What's new

Welcome to ஆனந்த ஜோதி நாவல்கள்

Join us now to get access to all our features. Once registered and logged in, you will be able to create topics, post replies to existing threads, give reputation to your fellow members, get your own private messenger, and so, so much more. It's also quick and totally free, so what are you waiting for?
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

29. சகியே (சகாயனே) நின்னடிமை யாகவா

Joined
Dec 22, 2024
Messages
193
Reaction score
19
Points
43
அத்தியாயம் 29

அவசர சிகிச்சைப் பிரிவில் அரசிக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்க, வெளியே உறவினர்கள் அனைவரும் மருத்துவரிடம் இருந்து நற்செய்தி வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர். பார்த்தி தாயின் நிலையை எண்ணி கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருக்க, நேத்ரனும் ஜனாவும் அவனை சமாதானம் செய்யும் முயற்சியில் இருந்தனர்.
வள்ளியும் லக்ஷ்மியும் என்னாகுமோ என்ற பயத்துடன் இருக்க, அபியும் வெற்றியும் மருத்துவமனையின் நிர்வாகத்திடம் சிகிச்சை முறையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கிருக்கும் எவருடனும் எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாது, தனியாய் வெளியே வந்து அமர்ந்தாள் மித்து.
மனம் பெரும் பாரமாய் மாறி பெண்மகளின் உடல், உயிர், உணர்வு என மூன்றையும் வதைத்தது. விழிகளில் நீர் திரண்டு நிற்க, அதை வெளியேற அனுமதிக்காது தனக்குள்ளே அணைக்கட்டி தடுத்து நிறுத்தி இருந்தாள்.
ஏனோ இந்த நொடி 'தான் ஏன் பிறந்தோம்?' என்ற எண்ணமே தோன்றியது அவளுக்கு.
பிறக்கும் முன்னேயே தந்தையை இழந்து, தாயானவர் மரணத்தின் வாயிலைத் தொட்டு, அதன் பின்பும் அவரது உடல் உறுப்புகள் செயலாற்ற மறுத்து, பெரும் துணையான மதனை இழந்து, தோழியான ஜானு நட்பிற்காக தனது குடும்பத்தினரை எதிர்த்து, தோழனான ஜனா மறு பிறப்பெடுத்து வந்து, உயிர் துணைவனான அபி இன்றளவும் அவளுக்கு பாதுகாவலனாய் மாறி.. என தான் கடந்து வந்த வாழ்க்கையை எண்ணி, தன்னை நினைத்தே நொந்து கொண்டாள்.
அனைத்திற்கும் மூலக்காரணம் அவளின் பிறப்பல்லவா? ஆரம்ப நாட்களில் ஆசிரமத்தில் வளர்ந்ததாலோ என்னவோ, எவரிடமும் அத்தனை எளிதில் பழகிவிட மாட்டாள் மித்து. அதற்கு சிறுவயதில் மதன் அவளிடம் வாங்கிய அடிகளே சான்று. ஆனால் அவளது மனப்போக்கை மாற்றியவனும் அவனே! மனமாற்றத்திற்கு மட்டுமல்ல அவளது மொத்த வாழ்விற்கும் ஆதாரமானவன்.
தன்னோடு இணைந்த ஒவ்வொருவருக்கும் தன்னால் வலி மட்டுமே ஏற்படுகிறது. ஒருவேளை தான் யாரென்ற உண்மை தெரியாமலேயே இருந்திருந்தால் தன்னை ஈன்றவரின் உயிராவது மிஞ்சி இருக்குமே என்றுதான் தோன்றியது.
'எவர் மீதெல்லாம் அவள் அன்பைக் காட்டி உரிமை கொள்கிறாளோ, அவர்களை விதியானது விடாது தொடர்ந்து, வலிகளை பரிசளித்துவிட்டுச் செல்கிறதே!' என மனதிற்குள் கண்ணீர் வடித்தாள்.
நீண்டநேரமாய் அவளைக் காணாது தேடிய அபி, வெளியே பார்த்ததும் மித்துவின் அருகே வந்து அமர்ந்தான்.
"என்னாச்சு ரூபி?"
வாய் மொழியாய் பதில் அளிக்காது, கலங்கிய கண்களுடன் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
"அத்தைக்கு எதுவும் ஆகாது ரூபி, நான் இப்ப தான் சீஃப் டாக்டர்கிட்ட பேசிட்டு வந்தேன். நம்புவோம் சரியா?"
"ம்ம், இருந்தாலும் எனக்கு பயமா இருக்கு. ஒருவேளை அவங்களுக்கு ஏதாவது ஆச்சுனா, வாழ்க்கை முழுசும் அதோட தாக்கம் எனக்குள்ள இருந்துக்கிட்டே இருக்கும் அபி. ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்கடா, அதை எல்லாம் பார்த்தி சொன்னப்ப.. நான் அனுபவிச்சது எல்லாம் ஒண்ணுமே லல்லனு தோணுச்சு."
