ஃபைனல் எபி : 24 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஃபைனல் எபி : 24

New updates

LATEST

Administrator

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,559
Reaction score
2,936
Points
113
Location
Chennai
Website
jothinovels.com
இறுதி அத்தியாயம் : 24


சென்னையில் விக்ரம் கொடுத்த வீட்டில் விவேக், பிரசாத் குடும்ப சகிதம் வசித்து வந்தனர். பிரசாத்திடம் மன்னிப்பை யாசித்த வித்யா, அவனது புன்னகையாலும், அன்பான வார்த்தைகளாலும் நடந்தவற்றை எல்லாம் மறந்து, அவனுடனான இனிய இல்லற வாழ்க்கையில் முழுமனதுடன் இணைந்து கொண்டாள்.

விடுமுறை நாட்களில் விக்ரமின் குடும்பம் சுசீந்திரத்திற்கு வருவதும், இவர்கள் அங்கு போவதுமாக அவர்களின் நட்பையும், பாசத்தையும் மேன்மேலும் வளர்த்து வந்தனர்.

விக்ரம், கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி நந்தினியை ஏழாவது மாதம் முடிவதற்கு முன்பாகவே சுசீந்திரத்திற்கு அழைத்துச் சென்று விட்டான். மகாலெட்சுமியிடம் மகளை ஒப்படைத்து விட்டு தானும் அங்கேயே இருந்து தன்னுடைய பணிகளையும் பார்த்து வந்தான். சாதனாவுக்கு அப்போது ஆறு மாதமாக இருந்ததால் அனைவரும் ஒரே வீட்டில் இருந்து கொண்டனர்.

ஒன்பதாவது மாத இறுதியில் நந்தினி பிரசவ வேதனையில் துடிப்பதை பார்த்த பவித்ராவும் பயந்து போய் அழுதாள். அதைப் பார்க்க முடியாமல் விக்ரம் மனம் கலங்கினான். வேதாச்சலத்திடம் 'தாய்க்கும், மகவுக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது; நந்தினிக்கு நல்ல முறையில் பிரசவம் நடக்க வேண்டும்' என்று மனதார கேட்டுக்கொண்டான்.

சற்று நேரத்தில், பூரண சந்திரனைப் போல விக்ரமின் மறு உருவாக பூமியில் பிறப்பெடுத்த பாலகனை கொண்டு வந்து, அவன் கையில் ஒப்படைத்தார் மகாலெட்சுமி. அனைவரும் நந்தினி, விக்ரம், குழந்தையை வாழ்த்தி மகிழ, அடுத்த அரை மணி நேரத்தில் வலி தாளாமல் கதறி விட்டாள் சாதனா!!

திடீரென்று அலறிய சாதனாவைக் கண்ட அனைவரும் பயந்து போய், உடனடியாக அவளையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். பிரசவத்திற்கு இன்னும் நாளாகவில்லையே என்ற பயமும், அவளுக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற நடுக்கமும் அனைவரையும் ஆட்கொண்டது. ஜவஹரின் உள்ளம் தன் முதல் மனைவிக்கு நேர்ந்த நினைவில் பதற்றமடைந்தது.

விக்னேஷ், அவளின் கதறலைக் கேட்க முடியாமல் நெஞ்சம் விம்மினான். கண்கள் கலங்கி கண்ணீரை உகுத்தன. 'என் வாழ்க்கையில் இழந்து போன மகிழ்ச்சியை, சந்தோஷத்தை மீட்டுக் கொடுத்தது என் மனைவி! அவள் இல்லாமல் நான் இல்லை. அவளுக்கும் என் குழந்தைகளுக்கும் எதுவும் ஆகாமல் காப்பாற்றிக் கொடுத்திரு' என்று இறைவனிடம் வேண்டுதல் விடுத்தவன், 'தாத்தா, என் மகனா பிறவி எடுப்பதா சொன்னீங்களே, நீங்க பிறக்கும்போது, அந்தக் குழந்தையை எடுத்துக் கொஞ்சி காலம் பூரா ரசிக்க என் மனைவி எனக்கு வேணும். அவளைக் காப்பாற்றி நல்ல விதமா உங்க பேரன் பேத்தியோடு எனக்கு கொடுத்திருங்க' என்று கண்ணீர் வடித்தான்.

விக்ரம் அவனைத் தேற்றினான்.

