What's new

Welcome to ஆனந்த ஜோதி நாவல்கள்

Join us now to get access to all our features. Once registered and logged in, you will be able to create topics, post replies to existing threads, give reputation to your fellow members, get your own private messenger, and so, so much more. It's also quick and totally free, so what are you waiting for?
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆகாயம் காணாத பொன் மேகமே - அத்தியாயம் 6

Aathirai Mohan

Member
Staff member
Joined
Dec 1, 2025
Messages
31
Reaction score
23
Points
8
அத்தியாயம் 6

அன்று ஆகாஷைச் சந்தித்துவிட்டு, சௌம்யாவையும் வீட்டில் விட்டுவிட்டு மேகா அயர்ந்துபோய் வந்தபோது, காலணியை விடும் இடத்திலேயே உள்ளே ரங்கநாதன் அலைபேசியில் யாருடனோ உரையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

“ஆங்க்… ஆமா, எனக்கும் அந்த டென்ஷன் இருந்துட்டே தான் இருக்குங்க. கல்யாணத்துக்கு இன்னும் ஒரே மாசம் தான் இருக்குன்னு என் வைஃப் சொல்லும் போது என்னால நம்பவே முடியல. ஆனா பாருங்க, தலைக்கு மேல இன்னும் எத்தனை வேலை இருக்கு? இன்னும் பத்திரிக்கை வைக்கறது பாதி இருக்கு. உங்க சைட்ல எல்லாம் ஓரளவு முடிஞ்சதா?” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மெல்ல நழுவ முயன்றவளை,

“மேகா…” என்ற குரல் தடுத்தது. அலைபேசியை ஒரு பக்கமாக வைத்தவாறு அழைத்தார் ரங்கநாதன்.

அப்போதே கண்களை இறுக மூடி, உதட்டைக் கடித்தாள் மேகா. அவரிடமிருந்து எப்படியாவது நழுவிவிட வேண்டும் என்றுதான் அமைதியாகச் சென்றாள். அப்படியும் அழைத்துவிட்டார் அவர்.

“ஆங்க்… அப்பா…” என்றாள் குழைந்தபடி.

சைகையில் அவளை தனக்கு எதிரே இருந்த ஒற்றை சாய்விருக்கையில் அமரச் சொன்னார்.

“சரிங்க… நான் மறுபடியும் உங்ககிட்டப் பேசறேன். வச்சிடறேன்.” என்று மிகவும் பணிவாகப் பேசி அலைபேசியை வைத்தவரை ஆச்சரியமாகப் பார்த்தாள் மேகா.

ரங்கநாதன் இதுவரை யாரிடமும் இத்தனை பணிவாக நடந்தோ, பேசியோ பார்த்ததில்லை. அனைத்தும் மேகாவின் திருமணப் பேச்சை ஆரம்பித்ததிலிருந்து தான். இதுவும் ஒருவகையில் நல்லதுதான் என்று நினைத்தாள் மேகா.

“எங்க போய்ட்டு வர?” என்றார்.

அதற்கு பெருமூச்சொன்றை விட்டவள், “டப்பிங்க் வேலை நிறைய இருந்தது பா. அதை முடிச்சிட்டு சௌமி வரேன்னு சொன்னா. அப்படியே அவளோட வெளிய போய்ட்டு இப்போதான் வரேன்.” என்றாள்.

“உனக்கு என்கேஜ்மெண்ட் முடிஞ்சது மேகா. பொண்ணுங்க அதுக்கப்பறம் வீட்டை விட்டு தனியா எங்கயும் போகக்கூடாதுன்னு சொல்வாங்க. ஆனா, நீ அங்கயும், இங்கயும் சுத்திட்டு வர. இந்த டப்பிங்க் வேலையெல்லாம் போதும்னு சொன்னாலும் கேட்கல.” என்று வழக்கம்போல் அவளை வசைபாட ஆரம்பித்தார்.

அதைக் கேட்டவுடன் உச்சுக்கொட்டியவள், “அய்யோ!! அப்பா… ப்ளீஸ்… உடனே ஆரம்பிக்காதீங்க. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் இங்க இருக்கப்போறேன். அப்பறம் அமெரிக்கா போய்ட்டா எனக்கு இங்க எந்த வேலையும் இருக்காது. அதுவரைக்கும் இங்க என்னோட இஷ்டம் போல இருக்கேனே…” என்றாள்.