"என்ன திடீர்னு, அம்மாமேல பாசம் வந்திடுச்சா?"
மெலிதாய் புன்னகைத்தவள், "என்னால யாரையுமே வெறுக்கவோ விலக்கவோ முடியாது. அதுக்கு உன்மேல ஏற்பட்ட உணர்வே சாட்சி, ஏன்னா நீ முதல எனக்கு கொலைகாரனா தான் அறிமுகமான! அதேபோல என்னால யார்க்கிட்டயும் உடனே நெருங்கவும் முடியாது. அது உனக்கும் தெரியும், எனக்குள்ள இருந்த குழப்பம் தெளிவாகி உன்னை நான் முழு மனசோட ஏத்துக்க எவ்வளவு நாளாச்சு?
அப்படி இருக்கும் போது அம்மான்ற உறவுல பதிஞ்சு போன அங்கையம்மாவோட உருவத்தை எடுத்திட்டு, இவங்களை எப்படி என்னால உடனே பொருத்திப் பார்க்க முடியும்? அது என்னை வளர்த்தவங்களுக்கு நான் செய்யிற அநியாயம் இல்லையா? தன்னைப் பெத்தவங்களைக் கூட மறந்திட்டு இவங்களை அம்மாவா ஏத்திக்கிட்ட பார்த்தியோட உணர்வும், என்னுடைய உணர்வும் ஒரே மாதிரிதான அபி?
அவன் வளர்த்த பாசத்துக்காக உயிரைக் கொடுக்கவும் துணிஞ்சவன். நான் என்னை வளர்த்தவங்களோட ஆசைக்காக, மதனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன். இதுல எதுவும் தப்பு இருக்கா? இல்ல, நான் என்னை பெத்தவங்களை விட்டு விலகி நிக்கிறது கொலைக் குத்தமா? மாற்றம் ஒரே நாள்ல வந்திடாது அபி, அப்படி வந்தா அது நடிப்பா தான் இருக்க முடியும்.
நான் நடிக்க விரும்பல. எனக்கு அவங்க மேல அன்பு அக்கறை எல்லாமே இருக்கு. ஆனா அது இயல்பா வெளி வரணும், நீ நேத்து சொன்னது தான். என்னையறியாம நான் அவங்களை அம்மானு கூப்பிட்டா தான், அது உண்மையா இருக்கும். அதுதான் நான் அவங்களுக்கு கொடுக்கிற மரியாதை, சந்தோஷம்.
மனசுக்குள்ள அம்மா அம்மானு மனனம் பண்ணிக்கிட்டு வெளிய ஒப்பிக்க என்னால முடியாது. அப்படி செஞ்சா.. அது அவங்களோட இத்தனை வருஷ தவத்துக்கு, நான் செய்யிற அவமரியாதை!" என விழிகளில் நீரோடு உரைத்தவளின் கையை இறுக்கமாய் பற்றிக்கொண்டான்.
"நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா ரூபி?"
அவள் கேள்வியாய் பார்க்க, "நாம அரசி அத்தையை சென்னைக்கு கூட்டிட்டு போயிடலாமா?"
"வள்ளி அத்தையையும் சேர்த்தே கூட்டிட்டு போயிடலாம். வெற்றி அங்க வொர்க் பண்ணுறப்ப, அவங்க மட்டும் எப்படி ஊர்ல தனியா இருப்பாங்க? பார்த்திக்கும் அவன் ஆசைப்பட்ட செஃப் வேலையை வாங்கிக் கொடுக்கணும். வெற்றியோட அப்பாக்கும் ஏதாவது செய்யணும்!" என்றவளைப் பார்த்து புன்னகைத்தவன், "உள்ள வேணும்னா தள்ளலாம்."
"ம்ம், எதுவா இருந்தாலும் நல்ல யோசிச்சு பண்ணு, உனக்குத் தெரியாததா?" என்றவள் தொடர்ந்து, "டிரீட்மெண்ட் இப்ப எந்த லெவல்ல இருக்கு? டாக்டர்ஸ் ஏதாவது சொன்னாங்களா?"
"ஒண்ணும் சொல்லல, சென்னைல இருந்து டாக்டர்ஸ் வந்து பார்த்திட்டு இருக்காங்க. நிச்சயம் நல்லதே நடக்கும்."
"நீ இருக்கிறப்ப எனக்கு என்னடா கவலை? அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது. ஒரு பொண்ணா, நான் அவங்களுக்கும் என்னுடைய கடமையை செய்யணும்! இத்தனை வருஷம் கழிச்சு அவங்க பொண்ணைப் பார்க்கிற சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. நிச்சயமா அதை இழக்க விரும்ப மாட்டாங்க. அதுக்காகவே பிழைச்சு வந்திடுவாங்க." என்றவளை கனிவுடன் பார்த்தான் அபி.