அப்போது, "அம்மா!!" என்ற கதறலோடு ஆண் மகவின் அழுகுரலும் கேட்டது. அத்தனைப் பேர் உள்ளமும் நிம்மதி பரவசத்தில் மூழ்கியது. அடுத்த பத்தாவது நிமிடம் மறுபடியும் அலறியவளை பார்த்த அனைவரும் பீதியில் உறைந்து போயினர்.
அனைவரையும் அச்சப்படுத்தி விட்டு விக்னேஷின் அருந்தவ புதல்வி இவ்வையகத்தில் அவதரித்தாள். அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இரண்டு குழந்தைகளையும் சுத்தப்படுத்தி வெளியே கொண்டு வந்து காண்பித்தனர்.

வேதாச்சலத்தின் மறு அவதாரமாக பிறவியெடுத்த மகனை தூக்கி அணைத்து முத்தமிட்டான் விக்னேஷ். சொன்ன வாக்கிற்கு ஏற்ப தாத்தா தன் மகனாக பிறந்து விட்டதை எண்ணி பூரிப்படைந்தான். தன்னையே பார்த்து நின்ற மாமனாரின் அருகில் சென்று புன்னகையுடன் மகனைக் கொடுத்தான். அடுத்து, தன்னையும், சாதனாவையும் கலந்து காணப்பட்ட மகளை கைகளில் ஏந்தி கன்னத்தில் முத்தமிட்டான். பவித்ரா, ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகளைப் பார்த்ததும் அவர்களை விட்டு விலகாமல் இருந்து கொண்டாள்.

மருத்துவரிடம் அனுமதி பெற்று சாதனாவைப் பார்ப்பதற்காக சென்று விட்டான் விக்னேஷ்.

மனைவியின் கண்ணீர் வடிந்த கன்னங்களும், சோர்ந்து போய் இருந்த தோற்றமும் அவள் மீதான நேசத்தை அதிகப்படுத்தியது. சாதனாவை அணைத்து முத்தமிட்டு மார்போடு பொத்திக் கொண்டான் விக்னேஷ்.

குழந்தை பிறந்த மூன்றாவது நாள் வீட்டிற்குச் சென்றனர். ஜவஹர், மருத்துவமனையின் மீது கவனத்தை செலுத்த, மகாலெட்சுமி மகள்களையும், பேரக் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார்.

தாய், மகள், பேரக்குழந்தை என்று மூன்று தலைமுறைகளையும் பாரபட்சமின்றி பார்த்து வந்த சத்தியபாமாவை அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. அவரது தன்னிகர் இல்லாத பாசமும், அக்கறை கலந்த கவனிப்புகளும், அவர்களோடு சுமுக உறவையும் ஏற்படுத்தியது.

மகனது இரட்டைக் குழந்தைகளைப் பார்த்து மகிழ்ந்த பாக்கியம், தான் செய்த பாவத்தை கழுவும் முயற்சியாக அடியோடு மாறிவிட்டது மட்டுமின்றி, அனைவருடனும் பாகுபாடின்றி பழகி புது மனுஷியாகவும் திகழ்ந்து வந்தார்.

அன்றில் இருந்து சரியாக மூன்றாவது மாதம் வந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, விக்னேஷ் அழைப்பின் பேரில் பிரசாத், விவேக் குடும்ப சகிதம் சுசீந்திரத்திற்கு வருகை தந்திருந்தனர். ஏற்கனவே நந்தினியின் குடும்பம் ஊரில் தான் நின்றிருந்தது.

அனைவரின் வரவாலும் வீடே கலகலப்பாக இருந்தது. எல்லோரிடமும் பேசி மகிழ்ந்த விக்னேஷ், மாலை நேரம் வீட்டு முன்பகுதியில் மெத்தையைப் போட்டு, அதன் மீது இருந்து தன்னையே பார்த்துக்கொண்டு இருந்த மகள் அக்ஷிதாவின் அருகில் படுத்து, கொஞ்சிக் கொண்டு இருந்தான். அவனது மூன்று மாதம் நிரம்பிய மகன் வேதானந்த்தை மடியில் வைத்திருந்தார் ஜவஹர்.