“சரி… நீ மாப்பிள்ளைக்கு போன் பண்ணியா?” என்றார்.

“அப்பா… அவரா போன் பண்ணா மட்டும் தான் நான் பேச முடியும். அவர் இந்நேரம் எழுந்திருக்க மாட்டார். விடியற்காலை. நான் தூங்கும் போது அங்க அவரோட வொர்க் டைம். இதுல நாங்க எங்க போய்ப் பேச?” என்று சலித்துக்கொண்டே பதில் தந்தாள்.

“எல்லாத்துக்கும் ஒரு பதில் ரெடியா வச்சிருக்க. சரி… அதெல்லாம் இருக்கட்டும். இன்னைக்கும் அவன மீட் பண்ணியா?” என்று மீண்டும் ஆரம்பித்தவரைப் பார்த்து, தலையைப் பிடித்துக்கொண்டாள் மேகா.

“அப்பா!! நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? எனக்கு ரொம்பத் தலைவலிக்குது. என்னை விடுங்க. நான் போறேன்.” என்று மீண்டும் அவர் வேறு கேள்வி கேட்கும் முன்பே உள்ளே வேகமாகச் சென்றாள்.

இன்னும் ஏராளமான கேள்விகள் அவரது மனதில் இருந்தாலும், ஒரே செல்ல மகளை மேலும் தொந்தரவு செய்ய விரும்பாதவர் அமைதியாக விட்டார்.

அப்பாவிடமிருந்து தப்பித்து வந்தவள், அவர் சொன்னதைப் போல தனது மாப்பிள்ளையிடமிருந்து ஏதேனும் ஒரு குறுஞ்செய்தியாவது வந்ததா? என்றுதான் பார்த்தாள். ம்ஹூம்ம்… இல்லை.

திருமணப் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து மேகா அவனை இரண்டு முறை மட்டுமே கண்டிருக்கிறாள். அதுவும் காணொளி அழைப்பில். முதல் முறை பெண் பார்த்து முடித்த பிறகு, மற்றொரு முறை நிச்சயதார்த்தம் அன்று.

ஓரளவு நன்றாகவே பேசினான். அவளுக்கும் சரியென்று தோணவே சம்மதம் சொன்னாள். ஆனால், அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள், பொதுவானதாகவே முடிந்துவிடும். அதைத் தாண்டிப் பேச நேரமில்லை என்றே சொல்லவேண்டும்.

ரங்கநாதன் சொன்னதற்காகக் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினாள். அயர்வில் இருந்தவள், இரவு உடைக்கு மாறிவிட்டு அப்படியே படுத்துவிட்டாள். அவள் நன்றாக உறங்கிய பிறகே, அமெரிக்க மாப்பிள்ளையிடமிருந்து குறுஞ்செய்தி பதிலுக்கு வந்தது.


******

சென்னை சர்வதேச விமான நிலையம்…

ஆகாஷ் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்தான். விமான நிலையத்தில் குறிப்பிட்ட விமானங்கள் தரையிறங்கிய அறிவிப்பு வர உற்சாகமானான்.

அவனுடைய காத்திருப்புக்குப் பலனாக அவள் கையசைத்தபடி வந்துகொண்டிருந்தாள். நவீன மங்கையாக, சுருட்டை முடியும், கருப்பு நிற பையும், கருப்பு நிற சூட்கேஸையும் இழுத்துக்கொண்டு ஓடி வந்தாள் அவனிடம்.

பார்த்ததும், அவனுக்கே இது அவள்தானா? என்றொரு சந்தேகம். வந்தவள், அவனை அங்கேயே இறுகக் கட்டிப்பிடித்து முத்தமிட்டாள்.

அப்போது, “கண்ணா… டேய் கண்ணா…” என்ற வேணுகோபாலின் குரல் அழைக்க திடுக்கிட்டு எழுந்தான் ஆகாஷ்.

“என்னாச்சுப்பா…?” என்றான் தூக்கக் கலக்கத்தில்.