வெற்றி.. அரசிக்கு சிகிச்சை முடிந்த செய்தியை அனுப்ப, உடனே மருத்துவமனைக்குள் நுழைந்தனர் இருவரும். மருத்துவரிடம் சைத்தன்யாவும் நேத்ரனும் பேசிக் கொண்டிருக்க, அபியும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.
"என்னாச்சு டாக்டர்? நேத்து நைட் கூட நல்லாதான் பேசிட்டு இருந்தாங்க. ஆனா காலைல திடீர்னு இப்படி ஆகிடுச்சு!"
"நான் வெற்றிக்கிட்ட அவங்களைப் பத்தின எல்லா டீட்டெயில்ஸூம் கேட்டுட்டேன் அபி. இருபத்து நாலு வருஷமா கால் நடமாட்டம் இல்லாம இருந்திருக்காங்க. அதுனால அவங்களோட உடல் உறுப்புகள் சரியா இயங்குறதுக்காக இத்தனை வருஷமா டேப்லட்ஸ் போட்டிட்டு இருக்காங்க.
இப்ப என்ன பிராப்ளம்னா கடந்த சில மாதங்களா அவங்க ஹெவி டோஸ் டேப்லட்ஸ் போட்டுட்டிருக்காங்க. நாம சாதாரணமா அந்த மாதிரி டேப்லட்ஸ் எடுத்துக்கிட்டாலே சைட் எஃபெக்ட்ஸ் வரும். அவங்களோட உடல் நிலையைப் பத்தி சொல்லணுமா என்ன? அதோட விளைவுதான் இது.."
மருத்துவர் கூறியதைக்கேட்ட மித்து சிந்தனையில் மூழ்க அபி, "ம்ம், இப்ப எப்படி இருக்காங்க? எந்த பிராப்ளமும் இல்லையே?"
"உயிருக்கு எந்த பிராப்ளமும் இல்ல, ஆனா.." என்று அவர் தயங்க.. மித்து, "எதுனாலும் சொல்லுங்க டாக்டர்!"
"கழுத்துக்கு கீழயிருக்க மொத்த பார்ட்ஸ்ஸோட ஃபங்ஷனும் நின்னுப் போச்சு. இப்பக்கூட நீங்க சரியான டைமுக்கு கொண்டு வந்ததுனால தான் காப்பாத்த முடிஞ்சது. கொஞ்சம் லேட் ஆகி இருந்தாலும் என்ன வேணாலம் நடந்திருக்கலாம். இனி கவனமா பார்த்துக்கோங்க." என்றுவிட்டு மருத்துவர் செல்ல, சிலபல நிமிடங்கள் அவ்விடம் மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டது.
ஒருமணிநேர இடைவெளியில் ஒவ்வொருவராய் சென்று, மயக்கத்தில் இருந்த அரசியைப் பார்த்துவிட்டு வந்தனர். பார்த்தி மட்டும் அருகிலேயே இருக்க, மித்ராவும் வெளியேறாமல் அங்கேயே இருந்தாள்.
மௌனமாய் கண்ணீர் வடிக்கும், தன்னை ஈன்றவரின் வளர்ப்பு மகனைக்கண்டு அவளுக்கும் மனம் வலித்தது. பார்த்தியின் தோளில் மித்து கை வைக்க, என்னவென்று திரும்பிப் பார்த்தான்.
"இப்ப என்னாச்சுனு இப்படி அழுதிட்டு இருக்கீங்க? அதான் அவங்களுக்கு ஒண்ணும் ஆகலேல?"
"ஆனா இனிமேல் அம்மாவை எப்படி பார்த்துக்கிறது?"
"பார்த்துக்கலாம். நானும் இருக்கேன் சரியா?" என்று புன்னகைத்தவளின் கையை இறுக்கமாய் பற்றிக் கொண்டான் பார்த்தி.
"சரி, இவங்களை கவனிச்சிக்கிறது யாரு?"
"நான் வீட்டுல இருக்க சமயத்துல நான்தான். மத்த நேரம் எல்லாம் ராணிமா."
"ம்ம், நீங்க பார்த்துக்கோங்க, நான் இப்ப வந்திடுறேன்." எனக் கூறிச் சென்றவள், அபியிடம் அந்த விஷயத்தை பகிர்ந்துவிட்டு வந்தாள்.
வெற்றி, அபி, ஜனா, சைத்தன்யா நால்வரும் வீட்டில் இருப்பவர்களை விசாரிக்கச் செல்ல, மற்றவர்கள் மருத்துவமனையில் இருந்தனர்.
ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் இமைகளைப் பிரித்தார் அரசி. படுக்கையில் இருந்தவரின் கண்களில் முதலில் பட்டது அவரது வளர்ப்பு மகனும், பெற்ற மகளும் தான்.
அனிச்சையாய் இதழ் பிரிந்து, "பார்த்தி." என்றழைக்க இருவரது கவனமும் அரசியிடம் திரும்பியது.
மெலிதான புன்னகையுடன் மித்து அருகே செல்ல, "அம்மா.." என வலியுடன் அழைத்தவாறு அவரின் உணர்வற்ற கைகளைப் பற்றிக் கொண்டான் பார்த்திபன்.
அரசிக்கு எவரும் சொல்லாமலேயே, மகனின் தொடுகையை உணர முடியாதை அறிந்து, தனது உடல் நிலையைப் பற்றி புரிந்து கொண்டார்.
அவரது விழியோரம் நீர் வழிய, அடுத்த நொடியே அதை துடைத்து விட்டாள் மித்து.
"டாக்டர் ஒருவாரம் உங்களை ஹாஸ்பிடல்ல இருக்க சொல்லி இருக்காரு. உங்களுக்கு இங்க இருக்க இஷ்டமா? இல்ல வீட்டுக்கு போகலாமா?" என அவள் வினவ, புரியாமல் பார்த்தார் அரசி.
"எனக்கு ஹாஸ்பிடல் ஸ்மெல்லே பிடிக்காது, உங்களுக்கு எப்படிமா?" என்று அவளே கேட்க, கண்களில் நீர்பெருகியது அரசிக்கு.
"எனக்கும் பிடிக்காது!" என மகிழ்ச்சியும் திணறலுமாய் கூற, "சரி, அப்ப நாம வீட்டுக்கு போயிடலாமா? உங்கம்மா பிறந்த வீட்டுக்கு, உங்க கணவர் வளர்ந்த வீட்டுக்கு!" என்று கேட்க, பார்த்தியும் அரசியும் மித்ராவை வியப்பும் அதிர்ச்சியுமாய் பார்த்தனர்.
"என்னமா பதிலே சொல்ல மாட்டிறீங்க?"
"எனக்கு உன்கூட இருக்கணும் மித்துமா." என்று ஒவ்வொரு சொல்லாய் திக்கித் திணறி கூறினார்.
"அது என்னோட புகுந்த வீடு, அங்க நான் இல்லாம எப்படி? நீங்களும் பார்த்தியும் என்கூட தான் இருக்கப் போறீங்க!" என்றவள், நேத்ரனிற்கு அழைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னாள்.
அதேநேரம் வீட்டில்...
முகம் முழுவதும் இரத்தம் வழிந்தபடி நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டிருந்தார் தீரன். ராணி சற்றுத் தள்ளி கைகளால் வாயை மூடிக்கொண்டு அழ, காங்கேயன் தம்பியின் நிலையை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
"என்ன காங்கேயன் சார் இப்பவாது உண்மையை சொல்லுறீங்களா?" என்று அபி வினவ, அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்யத் தயாரானாள் சைத்தன்யா.
வெற்றி தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் வெறும் பார்வையாளனாய் இருக்க, ஜனா தனது கையில் இருந்த தீரனின் குருதியை நீரின் மூலம் தூய்மை செய்து கொண்டிருந்தான்.
"சொல்லுங்க, மதனை உங்களுக்கு எப்படித் தெரியும், ஏன் அவனைக் கொன்னீங்க?" என அபி அடக்கப்பட்ட கோபத்துடன் வினவ, தீரன் வாயைத் திறக்கமாட்டேன் என அப்பொழுதும் தன்நிலையிலேயே உறுதியாய் இருக்க.. காங்கேயன் தனக்கும் அதுபோல் அடிவிழுமோ என்றெண்ணி நடந்ததைக் கூறத் துவங்கினார்.
"மதனை நாங்க ஒண்ணும் தேடிப் போகல. அவனாதான் இந்த ஊருக்கு அரசியைத் தேடி வந்தான். நாலஞ்சு பேர்கிட்ட விசாரிச்சு, நேரா வீட்டுக்கே வந்திட்டான். என்கிட்டயே மங்கையற்கரசி ராதாகிருஷ்ணனை பார்க்கணும், அவங்களுக்கு குழந்தை எதுவும் இருக்கானு விசாரிச்சான். அப்படி யாரும் இல்லனு சொல்லி அவனை அனுப்பி விட்டுட்டேன். ஆனா அவன் என்னோட பேச்சை நம்பல.