விக்ரமின் மகன் அபிஷேக்கை மகாலெட்சுமி தன் கைகளில் ஏந்தி இருந்தார். தன்னை விட்டு மகள் அக்ஷிதாவைக் கொஞ்சுவதைப் பார்த்து அவன் முதுகில் ஏறி அமர்ந்தாள் பவித்ரா.

"சித்தப்பா, பவிக்கு பாப்பா வேணும்!"


அவன் சத்தமாக சிரித்தான். அக்ஷிதா சிரித்துக் கொண்டே அவன் முகத்தை நோக்கி கையை நீட்டினாள். விக்னேஷ் மகளின் வயிற்றில் முத்தமிட்டான். அவளோ, தகப்பனின் முடியைப் பற்றியிழுத்து தன்னோடு வைத்துக் கொண்டாள்.

"சித்தப்பா, பவி போறப்போ பாப்பாவை கொண்டு போயிடுவேன்" என்று மறுபடியும் கூறினாள்.

விக்னேஷ், "உனக்குத்தான் தம்பி பையன் இருக்கான், பக்கத்தில் விவேக் சித்தப்பா மகளும் இருக்கா. பிறகும், என் குட்டிப் பாப்பாவை கேட்கிறியே பவிமா! சித்தப்பா, அவளைப் பார்க்காம இருந்துக்கவே மாட்டேன்" என்று உரைத்து, மகளிடம் விளையாட்டு காட்டினான்.

பவித்ரா தானும் அவள் சிரிப்பதைக் கண்டு கூடவே சென்று விளையாட்டு காண்பிக்க, அவளோ பொக்கை வாய் திறந்து சிரித்து விக்னேஷை மதி மயங்க செய்தாள்.

"பவி மாதிரியே என் பாப்பாவும் அழகா இருக்கா! பவி மாதிரியே என் பாப்பாவும் சிரிக்கிறா. பவி மாதிரியே..."

"இல்லை! எனக்குப் பல் இருக்கு; முடி இருக்கு. பவி பெரிய பொண்ணு. ஓடி சாடுவா, பேசுவா. இது குட்டிப் பாப்பா!" என்று கூறியதும் அனைவரும் ரசித்து சிரித்தனர். அவன் எழுந்து நின்று அவளைத் தூக்கிப் போட்டு பிடித்தான். பவித்ரா கலகலவென நகைத்தாள்.

அக்ஷிதா இத்தனை நேரமாக தன்னைக் கொஞ்சிக் கொண்டு இருந்தவன், பவித்ராவிடம் பேசி சிரிப்பதைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி அழுதாள்.

உடனே மகளைத் தூக்கியவன், "வாடா, வாடா! என் செல்லமே!! அவங்க பிள்ளைக்க அக்காடா... அக்கா... அக்கா சொல்லு!" என்று கொஞ்சினான்.

அக்ஷிதா, முகம் கொள்ளா புன்னகையுடன் காணப்பட்டாள்.

அப்போது வந்த நந்தினி, அவளை ரசித்துக்கொண்டே அனைவருக்கும் சூடான காஃபியைக் கொடுத்து விட்டுச் சென்றாள்.

மகளை மெத்தையில் கிடத்தி விட்டு காஃபியை வாயில் வைக்கும் நேரம் 'ஹச்' என்று தும்மி விட்டாள் சாதனா. சூடான காஃபி அவன் வாயில் பட்டு சுட்டு விட்டது.

அவள் வாய் விட்டுச் சிரித்தாள்.

"அடியேய் சண்டிக்குதிரை! வேணாம்டி என்கிட்டே வச்சுக்காதே" என்று முறைத்தான் விக்னேஷ்.

"இல்லையே! நான் கோலம் போட்டுட்டு இருக்கேன்" என்று கிண்டலாக பதிலுரைத்து, நந்தினி வரைந்திருந்த கோலத்தின் மீது வண்ணப் பொடிகளால் தூவி அலங்கரித்தபடி இருந்தாள்.

விக்னேஷ், விக்ரமைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டு, 'அச்சச்சோ!!' என்று சத்தமாக கூறினான். சாதனா பயந்து போய் கோலப் பொடியை தவற விட்டு விட்டாள். அனைத்தும் அத்தனை நேரமாக அழகுபடுத்திக் கொண்டிருந்த கோலத்தின் மீது கொட்டி விட்டது.

அவனோ நடித்திருக்கிறான் என்று தெரிந்ததும், அவனை முறைத்த சாதனா, "போய்யா சண்டியரு!" என்று கூறி விட்டுச் சென்றாள்.