“ரொம்ப நேரமா அலாரம் அடிச்சிட்டே இருக்கு. நீ எழுந்திருக்காம இருந்ததால நான் வந்து எழுப்பினேன்.” என்றார் அவர்.

“ம்ம்… ஆமாம் பா… நான் ஏர்போர்ட் போகணும். இன்னைக்கு ஜோஸ்னா வரா. அதனால தான் சீக்கிரமே எழுந்திருக்கணும்னு அலாரம் வச்சேன்.” என்றான் கண்களைத் தேய்த்துக்கொண்டே.

“சரி… சரி… நீ போய் குளிச்சு ரெடியாகிட்டு வா. நான் அதுக்குள்ள உனக்கு காஃபி போட்டு வைக்கறேன். நீ குடிச்சிட்டு கிளம்பு.” என்றார் அக்கறையுடன்.

அதற்குத் தலையாட்டியவன், சொன்னதைப் போலவே இருபது நிமிடங்களுக்குள் தன்னை சீராக தயார்படுத்திக்கொண்டு வந்து நின்றான். தன் மகனின் உள்ளூர ஆர்வத்தைப் பார்த்த வேணுகோபால் புன்னகையுடனேயே காஃபியை ஆற்றிக்கொடுத்தார்.

அதை மடக்கென்று குடித்து முடித்தவன், வேகமாகச் சென்று காரை எடுத்தான். மின்னல் வேகத்தில் விமான நிலையத்துக்கு விரைந்தான்.

நேரம் அதிகாலை 5.45 மணி. ஜோஸ்னா வரும் விமானம் வந்து சேரும் நேரம். அவன் முன்னமே இருக்க வேண்டும் என்று அரைமணி நேரம் முன்பே வந்து சேர்ந்துவிட்டான்.

அதிகாலை என்பதால் ஓரளவு கூட்டம் மட்டுமே இருந்தது. அவனுள் ஒருவித எதிர்பார்ப்பு… ஒருவித பதட்டம்… என்று கூட சொல்லலாம். அவளை ஒரு வருடம் கழித்து சந்திக்கப் போகிற ஆர்வம்.

அதிகாலை கனவில் கண்டதை ஒருமுறை நினைத்துப் பார்த்துக்கொண்டான். அப்போது, விமான அறிவிப்பு வர அதே எதிர்பார்ப்பு அவனிடம் தொற்றிக்கொண்டது.

அதே போல் நவீன மங்கையாக மாறி, கருப்பு நிற ஜீன்ஸ், கருப்பு நிற இறுக்கமான பனியன், அதன் மேல் வெளிர் கருப்பு நிற கோட், கண்களில் கருப்பு நிற கண்ணாடி, தோளில் ஒரு பையும், இழுத்துக்கொண்டு வரும் ஒரு சூட்கேஸூடன் ஜோஸ்னா.

அலைபேசியில் எதையோ மும்முரமாகத் தட்டச்சு செய்துகொண்டே வந்தாள். அவன் முன்னே வந்தவள், சாதாரணமாகச் சிரித்துவிட்டு கொண்டு வந்த பைகளை அவனிடம் தந்தாள்.

காலை கண்ட கனவு முதல், இந்த நிமிடம் கண்ட கனவு வரை அனைத்தும் மாயமாகிப் போனது ஆகாஷூக்கு. அனைத்து எதிர்பார்ப்புகளையும் அடக்கிக்கொண்டு முன்னே அவன் செல்ல,

நவீன மங்கை ஜோஸ்னாவோ, இன்னும் அலைபேசியில் தட்டச்சு செய்வதை நிறுத்தவில்லை. அவளை நேராக விமான நிலையத்தின் வண்டி நிறுத்துமிடத்திற்கு அழைத்து வந்தவன், முன் சீட்டில் அமரவைத்துவிட்டு அவளுடைய உடமைகளைப் பின் சீட்டில் வைத்தான்.

உள்ளே வந்து அமரும் போதாவது அவளிடமிருந்து ஒரு சின்ன அணைப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தான். அப்போதும் ஏமாற்றமே மிஞ்சியது. இன்னும் அலைபேசியிலேயே மும்முரமாய் இருந்தவளை ஏறிட்டான்.

மெல்ல அவளது அலைபேசியை அவளது மடியோடு சேர்த்து கையமர்த்தினான். அதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் பார்த்தாள் ஜோஸ்னா.