ஊருக்குள்ள நாங்க அரசிக்கு கல்யாணமே பண்ணலனு சொல்லி வச்சிருந்தோம். திடீர்னு ஒருத்தன் இப்படி வந்து விசாரிக்கவும், என்ன செய்யிறதுனு தெரியல. நான்தான் தம்பிக்கிட்ட மதனைப் பத்தி சொன்னேன். அவனை மிரட்டி அனுப்பிடலாம்னு தான் நினைச்சோம். ஆனா அவன் எங்களை விட புத்திசாலித்தனமாவும் வேகமாவும் இருந்தான்.
எனக்கே தெரியாம என்னை ஃபாலோ பண்ணி தம்பியைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டான். அவனுக்கும் ராணிக்கும் இருக்க பழக்கத்தையும் தெரிஞ்சிக்கிட்டு, அரசியைப் பத்தின உண்மையை சொல்லச் சொல்லி மிரட்டினான்.
ஆனா தம்பி அவன்கிட்ட சாமர்த்தியமா பேசி.. அரசி காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஆனா அவளோட புருஷன் அவளை ஏமாத்திட்டுப் போயிட்டான். குடும்ப கௌரவத்துக்காக இதை வெளிய சொல்லாம இருக்கோம்னு சொல்லி, அவனை நம்பவச்சான்.
ஏன் அரசியைப் பத்தி விசாரிக்கிறனு கேட்டதுக்கு.. மித்ராவைப் பத்தி சொல்லி, அவளோட அம்மா அப்பாவை தேடி வந்திருக்கிறதா சொன்னான்.
அதுவரைக்குமே நாங்க அரசியோட குழந்தை சேத்துப் போச்சுனுதான் நினைச்சிட்டு இருந்தோம். ஆனா மதன் சொன்னது எங்களுக்கு புதுசா இருந்திச்சு. அவனுக்கு மித்ரா அரசியோட பொண்ணுனு தெரியாது, தனக்கு கிடைச்ச அட்ரஸை வச்சு விசாரிக்கத்தான் வந்திருந்தான். அவன் தேடி வந்த மங்கையற்கரசி, எங்ககூட பிறந்தவ இல்லனு அவனை அனுப்பி வச்சோம். ஆனா அவன் நம்பினானா இல்லையானு தெரியல.
மதனைப்பத்தி விசாரிச்சு மித்ராவைப்பத்தி தெரிஞ்சிக்கிட்டோம். அரசிக்கு பிரசவம் பார்த்த டாக்டரை தேடிபிடிச்சு மிரட்டுனதுல.. குழந்தை சாகலை, அரசி தான் அப்படி சொல்லச் சொன்னானு உண்மையை ஒத்துக்கிட்டாங்க.
அப்புறம் ராணிக்கிட்ட சொல்லி அரசிக்கிட்ட பேசிப் பார்க்க சொன்னோம். கல் நெஞ்சக்காரி வாயவே திறக்கல. அவளோட ரூம்ல தேடிப் பார்த்து ஒரு சின்னப் பொண்ணோட போட்டோவைக் கொண்டு வந்து கொடுத்தா ராணி. அதை வச்சு அந்தப் பொண்ணு இப்ப எப்படி இருக்கும்னு கம்ப்யூட்டர்ல பார்த்துதான், அது மித்ரானு உறுதி பண்ணோம்."
"அது என்ன ஃபோட்டோ?" எனப் அபி புரியாமல் வினவ, "அரசியோட ரூம்ல இருக்கு" என்றார் காங்கேயன்.
"எந்த இடத்துல இருக்கு?"
"ராணிக்குதான் தெரியும்." எனப் பதிலளிக்க, வெற்றி அவரை அரசியின் அறைக்கு அழைத்துச் சென்று அந்த புகைப்படத்தை எடுத்துவந்தான்.
அதில் சிறுகுழந்தை ஒன்று, நாற்காலியில், கையில் குச்சி மிட்டாயுடன் அமர்ந்திருந்தது. அதை தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்த அபி, மித்ராவிற்கு அனுப்பி அரசியிடம் விசாரிக்கச் சொன்னான்.
மித்ரா கைப்பேசிக்கு வந்த புகைப்படத்தை காட்டி, "யாருமா இது?" என்று வினவ, "நீதான்டா மித்துமா. உன்னை நான் பார்க்க ஆசைப்பட்டேனு சொல்லி, உனக்கு ரெண்டு வயசு இருக்கும் போது வைரவேந்தன் மாமா போட்டோ எடுத்து பார்த்தியோட அப்பாக்கிட்ட கொடுத்து விட்டார்."
தனது தாயின் ஏக்கத்தையும் ஆசையையும் அறிந்து மனதிற்குள் கலங்கியவள், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அபியிடம் தெரிவித்தாள்.
பின் அருகே அமர்ந்து, "இந்த ஒரு ஃபோட்டோதான் இருக்கா அம்மா?"