பிரசாத், விக்ரம், விவேக் மூவரும் சத்தமாக சிரித்தனர். ஜவஹர் புன்னகையுடன் பார்த்தபடி இருந்தார்.

சற்று நேரத்தில் விளக்கேற்றிய பின்னர், வெடி கொளுத்தி மகிழ்ந்தனர். அந்த ஏரியாவிலே அவர்கள் வீட்டின் முன்புறம் தான் அவ்வளவு சத்தமும், புகைமண்டலமும், சந்தோஷமும் ஆர்ப்பரித்துக் காணப்பட்டது.

விக்னேஷ், வேண்டும் என்றே சாதனா நிற்கும் பக்கமாக வெடியைக் கொளுத்திப் போட்டு அவளைத் துரத்தி விட்டான்.

சாதனா, "கல்யாணமாகி இவ்வளவு நாளான பிறகும், இன்னும் உங்க சேட்டைக்கு அளவே இல்லை" என்று கடிந்தாள்.

விக்னேஷ், "ஏய் சண்டிக்குதிரை! என்னை மிரட்டுற வேலையை வச்சுக்கிட்டே... அப்புறமா உன்னைத் தூக்கிட்டுப் போயிடுவேன், ஜாக்கிரதை!" என்று பதிலுக்கு மிரட்டினான்.

"ம்கும்... ஏற்கனவே இப்படி மிரட்டி.. மிரட்டி தூக்கிட்டுப் போய் ஒரு வருஷத்தில் ரெண்டு குழந்தைகளைப் பெத்து வச்சுருப்பது போதாது. இதுல மறுபடியும் தூக்கிட்டுப் போயிடுவாராம் இல்லை சண்டியரு!" என்று இதழ்களை சுழித்தாள்.

விக்ரமும் பிரசாத்தும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க, அவர்கள் நின்ற திசையில் குண்டை கொளுத்திப் போட்டு ஓடி விட்டாள் சாதனா.

விக்னேஷ் அவளைத் துரத்த, சாதனா அவன் கைகளில் சிக்காமல் ஓட்டம் காட்டினாள்.

"இன்னும் உங்க ஓட்டம் நிற்கலையா? ஒரே மிரட்டல் தானா?" என்று விளையாட்டாக கேட்டான் பிரசாத்.

"உன் தங்கச்சி பண்ற வேலைக்கு அவளைத் துரத்தாம என்ன பண்ண சொல்றே? வாயாடி, என்னா பேச்சு பேசி என்னைத் திட்டி எடுத்துருவா தெரியுமா? ஒரு டி.சி.பின்னு மரியாதையே கிடையாது. பாவம் நான்! தெரியாம வந்து இவள்கிட்டே மாட்டிக்கிட்டேன்" என்று சோகமாக கூறுவது போல முகத்தை வைத்துக் கொண்டான்.

உடனே சாதனா, "யாரு மாட்டிக்கிட்டா? தோடா! சும்மா இருந்த பொண்ணுகிட்டே வந்து வலிய வம்பிழுத்து, திட்டி, கோபமா பேசி சீண்டி விட்டு, கழுத்துல தாலியையும் கட்டி வெளிநாட்டுக்கு துரத்தி விட்டுட்டு, இவருக்குப் பயந்து ஒழிஞ்சு இருந்தா மறுபடியும் மிரட்டி வர வச்சு, அம்மா, அக்காவுக்கு பின்னே பயத்துல நடுங்கி இருந்தவளை, விடாம பிடிச்சுக்கொண்டு போய் ரெண்டு பிள்ளைகளையும் சுமக்க வச்சு, இப்போ அதுகளை பார்த்துக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு. இதுல பெருசா பேச வந்துட்டாரு சண்டியரு! சிடுமூஞ்சி!!" என்று ஏக வசனத்தில் புகழ்ந்தாள்.

சாதனாவின் பேச்சுக்களைக் கேட்ட அனைவருக்கும் சிரித்து சிரித்து வயிறு வலியே வந்து விட்டது.

விக்னேஷ் வேட்டியை மடித்துக் கட்டினான்.