அவள் பார்ப்பதைப் பார்த்துச் சிரித்தவன், “என்னாச்சு ஜோ… ஏதாவது கோபமா? வந்ததுல இருந்து எதுவுமே பேசமாட்டிங்கற? போன்லயே ரொம்ப மும்முரமா இருக்க?” என்றான்.

“உன்கூட பேசி தேவையில்லாத சண்டை போட இண்ட்ரஸ்ட் இல்ல ஆகாஷ். என்னை விடு.” என்றாள் வேண்டா வெறுப்பாக.

“ஏய்!! இப்போ என்ன ஆச்சு? உன்னைப் பார்க்க எவ்ளோ ஆசையா வந்தா, நீ ஒரு வார்த்தை கூட பேசலன்னா எப்படி? இதுல, விடியக்காலைல நீ ஓடி வந்து கட்டிப்பிடிக்கிற மாதிரி கனவு வேற. அதையெல்லாம் எதிர்பார்த்துட்டு வந்தா, நீ இப்படி நடந்துக்கறியே ஜோ…” என்றான் அவள் கைகளை மென்மையாய்ப் பற்றியபடி.

அதை விடுவித்தவள், “அப்போ… நீ எதிர்பார்த்தத நான் தான் பண்ணல. அப்படித்தானே!” என்றாள்.

“அய்யோ!! இல்லமா. நான் அப்படிச் சொல்லல. ஜஸ்ட், பண்ணிருந்தா நல்லா இருந்திருக்கும்னு சொன்னேன். அவ்ளோதான்.” என்றான்.

“இங்க பாரு ஆகாஷ். நான் ஏற்கனவே சொன்னதுதான். நான் ரொம்ப கேஷூவலா, ஜாலியா இருக்கலாம்னு நினைச்சா நீ அதுக்கு விடமாட்ட. அதைப் பண்ணாத, இதைப் பண்ணாதன்னு என்னைக் கண்ட்ரோல் பண்றதுலயே குறியா இருப்ப. அதையெல்லாம் நினைச்சா எனக்கு டென்ஷன் தான் ஆகுது. இவ்ளோ நாள் லண்டன்ல என்னைக் கண்ட்ரோல் பண்றதுக்கு யாரும் இல்ல. என்னோட இஷ்டப்படி ரொம்ப ஃப்ரீ பேர்ட்டா இருந்தேன். இங்க வந்தா அதெல்லாம் நடக்கறது கஷ்டம்னு எனக்குத் தெரியும். அதை நினைக்கும் போதே எனக்கு ஒரு மாதிரி இருக்கு. இதுல, நீ கனவுல நினைச்சதெல்லாம் நடக்கலன்னு ஒரு ஃபீல் உனக்கு.” என்று வெறுப்பை உமிழ்ந்தாள்.

“நான் உன்னைக் கண்ட்ரோல் பண்ணனும்னு நினைக்கல ஜோ. நீ பண்ற தப்ப சொன்னேன் அவ்ளோதான். அது உன்மேல இருக்க அக்கறைல சொல்றேன். ஆனா, நீ தப்பா புரிஞ்சுக்கிட்டா நான் என்னம்மா பண்றது?” என்றான் ஆகாஷ் பாவமாக.

“ஸீ ஆகாஷ்… என்னோட மம்மி கூட என்னை ரொம்ப சுதந்திரமா தான் விடறாங்க. ஆனா, நீ ரொம்ப டூ மச்சா பண்ற.” என்றாள் மறுபடியும்.

அவள் பதட்டப்படுவதைக் காணச் சகிக்காதவன், “சரி… சரி… நீ இன்னைக்கு தான் லண்டன்ல இருந்து வந்திருக்க. உடனே சண்டை போடணுமா? சரி… நீ இருக்கற வரைக்கும் நான் உன்னை எதுவும் சொல்லமாட்டேன். ஓகே?” என்று குழைந்தபடி பேசியதில் சிறிது சமாதானமடைந்தாள் ஜோஸ்னா.

“சரி என்ன சாப்பிடற? ரெஸ்டாரண்ட் எதுவும் போகலாமா?” என்றான்.