"இன்னொரு ஃபோட்டோவும் இருக்கு மித்து. அதுல உங்க பிறந்த நாளைன்னைக்கு நீயும் வேந்தனும் ஒண்ணா கேக் வெட்டுற மாதிரி இருக்கும். வைரன் மாமா, மீனா, அந்த ஆசிரமத்த நடத்துற கங்காதரன் ஐயா எல்லாரும் இருப்பாங்க."
"அது எங்கமா?"
"வீட்டுல யாராவது பார்த்தா வைரன் மாமாவை வச்சு நீ உயிரோட இருக்கிறதை கண்டு பிடிச்சிடுவாங்கனு, அதை பார்த்தி அப்பாக்கிட்ட கொடுத்து வச்சிருக்க சொன்னேன். அவர் இறந்ததுக்கு அப்புறம் ஃபோட்டோவைப் பத்தி எந்த விபரமும் தெரியல" என வலியோடு கூறினார் அரசி.
"சரி அது போகட்டும், நாம ஃபோட்டோ எடுத்துக்கலாமா?" என்றவள், அழுது வீங்கிய முகத்தோடு இருந்த பார்த்தியையும் இழுத்து நிறுத்தி, மூவரின் நிழல் படங்களையும் கைப்பேசியில் பதித்துக் கொண்டாள்.
லக்ஷ்மியும் வள்ளியும், மித்ரா தன்தாயுடன் இயல்பாக பேசத் துவங்கி விட்டதை ஒருவித நிம்மதியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தீரனிடம் விசாரணையை முடித்துவிட்டு அனைவரும் ஒன்றாக சென்னைக்கு கிளம்பலாம் என அபி கூறியிருக்க, அதற்காக மருத்துவமனையில் காத்திருந்தனர் ஐவரும்.
மித்ராவின் மூலம் உறுதி செய்து கொண்டவன், காங்கேயனை மேலும் நடந்தவற்றைக் கூறுமாறு கேட்க, "மதனைப் பத்தி விசாரிச்ச வரைக்கும் அவன் லேசுபட்ட ஆளா தெரியல. அரசியைப் பத்தி வெளியவே தெரியக் கூடாது, அதுக்கு அந்த மதனும் அரசியோட பொண்ணும் உயிரோட இருக்கக்கூடாதுனு நினைச்சோம்.
அதோட அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப்போறது வேற தெரிஞ்சிச்சு. சாக வேண்டியவளுக்கு கல்யாணம் எதுக்குனு, கல்யாண மண்டபத்துல வச்சே மதனைக் கொல்ல முடிவு பண்ணோம். ஆனா அவன் வெளிய போகவும், உடனே ஒருகாரை ரெடி பண்ணி அதுமூலமா அவனை அடிச்சுத் தூக்கிட்டு வந்திட்டோம்."
"வந்திட்டோம்னா?" என்று அபி குழப்பத்துடன் வினவ, "நானும் தீரனும்தான்." என்றார் காங்கேயன்.
உண்மையில் அவரது பதில், வெற்றிக்கு பெரும் அதிர்ச்சியே. தனது தந்தைக்கும் இதில் பங்கிருக்கும் என எதிர்பாக்கவில்லை.
அவன் திகைப்புடன் இருக்க, ஒருபெருமூச்சை வெளியிட்ட அபி, "பிரதாப்பை உங்களுக்கு எப்படித் தெரியும்?" என வினவ, "அதுயாரு பிரதாப்?" என்றார் அவர்.
தனது கைப்பேசித் திரையில் நேத்ரனின் உருவில் இருந்த பிரதாப்பின் புகைப்படத்தைக் காட்ட, "இவன் யாருனே எனக்குத் தெரியாது." என உறுதியாய் கூறினார்.
'அவளை கொல்லுறதுக்கு ஒருத்தன் காத்துக்கிட்டு இருக்கான்.' என்ற பிரதாப்பின் சொற்கள் அபிக்கு குழப்பத்தைக் கொடுக்க, அதை பிறகு பார்க்கலாம் என ஒதுக்கித் தள்ளியவன் ராணியிடம், "அத்தைக்கு ஹெவி டோஸ் டேப்லட் கொடுத்தது நீங்கதான?" என வினவ, அவரோ மறுத்து தலையசைத்தார்.
அடுத்த நொடி சைத்தன்யா அவரது கன்னத்தில் இரண்டு அறைகள் விட்டிருக்க, அனைவரும் திகைப்புடன் பார்த்தனர்.
"என்னாச்சு? உண்மைய சொல்லாட்டினா இப்படித்தான் நடந்துக்கணும்! அந்த பிரதாப் பத்தி தெரிஞ்சதுக்கு அப்புறம்தான், நான் இதெல்லாம் பண்ணுறது இல்ல. ஜனாவை ஆளை வச்சு கடத்தினது நான்தான், ஏன் மறந்திட்டியா அபி?" என வினவ, மெலிதாய் புன்னகைத்தான்.