"இந்த சண்டிக்குதிரை சாட்டையை எடுத்தா தான் அடங்கும். இருங்க இப்போ வந்துர்றேன்" என்று கூறிவிட்டு அவளை விரட்டினான். அவளோ கத்திக்கொண்டே அப்பா, அம்மா, அங்கு நின்றிருந்த மற்ற அனைவர் பின்பும் மறைந்தும் முடியாமல் விக்ரம், பிரசாத்தை அவன் மீது தள்ளி விட்டுவிட்டு அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டினாள். அதற்கு முன்பு உள்ளே புகுந்திருந்தான் விக்னேஷ்.

"ஏன்டி மவளே! என்னைப் பார்த்தா சிடுமூஞ்சின்னு சொன்னே? இப்போ பாரு யாரு அதுன்னு காட்டுறேன்" என்று கூறிவிட்டு, அவளைக் கட்டிலில் தூக்கிப் போட்டு மேலே படர்ந்தான். அவள் மறுப்பாள், கத்துவாள் என்று நினைத்திருக்க, சாதனா நேர் எதிர் பதமாக அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

"என்னைப் பார்த்தா சிடுமூஞ்சி மாதிரியாடி தெரியுது? ஆசையா பக்கத்துல வந்தால் பிள்ளைங்க வயித்துல இடிக்குது, நெளியுதுன்னு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அதுக வயித்துல வந்த பிறகில் இருந்தே துரத்தி விட்டே! சரிதான், பிறந்த பிறகாவது பொண்டாட்டியை அணைச்சுட்டு படுக்கலாம்னு வந்தால், பயத்துல எழுந்து ஓடிடுறே... இதுல என்னைப் பார்த்தா அப்படி சொன்னே?" என்று கன்னத்தைக் கடித்தான்.

சாதனா சொக்கி கண் மயங்கினாள். அவனும் அவள் வதனத்தைப் பார்த்தபடி அவளோடு மயங்க சென்று, கீழே இருப்பவர்கள் ஞாபகத்தில் விலக முயன்றான்.

"ஏன் பிடிக்கலையா?" என்று அவன் சட்டைக் காலரைப் பற்றினாள் சாதனா.

"பிடிக்காமலா உன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கேன்?"

"பிறகு எதுக்கு விலகணும்?"

"சாதனா, குழந்தைகள் ரெண்டு பேரும் வயித்துல வளர ஆரம்பிச்ச பிறகில் இருந்து நீ எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்குத் தெரியாதா? அத்தோடு ஒன்பதாவது மாசம் ஆவதற்கு முன்னாடியே பிரசவ வலியால் குழந்தைகளைப் பெறுவதற்கு நீ பட்ட கதறலும், கண்ணீரும் இன்னும் என் கண்ணுக்குள்ளே நிற்குது. அதான், உன் உடம்பு சரியான பிறகு பார்த்துக்கலாம்னு உன்னையும், பிள்ளைகளையும் மட்டுமே பார்த்துக்கறேன்" என்றான்.

அவளுடைய கண்கள் கலங்கின.

"ஏன் இப்படி கண் கலங்குறே? நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் உருவான பந்தம், அந்த ஆண்டவனாக பார்த்து ஏற்படுத்திக் கொடுத்தது. உன் முகம் வாடினாலே என்னால தாங்க முடியாது. நீ எப்பவும் சிரிச்ச முகமா இருக்கணும். இப்போ வீட்டுக்கு ஆளுங்க வந்திருப்பதால் வா வெளியே போகலாம். ராத்திரி கண்டிப்பா சீக்கிரமா வருவேன். சரியா?" என்றான்.

குழந்தைகள் இருவரும் வயிற்றில் வளர்ந்து வருவதற்கு சான்றாக மேடிட்ட வயிறு காட்சியளித்தது. அத்துடன், தினமும் மருத்துவமனைக்கு சென்று வேலையை முடித்து விட்டு வரும் சாதனா, எப்போதடா கட்டிலில் சரிந்து சற்று நேரம் இளைப்பாறலாம் என்று நினைப்பாள். அந்த நேரத்தில் வந்து விக்னேஷ் அவளுடன் கூட நினைத்தால், அவளால் எங்ஙனம் முடியும்? அதனால், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தவிர்த்து விடுவாள்.