“இல்ல… வேண்டாம். எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. வீட்டுக்குப் போய் நல்லாத் தூங்கணும். ப்ளீஸ்… என்னை எங்கயும் கூப்பிடாத. நேரா வீட்டுல கொண்டு போய் விடு.” என்றாள்.

அதைப் புரிந்துகொண்டவனாக, “சரி… வீட்டுக்கே போகலாம்.” என்றபடி நேராக அவளது வீட்டிற்கே சென்றான்.

ஜோஸ்னாவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார் அவளது அம்மா உமா. ஆகாஷின் வண்டி சத்தத்தை வைத்தே கண்டுபிடித்து வெளியே வந்தார்.

அவரைப் பார்த்ததுமே, உலகமே மறந்தவளாக… “மம்மி…” என்று ஓடி வந்து அவரைப் பிடித்துக்கொண்டாள் ஜோஸ்னா.

அதைப் பார்த்து ஆகாஷ், ஏதோ அவளது அம்மாவிற்காவது இந்த கொடுப்பினை இருந்ததே என்று நினைத்து மகிழ்ந்தான். அவளது பைகளை வண்டியிலிருந்து இறக்கிக்கொண்டிருந்தான்.

ஜோஸ்னாவின் அத்தை ஓடிவந்து அதை வாங்கிக்கொண்டபடி அவனை நலம் விசாரித்தார். அவனை உள்ளே அழைத்தார்கள்.

“ரொம்ப தேங்க்ஸ் ஆகாஷ். என்னோட தம்பி நைட் ஷிஃப்ட் முடிச்சிட்டு காலைல ரொம்ப டயர்டா வருவான். அதனால தான் அவனை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு உங்களைப் போகச் சொன்னேன்.” என்றார் உமா.

“இதுல என்ன இருக்கு ஆண்ட்டி? ஜோஸ்னாவ நான் போய் கூட்டிட்டு வராம, வேற யார் போய் கூட்டிட்டு வருவா?” என்றான்.

“மம்மி… எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு… போய் படுக்கவா? ஆஃப்நூன் வரைக்கும் என்னை எழுப்ப வேண்டாம். நானா, எழுந்து வரேன்.” என்றாள்.

“அதுவரைக்கும் சாப்பிடாம இருப்பியா ஜோ? சாப்டுட்டு தூங்கு.” என்றான் ஆகாஷ் அக்கறையில்.

அதற்கு உச்சுக்கொட்டியவள், “இப்போ எனக்கு தூக்கம் தான் முக்கியம் ஆகாஷ். சாப்பிடறது இல்ல. ப்ளீஸ்… நீ எதுவும் சொல்லாத.” என்றபடி வெடுக்கென உள்ளே சென்றாள்.

அதைப் பார்த்து உமாவே ஒரு மாதிரியாக ஆகிவிட்டார்.

“ஸாரி ஆகாஷ்… அவ ரொம்ப டயர்டா இருக்கா இல்ல, அதனால தான் அப்படிப் பேசறா.” என்றார் வருத்தத்தில்.

“இருக்கட்டும் ஆண்ட்டி. அவ நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். நான் நாளைக்கு வந்து அவளைப் பார்க்கறேன்.” என்றவன் விடைபெற முயன்றான்.

“சாப்டுட்டுப் போலாமே பா.” என்றார் உமா.

“பரவால்ல ஆண்ட்டி. நான் உடனே போய்ட்டு ரெஸ்ட்டாரண்ட் கிளம்பணும். வரேன். அவளைப் பார்த்துக்கங்க.” என்று அக்கறையுடன் விடைபெற்றான்.

அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தவர் மனதில், அவனை நினைத்து ஆயிரக்கணக்கான கவலைகள் ஓடிக்கொண்டிருந்தன.



தொடரும்....
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
4,814
Reaction score
2,184
Points
113
இவளுக்கு என்ன பைத்தியமா?

வெளியுலகில் சுதந்திரமாய் சுற்றி திரிந்தவள் அவனது கட்டுக்குள் அடங்க மறுக்கிறாள்.

கவலைப்படாதே ஆகாஷ்,

எப்படியும் இவளது முகத்திரை கிழியவே போகிறது.

இவள் போனால் போகட்டும். உனக்கு இருக்கிறா மேகா...
 
Top Bottom