"உண்மையை சொல்லுறியா? இல்ல? நான் சி.எம்.பொண்ணு, ஒரே நிமிஷத்துல உங்களை எல்லாம் போட்டுத் தள்ளிட்டு, தடயமே இல்லாம அழிச்சிடுவேன். நான் அப்படி ஒண்ணும் நல்லவ இல்ல. பிறக்கும் போதே இரத்தத்துல அரசியல் வாசனையோட பிறந்தவ!" எனக் கை ஓங்கியவளைப் பார்த்து பயந்த ராணி, "நான் சொல்லிடுறேன்." என்றார்.
"அரசி தன்னோட குழந்தையை காப்பாத்திட்டு, பொய் சொல்லிட்டானு தெரிஞ்சதுமே மாமாக்கு.."
"மாமாவா அதுயாரு?" என சைத்தன்யா வினவ, ஜெயத்திரனின் புறம் அவரது பார்வை சென்றது.
"ஓஹோ, ம்ம் மேல சொல்லு!" என்றிட, "மாமாக்கு அவ மேல பயங்கர கோபம் வந்திடுச்சு. அதுனால அந்த மாத்திரையை என்கிட்ட கொடுத்து அரசிக்கு கொடுக்க சொன்னாங்க. அப்புறம்.." என தயங்கி நிறுத்தியவர் காங்கேயனை ஒருபார்வை பார்த்துவிட்டு,
"அரசி செத்துட்டா அவங்க சொத்து எல்லாம் தனக்கு வந்திடும்னு யோசிச்சு, இப்படி செய்யலாம்னு சொன்னதே பெரியவர்தான். எனக்கும் அரசிமேல கோபம் இருந்திச்சு, அதான் இப்படி செஞ்சேன்." என்றார் ராணி.
வெற்றிக்கு அங்கு நிற்கவே கூசியது. தனது தந்தை சுயநலவாதி என்று அறிவான். ஆனா உடன் பிறந்தவரையும், அவரது உறவுகளையுமே கொல்லும் அளவிற்கு வெறியுடையவர் என அறிந்ததும், அவமானத்தில் தலைக் கவிழ்ந்தான்.
அபியையோ சைத்தன்யாவையோ நேருக்குநேர் பார்க்கும் திராணி இல்லாது அங்கிருந்து வெளியேற.. ஜனாவிடம் வேலையை ஒப்படைத்து விட்டு, அவனைப் பின்தொடர்ந்து சென்றாள் சைத்தன்யா.
"வெற்றி." என அவனது கைப்பற்ற, விலகி நின்றான்.
"இவ்வளவு நாளும் என்னுடைய வேலையையும் நேர்மையையும் நினைச்சு எவ்வளவு கர்வத்தோட இருந்தேன் தெரியுமா? ஆனா இப்ப அதெல்லாம் ஒண்ணுமே இல்லனு ஆகிடுச்சு. இப்படி ஒருத்தருக்கு மகனா பிறந்ததை நினைச்சா, அசிங்கமா இருக்கு." என கண் கலங்கியவனை காண சகியாது, அணைத்துக் கொண்டாள்.
"ம்ப்ச்ச், அவங்க செஞ்ச தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? உங்களோட நேர்மை என்னைக்கும் உங்களை விட்டுப் போகாது. அதை நீங்க என்னைக்கும் பெருமையா சொல்லிக்கலாம்." என்றவள், அவனது முதுகில் தட்டிக்கொடுக்க, தன்னை நிலைநிறுத்த முயன்றான்.
அறையின் அள்ளே அபி காரியத்தில் கண்ணாக, "அப்ப ரூபியை சூட் பண்ணதும் நீங்கதான?" என வினவ, காங்கேயன் அவசரமாய், "நான் இல்ல." என்று மறுத்தார்.
அவனது பார்வை தீரனிடம் செல்ல, "நான் அனுப்பின ஆள்தான் சூட் பண்ணான்." என்றார் அவர்.
"மிஸஸ் பரிமளத்துக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம்?"
"நான் மித்ராவைக் கொல்றதுக்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திட்டு இருந்தப்ப தான், உன்னை அவளோட பார்த்தேன். விசாரிச்சு உன் குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா, நீ அந்த வைரவேந்தனோட பேரனா இருப்பனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல." என்றவரின் கண்களில் இப்பொழுதும் பகையும் கொலை வெறியும் கொழுந்துவிட்டு எரிந்தது.