குழந்தைகள் பிறந்த பிறகோ, அவன் ஏக்கம் புரிந்தாலும் இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுத்த உடம்பு ஓய்வெடுக்கவும், அடுத்து உருவாகி விடக் கூடாதே என்ற எண்ணத்திலும் அவனருகில் போவதற்கு அஞ்சியது. அவள் மனதைப் புரிந்து கொண்ட விக்னேஷ் இப்போதெல்லாம் வேலைக்குச் சென்று விட்டு வந்தால், வீட்டில் இருப்பவர்களிடம் பேசிவிட்டு குழந்தைகளைக் கொஞ்சியபடியே உறங்கி விடுகிறான்.

அவனது நிலை சங்கடப்படுத்த, இன்று அதையே வார்த்தையாகவும் கோர்த்து விட்டாள். இப்போது கணவனின் மனதில் இருப்பதைப் புரிந்து கொண்ட சாதனா, புன்னகையுடன் அவனை அணைத்துக் கொண்டாள். அவனும் இன்முகமாக அழைத்துச் சென்று அனைவருடனும் இணைந்து, தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தான்.

கல்யாணம் என்பது மனிதர்களால் முடிவு செய்யப்படுவது அல்ல! அது இறைவனால் தீர்மானிக்கப்பட்டு அதன்படியே நடைமுறை படுத்தப்படுவது.

விக்னேஷின் வாழ்க்கையை மீட்டுக் கொடுக்க வந்தவளாக அவளை அவன் பார்க்க, ஜவஹர் மகாலெட்சுமி தம்பதியரின் பாசத்தில் குறும்புத்தனமான சேட்டைகளுடன் வளர்ந்து வந்த சாதனா, தன்னைப் பெற்றவர்கள் அவர்கள் இல்லை, தான் ஒரு 'அநாதை' என்பது தெரிய வந்ததும், கலங்கி கண்ணீர் வடித்து, நிம்மதி என்பதே இல்லாமல் காணப்பட்டாள். விக்னேஷின் சீண்டலான, ஆறுதலான, அன்பான பேச்சுக்கள் அவளை சமன் செய்ய உதவியதுடன், அவனுடன் இணைந்து வாழ தொடங்கிய பிறகே, அனைத்து வகையான சந்தோஷங்களையும் முழுமையாக பெற்றதாக உணர்கிறாள்.

தன் கணவன், தன் குழந்தைகள், தன் குடும்பம் என்ற வரையறைக்குள் இருந்து கொண்டு முன்பு போல சேட்டையால் அவனிடம் வம்பு செய்து மகிழ்கிறாள். அவனும் அதை இன்முகமாக ஏற்று ரசித்தானே அன்றி அதை குறைவாக கருதியது இல்லை.

நந்தினி, சிறு வயது முதலே தகப்பனை இழந்து, தாத்தாவின் கவனிப்பில் மட்டுமே வளர்ந்து, விக்ரமை விரும்பி மணந்த பிறகே, வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் என்ற ஒன்றைக் கண்ணார கண்டு மகிழ்ந்தாள். அன்று அவளை 'ராசியற்றவள்' என்று கூறிய மக்கள், இன்று மரியாதையுடன் பார்த்துப் பேசினர். விக்ரம், அவளின் எண்ணம் போல் நடந்து, ஒரு குறையுமின்றி பார்த்துக் கொண்டான். சிறு வயதில் கிடைக்காத அனைத்தும் இப்போது ரெட்டிப்பாக கிடைக்க பெற்றதில், அத்தனை மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள்.

பவித்ரா, அவர்களின் இல்லத்தை அலங்கரிக்கும் முடிசூடா பட்டத்து இளவரசியாக வலம் வந்தாள்.

விக்னேஷ், விக்ரம், பிரசாத், விவேக் இடையே காணப்பட்ட ஒற்றுமையும், நட்பும், பாசமும் அக்கம் பக்கத்தாரை வியக்க வைத்தது மட்டுமின்றி, கூட்டு குடும்பத்தின் அருமை, பெருமைகளையும் உணர வைத்தன.

அவர்களில் யாருக்காவது ஒருவருக்கு தலைவலி, காய்ச்சல் வந்து விட்டால் கூட அனைவருமே துடித்துப் போய் விடுகின்றனர். 'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்ற வார்த்தைகளை உள்ளார்ந்து அனுபவிக்கும் விதமாக அவர்களின் நடவடிக்கைகள் அமைந்து காணப்பட்டன.

***சுபம் ***
 
Top Bottom