்ற மாதிரி இருக்கு. நான் கிளம்புறேன் க்கா” என அடுத்த சில நிமிடமிகளில் எல்லாம் வேகமாய் சாப்பிட்டு முடித்து எழுந்து வேலை பக்கம் சென்றுவிட்டாள் இசை வெண்பா.

அதன்பின் கொஞ்சம் இலகுவாய் தான் இருந்தாள் வெண்பா. மனம் கொஞ்சம் சமன்பட்டதை போலிருக்க, வார நாள் என்பதால் வெளி ஆட்களும் அதிகமில்லை

அன்னைக்கு அழைத்து சாப்பிட்டாயா என கேட்டு பேசிவிட்டு வைத்து தன் வேலையில் ஆழ்ந்துவிட்டாள்.

உணவுப் பாதுகாப்பு துறை வந்து தன் வேலையை முடித்துக் கொண்டு செல்லவும் தனது இடத்திற்கு வந்த மொழிவேந்தன் தன் உணவை கையில் எடுத்தான்.

வேலைகள் எல்லாம் அவ்வளவு கிடந்தது. எப்போதும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் அலுவலகத்தில் வைத்து உணவுக்கு என்று நேரம் எடுத்துக் கொண்டதே இல்லை அவன்.

இப்பொழுதும் சாப்பிட்டுக் கொண்டே தான் அவன் எண்ணம் இசை வெண்பாவிடம் சென்றது.

அன்று தோன்றிய சிறு சந்தேகப் பொறியில் இசை வெண்பாவை யார் என அறிந்து கொண்டான் மொழிவேந்தன்.

அன்னை கூறிய அந்த இசையும் இந்த இசை வெண்பாவும் என எங்கோ முடிச்சாய் தோன்றியது மொழிக்கு.

அப்படி யோசித்த போது தான், யாரென்றே தெரியாத ஒரு பெண் ஒரு தகுதிவாய்ந்த பதவியில் இருப்பவனை திருமணம் செய்ய மறுக்க போவதில்லை. இதுவே தன்னுடன் படித்த, இல்லை தன்னுடன் வேலை செய்யும் இடத்தில் என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்கும் தானே வேண்டாம் என்று மறுக்க? என்று மூளை யோசிக்க, அப்படி தான் இசை வெண்பாவும் சிக்கி இருந்தாள்.

அவனுக்கு சந்தேகம் வந்த மூன்றாம் நாளே அலுவலக ரிஜிஸ்டர் மூலம் இசை வெண்பா வீட்டு முகவரிக் கொண்டு இவள் தான் அன்னை கூறிய பெண் என்பதைக் கண்டு கொண்டான்.

இசை வெண்பா வீட்டு முகவரி சரியாய் இவனது உறவினர் கமலா அத்தையின் வீட்டிற்கு பக்கத்தில் என்றதை பார்த்தபின் தான் உறுதி செய்தான் இந்த இசை வெண்பா தான் அன்னை கூறிய அந்த இசையென்று.

அதன்பின்னும் தன்னை நிராகரித்த அந்த காரணம் ஏன் என்ற எண்ணம் அவ்வபோது மூளைக்குள் வண்டாய் சுழல, இவனும் அவ்வபோது அதற்கென்றே அவளை கவனிக்க ஆரம்பித்திருந்தான்.

இசை வெண்பா தன் குடும்ப பிரச்சனையினில் அவனை கவனிக்க தவறி இருந்தாள் அதே நேரத்தில்.

சாப்பிட்டு முடிக்கும் வரை அந்த எண்ணத்தில் இருந்தவன் எப்போதும் போல எதுவும் புரிபடாமல் தலையை அசைத்து தோளை குலுக்கிக் கொண்டு தன் வேலையில் ஆழ்ந்துவிட்டான்.

நாட்களும் அதன் போக்கில் நகர, திலோத்தமாவின் உறவுக்காரப் பெண் என்ற முறையில் வந்த ஜாதகமும் போட்டோவும் என திருப்திகரமாய் தோன்றியது செண்பகத்திற்கு.

“எனக்கென்னவோ இது தான் மொழிக்கு அமையும்னு தோணுது திலோ. எல்லா நேரமும் இப்ப தான் சரியா கூடி வருது. மொழியும் நீங்களே பாருங்கனு சொல்லிட்டான். எனக்கும் பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்கு!” என திலோத்தமாவிடம் மகிழ்ச்சியைக் கூறிக் கொண்டிருந்தார் செண்பகம் அலைபேசியில்.

“அப்படியா? அப்போ கொழுந்துக்கு கல்யாணமா? நான் தான் அப்போ பொண்ணு பாத்திருக்கேன். திலோ கைப்பட்டா மண்ணும் பொண்ணாகுமே!” என்ற திலோத்தமா,

“எனக்கெல்லாம் பொண்ணுக்கு மாதிரியே என்பதாயிரம், இல்ல அதுக்கு கூடின பட்டுப்புடவை தான் வேணும் த்தை. இப்போவே சொல்லிட்டேன்!” என அடுத்த பேச்சிற்கு தாவிவிட,

“இரேன் டி! இங்க உனக்கு புடவை எடுக்க தான் என் பையனுக்கு கல்யாணம் வைக்கேனாக்கும்?” என்ற செண்பகமும்,

“கல்யாணம் மட்டும் முடியட்டும்! என் மாமியார் அவங்க சாகும் போது எனக்கு தந்த வைர நெக்லஸ்ஸை நான் மொழி கல்யாணம் நடக்குற அதே மேடையில உனக்கு போட்டு அழகு பாக்குறேன்!” என்றார்.