"உங்க அம்மாக்கு உன்னை பிடிக்காதுனு தெரிஞ்சிக்கிட்டேன். அந்த பொம்பளைய ஃபாலோ பண்ணப்ப, உன்னை கொல்லுறதுக்கு யாராவது ஆள் வேணும்னு ரவுடிங்ககிட்ட விசாரிச்சிட்டு இருந்தா. அதான் நானே ஏஜெண்ட் மாதிரி போய் அவளைப் பார்த்தேன். எனக்கு தெரிஞ்ச ஒருத்தனை அனுப்பி உன்னை சுடும் போது, அப்படியே அந்த மித்ராவையும் சுடச் சொன்னேன். ஆனா அந்த நாதாரி கோட்டை விட்டிடுச்சு." என அடித் தொண்டையில் இருந்து குரோதத்துடன் கத்த, அன்றைய நினைவில் முதன்முதலாய் தன்நிதானம் தொலைத்து தீரனை அடித்திருந்தான் அபி.
ஜனா வியப்புடன் பார்க்க, "அன்னைக்கு மட்டும் என்னோட ரூபிக்கு ஏதாவது ஆகி இருக்கணும், உன்னை கண்டந்துண்டமா வெட்டிப் போட்டிருப்பேன்." என்றவன், "ரூபி வீட்டுல அவளோட கழுத்தை நெறிச்சதும் நீதான?"
ஏளனப்புன்னகை ஒன்றை சிந்தினான் தீரன்.
"அவளைக் கொல்லாம என் உயிர் போகாது. எங்க அப்பாக்கு நான் கொடுத்த வாக்கை நிச்சயம் காப்பாத்துவேன். என்னைக்கா இருந்தாலும் அவளை நான்தான் கொல்லுவேன்!" என தீரன் கூறிமுடித்த அடுத்த நொடி, அவரின் நெற்றிப் பொட்டை துப்பாக்கி குண்டு துளைத்து, பின்னந்தலை வழியே வெளியேறியது.
அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, "இந்த தடவை கரெக்டா சூட் பண்ணிட்டேன்ல தீரா. என்னை டிரைன் பண்ண உன் பெயரைக் காப்பாத்திட்டேன்!" என கண்களில் நீரும், வலிந்த புன்னகையுமாய் கூறிய பார்த்தியின் கன்னத்தில்.. அழுகையுடன் பட்டென்று அறைந்திருந்தான் நேத்ரன்.
அரசிக்கு தேவையான உடைகளையும் பொருட்களையும் எடுத்துச் செல்ல வந்திருந்த பொழுது தான், தீரன் கூறியதைக் கேட்டு பார்த்தி சட்டென்று எடுத்த முடிவுதான் இது.
"டேய் பைத்தியக்காரா என்னடா பண்ணி வச்சிருக்க?" என வெற்றி அவனது கையில் இருந்த துப்பாக்கியை பறிக்க முயல.. அதை தடுத்தவாறே, "அம்மாக்கு இப்பதான் மித்து கிடைச்சிருக்கா மாம்ஸ். அவளுக்கு ஏதாவது ஒண்ணுனா, அவங்களால தாங்கிக்க முடியாது. நிறைய நாள் மித்துக்கூட இருக்கணும்." என்றான் பார்த்தி.
"அதுக்காக இப்படியா? நீ முதல்ல கன்னைக் கொடு" என்றதும், மறுத்து தலை அசைத்தான்.
"பார்த்தி சொல்லுறதைக் கேளு" என அபி முன்னே வரவும், "மித்துவையும் அம்மாவையும் நல்லா பார்த்துக்கோங்க அத்தான்." என்றவன், துரிதமாய் மற்றொரு அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டு, காவல் துறைக்கு அழைப்புவிடுத்தான்.
அதிகாரம் கையில் இருந்தும் எதுவும் செய்ய இயலாத தன்னையே வெற்றி நொந்து கொள்ள, அடுத்தடுத்த நிகழ்வுகள் துரிதமாய் நடந்தேறின.
தான் செய்ததற்கு நிச்சயம் தண்டனை வேண்டும் என பார்த்தி பிடிவாதமாய் இருந்ததால், அவனை காவல் துறையினரிடமே ஒப்படைத்தான் அபி.
காங்கேயன் மற்றும் ராணியின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அவர்களுக்கான தண்டனையை பெற்றுத் தந்தான் வெற்றி.
பார்த்தி தற்காப்பிற்காக தீரனை சுட்டதாய் வழக்கறிஞர் வாதத்தை முன் வைக்க.. அரசுத்தரப்பில் எவ்வித மறுப்பும் கூறாததாலும், அவனே முன்வந்து சரண் அடைந்ததாலும் இரண்டு ஆண்டுகால சிறைதண்டனை வழங்கப்பட்டது.
வெற்றியும் அபியும் குடும்பத்தோடு சென்னையை வந்தடைய, மித்ராவின் திருமண ஏற்பாட்டினை துவங்கினர் பெரியவர்கள்.
 
Top Bottom