“எதுக்கு? மூத்த மருமகளுக்கு மட்டும் வைரம்.. எனக்கு எங்கனு வரப் போற மருமக சண்டைக்கு நிக்கவா? அதெல்லாம் வேண்டாம். தனியாவே யாருக்கும் தெரியாம குடுங்க!” என்று திலோத்தமா சொல்ல,

“ஒரு வார்த்தைக்கு ஒன்போது வார்த்தை எடக்கு மடக்கா பேசலைனா தூக்கம் வராதே உனக்கு!” என்ற செண்பகம்,

“மாமா வரவும் நல்ல நாள் பார்த்து ஜாதம் பார்க்க போறேன். அப்படியே மொழிகிட்ட பேசவும் போறேன். எல்லாம் சரியா நடக்கனும்னு வேண்டிக்க!” என கூறினார்.

“சரி மாமியார்! அப்போ நல்ல நியூஸ் சீக்கிரம் சொல்லுங்க” என்றவளும்,

“அப்புறம், நான் கொழுந்து கல்யாணம் வரை அங்கேயே வந்து இருக்கேன். அப்போ தான் ரெண்டு மருமகளுக்கும் நீங்க எவ்வளவு பாகுபாடு பாக்குறிங்கனு நான் பார்க்க முடியும்!” என்று சொல்ல,

“உன்னையே எனக்கு மேய்க்க முடியல. வர்றவ என்ன பண்ண போறாளோ! இல்ல உங்ககிட்ட மாட்டிக்கிட்டு நான் தான் என்ன ஆகப் போறேனோ!” என சொல்லி தான் அலைபேசியை வைத்தார்.

அதன்பின் நேரம் செல்வதே தெரியவில்லை என்பதைப் போல தான் நாட்கள் நகர்ந்தது.

மொழியிடமும் இப்படி திலோத்தமா உறவினர் வீட்டில் இருந்து பெண் புகைப்படம் வந்ததாய் சொல்லி ஜாதகம் பார்த்துவிட்டு புகைப்படத்தை காட்டுவதாய் செண்பகம் சொல்ல, சில நொடிகள் புருவங்கள் சுருங்க யோசனையில் இருந்தான் மொழிவேந்தன்.

“சரி தானே மொழி?” என கேட்கவும் அவனும் தலையசைக்க, திலோத்தமாவிடம் கூறிய மூன்றாம் நாள் மாலை மொழிவேந்தன் ஜாதகத்துடன் பெண்ணின் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு செண்பகமும் புவியரசனும் பொருத்தம் பார்க்க சென்றவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சியாய் ஜோதிடர் நல்ல விதமாய் கூறி இருந்தார்.

“தாராளமா பண்ணலாம். எட்டு பொருத்தம் இருக்கு. அதுலயே முக்கியமான பொருத்தம் எல்லாம் வந்திடும்!” என்று சொல்லவும் குளிர்ந்து போனது செண்பகத்திற்கு.

வழியிலேயே திலோத்தமாவிற்கு விஷயம் சொல்லப்பட, “அப்போ நான் பொண்ணு வீட்டுல சொல்லவா த்தை? இல்ல இல்ல வேண்டாம். இதுக்கு மேல பெரியவங்க பேசினா தான் சரியா இருக்கும். நீங்க பேசுங்க!” என்றாள் திலோத்தமா.

“நாளைக்கே சொல்லிடுவோம் திலோ. மொழி வீட்டுக்கு வரவும் அவன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுறேன்!” என்றவர் மகன் கொடுத்த வார்த்தையை அத்தனை நம்பினார்.

தான் பார்த்தால் போதும் என்றுவிட்டானே! என்ற எண்ணம் அவருக்கு.

இதற்க்கிடையில் மொழியிடம் ஜாதகம் பார்க்க இரண்டு நாட்களில் செல்வதாய் செண்பகம் கூறிய அன்று மாலை தன் வீட்டில் பெரும் சிந்தனையில் சோஃபாவில் அமர்ந்திருந்தாள் இசை வெண்பா.

“நீ எப்ப டி வந்த? சத்தமே இல்லாம உக்காந்திருக்க? காபி கொண்டு வரவா?” என்றார் தமிழரசி.

“காபி இருக்கட்டும் ம்மா. இங்க வந்து உக்காருங்க!” என்று அன்னையை அருகில் அமர வைத்த வெண்பா,

“ஒரு மாப்பிள்ளை வீடு வந்துச்சுல்ல? அதான் அந்த சென்ட்ரல் ஆபீஸர்?” என்று கேட்கவும்,

“ஆமா அதுக்கென்ன? அதான் வேண்டாம்னு சொல்லிட்டியே?“ என்றார் தமிழரசி.

“நான் சொன்னது இருக்கட்டும். அவங்க வீட்டுல நம்ம போட்டோ ஜாதகம் எதுவும் போச்சா?” என்றாள்.

இல்லை என்று ஏற்கனவே கூறி இருந்தார் தமிழரசி. இருந்தாலும் மீண்டும் இப்பொழுது வெண்பா கேட்க,

“அதான் அந்த கமலாகிட்டயே சொல்லியாச்சே வேண்டாம்னு. அப்புறம் எங்க போட்டோ எல்லாம் குடுக்க. எதுவும் குடுக்கல. அவங்களும் கேட்டிருக்க மாட்டாங்க. அவங்க பையனுக்கு என்ன பொண்ணா கிடைக்காது?” என்றார் அன்னை.

“ஆமா தான? ஆனா என்னவோ இப்பலாம் அந்த சென்ட்ரல் என்னை குறுகுறுன்னு பாக்குறாப்புல என் கண்ணுக்கு தெரியுது ம்மா!” என்றவள் சொல்லி மூச்சைப் பிடித்து அமர்ந்துவிட்டார் தமிழரசி.
 
Top Bottom